பாடம் 138: சன்யாசம் அவசியம்
பாடல் 443 – 445 (III.4.18-20)
வேதம் படிப்பது முற்றும் துறந்த சன்யாசிகளின் வேலை என்ற தவறான கருத்தை நீக்கி வாழ்வின் இன்பங்களை துன்ப கலப்பில்லாமல் அனுபவிக்க வேண்டுமானால் பற்றுதலை துறப்பது அனைவருக்கும் அவசியம் என்ற கருத்தை கூறி அதற்கான வழி வகைகளை இந்த பாடம் தெளிவாக்குகிறது.
யார் துறவி?
என்றும் நிலைத்திருக்கும் சிற்றின்பமே பேரின்பம் என்பதால் பேரின்பத்திற்காக சிற்றின்பத்தை துறக்கமுடியாது. உலகம் நம் அனுபவத்திற்காக படைக்கப்பட்டது. எனவே அதை துறக்க முயல்வது தவறு. மேலும் ஐந்து புலன்கள் மூலம் உலக அனுபவங்களை பெறுவதை முற்றிலுமாக யாராலும் தவிர்க்க முடியாது.
அனுபவங்கள் உலகத்தின் மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்தும். அனைத்து துன்பங்களுக்கும் காரணமான இந்த பற்றுதலை துறந்தவர்களே உண்மையான துறவிகள் ஆவார்கள்.
பற்றுதலை துறக்க வேண்டுமென்றால் வேதாந்தத்தை படித்து ஞானம் பெறுவது அவசியம். ஞானத்தை பெறுவதற்காக தற்காலிகமாக புலன் இன்பங்களை துறப்பது என்பது தேர்வு நாட்களில் சினிமாவுக்கு செல்வதை தவிர்க்கும் மாணவனது புத்திசாலித்தனத்திற்கு ஒப்பாகும். துன்பத்தை தவிர்க்க உலகத்தையே துறக்க முடிவு செய்வது அறிவீனம்.
அனைவரும் உலகத்தை பற்றிய சரியான ஞானத்தை பெற்று பற்றுதலை துறந்த துறவிகள் ஆகவேண்டும் என்பதற்காக மனித வாழ்வை நான்கு பருவங்காளாக வேதம் பிரிக்கிறது. கர்மங்களை செய்து மனப்பக்குவம் பெற உதவும் இல்வாழ் பருவத்திற்கு மாணவப்பருவம் ஒரு படிக்கட்டு. அதன்பின் ஓய்வு நிலை என்ற வாழ்வின் நான்காம் பருவம் பொறுப்புக்களை குறைத்துக்கொண்டு வேதத்தை முறையாக படித்து ஞானத்தை பெற்று பற்றுதலை துறந்த சன்யாசியாக வாழ வழிவகுக்கிறது.
பற்றுதலை துறந்தவர்கள் மட்டுமே முக்தியடைந்தவர்கள் ஆவார்கள்.
பற்றுதலை துறப்பது எப்படி?
உலக அனுபவங்களை நாம் பெறும்விதம் பற்றிய தெளிவு ஏற்பட்டால் பற்றுதல் மறைந்துவிடும். வித்யாரண்ய சுவாமிகளின் பஞ்சதசியில் கொடுக்கப்பட்டுள்ள நடன மங்கை உதாரணத்தை ஆராய்வதன் மூலம் இந்த தெளிவை நாம் பெறலாம்.
நடன அரங்கம் – பிரபஞ்சம்/ உலகம்.
