Thursday, September 16, 2010

Lesson 133: Role of Vaisvanara Upasana ( பிரம்ம சூத்திரம் 3.3.58)

பாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன்
பாடல் 417 (III.3.58)

மதங்களின் பெயரால் நாம் பின்பற்றும் அனைத்து சடங்குகளையும் உள்ளிட்ட விஸ்வரூப உபாசனை எவ்வாறு படிப்படியாக நம்மை முக்தி அடைய வழிவகுக்கிறது என்பதை  இந்த பாடம் விளக்குகிறது.  

உலக அனுபவங்கள்

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல், முகர்தல் ஆகிய ஐந்து செயல்கள் மூலமாக இவ்வுலகை மனம் அனுபவிக்கிறது. கிடைக்கும் அனுபவங்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் வாழ்வு என்றும் இனிமையாக இருக்கும். அவ்வாறில்லாமல் அனுபவங்களை பிடித்தவை அல்லது பிடிக்காதவை என்று பிரித்து பிடித்த அனுபவங்களை தேடுவதாலும் பிடிக்காதவற்றை தவிர்க்க முயலுவதாலும்தான் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது.

பிடித்தவை என்றும் பிடிக்காதவை என்றும் பாகுபாடு செய்வது மனது. மனதை இவ்விதம் செய்யத்தூண்டுவது நமது ஐந்து புலன்கள். உலகில் உள்ள எந்த ஒரு பொருளுக்கோ அல்லது மனிதருக்கோ நம்மை ஈர்க்கும் சக்தி சிறிதும் கிடையாது. இருப்பதாக தோன்றும் அந்த சக்தியை அளிப்பது நமது புலன்கள்தான். உதாரணமாக தினமும் காலையில் செய்தித்தாளை வாசித்து பழகியகாரணத்தால் நாளின் ஒரு முக்கியமான அங்கம் என்ற முக்கியத்துவத்தை செய்தித்தாள்களுக்கு கொடுப்பது நம் மனம்தான்.

வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் நமது அறிவை அதிகபடுத்தி எது நல்லது எது கெட்டது என்ற பாகுபாடு செய்யும் திறனை வளர்க்கிறது. இந்த பகுத்தறிவு நமது புத்தியை சேர்ந்தது.

மனம்    

நமது ஐந்து புலன்களும் கைகள், கால்கள் மற்றும் பேசும் நாக்கு இந்த மூன்று கரணங்களும் மனதின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவை. ஆனால் பழகிய அனுபவங்கள்தான் வேண்டும் என்ற புலன்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து கண்போன போக்கிலே கால் போக மனம் அனுமதி தந்துவிடுகிறது. எனவே புலன்களின் தேவைகளை நிறைவேற்றும் செயல்களிலேயே நமது கரணங்கள் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றன. புலன்களின் ஆசை நாளுக்கு நாள் வளருமே தவிர குறையாது. மேலும் அவற்றின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் உலக அனுபவங்கள் அமையாது.

இவ்விரு காரணங்களால் வாழ்வை நிம்மதியுடனும் பூர்ணத்துவத்துடனும் ஆனந்தமாக அனுபவிக்காமல் ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காக அனைவரும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

புத்தி

மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஆனால் புலன்களின் ஆசைகளை நிறைவேற்ற தொடர்ந்து உலகில் உள்ள பொருட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனது புத்தியின் அறிவுரையை கேட்க அவகாசத்தை ஒதுக்குவதில்லை. ஓடும் மனதை பிடித்து நிறுத்த புத்திக்கு சக்திவேண்டும். இந்த சக்தி நல்ல புத்தகங்கள் படிப்பது, சான்றோர்களின் தொடர்பு, கர்மயோகமாக வேலைகளை செய்வது ஆகியவை மூலம் பெறலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கும் புத்திக்கு மனதின் துணை அவசியம். கவர்ச்சி நடிகைகளின் படம் இருக்கும் புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லாதபொழுது அறிவை வளர்க்கும் புத்தகங்களை படிக்க மனதிற்கு பொறுமை இருப்பதில்லை.

இந்த போராட்டத்தில் புத்தி வெற்றி அடைய உதவுவது விஸ்வரூப உபாசனை.

மனமும் புத்தியும்

பிடித்தது பிடிக்காதது என்று அனுபவங்களை பாகுபாடு செய்யாமல் நல்லது கெட்டது என்ற அடிப்படையில் நாம் செயல்படவேண்டும். புலன்களின் தாளத்திற்கு ஆட்டம்போட்டுகொண்டிருக்கும் மனதை அவற்றின் பிடியிலிருந்து விடுவித்து புத்தியின் கட்டுப்பாடிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் உலகம் இன்பத்தை கொடுப்பதுபோல் ஆசைகாட்டி நம்மை மீளா துன்பத்தில் தள்ளிவிடும்.

