பாடம் 171:
பாதை ஒன்று பயணங்கள் வேறு
பாடல்
503
(IV.2.7)
பிறப்பில் ஆரம்பித்து
இறப்பில் முடியும் வாழ்க்கைப்பாதை என்பது அனைத்து மனிதர்களுக்கும் ஒன்றுதான் என்றாலும்
அந்தப்பாதையில் பயணம் செய்யும் விதம் அவரவரின் அறிவைப்பொறுத்து வேறுபடும் என்று விளக்கியபின்
மற்றவர்களை ஒப்பிடும்பொழுது மிக உயர்ந்த ஞானத்தைப்பெற்றவர்களின் வாழ்க்கைப்பயணம் எந்த
விதத்தில் உயர்ந்தது என்று இந்த பாடம் ஆராய்கிறது.
பொருள்களை அனுபவிப்பதன்
மூலம் இன்பத்தை பெறுகிறேன் என்ற அறிவை உடைய பற்றுடையோர்களின் அனுபவம் உலகம் தொடர்ந்து
மாறுவதால் துன்பம் கலந்தே இருக்கும். அனுபவிப்பவன்,
அனுபவிக்கப்படும் பொருள், அனுபவம் ஆகிய மூன்றும்
ஒன்றான இறைவனின் திருவிளையாடல் என்பதை அறிந்த முக்திவிழைவோர்கள், வாழ்வில் ஏற்படும் துன்பங்களை இறைவனது பிரசாதமாக ஏற்றுக்கொள்வர். மாறும் எண்ணங்களே அனுபவங்கள் என்பதால் அவற்றை இன்பம் துன்பம் என பிரிக்கமுடியாது
என்று அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள்.
எவ்வித காரணமும்
இல்லாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன். ஆனந்தமயமானவன்
என்பதால் மனம் தொடர்ந்து இன்ப அனுபவங்களில் மட்டுமே மூழ்கி இருக்கும் என்பது தவறான
எதிர்பார்ப்பு. மேலும் அது சாத்தியமும் இல்லை. காபி குடிக்கும்பொழுது இன்ப அனுபவம் ஏற்படவேண்டுமென்றால் அதை குடிக்க வேண்டும்
என்ற ஆவல் இருக்கவேண்டும். காபி குடித்தாலும் குடிக்காவிட்டாலும் ஒன்றுதான் என்று பற்றற்று இருப்பவர்களுக்கு
அது சுவைக்காது. உடனே காபி கிடைக்காவிட்டால் உயிரே போய்விடும்
என்று துடிப்பவர்களுக்குமட்டும்தான் குடிக்கும்பொழுது அது தேவாமிர்தமாக இனிக்கும்.
காபி குடிக்காவிட்டால் உயிர் போய்விடாது. சிறிது
நேரம் எந்த வேலையும் ஓடாது. பிறகு பசி எடுக்கும்பொழுது காபி வேண்டும்
என்ற எண்ணம் காணாமல் போய்விடும். காபி என்ற எண்ணம் மனதில் தோன்றுவதும்
ஏதோ ஒரு வழியில் அது மறைவதும்தான் அனுபவம்.
ஆக காபியை சுவைக்கும்பொழுது
இன்ப அனுபவம் ஏற்படவேண்டுமென்றால் காபி கிடைக்க வேண்டுமென்ற ஆவல் மற்றும் அது கிடைக்காவிட்டால்
ஏற்படும் ஏமாற்றம் ஆகிய துன்பங்களுடன் இரண்டற கலந்தே அது ஏற்படும்.
பூவா தலையா என்று காசை சுண்டினால் எது விழும் என்பதை உறுதியாக சொல்ல
முடியாது என்றாலும் இரண்டில் ஏதாவது ஒன்று விழும் என்பது நிச்சயம். மேலும் பூ தலை ஆகிய இரண்டும் மாறிமாறிவிழும் என்பதும் உறுதி. பூ விழுகிறதா அல்லது தலை விழுகிறதா என்பதை காசை சுண்டுபவனால் தீர்மானிக்க முடியாது.
மனிதர்கள் அனைவருக்கும்
பொதுவான வாழ்க்கைப்பாதை ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாகவே இருக்குமென்றாலும் அந்தப்பாதையில்
அமையும் பயணம் அவரவர் அறிவை பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பின்வரும் கருத்துக்கள்
விளக்குகின்றன.
