பாடம் 146: முக்தியடைந்தவர்கள் துயரவாழ்வுக்கு திரும்புவதில்லை
பாடல் 465 (III.4.40)
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியை தொலைக்க மாட்டோம் என்பதுபோல் அறியாமையில் மூழ்கி அநேக காலம் துயரப்பட்டு பின் படிப்படியாக முன்னேறி முக்தியடைந்த ஞானிகள் பழையபடி துயரமான வாழ்வுக்கு திரும்ப மாட்டார்கள் என்பதை இந்த பாடம் விளக்குகிறது.
பருவுடல், நுண்ணிய உடல் மற்றும் காரண உடல் ஆகிய மூன்று உடல்களிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் ஞானி தன்னை எந்த ஒரு உடலோடும் இணைத்துக்கொள்வதில்லை என்பதால் உடல்களின் துயரங்களை அவன் தன் துயரமாக ஏற்றுக்கொள்வதில்லை.
வாழ்வின் இறுதிக்குறிக்கோளான முக்தியை அடைந்துவிட்டதால் ஞானிகள் இனி அடையவேண்டியது அல்லது அறிந்துகொள்ள வேண்டியது என்று எதுவுமில்லை என்ற காரணத்தால் அவர்களின் செயல்களுக்கு ஒரு இறுதி நோக்கமிருப்பதில்லை. எனவே செய்த செயல்களும் அவற்றின் பலன்களும் போதவில்லை என்று அவர்கள் மற்றவர்களைப்போல் வருத்தமடைய மாட்டார்கள்.
தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டு பேசினால் வலிக்கும் என்ற நிலையிலும் பக்தர்களை நலம் விசாரித்த இராமகிருஷ்ண பரமஹம்சர், ஞானிகள் உடல்களின் வியாதிகளை தங்களுடையதாக கருதி வருந்துவதில்லை என்று நிரூபித்தார். கோவில்களை ஆக்ரமித்துக்கொண்டிருந்த வியாபாரிகளை சவுக்கால் அடித்து அப்புறப்படுத்த முயன்ற ஏசு கிருஸ்து, மனதில் கோபம் ஏற்பட்டாலும் ஞானிகள் அது குறித்து வருந்துவதில்லை என்று எடுத்துக்காட்டினார்.
மற்றவர்களின் வன்முறை செயல்களுக்கு தான் பொறுப்பேற்றுக்கொண்டு மனம் வருந்திய அஹிம்சாவாதியான மகாத்மா காந்தியைப்போல் ஞானிகள் பிறர்களின் செயலுக்காகவும் வருத்தப்படுவதில்லை. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் நிலைக்காக உள்ளம் உருகி உழைத்த அன்னை தெரசாவைப் போல் ஞானிகள் யாருடைய நிலைக்காகவும் கவலைப்படுவதில்லை.
ஞானிகள் நிரந்தர இன்பத்துடன் வாழ்வது மற்றவர்கள் துன்பபடுகிறார்கள் என்ற காரணத்தால் தடைபடுவதில்லை.
துயரம் உடல்களைச்சேர்ந்தது
சாதாரண இருமல், தலைவலி முதல் உயிரைப்பறிக்கும் புற்றுநோய்வரை உடலை பாதிக்கும் வியாதிகள் எண்ணிலடங்கா. சிலர் எவ்வளவுதான் பிரயத்தனப்பட்டு உடலை போற்றிப்பாதுகாத்தாலும் நோய்வாய்ப்படுவதை தடுக்கமுடிவதில்லை. வேறு சிலர் உடல் ஆரோக்கியத்தைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து புகைபிடித்து வயிறு முட்ட உணவு உண்டு எவ்வித உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தாலும் முதுமை வரை உடல் நலக்குறைவு இல்லாமல் இருப்பார்கள். இதிலிருந்து உடல் நலமாய் இருப்பதற்கும் நோயால் பாதிக்கப்படுவதற்கும் ப்ராரப்த கர்மம் மட்டுமே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே உடலின் துன்பங்கள் குறித்து ஞானிகள் வருத்தமடைவதில்லை.
