பாடம் 139: தியானத்திற்கு பின் ஞானம்
பாடல் 446 – 447 (III.4.21-22)
ஓம் எனும் மந்திரத்தை தியானம் செய்து மனப்பக்குவத்தை பெற்றவுடன் அதன் உட்பொருளான பரமனைப்பற்றிய நிச்சயமான ஞானத்தை பெற உதவும் வகையில் இந்தப்பாடம் அமைந்துள்ளது.
ஒன்றா பலவா?
இடம், பொருள், காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கும் பரமன் ஒருவன்தான் ‘நான் பலவாக ஆகுவேனாக’ என்ற சங்கல்பத்தின் விளைவாக நாம் காணும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாக வியாபித்துள்ளான்.
ஒருபொருள் மற்றொன்றிலிருந்து வேறுபட ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும். காகிதம் கண்ணாடியிலிருந்து வேறுபட்டபொருள் என்பது தெரிந்ததே. எல்லா விதத்திலும் ஒரே மாதிரியிருக்கும் இரு நாற்காலிகள் கூட ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடத்தில் இருப்பதால் இருவேறு பொருள்கள் ஆகும்.
உடலாலும் மனதாலும் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபட்டவர் என்றாலும் இரு மனிதர்களை செயல்படுத்தும் ஆத்மா ஒன்றே ஒன்றுதான். ஏனெனில் ஒரு ஆத்மா மற்றதிலிருந்து வேறுபட்டது என்று நிரூபிக்க அவற்றினிடையே ஏதாவது ஒரு வித்தியாசமாவது இருக்கவேண்டும். எவ்வித வித்தியாசமும் இல்லாததால் ஆத்மா பரமன் என்ற ஒன்றேயாகும்.
ஒன்றிலிருந்து வேறாக இருப்பதுபோல காட்சியளிக்கும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உண்மையில் ஒரே சக்தியின் வெளிப்பாடு என்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. எனவே தோன்றி, தொடர்ந்து மாறி, இறுதியில் மறையும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு பொருள்களும் உண்மையில் ஒன்றாக இருக்கும் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு.
ஒன்றா பலவா என்ற கேள்வியின் பதில் பார்வையாளரை பொறுத்து மாறும். நகை வாங்க கடைக்குள் வருபவர் அங்கு பல்வேறு பொருள்களை காண்பார். இரவில் அவற்றை கொள்ளையிட உள்ளே நுழையும் திருடன் அங்கு தங்கம் என்ற ஒரே ஒரு பொருள் இருப்பதாக காண்பான். வடிவத்திற்கும் பெயருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தால் தங்கம் என்ற ஒன்று பலவாகத்தென்படும்.
அதுபோல் பரமனை அறிந்தவர்களின் கண்களுக்கு கடவுளைத்தவிர வேறு ஒன்றும் தெரிவதில்லை. இல்லாத வடிவத்திற்கும் பெயருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாமர மக்களின் பார்வையில் நல்லவர்கள், கெட்டவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், மிருகங்கள், பறவைகள், தாவரம், மலை, நதி என பல வேறுபட்டப்பொருள்கள் இவ்வுலகில் இருப்பது போல் தெரியும்.
அறிபவன் ஒருவனா?
நான் என் எதிரிலிருக்கும் புத்தகத்தை பார்க்கிறேன். அமெரிக்காவில் உள்ள என் நண்பன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்கிறான். இவ்விரு பொருள்களை அறிபவன் எப்படி ஒருவனாக இருக்க முடியும்? பொருள்கள் வேறுபடுவதால் அவை நம் மனதில் வெவ்வேறு எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. அதே போல் மனங்கள் வேறுபடுவதால் அனுபவங்கள் மட்டும் வேறுபடுகின்றன. மனங்களை செயல்படுத்தும் உணர்வு வேறுபடுவதில்லை. உணர்ச்சிகள் வேறுபட்டாலும் அவற்றிற்கு ஆதாரமான உணர்வு அனைவருக்கும் ஒன்றுதான். ஒரே மின்சாரம் பல்வேறு சாதனங்களை செயல் படுத்துவது போல உணர்வுமயமான ஒரே பரமன் அனைத்து உயிரினங்களையும் செயல்படுத்துகின்றான். ஜடப்பொருள்களால் பெற முடியாத அறிவை நாம் பெறுவதற்கு காரணமான இந்த உணர்வுதான் அறிபவன்.
