Sunday, December 12, 2010

Lesson 143: No food restrictions when life is in danger (Brahma Sutra 3.4.28-31)

பாடம் 143: உயிர் வாழ உணவு
பாடல் 453- 456 (III.4.28-31)

சாந்தோக்ய மந்திரம் (5.2.1) ஒன்று ‘இதை அறிந்தவனுக்கு எது வேண்டுமானாலும் உணவாகலாம்’ என்று கூறுகிறது. நான் பரமன் என்பதை அறிந்தவன் மரணத்தை வென்றுவிடுவதால் உயிர் வாழ அவனுக்கு எவ்வித உணவுக்கட்டுப்பாடும் கிடையாது என்பதை புரிந்துகொள்ள உதவும் விதத்தில் ‘உணவை உண்பவன் என்று யாருமே கிடையாது’ என்ற உண்மையை இந்தப்பாடம் விவரிக்கிறது.

உண்பவன் இல்லை

எது இருக்கிறதோ அதை இல்லை என்று சொல்ல முடியாது. எது இல்லையோ அதை இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதிலிருந்து எதை நாம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அது உண்மையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அனுபவத்திலும் அனுபவிப்பவர் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்ற ஆகிய இரண்டும் இருக்கும். அனுபவிக்கும் பொருள்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அனுபவிப்பவர் மாறுவதேயில்லை. நம் கவனம் எப்பொழுதும் அனுபவிக்கப்படும் பொருள்களின் மேல் மட்டுமே இருப்பதால்தான் அனுபவங்கள் நிறைவை  தருவதில்லை. எனவே அனுபவிப்பவரை ஆராய்ந்து அப்படியொருவர் இல்லை என்ற தெளிவை அடைவது அவசியம்.

அனுபவிப்பவர் உணர்வுடன் கூடியவர்

‘கண்ணன் வெண்ணை உண்டான்’ என்பது ஒரு அனுபவம். ‘வெண்ணைப்பானை உரியில் தொங்குகிறது’ என்பது ஒரு அனுபவம் அல்ல. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட இரண்டும் ஜடப்பொருள்கள். ‘கண்ணன் ராதையை முத்தமிட்டான்’. இதில் இரு அனுபவங்களும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒரு அனுபவிப்பவர் மற்றும் ஒரு அனுபவிக்கப்படும் பொருளும் இருக்கிறது. அனுபவத்தின் தன்மையை தீர்மானிப்பது அனுபவிப்பவரே தவிர அனுபவிக்கப்படும் பொருள் அல்ல. மேலும் ஒருவருடைய அனுபவம் மற்றவரது அனுபவத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. எனவே அனுபவிக்கப்படும் பொருள் உயிருள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சி அனாவசியம். அனுபவிப்பவர் மட்டும் உயிருள்ளவராய் இருக்கவேண்டும்.

அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர் முக்கியமானவர்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனுபவிக்கப்படும் பொருள்கள். ஒவ்வொரு பொருளிலிருந்தும் நாம் பெறும் அனுபவங்கள் வேறுபடுவதால் சிலவற்றை விரும்பி அடையவும் வேறு சிலவற்றை வெறுத்து ஒதுக்கியும் பொருள்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அனுபவங்களை அனுபவிக்கும் அனுபவிப்பவர்தான் அனுபவிக்கும் அனைத்து பொருள்களை விட முக்கியமானவர். ஏனெனில் அனுபவம் ஏற்பட இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் பொருள்களுக்கு அனுபவத்தை கொடுக்கும் சக்தியும் கிடையாது. 

உதாரணமாக எவ்வளவு அழகாக வரையப்பட்ட ஓவியம் என்றாலும் அதை பார்ப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் சக்தியும் அது அழகானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரமும் அனுபவிப்பவருக்கு மட்டும்தான் இருக்கிறது. உயிருள்ள பொருள்களுக்கும் இதே நிலைதான். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்பதை அவரைப்பார்ப்பவர்தான் தீர்மானிக்கிறாரே தவிர அவளுக்கு தான் மற்றவருக்கு கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது.

திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவேண்டும் என்று பெரும்பாலோர் நினைப்பதற்கு முக்கிய காரணம் திருமணத்திற்குபின் தான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற சுயநலம்தான். யாராலும் நமக்கு இன்பத்தை கொடுக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட பின்தான்  அடுத்தவரை அறிந்துகொள்ளுவதைவிட தன்னையறிந்து கொள்வது முக்கியம் என்பது புரியும். 

அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை உணரும்பொழுது அனுபவிப்பவர் யார் என்பதை அறியவும் ஆராயவும் ஆவல் பிறக்கும்.

அனுபவிப்பவர் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்க முடியாது

அனுபவிப்பவர் யார் என்பதை அறியுமுன் அனுபவிக்கப்படும் பொருள் அனுபவிப்பவராக இருக்க முடியாது என்ற தெளிவு அவசியம். முற்றிலும் இருட்டான அறையில் இருக்கும் பொருள்களைப்பார்க்க நமக்கு ஒரு விளக்கின் துணை தேவை. நாற்காலி, புத்தகம் போன்ற அறையில் இருக்கும் பொருள்களின் இருப்பை நமக்கு காட்டித்தருவது விளக்கு. அந்த விளக்கின் இருப்பை காட்டுவது எது? நாற்காலி என்பது தவறான விடை என்பதில் நமக்கு ஒரு தெளிவு அவசியம்.

அது போல நம்முடைய உடல் மற்றும் மனம் போன்றவற்றின் இருப்பை நாம் உணர்வதால் அவை அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே அனுபவிப்பவர் யார் என்ற கேள்விக்கு நம் உடலையும் மனதையும் தவிர்த்த வேறு ஒரு பதிலைத்தான் நம் ஆராய்ச்சியின் முடிவு காட்டவேண்டும்.

அனுபவிப்பவர் ஆத்மாவா அகம்பாவமா?

மனதில் தோன்றும் நான் அல்லது எனது என்ற எண்ணங்களின் தொகுப்பான அகங்காரம் ஜடம் என்பதால் அது அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே உணர்வுமயமான பரமன் அல்லது பரமனின் நிழலுருவான அகம்பாவம் ஆகிய இரண்டையும் ஆராய்வதன் மூலம் அனுபவிப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள முயலலாம்.

எவ்வித மாற்றத்திற்கும் உட்படாத பரமன் இவ்வுலகுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் அதே சமயத்தில் அதன் இருப்புக்கு ஆதாரமாக இருப்பவன். என் உடலுக்கும் மனதிற்கும் ஆதாரமான பரமனை ஆத்மா என்று அழைக்கலாம்.