மனதில் ஏற்படும் எண்ணங்கள் வெளிஉலகால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆபாசமான காட்சியை பார்க்க நேரிட்டால் ஆபாசமான எண்ணம் தோன்றுவதை யாராலும் தவிர்க்க முடியாது. முகம் அழகாயில்லை என்பதற்காக கண்ணாடியை குறை சொல்ல கூடாது. மனம் உலகத்தின் இருப்பை உள்ளபடி பிரதிபலிப்பதால் அதில் ஏற்படும் எண்ணங்கள் தவறானவை என்று ஞானி வருத்தப்படுவதில்லை.
நம் பாவ புண்ணியங்களின் பட்டியலை பதிவு செய்து பிறவிகள்தோறும் துயரம் நம்மை தொடர காரண உடல் வழி செய்கிறது. வேதம் படித்து ஞானம் பெற்ற பின் இந்த பட்டியல் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடுவதால் ஞானிகள் இதுவரை எண்ணிலடங்கா பிறவிகளில் தாங்கள் செய்த பாவ புண்ணியங்கள் குறித்து வருந்துவதில்லை. வில்லிலிருந்து விடுபட்ட அம்பு செல்லும் திசையையோ வேகத்தையோ மாற்றமுடியாது என்பதை ஞானி அறிந்திருப்பதால் அவர் தன் வாழ்வில் தற்பொழுது ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்துவதில்லை.
இராட்டினத்தில் சுழலும்பொழுது அதன் ஏற்ற இறக்கங்களை இன்பத்துடன் அனுபவிக்காமல் பயத்துடன் புகார் செய்துகொண்டிருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்றும் ஞானி உணர்ந்திருப்பதால் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அவர் மாறா இன்பத்துடன் அனுபவிக்க ஆரம்பித்துவிடுவார்.
நான் பரமன் என்ற அறிவை அடைந்ததும் அந்த அறிவை தவறு என்று மாற்றி எழுத அதை விட உயர்ந்த அறிவு ஏதுமில்லை என்பதால் மூன்று உடல்களைச் சேர்ந்த துயரங்கள் ஞானியை அவர் வாழ்நாழ் முழுவதும் பாதிப்பதில்லை.
துயரம் திரும்பாது
பாம்பை பார்த்து பயந்து உடல் வேர்த்து நடுங்கிக்கொண்டிருக்கும்பொழுது அது கயிறு என்று தெரிந்தால் தன் அறியாமையை நினைத்து வெட்கம் ஏற்படும். அந்த அனுபவத்திற்கு பிறகு நிஜமான பாம்பைப்பார்த்தாலும் அது விஷமுடையதா என்ற யோசனை ஏற்படுமே தவிர பயம் ஏற்படாது. அதுபோல் மூன்று உடல்களின் துன்பங்களை குறித்து வருந்திய தன் அறியாமை அகன்றதும் அது குறித்து வெட்கப் பட்ட ஞானி அதன்பின் மீண்டும் அந்த முட்டாள்தனத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை.
உயிருடன் இருக்கும் எலியைப்பார்த்தே பயப்படாத பூனை செத்த எலிக்கு பயப்படுவது நடக்காத காரியம். உலகம் உண்மையாக இருக்கிறது என்று எண்ணிய காலத்திலேயே அதில் இன்பம் இல்லை என்பதை அனுபவம் மூலம் அறிந்தவன் ஞானி. எனவே வேதம் படித்து அது இருப்பது போல் தோற்றமளிக்கும் மாயை என்று தெரிந்து கொண்டபின் அவன் துன்பப்படுவது சாத்தியமே இல்லை.
ஒருவரின் வெளித்தோற்றத்தையோ செயலையோ வைத்து அவர் முக்தியடைந்த ஞானி என்பதை தீர்மானமாக சொல்லமுடியாது. அதே போல் சாவுவீட்டில் அழுதுகொண்டிருப்பவர் ஞானி அல்ல என்றும் முடிவு செய்துவிடமுடியாது. அழுவதால் அவர் துன்பப்படுகிறார் என்று அர்த்தமல்ல. மிக நன்றாக இருக்கிறது என்று அனுபவித்து பார்த்த படம் திரையரங்கில் நம்மை அழவைத்திருக்கலாம். உலகம் ஒரு நாடகமேடை என்பதை ஞானி உணர்ந்திருப்பதால் தன்னுடைய நிரந்தர இன்பத்தில் எவ்வித மாற்றமுமில்லாமலேயே சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து மற்றவர்களின் துன்பத்தை குறைக்க, வேண்டிய உதவியை அவர் செய்வார்.
