பாடம் 144: முக்தி வேண்டாதவர்களுக்கும் கட்டுப்பாடுகள் அவசியம்
பாடல் 457- 460 (III.4.32-35)
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் செய்யவேண்டிய கடமைகளை வேதம் பட்டியலிட்டுத்தந்துள்ளது. முக்திவேண்டுபவர்கள் இவற்றை பின்பற்றவேண்டும் என்று சென்ற பாடத்தில் கூறப்பட்ட கருத்து முக்தியை விரும்பாதவர்கள் இவற்றை கடைபிடிக்க வேண்டாம் என்ற தவறான செய்தியை கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பாடம் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வேதம் வகுத்த பாதையில் நடத்தவேண்டிய அவசியத்தை விளக்குகிறது.
நமது விருப்பபடி நம் பாவபுண்ணியங்களுக்கேற்ப கடவுள் படைத்த உலகில் வாழாமல் நாம் ஒவ்வொருவரும் அதில் பல மாற்றங்களை செய்து நமக்கென்று ஒரு உலகை நாமே படைத்து அதில் வாழ்கிறோம். கடவுள் படைத்த உலகம் ஜடப்பொருள்களாலானது. இவற்றை ஆதாரமாக கொண்டு நாம் ஒவ்வொருவரும் நம் உலகை எண்ணங்களால் உருவாக்கிக்கொண்டுள்ளோம்.
கடல், மலை போன்றவை மட்டுமல்லாமல் கார், வீடு போன்ற மனிதன் உருவாக்கியதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப்பொருள்களும் கடவுளின் படைப்பில் அடங்கும். உதாரணமாக ஒரு வீடு கட்ட தேவைப்படும் கல், மண் போன்ற மூலப்பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியவன் கடவுள்தான். வீடு கட்ட மனிதனின் உழைப்பு அவசியம் என்றாலும் அதற்கு தேவையான சக்தியை மனிதன் கடவுள் கொடுத்த உணவிலிருந்துதான் பெறுகிறான். எனவே இவ்வுலகில் உள்ள அனைத்து பொருள்களும் கடவுளின் படைப்பு. மனிதன் ‘நான் உருவாக்கியது’ என்று சொந்தம் கொண்டாட இருக்கும் ஒன்றே ஒன்று அவன் மனதில் அவனால் உருவாக்கப்பட்ட எண்ண உலகம் மட்டும்தான்.
இது என்னுடைய நிலம் என்று கடவுளின் பொருளை தன்னுடையது என்றும் தான் உருவாக்கிய துன்பம் நிறைந்த வாழ்வுக்கு கடவுளை காரணம் காட்டுவதும் மனிதனின் அறியாமை. கடவுள் படைத்த உலகில் நன்மை-தீமை, வறுமை-வளமை, காதல்-மோதல், வெற்றி-தோல்வி என்பது போன்ற பாகுபாடுகள் இல்லை. இவை மனிதனின் எண்ண உலகில் மட்டுமே இருக்கின்றன. எனவே முக்தி வேண்டாதவர்கள் உட்பட்ட அனைவரும் வேதம் காட்டும் வழியில் நடந்தால்தான் அவரவர்களின் எண்ண உலகங்களை சரியானபடி அமைத்துக்கொள்ள முடியும்.
எண்ணத்தால் செய்யப்பட்ட உலகம்
இது என்று சுட்டிக்காட்ட ஏதுவாக இருக்கும் அனைத்தும் கடவுளின் படைப்பு. தொடர்ந்து மாறிக்கொண்டு இருக்கும் இவ்வுலகை மனிதன் தன் எண்ணங்களாக படம் பிடித்து தனக்கென ஒரு தனிப்பட்ட எண்ண உலகை உருவாக்கியுள்ளான். மனிதன் வாழும் எண்ண உலகம் கடவுள் படைத்த உலகத்திலிருந்து வேறுபட்டது. மேலும் அது மற்ற மனிதர்களின் எண்ண உலகத்திலிருந்தும் வேறுபட்டது.