அகம்பாவம் என்பது நம் மனதில் தோன்றும் ஆத்மாவின் பிரதிபிம்பம். ஆத்மா மட்டுமே உணர்வுமயமானது. இவ்வுணர்வை நம் மனம் பிரதிபலிக்கும்பொழுது தோன்றும் அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுக்கிறது. நம் உடலும் மனமும் ஜடப்பொருள்களாய் இருந்தாலும் அகம்பாவம் என்ற உணர்வின் பிரதிபிம்பம் இவற்றிற்கு இவ்வுலகப்பொருள்களை அனுபவிக்கும் திறனை கொடுக்கிறது.

பௌர்ணமி இரவில் தோன்றும் நிலவு தானே ஒளியை கொடுக்கும் சக்தியற்றது என்றாலும் சூரியனின் ஒளியை பிரதிபலித்து அதன் மூலம் உலகத்தை பிரகாசிக்க வைப்பதைப்போல உணர்வற்ற மனம் என்ற ஜடப்பொருள் உணர்வுமயமான ஆத்மாவின் பிரதிபிம்பமான அகம்பாவத்தின் துணையுடன் உலகப்பொருள்களை அனுபவிக்கிறது. நிலவு என்ற ஜடப்பொருளை மனம் என்ற ஜடப்பொருளுக்கும், சூரியனின் ஒளியை ஆத்மாவுக்கும் நிலவின் ஒளியை அகம்பாவத்துடனும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் உண்மையில் இரவை பகலாக்குவது சூரிய ஒளி என்று தீர்மானிப்பது போல உண்மையில் உலகப்பொருள்களை அனுபவிப்பவன் ஆத்மா என்று முடிவுசெய்யவேண்டிவரும். ஆனால் அனுபவிக்கும் பொருளுக்கும் ஆத்மாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் அனுபவம் ஆத்மாவில் மாற்றம் எதையும் ஏற்படுத்துவதில்லை. எனவே நம் ஆராய்ச்சி தொடர்கிறது.

ஆத்மாவும் அகம்பாவமும்

ஆத்மாவையும் அகம்பாவத்தையும் ஒப்பிட்டு அவற்றின் தன்மையை தனித்தனியாக புரிந்து கொள்வது அவசியம். இதை வித்யாரண்ய சுவாமிகள் பின்வரும் உதாரணம் மூலம் விளக்குகிறார்.

உதாரணம்: சிறுவர்கள் தங்கள் கைகளில் உள்ள ஒரு சிறு கண்ணாடித்துண்டின் மூலம் சூரிய ஒளியை பிரதிபலித்து எதிரில் இருக்கும் சுவரில் சிறு சிறு வட்ட ஒளியை ஏற்படுத்தி அதை இங்குமங்கும் நகர்த்தி விளையாடுகிறார்கள்.

சுவர் – உலகம்
கண்ணாடி – மனம்
சூரிய ஒளி – ஆத்மா அல்லது பரமன்
பிரதிபலிக்கப்பட்ட ஒளி – அகம்பாவம்
சுவற்றில் தோன்றும் ஒளிவட்டங்கள் – பருவுடல்

1. சுவரின் மீது இரு வேறு ஒளி படுகிறது. சூரிய ஒளி முழு சுவரையும் வெளிச்சப்படுத்துகிறது. பிரதிபலிக்கப்பட்ட ஒளி சுவரின்மீது தோன்றும் சிறு சிறு வட்டங்களை ஒளிர்விக்கின்றன.

உலகத்தையும் இருவேறு பொருள்கள் இயக்குகின்றன. உலகம் முழுவதையும் வியாபித்து அதன் இருப்பிற்கு ஆதாரமாய் இருப்பது பரமன். ஒவ்வொரு உயிரையும் உயிரினமாய் காண்பித்து செயல்படுத்துவது அகம்பாவம்.

2. ஒளியூட்டப்பட்ட சுவற்றில் இங்குமங்கும் ஓடும் ஒளிவட்டங்களை இயக்கும் சிறுவர்கள் இது நான், என்னைப்பிடி பார்க்கலாம் என்று கூறி தங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துடன் ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள்.

நம் பருவுடல் ஜடமான உலகின் ஒருபகுதி. அகம்பாவம் இருப்பதால் அது உயிருடன் இருப்பதுபோல தோற்றமளிக்கிறது. நான்தான் இந்த அகம்பாவத்துடன் கூடிய உடல் என்றும் நான் உலகிலிருந்து வேறுபட்டவன் என்றும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ‘இது நான்’ என்று ஒரு ஒளிவட்டத்தை காட்டும் சிறுவனுக்காவது அது வெறும் விளையாட்டுதான் என்ற அறிவு இருக்கிறது. ஆனால் நான் என்ற சொல் இந்த உடலை குறிப்பதாக உண்மையிலேயே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

3. உண்மையில் இருப்பது சூரிய ஒளி மட்டுமே. ஆனல் சுவற்றில் இருவேறு வகை ஒளிகள் தென்படுவதால் நாம் அவற்றை தனிப்படுத்தி பேசவேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்படுவதும் சூரிய ஒளிதான் என்பதால் அனைத்தும் ஒன்றே என்பதை மறந்து விடக்கூடாது.

உணர்வு மயமாக இருப்பது பரமன் ஒருவனே. அகம்பாவம் என்பது பரமனின் பிரதிபலிப்பு என்பதால் அதற்கு ஒரு தனிப்பட்ட உண்மைத்துவம் கிடையாது. எனவே நான் என்ற சொல்லுக்கு உணர்வு மயமான ஆத்மா என்று மட்டும்தான் பொருள். உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களின் ஆதாரமாக இருப்பது நான் என்னும் ஒரே ஆத்மா என்றாலும் விளையாட்டுக்காக ஒவ்வொருவரையும் வெவ்வேறாக கருதி உறவாடுவதில் தவறில்லை. விளையாட்டு என்பதை மறந்து பக்கத்துவீட்டுக்காரர் உண்மையிலேயே நம்மிடமிருந்து வேறான ஒருவர் என்று நினைத்துவிடுவதால்தான் விளையாட்டு வினையாகிறது.

