Thursday, December 2, 2010

Lesson 142: Rituals are means to enlightenment (Brahma Sutra 3.4.26-27)

பாடம் 142: முக்தியடைய வேலை செய்வது அவசியம்
பாடல் 451- 452 (III.4.26-27)

பயணம் முடிந்தவுடன் குதிரை அவசியமில்லை என்பதால் குதிரையே தேவை இல்லை என்று முடிவுசெய்துவிடக்கூடாது.  முக்தியடைய ஞானம் மட்டும் போதும் என்பதால் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற தவறான முடிவுக்கு வரக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி முழுமையான முக்தியை அனுபவிக்க வேலை செய்வதன் மூலம் மனதை செம்மைபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த பாடம் விளக்குகிறது.

உலகத்தை மாற்றியமைப்பதன் மூலம் இன்பமான வாழ்வைப்பெறலாம் என்று நினைத்து அதற்காக பாடுபடுவது ஒருவிதத்தில் சரிதான். ஏனெனில் உழைப்பது மனதை சுத்தம் செய்து முக்தியை பெற மக்களை தகுதி படுத்துகிறது.

நான் பரமன் என்ற ஞானத்தை பெறுவதற்கும் பெற்ற ஞானத்தில் நிலைத்து நிற்கவும் வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய இரு முக்கிய தகுதிகள் வேண்டும். விரும்பியபடி உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக தர்மமான முறையில் முடிந்த அளவு பணம் சம்பாதிக்க மக்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள். இந்த உழைப்புதான் அவர்களுக்கு இவ்விரு தகுதிகளையும் பெற்றுத்தருகிறது.

எனவே தெரிந்தோ தெரியாமலோ அனைத்து மக்களும் முக்தியடையவே முயன்று கொண்டிருக்கிறார்கள். கல்வி கற்பது, வேலை செய்வது, பணம் சேர்ப்பது, திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெறுவது போன்ற செயல்களை செய்வது முக்திக்கு அழைத்துச்செல்லும் படிக்கட்டுக்கள். அவரவர்களின் அறிவுத்திறன் மற்றும் புத்திகூர்மைகேற்ப இந்த படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் இவ்விரு தகுதிகளை பெற்றபின் முக்தி என்றால் என்ன என்பதை விரைவில் அறிந்துகொண்டு அதை அடைய வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள்.

முக்தியடைவது ஆரம்பத்தில் ஒரு எட்டாக்கனிபோல்தான் தோன்றும். சொந்த வீடு வேண்டும் என்ற ஆசையும் வேண்டிய பணமும் இருந்தால் வீடுகட்டுவது என்பது மிக எளிதான செயல். அது போல தேவையான வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய இரண்டை பெற்றபின் தீவிர ஆசையுடன் கடுமையாக உழைப்பவர்கள் அனைவருக்கும் முக்தி நிச்சயம் கிடைக்கும். எனவே நாம் இந்தப்பிறவியில் முக்தியடைய முடியாது என்ற அவநம்பிக்கை அனாவசியம்.

பிறப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முக்தி பெறுவதால் சுற்றியுள்ள உலகம் மாறிவிடாது. வெற்றி-தோல்வி, வளமை-வறுமை என்ற வாழ்வின் ஊசலாட்டத்தை தொடர்ந்து எதிர்கொள்வதை முக்தியடந்தபின்னும் தவிர்க்க முடியாது. எனவே ஒருவரது மனம் எவ்வளவுதூரம் வைராக்கியம், சாந்தம் ஆகியவற்றின் மூலம் செம்மையடைந்துள்ளது என்பதை பொறுத்தே அவர்களால் குறையாத இன்பத்தையும் நீடித்த நிம்மதியையும் அனுபவிக்க முடியும்.

நூற்றுக்கு நூறுவாங்கி தேர்ச்சி பெற்ற மாணவன் தேர்வில் வெற்றிபெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்களை மட்டுமே பெற்றுத்தேறியவனைவிட சிறந்தவன். அதுபோல முழுமையான அளவு வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய தகுதிகளை பெற்றவர்களால் மட்டுமே ஞானத்தின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியும். எனவே தேர்வில் தேர்ச்சியடைந்தபின்னும் பெற்றமதிப்பெண்களை அதிகப்படுத்திக்கொள்ள மறுபடியும் படித்து குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் மறுதேர்வு எழுதும் மாணவன் போல் முக்தியடைந்தவர்கள் கூட முழுமையான வைராக்கியத்தையும் சாந்தத்தையும் பெற தொடர்ந்து உழைக்க நேரிடலாம்.

வைராக்கியம் (Dispassion)

மற்ற மனிதர்கள், உயிரினங்கள் உள்ளிட்ட உலகப்பொருள்கள், நிகழ்வுகள் ஆகிய எதன் மீதும் பற்றுதல் இல்லாமல் இருத்தல் வைராக்கியம் ஆகும். என்னுடையது என்று கடவுளின் பொருள்களை சொந்தம் கொண்டாடுவதை துறப்பது அவ்வளவு எளிதல்ல. கடவுளை துதித்து ‘என் உடைமைகள் அனைத்தும் ஏற்கனவே உன்னுடையதுதான், அவற்றை உனக்கே அர்ப்பணம் செய்கிறேன்’ என்று ஆரத்தி பாடல்களை தினமும் பாடுவதிலிருந்து கடவுளுக்கு அர்ப்பணம் செய்வது வெறும் உதட்டளவில் என்று தெரிகிறது. உண்மையில் அர்ப்பணம் செய்திருந்தால் அதன் பின் எவ்வித கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

