Tuesday, February 15, 2011

Lesson 148: Status of those with desires (Brahma Sutra 3.4.43)

பாடம் 148: ஆசைப்படுபவர்களின் கதி
பாடல் 468 (III.4.43)

அனைத்து செயல்களும் ஆசைகளின் அடிப்படையில்தான் பிறக்கின்றன. மேலும் செயல் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. எனவே உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆசைகள் இருந்தேதீரும். ஞானிகளுக்கு ஆசைகள் இருப்பினும் அவர்கள் துன்பப்படுவதில்லை. மற்றவர்களின் ஆசைகளுடன் ஒப்பிடும்பொழுது ஞானிகளின் ஆசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்ற விளக்கங்களை கொடுப்பதன் மூலம் துன்பத்தை தவிர்க்கும் வழியை இந்த பாடம் தருகிறது.

முதல் வேறுபாடு: ஆசைகளின் ஆரம்பம்

நான் ஆசைப்படுகிறேன் என்பதற்கும் என் மனதில் ஆசை தோன்றுகிறது என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஞானிக்கு தான் ஆத்மா என்றும் தன் மனம் மாயை என்றும் தெரிந்திருப்பதால் மனதின் ஆசைகளை தனதாக ஏற்றுக்கொள்ள மாட்டார். பக்கத்து வீட்டுக்காரனின் ஆசை நிறைவேறாவிட்டால் நாம் எப்படி வருத்தப்பட மாட்டோமோ அது போல தன் மனதின் ஏமாற்றங்களை ஞானி பொருட்படுத்துவதில்லை.

இரண்டாம் வேறுபாடு: ஆசைகளின் தன்மை

ஞானிகளின் ஆசைகள் பந்தப்படுத்தாத ஆசைகள். தேடியது கிடைக்காவிட்டால் மற்றவர்கள் துன்பப்படுவதுபோல் ஞானி துன்பப்பட மாட்டான்.

பார்ப்பதற்கு விதை போலிருந்தாலும் வறுக்கப்பட்ட வேர்கடலையை விதைத்தால் அது முளைவிடாது. அதுபோல் ஞானிகளுக்கு ஏற்படும் ஆசை துன்பத்தை தராது. வறுக்கப்பட்டதால் சுவையாக இருக்கும் வேர்க்கடலையைப்போல ஆனந்தத்தின் விளைவான ஞானிகளின் ஆசை அனைவருக்கும் நன்மை தரும்.

மாலையில் பூங்காவில் உலாவரலாம் என்ற ஆசை மழை பெய்ய ஆரம்பித்ததால் நிறைவேறாமல் போனாலும் அது குறித்து நாம் துன்பபடுவதில்லை. அது போல  முற்றும் துறந்து இமயமலையடிவாரத்திற்கு சென்று சமஸ்க்ருத மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தக்கொண்டிருந்த வேதஞானத்தை நகரத்தில் வாழ்பவர்களுக்கு கொண்டுதரவேண்டும் என்ற சுவாமி சின்மயானந்தாவின் ஆசை நிறைவேறியிருக்காவிட்டாலும் அவர் துன்பபட்டிருக்க மாட்டார்.

மூன்றாம் வேறுபாடு: ஆசைகளின் நோக்கம்

தம்மிடம் இருக்கும் நிரம்பிவழியும் அமுதசுரபியை கொண்டு மற்றவர்களுக்கு உதவ  நினைப்பவனின் ஆசை, காலிப்பாத்திரத்தை காட்டி பிச்சையெடுப்பவனின் ஆசையிலிருந்து வேறுபட்டது. அதுபோல ஞானிகள் தங்களிடம் ஆனந்தம் பொங்கி வழிவதால் அதை மற்றவர்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று ஆசை படுவதற்கும் தேடியது கிடைத்தால் ஆனந்தம் அடையலாம் என்று மற்றவர்கள் உலகப்பொருள்கள் மேல் ஆசைகொள்வதற்கும் வேற்றுமை அதிகம்.  

நான்காம் வேறுபாடு: செயல்களின் நோக்கம்

தினமும் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடும் ஞானி விருந்தினர்களுக்காக அறுசுவை உணவை சமைத்து அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிடலாம். விதவிதமாக ருசிக்கவேண்டும் என்ற நாக்கின் தூண்டுதலுக்காக இல்லாமல் மற்றவர்களின் திருப்திக்காகவே அவர் விருந்து சமைக்கும் செயலில் ஈடுபடுவார். அதுபோல மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற காரணத்திற்காக மட்டுமே அவர் பணம் சம்பாதிக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வார். தனக்கென அவருக்கு இருக்கும் தேவைகள் மிகவும் குறைந்தவை. இன்பத்தை தேடியலைய வேண்டிய அவசியம் அவருக்கில்லை.

