பாடம் 182:
விஞ்ஞானியின் பார்வை –
Dr. மணி பௌமிக்.
பாடல்:
521-523 (IV.3.4-6)
அணு
ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் (PhD in Quantum Physics from
IIT) பெற்று, லேசர் கண் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த
மணி பௌமிக்கின் ஆராய்ச்சி முடிவுகள், வேதம் கூறும் உண்மைகளை நிரூபிக்கும்
வகையில் அமைந்து இருப்பதை இந்தப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.
உண்மையின் மூன்று
அடுக்குகள்
உலகம் இருப்பது
உண்மை.
ஆனால், அந்த உண்மையை அறிவியலின் அடிப்படையில் ஆராய்ந்தால்,
அது ஒன்றன் கீழ் ஒன்றாக, அதே சமயம் ஒன்றுடன் ஒன்று
இணைந்த மூன்று அடுக்குகளால் ஆனது என்பதை அறியலாம். மேலெழுந்தவாரியாகத்
தென்படும் முதல் அடுக்கு, திடம், திரவம்,
காற்று ஆகிய மூன்று நிலைகளில் உள்ள பொருள் (matter) ஆகும். பெரும்பாலான மக்கள், இந்த
முதல் அடுக்கு மட்டும்தான் உண்மையான உலகம் என்ற அறியாமையுடன் வாழ்கிறார்கள்.
உலகத்தில் உள்ள
அனைத்துப் பொருள்களும் அணுக்களால் ஆனவை என்ற கருத்து தொன்று தொட்டு நிலவி வருவது.
ஆனால், ‘அணு என்றால் என்ன?’ என்ற விளக்கத்தை கொடுத்தவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
தனித்தனியான சக்திப் பொட்டலங்களின் கூட்டமைப்புதான் அணு என்கிறார் அவர்.
அதாவது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வெறும் சக்தியின் வெளிப்பாடு
மட்டுமே.
சக்தி
(energy) என்பது உண்மையின் இரண்டாவது அடுக்கு. முதல் அடுக்கின் ஆதாரமாக இருக்கும் இந்தச் ‘சக்தி’
விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டது. சக்தியின் வெளிப்பாடுகளுக்கு
வெப்பச் சக்தி, புவியீர்ப்பு விசை, காந்த
சக்தி என்று பெயரிட்டாலும் இருப்பது ஒரே சக்திதான். அந்தச் சக்தியை
அளக்க முடிவதாலும், அனுபவிக்க முடிவதாலும், பயன்படுத்த முடிவதாலும் அதை அறிந்து விட்டதாக கருத முடியாது. ‘சக்தி என்பது என்ன?’ என்ற கேள்விக்கு விஞ்ஞானிகளின் இறுதியான
பதில், ‘தெரியாது’ என்பதுதான்.
ஒரு பொருள்
உண்மையில் இருக்கிறது என்பதை நிரூபிக்க அதன் உருவத்திற்கு பெயர் இடுவது மட்டும் போதாது.
‘இது பூமி’, ‘அது சூரியன்’ என்று பிரபஞ்சத்தில் உள்ள பொருள்களுக்கு பெயர் சூட்டுவதை மட்டுமே பாமர மக்கள்
செய்கிறார்கள். ‘பூமி என்றால் என்ன?’ என்ற
கேள்விக்கான இறுதி பதிலை அறிய, கடைசி வரை முயன்ற அறிவியல் அறிஞர்கள், ‘இந்த கேள்விக்கு பதில் கூற முடியாது’ என்பதை கண்டுபிடித்து
இருக்கிறார்கள். என்னவென்று தெரியாத சக்தி, உலகமாக காட்சி அளிக்கிறது.
‘உலகே மாயை’ என்பதுதான் இறுதியான உண்மை.
‘உலகம்
உண்மையில் இருக்கிறது’ என்ற நம்பிக்கைக்கு ஆதாரம், நமது ஐந்து புலன்கள். அவைகளால் உணரப்படும் பொருள்கள்
உண்மையில் இல்லை. அவை இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது
இந்த மாயாச் சக்தி. இந்தத் தோற்றத்தை உண்மை என்று நம்புவதனாலேயே,
‘நான் இந்த உலகத்தில் இருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன்’ என்ற எண்ணமும் நமது மனதில் எழுகிறது.
