Wednesday, March 14, 2012

Lesson 170: The function of the Prana is merged with Atman (Brahmasutra 4.2.4-6)


பாடம் 170: ஞானியின் பிராணன் ஜீவாத்மாவில் அடங்கிவிடும்
பாடல் 500-502 (IV.2.4-6)

நான் ஒரு தனி மனிதன் என்ற எண்ணம் மறைந்துவிடுவதால் ஞானியின் பிராணன் ஆத்மாவில் அடங்கிவிடும் என்ற கருத்தை விளக்கி பிராணன் அடங்கிவிடுவதால் ஏற்படும் பலனை இந்த பாடம் விவரிக்கிறது.

பிராணன் நின்றுவிட்டால் உயிர் பிரிந்துவிடும் என்ற கருத்து உடலை உணர்வின் ஆதாரமாக நினைக்கும் பற்றுடையோர்களின் மரணபயத்திற்கு காரணம். உணர்வுதான் உடலின் ஆதாரம் என்ற உண்மையை அறிந்த முக்திவிழைவோர்கள் கூட உடல் உணர்விலிருந்து வேறானது என்று நினைப்பதால் மரணபயத்திலிருந்து விடுதலை பெறுவதில்லை. இருப்பது உணர்வு மட்டும்தான் என்ற அறிவு ஏற்பட்டவுடன்தான் அவர்கள் முற்றுணர்ந்தோர்களாகி சாகாவரம் பெறுகிறார்கள்.

கனவில் உலவும் மனிதர்கள் உயிருடன் இருப்பதாக தோற்றமளிப்பதற்கு காரணம் அவர்களுக்குள் துடிக்கும் பிராணன் என்ற விளக்கம் உண்மையாக இருக்க முடியாது. உலகில் உலவும் மனிதர்கள் உயிருடன் இருக்க பரமனிடமிருந்து தோன்றிய பிராணன்தான் காரணம் என்ற விளக்கம் முக்திவிழைவோர்களுக்கு சரியாக புரிந்துவிட்டால் அவர்களது பிராணன் பரமனுடன் ஐக்கியமாகிவிடும்.

உயிருக்கு உடல் காவல் என்ற முதல் படியை தாண்டி மரணத்திற்கு பின் மறுபிறவி எடுப்பதால் உடல் வெறும் உடையைப்போல என்ற இரண்டாம் படியையும் கடந்து உடல் இருப்பதுபோல் தோன்றும் காட்சிப்பிழை என்ற உண்மையை அறிந்ததும் பிராணன் ஆத்மாவில் அடங்கிவிடும். எனவே ஞானிக்கு மரணபயம் இருக்காது.

பிராணன் அடங்கியபின் உடல், மனம் மற்றும் புத்தி ஆகிய மூன்று கருவிகள் மூலம் ஆத்மாவின் இன்பத்தை முழுமையாக ஞானிகள் அனுபவிப்பர். பற்றுடையோர்கள் இவற்றின் மூலம் அனுபவிக்கும் இன்பம் துன்பத்துடன் கலந்தே இருக்கும். முக்திவிழைவோர்கள் இந்த மூன்று கருவிகளின் மூலமாக இல்லாமல் நேரடியாக ஆத்மாவின் இன்பத்தை பெறலாம் என்ற தவறான எதிர்பார்ப்புடன் வாழ்வார்கள்.

இன்பத்தின் மூன்று நிலைகள்

அனைவரும் அனுபவிப்பது ஒரே இன்பம்தான் என்றாலும் மக்களின் தரத்திற்கேற்ப இந்த இன்பத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். உடல் அளவில் அனுபவிக்கும் இன்பம் தாழ்ந்த நிலை. மனதளவில் அனுபவிக்கும் இன்பம் அதைவிட உயர்ந்த நிலை. அறிவுபூர்வமாக புத்தியை பயன்படுத்தி அனுபவிக்கும் இன்பம் மிக உயர்ந்த நிலை. சினிமா பாடல்கள் உடலுக்கும், கர்நாடக இசை உடல் மற்றும் மனதிற்கும், இலக்கிய சொற்பழிவு உடல், மனம், புத்தி ஆகிய மூன்றிற்கும் இன்ப அனுபவத்தை தருகின்றன. இலக்கிய சொற்பழிவை அனுபவிப்பவர் சினிமா பாடலையும் இரசிக்கலாம். ஆனால் சினிமா பாடல்களை இரசிக்கும் எல்லோருக்கும் இலக்கிய சொற்பழிவு புரியாது. எனவே மக்களின் தரம் அதிகமாக அதிகமாக அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தின் நிலைகள் உயர்வதுடன் இன்பத்தின் அளவும் அதிகரிக்கும். உடலின் இன்பம் ஒரு சில நிமிடங்களுக்கும் மனதின் இன்பம் ஒரு சில மணிநேரங்களுக்கும் புத்தியினால் அனுபவிக்கும் இன்பம் பல நாட்களுக்கும் இருக்கும். ஞானத்தினால் ஏற்படும் இன்பம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

