Wednesday, January 5, 2011

Lesson 145: Knowledge for all (Brahma Sutra 3.4.36-39)

பாடம் 145: அனைவருக்கும் ஞானம்
பாடல் 461- 464 (III.4.36-39)

மக்களின் மனபக்குவம், அனுபவ அறிவு மற்றும் அறியும் திறன் ஆகியவை வேறுபடுவதால் ஒவ்வொருவரும் வெவ்வேறு எண்ண உலகில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் ஞானம் பொதுவானது என்றும் பல்வேறு நிலையில் இருக்கும் மனிதர்கள் எவ்வாறு படிப்படியாக நான் பரமன் என்ற இந்த ஞானத்தை அடைகிறார்கள் என்றும் இந்த பாடம் விளக்குகிறது.

பத்தாம் மனிதனின் கதை – பாகம் 1

பயணத்தின் நடுவே ஆற்றை கடந்த பத்து மனிதர்களில் ஒருவன் அனைவரும் கரையேறிவிட்டார்களா என்பதை சரிபார்க்க ஒன்று, இரண்டு, மூன்று என்று வாய்விட்டு எல்லோரையும் எண்ணினான். தன்னை எண்ணவிட்டுவிட்டதால் மொத்த எண்ணிக்கை ஒன்பதுதான் வந்தது. உடனே அனைவரும் துக்கம் தொண்டையை அடைக்க பத்தாவது மனிதனை ஆற்றில் தேட ஆரம்பித்தார்கள். அவர்கள் முயற்சி தோல்வியடையவே ஆற்றங்கரையில் அழுதுகொண்டு அமர்ந்திருக்கும்பொழுது அவ்வழியே வந்த ஒரு ஞானி அவர்களின் துக்கத்தின் காரணத்தை கேட்டார். நடந்தது புரிந்தவுடன் அவர் அவர்களது துக்கத்தை போக்க தன்னால் உதவி செய்ய முடியும் என்றார்.

முதலாம் மனிதன் ‘நாங்கள் அனைவரும் மிகவும் வருந்தி தேடியும் அவன் கிடைக்கவில்லை. இனிமேல் கிடைப்பான் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டியது நம் தலையெழுத்து. அதை மாற்றி என்றும் இன்பமுடன் வாழ முடியும் என்பது பகற்கனவு. எனவே உங்களால் எங்களுக்கு உதவ முடியாது. நன்றி, நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டு சோகத்தில் ஆழ்ந்தான்.

இரண்டாம் மனிதன் ‘அதெப்படி உங்களால் எங்களின் துயரத்தை போக்க முடியும்? நாங்கள் அனைவரும் இவ்வளவு காலம் முழுமுயற்சி செய்து தேடியும் காணாமல் போனவன் கிடைக்கவில்லை. உங்களால் மட்டும் எப்படி அவனை கண்டுபிடித்து கொடுக்க முடியும். இது போல உங்கள் வாழ்வில் ஏதாவது நிகழ்ந்தால்தான் உங்களுக்கு எங்கள் நிலமை புரியும். எல்லாம் தெரிந்த மேதையை போல் பேசி எங்கள் சோகத்தை அதிகப்படுத்தாதீர்கள். முதலில் இந்த இடத்தை விட்டு போங்கள். அதுவே நீங்கள் செய்யக்கூடிய உதவி’ என்று கோபத்துடன் கத்தினான்.

ஞானி இவர்களுக்கு உதவ இயலாது என்று அங்கிருந்து நகர ஆரம்பித்தார்.

மூன்றாம் மனிதன் சிறிது நம்பிக்கையுடன் அவரை நிறுத்தி ‘காணாமல் போன மனிதனை உண்மையிலேயே உங்களால் தேடிக்கண்டுபிடிக்க முடியுமா?’ என்று வினவினான். அதற்கு அவர் ஆம் என்று தலையாட்டினார். அப்படியென்றால் உடனே ஆற்றில் குதித்து அவனை மீட்டுக்கொடுங்கள் என்ற அவனது வேண்டுதலை ஏற்காமல் தண்ணீரில் இறங்காமலேயே காணாமல் போனவனை திரும்ப பெற முடியும் என்று அவர் பதிலளித்தார். ‘அது முடியாது. ஏனெனில் அவன் ஆற்றில்தான் தொலைந்து போனான் என்று எங்களுக்கு தெளிவாகத்தெரியும்’ என்று கூறி முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.  

நான்காம் மனிதன் தங்கள் சுயமுயற்சியால் இனி ஏதும் செய்ய இயலாது என்றும்  அந்த ஞானியின் வார்த்தைகளை நம்புவதைத்தவிர தங்கள் சோகத்தை போக்க வேறு வழியில்லை என்றும் உணர்ந்துகொண்டு அவரைப்பார்த்து ‘நீங்கள் உங்கள் விருப்பபடியே ஏதேனும் செய்து காணாமல் போனவனை கண்டுபிடித்து கொடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். உடனே ஞானி அங்கிருந்த அனைவரையும் பார்வையிட்டு பத்தாவது மனிதன் இங்கேதான் இருக்கிறான். யாரும் தொலைந்து போகவில்லை என்று பதிலளித்தார். இதைக்கேட்ட நான்காம் மனிதன் மிகவும் மகிழ்ந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.

ஐந்தாம் மனிதன் ஞானியின் பதிலை முதலில் நம்பவில்லை. ‘பத்தாவது மனிதன் தொலைந்து போய்விட்டான் என்று எங்களுக்கு தெளிவாகத்தெரியும்பொழுது அவன் இங்குதான் இருக்கிறான் என்று நீங்கள் எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? தயவு செய்து அந்த பத்தாவது மனிதனை எங்களுக்கு காட்டிக்கொடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். உடனே தன் விரலால் ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்டி ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணி பத்து மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நிரூபித்தார். இதைக்கேட்டபின் ஐந்தாம் மனிதன் மிகவும் மகிழ்ந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.

ஆறாம் மனிதன் அவ்வளவு எளிதாக ஞானியை நம்ப மறுத்து ‘நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள். பத்து மனிதர்களை நீங்கள் காண்பதாக கூறுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லையே’ என்றான். உடனே ஞானி இப்பொழுது நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஒருமுறை அடிக்கிறேன். நீங்கள் கத்துங்கள். எத்தனை முறை சப்தம் கேட்கிறது என்பதை மனதுக்குள் கூட்டிப்பார்த்தால் பத்து மனிதரும் இங்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்’ என்றார். இதை செய்ததும் அவன் திருப்தியடைந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.