உலகத்தில் உள்ள பொருள்களுக்கு நீடித்த இன்பத்தை தரும் சக்தியில்லை என்பதையும், நாம் அவற்றிலிருந்து பெறுவதாக நினைக்கும் இன்பம், துன்பமுடன் கலந்தே கிடைக்கிறது என்பதையும் உணர்ந்தால் வைராக்கியம் தானாக ஏற்படும். இலையில் உள்ள உணவில் விஷம் கலந்து இருக்கிறது என்பதை கேள்விபட்டால் எவ்வளவு பசியிருந்தாலும் ஒரு வாய் கூட உண்ண மாட்டோம். அது போல நம் துன்பத்துக்கு ஒரே காரணம் நமது ஆசை என்ற புத்தரின் போதனையின் அர்த்தம் புரிந்தால் உலகப்பொருள்களின் மீதுள்ள பற்று மறைந்து வைராக்கியம் பிறக்கும்.

வைராக்கியம் இருப்பவர்கள் நீடித்த இன்பத்திற்கும் நிலையான நிம்மதிக்கும் உலகைச்சார்ந்து இருக்க மாட்டார்கள். நீ இல்லாவிட்டால் நான் இல்லை என்ற அடிமைத்தனம் வைராக்கியம் ஏற்பட்டுவிட்டபின் முற்றிலும் மறைந்து விடும். எந்த ஒரு குறிப்பிட்ட மனிதரோ பொருளோ நம் இன்பத்திற்கு காரணமாய் இருக்க முடியாது என்ற வைராக்கியம் நம் துன்பத்தை முற்றிலும் நீக்கும் சக்தி வாய்ந்தது.

பற்றில்லாமல் இருப்பதே வைராக்கியம். வைராக்கியத்துடன் இருப்பதற்கு எதையும் துறக்க வேண்டிய அவசியமில்லை. நம் குடும்பத்தாரின் நலனுக்கு உழைத்து அவர்களை காப்பது மற்றும் நிறைய பணம் சம்பாதிப்பது போன்ற செயல்களை செய்பவருக்கு வைராக்கியம் இல்லை என்று முடிவு செய்ய முடியாது. மனதில் பற்றில்லாமல் இருப்பதற்கு ஊரை விட்டு காட்டிற்கு சென்று எந்த மனிதர்களுடனும் உறவில்லாமல் வாழவேண்டும் என்று பொருளல்ல.

அன்புடன் பெற்ற பிள்ளைகளை போற்றி வளர்ப்பதை பற்றை துறந்த பின் கூட செய்யலாம். பற்றை மனதளவில் துறப்பதுதான் வைராக்கியம். வங்கியில் வேலை செய்யும் காசாளர் பல லட்சக்கணக்கான ரூபாய்களை நாள்தோறும் புழங்குகிறார். அவருக்கு அவற்றின் மீது பற்றுதல் கிடையாது. பணத்தை கொடுக்கும்பொழுது வருத்தப்படுவதோ வாங்கும்பொழுது சந்தோஷப்படுவதோ இல்லை. ஆயினும் ஒரு ரூபாயைகூட கூடுதலாக யாருக்கும் கொடுக்க மாட்டார். கவனத்துடன் அதே சமயம் எவ்வித பற்றும் இல்லாமல் அவர் எப்படி வங்கியின் பணத்தை புழங்குகிறாரோ அதுபோல் நாம் நம் குடும்பம், உறவினர், சொத்து ஆகிய அனைத்து உடைமைகளையும் கையாண்டால் நமக்கு வைராக்கியம் இருக்கிறது என்று அர்த்தம். பதவி உயர்வு, பண வரவு போன்ற நிகழ்வுகளுக்கு இன்பம் கொடுக்கும் சக்தி சிறிது கூட கிடையாது. அவ்வாறு இருப்பதாக நாம் செய்து கொண்டிருக்கும் கற்பனையை துறப்பதுதான் வைராக்கியம்.

நிலையில்லாத பொருள்கள் நிலையான இன்பத்தை கொடுக்க வல்லவை என்ற தவறான கருத்தை மனதிலிருந்து அப்புறப்படுத்தினால்தான் உண்மையான மன நிறைவை கொடுக்கவல்ல வேதத்தை படிக்க ஆசை வரும். இந்த உண்மையை உணரும்வரை தொடர்ந்து உலகில் உழைப்பதைத்தவிர வேறு வழியில்லை. பதவி உயர்வால் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட அதிகப்பொறுப்புகளால் வரும் துன்பம் அதிகமாயிருப்பதை உணர்ந்தவுடன் இனி பதவி உயர்வே வேண்டாம் என்று தீர்மானம் செய்தாலும் அடுத்த வருடத்திற்குள் அந்த தீர்மானம் மறந்து விடும்.

இதைத்தான் மயான வைராக்கியம் என்பார்கள். வாழ்வின் நிலையாமையைப்பற்றி உண்மையை உணர்ந்த மகான்களைப்போல் சுடுகாட்டிலிருந்து திரும்பும் வழியில் பேசிக்கொண்டிருந்தாலும் வீட்டில் விட்டுச்சென்ற செருப்பு காணவில்லை என்றால் போகிறது என்று விட்டுவிட அதன்மேல் உள்ள பற்று நம்மை அனுமதிப்பதில்லை.