மனிதர்களில் மூன்று தரங்கள்

உடல்தான் முக்கியம் என்று விலங்குகளைப்போல் வாழ்பவர்கள் தரத்தில் மிகவும் தாழ்ந்தவர்கள். இவர்கள் தங்களது அறிவை உடலின் இன்பத்திற்காக மட்டுமே செலவிடுவார்கள். உடலைவிட மனம்தான் முக்கியம் என்ற அறிவுடன் உடலை வருத்தி மனதின் இன்பத்திற்காக உழைப்பவர்கள் இரண்டாம் தரம். மனதையும் கட்டுப்படுத்தி அறிவுபூர்வமாக வாழ்பவர்கள் முதல் தரமானவர்கள்.

உடலை பிரதானமாக கொண்டு வாழ்பவர்கள் பற்றுடையோர்களாகவே இருப்பர். மனதை பிரதானமாக நினைப்பவர்கள் முக்திவிழைவோர்களாக மாறினாலும் இவர்களுக்கு முக்தி கிடைப்பது அரிது. முதல் தர மனிதர்களில் ஒருசிலர் மட்டுமே பற்றுடையோன், முக்திவிழைவோன் என முன்னேறி இறுதியில் ஞானியாவார்கள்.

முதல் நிலை இன்பம்உடல்

புலன்கள் பொருள்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவிப்பது மட்டுமே மிருகங்களால் முடியும். அதிக குளிரும் அதிக வெப்பமும் இல்லாமல் உடலுக்கு இதமான சூழல், சுகமாக இருக்க தேவையான சாதனங்கள் கொண்ட வீடு, சத்தம் அதிகமில்லாமல் இனிமையான பாடல், பார்க்க அழகாக இருக்கும் வண்ண ஓவியங்கள், நருமணம் தரும் மலர், உடலின்பம் தரும் துணைவர் என்பது போன்ற உடலளவில் அனுபவிக்கும் இன்பங்கள்தான் வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்டு ஒரு சில மனிதர்கள் கூட இதே நிலையில் வாழ்வார்கள்.

உடலளவில் இன்ப அனுபவம் தரும் பொருள்கள்களை பெறுவது எளிது. பண்பட்ட மனிதர்கள் அடுத்த நிலைக்கு முன்னேற இந்த இன்பங்களை தியாகம் செய்ய தயங்குவதில்லை. முக்தி விழைவோர்கள் உடல் அளவில் பெறும் இன்பங்களை முழுவதுமாக துறக்க தயாராக இருப்பார்கள். ஆனால் முற்றுணந்தோர்கள் ஒன்றை துறந்து மற்றதை பெற முயலாமல் அனைத்து அனுபவங்களையும் ஏற்றுக்கொண்டு என்றும் இன்பமாக வாழ்வார்கள். இருப்பவற்றை அனுபவிக்க தயங்கமாட்டார்கள். இல்லாததற்கு ஏங்க மாட்டார்கள்.