கடவுளின் உலகில் இருப்பவை கடல், ஆறு, நிலம் போன்றவை. மனிதன் தன் எண்ண உலகில் கடவுள் படைத்த உலகை கூறு போட்டு வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு போன்ற பாகுபாடுகளை செய்துள்ளான். மேலும் இந்தியா என்ற மனிதனின்படைப்பு அனைத்து மனிதர்களின் மனதிலும் ஒரே எல்லைகளை கொண்டதாக இருப்பதில்லை. அண்டை நாடுகளில் உள்ளவர்கள் இதன் ஒரு பகுதியை தங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாடுவதற்கு காரணம் அவர்களின் மனதில் வேறு மாதிரி ஒரு எண்ண உலகை உருவாக்கிக்கொண்டிருப்பதுதான்.
எண்ண உலகை எற்படுத்திக்கொள்ளாமல் மனிதனால் கடவுள் படைத்த உலகில் வாழவே முடியாது. பானை என்ற பொருள் கடவுள் படைத்தது. அதைப்பார்க்கும் மனிதன் பானை என்ற எண்ணத்தால் செய்யப்பட்ட பொருளை தன் மனதில் உருவாக்கியபின்தான் பானையை அறிந்தவனாகிறான். இவ்வாறு எண்ணத்தால் ஒரு உலகை அமைப்பது தவிர்க்கமுடியாதது. அதில் தவறில்லை. ஆனால் நாம் வாழ்வது நமது எண்ண உலகில்தான் என்பதை நாம் அறிவதில்லை.
நாய் என்பதை அறிவீர்களா என்று கேட்டால் அனைத்து மனிதர்களும் அறிவேன் என்றுதான் பதில் கூறுவார்கள். அவர்கள் அறிந்தது அவர்களது எண்ணத்தால் உருவான நாய். அதுபோல் கடவுள் எதையும் படைக்கவில்லை. வேறுபட்ட பல விலங்குகளில் ஒருசிலவற்றிக்கு நாய் என்ற பெயர் சூட்டி எண்ணத்தால் மட்டுமே செய்யப்பட்ட ஒரு பொருளை தங்கள் மனதில் மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும் நாய் பற்றிய தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அது அன்பானது அல்லது அருவருப்பானது என்ற வேறுபட்ட உருவங்களை நாய் என்ற பெயரில் தங்கள் மனதில் சித்தரித்துள்ளார்கள். இது போல் கடவுள் படைத்த மனிதர்களை தாய், தந்தை, மகன், மகள் என்று பலவாறு உருவகப்படுத்தி தான் ஏற்படுத்திய சிலந்திவலையில் தானே மாட்டிக்கொண்டு மனிதன் அவதிபடுகிறான். மனிதன் இவ்வாறு தன் எண்ண உலகில் மட்டுமே வாழ்கிறான்.
எண்ண உலகம் கடவுளின் உலகை ஆதாரமாக கொண்டது
மனிதனின் ஐந்து புலன்கள் கடவுள்படைத்த உலகை வலம் வந்து அவற்றின் ஒளி, ஒலி, சுவை, மணம், தொட்டுணர்வு ஆகிய ஐந்து தன்மைகளை எண்ணங்களாக மனதுக்குள் பிரதிபலிக்கின்றன. மனம் இந்த எண்ணங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவற்றிற்கு விருப்பு வெறுப்பு என்ற சாயங்களை பூசி ஒரு தனிப்பட்ட உலகத்தை நிர்மாணித்துக்கொள்கிறது. இந்த எண்ண உலகம் கடவுளின் படைப்பை ஒத்திருப்பதில்லை. உதாரணமாக முள்ளுடன் கூடிய ரோஜா மலர் கடவுளின் படைப்பு. அழகிய ரோஜாவும் கொடிய முள்ளும் மனிதனின் எண்ண உலகில் உள்ள கற்பனைப்பொருள்கள்.