உண்மையான வைராக்கியத்தைப்பெற உலகின் நிலையாமையை பற்றிய அறிவு மட்டும் போதாது. நமக்கு நாமே அடிக்கடி இதை நினைவுபடுத்தி ஆழ் மனதில் இந்த உண்மையை அழுத்தமாக எழுதிக்கொள்ளவேண்டும். மேலும் பணம், நகை, சொத்து போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுடன் நெருங்கிப்பழகுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். யார் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள், யாருடைய கல்யாண புடவை எத்தனை லட்சம் ரூபாய் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் வழங்கும் செய்தித்தாள்களை படிக்கவே கூடாது.

புகைபிடிப்பது உடலுக்கு கேடு என்று தெரிந்துகொள்வது அந்தப்பழக்கத்திலிருந்து ஒருவரை விடுவிக்காது. புகைபிடிக்கும் நண்பர்களின் சகவாசத்தை முற்றிலும் தவிர்த்து புகைபிடிப்பது தடை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே பெரும்பாலும் இருப்பது போன்ற செயல்கள் மூலம்தான் ஒருவரால் புகைபிடிப்பதை நிறுத்த முடியும். அது போல உலகில் இன்பத்தை தேடாத சான்றோர்களின் சகவாசம் மற்றும் ஆன்றோர்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பது போன்ற நற்செயல்களை செய்வதனால் மட்டுமே முழுமையான வைராக்கியத்தை பெறமுடியும்.  

வெற்றிக்கோட்டை தாண்டியபின்னும் ஓட்டப்பந்தய வீரர் தொடர்ந்து சிறிது தூரம் ஓடுவதைப்போல உலகில் இன்பம் இல்லை என்பது புரிந்த பின்னும் அவற்றின் பின் பலகாலம் ஓடிய வேகம் குறைந்து முழுமையாக நிற்க சிறிது காலம் பிடிக்கும். எனவே வேதம் படித்து உலகை புரிந்து கொண்ட பின் கூட முழுமையான வைராக்கியம் ஏற்படவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.

லிட்மஸ் தாளை அமிலத்தில் ஆழ்த்தினால் நீல நிறமாக மாறும் என்று புத்தகத்தில் படிப்பதுடன் நிறுத்திவிடாமல் ஆராய்ச்சி கூடத்தில் நேரடியாக அதைச் செய்துபார்ப்பதன் மூலம்  உறுதியான அறிவைப்பெறுவதுபோல உலகப் பொருள்களுக்கு நமக்கு இன்பத்தை தரும் சக்தி யில்லை என்று வேதம் கூறுவதை நம் சொந்த அனுபவத்தில் சோதித்து தெரிந்து கொண்டபின்தான் முழுமையான வைராக்கியம் ஏற்படும். வாழ்வில் அடிபட்டு உண்மை புரிய ஆரம்பித்த பின் வேதம் படிக்க தொடங்கியவர்களுக்கு வைராக்கியம் எளிதில் வந்துவிடும்.

ஆக வேதம் படிப்பதால் வரும் அறிவு மற்றும் வாழ்வில் அனுபவம் மூலம் பெற்ற அறிவு ஆகிய இரண்டைபொறுத்து வைராக்கியம் படிப்படியாகத்தான் வளரும்.

வைராக்கியம் - முதல் படி

தொடர்ந்து பொருளை தேடி ஓடும் மக்களுக்கு அதில் உள்ள குறையை பார்க்க நேரம் இருக்காது. எனவே வைராக்கியத்தின் முதல் படியை கடப்பது மிகவும் கடினம். ஏதேனும் சோக நிகழ்வு வாழ்வில் ஏற்படும்பொழுது ஓடும் ஓட்டம் நின்று சோகத்திற்கான உண்மை காரணத்தை ஆராய வாய்ப்பு கிடைக்கும்பொழுது இன்பம் நிலையானது அல்ல என்ற இந்த முதல் படி வைராக்கியம் ஏற்படலாம். அதுவும் மயான வைராக்கியமாய் மறந்து போகாமல் இருக்க வாழ்வில் இன்னும் சில ஏமாற்றங்களை எதிர்கொள்வது இவர்களுக்கு அவசியமாய் இருக்கலாம். புத்திகூர்மை, தர்க்க அறிவு, மற்றவர்களின் அனுபவத்திலிருந்து அறிவு பெறும் சாதுர்யம் ஆகியவை ஒருவரிடம் இருந்தால் அவர் வைராக்கியத்தின் முதல் படியை எவ்வித சோகத்தையும் எதிர்கொள்ளாமலேயே கடக்க முடியும்.

ஆனால் பலருக்கு இது இளமைப்பருவத்தில் வாய்ப்பதில்லை. ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று ஆராயாமல் சுகதுக்கங்களில் தொடர்ந்து உழன்று வயதானபின் இயலாமை காரணமாக உலகப்பொருள்களின் மேல் பற்றுதல் இல்லாததுபோல் இவர்கள் நடந்து கொள்வார்கள். பொருள் கிடைத்தாலும் அனுபவிக்கும் திறன் இல்லாததால் அது எனக்கு வேண்டாம் என்று மறுப்பது  வைராக்கியம் அல்ல. பொருள் கிடைக்கவில்லையே என்று இருந்த ஏக்கம் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கமாக மனதில் தொடர்ந்து இருப்பதால் இவர்களுக்கு வாழ்வில் சலிப்பு ஏற்படுமே தவிர உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படாது. இது போன்ற நிலமைக்கு நாம் வரும் முன்னர் பொருள்களின் நிலையாமையை உணர்ந்து முதல் படி வைராக்கியத்தை பெற்றால் முக்தி கிடைப்பது சாத்தியப்படும்.