முதல் கருத்து:
இன்ப அனுபவம்
காபிதான் இன்பத்தை
கொடுக்கிறது என்று நினைக்கும் பற்றுடையோர்கள் அது கிடைக்காவிட்டால் துன்பப்படுவார்கள்.
காபியில் இன்பம் இல்லை என்று அறிந்த முக்திவிழைவோர்கள் காபி குடிக்கும்
பழக்கத்தை விட்டுவிட்டு துன்பத்துடன் இன்பத்தையும் தொலைத்துவிடுவார்கள். இன்ப அனுபவத்தைப்பெற காபி ஒரு அவசியமான பொருள் என்பதை அறியும் முற்றுணர்ந்தோர்கள்
அது கிடைக்குமா என்ற ஆவல், கிடைக்காவிட்டால் ஏற்படும் ஏமாற்றம்,
கிடைத்துவிட்டால் ஏற்படும் இனிமை ஆகிய அனைத்து அனுபவங்களையும் சரிசமமாக
அனுபவிப்பார்கள்.
இரண்டாம் கருத்து:
அனுபவத்தின் அளவு
அனுபவத்தின்
அளவு வயதைபொறுத்து அதிகரிக்கும். அனுபவங்கள் வாழ்வு
முழுவதும் சமஅளவில் அனைவருக்கும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.
பந்தின் பின் ஓடும் விளையாட்டுவீரனை ஆவலுடன் பார்க்கும் கால்பந்தாட்டரசிகன்
பெறுவதும் அனுபவம்தான். பூச்சியின் பின் ஓடும் பல்லியை பார்த்தபடி
வீட்டில் அமர்ந்திருக்கும் ஏழை மனிதன் பெறுவதும் அனுபவம்தான்.
மூன்றாம் கருத்து:
அனுபவத்தின் ஆழம்
அனுபவத்தின்
அளவு ஒன்றாக இருந்தாலும் அனுபவத்தின் ஆழம் வேறுபடலாம்.
அதிக ஆழமான இன்ப அனுபவம் அதிக அழமான துன்ப அனுபவத்துடன் சேர்ந்தே இருக்கும்.
கிடைத்ததில் திருப்தி அடையாமல் உலகின் பின் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும்
பற்றுடையோர்களின் அனுபவங்கள் உலகில் இன்பம் இல்லை என்று ஒன்றும் செய்யாமல் ஒடுங்கியிருக்கும்
முக்திவிழைவோர்களின் அனுபவங்களைவிட ஆழமானது. ஆனந்தமயமான நான்
அனுபவங்களை பெறுவதற்காக அகிலத்தை மாயாசக்தியால் உருவாக்கியுள்ளேன் என்பதை அறியும் முற்றுணர்ந்தோர்கள்
தங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் அனைத்தையும் ஆழமாக அனுபவிப்பர்.
நான்காம் கருத்து:
துன்பத்தின் அளவு
அளவில்லா இன்பத்தையும்
அதனுடன் ஆழமான துன்பங்களையும் அனுபவிக்கும் பற்றுடையோரில் சிலர் இன்பத்தை தேடுவதனால்தான்
துன்பம் ஏற்படுகிறது என்பதை அறிந்து முக்திவிழைவோர்களாக மாறி துன்பத்தை தவிர்க்க உலகில்
இன்பத்தை தேடக்கூடாது
என்ற தவறான முடிவெடுத்துவிடுவார்கள். இதனால்
அனுபவங்களின் ஆழம் குறையுமே தவிர துன்பத்தின் அளவு குறைந்துவிடாது. ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தால் ஏற்படும் இன்ப அனுபவம் ஒன்றுமே செய்யாமல்
வாழ்வை வீணடிக்கும் துன்ப அனுபவத்துடன் சமஅளவுடன் கலந்தே இருக்கும். துன்பத்தை இன்ப அனுபவத்தின் ஒருபகுதியாக அறிபவர்களின் வாழ்வு முழுவதும் இனிமையான
அனுபவங்களாலேயே நிறைந்திருக்கும். துன்பம் என்பதே இருக்காது.