பரமனால் உடலும் மனமும் இல்லாமல் எந்த செயலும் செய்ய இயலாது. மேலும் செய்யப்படும் செயல்கள் யாவும் அவற்றைச்செய்யும் மனிதரின் சுபாவப்படி அமையும். எனவே தன்னை எவ்வித குறையுமில்லாத பூர்ணமான பரமன் என்று உணர்ந்த ஞானிகளின் செயல்கள் கூட ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு மனிதனையும் அவனது பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்கச்செய்ய கடவுள் தன்னை ஒரு கருவியாக கையாளுகிறார் என்பது ஞானிக்குத் தெரியுமென்பதால் தன் கவனத்திற்கு வரும் நிகழ்வுகளுக்கேற்ற செயல்களை தன் சுபாவப்படி செய்வார். எது சரி எது தவறு என்ற கட்டுப்பாடுகள் அவருக்கு இல்லையென்றாலும் தன்னை பின்பற்றுபவர்களுக்கு தான் சரியான உதாரணமாக இருக்கவேண்டும் என்ற கவனம் அவர் மனதில் இருக்கும்.
இளவரசன் என்ற பட்டம் கிடைத்ததும் அதுவரை ஆடிய ஆட்டங்களை அடக்கி வைத்து ஒரு மன்னனைப்போல அரசாங்க நிர்வாகத்தில் அவன் பங்கேற்பதுபோல ஒரு சாதாரண தனிமனிதனாக செயல்பட்ட ஞானி ஞானம் பெற்றதும் தான் கடவுளின் அங்கம் என்ற பொறுப்புடன் காரியங்களை மேற்கொள்வார். ஆயினும் ஒவ்வொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகள் வேறுபடுவதால் ஞானிகளின் செயல்கள் ஒன்றுபோல இருக்காது. எனவேதான் சில சமயங்களில் ஞானிகளின் செயல்கள் பொதுமக்கள் பார்வையில் தவறாக தெரியலாம். எது எப்படியாயினும் ஞானி துன்பப்படுவதில்லை என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.
ஞானம் தவமல்ல
ஒருநாள் மவுன விரதம் இருக்கிறேன் என்று முடிவு செய்தபின் தவறுதலாக ஒரு வார்த்தை பேசிவிட்டாலும் மனதில் ஒரு குற்ற உணர்வு ஏற்படும். நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைபெறுவது இதுபோன்ற ஒரு தவம் அல்ல. பல வருடங்கள் தன்னை ஒரு சாதாரண மனிதனாக கருதி செயல்பட்டதன் பழக்க தோஷத்தால் ஒரு ஞானி தான் பரமன் என்பதை மறந்து சொல்லத்தகாத வார்த்தைகளால் மற்றவரை திட்டினாலும் ஞானத்துக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது. அவர் தன் செயலுக்கு வாயளவில் மன்னிப்புக்கேட்டுக்கொண்டாலும் மனதளவில் வருத்தப்படுவதில்லை.
‘சாதாரண மனிதன் கோபப்பட்டாலும் பராவாயில்லை, ஞானியான நான் எப்படி கோபப்படலாம்’ என்று தன்னைத்தான் வருத்திக்கொள்பவன் ஞானி அல்ல. எவ்வித மன இறுக்கமோ கட்டுப்பாடோ இல்லாமல் குழந்தையைப்போல சுதந்திரமாக செயல்படுபவன்தான் உண்மையில் ஞானி.
நிரந்தர ஆனந்தத்துடன் இருப்பது நமது இயல்பு. இயல்புக்கு மாறாக மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலம் அசாதாரண நிலையில் இருப்பது தவம். தவம் செய்வது ஞானத்தை பெறுவதற்காக செய்யப்படும் ஒரு பயிற்சி. ஞானம் பெற்றபின் தவம் செய்வது அவசியமல்ல.
விரதம் இருப்பவர்கள் தங்கள் விரதத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன் செயல்படுவதைப்போல ஞானிகளுக்கு இந்த உலகம் மாயை என்பதை மறந்துவிடக்கூடாது என்ற கட்டாயமில்லை. ஒருவேளை அவர்கள் அதை மறந்து செயலாற்றினால் கூட அவர்களின் ஞானம் மறைந்துவிடாது. ஆகவே அவர்களின் துன்பம் கலவா இன்ப வாழ்வு எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை.