அச்சிலிருந்து செய்யப்படும் பொம்மைகளின் வடிவம் அச்சின் உட்புற வடிவமைப்பை பொறுத்து மாறும். களிமண் ஒன்றாயிருந்தாலும் ஒரு அச்சிலிருந்து பிள்ளையார் பொம்மையும் மற்றதிலிருந்து குரங்கு பொம்மையும் வெளிவருவது போல கடவுள் படைத்த ஒரே பொருள் ஒவ்வொரு மனிதரின் மன அச்சில் புகுந்து எண்ணங்களாக மாறும்பொழுது பல்வேறு உலகங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
மிக அழகாக இருக்கிறது என்று ஒருவரால் வர்ணிக்கப்பட்ட புடவையை மற்றவர் பார்க்க சகிக்கவில்லை என்று கூறுவதிலிருந்து கடவுளால் படைக்கப்பட்ட புடவை ஒன்றாக இருந்தாலும் மனிதர்கள் தங்கள் மனதில் வெவ்வேறு புடவைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதுபோல் அவரவர்களின் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட வெவ்வேறான உலகில்தான் அனைத்து மனிதர்களும் வாழ்கிறார்கள். கடவுள் படைத்த உலகில் யாரும் வாழ்வதில்லை.
சிகப்பு நிற புடவை என்பதன் பொருள் ஆளுக்குஆள் மாறுபடும். கடவுள் படைத்த வண்ணங்களுக்கும் வடிவங்களுக்கும் பெயர் சூட்டும் மனிதர்கள் மாறுபடுவதால் எது உண்மையில் சிகப்பு நிறம் என்பது கடவுளுக்குகூட தெரியாது. இதுபோல் ஒவ்வொருவரும் தங்களுக்குமட்டும் என ஒரு தனிப்பட்ட உலகத்தை உருவாக்கிக்கொண்டு அதில் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்ற கற்பனையுடன் வாழ்கிறார்கள். உண்மையில் மனிதன் உருவாக்கிய எண்ண உலகத்தில் வாழ்வது அவன் மட்டும்தான். எண்ண உலகங்களை அமைக்க கடவுளின் உலகம்தான் ஆதாரம் என்பதால் உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு மனிதன் கடவுளை காரணமாக காட்டுகிறான். ஆனால் மனிதன் தன் எண்ண உலகங்களை சரியாக உருவாக்கவில்லை என்பதுதான் பிரச்சனைகளுக்கு உண்மையான காரணம்.
எண்ண உலகங்கள் சரியாக அமைக்கப்படாததற்கு காரணங்கள்
இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மற்ற உயிரினங்கள் மனிதனைப்போல் துன்பத்தில் ஆழ்வதில்லை. உதாரணமாக முதுமையை ஏற்றுக்கொள்ளாமல் அதை ஒரு பிரச்சனையாக மாற்றி என்றும் இளமையுடன் இருக்க முயன்று தோல்வி அடைந்து அதனால் துன்பப்படுவது மனிதன் மட்டுமே.
கடவுளின் படைப்பு ஒரு குறிப்பிட்ட அளவுடையது. ஒவ்வொரு மனிதனின் எண்ண உலகத்தின் அளவு அவனது அறிவின் தரத்தையும் அனுபவத்தையும் பொறுத்து மாறுபடும். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி போன்றவை இல்லாமல் வீட்டினுள் வளையவரும் மூதாட்டியின் உலகம் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக வேலை செய்யும் ஒருவரது உலகத்தைவிட மிகவும் சிறியதாக இருக்கும்.
கடவுள் படைத்த பல்வேறு உணவுப்பொருட்களில் ஒரு சிலவற்றை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து இவை எனக்கு பிடித்தவை என்றும் மற்ற சிலவற்றை பிடிக்காதவை என்றும் நம் எண்ண உலகை வடிவமைக்கிறோம். இந்தப்பாகுபாடு இறைவன் செய்ததில்லை.
உலக நிகழ்வுகள் அனைத்தையும் அவரவர் தங்களுடைய அறிவு, மனப்பக்குவம், மனப்பான்மை, விருப்பு-வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து நல்லது-கெட்டது என்று தீர்மானம் செய்வதால் எண்ண உலகம் கடவுள் செய்த உலகத்திலிருந்து வேறுபடுகிறது.