எனவே அனுபவங்கள் மனங்களை மட்டும் பாதிக்கின்றவே தவிர அவற்றின் செயல்பாட்டிற்கு ஆதாரமான பரமனை பாதிப்பதில்லை.
அறிபவனை அறிய முடியுமா?
நம் மனம் உள்ளிட்ட அனைத்தும் உணர்வற்ற ஜடப்பொருள்களாகும். எனவே இவற்றால் பரமனை அறிந்து கொள்ள முடியாது. நெருப்பை எரிக்க முடியாது என்பதைப்போல அறிபவனை அறிய முடியாது. மேலும் இருப்பது அறியும் உணர்வு ஒன்றுதான். அறிவை தன்னுள் சேகரித்து வைக்கும் மனது கணிணியைப்போல் ஒரு ஜடப்பொருள். உணர்வுடன் கூடிய ஒரே பொருள் பரமன் மட்டுமே. எனவே அறிபவனை அறிய வேறுயாரும் இல்லை.
ஆகவே அறிபவனை நேரடியாக அறியமுடியாது. பானையொன்றை பார்த்தால் அதை செய்த குயவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று அறிவது போல உலகத்தில் உள்ள பொருள்கள் அறியப்படுவதால் அறிபவன் என்று ஒருவன் இருக்க வேண்டும் என்று யூகித்து அறியலாம்.
அறிபவன் யார்?
பொருள்கள் வேறானவையென்றும் பரமன் ஒன்று என்றும் இந்த பாடத்தில் கூறப்படும் கருத்துக்களை அறிந்து கொள்பவன் பரமனா அல்லது பாமரனா?
புத்தகம், கைகடிகாரம் போன்ற ஜடப்பொருள்களை அறியும் மனமும் கம்புயூட்டரைப்போன்ற ஒரு ஜடப்பொருள். கணிணி தன் செயல்பாட்டுக்கு மின்சாரத்தை சார்ந்திருப்பது போல மனம் செயல் பட பரமனைச்சார்ந்திருக்கிறது. கணக்கு போடுவது கணிணியா மின்சாரமா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? மனம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நாம் அறிவதால் மனம் அறியப்படும் ஒரு ஜடப்பொருளேயன்றி அறிபவன் அல்ல.
எதிரிலிருக்கும் பொருள்களை பிரதிபலிக்கும் கண்ணாடியைப்போல ஐந்து புலன்கள் மூலம் புலப்படும் பொருள்களை பற்றிய எண்ணம் மனதில் ஏற்படுகிறது. உதாரணமாக உயரமான ஒரு மரத்தைப்பார்த்ததும் தென்னை மரம் என்ற எண்ணம் மனதில் ஏற்படுகிறது. பார்ப்பது யார் என்ற கேள்விக்கு நான் பார்க்கிறேன் என்ற பதில் கிடைக்கிறது. நான் என்ற எண்ணத்தின் பொருள் என்ன?
தென்னை மரம் என்ற எண்ணத்திற்குண்டான பொருள் தோட்டத்தில் இருக்கிறது. நான் என்ற எண்ணத்தின் பொருள் பரமன் என்றால் பரமனும் மரத்தைப்போல் ஒரு பொருள் என்றாகிவிடும். எனவேதான் பரமன் என்பவன் வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவன் என்றும் பரமனை அறிந்தவன் பரமனாகவே மாறிவிடுகிறான் என்றும் வேதம் கூறுகிறது.
மனம் என்னும் ஜடப்பொருளில் ஏற்படும் எண்ணங்களில் நான் அல்லது எனது என்கிற எண்ணமும் ஒன்று. அந்த நான் என்கிற எண்ணம் மனதின் உரிமையாளன் அல்ல. “நான் அந்த உயர்ந்த மரத்தை பார்த்ததும் என்னுடைய மனதில் தென்னை மரம் என்கிற எண்ணம் ஏற்பட்டது” என்ற வாக்கியத்தில் இரண்டு பொருள்கள் மட்டுமே உள்ளன. ஒன்று மனம். மற்றது தென்னை மரம்.