வைராக்கியம் - இரண்டாம் படி

புலன் இன்பங்களை அளிக்கும் பொருள்கள் கண்முன் இருந்தால் அவற்றை அனுபவிப்பது, இல்லாவிட்டால் அவற்றை தேடி ஓடுவதில்லை என்பது வைராக்கியத்தின் இரண்டாம் படி. வாழ்வின் குறிக்கோள் என்று தீர்மானித்த பிடித்த வேலை, வசதியான வாழ்க்கை, இனிமையான குடும்பம் போன்றவை கிடைத்தபின் இவர்கள் தங்கள் குறிக்கோளை உயர்த்திக்கொள்வதில்லை.   

சிலர் இன்னும் இன்னும் என்று வாழ்நாழ் முழுவதும் பணம் சம்பாதிப்பதிலும் பெற்ற இன்பங்களில் நிறைவு ஏற்படாததால் தொடர்ந்து வெவ்வேறு வகையான இன்பசாதனங்களை நாடி ஓடுவதையும் நிறுத்துவதில்லை. அவ்வாறில்லாமல், கிடைத்தவரை போதும் என்ற நிறைவுடன் வேகமான ஓடுவதை சற்று குறைத்துக்கொண்டவர்கள் வேதம் படிக்க தேவையான குறைந்தபட்ச தகுதியான வைராக்கியத்தின் இந்த இரண்டாம் படியை கடந்தவர்கள்.

புத்திசாலித்தனம் போதாத காரணத்தாலோ மற்றவர்களுடன் போட்டிப்போட்டு முன்னேற முடியாத காரணத்தாலோ ஓட்டத்தை நிறுத்திக்கொள்வது வைராக்கியம் அல்ல. எவ்வளவுதான் உழைத்து பணம், பதவி ஆகியவற்றை பெற்றாலும் அவை நிலையான இன்பத்தை பெற்றுத்தராது என்ற அறிவினால், போதும் என்ற மனம் ஏற்படுவதுதான் வைராக்கியம். முக்தியை நோக்கிய பயணம் இப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது என்பதால் சோம்பல் காரணமாக முயற்சியை கைவிட்டவர்களால் கடுமையான உழைப்பு தேவைப்படும் ஆன்மிக பயணத்தை தொடர முடியாது.

இந்த நிலையில் இருப்பவர்கள் வேதம் பயில ஆரம்பித்தாலும் உல்லாசப்பயணம், தள்ளுபடியில் விற்பனை, வெளிநாட்டில் பெரிய வேலை என்பது போன்ற செய்திகளை கேட்க நேரிட்டால் முதல் காரியமாக வேதத்தை படிப்பதை ஒத்திப்போட்டு விடுவார்கள். ஏனெனில் உலகில் இன்பம் இல்லை என்பதை இவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை. முக்தி அடைவது எப்படி என்று கற்றுக்கொள்வதை ஒரு பொழுது போக்காக நினைத்துக்கொண்டு இருப்பதால் அதில் அவர்களுக்கு ஒரு பிடிப்பு இருப்பதில்லை.

ஆயினும் இவர்களில் ஒரு சிலர் வேதத்தை முறையாக பயின்று நான் பரமன் என்ற உண்மையை உணர்ந்து முக்தியடைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஏற்படுமாயின் இவர்களது மனம் உலகினால் கவரப்பட்டுக்கொண்டேயிருக்கும். முக்தியில் நிலைக்க இவர்கள் தங்கள் வைராக்கியத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.   

வைராக்கியம் - முன்றாம் படி

எவ்வளவுதான் உலகை அனுபவிக்க வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அவற்றை ஒதுக்கித்தள்ளிவிட்டு முக்தி வேண்டும் என்ற தீவிர ஆசையுடன் தேவையான நேரத்தையும் உழைப்பையும் கொடுத்து வேதத்தை பயிலத்தயாராய் இருப்பவர்கள் இந்தப்படியை சேர்ந்தவர்கள்.

முழுமையான வைராக்கியம்

முக்தியடையாமல் முழுவைராக்கியத்தை பெறுவது அறிது. ஏனெனில் உலகில் இன்பம் இல்லை என்பதை உறுதியாகத்தெரிந்து கொள்ள, இன்பம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதில் தெளிவு வேண்டும். ஆனந்தமயமானவன் பரமன் என்கிற ஒருவன் மட்டும்தான் என்று புரிந்து கொண்டால் உலகப்பொருள்கள் தருவதாகத்தோன்றும் இன்பம் பொய்யான தோற்றம் என்பது உறுதியாகத்தெரிந்து விடும். அதன் பின்தான் முழுமையான வைராக்கியம் ஏற்படும்.

இந்த நிலையில் ஒருவர் நிறைய பணம் சம்பாதித்து மிகவசதியான வாழ்வை வாழலாம். வசதி வேறு இன்பம் வேறு என்பதை இவர் புரிந்து கொண்டிருப்பதால் தம்மைச்சேர்ந்த பொருள்களுக்கு அடிமையாகிவிடமாட்டார். இருந்தால் அவற்றை இன்பமாக அனுபவிப்பார். இல்லாவிட்டாலும் அவர் சிறிதும் வருத்தப்படாமல் எப்பொழுதும் போல் இன்பமாக இருப்பார். சிறையில் அடைபட்டாலும் இவர்கள் மனநிம்மதி குலைவதில்லை. விடுதலை கிடைத்தால்தான் இன்பம் என்று இவர்கள் நினைக்காததற்கு காரணம் இன்பத்தின் ஊற்று சிறை கதவுகளுக்கு வெளியே இல்லை என்ற மனத்தெளிவுதான்.