ஒவ்வொருவரும் இது போல் உருவாக்கிய எண்ண உலகம் கடவுள் படைத்த உலகத்திலிருந்து வேறுபட்டிருப்பதால் இவற்றுள் எது சரி எது தவறு என்ற விவாதம் அனாவசியம். அனைவரும் வெவ்வேறு வண்ணக்கண்ணாடி வழியாக பார்ப்பதால் பொருளின் சரியான வண்ணம் யாருக்கும் தெரியாது. மேலும் கண்ணாடியை கழட்டிவிட்டு நேரடியாகப்பார்க்கும் சக்தியும் மனிதர்களுக்கு கிடையாது. ஏனெனில் கடவுள் திடமான பொருள் எதையும் படைக்கவேயில்லை. கடவுளின் மாயாசக்தி பொருள்களாக நம் புலன்களுக்கு தென்படுகின்றன. நம் ஒவ்வொருவருவது புலன்களின் தன்மையும் மனதின் பக்குவமும் மாறுபடுவதால் நாம் உருவாக்கும் எண்ண உலகம் வேறுபட்டுத்தான் இருக்கும். இல்லாத உலகை இருப்பதாக கற்பனை செய்துகொண்டிருக்கும் காரணத்தால் எது சரியான கற்பனை என்ற கேள்வியை கேட்க முடியாது. துன்பமில்லாத உலகம்தான் சரியானது.
துன்பங்களுக்கு காரணம் எண்ண உலகம்
மனிதர்களின் துன்பங்களுக்கு அவரவர் எண்ண உலகம் மட்டுமே காரணமே தவிர கடவுளின் உலகம் அவற்றிற்கு பொறுப்பல்ல. கடவுள் படைத்த உலகில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு நம்மை துன்புறுத்தும் சக்திகிடையாது.
தேர்வு முடிவுகளை சரியாகப்பார்க்காமல் தான் தோல்வியடைந்து விட்டதாக நினைக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காரணம் உலகில் நிகழ்ந்த நிகழ்வு அல்ல. உண்மையில் தேறியிருந்தாலும் தேறவில்லை என்ற அறிவு அவன் செயலுக்கு காரணம். ஒருவேளை அவன் உண்மையிலேயே தேர்வில் தோல்வியடைந்திருந்தாலும் அது அவனை எவ்விதத்திலும் பாதிக்கும் சக்தியற்றது. தேர்வில் தோல்வியடைந்த அனைவரும் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் எண்ண உலகை எவ்விதம் உருவாக்கியுள்ளார்களோ அதன்படிதான் அவர்களது செயல்கள் அமையும். தேர்வில் தோற்ற ஒருவன் போனால் போகட்டும் என்று சிறிதுகூட கவலைப்படாமல் அடுத்த தேர்வில் தேர்ச்சிபெற வேண்டிய முயற்சியில் ஈடுபடுவான். மற்றவன் தனக்கு படிப்பு ஏறாது என்று முடிவு செய்து வேலை தேட ஆரம்பிப்பான். இவர்களைப்போலில்லாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தவனின் செயலுக்கு அவனது எண்ணங்கள் மட்டுமே காரணம். தேர்வில் தோல்வியடைந்தது காரணமல்ல.
ஆழ்ந்த உறக்கம், தியானம் மூலம் அடையும் சமாதி, எண்ணங்கள் எதுவுமின்றி ஒரு காரியத்தில் முழு ஈடுபாடுடன் இருத்தல் ஆகிய நேரங்களில் நாம் துன்பம் கலவா இன்பத்தை அனுபவிக்கிறோம். ஏனெனில் இம்மாதிரி சமயங்களில் நாம் கடவுள் படைத்த உலகில் மட்டும் வாழ்கிறோம். போர்க்களத்தில் குண்டு பாய்ந்து இரத்தம் வீணாவதைகூட உணராமல் தொடர்ந்து சண்டையிடும் போர்வீரர்கள் நம் எண்ணங்கள் மட்டுமே நமது துன்பத்திற்கு காரணம் என்று நிரூபிக்கிறார்கள்.
நடந்து முடிந்த அல்லது நடக்கவிருக்கின்ற நிகழ்வுகள் மட்டுமே நம் துன்பத்திற்கு காரணம். இவ்விரண்டும் நம் எண்ண உலகைச்சேர்ந்தவை. கடவுள் படைத்த உலகம் நிகழ்காலத்தில் மட்டுமே இருந்து வருகிறது. இதை ஆதாரமாகக்கொண்டு நாம் உருவாக்கிய எண்ண உலகில் கடந்த காலம் மற்றும் எதிர்காலம் மட்டுமே இருக்கிறது. நம் துன்பங்களுக்கு கடவுள் படைத்த உலகை காரணமாக காட்டுவது நம்முடைய பொறுப்பை தட்டிகழிக்கும் செயல். உலகில் ஏற்படும் நிகழ்வுகளை துன்பம் தரும் நிகழ்வுகளாக மாற்றுவது நாம்தான். கடவுளல்ல.