புதிதாக திருமணம் ஆனவன் வீட்டில் மனைவி காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை மறந்துபோய் ஒரு நாள் வழக்கம்போல் ஊர் சுற்றிவிட்டு தாமதமாக வீடு திரும்பினாலும் அவன் மணமானவன் என்ற உண்மை மாறாது. ஆனால் அது போல எல்லா நாட்களும் செய்வானானால் விவாகம் ரத்தாகிவிடும். தான் பரமன் என்பதை ஞானி ஏதோ ஓரிருமுறை மறந்து மற்ற மனிதர்களைப்போல் செயல்பட்டால் பரவாயில்லை. அடிக்கடி அவ்வாறு நடந்தால் அவர் ஞானி அல்ல.
வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்
ஞானம் பெற்றுவிட்ட காரணத்தால் உலகத்தின் இயக்கம் மாறிவிடாது. மற்றவர்களின் வாழ்வில் நடப்பதுபோல் ஞானியும் தன் வாழ்வில் கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் மற்றவர்களைப்போலன்றி ஞானி துன்பத்தில் துவண்டுவிடுவதில்லை. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டால் உலகே மாயை என்பதை தான் ஏற்கனவே அறிந்துகொள்ள வாய்த்தது குறித்து ஞானி சந்தோஷப்படுவானே தவிர வருத்தப்படமாட்டான். தொலைந்து போன நகை கிடைத்தவுடன் நகை வைத்திருந்த பெட்டி கிடைக்கவில்லையே என்று யாரும் வருந்துவது கிடையாது. அதுபோல உலகே மாயை என்று தெரிந்து கொண்ட பின் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஞானிக்கு வருத்தத்தை தருவதில்லை.
நீச்சல் தெரிந்தவன் ஆற்றின் ஆழம் எவ்வளவு என்று விசாரிப்பதில்லை. தரையில் வெறுங்காலில் நடப்பவனுக்குத்தான் பாதையில் முட்கள் இருக்கின்றனவா என்ற கவலை இருக்கும். ஞானம் என்ற செருப்பு அணிந்தவனுக்கு வாழ்க்கைப்பாதையின் ஏற்ற இறக்கங்களைப்பற்றி கவலைகிடையாது.
குத்துச்சண்டையில் வெற்றிபெற்றவன் வலியை பொருட்படுத்துவது கிடையாது. கண்ணாடியில் பார்க்கும்பொழுது கன்னத்தில் தென்படும் காயம் எதிரியை அவன் எப்படி திருப்பியடித்து வீழ்த்தினான் என்பதை ஞாபகப்படுத்துவதால் இன்ப நினைவுகள் ஏற்படுத்துமே தவிர அடிபட்டுவிட்டதே என்று அவன் அழ ஆரம்பித்து விடமாட்டான். வாழ்க்கை என்னும் போராட்டத்தில் அடிபடுவது அனைவரது வாழ்விலும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான். பொதுவாக யாருக்கும் வாழ்வில் நிகழ்ந்த சோக நினைவுகளை நினைவுகூர்ந்தால் துன்பம்தான் ஏற்படும். ஆனால் ஒரு ஞானி எவ்வாறு அந்த துன்பங்கள் தம் வாழ்வை திசைதிருப்பி வேதத்தை படித்து தான் பரமன் என்ற உண்மையை உணர வாய்ப்பையளித்தன என்பதை நினைத்து இன்பமடைவான்.
முழுச்சுதந்திரம்
ஞானிக்கு வேதம் விதித்த எவ்வித சடங்குகளையும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை. மேலும் தான் சாதிக்கவேண்டியது என்று வாழ்வில் ஒன்றுமில்லை என்பதால் ஞானி முழுசுதந்திரத்துடன் செயல்படுவான். காட்டுராஜாவான சிங்கம் யானை தன்னைவிட பெரிதாய் இருக்கிறதே என்று பொறாமைபடுவதோ குயில் தன்னைவிட நன்றாகப்பாடுகிறதே என்று ஏங்குவதோ கிடையாது. உணவுக்காக வேட்டையாட வேண்டிய அவசியம் கூட இல்லாமல் வேண்டும்பொழுது உணவைப்பெற்று வாழும் ஆண்சிங்கத்தைப்போல் ஞானிகள் தங்கள் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிக்காமல் கிடைப்பதை ஏற்றுக்கொண்டு இன்பமாக வாழ்வார்கள்.