கதாநாயகி அழும்பொழுது தாங்களும் அழுதிருந்தாலும் ‘திரைப்படம் மிக நன்றாக இருந்தது’ என்று தங்கள் அனுபவம்
முழுவதையும் போற்றுவார்களே தவிர தாங்கள் கண்ணீர்விட்ட கட்டங்களை துன்பமானவை என்று தனிப்படுத்தி
வர்ணிக்கமாட்டார்கள். அலைபாயும் எண்ணங்களின் தொகுப்பே அனுபவங்கள்
என்றும் வேகமான அலைபாய்தலே ஆழமான அனுபவங்கள் என்றும் அறிந்த முற்றுணர்ந்தோர்கள் அனைத்திற்கும்
சாட்சியாக ஆனந்தமாக இருப்பார்கள்.
ஐந்தாம் கருத்து:
செயல்களை செய்பவன்
செயல்களை சரியாக
செய்யவில்லை என்ற குற்ற உணர்வு பற்றுடையோர்களை மட்டுமே வருத்தும்.
முட்டாள்தனமாக நடந்துகொண்டேன் என்பதையும் ஒரு இன்ப அனுபவமாக சொல்லி சிரிக்கும்
பக்குவம் நான் செயல்களை செய்பவன் அல்ல என்பதை தெளிவாக அறிந்த முற்றுணர்ந்தோர்களிடம்
மட்டுமே இருக்கும்.
சூழ்நிலை மட்டுமின்றி
அதை தான் எவ்விதத்தில் எதிர்கொள்கிறேன் என்பதும் தன் வசத்தில் இல்லை என்று அறிந்தவர்கள்
தன் உடல் மற்றும் மனம் ஆகியவை குறையுடன் கூடியவை என்றும் அறிவார்கள்.
இவற்றின் செயல்பாடு தொடர்ந்த மாறுதல்களின் ஒருபகுதி என்பதால்
‘நான் இதை செய்தேன்’ என்பது ஒரு தோற்றம் மட்டுமே.
எனவே ஒரு செயலை நன்றாக செய்தேன் அல்லது சொதப்பிவிட்டேன் போன்ற இருவகை
எண்ணங்களும் ஒரே மாதிரி இன்பத்தை மட்டுமே கொடுக்கும்.
ஆறாம் கருத்து:
பலன்களை அனுபவிப்பவன்
எடுத்த காரியம்
வெற்றியில் முடியவேண்டும் என்று அனைவருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு முற்றுணர்ந்தோர்களுக்கும்
இருக்கும் என்றாலும் ஒருவேளை அது தோல்வியில் முடிந்தால் ஏற்படும் ஏமாற்றம் அவர்களுக்கு
துன்பத்தை கொடுக்காது. வெற்றி தோல்வி என்பது
பூ தலை என்பதுபோல் மாறிமாறித்தான் வரும் என்பதை அவர்கள் தெளிவாக அறிவதால் அவர்கள் தோல்வியில்
துவளுவதில்லை. தான் வேறு தன் மனம் வேறு என்பதை தெளிவாக அறிந்த
காரணத்தால் அனுபவங்களை பெறும் ஜடமான மனதின் அலைபாய்தல் அவர்களை பாதிப்பதில்லை.
ஏழாம் கருத்து:அனுபவத்தின் காரணம்
செயல்கள் செய்வதால்
பலன் கிடைக்கிறது என்ற தவறான எண்ணம் ஞானிக்கு இல்லை என்பதால் வெற்றி தோல்விக்கு காரணங்களை
ஆராயமாட்டான். பூவா தலையா என்பதற்கு எவ்வித காரணமும்
கிடையாது. பத்து தரம் தலை விழுந்த காரணத்தால் அடுத்தமுறை பூதான்
விழும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
தனது திறமை,
அதை பயன்படுத்தி தான் செயல் செய்த விதம், தன்னைச்சுற்றி
இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் சூழ்நிலைகள் ஆகியவைதான் தன் செயலின் முடிவை
தீர்மானம் செய்கின்றன என்று நினைப்பவர்கள் தோல்விக்கு காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சி செய்து
மேலதிகமாக துன்பமடைவர். ப்ராரப்த கர்மம்தான் துன்பங்களுக்கு காரணம்
என்ற விளக்கம் துன்பங்களின் ஆழத்தை குறைக்கலாமேதவிர அளவை குறைக்காது.
அனுபவம் ஏற்படுவதற்கு
ஒரே காரணம் தனது மாயா சக்தியால் தான் படைத்த இந்த மாறும் உலகம் என்பதை அறிந்தவர்கள்
வெற்றி தோல்வி என்பவை பூ தலை போன்று ஒரே அனுபவத்தின் இருபக்கங்கள் என்பதையும் அறிவர்.