ஐந்தாம் வேறுபாடு: பந்தப்பட்டிருந்த அனுபவம்

சக்கரவர்த்தியுடன் போர் புரிந்து தோல்வியடைந்த அரசன் பலகாலம் சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்டபின் ஒரு சிறிய கிராமத்துக்கு அரசனாக வாய்ப்புகிடைத்தாலும் மிகவும் மகிழ்வான். வெற்றி பெற்று தன் சாம்ராஜயத்தை விரிவடையசெய்த சக்ரவர்த்திக்கு கூட இவனைப்போன்ற திருப்தி ஏற்படாது. ஏனெனில் பந்தப்பட்டு சிறையில் வாடிய அனுபவம் சுதந்திரமாக வெளியே இருப்பதே போதும் என்ற மனநிலையை கொடுத்திருக்கும். அதற்குமேல் ஒரு குக்கிராமத்துக்கு அரசனாகும் வாய்ப்பு ஒரு மிகப்பெரியவரப்பிரசாதமாக அவனால் கருதப்படும். சக்ரவர்த்திக்கு நாட்டையிழந்து சிறையில் வாடிய அனுபவம் இல்லாததால் அவருக்கு சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை.

ஆசை நிறைவேறியதால் மற்றவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட ஆசைகளிடமிருந்து முழுவதுமாக விடுதலை பெற்ற ஞானி இனிமேல் துன்பப்பட வேண்டிய அவசியமில்லை என்று அதிக சந்தோஷம் அடைவான்.

ஆறாம் வேறுபாடு: பொருள்கள் பற்றிய அறிவு

மனதின் நிறைவின்மையால் தோன்றிய ஆசை தள்ளுபடியில் விற்பனை என்ற அறிவிப்பை கேட்டதும் அது என்ன பொருள் என்று கூட விசாரிக்காமல் முட்டிமோதி கடைக்குள் நுழையவைக்கும். ஆனால் ஞானிகளின் மனம் தான் ஆனந்தத்தின் இருப்பிடம் என்ற அறிவால் நிறைந்திருப்பதால் யாராவது ஏதாவது தருவார்களா என்ற ஏக்கம் எப்பொழுதும் அதில் ஏற்படாது.

சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிறது என்று தெரியவந்தால் பசியோடு இருக்கும் ஒருவனே அதைத்தொடமாட்டான். அப்படியிருக்க அப்பொழுதுதான் விருந்து சாப்பாட்டை வயிறு நிரம்ப சாப்பிட்டு முடித்தவனுக்கு விஷம் கலந்த சாப்பாட்டில் ஆசை ஏற்பட வாய்ப்பேயில்லை. அது போல உலகப்பொருள்களில் துன்பம் கலந்திருக்கிறது என்று அறிந்தவர்களுக்கு அவற்றின்மேல்ஆசை ஏற்படாது.

ஞானி பொருள்களை தள்ளுபடிவிலையில் வாங்கமாட்டான் என்பது இங்கு பொருள்ளல்ல. தேவைகளை பூர்த்திசெய்ய அவசியமான பொருள்களை குறைந்த விலையில் வாங்கவேண்டுமென்ற ஆசை ஞானிக்கும் ஏற்படலாம். ஆனால் பணத்திற்கும் இன்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஞானி உணர்ந்திருப்பதால் ஆசைகள் நிறைவேறாவிட்டால் மற்றவர்களைப்போல் கோபம், எரிச்சல், ஏமாற்றம் போன்ற உணர்வுகளால் அவர் பாதிக்கப்படமாட்டார்.

இன்னும் வேண்டும் என்று ஆசைகொள்பவர்களைப்போலல்லாமல் இருப்பதும் வேண்டாம் என்று ஞானி துறந்து விடுவான். மூட்டை நிறைய கிடைத்த ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அறிந்ததும் அதை கூடியவிரைவில் தொலைத்துவிட முயற்சிப்பதுபோல் ஞானிகள் பொருள்களின் குறைகளை அறிந்திருப்பதால் தினமும் உபயோகிக்கும் அவசியத்தேவைகளைத்தவிர பிற்பாடு தேவைப்படும் என்று எந்தப்பொருளையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

என்னுடையது என்று எவ்வளவு பொருள்களை வைத்திருக்கிறோம் என்பது மனதில் தோன்றும் சலனங்களின் அளவை தீர்மானிக்கும். தேவைக்கு அதிகமான பொருள்களை வைத்திருப்பதால் எவ்வித பயனும் இருக்காது. அதேநேரத்தில் அவற்றால் ஏற்படும் மன சலனங்கள் அதிகமாகும்.

கடைகளில் உள்ள பொருள்களை பார்வையிட நேர்ந்தால் தனக்கு தேவையில்லாத பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை நினைத்து ஞானி மகிழ்வான்.