4. முழுசுவரும் சூரியனின் நேரடி ஒளியால் பிரகாசப்படுத்தப்பட்டு இருந்தாலும் கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட சூரியஒளி ஏற்படுத்தும் சிறு வட்டங்கள்தான் அனைவரது கவனத்தையும் கவருகின்றன. இந்த வட்ட ஒளி எஞ்சிய சுவற்றை விட அதிகபிரகாசமாயும் குறிப்பிட்ட வடிவத்துடனும் இருப்பதே இதற்கு காரணம்.

வட்டமான ஒளி சுவற்றை நேரடியாக ஒளிர்விக்கும் சூரிய ஒளியை மறைப்பது போல நம் இருப்புக்கு ஆதாரமான ஆத்மாவை நம் மனதில் பிரதிபலிக்கப்பட்ட அகம்பாவம் மறைத்துவிடுகிறது.  எனவேதான் நான் ஆத்மா என்ற உண்மைக்கு பதில் நான் உயிருடனிருக்கும் உடல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

5. சூரிய ஒளி இல்லாவிட்டால் சிறுவர்கள் விளையாடவே முடியாது என்றாலும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கும் ஒளிக்கு முக்கியத்துவம் கொடுத்து சூரிய ஒளியை அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை. சூரிய ஒளியின் அவசியத்தையும் அது தங்கள் விளையாட்டுக்கு உதவும் விதத்தையும் அவர்கள் அறிவதில்லை.

பரமன்தான் உலகின் ஆதாரம் என்றாலும் அகம்பாவத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து ஆத்மாவை பொருட்படுத்துவதேயில்லை. அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருப்பதால் உலகில் இயங்க ஆத்மாவின் அவசியத்தை நாம் உணர்வதில்லை. உண்மையில் ஆத்மாதான் நம் உடல் உட்பட்ட உலகில் உள்ள அனைத்து பொருள்களுமாக தோன்றிக்கொண்டிருக்கிறது.

6. சூரிய ஒளி அவசியம். கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆடம்பரம். அவசியத்தை விட ஆடம்பரம் முக்கியமானது என்று நினைப்பது அறியாமை.

மனிதர்கள் ஆத்மாவை விட்டு விலகி இருக்கமுடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் இருப்பதில்லை. தன்னை மறந்து ஒரு காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பொழுதும் அகம்பாவம் ஆத்மாவுடன் ஒன்றிவிடுகிறது. எனவே நம்மிடம் இருக்கும் நம் உடல், மனம், அதில் பிரதிபலிக்கும் அகம்பாவம் ஆகியவை ஆடம்பரப்பொருள்கள் என்பதை உணர்ந்தால் உலகில் உள்ள வேறு எந்த பொருள்களும் அவசியமானவை என்று தோன்றாது.

7. சூரிய ஒளி நிரந்தரமானது. பிரதிபலிக்கபட்ட ஒளி தற்காலிகமானது.

ஆத்மா நிரந்தரமானது. அகம்பாவம் பிறப்பு-இறப்பு என்ற சுழலுக்கு உட்பட்டது.

8. சூரிய ஒளி எல்லா இடத்திலும் பரவியிருப்பது. கண்ணாடியின் ஒளி ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கியது.

ஆத்மா அளவற்றது. அகம்பாவம் ஒரு உடல், மனம் என்ற சிறிய அளவுக்குள் கட்டுப்பட்டது.

9. சிறுவர்கள் விளையாடாதபொழுதும் சுவற்றை ஒளிர்விப்பது சூரிய ஒளி. மேலும் அவர்கள் விளையாடும்பொழுது சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களிடையே இருக்கும் சுவரை ஒளிப்படுத்துவதும் சூரிய ஒளியே. கண்ணாடியிலிருந்து பிரதிபலிப்பதும் சூரிய ஒளியே. எனவே அனைத்திற்கும் அடிப்படை சூரிய ஒளி மட்டுமே.

பிரபஞ்சம் அழிந்தபின்னும் இருப்பவன் பரமன். பிரபஞ்சம் இருக்கும்பொழுது ஜடப்பொருள்களின் ஆதாரமான பரமன்தான் அகம்பாவம் என்ற பிரதிபிம்பத்தை ஏற்படுத்தி உயிரினங்களுக்கும் ஆதாரமாயிருக்கிறான்.

10. ஒளி என்ற சொல்லுக்கு ஒரே பொருள் சூரிய ஒளி மட்டுமே.

உணர்வு என்ற சொல்லுக்கு ஒரே பொருள் ஆத்மா மட்டுமே.

ஆத்மாவிற்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்த பின் அனுபவிப்பவர் ஒவ்வொரு அனுபவத்தையும் அனுபவிக்க இவ்விரண்டின் பங்கு என்ன என்பதை அறிய நம் எண்ணங்களை ஆராய வேண்டும்.

இரு வகை எண்ணங்கள்

எண்ணப்படும் பொருள்களின் அடிப்படையில் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்புற எண்ணங்கள் மற்றும் உட்புற எண்ணங்கள் என இருவகையாக பிரிக்கலாம். உலகில் உள்ள பொருள்களைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணங்கள். வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணம் உட்புற எண்ணம்.

மல்லிகையின் மணத்தை நுகரும்பொழுது மனதில் ஏற்படும் எண்ணம் வெளியுலகில் இருக்கும் பூவைப்பற்றியது என்பதால் அது வெளிப்புற எண்ணம். எனக்கு மல்லிகையின் மணம் மிகவும் பிடிக்கும் என்ற எண்ணம் இந்த வெளிப்புற எண்ணத்தைப்பற்றியது என்பதால் அது உட்புற எண்ணம்.

கோபம், சலிப்பு, அன்பு, ஆவல் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் (emotions) உட்புற எண்ணங்களே. கண் காது போன்ற ஐந்து புலன்களையும் செயல்படுத்தாமல் தியானம் செய்ய அமர்ந்திருக்கும்பொழுது மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் உட்புற எண்ணங்கள்தாம். 

நேரடியாக அனுபவிக்காத பொருளைப்பற்றிய எண்ணம் படிப்பது அல்லது கேட்பதன் மூலம் ஏற்பட்டாலும் அது வெளிப்புற எண்ணமே. எனவே தெரியாத பொருளைப்பற்றிய வெளிப்புற எண்ணம் ஏற்படலாம். ஆனால் உட்புற எண்ணம் இதுபோல தெரியாதபடி இருக்கமுடியாது.  வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணங்கள்தான் உட்புற எண்ணங்கள். எனவே ஒரு வெளிப்புற எண்ணம் இல்லாமல் அதைப்பற்றிய உட்புற எண்ணம் ஏற்பட வாய்ப்பில்லை.