உலகை துறந்து காட்டில் தவம் செய்தாலும் இன்ப துன்பங்கள் கலந்த அனுபவங்களை
பெறுவதை தவிர்க்க முடியாது. அனுபவங்கள் வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து
ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும் என்றறிபவர்கள் துன்பபடமாட்டார்கள்.
வாழ்க்கைப்பயணத்தில்
அறிவின் பங்கு
வாகனத்தை செலுத்தும்
ஓட்டுனருக்கு வாகனம் செயல்படும் விதம் மற்றும் செல்ல வேண்டிய பாதையை பற்றிய அறிவு ஆகிய
இரண்டும் தெரிந்திருக்க வேண்டும். புத்தி என்ற ஓட்டுனருக்கு
தான் செலுத்தும் மனம் என்ற வாகனத்தை பற்றிய அறிவு மற்றும் உலகம் என்ற பாதையின் அறிவு
ஆகிய இரண்டும் அவசியம். வாழ்க்கை என்ற பயணத்தின் தரம் இந்த இரு
அறிவுகளை பொறுத்துதான் அமையும்.
பற்றுடையோர்கள்
உலகை பற்றிய அறிவும் இல்லாமல் மனதை பற்றிய அறிவும் இல்லாமல் செயல்படுவதால் அவர்களின்
வாழ்வு துன்பமயமானதாகவே இருக்கும். உலகை
மட்டும் புரிந்துகொண்டு மனதை புரிந்துகொள்ளாத முக்திவிழைவோர்கள் என்றேனும் ஒரு நாள்
துன்பம் முழுவதும் அகன்றுவிடும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்வர். மாறும் உலகத்தின் மாற்றத்திற்கேற்றவாறு மனமும் மாறும் என்பதை புரிந்து கொண்ட
முற்றுணர்ந்தோர்களின் வாழ்க்கைப்பயணம் மட்டுமே துன்பம் கலவா இன்பமாக அமையும்.
எனவே உலகம் என்ற பாதை அனைவருக்கும் பொதுவானது என்றாலும் இவர்களது வாழ்க்கை
பயணம் மட்டும் சிறந்திருக்கும்.
முற்றுணர்ந்தோர்களின்
வாழ்க்கை பயணம்
வாழ்வில் இன்பமும்
துன்பமும் கலந்துதான் இருக்கும் என்ற அறிவுடன் செயல் படும் பற்றுடையோர் இன்பத்தையும்
துன்பத்தையும் தனித்தனியே அனுபவிப்பர். ஆசையே
துன்பத்திற்கு காரணம் என்றறிந்த முக்திவிழைவோர்கள் ஆசைகளை குறைத்து துன்பங்களை தவிர்ப்பார்கள்.
தனது உண்மை உருவான ஆனந்தத்தை அனுபவிப்பதற்குத்தான் இந்த மனித உடலும்
மனமும் தனக்கு கிடைத்துள்ளது என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் உலகப்பாதையில் எதிர்கொள்ளும்
மேடு பள்ளம் ஆகிய இரண்டையும் துன்பம் கலவா இன்பத்துடன் அனுபவிப்பார்கள்.
முதல் சிறப்பு:
சாதனைத்திறன்
தோல்வி என்ற
ஒன்று இருந்தால் மட்டுமே வெற்றி என்ற சொல்லுக்கு பொருள் இருக்கும்.
இவையிரண்டின் இணைபிரியா சுழற்சி நடனம்தான் வாழ்க்கை என்று அறியும் முற்றுணர்ந்தோர்கள்
சாதனைகளை செய்யும் திறன் உடையவர்கள்.
பந்தை மெதுவாக
தரையில் போட்டுவிட்டு அது மிக அதிக உயரம் எம்பி குதிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.
பெரிய தோல்விக்கு தயாராக இருந்தால் மட்டுமே சாதனைகளை செய்யமுடியும்.
வாழ்க்கைப்பயணத்தில் தங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகளை முற்றுணர்ந்தோர்
முழுமையாக பயன்படுத்தி யாராலும் செய்ய முடியாது என ஒதுக்கப்பட்ட நற்காரியங்களை மேற்கொள்வர்.
இரண்டாம் சிறப்பு:
சமூக நலன்
இவ்வுலகம் முழுவதும்
தன்னை ஆதாரமாகக்கொண்டு உருவானது என்ற தெளிவு முற்றுணர்ந்தோருக்கு இருப்பதால் மற்றவர்கள்
இன்பமாக வாழ தேவையான உதவிகளை அவர்கள் சுயநலகலப்பின்றி செய்வர்.