அரங்கத்தில் உள்ள ஒளி - பரமன்
மேடை அமைப்பு – நம் பருவுடல்
பக்கவாத்தியங்கள் – நமது கோளகங்கள்
பக்கவாத்தியக்காரர்கள் – நமது புலன்கள்
நடனமங்கை – நம் மனது
நடனமங்கையின் அங்க அசைவுகள் – நம் எண்ணங்கள்
நடனமங்கையின் மனது – நம் புத்தி
நடனத்தின் இயக்குனர் – நம் அகங்காரம்
நடனம் – நம் வாழ்க்கை
பார்வையாளர்கள் – உலகத்தில் உள்ள பொருள்கள் (இவ்விடத்தில் பொருள்கள் என்ற சொல் மனிதர்கள், உயிரினங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றையும் குறிக்கும்)
பார்வையாளர்கள் உள்ளிட்ட அரங்கம் முழுவதும் பரவி நடனம் நடைபெற ஆதாரமாக இருக்கும் ஒளியைப்போல இவ்வுலகில் உள்ள அனைத்தும் இயங்க ஆதாரமாய் இருப்பது பரமன். உலகம் என்னும் நாடகமேடையில் நடைபெறும் நாட்டிய நாடகம் நமது வாழ்க்கை. நடனமங்கை திரைக்குப்பின் சென்று வேறு உடை அணிந்து வந்து அடுத்த நாட்டியத்தை தொடர்வதுபோல மரணத்திற்கு பின் மறுபடி பிறந்து நம் வாழ்க்கை தொடர்கிறது.
தெளிவு 1: பொருள்கள் - அனுபவங்கள்
துவக்கத்தில் தாளத்திற்கு ஏற்றாற்போல் தொடங்கிய நடனம் சிறிது நேரத்தில் பார்வையாளர்களின் ரசனைக்கேற்றாற்போல் மாறிவிடுவதைப்போல நம் எண்ணங்கள் முதலில் நம் புலன்களின் செயல்பாடுகளை பொறுத்து அமைந்தாலும் நாளடைவில் புலன் இன்பங்களைத்தரும் பல்வேறு பொருள்கள் நம் எண்ணங்களை தீர்மானிக்க தொடங்கிவிடுகின்றன.
ஆரம்பத்தில் பார்ப்பது, கேட்பது போன்ற புலன் அனுபவங்கள் பொருள்களைவிட முக்கியத்துவம் பெற்றிருந்தன. உதாரணமாக ஏதாவது ஒலியை எழுப்பினால் குழந்தை அதனால் கவரப்படும். என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது அது இனிமையானதா என்பது போன்ற பாகுபாடுகளை குழந்தை பொருட்படுத்துவது கிடையாது. இதுதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் எது கிடைத்தாலும் அதில் இன்பம் காணும் தன்மை அதனிடம் இருந்தது. ஆனால் வளர வளர பொருட்களின் முக்கியத்துவம் அதிகரித்து அவற்றிலிருந்து பெறும் அனுபவங்களை நாம் பொருட்படுத்துவதில்லை.
நடனமங்கையின் அங்க அசைவுகளை பார்வையாளர்கள் தீர்மானிக்க ஆரம்பித்தவுடன் அதற்கேற்றவாறு ஒத்து ஊதுவது பக்கவாத்தியக்காரர்களின் பழக்கமாகிவிட்டது. உலகில் உள்ள பொருள்கள் நம் எண்ணங்களை தீர்மானிப்பதால் அவற்றின்பின் ஓடுவதே புலன்களின் வேலையாகிவிட்டது. பணம் சம்பாதிப்பதில் முழுஈடுபாட்டுடன் இருப்பதால் கிடைக்கும் வசதிகளை அனுபவிக்க கூட நேரம் கிடைப்பதில்லை.
சாலையோர உணவுவிடுதியில் வாய்க்கு ருசியாக வகை வகையாக சாப்பிடுபவர்கள் உப்புசப்பில்லாத ரொட்டித்துண்டை நட்சத்திர உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுபவர்களை பார்த்து பொறாமை படுவது வழக்கமாகிவிட்டது.
