Sunday, April 28, 2013

Lesson 185:List of differences in libarated souls (Brahmasutra 4.4.1-3)


பாடம் 185: ஞானியின் தன்மைகள்
பாடல்: 534-536 (IV.4.1-3)

ஞானம் ஏற்பட்டவுடன் தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் எதுவும் தோன்றாது. ஆனாலும் மற்றவர்களை ஒப்பிடும்போது ஞானி வேறுபட்டிருப்பான். ஞானியின் இந்த தனித்தன்மைகளின் பட்டியலை இந்தப்பாடம் தருகிறது.

சாந்தோக்கிய உபநிஷத மந்திரம் (7.12.3) ‘இந்த மேலான ஞானத்தை அடைந்த பின் இந்த உடலை உதறிவிட்டு தன் சுய உருவான அமைதியும் ஆனந்தத்தையும் அவன் வெளிப்படுத்துவான்என்று கூறுகிறது. இந்த சுய உருவத்தின் முழுமையான வர்ணணைகளை பகவத்கீதையின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குத் தந்துள்ளார்.

ஞானம் என்பது மனதில் ஏற்படுவது. வெளித்தோற்றத்தை வைத்து மனதின் நிலையை ஓரளவுதான் அறிய முடியுமே தவிர தீர்மானமாகச் சொல்லமுடியாது. மேலும் ஞானம் பெறாத ஒரு சிலரின் செயலும் ஞானியின் செயல்பாடுகளை ஒத்து இருக்கலாம். எனவே  ஞானி தனது தனித்தன்மைகளை வெளிப்படுத்தினாலும் மற்றவர்களால் அவனை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

ஞானிகள் அனைவருக்கும் மாணவர்களை சரியான வழியில் வழிநடத்தும் திறன் இருக்காது. ஞானம் பெறாதவர்கள் கூட நல்ல ஆசிரியர்களாக இருக்கலாம். எனவே,  மற்றவர்கள் ஞானியா இல்லையா என்பதை அறிந்து கொள்வதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை
நான் ஞானம் பெறவேண்டும்என்ற முயற்சிக்கு இந்த வர்ணணைகள் ஒரு தூண்டுகோலாக அமையும். மேலும் ஞானம் பெற்றபின் அதன் முழுப்பயன்களையும் அடைந்துள்ளோமா என்ற தற்சோதனைக்கும் கீதையில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியல் உதவி செய்யும்.

2.55 எவன் ஒருவன் மனதின் ஆசைகளினால் உந்தப்பட்ட அனைத்து செயல்களையும் துறந்து தன்னிறைவுடன் இருக்கின்றானோ அவனே ஞானத்தில் நிலை பெற்றவன்.

2.56 புலன் இன்பங்களுக்காக ஏங்காமல், பிரச்சனைகளினால் கலக்கம் அடையாமல், பற்று, பயம், கோபம் முதலியவற்றில் இருந்து விடுபட்டு இருப்பவன் ஞானி.

2.57 இன்பத்தில் துள்ளாமலும் துன்பத்தில் துவளாமலும் அவன் ஞானத்தில் நிலை பெற்று இருப்பான்.

2.58   அபாயம் ஏற்பட்டால் ஆமை தனது அவையங்களை உள்ளிழுத்து கொள்வது போல தேவையானால் தன் ஐந்து புலன்களையும் அடக்கிக்கொள்ளும் சக்திபடைத்தவன் உண்மையான ஞானத்தில் நிலைபெற்றவன்.

2.59 புலன் இன்பங்களை அவன் தொடர்ந்து அனுபவித்தாலும் இன்பமாக இருக்க உலகைச்சார்ந்து இல்லாமல் தன் சுய உருவில் நிலைபெற்று இருப்பான்.

2.60-61 புலன் இன்பங்களின் கவர்ச்சி, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துடன் முயலும் விவேகியின் புத்தியைக் கூட கடத்தி செல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.  மனதைநான் பரமன்என்ற அறிவில் நிலைபெறச் செய்வதன் மூலம் புலன்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துபவன், திடமான ஞானம் உடையவன்.

2.64-65 தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போகப்பொருள்களை அனுபவித்தாலும் விருப்பு-வெறுப்புகளின் பிடியில் அகப்படாமல், நிலையான அமைதியை அவன் அனுபவிப்பான். அந்த அமைதியில் அனைத்து துன்பங்களும் அழிந்துபோகும். இத்தகைய மனிதன் உறுதியான ஞானம் உடையவன் ஆவான்.