திருடும்பொழுது கையும் களவுமாக பிடிபட்ட வேலைக்காரனை வேலையிலிருந்து நிறுத்தாமல் தொடர்ந்து வேலை செய்ய அனுமதித்தால் அவன் நன்றியுடனும் மறுபடியும் திருடாமலும் இருப்பான். அதுபோல பொருள்களுக்கு துன்பம் தரும் சக்தியில்லை என்பதை ஞானி தெளிவாகத்தெரிந்து கொண்டு அதன் பின் எவ்வளவு சுகபோகங்களை அனுபவித்தாலும் அவனுக்கு துன்பம் ஏற்படாது. ஞானி தான் உயிருக்கு உயிராக காதலித்தவர் தன்னை கைவிட்டுவிட்டு மற்றொருவரை மணந்து கொண்டாலோ அல்லது மரணமடைந்து விட்டலோ வருத்தப்படமாட்டார். ஏனெனில் எள்ளளவு ஆனந்தத்தைகூட தனக்கு யாராலும் தரமுடியாது என்பதை ஞானி அறிந்திருப்பதால் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு வாழ்வில் எதிர்படும் மற்றொருவரை மணந்துகொள்ள தயங்கமாட்டார்.

தசரதன் தனக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்ததை கேட்ட இராமனின் மனநிலை காட்டுக்கு போ என்ற கட்டளையை கேட்டபொழுது மாறவில்லை. நாட்டை ஆளுவதும் காட்டில் வாழ்வதும் சுற்றுப்புற சூழலில் மாற்றங்கள் ஏற்படுத்துமே தவிர ஆனந்தத்தை மாற்றாது என்பதை இராமன் அறிந்திருந்ததே இதற்கு காரணம்.

ஏழாம் வேறுபாடு: ஆசைகள் பற்றிய அறிவு

நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முடியாது. அது போல அனுபவிப்பதன் மூலம் ஆசைகளை தீர்த்துக்கொள்ள முடியாது. யயாதி தன் மகனின் இளமையை கடன் வாங்கிய கதையை படித்து இந்த உண்மையை தெரிந்து கொள்ளா விட்டாலும் நம் அனுபவங்களை ஆராய்வதன் மூலம் இதை தெரிந்து கொண்டால் உலகத்தில் உள்ள பொருள்கள் மீது வைராக்கியம் ஏற்பட்டு அவற்றின் மீது ஆசை ஏற்படாது.

எண்ணையிருக்கும் வரை விளக்கில் நெருப்பு எரியும். அதுபோல மனதில் நான் மற்றும் எனது என்ற எண்ணங்கள் இருக்கும்வரை உலகப்பொருள்களின் மீது ஏற்படும் பற்றுதலை தவிர்க்கமுடியாது. எனக்கு இது வேண்டும் என்ற ஆசை ஏற்பட இந்த அகங்காரமே காரணம். ஆசை நிறைவேறினாலும் பசுத்தோல் போத்திய புலி போல இன்பம் என்ற பெயரில் துன்பம்தான் நம்மை வந்து சேரும். நான்தான் ஆனந்தத்தின் உண்மையான இருப்பிடம் என்பதை ஞானிகள் அறிந்து இருப்பதால் ஆசைகள் இல்லாமல் எது கிடைத்தாலும் ஆனந்தமாயிருப்பார்கள்.

எட்டாம் வேறுபாடு: உலகைப்பற்றிய அறிவு

மாற்றம் என்பது மாற்றமுடியாத ஒன்று. தோன்றும் அனைத்தும் மறைவுக்கு உட்பட்டவை. இந்த உலக நியதிகளை ஞானி சரியாக அறிந்திருப்பதால் உலகில் உள்ள பொருள்களில் மாற்றமேற்படாது என்று அவன் எதிர்பார்ப்பதில்லை. வயது ஆக ஆக உடலின் அழகும் ஆரோக்கியமும் குறைகிறதே என்று அவன் வருத்தப்படுவதில்லை.  

மாயாவி ஒருவன் இந்திரஜாலகாட்சியில் இருப்பது போல் காண்பிக்கும் பொருள் மீது ஆசைப்படமாட்டோம். அதுபோல உலகே மாயை என்று ஞானி உணர்ந்திருப்பதால் அதிலுள்ள பொருள்களின் மேல் ஆசைபடமாட்டான்.