நேரடியாக பார்க்காவிட்டாலும் கடிதம் மூலம் காதலிக்கும் மனிதரைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணம். அந்த மனிதரை காதலராக மாற்றியது உட்புற எண்ணம். காதல் ஒரு அனுபவம். இதுபோல் எந்த அனுபவத்தை பெற வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படையாக சில எண்ணங்கள் ஏற்படவேண்டும். ஒருவரைப்பற்றிய எவ்வித எண்ணமும் இல்லாமல் அவரைக்காதலிக்க முடியாது. எனவே முதலில் வெளிப்புற எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்றும் அதன் பின் அவை எவ்வாறு உட்புற எண்ணங்களான அனுபவங்களுக்கு ஆதாரமாய் இருக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும். அனுபவங்கள் ஏற்பட ஐந்து புலன்கள் மூலம் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு ஒரு பொருளைப்பற்றிய அறிவு அல்லது எண்ணத்தை பெறவேண்டும்.

வெளிப்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்

நான் (அறிபவன்) என் எண்ணங்களை கண்கள் (புலன்) மூலம் அறியப்படும் பொருளிடம் அனுப்பி அதைப் போன்ற ஒரு வடிவத்தை எண்ணமாக என் மனதில் திரும்பப்பெற்று அந்தப்பொருள் பானை என்பதை அறிகிறேன்.

அந்தப்பொருளைப்பார்ப்பதற்கு முன் அது என்ன என்பதை நான் அறியாதவன். அதை பார்த்தபின் அதை அறிந்தவன். என் கண்கள், மனம், எண்ணங்கள் ஆகியவை பானையைப்போல் ஜடப்பொருள்கள். ஜடப்பொருள்கள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவதால் எவ்வித அனுபவமோ அறிவோ ஏற்படாது. எனவே நான்  அறியாதவன் என்ற நிலையில் இருந்து அறிந்தவன் என்ற நிலைக்கு மாற எனக்கு அகம்பாவத்தின் துணை தேவை.

என் எண்ணங்கள் பானையை நோக்கிப்பயணிக்கும்பொழுது அதனை முன்னடத்தி செல்வது அகம்பாவம். ஈட்டியின் முனையில் கூரான இரும்பு இல்லாவிட்டால் அது இலக்கைத்துளைக்காது. அது போல நான் என்ற உணர்வுடன் செல்லாவிட்டால் நம் எண்ணங்களால் எவ்வித பொருளையும் அறியமுடியாது. உதாரணமாக அருகில் உள்ள ‘கடிகாரத்தில் எவ்வளவு எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன’ என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டுமானால் நான் என்ற உணர்வுடன் நம் எண்ணங்கள் செயல்பட்டு கடிகாரத்தை கவனமாகப்பார்க்க வேண்டும். அதன்பின்  ‘நேரம் என்ன’ என்ற கேள்வியை கேட்டால் நாம் மறுபடியும் கடிகாரத்தை பார்க்க வேண்டியிருக்கும். ஏற்கனவே பார்த்தபோது அது காட்டும் நேரம் கண்ணில் தெரிந்திருந்தாலும் அது மனதில் பதியாததற்குக்காரணம் ஈட்டிமுனையில் கூரான இரும்பு இல்லாததுபோல் நம் எண்ணங்களின் முன் அகம்பாவம் இல்லாததுதான். எனவே அறியாதவனை அறிந்தவனாக மாற்ற அகம்பாவத்தின் உதவி அவசியம். நம் கண், மனம், பானை போன்ற ஜடப்பொருள்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா.

ஒரு பொருளை அறிகிறோம் அல்லது அறியவில்லை என்பதை அறிவது ஆத்மா. அறியாத பொருளை அறிந்த பொருளாக மாற்றுவது அகம்பாவம். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் எதனுடனும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஆத்மா அறியாதவனை அறிந்தவனாக மாற்றும் செயலை செய்யும் சக்தியற்றது. எனவே பானையை நாம் அறிந்து கொள்ள அகம்பாவத்தின் துணை அவசியம்.

கம்புயூட்டர் இயங்க ஆதாரமாக இருக்கும் மின்சாரம் கணக்கு போடும் திறன் இல்லாதது. அதுபோல அனைத்து வேலைகளையும் அகம்பாவம் செய்வதற்கு ஆதாரமாக மட்டும் இருப்பது ஆத்மா.

ஒரு பொருளைப்பற்றிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை அகம்பாவத்தால் தீர்மானிக்கமுடியாது. ஏனெனில் அகம்பாவம் தொடர்ந்து மாற்றமடையும் தன்மையுள்ளது. பானையை அறியாத அகம்பாவம் பானையை அறிந்த அகம்பாவமாக மாறிவிடுவதால் இந்த மாற்றத்தை அறிய மாறாத ஆத்மா அவசியம். மேலும் அகம்பாவம் வந்து போகும் தன்மையுடையது. ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை மற்றும் தன்னை மறந்து நாம் ஒரு வேலையை செய்யும்நேரம் ஆகிய சமயங்களில் அகம்பாவம் இருப்பதில்லை. ஆத்மா நிலையானது.

ஜடப்பொருள்களான நம் மனம் மற்றும் உடல் ஆகியவை இடைவிடாமல் ஏதேனும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் உயிருள்ளவைகளாக இருப்பதற்கு அகம்பாவம் அவசியம். எவ்வித செயலிலும் ஈடுபடாமல் எதனுடனும் தொடர்பு கொள்ளாமல் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது ஆத்மா.

இது பானை என்று அறிந்து கொள்ள மாற்றமடையும், நிலையில்லாமல் தொடர்ந்து செயல்புரியும் அகம்பாவம் அவசியம். நான் பானையை அறியவில்லை அல்லது அறிகிறேன் என்பதை அறிந்து கொள்ள மாறாத, நிலையான, எவ்வித செயலிலும் ஈடுபடாத ஆத்மா அவசியம்.

உட்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்

விலங்குகளுக்கு உட்புற எண்ணங்கள் ஏற்படுவதில்லை. பசிக்கும்பொழுது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது வெளிப்புற எண்ணம். எந்த உணவை சாப்பிடலாம் என்று யோசிப்பது உட்புற எண்ணம். நிகழ்காலத்தில் ஏற்படும் வெளிப்புற எண்ணங்களை அடிப்படையாகக்கொண்டு இது இப்படி நடந்திருக்க கூடாது என்று கடந்தகால நிகழ்வுகளைப்பற்றியும் நாளை என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்காலத்தைப்பற்றியும் நமது மனதில் உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. மனிதனின் மனம் மட்டுமே பரமனின் மூன்று தன்மைகளையும் முழுமையாக பிரதிபலிப்பதால் அறிந்து கொள்ளவும், அறிந்ததை அடையவும், அடைந்ததை அனுபவிக்கவும் தேவையான உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. இவ்வெண்ணங்களை அடையாளம் காட்டுவது அகம்பாவம்.