இன்பமாக இருக்க இதைத்தான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத காரணத்தால்
கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில்
மக்களுக்கு உதவும் பணிகளை செய்வதன் மூலம் கிடைக்கும் ஆழமான அனுபவங்களை இவர்கள் இன்பமாக
அனுபவிப்பார்கள்.
மூன்றாம் சிறப்பு:
முழு ஈடுபாடுடன் பலனில் பற்றில்லாத செயல்
வேண்டிய பொருள்
கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளை செய்பவர் பற்றுடையோர்.
முக்தியடைய தேவையான மனப்பக்குவத்தை பெற பலனில் பற்றில்லாதது போல் செயல்களை
செய்பவர் முக்திவிழைவோர். செயல் செய்வதை இன்ப அனுபவமாக அறியும்
முற்றுணர்ந்தோர்களால் மட்டுமே செயல்களை பற்றற்று அதே சமயம் ஆழ்ந்த ஈடுபாடுடன் செய்யமுடியும்.
பந்தையகுதிரைமீது
பத்தாயிரம் ரூபாய் கட்டி கமான் கமான் என்று ஆவேசத்துடன் கத்துபவர் ஏழையாயிருக்க வேண்டும்
என்ற அவசியமில்லை. பணம் பற்றிய கவலை சிறிதுமில்லாத
செல்வந்தராக கூட அவர் இருக்கலாம். தோல்வியடைய வாய்ப்பேயில்லை
என்ற நிலையை அவர் விரும்பமாட்டார். வெற்றி கிடைக்குமா கிடைக்காதா
என்ற திகில் வெற்றிபெறுவதைவிட முக்கியமானது. அதுபோல செய்யும்
செயல்கள் அனைத்தையும் மனம் ஒன்றி சிறப்பாக செய்வது அதன் மூலம் கிடைக்கும் பலனைவிட முக்கியமானது
என்பதை முற்றுணர்ந்தோர் மட்டுமே உணர்வர். எனவே இவர்களால் ஈடுபாடுடன்
பற்றற்று செயல்படமுடியும்.
பலனில் பற்று
இல்லாத காரணத்தால் மன அழுத்தம், சோர்வு,
எரிச்சல், கோபம், பயம் போன்ற
உணர்வுகள் இவர்கள் மனதை வாட்டுவதில்லை. மேலும் எடுத்த காரியம்
தீவிர முயற்சிக்குப்பின்னும் தோல்வியடைந்துவிட்டால் மற்றவர்கள் தங்களைப்பற்றி என்ன
நினைப்பார்கள் என்ற அச்சமும் இவர்களுக்கு இருக்காது.
இகழ்ச்சி,
அவதூறு, சமூக புறக்கணிப்பு போன்ற கொடுமைகளுக்கு
இவர்கள் ஆளாக நேரிட்டாலும் அவை யாவும் இறைவனை சேர்ந்தவை என்ற அறிவு ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்ற வாக்கியத்தின் உண்மையான
பொருளை அறிந்த முற்றுணர்ந்தோர்களுக்கு இருக்கும். எனவே செய்யும்
காரியங்களில் ஆழமாக ஈடுபட்டு அதே வேளையில் பலனில் சிறிதுகூட பற்றில்லாமல் சமூகநலனுக்காக
சாதனைகளை படைக்க இவர்கள் தயங்குவதில்லை.
நான்காம் சிறப்பு:
சிறப்பான ஆளுமை
ஞானம் பெற்றவுடன்
தோலின் நிறம் மாறிவிடாது. அதுபோல் மாறும் மனதின்
ஆளுமையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் ஞானம் ஏற்படுத்தாது. சிறுவன் வளரும்பொழுது அவனது எலும்பின் அளவும் உறுதியும் அதிகரிப்பதுபோல் அனைத்து
மனிதர்களின் மனதின் தன்மையும் உறுதியும் அவரவருக்கு கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையில்
அதிகமாகிவரும். வேதம் படிப்பது, தியானம்
செய்வது போன்ற அனுபவங்கள் மனதின் வளர்ச்சிக்கு காரணமாக அமையுமே தவிர அதன் ஆளுமையை மாற்றிவிடாது.