மேலும் நமக்கு பிடித்த மனிதர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து இவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று தீர்மானிக்கிறோம். இதற்கும் கடவுள் பொறுப்பல்ல. உலகப்பொருள்களின் மேல் நாம் கொள்ளும் பற்று நம்முடைய படைப்பு. இந்த பற்றுதல்தான் நமது அனைத்து துன்பங்களுக்கும் காரணம்.
கடவுள் படைத்த மாயையான உலகம் துன்ப கலப்பில்லாதது. மாற்றம் மற்றும் மறைதல் இல்லாமல் படைத்தல் இருக்க முடியாது. எனவே இளமை இனியது முதுமை கொடியது என்ற மனிதனின் எண்ணம் தவறு. துன்பம் கலவா இன்பத்துடன் வாழ வேண்டும் என்றால் நம்முடைய எண்ண உலகை சரிவர நிர்மாணித்தால் மட்டும் போதும்.
எண்ண உலகை சரியாக அமைப்பதன் அவசியம்
எண்ண உலகம்தான் நம் இன்பதுன்பங்களை தீர்மானிக்கிறது என்பதால் அதை சரியானபடி உருவாக்குவது அவசியம். இதற்கு அடிப்படைத்தேவை அறிவியல் அறிவு. இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் கண்டுபிடுப்புகள் சந்தேகமற நிரூபித்துள்ளன. மேலும் நம் கற்பனையென்பதால் நமது எண்ணங்களும் மாயை. எனவே நம் எண்ணங்கள் மாயையான உலகில் தோன்றும் நிகழ்கால நிகழ்வுகளை மட்டும் பிரதிபலிக்கும்படி செய்தால் நம் எண்ண உலகம் சரியானபடி அமையும்.
கூட்டம் அதிகமிருக்கும் திருமணகூடங்களில் மணமக்களை நேரடியாக பார்க்க பல இடங்களில் மிகப்பெரிய திரை வைத்திருப்பார்கள். திரையில் பார்க்கும் காட்சி ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு ஒளிபரப்பபடுகிறதா அல்லது தற்பொழுது மணமேடையில் நடப்பதை அப்படியே காட்டுகிறார்களா என்பதை படத்தை மட்டும் பார்த்து பார்வையாளர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. அதுபோல் மனதில் ஏற்படும் எண்ணங்களை மட்டும் வைத்துக்கொண்டு அது கடவுள் படைத்த பொருளால் ஏற்படுத்தப்பட்டதா அல்லது நாமாக உருவாக்கியதா என்று அறிய முடியாது. நிகழ்கால நிகழ்வுகள் நினைவுகளாக மாறாமல் நாம் வாழவேண்டும்.
பத்து வருடங்களுக்கு முன் நம்மை ஒருவர் அவமானபடுத்தியது இன்று அவர் பெயரை கேட்டதும் நினைவுக்கு வந்து மறுபடியும் சிலகணம் நாம் துன்பத்தில் ஆழ்வதற்கு அவரோ கடவுளோ காரணமல்ல. நாம் நம் எண்ணங்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதுதான் நம் துன்பத்திற்கு காரணம்.
உதாரணமாக நான்கு நண்பர்கள் நடந்து செல்லும்பொழுது சாலையில் கிடக்கும் ஒரு தங்க நாணையத்தை பார்த்தால் அவர்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களின் அடிப்படையாக அந்த நாணயம் இருந்தாலும் யார் அதை எடுத்துக்கொள்கிறானோ அவன் மனதில் இன்பமான எண்ணமும், அதை நான் முதலில் எடுக்கவில்லையே என்று ஏங்குபவனின் மனதில் பொறாமையும், தான்தான் அதை முதலில் பார்த்தவன் என்று அதை சொந்தம் கொண்டாடுபவனின் மனதில் துவேஷமும், அதன் மீது விருப்பம் இல்லாதவன் மனதில் நண்பர்களின் நடத்தையை பாதிக்கும் தங்க நாணயத்தின் சக்தியை பற்றிய வியப்பும் ஏற்படும். இதுபோல் ஏற்படும் விதவிதமான எண்ணங்கள் அனைத்தும் கடவுள் படைத்த நாணையத்தினாலேயே ஏற்பட்டது என்றாலும் வேறுபட்ட உணர்வுகளுக்கு நாணயம் காரணமல்ல.