பணம், புகழ் போன்ற இலக்குகளை அடையவேண்டும் என்று உலகின் பெரும்பாலான மக்கள் முயன்று கொண்டிருப்பார்கள். ஞானி இரு காரணங்களால் இவ்வாறு முயன்று தன்னை வருத்திக்கொள்வதில்லை. முதலாவதாக இவற்றால் இன்பம் கிடைக்கும் என்ற மற்றவர்களின் அறியாமை ஞானிக்கு கிடையாது. இரண்டாவதாக தன்னைச்சேரவேண்டிய பணமோ புகழோ தான் முயற்சி எதுவும் செய்யாமலேயே தன்னைத்தேடிவரும் என்றும் எது தமக்கு கிடைக்காது என்று விதிக்கப்பட்டுள்ளதோ அதை எவ்வளவு முயன்றாலும் அடைய முடியாது என்றும் ஞானிக்கு தெரியும். ஆனால் ஞானி செயல் எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பார் என்று பொருள்ளல்ல. செய்யும் செயல்கள் தன் செயல்கள் அல்ல என்றும் அவை கடவுளின் ஆணையால் இயங்கும் நிரந்தர இயக்கத்தின் ஒரு பகுதி என்றும் அவர் அறிந்திருப்பதால் அவருக்கு எதிர்பார்ப்புகளும் மனஅழுத்தமும் இருக்காதே தவிர அவர் மற்றவர்களைவிட அதிகமாகவும் சுறுசுறுப்புடனும் செயலாற்றலாம்.
கோவிலுக்கு செல்வது, பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வது, விரதம் இருப்பது போன்ற தவங்களை மேற்கொள்வது, தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து உடல் உழைப்பை தானமாக தருவது போன்ற புண்ணியம் தரும் செயல்களை பலர் செய்துவருகிறார்கள். இவற்றால் கிடைக்கும் நல்ல பலன்கள் எதுவும் ஞானிக்கு அவசியமில்லை என்பதால் இவை எதையும் அவர் செய்யவேண்டியதில்லை. வேதத்தில் விளக்கப்பட்ட சுவர்க்கம் பற்றிய அனைத்து உண்மைகளும் ஞானிக்குத்தெரியும் என்பதால் அவர் அங்கு செல்லவேண்டிய ஆசை கொள்வதில்லை. அதற்காக செய்யவேண்டிய செயல்களையும் செய்வதில்லை.
பொருளுக்காகவும் புண்ணியத்திற்காகவும் செய்யும் செயல்கள் குறைவில்லாத நிரந்தர இன்பத்தை தராது என்று உணர்ந்துகொண்ட ஒரு சிலர் வேதத்தை முறையாக படிக்கத்துவங்குவார்கள். சரியான ஆசிரியர் யார் என்று தெரியாமல் சிலகாலம் திண்டாடி பின் கிடைத்த ஆசிரியருக்கு பணிவிடைபுரிந்து அவரின் அருளால் வேதத்தின் உட்கருத்தை புரிந்து கொள்ள முயல்வார்கள். தவறான அறிவை தள்ளிவிட்டு சரியான அறிவைப்பெற இவர்கள் நிறய முயற்சி செய்ய வேண்டும். இந்தப்படிகளை கடந்து விட்ட ஞானிக்கு இதுபோல் எவ்வித கடமைகளும் கிடையாது. மனதளவில் ஆசிரியருக்கு நன்றி செலுத்துவதைத்தவிர ஞானி உடலளவில் எவ்வித செயலும் செய்யவேண்டிய அவசியமில்லை. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுபவன் மற்றவர்களைப்போல் இனி தேர்வுக்கு படிக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைத்து சந்தோஷப்படுவதுபோல் ஞானி தான் ஞான யோகத்தின் படிகளை கடந்து சுதந்திரம் அடைந்துவிட்டது குறித்து இன்பமடைவான்.