உணர்வற்ற ஜடப்பொருளான மனதில் எண்ணங்கள் ஏற்பட காரணமாயிருக்கும் உணர்வே பரமன். நீதான் அது என்று வேதம் குறிப்பிடுவது இந்த உணர்வைத்தான். ஆக நான் உணர்வு என்ற ஞானம் ஏற்பட்டவுடன் அறிபவன் யார் என்பது தெளிவாகிவிடும்.
அறிபவன் ஒருவனே. அறியப்படும் பொருள் பல. அறிபவனுக்குள் எவ்வித வேற்றுமையும் இல்லை. அறியப்படும் மனம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. என் மனம் என் நண்பனின் மனதிலிருந்து வேறுபட்டது. ஆனால் அறிபவன் பரமன் என்ற ஒருவனே. நான் என்ற சொல்லின் பொருள் அகங்காரம் என்ற தவறான அறிவை நீக்கி உணர்வு மயமான பரமன் என்ற சரியான அறிவு நம் மனதில் ஏற்பட்டால் நாம் முக்தியடைகிறோம்.
அறிபவன் மாற்றமில்லாதவன்
அறியப்படும் பொருள்கள் மாறிக்கொண்டேயிருப்பதை அறிய அறிபவன் மாறாமல் நிரந்தரமானவனாக இருக்கவேண்டும். ஏனெனில் அறிபவன் மாறிவிட்டால் அறியப்படும் பொருள்கள் மாறுகின்றன என்பதை அறியமுடியாது.
பல மணிகளை சேர்த்து கோர்க்க தொடர்ச்சியான ஒரே நூல் தேவை. துண்டு துண்டான நூலினால் மாலை செய்ய முடியாது. அதேபோல் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள், கிரகங்கள், வெளி ஆகிய வெவ்வேறான தனிப்பட்ட பொருள்கள் ஒன்றாக இருக்க இவற்றின் ஆதாரமாக வேறுபடாமல் தொடர்ச்சியாக இருப்பது அறிபவன்.
“காலையில் என் மனம் கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தது, மதியம்தான் சிறிது அமைதியடைந்தது” என்று மாலையில் சொல்வதற்கு நான் எனும் உணர்வு காலையிலிருந்து மாலை வரை மாறாமல் தொடர்ந்து இருக்க வேண்டும்.
அறிபவன் இருக்கிறான்
நான் இருக்கிறேன் என்பதற்கு எவ்வித நிரூபணமும் தேவையில்லை. இவ்வுலகம் இருப்பது போல் காட்சியளிக்கும் மாயை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒரு உண்மையை அடிப்படையாய் கொள்ளாமல் ஒரு பொய்யை சொல்ல முடியாது. எனவே இருத்தல் என்பது அறிபவனான எனது இயற்கை தன்மை என்றும் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்றும் நிரூபணமாகிறது.
அறிபவன் எவ்வித குணங்களற்றவன்
நீளம், அகலம் போன்ற வடிவங்கள், கருப்பு, வெள்ளை போன்ற வண்ணங்கள், நல்லவர், கெட்டவர் போன்ற குணங்கள் அறியப்படும் பொருள்களைச்சேர்ந்தவை. இந்த குணங்களை அறிபவனுக்கு எவ்வித குணங்களும் இருக்க முடியாது.
அறிபவன் பாகங்களற்றவன்
எவற்றிற்கு பாகங்களும் பகுதிகளும் இருக்கின்றனவோ அவை நிரந்தரமாக இருக்க முடியாது. ஏனெனில் பாகங்கள் இருக்கின்றன என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருப்பதாகவும் அவை மாற்றத்திற்கு உட்பட்டவை என்றும் ஆகிறது. அறிபவன் ஒருவனே என்பதாலும் அவன் மாறாமல் இருப்பவன் என்பதாலும் அவன் பாகங்களற்றவன் என்பது தெளிவாகிறது.