ஏழாம் மனிதன் ‘இங்கு பத்து மனிதர்கள் இருப்பதாக நிரூபித்துவிட்டீர்கள். ஆனால் யார் அந்த காணாமல் போன பத்தாம் மனிதன்’ என்று ஞானியிடம் கேட்க அவர் ‘நீதான் அது’ என்று பதில் அளித்தார். அவன் முகம் மலர்ந்து ‘எனக்கு புரிந்து விட்டது. நான்தான் பத்தாவது மனிதன்’ என்று கூறி அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.

எட்டாம் மனிதன் பத்தாவது மனிதன் கிடைத்துவிட்டானா என்பதை தன் சொந்த முயற்சியால் சரிபார்க்க ஒவ்வொருவரை சுட்டிக்காட்டி எண்ணும்பொழுது ஏழாவது மனிதன் ‘என்னை ஏன் ஏழாவதாக எண்ணுகிறாய், நான் பத்தாவது மனிதன்’ என்று மறுத்தான். யார் உண்மையில் பத்தாவது மனிதன் என்ற விவாதம் தொடங்கியது. உடனே இரண்டாம் மனிதன் ‘நான் ஏற்கனவே இந்த மனிதரால் நமக்கு உதவி செய்யமுடியாது என்று கூறினேன். இவர் ஏதோ மந்திரம் செய்து பத்தாவது மனிதன் கிடைத்துவிட்டான் என்று நம்மை நம்பவைக்க முயலுகிறார். இவர் பேச்சை கேட்காதீர்கள்’ என்றான். உடனே முதலாம் மனிதனும் ‘ஆம் சரிதான். வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை’ என்றான்.

ஒன்பதாம் மனிதன் இதையெல்லாம் கவனித்து ஞானியிடம் ‘இவர்கள் சொல்வது சரி. நீங்கள் யாரையும் தேடி கண்டுபிடிக்கவில்லை. வெறும் வார்த்தை ஜாலத்தால் எங்களின் துன்பத்தை போக்கிவிடலாம் என்று முயலுகிறீர்கள். உங்கள் பேச்சை கேட்காமலேயே பயணத்தை தொடர்ந்திருந்தால் கூட நாங்கள் அனைவரும், ஒன்பதோ பத்தோ, ஊர் போய் சேர்ந்திருப்போம். எனவே உங்களுடன் பேசி மேலும் நேரத்தை வீணடிக்காமல் பயணத்தை தொடர்வதுதான் சரி’ என்றவுடன் அனைவரும் அவனுடன் சேர்ந்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

பத்தாம் மனிதன் ஞானியின் அருகில் சென்று ‘மிக்க வந்தனம் ஐயா. உங்கள் கருணையால் என் அறியாமை நீங்கியது. ஒன்பது மனிதர்களை எண்ணியபின் பத்தாவது மனிதன் நான் என்பதை உணராததால் ஏற்பட்ட மிகப்பெரிய துன்பத்தை நீங்கள் தீர்த்துவைத்தீர்கள். உங்கள் உபதேசம் இல்லாமல் இந்த உண்மையை என் சொந்த முயற்சியால் அறிந்துகொண்டிருக்க முடியாது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தக்க சமயம் வரும்பொழுது நான் இதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முயலுகிறேன்’ என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றான்.

பத்து மனிதர்களில் ஒருவனின் அறியாமையாவது தன்னால் மாற்ற முடிந்ததே என்ற மகிழ்வோ எஞ்சிய ஒன்பது மனிதர்களுக்கு தன்னால் உதவ முடியவில்லையே என்ற வருத்தமோ இல்லாமல் அந்த ஞானி தன் வழியில் செல்ல ஆரம்பித்தார். ஏனெனில் பத்துமனிதர்களில் இவன் ஒருவனுக்குத்தான் தான் சொல்லிகொடுப்பதை கேட்டு புரிந்து கொள்ளும் தகுதி இருந்திருக்கிறது என்றும் தான் அவனை சந்திக்காமல் இருந்திருந்தாலும் அவன் வேறொரு ஆசிரியர் மூலம் இதே ஞானத்தை பெற்றிருப்பான் என்றும் அவருக்குத்தெரியும்.

ஏழு நிலைகள்

சம்சாரத்தில் உழன்று துன்பபட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் எவ்வாறு படிப்படியாக ஏழு நிலைகளை கடந்து நிரந்தர இன்ப நிலையை அடைகிறார்கள் என்பதை மேலே விவரிக்கப்பட்ட பத்தாம் மனிதனின் கதையை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

முதலாம் நிலை: அறியாமை

ஒன்றுமே அறியவில்லை என்றால் துன்பம் இருக்காது. எண்ணிக்கை என்பதே என்ன என்று தெரியாதிருந்தால் ஒன்பது மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்க முடியாது. எண்ணிக்கை தெரிந்து அதே நேரத்தில் தன்னை சேர்த்து கணக்கிட வேண்டும் என்ற அறிவு இல்லாமல் இருந்ததுதான் அவர்களின் நிலைக்கு காரணம். முழு அறிவு அல்லது முழுமையான அறியாமை இவ்விரண்டும் இல்லாமல் அரைகுறை அறிவுடன் இருப்பது முதலாம் நிலை. தான் உலகத்திலிருந்து வேறுபட்ட தனியான மனிதன் என்ற அறிவு அனைத்து மனிதர்களுக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் தான் யார் என்ற தெளிவான அறிவு வேதம் படித்து அதன் உட்கருத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு இருப்பதில்லை.

இரண்டாம் நிலை: அறியாமைபற்றிய அறிவு

ஒருவன் குறைகிறான் என்பதை அறிவது மட்டுமல்லாமல் அதை ஒரு பிரச்சனையாக உருவகபடுத்துவது இந்த இரண்டாம் நிலை. மான் ஒன்று ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது என்பதை மற்ற மான்கள் அறிந்தாலும் மனிதர்களைப்போல் அவை தொடர்ந்த சோகத்தில் ஆழ்வதில்லை. ஒருவன் குறைகிறான், ஆகவே பத்தாம் மனிதனை காணவில்லை என்று அறியாமையை பிரச்சனையாக மாற்றும் சக்தி மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது.