பூர்ணத்துவம்
எப்பொழுதும் ஏதாவது ஒரு குறை மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அந்த குறை நீங்கியதும் ஏற்படும் பூர்ணத்துவம் நிலைப்பதில்லை. தனியாக இருப்பதால் நிறைவு ஏற்படவில்லை என்று திருமணம் செய்துகொண்டால் சிறிது காலத்தில் ஒரு குழந்தை இருந்தால்தான் பூரணமடைவோம் என்ற எண்ணம் ஏற்படும். இது மாதிரி அனைத்து மக்களும் பூரணத்துவத்தை அவ்வப்பொழுது அனுபவித்திருந்தாலும் அது நிலையாமல் மறுபடியும் குறை தோன்றுவதற்கு உலகின் நிலையின்மை காரணம். சுற்றியுள்ள மக்கள், நிகழ்வுகள், பொருள்கள் ஆகியவை மற்றுமல்லாமல் தன்னுடைய மனமும் மாறிக்கொண்டே இருப்பதால் எது நிறை என்று ஒரு காலத்தில் தோன்றியதோ அதுவே குறையாக மாறிவிடும். ஞானிகள் மாறாத பரமன் யார் என்ற அறிவை பெற்றதால் அவர்களது பூரணத்துவம் நிலையானது. எனவே மற்றவர்கள் அவ்வப்பொழுது அனுபவிக்கும் குறையாத நிம்மதியை ஞானிகள் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து அனுபவிப்பார்கள்.
மற்றவர்கள் பூரணம் அடைவதற்காக முயன்று செயல்கள் செய்து அதன் பலனாக கிடைக்கும் நிறைவு நிலைப்பதில்லை என்பதால் தொடர்ந்து வேலை செய்வார்கள். ஆனால் ஞானிகள் என்றும் நிறைவுடன் இருப்பதால் செய்யும் வேலையிலும் கிடைக்கும் பலனிலும் முழு திருப்தியுடன் இருப்பார்கள்.
உலக அனுபவம்
ஞானிகள் உலகை அனுபவிப்பதற்கும் மற்றவர்கள் அனுபவிப்பதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. ஒரு உயர்தர உணவகத்தில் நண்பர்களுடன் அமர்ந்து அங்கு நடக்கும் நாட்டியத்தை பார்த்துக்கொண்டே சுவையான உணவை உண்பது எல்லோருக்கும் இனிமையான அனுபவமாக தோன்றலாம். ஆனால் அனைவரும் அனுபவிக்கும் ஆனந்தம் அந்த உணவகத்தையோ, நண்பர்களையோ, நடனகலைஞரையோ அல்லது உணவையோ சேர்ந்தது அல்ல என்பது ஞானிக்கு மட்டும்தான் தெரியும். நிலவிலிருந்து வருவதாகத்தோன்றும் ஒளி உண்மையில் சூரிய ஒளி என்று தெரியாதவர்கள்தான் இருட்டாயிருக்கும்பொழுது வெளிச்சம் தரும் சந்திரன் சூரியனைவிட முக்கியமானது என்று கொண்டாடுவார்கள். வேதம் படித்து பரமன் நான் என்று அறிந்து கொள்ளும் வரை உலகில் இன்பம் இருக்கிறது என்று அதன் பின் அலைந்து தொடர்ந்து ஏமாற்றமடைவார்கள்.
இரவு பூமியை வெளிச்சமாக்கும் நிலவொளி உண்மையில் சூரிய ஒளிதான். அது போல் உலகப்பொருள்களிலிருந்து கிடைப்பதாகத்தோன்றும் இன்பம் உண்மையில் தன்னிடமிருந்துதான் வருகிறது என்பது ஞானிக்குத்தெரியுமாதலால் அவர் குறையில்லாத பூரண இன்பத்தை என்றும் அனுபவிப்பார்.
ஞானி உணவகம் செல்ல மாட்டார் என்றோ நாட்டியம் பார்க்க மாட்டார் என்றோ இதற்கு பொருளல்ல. மற்றவர்களைப்போல் உலக இன்பங்களை அனுபவித்தாலும் அவர் எதற்கும் அடிமையாக மாட்டார். இன்பமாக இருக்க நண்பர்கள் வேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை. நண்பர்களுடன் உரையாட வாய்த்தால் அதை இன்பமாகச்செய்வார். இல்லையெனில் தனிமையில் இனிமை காண்பார்.
பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்லவேண்டுமென்றால் பணம், நேரம் மற்றும் முயற்சி ஆகியவை அவசியம். எங்குவேண்டுமானாலும் செல்லலாம் என்றால் எதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை. சும்மா இருந்தாலும் பூமியில் தான் நாம் இருக்கிறோம். அதுபோல் ஞானிக்கு இன்பமாயிருக்க இதுதான் வேண்டும் என்ற கட்டாயமில்லை. தான்தான் இன்பத்தின் இருப்பிடம் என்பதால் கிடைத்ததை அனுபவிக்க ஞானியால் முடியும். மற்றவர்கள் இன்பம் ஒரு குறிப்பிட்ட பொருளில் இருக்கிறது என்று நினைப்பதால் அது கிடைக்காவிட்டால் துன்பம் அடைகிறார்கள். தேடியது கிடைத்தாலும் அவர்களது மனம் மாறுவதால் திருப்தியை தேடியலைவது நிற்பதில்லை.
யாரையும் மாற்ற முடியாது
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று ஒருவர் தன் இன்பத்திற்கு மற்றவரைச்சார்ந்து இருப்பதுவும் துன்பத்திற்கு காரணம். அவரவர் தன் அறிவுத்திறனுக்கு ஏற்றாற்போல் தம்மைத்தாமே மாற்றிக்கொள்ள முடியுமே தவிர ஒருவர் மற்றவரை தம் விருப்பபடி மாற்றமுடியாது. ஞானி இதை அறிந்திருப்பதால் அவர் யாரையும் மாற்ற முயற்சிக்க மாட்டார்.
ஆப்ரிக்க பழங்குடியினரின் வினோதமான பழக்கவழக்கங்களை எவ்விதமான ஆட்சேபணையுமின்றி ஏற்றுக்கொள்ளும் மக்கள் தங்கள் பக்கத்துவீட்டுக்காரன் தான் சிந்துவது போலன்றி வேறுவிதமாக மூக்கைச்சிந்தினால் அவனை திருத்த முயன்று ஏற்கனவே இருக்கும் விரோதத்தை அதிகப்படுத்திக்கொள்வார்கள். ஞானி அனைவரையும் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொள்வார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாததால் யார் எப்படியிருந்தாலும் அவருக்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை.
உலகில் இன்பம் இல்லை என்று அவருக்கு தெளிவாகத்தெரிந்தாலும் மற்றவர்கள் இன்பத்தை நாடி செயல்படுவதை அவர் தடுப்பதில்லை. மேஜைமேல் இருக்கும் காலி தட்டில் இனிப்பு இருக்கிறது என்று நினைத்து எட்டி எடுக்க முயற்சி செய்யும் குழந்தையை அதற்கு இனிப்பு கிடைக்காவிட்டாலும் எழுந்து நடக்கும் திறன் அதிகமாகும் என்பதால் அதை நாம் தடுப்பதில்லை. அதுபோல உலகில் இன்பம் இல்லை என்பது அவருக்குத்தெரிந்தாலும் மற்றவர்களின் முயற்சியை தடுக்க மாட்டார். ஏனெனில் ஒவ்வொருவரும் தம் சொந்த அனுபவத்தில் உலகில் இன்பம் இல்லை என்பதை அறிந்து கொண்டால்தான் இன்பத்தின் உண்மையான இருப்பிடம் எது என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவர்களுக்கு ஏற்படும். எனவே ஞானி அவர்களது முயற்சிக்கு முடிந்தால் உதவுவாரே தவிர அவர்களிடம் உண்மை உலகில் இல்லை என்று கூறி அவர்களை மாற்ற முயலமாட்டார்.
படைப்பின் ரகசியமே வேறுபாடுகள்தான். தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதனைப்போல் எல்லா மனிதர்களும் ஒன்றுபோல் இருந்தால் ஒன்றான பரமன் பலவாக ஆவேன் என்று சங்கல்பம் செய்ததற்கு அர்த்தம் இல்லை. நல்லவர்கள் இருக்கும் வரை தீயவர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அனைவரும் ஆன்மீகப்பயணத்தின் வெவ்வேறு படியில் இருப்பவர்கள் என்பதால் ஞானி யாரையும் மாற்ற முயற்சிப்பதில்லை.