இலையில் பரிமாறப்பட்ட கல்யாண சாப்பாடு கடவுளின் படைப்பு. பத்து நாட்கள் சரியான உணவுகிடைக்காமல் தவிக்கும் பிச்சைக்காரன் மனதில் அது ஏற்படுத்தும் எண்ணம் ஒரு பணக்காரன் மனதில் ஏற்படுத்தும் எண்ணத்திலிருந்து வேறுபட்டது. உருவம், எடை, விலை ஆகியவை ஒன்றாக இருந்தாலும் போட்டியின் வெற்றிப்பரிசாக இருக்கும் கோப்பை அதை வென்றவன் மனதிலும் தோற்றவன் மனதிலும் வெவ்வேறான எண்ணங்களை ஏற்படுத்தும்.
ஜடப்பொருள்களுக்கு ஒவ்வொரு மனிதனின் மனதிலும் இதுபோன்ற வேறுபட்ட எண்ணங்களை ஏற்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தும் சக்தி கிடையாது என்பதால் மனதில் ஏற்படும் எண்ணங்களை கடவுள் படைத்த உலகம் தீர்மானிப்பதில்லை என்பது தெளிவாகிறது. நம் மனதில் ஏற்படும் எண்ணங்களை மற்றவர்கள் முடிவுசெய்ய அனுமதிப்பது நமது அறிவீனம். கண் காது போன்ற நம் புலன்களை பயன்படுத்தி நாம்தான் மற்றவர்களின் செயல்களை எண்ணங்களாக மாற்றுகிறோமே தவிர யாராலும் நமது மனதை திறந்து அதற்குள் தங்கள் விருப்பபடி எண்ணங்களை நிரப்பமுடியாது. சுயமாக சிந்தித்து தெளிவாக இருக்கும் மனிதர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக எல்லோரையும் நம்பிவிட மாட்டார்கள். அப்படி ஒருவரை நம்பி அவர் நம் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தினார் என்றாலும் அவ்வாறு செய்ய அவரை அனுமதித்த குற்றம் நம்முடையதுதானே தவிர அவரை குறைசொல்லி பயனில்லை. ஆகவே மனிதன் உட்பட்ட மற்ற உயிரினங்களால் நமது மனதில் ஏற்படும் எண்ணங்களை தீர்மானிக்க முடியாது என்ற உண்மையை நாம் உணர்ந்து நமது மனதில் ஏற்படும் எண்ணங்களை நாம்தான் சரியானபடி அமைத்துக்கொள்ள வேண்டும்.
எண்ண உலகை சரியாக அமைக்கும் விதம்
உலகில் இன்பம் இல்லை என்பதை உறுதியாக அறியும்வரை எண்ண உலகை சரியாக அமைக்க முடியாது. இன்பமாக இருக்க பணம் அவசியம் என நினைக்கும் வரை விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில்தான் எண்ண உலகம் அமையும். எனவே வேதத்தை முறையாக படித்து ஆனந்தமயமான பரமன் நான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின் கடவுள் படைத்த உலகத்தை மாற்றங்கள் ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு சரியான எண்ண உலகை அமைத்துக் கொள்ளலாம்.