மூன்றாம் நிலை: துன்பம்

ஒருவன் குறைகிறான் என்ற தவறான அறிவு அவர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. உண்மையில் யாரும் காணாமல் போகவில்லை என்ற அறிவு அவர்களுக்கு இருந்தால் அவர்கள் துன்பபடபோவதில்லை. எனவே அறியாமை மற்றும் அறியாமையை வெளிப்படுத்தும் திறன் ஆகிய இரண்டு நிலைகள் அவர்களை இந்த மூன்றாம் நிலையான துன்பத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றன.

நான்காம் நிலை: மறைமுக அறிவு

பத்தாம் மனிதன் காணாமல் போகவில்லை என்ற ஞானியின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மறைமுக அறிவு ஏற்படுகிறது. தாஜ்மஹாலை நேரில் பார்க்காமல் அதை பற்றி மற்றவர்கள் சொல்வதை கேட்டோ அல்லது புகைப்படத்தில் பார்த்தோ அதை தெரிந்து கொள்வது மறைமுக அறிவு. பத்தாவது மனிதன் யார் என்று தெரிந்து கொள்ளும் வரை அவன் இருக்கிறான் என்று ஞானியின் வார்த்தையின் மூலம் அறிந்து கொள்வது வெறும் மறைமுக அறிவு.  

ஐந்தாம் நிலை: நேர்முக அறிவு

ஆக்ரா சென்று தாஜ்மஹாலை நேரடியாக பார்த்தால் மட்டுமே அதைப்பற்றிய நேர்முக அறிவு ஏற்படும். யார் பத்தாவது மனிதன் என்ற கேள்விக்கு நீதான் அது என்று ஞானி கொடுத்த பதிலை தீவிரமாக ஆராய்ந்து நான்தான் பத்தாவது மனிதன் என்ற தெளிவான அறிவை பெற்றபின் நேர்முக அறிவு ஏற்படும். கதையில் வந்த ஏழாவது மனிதன் தனக்கு புரிந்துவிட்டது என்று கூறினாலும் அவனுக்கு இருப்பது மறைமுக அறிவுதான் என்பது கதையின் அடுத்த கட்டத்தில் அவன் எட்டாவது மனிதனுடன் விவாதம் செய்ததிலிருந்து தெளிவாகியது.

ஆறாம் நிலை: துன்பம் மறைதல்

நேர்முக அறிவு ஏற்பட்டவுடன் துன்பத்திற்கு காரணமான அறியாமை அகன்று விடுவதால் துன்பமும் மறையும். ஆனால் பத்தாவது மனிதனை காணவில்லை என்ற சோகத்தில் மரத்தில் முட்டி மோதி அழுததில் நெற்றியில் ஏற்பட்ட வீக்கமும் வலியும் நேர்முக அறிவு ஏற்பட்ட அதே கணத்தில் மறைந்துவிடாது. இவ்வளவு நேரம் சோகத்தில் மூழ்கி வருத்தப்பட்டுக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட மனவலியும் உடல்வலியும் மெள்ள மெள்ளத்தான் மறையும். எனவேதான் துன்பம் மறைதல் என்ற இந்த ஆறாவது நிலை ஒரு தனியான படிக்கட்டாக இங்கு கூறப்பட்டுள்ளது.

ஏழாம் நிலை: நிரந்தர இன்பம்

துன்பம் முழுமையாக மறைந்தபின் ஆனந்தம் ஏற்படும். பத்தாம் மனிதன் கிடைத்து விட்டான் என்ற மகிழ்வுடன் தன் முட்டாள்தனம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்ற சந்தோஷமும் சேர்ந்து இரட்டிப்பு இன்பம் ஏற்படும்.

இந்த பத்து மனிதர்கள் முட்டாள்தனமாக பத்தாவது மனிதனை காணவில்லை என்று தேடியது நகைச்சுவையான கற்பனைக்கதை போல் தோன்றினாலும் இது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களின் உண்மை வாழ்வை பிரதிபலிக்கிறது. வாழ்க்கைப்பயணத்தில் எல்லோரும் ஏதாவது ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் பொழுது தன் பெயருக்கு அடுத்தபடி தான் செய்து கொண்டிருக்கும் வேலையைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள். ஏன் அந்த வேலையை செய்கிறோம் என்ற அறிவு யாருக்கும் இருப்பதில்லை. எனவேதான் பலகாலம் உழைத்தபின் கூட நிரந்தர இன்பத்தை அவர்களால் அடையமுடிவதில்லை. ஏதோ ஒரு வெறுமை அல்லது பற்றாக்குறை ஒவ்வொரு மனிதரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்வில் ஏதேனும் சோகமான நிகழ்வு ஏற்படும்பொழுது இவ்வளவுகாலம் கடுமையாக உழைத்து என்ன பயன் என்ற கேள்வி மனதில் தோன்றுகிறது.

வாழ்வில் அவ்வப்பொழுது ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க போராடி இளமையில் இருந்த இன்பம் இப்பொழுது காணவில்லை என்று வருந்திக்கொண்டிருக்கும்  பெரும்பான்மையான மக்களிடம் வேதம் படித்த ஞானி ஒருவர் உங்கள் சோகத்தை போக்கி நிரந்தரமான இன்பத்தை உங்களுக்கு என்னால் அளிக்கமுடியும் என்று கூறினால் அவர்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

பத்தாம் மனிதனின் கதை – பாகம் 2

முதலாம் மனிதன் ‘நாங்கள் அனைவரும் மிகவும் வருந்தி தேடியும் நிலையான இன்பம் கிடைக்கவில்லை. இனிமேல் அது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டியது நம் தலையெழுத்து. அதை மாற்றி என்றும் இன்பமுடன் வாழ முடியும் என்பது பகற்கனவு. எனவே உங்களால் எங்களுக்கு உதவ முடியாது. நன்றி, நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டு சோகத்தில் ஆழ்ந்தான்.

இரண்டாம் மனிதன் ‘அதெப்படி உங்களால் எங்களின் துயரத்தை போக்க முடியும்? உலகில் உள்ள அனைவரும் இரண்டாயிரம் வருடம் முழுமுயற்சி செய்து தேடியும் கிடைக்காத நிலையான இன்பத்தை உங்களால் மட்டும் எப்படி கண்டுபிடித்து கொடுக்க முடியும். இது போல உங்கள் வாழ்வில் ஏதாவது நிகழ்ந்தால் தான் உங்களுக்கு எங்கள் நிலமை புரியும். எல்லாம் தெரிந்த மேதையை போல் பேசி எங்கள் சோகத்தை அதிகப்படுத்தாதீர்கள். முதலில் இந்த இடத்தை விட்டு போங்கள். அதுவே நீங்கள் செய்யக்கூடிய உதவி’ என்று கோபத்துடன் கத்தினான்.