முடிவுரை :
ஆசைகளை நிறைவேறினால் ஆனந்தம் கிடைக்கும் என்ற அறியாமையால் மக்கள் தொடர்ந்து முயற்சி செய்வார்கள். ஆசை நிறைவேறியபின் அது அழியாமல் தொடர்ந்து வளர்ந்து மென்மேலும் செயல்களில் மக்களை தள்ளிவிடும். அலை ஓய்ந்து ஸ்னானம் செய்யகாத்திருப்பதுபோல் ஆசைகள் அனைத்தும் நிறைவேறியபின் ஆனந்தம் அடையலாம் என்று அலைந்துகொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் தங்கள் அனுபவத்தால் உணரும்பொழுது ஆசைகள் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆசைபடுவார்கள். பரமனை அறிந்தவுடன் இந்த ஆசை நிறைவேறி அதன்பின் எவ்வித பந்தப்படுத்தும் ஆசைகளும் இல்லாமல் ஞானியாக இன்பவாழ்வை வாழத்துவங்குவர்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகை உள்ளபடி ஏற்றுக்கொள்வதனால் யாரையும் தன் எதிரி என்று ஒரு ஞானி கருதுவதில்லை. சண்டை-சமாதானம், புகழ்ச்சி-இகழ்ச்சி, வெற்றி-தோல்வி போன்ற அனைத்தும் மாயை என்று ஞானி உணர்ந்திருப்பதால் இன்பம்-துன்பம் ஆகியவற்றுக்கிடையே என்று அவர் மனம் அலைபாய்வதில்லை. அவர் விரும்பியவகையில் நிகழ்வுகள் ஏற்பட்டால் இன்பமும் விரும்பாத வகையில் ஏதேனும் நடந்தால் அது வெறும் கனவு என்ற நிம்மதியும் அவருக்கு ஏற்படும். எனவே வெளிஉலகில் என்ன நிகழ்ந்தாலும் தடையில்லாத நிரந்தர அமைதியுடனும் துன்பம் கலக்காத இன்பத்துடனும் அவர் வாழ்க்கை அமையும்.
பயிற்சிக்காக :
1. இராமகிருஷ்ண பரமஹம்சர், ஏசு கிருஸ்து, மகாத்மா காந்தி மற்றும் அன்னை தெரஸா ஆகியோரின் உதாரணங்கள் மூலம் விளக்கப்பட்ட கருத்து என்ன?
2. உடலின் துன்பங்களை ஞானி ஏன் பெரிதுபடுத்துவதில்லை?
3. எலி-பூனை உதாரணம் மூலம் கூறப்பட்ட கருத்து என்ன?
4. முக்தியடைந்தவர்கள் அழலாமா?
5. நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைத்து இருப்பதற்கும் தவம் செய்வதற்கும் உள்ள வேற்றுமைகள் என்னென்ன?
6. சோக நினைவுகள் எவ்வாறு ஞானிக்கு இன்பத்தை அளிக்க முடியும்?
7. எந்த மூன்று வேலைகளிலிருந்து ஞானம் அடைந்தவுடன் முழுச்சுதந்திரம் கிடைக்கும்?
8. பூர்ணத்துவத்தை அனுபவிப்பதில் ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
9. சூரிய ஒளி – சந்திர ஒளி உதாரணம் மூலம் விளக்கப்பட்ட கருத்து என்ன?
10. செய்த செயல்களும் அவற்றின் பலன்களும் போதவில்லை என்று ஞானிகள் ஏன் வருந்துவதில்லை?
சுயசிந்தனைக்காக :
1. விவேகானந்தர் சென்னை பிராமணர்களை பறையர்கள் என்று திட்டியது சரியா? (“If I am a sudra, ye the brahmins of Madras are the pariah of pariahs”)
2. உலகில் பலர் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்பொழுது தான் மட்டும் நிம்மதியாகவும் இன்பமாகவும் இருக்க ஆசைப்படலாமா?
3. மகாத்மா காந்தியும் அன்னை தெரஸாவும் முக்தியடையவில்லையா?
4. மனதில் தவறான எண்ணங்கள் தோன்றக்கூடாது என்று எவறாலும் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மையா?
5. ஞானிகள் உல்லாசப்பயணம் செல்வார்களா?
6. பிரபஞ்சத்தின் ஏதாவது ஒரு பகுதியை தொட என்ன செய்யவேண்டும்?
7. ஆனந்தமாயிருக்க உலகம் அவசியமில்லையா?
8. இன்பத்திற்காக பணம் சம்பாதிக்கும் மக்களுக்கு அவர்கள் செல்லும் பாதை தவறு என்று ஞானி சுட்டிக்காட்டலாமா?