உலகம் மாயை என்ற தெளிவான அறிவு இவர்களுக்கு இருப்பதால் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேதத்தின் கட்டளை இவர்களை கட்டுப்படுத்தாது. ஏனெனில் பரமனின் இயல்பான ஆனந்தத்தை இவர்கள் அனுபவிக்க உலகம் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக்கொள்ள ஒரு கண்ணாடித்தேவைபடுவது போல நம் இயல்பான ஆனந்தத்தை நம் மனம் அனுபவிக்க ஏதேனும் பொருள் தேவை. இரண்டு மாத குழந்தை எனக்கு இந்த பொம்மைதான் வேண்டும் என்று இரண்டு வயது குழந்தையைப்போல் பிடிவாதம் பிடிப்பதில்லை. ஏனெனில் அது நான், எனது என்ற அகங்காரம் இல்லாமல் எது கிடைத்தாலும் அதில் தன் இயல்பான ஆனந்தத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. அதுபோல வேதம் படித்த முற்றுணந்தோர்கள் முழுமையான வைராக்கியம் பெற்றிருந்தால் இன்பமாக இருப்பதற்கு இந்த பொருள்தான் வேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் எது கிடைத்தாலும் அதில் நிறைவான இன்பத்தை அனுபவிப்பார்கள். தங்களின் உடல் உட்பட்ட பொருள்களின் மாற்றமோ மறைவோ இவர்களை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

வைராக்கியம் இருப்பவர்களுக்கு பொருள்களின் மீது பற்று இருக்காது என்பதால் ஆசை இருக்காது என்று முடிவு செய்யகூடாது. ஆசை இருவகைப்படும். ஆசை நிறைவேறினால்தான் இன்பம் என்ற நிபந்தனையுடன் கூடியது பந்தப்படுத்தும் ஆசை. முழுமையான வைராக்கியம் உள்ளவர்களின் ஆசை பந்தப்படுத்தாத ஆசை. தங்களின் விருப்பு-வெறுப்புக்களின் அடிப்படையிலும் உலக நன்மைக்காகவும் இவர்கள் மற்றவர்களைப்போல் பொருள்கள் மீது ஆசைகொண்டு அதைப்பெற பிரயத்தனம் செய்யலாம். அந்த முயற்சி வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

துன்பத்திற்கு காரணம் பற்று மட்டும்தான். பொதுவாக மக்களின் ஆசை பற்றோடு கூடிய ஆசை என்பதால் மக்களுக்கு புரியும் வகையில் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார். முழுவைராக்கியம் இருப்பவர்களுக்கு எதன் மீதும் பற்று இருக்காது. எனவே இவர்கள் எவ்வித கவலையும் இல்லாமல் பொருள்களின் மேல் ஆசை கொள்வது, புலன் இன்பங்களை அனுபவிப்பது, மற்றவர்களின் அன்பு செலுத்தி அவர்களின் உயர்வுக்கு உழைப்பது போன்ற சாதாரண செயல்களை மற்றவர்களைப்போல் செய்வார்கள். உணர்ச்சி வயப்படாமல் அறிவு பூர்வமாக ஆலோசித்து செவ்வனே செயல் படும் திறமை வைராக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கும். தன் மகன் என்ற பற்று கைகளில் நடுக்கத்தை ஏற்படுத்துவதால் திறமை மிக்க அறுவை சிகிச்சை நிபுணர் தன் மகனின் அறுவைசிகிச்சைக்கு வேறு ஒரு மருத்துவரின் உதவியை நாடுகிறார். வைராக்கியம் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் நலனில் அக்கறை இருக்குமே தவிர பற்று இருக்காது. செய்யவேண்டியதை செய்வது அக்கறை. செய்யமுடியாததை நினைத்து கவலை கொள்வது பற்று. உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக செயலாற்றுவது மற்றும் பற்றில்லாத அக்கறை கொள்வது ஆகியவை முழுமையான வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

சாந்தம் (Equanimity)

வெற்றியில் துள்ளாமலும் தோல்வியில் துவளாமலும் இருக்க கூடிய மனநிலை சாந்தம் ஆகும். மனக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, எந்த தடை ஏற்பட்டாலும் கடமைகளை சரியாக செய்தல் மற்றும் கடவுள், வேதம், குரு ஆகியவற்றில் நம்பிக்கை ஆகிய குணங்கள் இதனுடன்பிறந்தவை.

எப்பொழுதும் நம் விருப்பப்படி எல்லாம் நடக்காது. ஏதாவது ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். இந்த செய்திகளை அறிந்ததும் அதற்கேற்றபடி மனம் அலைபாயும் தன்மையுடையது. இந்த அலைபாயும் தன்மை, உலகம் மாயை என்ற அறிவு வந்ததும் வெகுவாக குறைய வேண்டும்.

சாந்தம் இருந்தால்தான் மனம் புத்தியின் கட்டளைபடி செயல்படும். இல்லையென்றால் புலன்களின் இழுப்புக்கு கட்டுப்பட்டு விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் வேலைசெய்யும்.

பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் விவரிக்கப்பட்ட எட்டு அங்கங்களை முறைப்படி பயிலுவதன் மூலம் மனதை அமைதியாக வைத்திருக்க பழக்கிவிட்டால் உலகம் எப்படி மாறினாலும் மனம் சாந்தமாக இருக்கும்.