பானையை ஒரு அட்டை பெட்டியினுள் வைத்து மூடி இதனுள் என்ன இருக்கிறது என்று கேட்டால் அதனுள் ஒரு பொருள் இருக்கிறது என்று மட்டும் தெரியவருமே தவிர அது என்ன பொருள் என்று தெரியாது. வெளிப்புற எண்ணத்திற்குண்டான பொருள் தெரியாத ஒன்றாக இருக்கலாம். இதுபோல் பொருள் தெரியாத உட்புற எண்ணங்கள் இருக்கமுடியாது. ஏனெனில் நம் எண்ணங்களை அடிப்படையாக கொண்டு தோன்றுவதுதான் உட்புற எண்ணங்கள் என்பதால் இவற்றின் தோற்றம், மறைவு ஆகியவற்றை தெளிவாக நாம் அறிவோம். உதாரணமாக மனதில் கோபம் ஏற்பட்டால் அது நமக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

வெளிப்புற எண்ணத்தை ஒளிர்விப்பது ஆத்மா மட்டுமே. உட்புற எண்ணத்தை அகம்பாவமும் சேர்ந்து ஒளிர்விக்கிறது. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்கள் எஞ்சிய சுவற்றைவிட பிரகாசம் கூடியதாக இருப்பதற்கு அந்த இடங்களில் சூரிய ஒளி மற்றும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆகிய இரு ஒளிகள் இருப்பதுதான் காரணம். அதுபோல உட்புற எண்ணங்கள் ஆத்மா மற்றும் அகம்பாவம் ஆகிய இரண்டின் மூலமும் பிரகாசப்படுவதால் நமக்கு நம் கோபம், கருணை போன்ற உணர்வுகள் ஏற்படுவது தெளிவாகத்தெரிகிறது.

நெருப்பு ஒரு இரும்புத்துண்டு முழுதும் பரவி அதை ஒளிர்விக்கும். ஒளிர்விக்கப்பட்ட இரும்புத்துண்டு மற்ற பொருள்களை விளக்கும் அளவுக்கு ஒளிராது. அதுபோல அகம்பாவம் நம் மனதில் தோன்றும் உணர்வுகளை மிகத்தெளிவாக காட்டுவதுபோல் உலகத்தில் உள்ள மற்ற பொருள்களை ஒளிர்விக்க முடியாது. அகம்பாவம் ஒரே ஒரு உடலை மட்டும் உயிருடன் காட்டும்.

ஆத்மா நம் மனம் முழுவதும் பரவி அதை அகம்பாவமாக ஒளிர்விக்கும். அதுமட்டுமல்லாமல் ஆத்மா உலகத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பதுடன் அவற்றில் சிலவற்றை அகம்பாவமாக மாற்றி அவை உயிரினங்களாக செயல்படச்செய்யும் சக்தியும் கொண்டது.

எனவேதான் ஆத்மாவை விட்டுவிட்டு அகம்பாவத்தை நான் என்பதற்கு பொருளாக கொண்டால் ஒரு குறிப்பிட்ட உடல் மற்றும் மனதின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடைபட வேண்டும். அகம்பாவம் வெறும் நிழலுருவம் என்பதால் நம் உண்மை உருவான ஆத்மாவை நான் என்று அறிந்து கொண்டால் இவ்வுலகின் ஆதாரம் நான் என்றும் அனைத்து உயிரினங்களும் உயிருடன் இருப்பது என்னால்தான் என்றும் தெரியவரும்.

ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் மறைந்துவிடும். ஆனாலும் விழித்தெழிந்தவுடன் உறங்கும்பொழுது எதையும் அறியவில்லை என்பதை அறிந்திருக்கிறோம். இதற்கு காரணம் எவ்வித எண்ணங்களும் மனதில் இல்லை என்பதை அறியும் ஆத்மா.

அனுபவிப்பவர் யார்?

உடலும் மனமும் ஜடப்பொருள்கள் என்பதால் அவை அனுபவிப்பவன் அல்ல. ஆத்மா எவ்வித செயலும் செய்ய இயலாதது என்பதால் அனுபவிப்பவன் ஆத்மாவும் அல்ல. எஞ்சியிருப்பது அகம்பாவம் மட்டுமே. அகம்பாவம் நிழலுருவம் என்பதால் அனுபவிப்பவன் என்பது ஒரு கற்பனை. காந்தி நம்மை நேருக்கு நேர் பார்த்து புன்னகைப்பதுபோல் ஒரு புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தால் ‘என்னைப்பார்ப்பது யார்’ என்ற கேள்விக்கு காந்தி என்று பதில் சொல்ல முடியாது. அது போல் அனுபவிப்பவன் என்பது ஒரு பொய்யான தோற்றம். நான் யார் என்ற அறிவு இல்லாத அஞ்ஞான நேரத்தில் நான்தான் அனுபவிப்பவன் என்று உரிமைபாராட்டி அதனால் துன்பத்துக்கு ஆளாவதை தவிர்க்க நான் யார் என்ற ஆராய்ச்சி மூலம் அறியாமையை அகற்றி முக்தி பெறவேண்டும்.

அனுபவிப்பவன் யார் என்ற ஆராய்ச்சி முக்திபெறுவதற்காகவேதவிர உண்மையில் அனுபவிப்பவன் யார் என்று கண்டுபிடிப்பதற்காக அல்ல. கயிற்றை பாம்பு என்று தவறாக நினைத்துவிட்டோம் என்பது புரிந்தபின் அந்தப்பாம்பு எப்பொழுது உருவானது, அது விஷமுள்ளதா என்பது போன்ற ஆராய்ச்சி அனாவசியம்.

முக்தி பெறுவது எப்படி?