உடலளவில் ஏற்படும் இன்பம் சில நிமிடங்களே தொடர்வதால் மேலும் இன்பத்தை பெற முயற்சி செய்வது அவசியமாகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் துன்பத்தை முழுவதும் தவிர்த்து உடலை இன்பமாக வைத்துக்கொள்ள முடியாமல் போவதற்கு முப்பத்தைந்து வயதில் துவங்கும் வயோதிகம் காரணமாகிறது. புலன்களின் திறன், உடல் ஆரோக்கியம், பொருள்களை ஈட்டும் திறன் ஆகியவை யௌவனத்திற்கு பின் குறைய ஆரம்பிப்பதால் தொடர்ந்து இன்ப அனுபவங்களைப்பெற அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்படுகிறது. உடலின் ஆதிக்கம் குறைந்து இளமை வேகம் முதுமையின் முதிர்ச்சியாக மாறியபின் அடுத்த நிலைக்கு செல்பவர்களுக்கு மூன்றாவது நிலைக்கு செல்லும் தகுதி ஏற்படாது. எனவே இவர்களுக்கு இந்தப்பிறவியில் முக்தியடைய வாய்ப்பில்லை.

இரண்டாம் நிலை இன்பம்மனம்

பெரும்பாலான மனிதர்கள் உடலால் பெறும் இன்பத்தின் குறைபாடுகளை வெகு விரைவில் புரிந்துகொண்டு மனதினால் பெறும் இன்பம் என்றும் நிலைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தங்கள் உடல் உழைப்பையும் புத்திகூர்மையையும் மனதிற்கு பிடித்த பொருள்களை பெறுவதற்காக செலவிட ஆரம்பிப்பார்கள். மனம் போன போக்கில் வாழ்வதுதான் இன்பம் என்ற தவறான முடிவுடன் ஓய்வில்லாமல் உழைப்பார்கள். உழைப்பு துன்பமாக இருந்தாலும் அது என்றாவது ஒரு நாள் நிம்மதியாக வாழ வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் வாரத்தில் ஐந்து நாட்களில் துன்பத்தை சகித்துக்கொண்டு எஞ்சிய இரண்டு நாட்கள் மட்டும் மனம்போனபடி வாழ்வார்கள். திங்கள் கிழமை காலை அலுவலகம் செல்லும்பொழுது மரத்தடி நிழலில் நிம்மதியாக தூங்குபவனை பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிடுவார்கள்.

இடத்துக்கு இடம், நேரத்திற்கு நேரம், மனிதருக்கு மனிதர் உடலின் தேவைகள் மாறுபடுவதில்லை. மனம் மாறிக்கொண்டே இருப்பதால் அதன் தேவைகள் என்ன என்று தெளிவாக தெரிந்து கொள்வதே கடினம். தேடியபொருள் கிடைத்தபின்கூட மனம் திருப்தியடைவதில்லை. தேவைக்குமேல் எதையும் அனுபவிக்கும் திறன் உடலுக்கு கிடையாது. ஆனால் மனதின் தேவைகளை உலகப்பொருள்களால் நிறைக்கவே முடியாது. மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சி இன்பத்தை விட துன்பத்தையே அதிக அளவில் தரும்.

இந்த உண்மையை அறிந்துகொள்ளும் அளவுக்கு புத்திகூர்மையுள்ளவர்கள் மனம் விரும்புகிறது என்ற ஒரே காரணத்திற்காக பொருள்களை தேடுவதை நிறுத்திவிட்டு அறிவுபூர்வமாக ஆராய்ந்தபின்னரே எவ்வித வேலையையும் செய்வார்கள். இவர்கள் மட்டுமே அடுத்த நிலை இன்பத்தை அனுபவிக்க தகுதியானவர்கள். இந்த தகுதியை பெற்றபின்னும் இவர்கள் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் மூலமாகவும் தொடர்ந்து இன்பத்தை அனுபவிப்பார்கள். ஆனால் இவ்விரண்டும் தாழ்ந்த நிலை என்பதை அறிந்து மூன்றாம் நிலைக்கு இவர்கள் முன்னேறுவார்கள்.

மூன்றாம் நிலை இன்பம்புத்தி

உடலின் இன்பதுன்பங்களை வெளியுலகப்பொருள்கள் தீர்மானிக்கின்றன. அடித்தால் வலிக்கும். அணைத்தால் இனிக்கும். மனதின்  இன்பதுன்பங்களை தீர்மானிப்பது மனம்தான். பிடித்தவர் அடித்தால் இனிக்கிறது. பிடிக்காதவர் அணைத்தால் கசக்கிறது. சரி தவறு என்ற அறிவின் அடிப்படையில் ஏற்படும் இன்பம் மூன்றாம் நிலையைச்சேர்ந்தது. முக்கியமான தேர்வில் வெற்றி பெறுவது பிடித்த நண்பருடன் சிரித்து மகிழ்வதைவிட உயர்ந்த நிலை இன்பம்.