சாந்தம் - முதல் படி

தெருவில் செல்லும் நபர் நம்மை பார்த்து முறைத்துவிட்டால் மனம் வருத்தப்பட ஆரம்பித்துவிடும். எதிரில் இருக்கும் பொருள்களை கண்ணாடி அப்படியே பிரதிபலிப்பது போல உலக நிகழ்வுகளுக்கேற்ற உணர்ச்சிகளை அவ்வப்பொழுது மனம் அனுபவித்தால் அது இந்த முதல் படியை தாண்டவில்லை என்று பொருள். ஒருவர் நம்மை முட்டாள் என்று திட்டினால் உடனடியாக அழ ஆரம்பித்துவிடாமல், அவர் யார், எதற்காக அவ்வாறு கூறினார் என்றெல்லாம் ஆராய்ந்து அதன்பின் தேவைப்பட்டால் வருத்தப்படுவது என்ற நிலை ஏற்பட்டால் இந்த முதல் படியை கடக்கும் தகுதி வந்துவிட்டது என்று அர்த்தம்.

சாந்தம் - இரண்டாம் படி

வெளியுலக நிகழ்வுகளை அப்படியே உணர்ச்சிகளாக பிரதிபலிக்காமல் அவற்றை அறிவின் அடிப்படையில் ஆராய்ந்து அதற்கேற்ற செயல்களை உணர்ச்சி வசப்படாமல் செய்யத்தொடங்குவது சாந்தத்தின் அடுத்தபடி. புத்தியினால் தணிக்கைசெய்யபடாத உலக நிகழ்வுகள் நேரடியாக மனதை பாதிக்காது. செய்த தவறுகளுக்காக தன்னைத்தானே வருத்திக்கொள்வது, நமது சக்திக்கு மீறிய செயல்களை செய்யமுடியவில்லையே என்று குற்ற உணர்வு ஆகியவை இந்த படிக்கட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படாது.  முதல் படியை கடந்து இந்தப்படியில் நுழைந்தவர்களால் மட்டுமே வேதத்தை படிக்கும் அளவுக்கு மன அமைதி இருக்கும்.

முழுமையான சாந்தம்

நான் பரமன், உலகம் மாயை என்ற உண்மைகளை புரிந்துகொள்ளாமல் இந்த நிலையை அடைய முடியாது. உலகம் உண்மை என்று நினைத்தால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையை முழுதாக அகற்ற முடியாது.

ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழுச்சாந்தமாக இருப்பதுபோல நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றுவிட்டால் விழித்திருக்கும் நேரத்திலும் மனம் முழுமையான சாந்தத்துடன் இருக்கும்.

சாந்தமும் வைராக்கியமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளவை. ஒன்று வளரும்பொழுது மற்றதும் வளரும். ஆரம்ப நிலைகளில் இவை வேதம் படிக்கத்தேவையான தகுதியை கொடுக்கும்.

ஞானம்

முறையாக வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படித்தால் நான், உலகம், கடவுள் ஆகியவற்றைப்பற்றிய ஞானம் கிடைக்கும். உண்மையான ஞானத்தை பெற்றபின் முக்தி கிடைக்கும்.

உண்மை ஒன்றுதான். கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, பல கடவுளர்கள் இருக்கிறார்கள் என்று முரண்பட்ட கருத்துக்கள் பல இருக்கலாம். ஆனால் முடிவான உண்மை ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.

மனிதர்கள் பலவிதம். அறியும் திறன், புத்திகூர்மை, மனப்பக்குவம், விவேகம், வைராக்கியம், சாந்தம், புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, கடமையுணர்வு, சகிப்புத்தன்மை, வேதத்தில் நம்பிக்கை மற்றும் உண்மையை அறிந்துகொள்ளும் தீவிர ஆசை ஆகியவற்றை உள்ளடக்கிய மனப்பாங்கு மனிதருக்கு மனிதர் பெரிதும் வேறுபடுகிறது.

எனவே இருக்கும் ஒரே உண்மையை மனிதர்கள் தங்கள் மனப்பாங்கிற்கேற்ப வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். மதத்தலைவர்கள் அனைவரும் தங்களை பின்பற்றும் பக்தர்களின் மனப்பாங்கை மனதில் கொண்டு அவர்களுக்கு புரியும்வகையில் இருக்கும் ஒரே உண்மையை விளக்குவதை மேலெழுந்தவாரியாக பார்த்தால் உலகில் பல்வேறு மதங்கள் இருப்பது போல தோன்றும்.

இருப்பது ஒரே ஒரு யானை. ஆறு குருடர்கள் அதை தடவிப்பார்த்து அதன் உண்மை சொருபத்தை அறிய முயலுகிறார்கள். எவனொருவன் யானையை ஏற்கனவே அறிந்த ஒருவரின் அறிவுரைப்படி அதன் ஒவ்வொரு அங்கங்களையும் தொட்டுப்பார்த்து பின் மனதில் அவற்றை ஒன்றாக இணைத்து முழு உருவத்தையும் காண்கிறானோ அவனே சரியாக பார்க்கத்தெரிந்தவன். அவனே உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோன். அவ்வாறில்லாமல் யானையின் காலை மட்டும் தடவி அது தூண்போன்ற உருவமுடையது என்றும் அல்லது வயிற்றை மட்டும் அரைகுறையாக தொட்டு அது சுவர் போன்றது என்றும் முடிவு செய்து மற்றவர்கள் ஒருவருக்கொருவர் வாதிட்டுகொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் தனிப்பட்ட அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையை முழுவதும் உணர்ந்தவர்கள் என்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் எவனொருவன் யானை முறம் போன்றது அல்லது கயிறு போன்றது என்ற மற்றவர்களின் முரணான கருத்துக்களை அவர்கள் பார்த்தது காது அல்லது வால் என்று சரியாகப்புரிந்துகொண்டு அவர்களின் கருத்து தவறு என்று கருதாமல் இருக்கிறானோ அவன் மட்டுமே முற்றுணர்ந்தோன். அவன் யாருடனும் எவ்வித விவாதத்திலும் ஈடுபடமாட்டான். யானையின் வயிற்றை முழுவதும் தடவிவிட்டு இது சுவர் போல் இல்லையே என்று ஒருவன் சந்தேகம் கேட்கும்பொழுது மட்டும் அவனுக்கு உண்மையை விளக்குவான்.