அறிபவன் நித்யமானவன்
பரமன் ஒருவனே என்பதாலும் அவன் மாற்றத்திற்கு உட்படாதவன் என்பதாலும் அவன் நித்யமானவனாகத்தான் இருக்க வேண்டும். பிறப்பும் இறப்பும் அவனுக்கு இருந்தால் அவற்றை அறிய வேறு ஒருவன் இருக்கவேண்டும். பக்கத்து வீட்டில் கணவனும் மனைவியும் சண்டை போடுவது போல் காணும் கனவில் நாம் நடுவில் புகுந்து எந்த சமாதானம் செய்யாவிடிலும் கனவின் ஆரம்பத்திலிருந்து நாம் தொடர்ந்து இருக்கிறோம். நாம் பங்கு பெறும் காட்சி கனவில் இடம் பெறாவிட்டாலும் நாம் கனவில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் அறிந்திருக்கிறோம். அதுபோல் உணர்வுடன் கூடிய உயிரினங்கள் இவ்வுலகில் உலாவருவதற்கு முன்பிருந்தே உணர்வு வடிவமான பரமன் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறான்.
அறிபவன் சத்யமானவன்
எது நித்யமானதோ அது மட்டுமே சத்யமானது. இன்றிருப்போர் நாளையிங்கே இல்லாமல் போகும் சிறப்புடைய உலகம் உண்மையாக இருக்க முடியாது. எனவே இந்த மாயையான உலகின் ஆதாரமாக என்றும் இருக்கும் அறிபவன் மட்டுமே உண்மையானவன்.
அனந்தமானவனே ஆனந்தமானவன்
இடம், பொருள் மற்றும் காலம் என்ற மூன்று கட்டுப்பாடுகளையும் கடந்து நித்யமாகவும் சத்தியமாகவும் இருக்கும் ஒருவனே ஆனந்தமானவனாக இருக்க முடியும். ஏனெனில் எவ்வளவு பொருள் இருந்தாலும் போதும் என்ற மனம் ஏற்படாது. அனைத்து பொருள்களின் ஆதாரமாக இருப்பவன் மட்டுமே இனி வேண்டும் என்ற ஆசையின்றி குறையாத ஆனந்தத்துடன் இருப்பான்.
வாழ்வில் எவ்வளவு சாதித்தாலும் முதுமையும் மரணமும் தன்னை வென்றுவிடும் என்ற பயம் இருக்கும்வரையில் யாராலும் முழுநிம்மதியுடன் இருக்கமுடியாது. காலத்தைக் கடந்து நித்தியமாய் இருப்பவன் மட்டுமே தடைபடாத நிம்மதியுடன் இருப்பான்.
மாறும் உலகின் இருமைகளால் அலைக்களிக்கப்படும் மனம் நிரந்தரமான அமைதியை அடையமுடியாது. மாயையான உலகில் உண்மையாக இருப்பவனால் மட்டும்தான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும்.
முடிவுரை :
அறியப்படும் பொருள்களான மனம் மற்றும் உடலை அறிவதால் அவைகளிலிருந்து வேறுபட்ட நான் அறிபவன் ஆவேன். வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் சாட்சியாக இருக்கிறேனே தவிர செயல்களை செய்பவனோ அவற்றின் விளைவுகளை அனுபவிப்பவனோ நான் அல்ல. அனுபவங்கள் மனதில் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் என்னை பாதிப்பதில்லை. ஏனெனில் அனுபவங்கள் ஏற்பட காரணமான பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு நான்தான் ஆதாரமானவன். மாறும் உணர்ச்சிகள் மனதைச்சேர்ந்தவை. மனதை இயக்கும் மாறாத உணர்வு நான். அறிந்தது அறியாதது ஆகிய அனைத்தையும் அறியும் பேரறிவாகிய நான், மனதின் அறிவு மற்றும் அறியாமையை பொருட்படுத்துவதில்லை.
என் உடலும் மனமும் தொடர்ந்து மாறுபவை. நான் மாறாதவன். என் உடல் ஒரு நாள் அழிந்துவிடும். நான் அழியாதவன். என் உடல் மட்டும்தான் நான் என்ற வரையரைக்கு உட்படாமல் அனைத்து உயிரினங்களை செயல்படுத்தும் உணர்வாகவும் அனைத்து ஜடப்பொருள்களின் இருப்புக்கு ஆதாரமாகவும் இருப்பவன் நான். பெயர், வடிவம், குணம் ஆகியவற்றுடன் கூடிய படைக்கப்பட்ட பொருள்கள் இருப்பது போல் தோற்றமளிக்கும் மாயை. நான் எவ்வித குணங்களும் இல்லாமல் உலகின் ஆதாரமாக இருக்கும் உண்மைப்பொருள். உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் இருப்பதாக தோற்றமளிப்பதற்கு என்னைச் சார்ந்துள்ளன. நான் எதன்மீதும் சாராமல் என்றும் இருக்கும் சுதந்திர தத்துவம். பிரளயத்தில் பிரபஞ்சமே அழிந்தாலும் நிரந்தரமாக இருக்கும் நான் நேற்று, இன்று என்ற காலக்கட்டுப்பாட்டிற்கும் அங்கு இங்கு என்ற இடக்கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டு எங்கும் எப்பொழுதும் இருக்கும் அனந்தமானவன்.