நமது புலன்களுக்கு
அப்பாற்பட்ட இந்த மாயாச்சக்தியின் தொடர்ந்த நடனத்தை எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப்
(electronic microscope), பார்டிக்கிள் ஆக்ஸலேட்டர்
(particle accelerator), கணித கணிப்புகள் (mathematical
constructs) மூலம் அறிவியல் அறிஞர்கள் பார்க்கிறார்கள். உண்மையின் இரண்டாவது அடுக்கான இந்தச் சக்தியின் நடனம்தான், மான், மயில், மனிதன் போன்ற உயிரினங்களாகவும்
கல், கடல், காற்று போன்ற ஜடப் பொருள்களாகவும்
காட்சி அளிக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக அறிகிறார்கள்.
தொடர்ந்து
மாறிக்கொண்டு இருக்கும் சக்தியின் தொகுப்பான, மலையும் மரமும், மாறாமல் திடமாக காட்சி அளிப்பதற்கு என்ன காரணம்? சக்திப் பொட்டலங்கள்
தனித்தனியாக உதிர்ந்து போகாமல், ஒரே அணுவாக சேர்ந்து இருப்பதற்கு காரணம் என்ன? அல்லாவுதீன்
பூதம் பாட்டிலில் அடைக்கப்பட்டது போல சக்திப் பொட்டலங்களை ஒன்றுடன் ஒன்று
ஒட்டியிருக்கும்படி செய்வது புலம் (field).
புலம் என்ற
இந்த மூன்றாவது அடுக்கு உண்மையை, ‘பிரிக்கமுடியாத
காலம்-வெளியின் ஸ்தூல வெளிப்பாடு’ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வர்ணிக்கிறார்.
ஆப்பிள் கீழே
விழுவதைப் பார்த்து, தன்னைச் சுற்றி இருக்கும்
பொருள்களை கவரும் சக்தி, பூமிக்கு இருப்பதாக நியூட்டன் நினைத்தார்.
இது தவறு. பூமிக்கு கவரும் சக்தி ஏதும் இல்லை என்றும்
பூமியை ஒன்றாக வைத்திருப்பதே புவியீர்ப்பு புலம்தான் (gravitational field)
என்றும் கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன்.
அண்டவெளியில்
இருந்து பூமிப்பந்தை அகற்றிவிட்டாலும் புவியீர்ப்பு சக்தியின் பதிவு அதே வெற்றிடத்தில்
தொடர்ந்து இருக்கும் என்ற திடுக்கிடும் உண்மையை குவாண்டம் கோட்பாடு
(Quantum Field Theory) வெளியிடுகிறது.
திடமாக நம்
முன்னே தென்படும் உலகம், ‘உண்மையில் இருக்கிறது’
என்று நம்பும் வரை குவாண்டம் கோட்பாட்டை நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது.
அணுக்களால் ஆன பொருள்களில் இருந்து, சக்தி வெளிப்படுகிறது என்ற தலைகீழான
அறிவை மாற்றி, சக்தியில் இருந்து பொருள் தோன்றுகிறது என்ற அறிவியல்
கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டால், மேலும் ஆச்சரியமான உண்மையை அறியும்
தகுதி நமக்கு ஏற்படும்.
கடல் அலைகள்
பாறையின் மீது மோதும்போது, தெறிக்கப்படும் நீர்த்திவிலைகள், சிறிது மணித்துளிகள் வாழ்ந்து
விட்டு, மறுபடியும் கடலிலேயே கலப்பது போல் அணு என்ற பொருள், சக்தியில் இருந்து விடுபட்டு,
பொருளாக காட்சி அளித்துவிட்டு, மறுபடியும் சக்தியில் கலந்து விடுகிறது.
இதுபோல் ஒவ்வொரு கணமும் தோன்றி மறைவதுதான் உலகம்.