அதுபோல் கடவுள் பற்றிய உண்மையை முழுவதும் அறிந்து கொள்ள பின்வரும் படிக்கட்டுகளில் மக்கள் முன்னேறுவார்கள். முன்னேற்றம் அவர்களின் மனப்பாங்கை பொறுத்தது. ஒவ்வொரு படிக்கட்டில் இருப்பவர்களும் தாங்கள்தான் முற்றுணர்ந்தோர்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களின் கருத்தை காதுகொடுத்தும் கேட்காமல் இருந்தால் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை.

யார் முடிவான உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோன் என்பதை அறிவது மிக எளிது. எவனொருவன், வாழ்வு துன்பம் கலவாத இன்பமானது என்றும், உலகம் முழுவதும் மிகச்சரியாக இயங்கிக்கொண்டிருப்பதால் எவ்வித மாற்றமும் அவசியம் இல்லை என்றும், தான் செய்யவேண்டிய கடமைகள் என்று எதுவும் இல்லை என்றும் உணர்ந்திருக்கிறானோ அவன் மட்டுமே முற்றுணர்ந்தோன்.

அதிருப்தி, கவலை, வருத்தம், கோபம், துவேஷம், பொறாமை போன்ற மன அழுக்குகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருப்பவனே முக்தியடைந்தவன்.

ஞானம் – முதல்படி

கடவுள் இல்லை என்ற நிலையிலிருந்து கடவுள் இருக்கிறான் என்ற அறிவைப்பெறுவது முதல் படி. தன் கடவுள் மட்டும்தான் உண்மையானவன் என்றும் மற்றவர்களது கடவுளர்கள் பொய்யானவர்கள் என்றும் இவர்கள் நினைப்பார்கள். வேதம் கடவுளால் அருளப்பட்டது என்ற உண்மையை இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அதை படிக்கவேண்டும் என்ற ஆவல் துளிகூட இருக்காது.

ஞானம் – இரண்டாம் படி

தன்னுடைய கடவுள்தான் மற்றவர்களது கடவுளர்களாக காட்சியளிக்கிறான் என்று நம்புபவர்கள் எல்லாக்கடவுளர்களையும் ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் முதல் படியில் இருப்பவர்களைப்போல் இந்த கடவுள் உயர்ந்தவர் அவர் தாழ்ந்தவர் என்று வாதிட மாட்டார்கள். வேதம், புராணம் ஆகியவற்றை கேட்பது இவர்களுக்கு பிடிக்கும். ஆயினும் அவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு இவர்களுக்கு அறிவுத்திறன் இல்லாமலிருந்தால் அடுத்தபடிக்கு இவர்கள் செல்ல மாட்டார்கள்.

ஞானம் – மூன்றாம் படி

தீவிர ஆசையுடன் இவர்கள் வேதத்தை ஆசிரியரிடம் படித்தாலும் இவர்களுக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உண்மையை மனதில் கிரகித்துகொள்ளும் சக்தி இருப்பதில்லை. ஆனாலும் வேதத்தை தொடர்ந்து படித்து கடவுள் வேறு அவர் படைத்த உலகம் வேறு என்ற அரைகுறை அறிவிலிருந்து முன்னேறி கடவுளின் பருவுடல்தான் உலகம் என்ற உண்மையை புரிந்து கொள்வார்கள்.

முழுமையான ஞானம்

வேதம் படிக்கவும், படித்ததை புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டதை மனதில் அசைபோட்டு அறிவாக மாற்றி அதில் நிலைத்து நிற்பவர்கள் முழுமையான ஞானம் பெற்றவர்கள். வேதவாக்கின் உண்மைப்பொருளை புரிந்துகொண்ட இவர்கள் மற்ற படியில் உள்ளவர்கள் அவர்களின் மனநிலைக்கேற்ப ஒரே உண்மையின் வெவ்வேறு பகுதியைமட்டும் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவர். எனவே உலகில் உள்ள எந்த மதத்தையும் இவர்கள் தவறு என்று சொல்வது கிடையாது. மேலும் யாருடனும் விவாதம் செய்து தங்கள் கருத்துதான் சரியானது என்பதை நிலைநாட்ட இவர்களுக்கு அவசியமில்லை.

தாங்கள் உண்மை என்று நினைத்துக்கொண்டிருப்பதை எவ்வளவு பேர் உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலை மற்றவர்களுக்கு இருக்கும். எனவே இவர்கள் தங்கள் கொள்கையை பரப்பவும், மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்வார்கள். இதனால் மனிதனுக்காக மதம் என்ற நிலை மாறி மதத்திற்காக மனிதன் என்ற நிலை இருந்துவருகிறது. தனிப்பட்ட மனிதன் தான் இன்பமாக வாழ முழுமையான ஞானம், வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகியவற்றை பெற வேதத்தின் உதவியை நாடினால் நன்மை அவனுக்கு கிடைக்கும். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் வேதத்தை ஒதுக்கித்தள்ளினாலும் அதனால் ஏற்படும் நஷ்டம் வேதத்திற்கு இல்லை.