இளமைப்பருவத்தில், பொருள்களைவிட அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் அந்தப்பருவம்தான் தம் வாழ்வில் இன்பமாக இருந்த காலமாக அனைவரும் உணர்கிறார்கள். தற்பொழுதும் அதே இன்பத்தை அடைய இளமை திரும்பிவர வேண்டுமென்ற அவசியமில்லை. பொருள்களை விட அனுபவங்கள் முக்கியமானவை என்ற தெளிவு நம் மனதில் ஏற்பட்டால் மட்டும் போதும்.
எந்த வயதானாலும் அனுபவங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டு இருப்பது ஒரு முடிவுக்கு வருவதில்லை. காலையில் கஞ்சியை சுவைத்து சாப்பிடாமல் மசால்தோசையை ஏக்கத்துடன் பார்ப்பது இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். கிடைக்கும் அனுபவங்களை உளகிளர்ச்சியுடன் அனுபவிக்காமல் கிடைக்காத பொருள்கள் நம் எண்ண ஓட்டத்தை ஆக்ரமித்துக்கொண்டிருப்பதை அனுமதிக்கும் வரை அந்த நாளும் வந்திடாதோ என்று பாடி இந்த நாளை அனுபவிக்காமல் ஏமாற வேண்டியதுதான்.
வயதானபின் பொருள்களை துறக்க முயல்வது எட்டாத பழம் புளிக்கும் என்ற நரியின் செயலுக்கு ஒப்பாகும். பொருள்களை துறக்க வேண்டிய அவசியமில்லை. பொருள்களைவிட அனுபவங்கள்தான் முக்கியம் என்ற தெளிவுதான் வேண்டும்.
தெளிவு 2: புத்தி - மனம்
நடனமங்கை பார்வையாளர்களின் பாராட்டை பெறுவதற்காக மட்டுமே நாட்டியம் ஆடுகிறாள். அவளுக்கு வேண்டிய பணம், புகழ், பதவி போன்ற அனைத்து சிறப்புகளும் பார்வையாளர்களின் தயவினால் மட்டுமே அவளுக்கு கிடைக்கும் என்று அவள் நினைத்துக்கொண்டிருப்பதால் அவள் அவர்களை திருப்தி செய்யும் வகையில் நடனமாடுவதில் எந்த தவறும் இல்லை.
உலகம் நமக்கு இன்பம் தரும் என்பது நமது கருத்து என்றால் நம் மனம் பொருள்களின் பின்னால் செல்வதை தடுக்க முடியாது. வீட்டு மொட்டைமாடியில் இலவசமாக வீசும் தென்றல் காற்று கொடுக்கும் சுகமான அனுபவத்தைவிட குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து தொலைகாட்சிப்பெட்டியில் காட்டப்படும் வானத்தைப்பார்ப்பது எவ்விதத்தில் சிறந்தது என்பதை யோசிக்க வேண்டும்.
மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மட்டும்தான் மணம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு கையில் இருப்பதை அனுபவிக்காமல் இல்லாததை தேடி எங்கெங்கோ அலைபாயும் மனம் தேடியது கிடைத்தபின்னும் திருப்தி அடைவதில்லை என்ற உண்மை புத்திக்கு புரிய சிலகாலம் ஆகும். அதன் பின்தான் நாம் அனுபவிக்கும் இன்பம் பொருள்களிலிருந்து உற்பத்தியாவது இல்லை என்ற தெளிவு புத்திக்கு ஏற்படும்.
தெளிவு 3: எண்ணங்கள் - பொருள்கள்
நாட்டிய சாஸ்திரத்தின் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு முறைப்படி நடனம் ஆடுவதுதான் நடனமங்கையின் கடமை. அதை விடுத்து பார்வையாளர்களை திருப்தி செய்ய ஆட ஆரம்பித்தால் அது பரதநாட்டியமாய் அமையாது. நாளுக்கு நாள் தரம் குறைந்து கேளிக்கைவிடுதியில் இரவுநடனம் ஆடும் நிலைக்கு அவள் தள்ளப்படுவாள்.