ஞானி இவர்களுக்கு உதவ இயலாது என்று அங்கிருந்து நகர ஆரம்பித்தார்.

மூன்றாம் மனிதன் சிறிது நம்பிக்கையுடன் அவரை நிறுத்தி ‘காணாமல் போன இன்பத்தை உண்மையிலேயே உங்களால் தேடிக்கண்டுபிடிக்க முடியுமா?’ என்று வினவினான். அதற்கு அவர் ஆம் என்று தலையாட்டினார். அப்படியென்றால் எங்கள் பிரச்சனைகளை அடியோடு தீர்க்க வழிசொல்லுங்கள் என்றான். பிரச்சனைகளை தீர்க்க எவ்வித செயலும் செய்யாமலேயே நிலையான இன்பத்தை பெற முடியும் என்று அவர் பதிலளித்தார். ‘அது முடியாது. ஏனெனில் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டபின்தான் இன்பம் தொலைந்து போனது என்று எங்களுக்கு தெளிவாகத்தெரியும்’ என்று கூறி முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான். 

நான்காம் மனிதன் தங்கள் சுயமுயற்சியால் இனி ஏதும் செய்ய இயலாது என்றும்  அந்த ஞானியின் வார்த்தைகளை நம்புவதைத்தவிர தங்கள் சோகத்தை போக்க வேறு வழியில்லை என்றும் உணர்ந்துகொண்டு அவரைப்பார்த்து ‘நீங்கள் உங்கள் விருப்பபடியே ஏதேனும் செய்து காணாமல் போன இன்பத்தை கண்டுபிடித்து கொடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். உடனே ஞானி ‘நிலையான இன்பம் என்றும் உங்களுடன்தான் இருக்கிறது. அது தொலைந்து போகவில்லை’ என்று பதிலளித்தார். இதைக்கேட்ட நான்காம் மனிதன் மிகவும் மகிழ்ந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.  

ஐந்தாம் மனிதன் ஞானியின் பதிலை முதலில் நம்பவில்லை. ‘ஆனந்தம் எங்களிடமிருந்து போய்விட்டது என்று எங்களுக்கு தெளிவாகத்தெரியும்பொழுது அது தொலையவில்லை என்று நீங்கள் எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? தயவு செய்து அந்த நிரந்தர ஆனந்தத்தை எங்களுக்கு காட்டிக்கொடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். அதற்கு அவர் ‘தனியே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு நான் யார் என்று தியானம் செய்தால் நீதான் அந்த ஆனந்தம் என்று அறிவாய்’ என்று பதிலளித்தார். இதைக்கேட்டபின் ஐந்தாம் மனிதன் மிகவும் மகிழ்ந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.

ஆறாம் மனிதன் அவ்வளவு எளிதாக ஞானியை நம்ப மறுத்து ‘நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள். தியானம் செய்யும்பொழுது மட்டும் அமைதி கிடைக்கிறது. தியானம் செய்து முடித்தவுடன் பழையபடி எங்கள் பிரச்சனைகளின் மூழ்கி துன்பப்படுகிறோம். எப்படி நீங்கள் நிரந்தரமான இன்பம் எங்களுடன் இருப்பதாக கூறுகிறீர்கள்.’ என்றான். அதற்கு ஞானி ‘பிரச்சனைகள் என்பது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள்தான். தோன்றி மறையும் எண்ணங்களுக்கு ஆதாரமாய் இருப்பது எது என்று கவனித்தீர்கள் என்றால் அது நிரந்தர இன்பம் என்று நீங்கள் உணர்வீர்கள்’ என்றார். இதை கேட்டதும் அவன் திருப்தியடைந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.

ஏழாம் மனிதன் ‘ஆனால் செயல்கள் செய்யும்பொழுது செய்வது சரியா அல்லது வேறுமாதிரியாக செய்யவேண்டுமா என்ற சந்தேகமும் முயற்சி போதுமா அல்லது இன்னும் அதிக உழைப்பைத்தரவேண்டுமா என்ற சந்தேகமும் இருந்துகொண்டே இருக்கிறது. இவற்றினிடையே எப்படி எங்களால் நான்தான் ஆனந்தம் என்று நிம்மதியாக இருப்பது சாத்தியமாகும்’ என்று வினவினான்.

எட்டாம் மனிதன் ‘அதே போல் செய்த செயல்களின் பலன் கிடைக்கும்பொழுது அது பெரும்பாலும் எதிர்பார்த்ததைவிட குறைந்ததாகவே இருக்கிறது. மேலும் தேடியது கிடைத்துவிட்டாலும் சிறிது நேரத்திற்குப்பின் அது போதாது இன்னும் வேண்டும் என்று மீண்டும் செயலில் ஈடுபட தோன்றுகிறது. அப்படியிருக்க நான் ஆனந்தம் என்ற அறிவு எங்களுக்கு எவ்விதம் உதவும்’ என்று கேட்டான்.

இவ்விருவருக்கும் ஞானி பின்வருமாறு பதிலளித்தார்.

செயல்கள் எப்பொழுதும் தொடரும் என்பதும் பயன்கள் எப்பொழுதும் நிறைவை தராது என்பதும் உண்மைதான். ஏனெனில் படைப்பு என்ற வார்த்தைக்கு ஏற்ற இறக்கங்களுடன் கூடிய இயக்கம் என்று பொருள். இந்த உலகத்தின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதிதான் நம் அனைவரின் செயல்களும் அவற்றின் பலன்களும். என்றும் மாறாமல் ஆனந்தமயமாக அறிவுருவாக இருப்பவன் பரமன் மட்டுமே. அந்த பரமனே அனைத்துக்கும் ஆதாரம். எனவே நம் செயல்களை செய்ய ஆதாரமாய் இருக்கும் பரமன்தான் நான் என்ற அறிவை ஆசிரியரின் துணையுடன் நாம் அடைந்த பின் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டாலும் மாறாத அமைதியுடனும் நிலையான ஆனந்தத்துடனும் நம்மால் வாழ முடியும்.