வாழ்வின் ஒவ்வொரு குறிக்கோள் நிறைவேறியவுடன் அடுத்தது என்ன என்ற கேள்வி எழக்காரணம் நம்மிடம் ஒரு நிறைவு ஏற்படாததுதான். திரும்ப திரும்ப குறிக்கோள்களை அடைந்தபின்னும் தேடியலையும் நிம்மதியும் நிலையான திருப்தியும் எற்படாததற்கு என்ன காரணம் என்று யோசிக்க புத்திக்கு நேரம் கிடைப்பதற்குள் வயதாகி மேலும் ஓடமுடியாமல் வாழ்வில் சலிப்பு ஏற்பட்டுவிடும்.

உடலும் மனமும்

வயிற்றுப்பசி தீர்ந்தாலும் நாக்கு போதும் என்று திருப்தியடைவதில்லை. தீபாவளியை சிறப்பாக கொண்டாடினாலும் இது போதும் என்ற நிறைவு மனதிற்கு ஏற்படுவதில்லை. அடுத்த தீபாவளிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்த தீபாவளி முடியும் முன்பே மனம் கனவு காண ஆரம்பித்துவிடும். கனவுகளை நனவாக்க மேலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

உடலுக்கு வயதாவது போல் மனதிற்கு வயதாவதில்லை. இன்னும் வேண்டும் என்ற மனதின் ஆசையை தொடர்ந்து வளர்கிறது. ஆனால் ஆசையை நிறைவேற்றும் சக்தி தொடர்ந்து குறைகிறது. புத்திகூர்மையும் உடலின் சக்தியும் முதுமையில் குறைந்து விடும். எனவேதான் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இளமை ஏமாற்றமான முதுமையில் முடிகிறது.

எனக்கு இது பிடித்திருக்கிறது என்று உலகத்தின் பின்னே ஓடும் மனதை நிறுத்தி இவ்வாறு ஓடிக்கொண்டே இருப்பது நமக்கு நல்லதா என்ற கேள்வியை புத்தி கேட்கவேண்டும். இவ்வாறு கேட்பதற்கு சடங்குகள் பெரிதும் உதவுகின்றன.

விஸ்வரூப உபாசனையின் பயன்

கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்குகள் மனதை புத்தியின் கட்டுக்குள் கொண்டுவரும் வேலையை திறம்பட செய்கின்றன. உதாரணமாக புதிய ஆடைகளை உடுத்தி விதவிதமான அலங்காரங்கள் செய்து வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகளை கொளுத்தி அறுசுவை உணவை உண்டு சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ கொண்டாடும் வாய்ப்பை தரும் தீபாவளி பண்டிகை மனதிற்கு பிடித்தமான ஒரு சடங்கு. பகவத்கீதை படிக்கலாமா தீபாவளியை கொண்டாடலாமா என்ற கேள்விக்கு மனம் சந்தேகமில்லாமல் தீபாவளிக்கு ஓட்டுப்போடும். இதற்கு காரணம் கண், காது, சுவைக்கும் நாக்கு போன்ற ஐந்து புலன்களும் தங்களது பசியை தீர்த்துக்கொள்ள தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருப்பதுதான்.

ஆனால் இவற்றின் விருப்பத்தை நிறைவேற்ற விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும், தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பது போன்ற பல பிடிக்காத செயல்களை செய்ய மனம் உடன்பட்டே ஆகவேண்டும். எடுத்த நோன்பிற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடகூடாது என்ற பயபக்தியுடன் சடங்குகள் பின்பற்றபடுகின்றன.

எவ்வளவுதான் நாக்கு தா தா என்று மனதை வற்புறுத்தினாலும் இறைவனுக்கு படைத்து பூஜை செய்யும் வரை ஜீரா சொட்டும் ஜிலேபியை தொட கைகளுக்கு மனம் அனுமதி கொடுப்பதில்லை.  

இவ்வாறு புலன்களை மனதின் கட்டுப்பாட்டிற்கும் மனதை புத்தியின் கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவர சடங்குகள் உபயோகப்படுகின்றன. எவ்வளவு அதிகமான சடங்குகள் ஒரு குடும்பத்தில் பின்பற்றபடுகின்றனவோ அவ்வளவு விரைவில் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

நாள்தோரும் பூஜை, வாரம்தோரும் உபவாசம், மாதமிருமுறை நோன்பு, வருடத்தில் பத்து பன்னிரண்டு பண்டிகைகள் என்று பல்வேறு சடங்குகளை விஸ்வரூப உபாசனையாக செய்தோமானால் புத்தியின் சக்தி அதிகரித்து ஏன் இந்த சடங்குகளை செய்யவேண்டும் என்று ஆராய தொடங்கி முக்தியை நோக்கிய பயணம் தொடங்கிவிடும்.   