உலக வாழ்வை புலன்களின் துணையுடன் அனுபவிக்க ஆரம்பித்த மனம், நாளடைவில் பொருள்களுக்கு அடிமையாய் மாறினால் நம் நிலையும் அதுதான்.
எது சரி எது தவறு என்ற கட்டுக்கோப்புக்கும் எது உண்மை எது பொய்மை என்ற விவேகத்துக்கும் உட்பட்டு செயல்படாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்வதன் ஒரேவிளைவு மீளாத்துயர் மட்டுமே.
நாட்டியகலைக்கு தன்னை அர்ப்பணம் செய்து பார்வையாளர்களின் கைதட்டலை எதிர்பார்த்து கவனம் கலையாமல் முறைப்படி ஆடினால் மட்டுமே நடனமங்கை உயர்வு பெறுவாள். அதுபோல வேதம் கூறிய வழியில் வாழ்ந்து உலக இன்பங்களை முறைப்படி அனுபவித்தால் மட்டுமே மனம் நிறைவு பெற்று நிம்மதியை அடையும் வழி பிறக்கும்.
நடனம் ஆட ஆட எப்படி திறமை அதிகரிக்குமோ அதுபோல பிறவிகள்தோறும் வாழ்ந்து வாழ்ந்து மனதிற்கு அனுபவம் அதிகரிக்கிறது. பார்வையாளர்கள் கேட்கிறார்களே என்பதற்காக தரம் குறைந்த அங்க அசைவுகளை செய்யாமல் சாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு ஆடும் பக்குவம் நடனமங்கைக்கு ஏற்படுவதுபோல் பொருள்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வேதம் வகுத்த பாதையில் பயணம் செய்யும் மனப்பக்குவம் மனிதனுக்கு பல பிறவிகளின் பின் ஏற்படுகிறது.
தெளிவு 4: அகம்பாவமும் - எண்ணங்களும்
நடன இயக்குனர் அரங்கத்தின் திரைமறைவில் அமர்ந்துகொண்டு நடனத்தை பார்ப்பதுபோல நான் என்ற அகம்பாவம் மனதின் செயல்களை கண்காணித்துக்கொண்டிருக்கிறது.
நடனமங்கை நளினம், நாணம், புன்னகை ஆகியவற்றுடன் நாட்டியவிதிகளுக்கு உட்பட்டு ஆடும்பொழுது பெருமையுடன் தனக்குதானே பாராட்டு தெரிவித்துக்கொள்ளும் இயக்குனர், அவள் பார்வையாளர்களின் மட்டமான தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் முறைதவறி ஆடும்பொழுது குற்ற உணர்வுடன் வருத்தம் அடைவது போல நல்ல இனிமையான எண்ணங்கள் மனதில் ஏற்படும்பொழுது பெருமிதம் கொள்வதும் பொறாமை, கோபம் போன்ற கெட்ட எண்ணங்கள் மனதில் ஏற்படும்பொழுது துன்பமடைவதும் அகங்காரத்தின் வேலை.
நடன நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே இயக்குனரின் ஆணைப்படி ஆட நடனமங்கை உடன்பட்டதில்லை. இயக்குனர் என்ற பதவியை தானே தனக்கு சூட்டிக்கொண்டு பார்வையாளர்களை பார்த்தபடி ஆடும் நடனமங்கையின் கவனம் ஒருபொழுதும் தன் பக்கம் திரும்புவதில்லை என்பதை உணராமல் நடனத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் தான்தான் போறுப்பு என்று அசட்டுத்தனமாய் நம்பிக்கொண்டிருக்கும் நடன இயக்குனரின் நிலைதான் நம் அகம்பாவத்திற்கும். நம் மனம் ஒருபோதும் அகங்காரத்தின் விருப்பபடி செயல் படுவது கிடையாது.