இதைகேட்டதும் பத்து மனிதர்களில் சிலர் தெளிவு பெற்றார்கள். ஆனல் பலர் குழுப்பமடைந்தனர்.

நிலையான ஆனந்தம் என்றால் என்ன என்ற விவாதம் தொடங்கியது. உடனே இரண்டாம் மனிதன் ‘நான் ஏற்கனவே இந்த மனிதரால் நமக்கு உதவி செய்யமுடியாது என்று கூறினேன். இவர் ஏதோ மந்திரம் செய்து நிலையான ஆனந்தம் கிடைத்துவிட்டது என்று நம்மை நம்பவைக்க முயலுகிறார். இவர் பேச்சை கேட்காதீர்கள்’ என்றான். உடனே முதலாம் மனிதனும் ‘ஆம் சரிதான். வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை’ என்றான்.

ஒன்பதாம் மனிதன் இதையெல்லாம் கவனித்து ஞானியிடம் ‘இவர்கள் சொல்வது சரி. நீங்கள் ஆனந்தத்தை கண்டுபிடிக்கவில்லை. வெறும் வார்த்தை ஜாலத்தால் எங்களின் துன்பத்தை போக்கிவிடலாம் என்று முயலுகிறீர்கள். உங்கள் பேச்சை கேட்காமலேயே பயணத்தை தொடர்ந்திருந்தால் கூட நாங்கள் அனைவரும், வாழ்வில் இன்பத்தை அவ்வப்பொழுது அனுபவித்திருப்போம். எனவே உங்களுடன் பேசி மேலும் நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வதுதான் சரி’ என்றவுடன் அனைவரும் அவனுடன் சேர்ந்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

பத்தாம் மனிதன் ஞானியின் அருகில் சென்று ‘மிக்க வந்தனம் ஐயா. உங்கள் கருணையால் என் அறியாமை நீங்கியது. ஆனந்தம் எங்கே என்று வெளியுலகிலும் தியானம் மூலம் ஆழ்மனதிலும் தேடி நான்தான் ஆனந்தம் என்பதை உணராததால் ஏற்பட்ட மிகப்பெரிய துன்பத்தை நீங்கள் தீர்த்துவைத்தீர்கள். உங்கள் உபதேசம் இல்லாமல் இந்த உண்மையை என் சொந்த முயற்சியால் அறிந்துகொண்டிருக்க முடியாது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தக்க சமயம் வரும்பொழுது நான் இதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முயலுகிறேன்’ என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றான்.

பத்து மனிதர்களில் ஒருவனின் அறியாமையாவது தன்னால் மாற்ற முடிந்ததே என்ற மகிழ்வோ எஞ்சிய ஒன்பது மனிதர்களுக்கு தன்னால் உதவ முடியவில்லையே என்ற வருத்தமோ இல்லாமல் அந்த ஞானி தன் வழியில் செல்ல ஆரம்பித்தார். ஏனெனில் பத்துமனிதர்களில் இவன் ஒருவனுக்குத்தான் தான் சொல்லிகொடுப்பதை கேட்டு புரிந்து கொள்ளும் தகுதி இருந்திருக்கிறது என்றும் தான் அவனை சந்திக்காமல் இருந்திருந்தாலும் அவன் வேறொரு ஆசிரியர் மூலம் இதே ஞானத்தை பெற்றிருப்பான் என்றும் அவருக்குத்தெரியும்.

ஐந்து படிகள்

துன்பத்தை முழுவதுமாக அகற்றி நிரந்தர இன்பத்துடன் வாழ மக்கள் ஐந்து படிக்கட்டுகளை கடக்க வேண்டும்.

முதல் படி: துன்பத்திற்கு காரணம் அறியாமை என்று அறிவது

கணிதம், சரித்திரம், அறிவியல், உளவியல் போன்ற எந்தத்துறையிலும் முழுமையான அறிவு யாருக்கும் இருக்க முடியாது. ஏனெனில் இவையனைத்தும் தொடர்ந்து மாறும் உலகைச்சார்ந்த அறிவு என்பதால் தொடர்ந்து ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்ற ஔவையின் வாக்கு அனைவருக்கும் பொருந்தும். துன்பத்திற்கு காரணம் இது போன்ற உலக பொருள்களைப்பற்றிய அறியாமை அல்ல. நான் யார், கடவுள் யார், ஆனந்தத்தின் இருப்பிடம் எது என்பது போன்ற ஆன்மிக துறையில் நிலவும் அறியாமைதான் துயரத்திற்கு ஒரே காரணம்.

ஆனந்தத்தின் இருப்பிடம் தான் மட்டும்தான் என்று அறியாமல் உலகத்தில் அதை தேடியலையும் மக்கள் தங்கள் அனைத்து துன்பங்களுக்கும் ஒரே காரணம் தங்கள் அறியாமை என்பதை உணரும் வரை இந்த முதல் படியை கடக்காமல் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

முதல் படியை கடக்க தேவையான தகுதிகள்

1. புத்திசாலித்தனம்: எவ்வளவு முயற்சி செய்தாலும் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடிவதில்லை என்பதையும் எந்த சாதனையை செய்து முடித்தாலும் ஏற்படும் இன்பம் நிலைப்பதில்லை என்பதையும் அறிந்து கொள்ள புத்திசாலித்தனம் தேவை. இல்லாவிட்டால் முதலாம் மனிதனைப்போல் வாழ்வில் அடிபடும்பொழுது அழுதுவிட்டு ஏன் இவ்வாறு அடிக்கடி துன்பப்படுகிறோம் என்ற ஆய்வு செய்யாமல் வாழ்நாட்களை மனச்சுமையுடன் கழிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

2. விவேகம்: தொடர்ந்து மாறும் நிலையில்லாத உலகின் ஆதாரமாக மாறாத பரமன் ஒருவன் இருக்கிறான் என்று உலகில் உள்ள அனைத்து மதங்களும் கூறுவது உண்மையா என்று ஆய்ந்து அறியும் விவேகம் உள்ளவர்கள் மட்டுமே வேதம் படித்த ஞானிகள் கூறும் கருத்தை மரியாதையுடன் கேட்கும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.

3. வைராக்கியம்: உலகத்தில் உள்ள பொருள்களால் நமக்கு இன்பம் கிடைக்கிறது என்ற எண்ணம் இருக்கும் வரை துன்பத்தை தவிர்க்க முடியாது. ஒவ்வொரு முறை துன்பம் ஏற்படும்பொழுதும் அதற்கு காரணம் நமக்கு உலகத்தின் மீதுள்ள பற்றுதல் என்று உணராமல் உலகப்பொருள்களின் மீது தொடர்ந்து ஆசை பட்டுக்கொண்டு இருப்பவர்கள் இந்த முதல் படியை கடக்க மாட்டார்கள்.