அகம்பாவத்தால் உயிரூட்டப்பட்ட உட்புறஎண்ணங்கள் மனதை ஆக்ரமிக்கின்றன என்பதை புரிந்துகொண்டு அவற்றை பொருட்படுத்தாமல் நான் ஆத்மா என்பதை உணர்வது முக்தி. எனவே முக்தி நமக்கு அன்னியமானது அல்ல. ‘நீ இப்பொழுது என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்’ என்று யாரைப்பார்த்துக் கேட்டாலும் கிடைக்கும் பதில் ‘ஒன்றுமில்லை’ என்பதுதான். எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் நம் மனதில் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நாம் பொதுவாக கவனிப்பதே இல்லை. இதுபோல் திடீரென ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்பொழுது இந்த இடைவெளியை நாம் கவனிக்கிறோம். எனவேதான் ‘ஒன்றுமில்லை’ என்று பதில் சொல்கிறோம். ஒன்றுமில்லாமல் என்றுமிருப்பதுதான் ஆத்மா என்கிற நான் என்று அறிவதுதான் முக்தி.

அதேபோல் ‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு நன்றாக இருக்கிறேன் என்பதுதான் உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பதிலும். இதற்கும் காரணம் அது உண்மை என்பதுதான். நான் என்பதன் பொருள் ஆனந்தமயமாக என்றும் இருக்கும் ஆத்மா. இரு எண்ணங்களுக்கு இடையே ஏற்படும் இடைவெளியில் தன்னை காட்டிக்கொள்வது ஆத்மா. அகம்பாவத்தால் எண்ணங்களை மட்டுமே அறிய முடியும். எண்ணங்கள் இல்லாத ஜடமான மனதினிடம் நான் இந்த உடல் அல்லது மனம் என்ற அறிவு இருப்பதில்லை. எனவே நம் உண்மை உருவான ஆத்மாவின் நிலையை ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்ற பதிலாக கொடுத்துவிட்ட அடுத்த நிமிடம் கால் முட்டிவலி பற்றிய எண்ணத்தை அகம்பாவம் காட்டிக்கொடுக்க ‘ஆனால் முட்டிவலிதான் தாங்கமுடியவில்லை’ என்பதை பதிலுடன் சேர்த்துக்கொள்கிறோம். கேள்விகேட்டவர் அங்கிருந்து இன்னும் நகராவிட்டால் அகம்பாவம் தொடர்ந்து வேலை செய்து எப்படி மகன் சரியாகபடிப்பதில்லை, வேலையில் பதவிஉயர்வு கிடைக்கவில்லை என்பது போன்ற பல பிரச்சனைகளுடன் நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று முதலில் கூறிய பதிலுக்கு முற்றிலும் எதிர்மாறான பதிலை சொல்லிக்கொண்டிருப்போம்.

மகனின் மதிப்பெண்களை பார்க்கும்பொழுது ஏற்பட்ட எண்ணம் வெளிப்புற எண்ணம். அதை அடிப்படையாக கொண்டு அவன் சரியாகப்படிப்பதேயில்லை என்று முடிவு செய்து சோகத்தில் ஆழ்வதற்கு காரணம் நாமே உருவாக்கிய உட்புற எண்ணம்.

எவ்விதமான உணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன என்பதைப்பொறுத்துதான் வாழ்க்கையின் தரம் நிர்ணயிக்கிப்படுகிறது. எவ்வித உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை உலகம் தீர்மானிப்பதில்லை. வெளிப்புற எண்ணங்களை மட்டுமே உலகம் தீர்மானிக்கிறது. அவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வித உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன என்பது நம் அறிவை மட்டும் பொருத்தது.

எனவே முக்தியை பெறுவதற்கு நாம் எவ்வித செயலையும் செய்ய வேண்டாம். அனுபவிப்பர் நான் அல்ல என்றும் உலகில் உள்ள ஜடப்பொருள்களின் தொடர்ந்த இயக்கத்தில் அகம்பாவத்தால் ஒளிர்விக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலை என்னுடையது என்று நினைப்பது அறியாமை என்றும் அறிந்தால் நாம் முக்தியடைந்துவிடுவோம்.

வாழ்வின் பிரச்சனைகளுக்கு காரணம்

தானே உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. சும்மா இருப்பது சொர்க்கம். சும்மா இருந்தால் போர் அடிக்கிறது என்று நினைப்பதற்கு காரணம் ஆனந்தம் உலகில் இருக்கிறது என்று நினைக்கும் அறியாமையே.  தொலைக்காட்சியில் தொடர்களைப்பார்ப்பது, கிரிகட் கால்பந்து போன்ற விளையாட்டுக்களை பின்பற்றுவது, விலையுயர்ந்த வாகனம் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குதல்  போன்ற செயல்களால் மனதில் கற்பனையான ஒரு ஆவலை ஏற்படுத்திக்கொண்டு அது நிறைவேறியதும் தற்காலிகமாக ஏற்படும் நிம்மதி மற்றும் மகிழ்ச்சிதான் உண்மையானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

அமைதியாக இருக்கும் மனதை அலைபாயவிட்டு அதன் பின் அமைதிபடுத்தும் செயல் கை சுத்தமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க சாக்கடையில் கைவிட்டு கையை  அசிங்கப்படுத்திவிட்டு அதன்பின் சுத்தமான நீரில் கழுவுவது போன்றது.

வாழ்வில் பிரச்சனைகள் மேலோங்கியிருக்கும்பொழுது பணம் இருந்தாலும் யாரும் ஆடம்பரச்செலவு செய்வதோ உல்லாசப்பயணம் செல்வதோ இல்லை. ஏனெனில் மனதில் அலைபாயும் எண்ணங்கள் ஏற்கனவே இருப்பதால் பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு மனதில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியை அவர்கள் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனம் ஏற்கனவே அழுக்காக இருக்கிறது என்றும் அதை சுத்தம் செய்தால்தான் அமைதி கிடைக்கும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மனதில் எண்ணங்கள் இருப்பது முக்திக்கு தடையல்ல. எண்ணங்கள் மாயையான உலகைச்சுட்டிக்காட்டும் வெறும் பெயர்பலகைகள் என்பதை உணர்ந்தால் அவற்றின் நடனத்தை என்றும் அமைதியுடன் இரசிக்கமுடியும். ஏனெனில் தொடர்ந்து மாறுவதுதான் உலகின் இயல்பு. அந்த மாற்றத்தை பிரதிபலிப்பதுதான் மனதின் வேலை. பிரச்சனைகள் வெளியுலகில் இல்லை. தொடர்ந்து மாறும் உலகில் ஒருசில மாற்றங்களுக்கு பிரச்சனை என்று பெயரிடுவது நமது அறியாமை. பிரச்சனைகள் ஏற்பட்டு அவை தீர்ந்தால்தான் அமைதி வரும் என்ற தவறான அறிவால் அவற்றை நாமே உருவாக்குகிறோம். மாற்றங்களின் இடையே மட்டும் இருப்பதல்ல அமைதியும் ஆனந்தமும். அவை என்றும் நம்முடன் இருக்கும் நமது சுபாவம் என்பதை அறியாததுதான் நம் பிரச்சனைகளுக்கு காரணம்.

பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி?

நம் உடல் ஜடம் என்பதை மயக்கமருந்தின் (local anesthesia) மூலம் கைகால்கள் மரத்துப்போன நிலையில் அறியலாம். நம் மனமும் ஜடம் என்பதை சமாதி நிலையில் மட்டுமே உணரமுடியும். ஏனெனில் நாம் விழித்திருக்கும் நேரங்களில் அது எண்ணங்களுடன் இருப்பதால் அதை ஜடம் என்று புரிந்து கொள்வது கடினம். முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்கும்பொழுதெல்லாம் அதில் நம் முகம் தெரிகிறது என்பதால் அதற்கு உயிர் இருக்கிறது என்று நினைப்பதில்லை. ஆனால் ஆத்மாவை பிரதிபலிக்கும் மனம் நாம் விழித்திருக்கும் பொழுதெல்லாம் செயல் செய்து கொண்டிருப்பதால் அதை ஜடம் என்று அறிய வேதத்தின் துணை தேவை படுகிறது. ‘நீதான் அது’ என்ற வேதத்தின் உபதேசத்தை புரிந்துகொண்டால் மாறும் மனம் நான் அல்ல என்று தெரியும். அதன் பின் உலகின் நிகழ்வுகளுக்கு பிரச்சனைகள் என்று பெயரிடாமல் அவற்றை அமைதியுடன் இரசிக்கலாம்.

தியானம் செய்வதன் மூலம் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தையும் அகற்றி அகம்பாவத்தை ஆத்மாவுடன் ஐக்கியமாக்கினால் சமாதி நிலையை அடையலாம். மிகுந்த சாதனை இதற்கு வேண்டுமென்றாலும் இதை செய்யகூடியவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களது சமாதி அனுபவத்தில் ஆழ்ந்த உறக்க நிலையைப்போல மனம் முற்றிலும் மறைந்திருக்கும். எவ்வித எண்ணங்களும் இல்லாவிட்டாலும் சமாதி நிலை முடிந்தவுடன் இவ்வளவு நேரம் சமாதியில் இருந்தேன் என்று அறியமுடிவதற்கு காரணம் அகம்பாவம்தான். தூக்கத்தில் இல்லாத அகம்பாவம் சமாதி நிலையில் தொடர்ந்து ஆத்மாவுடன் ஒன்றி இருக்கிறது.

விழித்திருக்கும்பொழுது மனதில் உணர்வுகளை உருவாக்கும் அகம்பாவம் ஆழ்ந்த உறக்கத்தில் அழிந்து விடுவதால் நம்மால் நிம்மதியாக தூங்கமுடிகிறது. காலையில் விழிக்கும்பொழுது எண்ணங்கள் ஒவ்வொன்றாக மனதில் தோன்ற ஆரம்பிக்கின்றன. வாழ்வில் நாம் எவ்வளவு செயல்களைச்செய்கிறோம் எவ்வளவு மனிதர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதைப்பொறுத்து வெகு சீக்கிரம் மனதில் எண்ணங்கள் நிறைய ஆரம்பித்துவிடுகின்றன. மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகள் வெறும் எண்ணக்குவியல்களே.

எனவே மனம் அமைதியாயிருக்க தியானம் செய்து சமாதியை அடையவேண்டும் என்றோ ஊரைவிட்டு ஓடிப்போய் காட்டில் வசிக்கவேண்டும் என்றோ அர்த்தமல்ல.

முக்தியை அனுபவிக்க மனம் அவசியம்

ஆழ்ந்த உறக்கத்தில் மறந்திருந்த எல்லா எண்ணங்களும் மறுபடியும் நம் மனதை ஆக்ரமித்து இரு எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இல்லாதது போல் செய்துவிடுகின்றன. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று நிம்மதியை அது இல்லாத இடத்தில் தேட ஆரம்பிக்கிறோம். இரு எண்ணங்களுக்கு இடையே இருப்பதுதான் நிம்மதி.

சப்தம் செய்யப்படவேண்டும். நிசப்தம் என்றுமிருப்பது. அதை செய்யமுடியாது. வேண்டுவதை பெற ஏதாவது செய்யவேண்டும் என்று பழகிப்போயிருப்பதால்தான் அமைதியாய் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது. அமைதியாய் இருக்க எதுவும் செய்யவேண்டாம். அமைதியில்லாமல் எதையும் செய்யவும் முடியாது.

வெள்ளைக்காகிதத்தில் பேனாவை உபயோகித்து எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுதும்பொழுது எழுத்துக்களின் இடையே இடைவெளியை நாம் எழுதுவதில்லை. அந்த இடைவெளி இல்லாமல் எழுத்துக்கள் இருக்கமுடியாது. அதுபோல நம் மனதில் ஏற்படும் எண்ணங்களின் இடையே இருப்பதுதான் அமைதி. அந்த அமைதிதான் ஆத்மா. அது இல்லாமல் எண்ணங்களே இல்லை. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களுக்கு இடைப்பட்ட இடம் இல்லாமல் ஒளிவட்டங்கள் இருக்க முடியாது. மேலும் ஒளிவட்டங்கள் இருக்கும் இடமும் சூரியனால் ஒளிர்விக்கப்பட்ட சுவர்தான். காகிதத்தில் உள்ள வெற்றிடத்தில்தான் எழுத்துக்கள் தோன்றுகின்றன. மனதில் உள்ள அமைதியின் மீதுதான் எண்ணங்கள் தோன்றுகின்றன. நிர்மலமான திரையின் மீதுதான் திரைப்படம் தெரிகிறது. திரையை பார்க்க திரைப்படத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் திரைப்படத்தை பார்க்கும்பொழுது திரையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதுபோல அமைதியாய் இருக்க எண்ண ஓட்டத்தை நிறுத்தவேண்டிய அவசியமில்லை. அமைதியின் மீதுதான் எண்ணங்கள் ஏற்படுகின்றன என்றும் எண்ணங்களின் இடைவெளியில் தொடர்ந்து அமைதி இருந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிந்து கொண்டால் போதும். திரைப்படத்தையாவது எளிதில் நிறுத்தி வெண்திரையை பார்த்துவிடலாம். ஆனால் எண்ணங்களை நிறுத்தி அமைதியாய் இருக்க அஷ்டாங்க யோகத்தை முழுமையாக செய்து சமாதி நிலையை அடையவேண்டும். இது அனாவசியம். ஏனெனில் திரைப்படம் ஓடாமல் திரைமட்டும் இருப்பதால் எவ்வித பயனும் இல்லை. கடிதங்கள் எழுதாமல் காகிதத்தை வெள்ளையாகவே வைத்திருப்பதற்கு காகிதமே தேவையில்லை. உலகை அனுபவிக்க எண்ணங்கள் அவசியம். நான் அமைதியாய் இருக்கிறேன் என்பதை அறியக்கூட எண்ணங்கள் வேண்டும்.