புலம் என்ற
கடலில் இருந்து, அலை என்ற சக்தியின் வெளிப்பாடாகத்
தோன்றும் நீர்த்திவிலைகள்தான் அணுவை உண்டாக்கும் பல்வேறு சக்திப்பொட்டலங்கள்.
இதுதான் குவாண்டம் கோட்பாடு. இந்தப் புலம் பிரபஞ்சம்
முழுவதும் நிறைந்து இருக்கிறது. இதிலிருந்து தான் பிரபஞ்சம் உருவாகி
உள்ளது.
இந்த மூன்று
அடுக்குகளாலான பிரபஞ்சத்தை சரியாகப் புரிந்துக் கொள்ள பௌதீகத் துறையில் முதுகலைப் படிப்பு
படிக்க வேண்டும். வேதம் கூறும் உண்மைகளை
முறையாகப் படித்தாலும் இதே அறிவை அடையலாம்.
ஒரே உண்மை
மண்ணைத்
தின்ற கண்ணனின் வாயில், பிரபஞ்சத்தையே காண
முடிந்தது கட்டுக்கதை அல்ல. அது முற்றிலும் உண்மை என்பதை இன்றைய அறிவியல்
நிரூபித்து இருக்கிறது. பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருக்கும் புலம் பற்றிய
ஆய்வுகளின் முடிவுகள் இந்த உண்மையை விளக்குகின்றன. “புலம் என்னும் நூல் இழையால்
பின்னப்பட்டதுதான் பிரபஞ்சம் என்கிற
மாபெரும் துணி. ஆயினும் இந்தத் துணி முழுவதையும்
ஒரே இழைக்குள் காணலாம்”
உண்மையை
அறிந்து கொள்ளவேண்டும் என்ற தீவிர ஆசை உடைய அனைவரும் இது போன்ற நம்பமுடியாத
‘கதை’களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இது அறிவியல் ஆராய்ச்சியின்
முடிவுகள். கட்டுக்கதைகள் அல்ல.
காலியான
இடைவெளி ஏதும் இல்லாமல் நெய்யப்பட்ட இந்தப் பிரபஞ்சத் துணியின் ஆதாரமாக இருக்கும் நூல்
இழையில் ஒன்றுதான் ஒரு தனி மனிதன். அதே சமயம் அவனுக்குள் இந்த பிரபஞ்சம் முழுவதும்
அடங்கியிருக்கிறது. ‘நான் பரமன்’ என்றும் ‘இந்தப்
பிரபஞ்சம் என்னை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது’ என்றும் வேதம்
தந்த உண்மைகளை, குவாண்டம் கோட்பாடு நிரூபித்து இருக்கிறது.
கிடார் வாத்தியத்தின்
கம்பிகளின் அதிர்வுகளுக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு ஒலி அலைகள் உண்டாவது போல் ஒரே புலம்
தரும் வெவ்வேறு அதிர்வு அலைகளில் இருந்து உருவானதுதான் இந்தப் பிரபஞ்சம் என்று சரக்கோட்பாடு
(string theory) கூறுகிறது. சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து
பிரபஞ்சம் உருவானது என்ற சைவ ஆகம கருத்தின் நவீன வடிவம்தான் சரக்கோட்பாடு. ஒலியில்
இருந்து வெளி என்ற பொருள் உண்டாகி அதிலிருந்து இந்த பிரபஞ்சம் அனைத்தும் உருவானது.
பரமசிவனின் ஒருபாதியான சக்தியின் இயக்கம்தான் பிரபஞ்சத்தின் செயல்பாடு.
பரமன்
பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்துப் பொருட்களும் சக்தியின் வெளிப்பாடு. ஆற்றல் காப்பு
விதியின்படி (Law of conservation of energy) சக்தியை
புதிதாக உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. சக்தி பொருளாகவும் பொருள் சக்தியாகவும்
மாறலாம். இருப்பது எவ்வளவு என்று கேட்டால் கிடைக்கும் பதில் அதிர்ச்சியைத் தரும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்கள் உள்ளிட்ட மொத்த சக்தியின் கூட்டுத் தொகையை
கணக்கிட்டால், கிடைக்கும் எண், ‘பூஜ்யம்’.