தன் சாதனைகளை உலகம் மெச்ச வேண்டுமென்றும் சரித்திரத்தில் தன் பெயர் இடம்பெற வேண்டுமென்றும் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை கற்பித்துக்கொண்டு படிப்படியாக முன்னேறுபவர்கள் முதல் தர மனிதர்கள். மனம் மூலம் பெறும் இன்பம் நிலைப்பதில்லை என்ற அறிவு ஏற்பட்டவுடன் இவர்கள் தங்கள் புத்தியை கூர்மைபடுத்தி நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்ற தகுதியை தனக்கு ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பெறும் இன்பம் நிலைக்கும் என நம்புவார்கள்.

தனது மரணத்திற்குபின் கல்லறையில் கூடுபவர்கள் தன்னை பற்றி உயர்வாக பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கேற்றவாறு வாழ முயலுவார்கள். மற்றவர்கள் தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பதால் தனக்கு ஏற்படும் இன்பம் மற்ற இரண்டு நிலை இன்பங்களைவிட அதிகமென்றாலும் அந்த இன்பத்தை காப்பாற்ற துன்பபட வேண்டும் என்ற அறிவு ஏற்பட சிலகாலமாகும். வெற்றி தோல்வி மாறிமாறி ஏற்படுவதால் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் தங்கள்  வாழ்வு அலைபாய்கிறது என்றும் இந்த அலைபாய்தலுக்கு முடிவே இல்லை என்றும் அறிந்தபின்தான் நிலையான இன்பத்தை பெற தேவையான அறிவை அடைய இவர்கள் முயற்சி செய்வார்கள்.

மாறுதலுக்குட்பட்ட உலக அறிவு துன்பத்தை குறைக்க மட்டுமே உதவும். துன்பத்தை முழுமையாக அகற்றவும் நிலையான இன்பத்தை பெறவும் வேதம் தரும் மாறாத அறிவு அவசியம். அறிவின் கூர்மையை முழுமையாக பயன்படுத்தி வேதம் படிப்பவர்களால் மட்டுமே இந்த நிலையின் உச்சகட்டத்தை அடைய முடியும்.

ஒருமித்த செயல்பாடு

இன்பம் நமது உண்மை உருவம் என்பதால் இன்ப அனுபவத்தை பெறாதவர்கள் யாரும் கிடையாது. இன்பம் உருவாக்கப்படுவதல்ல. அது  என்றும் இருப்பது. ஆனால் இன்ப அனுபவம் வந்து போககூடியது. ஆழ்ந்த உறக்கத்தின்பொழுது உடல், மனம், புத்தி ஆகிய மூன்று கருவிகளும் ஒடுங்கியிருப்பதால் எல்லோருக்கும் கிடைக்கும் இன்ப அனுபவம் விழித்த பின் தொடர இந்த கருவிகள் மூன்றும் ஒருமித்து செயல்பட வேண்டியது அவசியம்.

புலன்கள் மனதின் துணையில்லாமல் செயல்படுவதில்லை. மனம் கவலையில் ஆழ்ந்திருக்கும்பொழுது திரைப்படபாடல் காதுக்கு கேட்காது. கேட்டாலும் இனிமையாக இருக்காது. அதே போல் மனதாலும் ஐந்து புலன்களின் மூலமாக அல்லாமல் வேறு வழியில் எவ்வித அனுபவத்தையும் பெற முடியாது. மனதை வழிநடத்தும் அறிவால் மனதின் துணையின்றி தனித்து இயங்க முடியாது.

புலன்களின் துணையில்லாமல் எவ்வித இன்பத்தையும் பெறமுடியாது. ஏனெனில் புலன்கள் செயல்படவில்லையென்றால் உலகம் மறைந்துவிடும். மனம் மட்டும் செயல்பட்டாலும் உடலை பயன்படுத்தமுடியவில்லையே என்ற வருத்தம் இன்ப அனுபவங்களை தடை செய்துவிடும். உடலும் மனமும் சேர்ந்து செயல்பட்டாலும் இன்ப அனுபவங்களை நாம் பெறுகிறோம் என்ற அறிவு இல்லையென்றால் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வித்தியாசம் தெரியாது. பைத்தியக்காரன் எதற்கு சிரிக்கிறான் அல்லது எதற்கு அழுவான் என்று தெளிவாக சொல்ல முடியாது.