2.69  ‘நான் நிரந்தரமானவன்என்றும் இந்த உலகம் என்னை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறதுஎன்றும் அறிபவன் ஞானி.

2.70 பல நதிகள் தன்னிடம் வந்து கலந்தாலும் கலக்கம் அடையாமல் நிலையாக இருக்கும் நிரம்பிய கடல் போல, பல்வேறு போகப்பொருள்களை அனுபவிக்கும் பொழுதும் அவற்றால் பாதிக்கப்படாமல் தன்நிறைவுடன் இருப்பவன் அவன்.  பொருள்களை தேடி அலையாமல் என்றும் நிம்மதியாக வாழ்பவன் அவன்.

2.71 ஆசைகள் எதுவும் இல்லாமல், ‘நான் செயல்களைச் செய்பவன்’ என்ற எண்ணத்தையும், ‘அனுபவிக்கும் பொருள்கள் என்னுடையது’ என்ற எண்ணத்தையும் துறந்த ஞானி நிம்மதியாக வாழ்வான்.

2.72 இதுதான் ‘நான் பரமன்’ என்ற அறிவில் நிலைபெற்றவன் வாழும் விதம். இந்த நிலையை அடைந்தபின்னர் அவனுக்கு தான் உலகில் இருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன் என்ற எண்ணம் இருக்காது. எனவே அவன் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலை பெறுகிறான்.   

4.18 செயல்களில் செயலற்ற தன்மையையும், செயலற்றவற்றில் செயலையும் பார்க்கும் திறன் உள்ளவன் ஞானி. அவன் எந்தச் செயல்களைச் செய்தாலும் அவற்றால் பந்தப்பட மாட்டான்.

4.20 செயலின் பலனில் எவ்வித பற்றும் இன்றி, நிலைத்த திருப்தி உடையவனாக, இன்பத்துக்காக எதையும் சாராதவனாக இருக்கின்ற ஞானி, எப்போதும் ஏதாவது செயல்கள் செய்துகொண்டு இருந்தாலும் எந்தச் செயலையும் செய்தவன் ஆகமாட்டான். 

4.22 எதேச்சையாக கிடைத்ததில் மகிழ்பவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமை இல்லாதவன், வெற்றி தோல்விகளில் சமமாக இருப்பவன்இத்தகையவன் செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றால் கட்டுப்படுவதில்லை.

12.13-14 எவன் ஒருவன் பொறாமை இன்றி, அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் பழகுகிறானோ அவன் ஞானி. அகங்காரம் போலியானது என்பதை அவன் அறிவதால் அவன் தன்னை யாருக்கும் முதலாளியாக கருதுவதில்லை.

12.15  எவரையும் துன்புறுத்தாமல், எதிர்காலத்தைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், நிலையான இன்பத்துடன் இருப்பவன் ஞானி.

12.16 எதிர்காலத்தில் ஏதேனும் சாதனைகள் நிகழ்த்தவேண்டும் என்ற குறிக்கோள் ஏதும் இன்றி, செய்யும் செயல்களுக்கு விரும்பிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றி, துன்பங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்தவன் ஞானி.

12.17 ஞானிக்கு தன் மனம் எப்போதும் இன்ப உணர்விலேயே மூழ்கி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்காது. அதேபோல, துன்ப உணர்வுகளும் நிரந்தரம் அல்ல என்று அவன் அறிவதால் சோகத்தில் புலம்பமாட்டான். புனித காரியங்களை செய்ய வேண்டிய கட்டாயம் அவனுக்கு இல்லை. தவறான காரியங்களை அவன் செய்ய நேரிட்டால் அதுகுறித்த வருத்தமும் அவனுக்கு கிடையாது.