முதல் படியை கடக்க செய்ய வேண்டிய செயல்கள்

பத்தாம் மனிதன் உண்மையிலேயே ஆற்றில் அடித்துசெல்லப்பட்டடிருந்தாலும் எஞ்சியவர்களின் துயரத்திற்கு காரணம் அவர்களது அறியாமையே என்பதை ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். வெளியுலகில் நிகழும் நிகழ்வுகளை ஆதாரமாக கொண்டு நம் மனதில் நாம் கட்டிக்கொள்ளும் எண்ண உலகம் சரியாக அமைக்கப்படாததால்தான் துன்பம் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

துக்கப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது நம் புத்தி சரியாக வேலை செய்யாது. அதனால் பிரச்சனைகள் அதிகமாகி வாழ்வே ஒரு சுமை எனக்கருதும் முதுமையை அடையும்முன் மாறாமல் இருக்கும் பரமன் யார் என்று அறியாமல் இருப்பதுதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை படித்து தெளிய வேண்டும்.

இரண்டாம் படி: மறைமுக அறிவை அடைதல்

அறியாமைதான் துன்பங்களுக்கு ஒரே காரணம் என்பதை உணர்ந்தபின் முதல் படியை கடந்து அந்த அறியாமையை அகற்ற அறிவை பெறும் இந்த இரண்டாம் படிக்கு வருவது எளிது. முதல் மூன்று மனிதர்கள் தங்கள் துன்பத்திற்கு காரணம் உலக நிகழ்வுகள்தான் என்ற பிடிவாதத்துடன் இருந்ததால் அவர்கள் இரண்டாம் படிக்கு வரவில்லை. அறிவியல் வளர்ச்சியாலும் பொருளாதார முன்னேற்றத்தாலும் நிலையான இன்பத்தை அடைய முடியாது என்பதை புரிந்து கொண்டு நான்காம் மனிதனைப்போல் வேறு வழியில்லை என்ற நிலையிலேயே ஞானியின் பேச்சை கேட்க மக்கள் முடிவுசெய்வார்கள். அதன்பின்தான் அவர்களுக்கு அறிவு ஏற்பட்டு அறியாமை அகலும்.

இரண்டாம் படியை கடக்க தேவையான தகுதிகள்

1. புண்ணியம்: தர்மமான முறையில் வாழ்க்கையை வாழ்ந்து சேர்த்துவைத்திருக்கும் புண்ணியத்தின் பலனாக மட்டுமே வேதம் படித்த ஞானியை சந்திக்கும் பாக்கியம் ஒருவருக்கு கிடைக்கும். பல்வேறு மதங்களும், வியாபரநோக்கில் மதப்பிரசாரங்கள் செய்பவர்களும் நிறைந்திருக்கும் உலகில் சரியான ஆன்மீக அறிவைத்தரும் குருவை சந்திப்பது மிகவும் கடினம். ஆயினும் வேண்டிய தகுதிகளை ஒருவன் பெற்றவுடன் அவனை நாடி குரு வருவார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

2. அடங்காத ஆவல்: வேதம் கூறும் கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள அடங்காத ஆவல் கொள்ள வேண்டும். வேதம் என்பது நமக்கு தேவையில்லாத ஒரு புத்தகம் என்ற அலட்சியம் இருக்கும் வரை குரு கிடைக்க மாட்டார்.

3. அறியும் திறன்: தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள சொல்பவரிடம் மரியாதை அவசியம். வேதம் படித்தவரை ஒரு சாதாரண மனிதராக கருதி அவருடன் விவாதம் செய்வதால் அறிவு ஏற்படாது. அவர் பேசும்பொழுது குறுக்கிடாமல், பேசிமுடித்தவுடன் அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறதா என்பதை சோதிக்கும் நோக்கில் எவ்வித கேள்வியையும் கேட்காமல், தனது அறியாமையை அவரிடம் தெரிவித்து அதை நீக்கும்படி அவரை பிரார்த்தித்தால் நம் முன் அமர்ந்திருப்பவர் நமது குருவாக மாறுவார்.

ஒரு குருவிடம் படித்து முடிக்கும்வரை மற்றவர்களுடைய கருத்துக்களை அவரது உபதேசத்துடன் ஒப்பிட்டு எது சரி என்று மனதுக்குள் யோசிக்க கூடாது.

4. விடாமுயற்சி: குருவின் துணையுடன்தான் நிரந்தர இன்பத்தை அடைய முடியும். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும்பொழுது ஆசிரியர் மாறுவது போல் ஒரு குருவிடம் படித்து முடித்தபின் அறியாமை அகலவில்லையெனில் அடுத்த குருவை தேடுவது அவசியம். சரியான அறிவு ஏற்பட அறிவிப்பவர் நேர்முக அறிவுள்ளவராகவும் அறிந்ததை தெளிவாக விளக்கும் திறன் உள்ளவராகவும் இருக்கவேண்டும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று அவரிடம் இல்லை என்பதை அவரிடம் படித்துமுடித்தவுடன் இலக்கை அடையவில்லை என்பதை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். விடாமுயற்சி இருந்தால் அடுத்த குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இரண்டாம் படியை கடக்க செய்ய வேண்டிய செயல்கள்

மனிதன் யார், கடவுள் யார், உலகம் எப்படி எதற்காக படைக்கப்பட்டுள்ளது, வாழ்வின் நோக்கம் என்ன, அதை அடைய செய்யவேண்டிய செயல்கள் யாவை ஆகிய கேள்விகளுக்கு முரண்பாடில்லாத, தர்க்க அறிவு மற்றும் அனுபவ அறிவுக்கு ஏற்புடைய பதில்களை ஆசிரியரின் துணையுடன் வேதம் படித்த பண்டிதர்களிடம் முறையாக பயின்று அறிந்து கொள்ளவேண்டும். கல்லூரியில் பட்டப்படிப்பை படிப்பது போல தொடர்ச்சியாக, கீதை மற்றும் உபநிடதங்களை வரிவரியாக படித்து பொருள் சொல்லும் ஆசிரியரிடம் வெகுகாலம் படிக்கவேண்டும். ஏதோ பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும்பொழுது படித்தால் மாறாத பரமன் ஒருவன் இருக்கிறான் என்ற உறுதியான அறிவு ஏற்படாது.