வேதம் படித்து முழுமையான ஞானம் பெற்றபின் வேதம், அனுபவம், தர்க்கம் ஆகியவற்றின்  அடிப்படையில் இதுதான் மேலான அறிவு என்பதை இவர்களால் நிரூபிக்க முடியும். உதாரணமாக தங்களுக்கு மறுபிறவி கிடையாது என்பதை இவர்கள் வேதம் சொல்கிறது என்ற நம்பிக்கையின் பெயரில் ஏற்றுக்கொள்ளாமல் அறிவுபூர்வமாக இவர்கள் தெரிந்துவைத்துக்கொண்டிருப்பார்கள்.

மற்ற படியில் இருப்பவர்கள் தங்கள் கொள்கைகளை விவாதம் செய்யவோ கேள்வி கேட்கவோ பொதுவாக அனுமதிப்பதில்லை. அப்படியே கேட்டாலும் வேதத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது என்றோ அல்லது அது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்றோ சமாதானம் சொல்வார்களே தவிர தர்க்கபூர்வமான பதில்களை கொடுக்க இயலாதவர்களாக இருப்பார்கள்.

முடிவுரை :

பெற்ற ஞானத்தை அழிக்கமுடியாது. ஞானத்தை மாற்ற அதைவிட உயர்ந்த ஞானத்தால் மட்டுமே முடியும். வேதத்திலிருந்து கிடைக்கும் நான் பரமன் என்பதுதான் அனைத்து ஞானங்களை விட மேலானது என்பதால் அந்த ஞானம் மாறவோ அழியவோ வாய்ப்பேயில்லை. எனவே இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள்  முக்தியடைவதை தவிர்க்க முடியாது. முக்தியடைந்தபின் மீண்டும் அவர்களால் அஞ்ஞானத்தில் வீழமாட்டார்கள். ஆனால் வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகியவற்றில் முழுமைபெறாவிட்டால் அவர்களது மனம் தொடர்ந்து உலகை நாடி வெற்றி-தோல்விகளில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். மேலும் ஞானத்தை போலன்றி வைராக்கியம் மற்றும் சாந்தம் நிலையானவை அல்ல. அவரவர்களின் நண்பர்கள், அலுவல் மற்றும் பழக்க வழக்கங்களை பொறுத்து இவை குறையலாம். எனவே இவை முழுமை அடையும்வரை முக்தியடைந்தவர்கள் தொடர்ந்து வேதம் கூறும் வழியில் வாழ்ந்தால்தான் முக்தியடைந்ததன் பலனை முழுமையாக அனுபவிக்கமுடியும்.

போதிய வைராக்கியம் இல்லாமல் முக்தியடைந்தவர்களை மாயையான உலகம் தொடர்ந்து கவரும். உலகின் பின் ஓட ஆரம்பித்த மனதிற்கு புத்தி அது மாயை என்பதை ஞாபகபடுத்தி அதன் ஓட்டத்தை நிறுத்த முயற்சிக்கும். எவ்வளவு சீக்கிரம் மனம் புத்தியின் பேச்சை கேட்டு தன் ஓட்டத்தை நிறுத்துகிறது என்பது அவரவர்களின் வைராக்கியத்தின் அளவை பொறுத்தது.

போதிய சாந்தம் இல்லாமல் முக்தியடைந்தவர்களை உலக நிகழ்வுகள் பாதிக்கும். மனதின் அமைதியை குலைத்து அதை அலைபாயச்செய்யும். அதன்பின் புத்தியின் கட்டுப்பாடின் மூலம் மனம் அமைதிபெறும். எவ்வளவுகாலம் மனம் அலை பாயும் என்பது அவரவரின் சாந்தத்தின் அளவை பொறுத்தது.

வைராக்கியமும் சாந்தமும் முழுமை பெற்றுவிட்டால் அதன்பின் குறையாது. எனவே முக்தியடைந்ததற்கு பிறகு, வேண்டிய பயிற்சிகளை மேற்கொண்டு இவ்விரண்டையும் நாம் முழுமைபடுத்திக்கொள்ளவேண்டும்.


பயிற்சிக்காக :

1. வேலை செய்வதன் அவசியமென்ன?

2. வைராக்கியம் என்றால் என்ன?

3. வைராக்கியம் படிப்படியாக எவ்வாறு அதிகரிக்கிறது?

4. வைராக்கியம் உள்ளவர்களின் ஆசைக்கும் மற்றவர்களின் ஆசைக்கும் என்ன வித்தியாசம்?

5. சமாதானம் என்றால் என்ன?

6. சமாதானம் படிப்படியாக எவ்வாறு அதிகரிக்கிறது?

7. ஞானத்தில் உள்ள படிகள் யாவை?

8. நம்முடைய ஞானம் தான் உயர்ந்த ஞானம் என்பதற்கு என்ன அத்தாட்சி?

9. ஞானத்திற்கும் மற்ற இரு தகுதிகளுக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை என்ன?

10. முதியவர்களுக்கு வாழ்வில் சலிப்பு ஏற்படக்காரணம் என்ன? 

சுயசிந்தனைக்காக :

1. ஓம் ஜெயஜகதீச ஹரே என்ற ஆரத்தி பாடலின் பொருளை ஆராய்க.

2. பணம் சம்பாதிப்பதற்கும் முக்தியடைவதற்கும் உள்ள உறவு என்ன?

3. சிரித்துக்கொண்டே மனிதவெடிகுண்டாக வெடித்துச்சிதற தயாராகும் தீவிரவாதி முக்தியடைந்தவனா?

4. முக்தியடைந்தபின்னும் கர்மகாண்டம் அவசியமா?