உதாரணமாக நம்மில் பெரும்பாலோர் ‘நான் யோசிக்கிறேன்’ என்று சொல்லி மனதின் செயல்பாட்டிற்கு உரிமை கொண்டாடுகிறோம். இது தவறு. நம்மால் யோசிக்கவே முடியாது. மனதில் எண்ணங்கள் தானாக தோன்றுகின்றன. என்ன எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்கவே முடியாது. அது முடிந்தால் ஏதாவது ஒரு பொருளை பற்றிய எண்ணங்கள் மட்டும்தான் மனதில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யும் திறன் நமக்கு இருக்கவேண்டும் அல்லது எதைபற்றிய எண்ணமும் ஏற்படாமல் மனதை காலியாக வைத்திருக்க முடிய வேண்டும். இவை நம் சக்திக்கு அப்பாற்பட்டவை என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆக மனதில் ஏற்படும் எந்த எண்ணங்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இது என் நாடு என்று உரிமை கொண்டாடுவது நாட்டு மன்னரின் தனிஉரிமை. ஒவ்வொரு குடிமகனும் இது என் நாடு என்று ஒரு பேச்சுக்கு சொல்லிக்கொள்ளலாமே தவிர உண்மையில் ஆட்சி புரிவது அவர்கள் அல்ல. அதுபோல இது என் உடல், இது என் மனம் என்று ஒரு பேச்சுக்கு நாம் சொல்லிக்கொள்ளலாமே தவிர இவ்வுலகத்தில் உள்ள பொருள்களுடன் தானாக உறவாடும் உடல் மற்றும் மனதின் செயல்பாட்டுக்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல.
இருப்பதைத்தான் துறக்க முடியும். இல்லாததை இல்லை என்று புரிந்து கொண்டால் போதும். தினமும் தெருவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்துவதால் அந்த இடம் நமக்கு சொந்தமாகி விடாது. ஒரு நாள் அந்த இடத்தில் பக்கத்துவீட்டுக்காரர் அவரது காரை நிறுத்திவிட்டால் அவருடன் சண்டை போடாமல் அந்த இடத்தை மனதளவில் துறப்பதுதான் புத்திசாலித்தனம்.
தெளிவு 5: நான் யார்?
எதனுடனும் சம்பந்தப்படாமல் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் பரமன்தான் நான். நடனமங்கை எப்படி ஆடினாலும் அரங்கத்தில் உள்ள ஒளி பாதிக்கபடுவதில்லை. அதேசமயம் ஒளியில்லாமல் நடனம் இல்லை. அதுபோல நான் என்ற உணர்வுமயமான பரமனின் அருள் இல்லாமல் மனம் செயல்படாது. அனைத்து உயிரினங்களின் செயல்பாட்டுக்கு அடித்தளமாய் இருக்கும் பரமன் மட்டும்தான் என்றும் நிலைத்திருக்கும் உண்மை. இவ்வுலகம் முழுவதும் இன்றிருப்பது போல் நாளை இருக்காது. ஒரு நாள் இல்லாமலேயே போய்விடும் நிலையற்ற தன்மை உடையது.
நான் இருக்கிறேன் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இருப்பது உண்மையென்றால் நான் யார் என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டும். அறியும் பொருள்களிலிருந்து அறிபவனான நான் வேறுபட்டவன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என் மனதையும் உடலையும் நான் அறிகிறேன் என்பதால் அவை நானாக இருக்க முடியாது.
இருப்பது இரண்டு பொருள்கள்தான். ஒன்று என் உடல் மனம் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம். இரண்டாவது நான் என்ற உணர்வு. இவ்விரண்டும் அல்லாத அகங்காரம் நம் மனதில் ஏற்படும் நான் என்ற எண்ணம்.