பத்தாம் மனிதன் எங்கோ இருக்கிறான் என்ற ஞானியின் கூற்றை நம்புவதைப் போல் வேதம் கூறும் ஆனந்த மயமான பரமன் ஒருவன் இருக்கிறான் என்று ஏற்றுக்கொண்ட பின் மக்கள் இந்த படியை கடந்து மூன்றாம் படிக்கு செல்வார்கள்.

மூன்றாம் படி: நேர்முக அறிவை அடைதல்

மறைமுக அறிவு மாற்றத்திற்குட்பட்டது. திரைப்படத்தை பார்த்தவர் சொல்வதை கேட்டு படம் நன்றாயிருக்கும் என்று முடிவுகட்டமுடியாது. வேறொருவர் அதே திரைப்படத்தை மோசமானது என்று சொல்வார். யாரை நாம் நம்புகிறோம் என்பதை பொறுத்து மறைமுக அறிவு மாறிக்கொண்டே இருக்கும். நேர்முக அறிவு மாறாதது. திரைப்படத்தை நாமே பார்த்துவிட்டால் அது எப்படி இருக்கிறது என்ற நேர்முக அறிவு நமக்கு கிடைத்துவிடும்.
மேலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தனிப்பட்ட எண்ண உலகில்தான் வாழ்கிறோம் என்பதால் உலகே மாயை என்றும் அதற்கு ஆதாரமான பரமன்தான் நான் என்றும் அறிந்து கொள்வது நேர்முக அறிவு. நேர்முக அறிவு ஏற்பட்டவுடன் நமக்கு வேதத்தின் துணையோ குருவின் துணையோ தேவையில்லை. வேதமும் குருவும் மாயையான உலகின் ஒரு பகுதி.

உலக அறிவை பொறுத்தவரை  பொதுவாக மறைமுக அறிவை பெறுவது எளிது. தாஜ்மஹால் பற்றிய மறைமுக அறிவை நேர்முக அறிவாக மாற்ற பணம், நேரம் ஆகியவற்றை செலவுசெய்து சிரமப்பட்டு ஆக்ரா செல்லவேண்டும். ஆனால் பரமன் இருக்கிறான் என்ற மறைமுக அறிவை நேர்முக அறிவாக மாற்ற எவ்வித செயலும் செய்யவேண்டாம். ஏனெனில் ஏற்கனவே நாம் உணர்வுடன் தான் இருக்கிறோம். அந்த உணர்வுதான் பரமன் என்று தெரிந்துகொண்டால் மட்டும் நேர்முக அறிவு ஏற்பட்டுவிடும். 
பத்தாவது மனிதன் நான் என்ற அனுபவம் பத்தாவது மனிதன் இருக்கிறான் என்ற மறைமுக அறிவு ஏற்படுவதற்கு முன்பிருந்தே இருப்பதால் இந்த அனுபவத்தை புதிதாக நாம் பெற வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே அனுபவிப்பதை இதுதான் அது என்று சரியாக புரிந்துகொண்டால் நேர்முக அறிவு ஏற்பட்டுவிடும்.

மூன்றாம் படியை கடக்க தேவையான தகுதிகள்

1. இறைவன் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி என்று எண்ணாதிருத்தல்.
2. கடவுளிடம் சுயநலத்துடன் கூடிய வேண்டுதல்களை கோராமல் இருத்தல்.
3. மரணத்திற்கு பின்பு கடவுளின் உலகத்திற்கு செல்ல ஆசை கொள்ளாதிருத்தல்.
4. உலகை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று உணர்தல்.
5. பந்தப்படுத்தும் ஆசைகளோ எதிர்பார்ப்புகளோ இல்லாமல் வாழ்தல்.

மூன்றாம் படியை கடக்க செய்ய வேண்டிய செயல்

குருவின் உபதேசம் எப்படி உண்மையாயிருக்க முடியும் என்று அனுபவ அறிவு, தர்க்க அறிவு ஆகியவற்றின் துணையுடன்  தீவிரமாக ஆராய்ந்து தேவைப்பட்டால் குருவிடம் தகுந்த கேள்விகள் கேட்டு நான் பரமன் என்று உணர்ந்தபின் கடவுள், வேதம், குரு ஆகிய அனைத்தும் மாயை என்ற நேர்முக அறிவு ஏற்பட்டு  வேண்டும்.

நான்காம் படி: துன்பத்தை போக்குதல்

நான் பரமன் என்றும் மனம் மாயை என்றும் அறிந்த பின் சிறிது காலத்தில் அனைத்து துன்பங்களும் மறைந்துவிடும். தூக்கிவந்த  தண்ணீர் குடத்தை கீழே இறக்கி வைத்தபின்னும் அதனுள் தண்ணீர் தொடர்ந்து சிறிது நேரம் அலைபாய்ந்து அதன்பின் தான் நிலையாக நிற்கும். அதுபோல பலகாலம் நான் என் மனம் என்ற அறிவுடன் இந்த உலகில் செயல்பட்டுவந்ததால் நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்ட பின்னும் மனதின் அலைபாய்தல் நிற்க சிறிது காலம் ஆகும்.

நான்காம் படியை கடக்க தேவையான தகுதி

உறுதியான மனம்: கட்டுப்பாடில்லாமல் அலைபாயும் மனம் இருப்பவர்களால் வேதத்தை முறையாகப்படித்து நான் பரமன் என்ற ஞானத்தையே அடைய முடியாது. ஆனால் தேவையான அளவு தியானம் செய்து பழகாமல் முழுமையான மனக்கட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் கூட முதல் மூன்று படிகளைத்தாண்டி விடமுடியும். அப்படிப்பட்டவர்கள் மேலும் தியானம் செய்து மனதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் யாரேனும்  தான் செய்வதை தவறு என்று சுட்டிக்காட்டி திட்டினால் பரமனாகிய நான் எவ்வித செயலையும் செய்வதில்லை என்றும் நம் செயல்பாடுகள் பிரபஞ்சத்தின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதி என்பதை அறியாதவர் அவ்வாறு விமரிசிக்கிறார் என்பது உடனடியாக புரியாமல் வருத்தப்பட ஆரம்பித்துவிடுவோம். சிறுது நேரத்தில் உண்மை ஞாபகம் வந்தவுடன் வருத்தமும் கோபமும் மறைந்துவிடும். உறுதியான மனம் இல்லாதவர்கள் நான் பரமன் என்பதை உணர்ந்த பின்னும் இதுபோல் அடிக்கடி சிறிது காலம் துன்பப்பட வாய்ப்புண்டு.