எதனுடனும் சம்பந்தப்படாமல், எவ்வித மாற்றமும் அடையாமல், தோற்றம்-மறைவு என்ற விதிக்கு கட்டுப்படாமல், துன்பம் கலவா ஆனந்தமயமாக அறிவுருவாக என்றும் இருக்கும் ஆத்மா எவ்வித சுவாரசியமுமற்றது. அதனால் எதையும் செய்ய முடியாது. அதனாலேயே அது பற்பல அகம்பாவங்களாக காட்சியளிக்கிறது.

அகம்பாவம் மாற்றத்திற்குரியது. வந்து போகும் தன்மையுடையது. தொடர்ந்து செயல் செய்து கொண்டிருப்பது. அகம்பாவமில்லாமல் நாம் உயிருடன் இந்த உலகை அனுபவிக்க முடியாது. நான் ஆத்மா என்றாலும் அகம்பாவம் இல்லாமல் வாழ்வு என்னும் உல்லாசப்பயணத்தை மகிழ்வுடன் அனுபவிக்க முடியாது.

முடிவுரை :

உயிர் வாழவதற்காக எவ்வித உணவையும் உண்ணலாம் என்ற வேதவாக்கியத்தின் பொருளைப்புரிந்துகொள்ள உயிர்வாழ வேண்டியதன் அவசியத்தைத்தெரிந்து கொள்ளவேண்டும். ஆனந்த மயமான பரமன் நான் என்பது உண்மையென்றாலும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க உயிர்வாழ்வது அவசியம்.

பரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. உடல் இருக்கும் வரைதான் அறிவது, ஆசைப்படுவது, அடைவது போன்ற பரமனால் செய்யமுடியாத காரியங்களை செய்து இவ்வுலகை அனுபவிக்க  முடியும். இதற்காகத்தான் நமக்கு இவ்வுடல் கிடைத்திருக்கிறது. எனவே உயிரைப்பாதுகாக்கும்பொருட்டு வேதம் விதித்துள்ள உணவுக்கட்டுப்பாடுகளை மதிக்கவேண்டியதில்லை என்று வேதமே அனுமதி கொடுக்கிறது.  

எவ்வித உணவு உட்கொள்ளவேண்டும், என்ன வேலைகள் செய்யவேண்டும் என்று வாழ்வில் செய்யவேண்டிய செயல்கள் அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்று வேதம் வகுத்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளின்படி நடந்தால் வேதத்தின் மையக்கருத்தான நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளலாம். அதன்பின் வேதத்தின் கட்டுப்பாடுகள் எவையும் தேவையில்லை.

நான் பரமன் என்பதை அறிய தியானம் ஒரு படியாக அமைகிறது. ஓம் ஓம் என்ற மந்திர ஜபம்  இரண்டு மந்திரங்களுக்கிடையே உள்ள அமைதியை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. தொடர்ந்த அமைதியின் நடுவே பிரணவ மந்திரம் தோன்றி மறைவதுபோல் நிரந்தர அமைதியின் நடுவே பிரபஞ்சம் தோன்றி மறைகிறது. இந்த இடைவிடாத இயக்கம் நம் மனமெனும் கண்ணாடியிலும் பிரதிபலிக்கிறது. வந்துபோகும் எண்ணங்கள் நமது கவனத்தை கவர்ந்து எண்ணங்கள் எழும் அடித்தளமான அமைதியை மறைத்துவிடுகிறது.

வேதாந்தத்தின் ஒரே நோக்கம் இந்த அமைதியை நமக்கு அறிமுகப்படுத்தி ‘நீயே அது’ என்று சுட்டிக்காட்டுவதுதான். இதை அறிந்துகொண்டால் தனியாக தியானம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் வாழ்க்கையே தியானமாக நிரந்தர அமைதியை அனுபவிக்கலாம்.


பயிற்சிக்காக :

1. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதன் நோக்கம் என்ன?

2. அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை நிரூபிக்கவும்.

3. அனுபவிக்கப்படும் பொருள் ஏன் அனுபவிப்பவராக இருக்க முடியாது?

4. அனுபவிப்பவர் ஆத்மா அல்ல என்பதை நிரூபிக்கவும்.

5. ஆத்மாவுக்கும் அகம்பாவத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கும் சுவர் – ஒளிவட்டங்கள் உதாரணத்தில் கூறப்பட்ட பத்து கருத்துக்களை ஆராய்க.

6. இருவகை எண்ணங்களுக்கிடையே உள்ள முக்கியமான ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன?

7. அனுபவிப்பவர் யார் என்ற கேள்வியின் முடிவான பதில் என்ன?

8. முக்தி அடைவது எப்படி?

9. வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

10. பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. இருவருக்கிடையே ஏற்படும் ஒரு அனுபவத்தில் இரு அறிபவர்கள் இருக்கிறார்களே?

2. ஆத்மாவுக்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

3. வெளிப்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன?

4. உட்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன?

5. காதலித்து கல்யாணம் செய்து கொள்வது, டேட்டிங்க் (dating) செய்து வாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுப்பது, பெற்றோர் தேர்ந்தெடுத்தவரை திருமணம் செய்துகொள்வது – இவற்றில் எது சிறந்தது? மற்றவற்றில் என்ன குறை? முக்தியடைந்தவர்கள் எந்த வகையில் திருமணம் செய்துகொள்வார்கள்?

6. மற்றவருக்கு நாம் கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நமக்கு கிடையாது என்று கூறப்பட்டிருப்பது உண்மையா?

7. அனுபவிப்பவர் என்று ஒருவர் இல்லாவிட்டால் முக்தியடைவது யார்?