நம் மனதில் ஏற்படும் அனைத்து எண்ணங்களுக்கும் உண்டான பொருள்கள் வெளிஉலகில் இருக்கின்றன. நான், என், எனது போன்ற எண்ணங்களின் பொருள் பரமன். உணர்வுமயமான பரமன்தான் நான் என்ற தெளிவு ஏற்பட்டுவிட்டால் அதன்பின் உலகில் இருப்பதாகத்தோன்றும் அனைத்து இன்பங்களும் என்னிடம் இருந்துதான் உற்பத்தியாகின்றன என்ற உண்மை தெரியவரும். இந்த அறிவு நம் புத்திக்கு ஏற்பட்டபின்தான் நம் உலகில் உள்ள பொருள்களின் மேல் உள்ள பற்றுதல் மறையும்.
தெளிவு 6: நானும் என் மனமும்
உலகத்தில் உள்ள பொருள்களுடன் உறவுகொள்வதை தவிர்க்க முடியாது என்பதால் எதிர்கொள்ளும் பொருள்களுக்கேற்றபடி மாறவேண்டியது மனதின் கடமை. உலகில் ஏற்படும் மாற்றங்களை மனதின் உதவியில்லாமல் நம்மால் அறிந்து கொள்ள முடியாது.
சுடும் நீரை ஊற்றினால் சூடாக இருப்பதும் பனிக்கட்டியை நிரப்பினால் ஜில்லென்று இருப்பதும் பாத்திரத்தின் இயல்பு. அதே போல் இருமைகளிடையே தொடர்ந்து ஊசலாடும் உலக நிகழ்வுகளை அனுபவிக்கும் மனம் நிகழ்வுகளுக்கேற்ப அலைபாய்வதை தவிர்க்க முடியாது.
உலகத்தை திருத்தி எப்பொழுதும் ஒரேமாதிரி இருக்க வைக்க நம்மால் முடியாது. அதேபோல் மனதை அலைபாயாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் நாம் முயற்சி செய்வதில் எவ்வித பயனும் இல்லை. நில் என்றால் மனம் நிற்கப்போவதில்லை.
மனம் என்னுடையதல்ல என்று அதை துறந்துவிடுவதுதான் நிம்மதியாய் இருக்க நமக்கு இருக்கும் ஒரேவழி. உலகத்தில் உள்ள பொருள்களைப்போல மனமும் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு. மனதை என் மனது என்று சொந்தம் கொண்டாடுவதே தவறு. இல்லாதததை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. மனம் நம்முடைய மனம் அல்ல என்று புரிந்து கொண்டால் மட்டும் போதும்.
உலக அனுபவங்களை பெறுவது நான் என்ற அறியாமையே நம் துன்பங்களுக்கு காரணம். அனுபவங்களுக்கு ஆதாரம் மட்டுமே நான் என்ற தெளிவு ஏற்பட்டுவிட்டால் அவற்றால் நாம் என்றுமே பாதிக்கப்படுவதில்லை என்ற உண்மை புலனாகும்.
தெளிவு 7: படைப்பின் இரகசியம்
நமது ஐந்து புலன்கள் மூலம் நமக்கு கிடைக்கும் செய்திகள் மட்டுமே உண்மையில் இல்லாத உலகை இருப்பதாக நம் மனதை நம்பவைத்துகொண்டிருக்கின்றன என்பது அணுவை பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி செய்த பௌதீகத்துறை அறிஞர்களின் முடிவான கண்டுபிடிப்பு.
வேதமும் இதேகருத்தைத்தான் சொல்கிறது.
நடன அரங்கம், பார்வையாளர்கள், மேடை அமைப்பு, பக்கவாத்தியங்கள், பக்கவாத்தியக்காரர்கள், நடனமங்கை, அவளது அங்க அசைவுகள் போன்ற அனைத்தும் பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடு. இருப்பது போன்று காட்சியளிக்கும் இவ்வுலகம் உண்மையில் இல்லை.
இருப்பது பரமன் மட்டும்தான். நான் இருக்கிறேன் என்பது நமக்கு உறுதியாக தெரிவதால் நான்தான் பரமன் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த அறிவை தர்க்கமும் அறிவியலின் கண்டுபிடிப்புகளும் உறுதி செய்கின்றன.