எனவே அறிவு, மனம், புலன்கள் ஆகியவை ஒருமித்து செயல்பட்டால் மட்டுமே என்றும் இருக்கும் இன்பத்தை அனுபவிக்கமுடியும். அறிவின் ஆழமும் கூர்மையும் இன்ப அனுபவத்தின் அளவை தீர்மானிக்கின்றன. அறிவின் முழுகட்டுப்பாட்டில் மனமும் மனதிற்கு கீழ்படிந்து உடலும் செயல்பட்டால் மட்டுமே துன்பம் கலவா இன்பத்தை இடைவிடாமல் அனுபவிக்க தேவையான ஞானத்தை பெறமுடியும்.

இன்ப அனுபவத்தில் புத்தியின் பங்கு

பிறந்தவுடன் எழுந்து நிற்காவிட்டால் கழுதைப்புலிக்கு உணவாகிவிடுவோம் என்ற அறிவு ஒட்டகச்சிவிங்கியின் குட்டிக்கு இயற்கையாகவே இருக்கிறது. ஆனால் தனக்கு எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறியும் திறனை மனிதன் தன் சுய முயற்சியால் வளர்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது. வாழ்வில் அடிபட்டு அல்லது பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு மனிதன் தன் பகுத்தறிவை வளர்த்துக்கொண்டால் மட்டுமே அவனால் இன்பமாக வாழ முடியும். மனிதன் அனுபவிக்கும் இன்பத்தின் அளவும் நிலையும் அவனது அறிவின் தரத்தை பொறுத்தே அமையும். புத்தியுள்ளவர்கள் மற்றவர்களை விட இன்பமாக வாழ்வர்.

இயற்கை சூழல் தரும் இன்பதுன்பங்களை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளும் விலங்குகளைப்போல் வாழாமல் சூழ்நிலைகளை தன் வசதிக்கேற்ப மாற்றும் சக்தி மனிதனின் அறிவை பொறுத்து அதிகரிக்கும். அறிவுத்திறன் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருளாதார நிலையை உயர்த்தி தான் வாழும் உலகை தனக்கேற்ற வகையில் அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் வாழ்வின் நிகழ்வுகளை சரியாக எதிர்கொள்ளும் திறனையும் மனிதனின் அறிவு தீர்மானிக்கிறது. எவ்வளவுதான் முயன்றாலும் மற்றவர்கள் தங்களிடம் நடந்துகொள்ளும் விதத்தை முழுவதும் கட்டுப்படுத்தமுடியாது. தனக்கு பிடிக்காத வகையில் ஏதேனும் நிகழ்ந்தாலும் அதனால் துன்பபடாமல் அதன் மூலம் ஏற்படும் நன்மைகளை கண்டுபிடித்து தோல்வியை வெற்றியின் படிக்கட்டாய் மாற்றி துன்பத்தை இன்பமாக மாற்றும் சக்தியும் அறிவுள்ளவர்களுக்கே இருக்கும். நாட்டு நலனுக்காக சிறைபட்டசுதந்திரபோராட்டவீர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் ஆங்கிலேயேர்கள் தந்த துன்பம் துன்பமாக தெரியவில்லை. எனவே ஒரு நிகழ்வு இன்பமா அல்லது துன்பமா என்பதை அறிவுதான் தீர்மானிக்கிறது.

கவர்ச்சியுடையணிந்த இளம்பெண்ணின் புகைப்படம் ஏற்படுத்தும் உணர்வு அந்த பெண் தனது தங்கை என்ற அறிவு ஏற்பட்டதும் வேறுமாதிரி மாறிவிடும். எனவே இன்ப அனுபவங்கள் அறிவின் தரத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன.   