இருமைகளை எதிர்கொள்ளும் மனம் கவலைகள் நிரம்பியிருக்கும்பொழுது என் இயல்பான ஆனந்தத்தை அனுபவிப்பதில்லை. கவலைகள் மாறி மனதின் எண்ணங்களின் அலைபாயும் தன்மை குறைந்ததும் மனம் என் ஆனந்தத்தை பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. தினசரி வாழ்வில் நடக்கும் இந்த ஊசலாட்டத்தை புரிந்து கொண்டால் குறையாத ஆனந்தம் நான் என்பதும் ஆனந்தத்தை அனுபவிக்க உலகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்பதும் புரிபடும்.
கர்ம யோகம், உபாசன யோகம் ஆகியவற்றால் மனம் பண்பட்டபின் இந்த உண்மைகள் புரிய ஆரம்பிக்கும். இன்பம் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்தது ஒரு முடிவுக்கு வரும்.
பலூனை மேலும் கீழும் உதைத்து விளையாடும் குழந்தையின் கும்மாளத்தை பார்க்கும் பெற்றோர் பலூன் உடைந்தபின் குழந்தை அழுவதையும் ஒரு இனிமையான நிகழ்ச்சியாக ரசிப்பது போல் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து மாறும் தங்கள் மனதின் நடனத்தை, இது வேண்டும் அது வேண்டாம் என்ற பாகுபாடின்றி அனுபவிப்போர்கள் முற்றுணர்ந்தோர்கள்.
நம் இயல்பான ஆனந்தத்தை நாம் அனுபவிக்க ஒரு மனமும் பொருள்களும் தேவைப்படுவதால்தான் பிரபஞ்சம் என்கிற மாயை படைக்கப்பட்டுள்ளது. படைப்பு என்றால் ஒன்றிலிருந்து வேறுபட்ட மாற்றமடையும் பொருள்கள் என்று பொருள். பலூன் உடையாவிட்டால் குழந்தை விளையாட்டில் சலிப்படைந்து விடுவதைப்போல் மனம் மாறாமல் இருந்துவிட்டால் வாழ்வில் சுவையிருக்காது.
என்றும் இருக்கும் அறிபவனான நான் என் இயல்பான ஆனந்தத்தை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட பல்வேறு மனிதர்கள், பொருள்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும்பொழுது மாறும் மனதின் மூலம் அனுபவிக்கிறேன். மாறுவது உலகின் இயல்பு என்பதால் என் ஆனந்தம் என்றும் குறைவதில்லை. உலகை மாற்றுவது என் வேலையல்ல. எல்லாமும் எல்லோரும் எப்பொழுதும் நன்றாக இருக்க தேவையான மாற்றத்தை என்னால் செய்யவும் முடியாது அதற்கு அவசியமும் இல்லை. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது என்பதை அறிந்தால் என்றும் ஆனந்தம் குறைவதில்லை.
பயிற்சிக்காக :
1. பின் வரும் கருத்துக்களை நிரூபிக்கவும்.
- நான் பரமன்
- நான் அறிபவன்
- நான் ஆனந்தமயமானவன்
- நான் நிரந்தரமானவன், அழிவதில்லை
- உலகம் மாயை
2. அறிபவனை அறிய முடியுமா?
சுயசிந்தனைக்காக :
1. அறிபவன் நான் என்பது புரிந்து விட்டால் அடுத்த பாடத்தை படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா?
2. ‘நான் பலவாக ஆகுவேனாக’ என்ற சங்கல்பத்தின் அவசியமென்ன?
3. அறிபவனுக்கும் அறிபவனை அறிந்தவனுக்கும் என்ன வேறுபாடு?
4. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஏன் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாக இருக்க முடியாது?