நேரம், காலம் போன்றவை மனித கற்பனைகளே தவிர கடவுளால் படைக்கபட்ட உலகத்தைச்சேர்ந்ததல்ல. கடவுளின் படைப்பில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே. அதுவும் இந்தக்கணம் என்று நாம் சுட்டிக்காட்டும்பொழுது இறந்தகாலமாகிவிடும். உண்மையில் கடவுளின் படைப்பான நிகழ்காலத்தில் மட்டும் நாம் வாழ்ந்தால் இன்பமாகமட்டும்தான் நாம் இருப்போம். காதலெனும் உறவினிலே கடிகார நேரம் கிடையாது. காதலில்நாம் இன்பமாக இருக்கும் பொழுது நேரம் போவதே தெரிவதில்லை. ஏனெனில் நேரம் என்று ஒன்று இல்லவேயில்லை. காதல் முடிந்து கடவுளின் உலகிலிருந்து விலகி எண்ண உலகில் நுழைந்தபின்தான் நேரமாகிறது என்ற எண்ணம் ஏற்படும். நான் இப்பொழுது கோபமாக இருக்கிறேன் என்று ஒருவர் கூறினால் அவரது கோபம் முடிந்துவிட்டது என்று பொருள். காதல், கோபம் போன்ற உணர்வுகளில் மூழ்கியிருக்கும்பொழுது நாம் கடவுளின் உலகில் மட்டும் வசிக்கிறோம். எப்பொழுதுமே இதுபோல் எண்ண உலகில் நுழையாமல் நிகழ்காலத்தில் மட்டும் வாழ்ந்தால் அதுதான் துன்பம் கலவா இன்ப வாழ்வு. காதல் இனிமையானது கோபம் தவறானது என்று தரம் பிரித்து இது வேண்டும் அது வேண்டாம் என்ற எண்ண உலகைச்சேர்ந்த எதிர்பார்ப்புதான் துன்பம். இறந்தகால நினைவுகள் எதிர்கால எதிர்பார்ப்புகள் ஆகியவை எண்ண உலகில் மட்டும்தான் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்வது சரியாக எண்ண உலகை அமைக்க உதவும்.
பெண் என்பவள் கடவுளின் படைப்பு. தாய், தங்கை, தாரம் போன்றவை மனிதனின் படைப்பு. இவ்வாறு உறவு முறைகளை ஏற்படுத்திக்கொள்ள கூடாது என்று இங்கு கூறப்படவில்லை. ஒவ்வொருவரும் கடவுளின் ஒரே படைப்பை வெவ்வேறு விதமாக பார்க்கிறோம் என்று அறிந்து கொண்டால் போதும்.
நாம் எவ்விதமான எண்ண உலகை உருவாக்கிக்கொள்கிறோம் என்பது நம் மனம் எவ்வளவு தூரம் செம்மையடைந்துள்ளது என்பதைப்பொறுத்தது. உலகில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவம், வேதத்தை படித்து நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளும் புத்திகூர்மை, மாற்றங்கள் இல்லாமல் படைப்பு இல்லை என்பதை உணரும் அனுபவ அறிவு ஆகியவை நம் எண்ண உலகின் தன்மையை தீர்மானிக்கின்றன. எனவே எண்ண உலகை சீரமைக்க நம் மனதை செம்மை படுத்திக்கொள்ளவேண்டும்.
தீவிரவாதி அப்பாவியான மக்களை சுட்டுக்கொன்றான், மக்களின் வரிப்பணத்தை அமைச்சர் கையாடினார் என்பது போன்ற கடவுளின் உலகில் நடைபெறும் நிகழ்வுகளை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு நடப்பவை நல்லவையாகவே நடக்கின்றன என்று ஏற்றுக்கொண்டால் எண்ண உலகம் சரியாக உருவாக்கப்படும்.
சுட்டுக்கொல்லப்பட்ட மக்கள் அப்பாவிகள் அல்ல என்ற ஞானமும் முக்கியம். கர்ம வினைகளின் பயன்களை அனுபவிப்பதை யாராலும் தவிர்க்கவே முடியாது. தீவிரவாதி கடவுளின் கட்டளையை நிறைவேற்றவே துப்பாக்கியை எடுக்கிறான் என்பது வேதம் கூறும் உண்மை. எனவே கடவுளின் உலகில் எவ்வித தவறும் நடப்பதில்லை. தவறு என்று நாம் நினைப்பதுதான் தவறு. அந்த தவறுக்கு தண்டனைதான் நாம் அனுபவிக்கும் துன்பம்.
