Friday, October 8, 2010

Lesson 137: Self-knowledge alone leads to liberation (Brahma Sutra 3.4.1-17)

பாடம் 137: ஞானத்தினால் மட்டுமே முக்தி
பாடல் 426 – 442 (III.4.1-17)

கர்மகாண்டத்தை கடந்து ஞானகாண்டத்தினுள் அடியெடுத்து வைத்தவுடன் ஞானத்தினால் மட்டுமே முக்தியடைய முடியும் என்ற முக்கியமான கருத்தை வேதம் நம் முன்வைக்கிறது.

வேதாந்தத்தில் விளக்கப்பட்ட நான் பரமன் என்ற கருத்தை புரிந்துகொள்ளாமல் வேறு எவ்விதத்திலும் முக்தியடைய முடியாது என்பதை பிரம்மசூத்திரத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் மற்ற அனைத்து மதங்களையும் ஒவ்வொன்றாக மறுத்து விளக்கியபின் இந்த மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிபகுதி ஞானத்தினால் மட்டுமே முக்தி என்று உறுதியாக கூறுவதன் காரணங்களை வரிசைப்படுத்தும் இந்த பாடத்துடன் தொடங்குகிறது.

முதல் காரணம்: வேதவாக்கியங்கள்

ஆத்மாவை அறிந்தவன் அவலத்திற்கு ஆட்படுவதில்லை (சாந்தோக்கியம் 3.4.1), பரமனை அறிந்தவன் பரமனாகவே ஆகிறான் (முண்டகம் 3.2.9), பரமனை அறிபவன் அனைத்தையும் அடைந்தவனாகிறான் (தைத்திரியம் 2.1) போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அல்லது பரமனை பற்றிய ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதை தெளிவாக்குகின்றன.

இரண்டாம் காரணம்: மரணத்திற்கு பின் முக்தி கிடைக்கும் விதம்

விதேஹ முக்தி என்றும் ஜீவன் முக்தி என்றும் வேதத்தில் இரு விதங்களில் முக்தியடைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தாலும் ஞானத்தினால் மட்டுமே முக்தி என்ற முடிவில் மாற்றமில்லை. ஏனெனில் மரணத்திற்குபின் பிரம்மதேவனிடம் நேரடையாக வேதாந்தத்தை படித்து நான் பரமன் என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே விதேஹ முக்தி கிடைக்கும் என்பதை வேதம் தெளிவாக கூறுகிறது.

மூன்றாம் காரணம்: மறுபிறவியின் தன்மை

நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த தீவினை என்று வேதம் சமாதானம் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வது கடினமாய் இருக்கிறது. ஏனெனில் முன் பிறவிகளில் பாவம் செய்தது நான் என்பது நம் நினைவில் இல்லை. அதேபோல் இந்த பிறவியில் கர்ம காண்டத்தை பின்பற்றி நற்செயல்கள் செய்ததன் பலன் இப்பொழுதே கிடைத்தால்தான் அதை நாம் அனுபவிக்கமுடியும். இல்லையெனில் நம் உழைப்பின் பலன் நாம் அறியாத ஒருவருக்கு வரும் பிறவிகளில் கிடைக்கும். எனவே நம்மை பொறுத்தவரை ஜீவன்முக்தி ஒன்றுதான் உண்மையான முக்தி.

நான்காம் காரணம்:  கர்மகாண்டத்தின் தன்மை

செயல்களுக்கு ஒரு முடிவில்லை. எனவே எவ்வளவு செயல்கள் செய்தாலும் பூரணத்துவம் கிடைக்காது. தொடர்ந்து செயல்கள் செய்து அதன் மூலம் குறையாத இன்பத்தை அடையவே முடியாது. வேதம் கர்மம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டை மட்டும்தான் போதிக்கிறது. எனவே கர்மத்தால் முக்தி கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தால் ஞானத்தால் மட்டும்தான் முக்தி என்பது தெளிவாகும்.

ஐந்தாம் காரணம்: கர்மபலன்களின் முடிவு

செய்த வினைகளுக்கு ஏற்ற பலன்களை அனுபவிக்காமல் நம் பிறவிச்சுழல் ஒரு முடிவுக்கு வராது என்றும் பலன்களை அனுபவித்து தீர்க்க முடியாத அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் சஞ்சித கர்மாவை சேர்த்து வைத்துள்ளோம் என்றும் வேதம் கூறுகிறது. அதேபோல் மேற்கொண்டு கர்மங்கள் செய்யாமல் இருந்து ஆகாமி கர்மத்தை சேர்க்காமல் இருக்கவும் முடியாது என்றும் வேதம் கூறுகிறது.

சஞ்சித கர்மத்தையும் ஆகாமி கர்மத்தையும் முற்றிலும் அழிக்கும் சக்தி ஞானத்திற்கு மட்டும்தான் உண்டு என்று வேதம் கூறுவதால் ஞானத்தினால் மட்டுமே முக்தி என்பது தெளிவாகிறது.