உடல், மனம் ஆகியவை ஆளுக்கு ஆள் மாறுபடுவது ஞானம்
பெற்றபின்னும் தொடரும். ஆயினும் ஞானிகளின் ஆளுமை சிறந்தது என
கூறப்படுவதற்கு பின்வரும் தன்மைகள் காரணம்.
கோபமின்மை:
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்ற குறள்
இந்த கருத்தை விளக்குகிறது. தன்னுடன் உறவாடும் அனைவரும் தனக்கு
அனுபவங்களை கொடுக்க தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்கள் யார்மீதும்
நீடித்த கோபம் கொள்வதில்லை.
பொறாமையின்மை:
தான் விரும்பும் ஒன்று தனக்கு கிடைத்ததை விட சிறிது அதிகமாக தனக்கு தெரிந்தவருக்கு
கிடைத்தது என்ற செய்தியை அறியும்பொழுது ஏற்படும் உணர்வு பொறாமை. பொருள்களினால் நீடித்த இன்ப அனுபவத்தை
கொடுக்க முடியாது என்பதை கிடைத்தற்கரிய ஞானத்தை பெற்றவர்கள் அறிவர். எனவே அவர்கள் இந்த உணர்வையும் ஆனந்தமாக அனுபவிப்பர்.
பயமின்மை:
பயணங்கள் முடிவதில்லை என்பதையும் பயணம்தான் குறிக்கோள் என்பதையும் அறிந்தவர்கள்
எதிர்காலம் என்ற கற்பனைக்கு பயப்படுவதில்லை.
திருப்தி:
ஏதோ ஒரு குறை இருக்கிறது என்ற நிலை அனைத்து மக்களையும் வாட்டிக்கொண்டேயிருக்கும்.
தான் பூரணமானவன் என்று அறிந்தவர்கள் இன்ப அனுபவங்களுக்காக எதையும் சார்ந்திருக்கமாட்டார்கள்.
முடிவுரை
:
உலகம்
நமது உல்லாசத்திற்காக உருவாக்கப்பட்டது. அதில் துன்பம் இருப்பதாக நினைப்பதற்கு நமது அறிவின்மை மட்டுமே காரணம்.
இரண்டு ரூபாய் பேனா தொலைந்துவிட்டது என்று இருபது வயது வாலிபன் அழுதால்
அவன் மனவளர்ச்சி குன்றியவன் என்று பட்டம் கொடுப்பவர்கள் தாங்கள் துன்பபடும்பொழுது தங்கள்
அறிவு போதுமானதா என்று சுயசோதனை செய்துகொள்வதில்லை. மேலும் வாழ்வு
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் என்று தவறாக முடிவெடுத்துவிட்டு துன்ப கலப்பில்லாமல்
எப்பொழுதும் இன்பமாக வாழ்வது சாத்தியம் என்று வேதத்தை ஆதாரமாக காட்டி யாரேனும் கூறினால்
அவர் ஏதோ உளருகிறார் என்றும் தீர்மானித்துவிடுவார்கள். இவர்கள்
வாழ்வில் துன்பம்தான் அதிகமிருக்கும்.
அறிவை
வளர்த்து அதன் மூலம் பொருளாதார வசதிகளை அதிகபடுத்திக்கொண்ட பின் கூட துன்பங்களை தவிர்க்க
முடியவில்லை என்பதை உணர்ந்து தங்கள் அறிவை வேதத்தை படிப்பதன் மூலம் அதிகபடுத்திக்கொள்பவர்களால்
மட்டுமே தங்கள் வாழ்க்கைப்பயணம் முழுவதையும் இன்பமாக அமைத்துக்கொள்ள முடியும்.
பயிற்சிக்காக
:
1. அறிவின்
திறத்தைப்பொறுத்துதான் வாழ்வின் தரம் அமையும் என்பதை விளக்க கொடுக்கப்பட்ட ஏழு கருத்துக்கள்
யாவை?
2. வாழ்க்கைப்பயணத்தில்
அறிவின் பங்கு என்ன?
3.முற்றுணர்ந்தோர்களின்
வாழ்க்கைப்பயணத்தின் நான்கு சிறப்புகள் யாவை?
சுயசிந்தனைக்காக
:
1. தோல்வி வெற்றியின்
படிக்கட்டு என்ற வர்ணனையை இந்த பாடத்தில் விளக்கப்பட்ட சுழற்சி நடனத்துடன் ஒப்பிட்டு
ஆராய்க.
2. எல்லாப்புகழும்
இறைவனுக்கே என்பதன் பொருளை ஆராய்க.