12.18-19 தானே அனைத்து உருவங்களின் ஆதாரம் என்பதை அறிந்த காரணத்தால் நண்பர்களையும் எதிரிகளையும் ஞானி சமமாகப் பார்ப்பான். ஏற்ற இறக்கங்கள் உலகின் இயல்பு என்பதை அறிந்த காரணத்தால் அவன் புகழ்-இகழ், வெயில்-குளிர்ச்சி, இன்பம்-துன்பம், மதிப்பு-அவமானம் ஆகிய இருமைகளின் இடையே சமநிலையில் வாழ்வான். எதனாலும் பாதிக்கப்படாமல், எப்போதும் அமைதியாக,  கிடைத்ததில் திருப்தி அடைந்து, தனக்கு என்று சொத்துக்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை சிறிதும் இல்லாமல், ‘நான் பரமன்என்ற ஞானத்தில் நிலைபெற்று உடலும் மனதும் நிகழ்த்தும் செயல் என்ற நாடகத்தில் பங்கேற்காமல் வெறும் சாட்சியாக அதைப் பார்த்துக்கொண்டு இருப்பவன் ஞானி.

12.20 உலகத்தின் தொடர்ந்த இயக்கம் இறைவனின் நடனம் என்பதை அறிந்த ஞானி, நாட்டியத்தில் தனது பங்கை முழுஈடுபாட்டுடன் செய்வான். நடனமே ஆனந்தத்தின் வெளிப்பாடு என்பதால் அனைத்து மாற்றங்களின் நடுவிலும் ஆனந்தமாக இருப்பான்.     

14.22-25 இன்பம், பற்றுதல், குழப்பம் ஆகியவை இருக்கும்போது அவற்றை வெறுக்காமலும் இல்லாதபோது அவற்றுக்காக ஏங்காமலும் இருப்பவன் ஞானி. தன் உடல், மனம் உட்பட்ட உலகம் தன் வசம் இன்றி தொடர்ந்து மாறுபடும் என்பதை அறிந்ததால் அந்த மாற்றங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் இருப்பவன் அவன். புலன்களும் அவைகளால் அனுபவிக்கப்படும் பொருள்களும் இந்த தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதி என்பதால் அவன் எதன்மீதும் அக்கறை இல்லாதவன் போல் இருப்பான். தான் இந்த மாற்றங்களுக்கு ஆதாரமாக மட்டும் இருப்பவன் என்று அறிந்த காரணத்தால் அவன் ஒரு குறிப்பிட்ட பலனைக் கருதி செயல் செய்வதில்லை.

14.26 ‘நான் பரமன்என்ற அறிவில் நிலைத்து நின்ற போதிலும் தனது உடலும் மனமும் மாயாசக்தியின் வெளிப்பாடுகள் என்று அறிந்த காரணத்தால், ஞானி தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பான். அவன் செயல்களின் பலனால் பாதிக்கப்படுவதில்லை.

14.27 மாற்றத்துக்கும் அழிவுக்கும் உட்படாமல் என்றும் இருக்கும் உண்மையான ஆனந்தம் நான் என்ற அறிவில் ஞானி நிலைத்து நிற்பதால் அவன் பரமனாகவே மாறிவிடுவான்

முடிவுரை :

ஞானியின் சுய உருவத்துக்கும் மற்றவர்களின் சுய உருவத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. ‘நான் பரமன்என்ற வேதவாக்கியம் அனைவருக்கும் பொருந்தும். இருப்பது ஒரே பரமன். அந்த பரமன்தான் உலகமாகவும் அதில் வாழும் பல்வேறு உயிரின்ங்களாகவும் காட்சி அளிக்கிறான். எனவே ஞானியின் சுய உருவம் தனிப்பட்ட தன்மை உடையது அல்ல.

முக்தி என்பது புதிதாகப் பெறப்பட்ட ஒரு நிலை அல்ல. ‘இப்போது நான் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் சிக்கி துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். வேதம் படித்தால் இந்த துன்பத்தில் இருந்து விடுதலை பெற்று முக்தி அடைவேன்என்ற எதிர்பார்ப்பு முக்திவிழைவோரிடம் இருக்கும். ‘முக்தி அடைந்த பின்னும் நீ மாறாமல் அப்படியேதான் இருப்பாய்என்ற உண்மையை பொதுவாக ஆசிரியர் சொல்வதில்லை. ஏனெனில் முக்தி என்பது ஒரு புதிய நிலை அல்ல என்ற உண்மையை முக்தி அடைந்த பின்தான் உணர்ந்துகொள்ள முடியும்.