இந்த ஒளி-ஒலி காட்சியில் இடம்பெறும் ஒரு சிறிய அங்கம்தான் நம் வாழ்க்கை. இதில் எந்த ஒரு நடனத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் நிகழ்ச்சியை அனுபவிப்பது மட்டுமே நமது வேலை.
உலகில் பல பொருள்கள் இருக்கின்றன. நமது கர்மவினைகளின் பலனாக அவற்றில் குறிப்பிட்ட சில பொருள்களுடன் உறவாட நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அவ்வாறு உறவு ஏற்படும்போழுது அந்த பொருள்களின் அனுபவங்களை புலன்கள் வழியாக மனம் பெறுகிறது. புத்தியில் உள்ள அறிவுக்கு ஏற்றபடி மனம் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றின்பின் செல்ல ஆரம்பிக்கிறது. பலபிறவிகளில் இதுபோன்ற அனுபவங்களை பெற்று பொருள்களில் இன்பம் இல்லை என்ற பக்குவம் ஏற்பட்டபின் மனம் வேதம் கூறும் பாதைக்கு திரும்புகிறது.
ஆரம்பம் முதல் கடைசிவரை இதில் நான் என்ற அகங்காரத்திற்கு எவ்வித பங்கும் இல்லை என்பது புரிந்தவுடன் நமக்கு முக்தி கிடைக்கிறது.
முடிவுரை :
உலகில் உள்ள மற்ற பொருள்கள் மாறிக்கொண்டிருப்பவை என்பதாலும், இன்பத்தின் உண்மையான ஊற்று நான் என்பதாலும் பொருள்களின் மீது பற்றை துறப்பது மிகவும் எளிதான காரியம்.
பற்றை துறந்த துறவிகள் உலகத்தின் பொருள்களை எவ்வித தடையுமில்லாமல் அனுபவிக்கலாம். ஏனெனில் இன்பமாயிருக்க அவர்கள் உலகத்தில் உள்ள எந்த பொருள்கள் மீதும் சார்ந்திருப்பதில்லை. இன்பம் தன்னுடைய சுயரூபம் என்பது அவர்களுக்கு தெரிந்திருப்பதால் கிடைத்த பொருள்களை அனுபவித்து உலகவாழ்வை இனிமையாக கழிக்கிறார்கள்.
பயிற்சிக்காக :
1. யார் துறவி?
2. அனுபவங்கள் மற்றும் பொருள்கள். இவ்விரண்டில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
3. மனத்தின் செயல்பாடு எதன் அடிப்படையில் அமைகிறது?
4. நடன மங்கை நாட்டிய சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு நாட்டியம் ஆடவேண்டும் என்று சொல்வது எதை குறிக்கிறது.
5. நடன இயக்குனரின் பங்கு என்ன?
6. நான் யார்?
7. படைப்பின் இரகசியம் என்ன?
சுயசிந்தனைக்காக :
1. உலக அனுபவங்களை பெறுவது யார்?
2. முக்தி கிடைப்பது யாருக்கு?
3.முற்றும் துறந்த சன்யாசிக்கும் பற்றுதலை மட்டும் துறந்த சன்யாசிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.
4. பக்க வாத்தியங்கள் என்ற ஜடப்பொருள்களை கோளகங்களாகவும் வாத்தியக் காரரகளை புலன்களுக்கும் ஒப்பிடுவதன் உள்ளர்த்தம் என்ன?
5.அகம்பாவம் உண்மையல்ல என்றால் முக்தி பெறுவது யார்?
6. பரமன் என்கிற ஒருவன்தான் இவ்வுலகில் உள்ள அனைத்து பொருள்களுமாக காட்சியளிக்கிறான் என்றால் பொருள்களை நாடி அனுபவிப்பதில் என்ன தவறு?