மாறும் உலகை புகைப்படம் மூலம் மட்டும் பார்ப்பதைப்போல் கடவுளின் உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று மாறாத எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்வது தவறு. தொடர்ந்து மாறும் ஒரு மனிதரை நல்லவர், வல்லவர், அழகானவர் என்று நாம் நினைப்பது உண்மையல்ல என்பதை உணர்ந்தால் எண்ண உலகை சரியாக கட்டிக்கொண்டிருக்கிறோம் என்று பொருள்.
எல்லா புகழும் இறைவனுக்கே என்பது புரிந்தால் யாரையும் புகழவோ இகழவோ தேவையில்லை. நடப்பது அனைத்தும் நடராஜனின் நடனம் என்று தெரிந்து கொண்டால் உலக நிகழ்வுகள் அனைத்தையும் ரசிக்கலாம்.
மேஜை மேல் வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் செயற்கையானவை என்று தெரிந்து கொண்டால் அவற்றை சாப்பிடவேண்டும் என்ற ஆசை வராது. அதே நேரத்தில் அவை எவ்வளவு நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன என்று பாரட்டவும் முடியும்.
முடிவுரை :
கடவுள் படைத்த மாயையான உலகில் வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட எண்ண உலகை படைக்கவேண்டும். நம் எண்ண உலகில் மட்டும்தான் நாம் வாழ்கிறோம் என்பதால் கடவுள் படைத்த உலகை மாற்றும் முயற்சியை கைவிட்டுவிட்டு நம்முடைய எண்ண உலகை ஒழுங்குபடுத்தினால் துன்பம் கலவா இன்பத்தை நம்மால் அனுபவிக்க முடியும்.
முக்தி என்ற இலக்கை அடைய வேதம் என்ற வழிகாட்டி புத்தகத்தின் துணை அவசியம். வாழ்வின் இலக்கு முக்தியல்ல என்றாலும் கூட வேதம் காட்டும் வழியில் தான் வாழவேண்டும். நடப்பதற்கே குருடர்களுக்கு கோலின் துணை அவசியம். அது போல எண்ண உலகம் கடவுள் படைத்த உலகத்திலிருந்து வேறுபட்டு இருக்கிறது என்பதாலும் மனிதன் படைத்த எண்ண உலகில் அவன் மட்டும் தனித்து வாழ்கிறான் என்பதாலும் வேதத்தின் துணை அவசியம்.
பயிற்சிக்காக :
1. முக்தி வேண்டாதவர்கள் வேதத்தின் துணையை நாடவேண்டிய அவசியமென்ன?
2. நாய் கடவுளால் படைக்கப்படவில்லையா?
3. உண்மையில் எது சிகப்பு நிறம்?
4. எண்ண உலகின் அளவு என்ன?
5. மனிதன் உருவாக்கும் எண்ண உலகம் கடவுள் உருவாக்கிய உலகத்திலிருந்தும் மற்ற மனிதர்கள் உருவாக்கிக்கொண்டுள்ள எண்ண உலகங்களிலிருந்தும் வேறுபடுவதற்கு காரணங்கள் யாவை?
6. மனிதனின் துன்பங்களுக்கு அவன் படைத்த எண்ண உலகம் மட்டும்தான் காரணம் என்பதை நிரூபிக்கவும்.
7. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததுதான் காரணம் என்பது சரியா?
8. எண்ண உலகை சரியாக அமைத்துக்கொள்ளவேண்டியதன் அவசியமென்ன?
9. எண்ண உலகை சரியாக அமைத்துக்கொள்வது எப்படி?
10. எண்ண உலகின் தன்மையை தீர்மானிப்பவை எவை?
சுயசிந்தனைக்காக :
1. வேதம் வாழ்வை எந்த நான்கு கட்டங்களாக பிரித்து அவற்றில் வாழும் வழிமுறைகளை விவரித்துள்ளது?
2. வேதம் சமுதாயத்தை எந்த நான்கு பிரிவுகளாக பிரித்து அவர்கள் செய்யவேண்டிய கடமைகளை வகுத்துள்ளது?
3. பார்லிமென்ட் என்ற கட்டிடத்தை உருவாக்கியது கடவுள்தான் என்றாலும் ஜனநாயகம் என்ற ஆட்சிமுறையை ஏற்படுத்தியது மனிதன்தானே?