தெரியாமல் ஒருவர் நமக்கு துன்பம் தருகிறார் என்றால் அவரை மன்னிக்க தயாராக இருக்கும் மனம் அவர் வேண்டுமென்றே அப்படிச்செய்கிறார் என்று அறிந்தால் பழிவாங்கும் உணர்வால் பாதிக்கப்படும். மற்றவர் எந்த நோக்கத்துடன் எப்படி நடந்துகொண்டாலும் என்னால் இன்பமாக இருக்க முடியும் என்ற அறிவு உள்ளவர்களால் மட்டுமே துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ முடியும்.

போதிய அறிவு இல்லாதவர்களும், அறிவினால் மனதை கட்டுப்படுத்தாதவர்களும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எந்த வயதிலும் மரணமேற்பட வாய்ப்பு உள்ளது என்ற அறிவு உள்ளவர்கள் அது தங்கள் வீட்டில் ஏற்பட்டால் ஒடிந்து போய்விட மாட்டார்கள். மற்றவர்கள் மரணமடையும்பொழுது வாழ்வே மாயம் என்று வாயளவில் சொல்லி துக்கம் விசாரித்துவிட்டு மரணம் என்றால் என்ன என்ற அறிவைப்பெற முயற்சி செய்யாதவர்களின் வாழ்வில் துன்பம் நிச்சயம் ஏற்படும்.

வருமுன் காப்பவர்கள் அறிவுடையோர். மனம்போனபோக்கில் வாழ்வதுதான் இன்பம் என்ற கொள்கையுடன் வாழ்பவர்களால் துன்பத்தை தவிர்க்கமுடியாது. ஒவ்வொரு துன்ப அனுபவத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அதே துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஆராய்பவர்கள் மட்டுமே துன்பங்களை முழுமையாக தவிர்க்க தேவையான அறிவைப்பெறுவர்.

பலூன் வைத்து விளையாடுவது இரண்டுவயது சிறுமியாக இல்லாமல் இருபது வயது வாலிபன் என்றால் அவன் இன்னும் வளரவில்லை என்று அர்த்தம். அது போல வாழ்க்கைத்துணைவர் விபத்தில் காலமாகிவிட்டார் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுபவர்கூட அறிவில் குறைபாடுள்ளவரே.

துன்பத்தை அகற்றி இன்பமாக வாழ அறிவை அனைவரும் பயன்படுத்தினாலும் உலகை மாற்றுவதனால் தங்கள் நோக்கத்தை அடைய முடியாது என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே வேதம் தரும் முடிவான அறிவை பெற்று துன்பம் கலவா இன்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப்பெறுவார்கள்.

முடிந்த அளவு போராடியபின்னும் துன்பத்தை தவிர்க்க முடியவில்லை என்ற நிலையில் அதை ஏற்றுக்கொள்ள இதுவும் மாறும்என்ற அறிவு உதவும். மனம் அறிவின் கட்டுப்பாட்டில் இருந்தால் சோகம் அதிக அளவில் பாதிக்காது.

கடந்த கால குறைகளை மறந்துவிட்டு எதிர்கால இன்பத்தை நோக்கி பயணிக்க அறிவாளிகளால் மட்டுமே முடியும். பத்து வருடத்திற்கு முன் அவன் தன்னை முட்டாள் என்று திட்டிவிட்டான் என்று மனதில் நினைத்து இன்று புலம்புபவர்கள் முட்டாள்கள் மட்டுமே. எதிர்கால நிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் நடந்து முடிந்த பழைய நிகழ்வுகளை மாற்றமுடியாது என்றும் அறிவாளிகள் அறிவார்கள்.இன்று தாங்கமுடியாத துன்பமாக தோன்றும் நிகழ்வு பின் ஒருகாலத்தில் மறக்கப்பட்டுவிடும் என்பதையும் இவர்கள் அறிவார்கள்.

எந்த ஒரு நிகழ்வும் நடப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிபவர்கள் அதனால் பாதிக்கப்படுவதில்லை. நியாயமான காரணத்தால்தான் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதை அறிந்துகொண்ட பின் துன்பம் குறைந்துவிடுகிறது. வேதம் தரும் அறிவைப்பெற்றவர்கள் உலகம் என்றால் என்ன, அது எப்படி உருவாக்கப்பட்டது, அது உருவாகியதன் காரணம் என்ன, மனிதன் என்பவன் யார், அவன் வாழ்வின் நோக்கம் என்ன, அவன் எப்படி செயல்படுகிறான், அவன் செயல்பாடுகளுக்கு காரணம் என்ன என்பது போன்ற அனைத்துக்கேள்விகளுக்கும் தெளிவான பதிலை அறிந்திருக்கும் காரணத்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பம் கலவா இன்பத்தை அனுபவிப்பார்கள்.