நான்காம் படியை கடக்க செய்ய வேண்டிய செயல்

நம் உடல் மனம் உட்பட்ட உலகம் அனைத்தும் மாயை மற்றும் நான் மாறாத ஆனந்தமயமான பரமன் என்ற உண்மைகளை தொடர்ந்து தியானம் செய்து கனவில் கூட துன்பப்படாத அளவுக்கு ஆழ்மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

நடப்பவை அனைத்தும் மாயை என்ற அறிவு திடமானபின் உலகின் நிகழ்வுகளை நல்லவை கெட்டவை என்று பாகம் பிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஏற்படும். அதன் பின் துன்பம் முழுதாக மறைந்து விடும்.

ஐந்தாம் படி: நிலையான இன்பத்தை அடைதல்

காணாமல் போன பத்தாவது மனிதன் கிடைத்துவிட்டான் என்று நினைக்க நினைக்க அதிக ஆனந்தம் ஏற்படும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று வழிப்பயணத்தில் ஏற்படும் துன்பங்களை கூட பொருட்படுத்தாத அளவுக்கு பத்தாவது மனிதன் நான் என்ற அறிவு ஆனந்தத்தை அளிக்கும்.

பல வருட முயற்சிக்குப்பின் தன் மகளின் திருமணத்தை நிச்சயம் செய்தபின் தந்தை அதை நினைத்து நினைத்து மகிழ்வதைப்போல் நான் பரமன் என்ற அறிவு ஏற்பட செய்த முயற்சிகளின் பயனை அடைந்தபின் ஞானிக்கு மகிழ்வு ஏற்படும் என்று வித்யாரண்ய சுவாமிகள் திருப்தி தீப பிரகரணத்தில் குறிப்பிடுகிறார்.

இந்த ஐந்தாம் படிதான் முக்தி என்பதால் இதற்குப்பின் செய்யவேண்டியதோ அல்லது அறியவேண்டியதோ ஏதுமில்லை. ஆனந்தம் என்பது நமது மாறாத இயல்பு என்பதால் முதல் நான்கு படிகளை முறையாக கடந்த அனைவரும் தவறாமல் ஆனந்தத்தில் திளைப்பார்கள்.

முடிவுரை :

ஆனந்தம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற அறிவு இல்லாமல் பெரும்பான்மையான மக்கள் இளமையில் இருந்த இன்பம் இப்பொழுது காணவில்லையென்று மிகவும் முயற்சியுடன் அதைத்தேடிவருகிறார்கள். பணம், பதவி, புகழ் போன்றவற்றை தேடி அவை கிடைத்தால் நிரந்தரமான ஆனந்தம் கிடைத்துவிடும் என்று முயற்சி செய்பவர்கள் பலர். இந்த உழைப்பு மனதை செம்மை செய்யதபின் அவர்கள் உலகில் இன்பம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு வேதம் கூறும் ஞானியின் உபதேசங்களை கேட்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் வெகு சிலரே ஆனந்த மயமான பரமன் இருக்கிறான் என்ற மறைமுக அறிவைப்பெற்று, நானே பரமன் என்ற நேர்முக அறிவையும் அடைந்து துன்பம் முழுவதையும் அகற்றி நிரந்தர இன்பம் என்ற முக்தியை அடைகிறார்கள்.

அனைத்து மனிதர்களும் துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் பெரும்பாலோர் அது சாத்தியம் என்று நம்புவதில்லை. எனவே அவர்கள் தங்கள் விதியை நொந்துகொண்டு தொடர்ந்து அதிருப்தியுடன் வாழ்க்கை ஒரு சுமை என்ற மனோபாவத்துடன் வாழ்நாளை கழிக்கிறார்கள்.

நிரந்தரமான இன்பத்தை நமக்கு பெற்றுத்தருவதற்காகத்தான் வேதம் கடவுளால் அருளப்பட்டுள்ளது என்று நம்புவர்கள் தங்கள் உடல் மனம் உட்பட்ட உலகம் முழுவதும் தொடர்ந்து மாறுவதை கவனித்து இதற்கு அடிப்படையாக மாறாத பரமன் ஒருவன் இருக்க வேண்டும் என்ற குருவின் உபதேசத்தைப்பெற்று துன்பத்தின் அடிப்படைக்காரணமான அறியாமையை நீக்கிக்கொள்கிறார்கள். அதன் பின் இன்பமாக இருக்க உலகத்தை மாற்றும் முயற்சியை கைவிட்டுவிட்டு மனதில் நான் பரமன் என்ற ஞானத்தை தியானம் மூலம் திடப்படுத்திக்கொண்டு முக்தியடைகிறார்கள்.

தான் பரமன் என்று உணர்ந்தவர்கள் தங்கள் மனதின் அலைபாயும் தன்மையை பொருட்படுத்துவதில்லை. தங்களுடையது என்று எந்தப்பொருளையும் இவர்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை என்பதாலும், நடக்கும் அனைத்து செயல்களும் கடவுளின் திருவிளையாடல் என்பதை உணர்வதாலும் இவர்கள் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டாலும் அதனால் மனதில் ஏற்படும் சலனங்கள் தங்கள் இயல்பான ஆனந்தத்தை பாதிக்கும் சக்தியற்றவை என்பதை உணர்ந்து நிரந்தரமான நிம்மதியுடனும் குறையாத இன்பத்துடனும் வாழ்வார்கள்.


பயிற்சிக்காக :

1. மனிதர்கள் எந்த மூன்று விதங்களில் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்?

2. ஏழாம் மனிதனின் சிறப்பு என்ன?

3. பத்தாம் மனிதனின் சிறப்பு என்ன?

4. துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ கடக்கவேண்டிய ஐந்து படிக்கட்டுக்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. முதல் மூன்று வகை மனிதர்கள் முக்தியடைய வாய்ப்பில்லையா?

2. ஏழு நிலைகளை கடக்க ஐந்து படிகள் மட்டுமே ஏன் போதுமானது?

3. மறைமுக அறிவை நேர்முக அறிவாக மாற்ற என்ன செய்யவேண்டும்?