ஆறாம் காரணம்: அறியும் ஆவல்

மனிதனின் அறிவுப்பசிக்கு ஒரு முடிவேயில்லை. இவ்வுலகம் எதற்காக படைக்கப்பட்டது, கடவுள் இருக்கின்றானா, சுவர்க்கம் இருப்பது உண்மையா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் முக்தியடைய முடியாது. வேதாந்தத்தின் சாரத்தை முறையாக படித்து புரிந்துகொண்டால் மட்டுமே இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரியவரும்.


ஏழாம் காரணம்: மரணமில்லா பெருவாழ்வு

முக்தி என்பதற்கு மரணமில்லா பெருவாழ்வு என்று ஒரு பொருள். மரணத்திற்கு பிறகு நாம் வாழமுடியாது என்பதால் மரணமடைவதற்கு முன் கிடைப்பதே முக்தியாகும். நாம் நிரந்தரமான இறை அனுபவத்திற்காக ஏங்கும் மனிதபிறவிகள் என்று நினைப்பது தவறு. மனித அனுபவத்தை சிறிதுகாலம் பெற்றுக்கொண்டிருக்கும் நிரந்தரமான தெய்வப்பிறவிகள் நாம் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை தெரிந்துகொள்வதுதான் முக்தி.

எட்டாம் காரணம்: நிலையான ஆனந்தம்

எது வருமோ அது போய்விடும். எனவே நிலையான இன்பம் என்பது அடையப்படவேண்டிய ஒன்று அல்ல. அது  அறியப்படவேண்டியது. நான் ஆனந்தசொரூபமான பரமன் என்று தெரிந்து கொள்வதால் மட்டுமே நிலையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.  

ஒன்பதாம் காரணம்: கடவுள் நம்பிக்கை ஒரு படிகட்டு

மரணத்திற்கு பின் கடவுளின் இராஜ்யத்தில் அவனுக்கு நேரடியாக தொண்டு செய்து என்னாளும் சுகித்து இருப்பது என்ற நம்பிக்கை கர்மகாண்டத்தை கடப்பதற்கு பயன்படும் ஒரு படிக்கட்டு. இடமும் காலமும் பிரிக்கமுடியாத ஒரே தத்துவம். இங்கே இல்லாத கடவுளின் இராஜ்யம் என்றும் சாசுவதமாக இருக்க வாய்ப்பேயில்லை. கடவுள் நம்பிக்கையுடன் வேதத்தைபின்பற்றி கடவுள் வேறு நான் வேறு அல்ல என்ற ஞானத்தை பெறுவதுதான் முக்தி. 

பத்தாம் காரணம்: முக்தியடைந்தோர்களின் அனுபவம்

அறியாமை இருளிலிருந்து ஞானவெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் மரணத்திலிருந்து விடுதலை பெற்ற முக்தியடைந்த முற்றுணர்ந்தோர் பலர் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதுதான் இவர்களின் ஒருமித்த கருத்து.

ஞானத்தை பெறாமல் முக்தியடையலாம் என்று சொல்வற்கு  எவ்வித ஆதரமோ சாட்சியோ எள்ளளவும் இல்லை.   


முடிவுரை :

பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடான நிலையற்ற இவ்வுலகத்தில் தற்காலிக மனித அனுபவத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் நான் நிரந்தமாக என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற ஞானம் மட்டுமே முக்தியை கொடுக்கும்.

 பயிற்சிக்காக :

1. ஞானத்தினால் மட்டும்தான் முக்தி என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. கணக்கில் புலி என்றும் நீ ஒரு மகாராஜா என்றும் தாய் தன் மகனை ஒரு புகழ்ச்சிக்காக உரைப்பதை எப்படி அப்படியே உண்மை என எடுத்துக்கொள்ள கூடாதோ அதுபோல் நீ பரமன் என்று கூறும் வேதவாக்கியங்களை ஒரு புகழ்ச்சியுரையாக எடுத்துகொள்ள வேண்டுமே தவிர உண்மை என எடுத்துக்கொள்ள கூடாது என்பது சரியா?

2. நான் நிலையான பரமன் மற்றும் இந்த உலகம் நிலையற்ற மாயை என்று புரிந்துகொண்ட பின்னும் முக்தி கிடைத்தமாதிரி தெரியவில்லையே?

3. இராமகிருஷ்ண பரமஹம்சர் தொட்டவுடன் விவேகானந்தருக்கு அருள் கிடைத்ததாக சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன?

4. ஞானம் பெறாமல் வேறு எவ்வழியில் முக்தி கிடைக்கமுடியும்?

5. ஞானத்தை பெற்றபின்னும் கூட ஜனகர், அஸ்வபதி போன்றவர்கள் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றியதன் காரணம் என்ன?