பற்றுடையோர்கள் மிகப்பெரிய அறிவாளிகளாக இருந்தாலும் அவர்கள் தங்கள் அறிவை உலகம் என்பது யாது என்ற உண்மையை அறிய பயன்படுத்தாமல் அதை தங்கள் விருப்பத்திற்கு மாற்ற பயன்படுத்துவதால் அவர்களால் துன்பத்தை தவிர்க்க முடிவதில்லை. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று எண்ணும்வரை முக்திவிழைவோர்களால் நீடித்த இன்பத்தை பெற முடிவதில்லை. உலகம் மாயை என்ற கைமண்ணளவு அறிவால் கல்லாத உலகை கைக்குள் கொண்டுவந்த முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே வாழ்வின் குறிக்கோளை அடைந்தவர்கள்.

முற்றுணர்ந்தோரின் இன்பம்

அறிவுதான் ஆனந்தத்தின் ஆதாரம். பருகும் பானத்தின் சுவை எப்படியிருக்கும் என்பது அது என்ன பானம் என்ற அறிவை பொருத்தே அமையும். உயர்ந்த வகை மதுபானம் என்று நினைத்து சாதாரண மதுவை குடிப்பவர்களின் மூளைக்குள் நிகழும் மாற்றங்கள் உண்மையிலேயே உயர்ந்தபானத்தை குடிக்கும்பொழுது ஏற்படும் மாற்றங்களை பெரிதும் ஒத்திருக்கும் என்று கண்டுபிடித்து இந்த கருத்தை மருத்துவ ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது.

தன்னை தேரோட்டியின் மகன் என்று நினைத்து வருந்திய கர்ணனின் துன்பம் அவன் அங்கதேசத்தின் அதிபதியானபின் கூட மறையவில்லை. தான் குந்தியின் புத்திரன் என்ற உண்மையை உணர்ந்த பின் அவன் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென்றாலும் கூட அவன் மனதில் ஏற்பட்ட அறிவு மரணத்தையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் அவுக்கு அவனை தயார் செய்துவிட்டது.

உலகம் கொடுமையானது என்றும் அதில் தனக்கு இன்பம் தரும் பொருள்களை போராடி பெற வேண்டும் என்ற அறிவுடன் செயல்படுபவர்கள் பற்றுடையோர்கள். நீதான் அது என்று வேதம் கூறுவதால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பும் முக்திவிழைவோர்கள் தான் தர்மத்தின் அடிப்படையில் செயல்பட்டு புண்ணியத்தை சேர்த்தால் இன்பமாக இருக்கலாம் என்று எதிர்பார்ப்பார்கள். அறிவுருவாகவும் ஆனந்த மயமாகவும் என்றும் இருக்கும் பரமன் நான் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மட்டுமே தங்கள் அனுபவங்கள் அனைத்தையும் இன்பமாக மாற்றி ஏற்றுக்கொள்ளும் அறிவை அடைந்தவர்கள்.

காணுமெடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தனது இயல்பான ஆனந்தமே என்பதை உணர்ந்தவர்கள் இன்ப அனுபவத்தை பெற ஒரு குறிப்பிட்ட பொருளை தேடுவதில்லை. மேலும் இனிப்பை மட்டுமே உண்டால் திகட்டிவிடும் என்பதால் நடுவில் காரத்தையும் சுவைப்பதுபோல் இன்ப அனுபவத்தை மட்டுமே பெற்றால் மனம் மரத்துப்போய்விடும் என்பதால் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய அனைத்து அனுபவங்களையும் இன்பமாக ஏற்க வேதம் தரும் ஞானம் வழிவகுக்கும்

முடிவுரை :