எது அடையப்பட்டதோ அது நிலையானது அல்ல. இப்போது இல்லாத முக்தி எதிர்காலத்தில் கிடைப்பதாக இருந்தால் அது நிச்சயம் காலத்தைக் கடந்ததாக இருக்க முடியாது. எனவே, ‘முக்தியை அடைவதுஎன்று வழக்கத்தில் கூறினாலும் எப்போதும் முக்தியடைந்தவனாக இருப்பவன்தான் நான் என்பதை அறிந்து கொள்வதே முக்தி.

நான் பரமன்என்பதை அறிந்து கொண்டவர்கள் முக்தி அடைந்தவர்கள். இதை அறியாதவர்கள் பற்றுடையோர்.  எனவே, மற்றவர்களை ஒப்பிடும்போது ஞானிக்குதான் யார்என்பது பற்றிய சரியான அறிவு இருக்கிறது என்பதுதான் ஞானிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள ஒரே வேற்றுமை.

உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்என்ற பாடல் வரிகளின் சரியான பொருளை மக்கள் உணர்வதில்லை.

நான் பரமன்என்பது ஞானியின் கற்பனை அல்ல. அதுதான் உண்மை என்று அறிவியல் தெள்ளத்தெளிவாக நிரூபித்து உள்ளது. ஆனால் முறையாக வேதம் படித்தவர்களால் மட்டுமே இந்த அறிவை அடைய முடியும்.

இந்த அறிவை அடைந்த பின்னர் தான் இந்த உடல் என்ற எண்ணம் மறைந்து விடுவதால் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் இருந்து அவன் விடுபடுகிறான். வாழ்வில் துன்பம் என்பது உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே ஏற்படுவது. எனவேதான் தன்னை உடல் என்று நினைப்பவர்களால் துன்பத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற முடியாது.

கயிற்றை பாம்பாக பார்த்து பயப்படுவது துன்பம். பரமனை உடலாக நினைத்து வாழ்வது துன்பம். கயிறு எப்போதும் கயிறாகத்தான் இருக்கிறது. நான் எப்போதும் பரமனாகத்தான் இருக்கிறேன். கயிற்றுக்கும் பாம்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பரமனுக்கும் இந்த வாழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் பாம்பு என்ற ஒன்றை பார்ப்பதற்கு கயிறு ஆதாரமாக இருக்கிறது. உலகமும் அதில் உயிரினங்களும் இருப்பதாக தென்படுவதற்கு பரமன்தான் ஆதாரம். உலகம் இருப்பதாக காட்சி அளிக்கும் மாயை என்பதை அணு ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவர். இந்த பொய்யான தோற்றத்துக்கு உண்மையான ஆதாரமாக இருப்பவன் நான் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் ஞானிகள்.

இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால் அவர்கள் துன்பப்படுவதில்லை. சுற்றி நிகழும் நிகழ்வுகளை சரியாகப் பார்க்கும் காரணத்தால் இவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும். பாம்பு என்று பயந்து பத்து அடி தள்ளி நடக்காமல் கயிறு என்று அறிந்ததால் அதன் பக்கத்திலேயே நடக்கும் காரணத்தால் மற்றவர்களின் பார்வைக்கு அவன் வேறு பட்டவனாகத் தென்படுவான்.

இதுபோன்ற வேற்றுமைகளையே, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் தொகுத்துக் கொடுத்து இருக்கிறார். இந்த அனைத்து வேற்றுமைகளின் சாராம்சம்ஞானிகள் துன்பம் கலக்காத இன்பவாழ்வு வாழ்வார்கள்என்பதே.       
   

பயிற்சிக்காக :

1. மற்றவர்கள் ஞானியா இல்லையா என்பதை நாம் அறிந்துகொள்வது ஏன் அனாவசியம்?
2. ஞானி மற்றவர்களிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறான் என்ற பட்டியலைப் படிப்பதால் என்ன பயன்?
3. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கொடுத்த பட்டியலின் சாராம்சம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. முக்தி என்பது மரணத்துக்குப் பின்னர் அடையப்படுவதுஎன்பதைத்தான்உடலை உதறிவிட்டு சுய உருவத்தை வெளிப்படுத்துவான்என்ற உபநிஷத மந்திரத்தின் மூலம் சொல்கிறதா?
2. ஞானிக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா? இல்லையா?
3.உலகில் உள்ள மதங்களின் இறுதிக் குறிக்கோள் என்ன?