ஒன்பதாம் வேறுபாடு: வாழ்வைப்பற்றிய அறிவு

கனவில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நாம் பொருட்படுத்துவதுகிடையாது. இன்றைக்கு தூங்கும்பொழுது நேற்று வந்த இனிமையான கனவு தொடரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டாலும் அது நிறைவேறாவிட்டால் தரையில் விழுந்து அழுது புரள மாட்டோம். ஏனெனில் கனவு நிலையாதது என்று தெளிவாக நமக்கு தெரியும். ஞானிகள் வாழ்வே ஒரு கனவு என்பதை உணர்ந்தவர்கள். எனவே இன்றிருப்போர் நாளை இல்லாமல் போய்விட்டால் அவர்கள் ஏமாற்றமடைவதில்லை. கனவில் நடக்கும் நிகழ்வுகள் நம்முடைய ஆணைக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. அதே நிலை விழித்தபின்னும் தொடர்கிறது என்பதை ஞானி அறிவான்.

முள் காலில் குத்திவிட்டது என்று நாம் செய்த தவறுக்கு அப்பாவியான முள்ளின் மீது பழிபோடுவது போல வாழ்வு என்பது என்ன என்று நாம் சரியாக புரிந்துகொள்ளாமல் அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைசொல்வது நம் தவறு.

ஒளி பொருள்களின் இருப்பையும் இல்லாமையையும் நமக்கு அறிவிக்கும். அதற்கு புதிதாக பொருள்களை உற்பத்தி செய்யவோ இருக்கும் பொருளை அழிக்கவோ சக்தி கிடையாது. அதுபோல வாழ்வைப்பற்றிய சரியான அறிவு அதன் இயல்பை நமக்கு அறிவிக்குமே தவிர நடக்கும் நிகழ்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக தொழிலில் லாப நஷ்டங்கள் மாறி மாறி வரும் என்ற அறிவு நஷ்டத்தை தவிர்க்க உதவாது.  மாறும் தன்மையை அறிந்து கொண்டதால் மாற்றம் ஏற்படும்பொழுது துன்பம் ஏற்படாது.

பத்தாம் வேறுபாடு: மனம் பற்றிய அறிவு

பிறவிகள்தோறும் செய்யும் செயல்களால் உருவாகிய விருப்பு-வெறுப்புகளை மனதிலிருந்து நீக்க முடியாது. மேலும் உலகின் நிகழ்வுகள் வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்பது போன்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடும் தன்மையுடையது. எனவே உலகின் நிகழ்வுகளை பிடித்தது-பிடிக்காதது என்று வகைப்படுத்தி பிடித்தவற்றை பெறவும் பிடிக்காதவற்றை தவிர்க்கவும் மனம் ஆசைப்படுவதை தவிர்க்க முடியாது. வைத்திருக்கும் பாத்திரத்தின் ஆட்டத்திற்கு ஏற்றாற்போல் ஆடுவது தண்ணீரின் இயல்பு. அது போல் உலகில் இயக்கதிற்கு ஏற்றாற்போல் ஆசைப்படுவது மனதின் இயல்பு. இவற்றைத்தெளிவாக உணர்ந்த ஞானிகள் மனதில் தோன்றும் ஆசைகளால் பாதிக்கப்படுவதில்லை.

முடிவுரை :

தோசை கருகி சாம்பலாகிவிட்டது என்றால் அது சமையல்காரரின் குற்றமே தவிர நெருப்பின் தவறல்ல. கையை சுட்டுவிட்டது என்று இனி நெருப்பின் பக்கமே போகக்கூடாது என்று தீர்மானிப்பது தவறு. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. நெருப்பு உண்டாகும் விதம், அதன் தன்மைகள் மற்றும் அதை கையாளும் விதம் ஆகியவற்றை சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே சுவையான சமையல் செய்ய முடியும். அது போல ஆசை உண்டாகும் விதம், அதன் தன்மை, பொருள்கள் பற்றிய அறிவு போன்றவற்றை சரிவர கற்றுத்தேர்ந்தபின் எவ்வித துன்பமும் இல்லாமல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள செயல்கள் செய்யலாம்.

வேதம் தரும் இந்த அறிவை பெறாமல் ஆசைகளுடன் செயல்படுபவர்கள் படுக்கையறைக்குள் பட்டாசுகளை கொளுத்தி விளையாடுபவர்களின் கதிக்கு ஆளாவார்கள்.


பயிற்சிக்காக :

1. வறுபட்ட விதை உதாரணம் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?

2. ஆசை, பொருள்கள், உலகம், வாழ்வு, மனம் ஆகியவை பற்றி பெறவேண்டிய அறிவு என்னென்ன?

3. ஞானிகளின் ஆசைகளுக்கும் செயல்களுக்கும் நோக்கங்கள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஆசை பட்டது கிடைக்காவிட்டால் ஞானியின் மனம் அலைபாயும் என்றால் ஞானத்தின் பலன் என்ன?.

2. ஞானிகளுக்கு அளவு கடந்த ஆசைகள் இருக்கலாமா?

3. ஞானம் பெற்றவுடன் பணம் சம்பாதிக்கும் ஆசை குறைந்துவிடுமா?