பிராணமயகோசம் தான் செயல்பட மற்ற கோசங்களை சார்ந்து இருப்பதில்லை. மேலும் பிராணன் இருப்பதாலேயே அன்னமயகோசம், மனோன்மயகோசம், விஞ்ஞானமயகோசம் ஆகிய மூன்றும் செயல்படுகின்றன. பிராணனின் செயல்பாடு ஆனந்தமயகோசத்தை பாதிப்பதில்லை என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் நம்மால் ஆனந்தமாக இருக்கமுடிகிறது. விழித்தபின் மற்ற மூன்றுகோசங்களும் ஒருமித்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் ஆனந்தத்தை அனுபவிக்கமுடியும். பிராணன் செயல்படும்வரை நான் என்ற அகம்பாவம் தன்னை செயல் செய்பவனாகவும் பலனை அனுபவிப்பவனாகவும் கருதிக்கொள்வதால் நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் கலந்தே இருக்கிறது. வேதம் படித்து பிராணன் உள்ளிட்ட அனைத்து கோசங்களும் மாயை என்ற அறிவை பெற்றவுடன் உலக அனுபவங்கள் அனைத்தையும் இன்பமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை மனதிற்கு ஏற்படும். இந்த நிலையை அடைந்த முற்றுணர்ந்தோர்கள் தங்களை ஒரு மனிதன் என்று தனிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்பதினால் அவர்களின் பிராணன் ஆத்மாவில் அடங்கிவிடும் என்ற கருத்தை வேதம் கூறுகிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் கிடைத்த அதே இன்பம் விழித்தபின்னும் மாறாமல் இருப்பதை முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே அறிவார்கள். ஏதேனும் ஒரு காரியத்தை செய்தால்தான் இன்ப அனுபவம் கிடைக்கும் என்ற அறிவுடன் தொடர்ந்து செயல்களை செய்பவர்கள் பற்றுடையோர். செயல்கள் எதையும் செய்யாமல் மனதிலிருந்து எண்ணங்களை அகற்றி தான் என்றும் இருக்கும் இன்பவடிவானவன் என்ற உண்மையை உணர்வதால் ஏற்படும் இன்ப அனுபவத்தை நாடுபவன் முக்திவிழைவோன்.

அறிவுக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்வதுடன் அதை பயன்படுத்தி இறுதியான உண்மையை அறிந்துகொள்பவர்களின் பிராணன் ஆத்மாவில் அடங்கிவிடுவதால் அவர்களது வாழ்வில் துன்பம் கலவா இன்பம் நிலைக்கும்.


பயிற்சிக்காக :

1. பிராணன் ஆத்மாவில் அடங்கும் என்பதன் பொருள் என்ன?

2. எந்த மூன்று படிகளை கடந்தபின் பிராணன் ஆத்மாவில் அடங்கும்?

3. இன்பத்தை அனுபவிக்க நமக்கு இருக்கும் மூன்று கருவிகள் யாவை?

4. மூன்று நிலை இன்பங்கள் யாவை?

5. மனிதர்கள் எதன் அடிப்படையில் மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்?

6. மூன்று நிலை இன்பங்களுக்குள் உள்ள வித்தியாசங்களை பட்டியலிடவும்

7. ஒருமித்த செயல்பாடு என்ற தலைப்பின் கீழ் விவரிக்கப்பட்ட கருத்து யாது?

8. இன்ப அனுபவத்தில் புத்தியின் முக்கியத்துவத்தை விளக்கவும்.

9. முற்றுணர்ந்தோர் பெறும் இன்பத்தை விளக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1. மனதை கட்டுப்படுத்தி அறிவுபூர்வமாக வாழும் முதல் தரமான மனிதர்களில் பலர் வாழ்வின் இறுதிவரை பற்றுடையோர்களாகவே வாழ்வதன் காரணம் என்ன?

2. அரபு நாடுகளின் வெப்பத்தை பொருட்படுத்தாது அங்கு உழைத்து பணம் சேர்க்கும் மனிதர்கள் எந்த நிலையில் இன்பத்தை தேடுபவர்கள்?

3. மனித வெடிகுண்டாக சிதற தயாராக இருக்கும் தீவிரவாதியின் மன நிலைக்கு என்ன காரணம்?

4. மாறும் உலக அறிவை ஒப்பிடும்பொழுது மாறாத வேதம் தரும் அறிவு உயர்ந்தது மற்றும் இறுதியானது என்றும் கூறப்படுவதன் காரணத்தை ஆராய்க.