திருமண சடங்குகள்

பெண்வீட்டுகாரர்களுக்கும் பிள்ளைவீட்டுக்காரர்களுக்கும் எவ்வித மனஸ்தாபமும் வராமல் இருக்க எவ்வளவுதான் முயன்றாலும் முடிவதில்லை. இதை இப்படிச்செய்ய வேண்டும், அதை அப்படிச்செய்ய வேண்டும் என்ற சடங்குகள்தான் இதற்கு காரணம். மேலும் திருமணம் முடிந்ததும் இதை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற ஏக்கம் எல்லோருக்கும் வரும்.

மனிதன் யாருமில்லாத காட்டில் எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் வாழசம்மதிக்கமாட்டான். சுற்றிலும் மனிதர்கள் இருப்பது மிக அவசியம். கிட்ட உறவு முட்ட பகை என்பதும் உண்மை. எவ்வாறு இவ்வுலகில் இன்பமாக வாழ்வது என்பதை வேதத்தை முறையாக படித்தால் மட்டுமே தெரியவரும். இல்லையெனில் தனித்து இருக்க பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து இருக்க பிடிக்காமல் விவாகரத்து செய்துவிட்டு மறுபடியும் வேறு யாரிடம் ஏமாறலாம் என்று தொடர்ந்து இன்பத்தை தேடி  அலைவதை தவிர்க்க முடியாது.

வேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாயங்களில் திருமணம் என்பது ஆண் பெண் என்ற இருவர் சம்பந்தபட்டது மட்டும் அல்ல. இரு குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் திருமணம்.

சடங்குகள் திருமணத்துடன் நிற்பதில்லை. தலை தீபாவளி, குழந்தைக்கு ஆண்டு நிறைவு, மொட்டையடித்து காது குத்துவது என்று தொடர்ந்து வெவ்வேறு சடங்குகளை செய்யவேண்டியிருக்கும். சமுதாயத்துடன் சேர்ந்து வாழும் கட்டாயம் மனிதனுக்கு இருப்பதால் விவாகரத்து என்பதோ இந்த சடங்கை செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதோ பெரும்பாலும் முடிவதில்லை.

எனவே பிடிக்காவிட்டாலும் செய்ய மனம் உடன்பட்டுவிடும். புத்தி வெற்றிபெற்று விடும். எவ்வளவுதான் முயன்றாலும் எல்லாம் நம் விருப்படி எப்பொழுதும் நடக்காது என்ற உண்மை புரிந்தவுடன் நிலையற்ற உலகை மாற்றும் முயற்சியை விட்டுவிட்டு புலன்களின் பின் ஓடும் மனதை மாற்றும் முயற்சி தொடங்கும். இந்த முக்கியமான மாற்றத்திற்கு சடங்குகள் அடிகோலுகின்றன.

முடிவுரை :

உலகம் நிலையற்றது. வெற்றி தோல்வி, வளமை வறுமை, லாபம் நஷ்டம், வாழ்வு தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி, நட்பு பகை, சண்டை சமாதானம், ஊடல் கூடல் என்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடுவதுதான் வாழ்க்கை.

இன்பம் கிடைக்கும் என்று மனதுக்கு பிடித்ததை நாடி ஓடினால் நிச்சயம் துன்பத்திற்கு ஆளாவோம். இது போன்ற அனுபவங்கள் செய்யும் செயல்களை ஏன் செய்கிறோம் என்று நம் புத்தியை யோசிக்கவைத்து அறிவை அதிகரிக்க வாய்ப்புகளை கொடுக்கின்றன.

விஸ்வரூப உபாசனையாக வழிவழியாக சமுதாயத்தில் பின்பற்றப்படும் சடங்குகள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புலன்களின் பின் ஓடிக்கொண்டிருக்கும் மனதை கட்டுக்குள் கொண்டு வர உதவுகின்றன.

இந்த உலகம் நாம் துன்பபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. என்றும் இன்பமாக வாழ்வதற்காகவே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது. என்றும் இன்பமாயிருப்பது எப்படி என்பதை புத்தி கற்றுக்கொள்ள அதுவரை தடையாயிருந்த மனதை சடங்குகள் மூலம் திருத்தி வேதம் காட்டும் பாதையில் முன்னேற விஸ்வரூப உபாசனை உறுதுணையாய் இருக்கிறது.

பயிற்சிக்காக :

1. உலக அனுபவங்களில் இருந்து நமக்கு என்ன கிடைக்கிறது?

2. மனதின் நேரடிகட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்ட எட்டு அங்கங்கள் எவை?

3. நிம்மதியாக வாழமுடியாததற்கு இரு காரணங்கள் என்னென்ன?

4. புத்தியின் சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

5. உடல், மனம், புத்தி இவைகளிடையே உள்ள சம்பந்தத்தை விளக்குக.

6. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியை நோக்கி பயணிக்க உதவுகிறது?

சுயசிந்தனைக்காக :

1. மனதிற்கு பிடிக்காத செயல்களை செய்துகொண்டு இருந்தால் எப்படி இன்பமாக இருக்க முடியும்?

2. ஆசைகளே தவறு என்றால் இன்பத்தை அடைவது எப்படி?