ஆம்! சக்தியோ பொருளோ உருவாக்கப்படவே இல்லை.
அவை இருப்பதாக காண்பிப்பது அறிவியல் அளவைகளுக்கு அப்பாற்பட்ட முக்கிய
புலம் (Primary Field). இதைத்தான் உலகுக்கு ஆதாரம் பரமன் என்று
ஆரம்பப் பாடங்களில் வேதம் அறிமுகம் செய்து வைத்தது.
பிரபஞ்சத்தின்
இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது ஒரே முக்கிய புலம்தான் என்பது சந்தேகத்துக்கு இடம்
இல்லாமல் நிரூபிக்கப் பட்டுவிட்டது. எவ்வித
மாற்றமும் இல்லாமல் அனைத்து காலங்களிலும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும்
இந்த முக்கிய புலம் எவ்வித செயலையும் செய்வதில்லை. புவியீர்ப்பு
புலம், காந்தப் புலம் போன்ற மற்ற அனைத்து புலம்களின் செயல்பாட்டுக்கு
முக்கிய புலம் ஆதாரமாக மட்டும் இருக்கிறது. அது இருக்கும் இடம்
இதுதான் என்று காட்டமுடியாது. ஏனெனில் அதற்கு ஒரு குறிப்பிட்ட
உருவம் கிடையாது. இந்தக் கண்டுபிடிப்புகள்தான் அறிவியலின் எல்லை.
பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி இதற்கு மேல் எதையும் கண்டுபிடிக்க முடியாது
என்பதும் நிரூபணம் ஆகிவிட்டது.
நான் பலவாக
ஆகுவேனாக
வாழைப்பூ
வடை வேண்டும் என்று கேட்டவுடன் அது தட்டில் வந்து விழுந்து விடாது.
அதைச் செய்யவேண்டும் என்ற திட்டம் ஒருவர் மனதில் உருவாகி, அதற்குத்
தேவையான பொருள்களை ஒன்று சேர்த்து, முறைப்படி சமைத்த
பின்புதான் அது நமது கைக்கு கிடைக்கிறது. மேலும் சமைப்பவரின் செயல்பாட்டை
கவனித்தால் அவர் வாழைப்பூ வடைதான் செய்கிறார் என்பதையும் அறியலாம். இதைப்போலவே,
பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பேயே, ‘மனிதன் அதில் வாழ வேண்டும்’ என்ற திட்டம்
நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்ற உண்மையை அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
‘பிரபஞ்சம் தோன்றி, 1370 கோடி வருடங்களுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் தோற்றத்தை
ஆராயும் அளவுக்கு அறிவுடன் கூடிய மனிதன் தோன்றுவான்’ என்ற தீர்மானம் செய்தது முக்கிய
புலம். ‘நான் பலவாக ஆகுவேனாக’ என்ற வேதவாக்கியம் இவ்வாறு அறிவியலால்
நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
பிரபஞ்சத்தின்
ஒருமூலையில் இருக்கும் பூமிப்பந்தில் வசிக்கும் மனிதனுக்காகவே இந்தப் பிரபஞ்சம் முழுவதும்
உருவாக்கப்பட்டது
என்பது நம்புவது கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஒரு வாய்க்குள் அடங்கி விடக்கூடிய ஒரு வடையை உருவாக்க, வாழை மரம் வளர்ந்து பூக்க வேண்டும். எள்ளை காய வைத்து
செக்கில் ஆட்டி நல்லெண்ணையை எடுக்க வேண்டும். இரும்பை உருக்கி
இருப்புச்சட்டியாக மாற்ற வேண்டும். கடல் நீரை காய வைத்து உப்பை
விளைக்க வேண்டும். இதுபோல, பற்பல வேலைகள் செய்து பலகாலம் கழித்துதான்
வாழைப்பூ வடையை உருவாக்க முடியும். அதுபோல பிக்பேங்கில் ஹைடரஜன்,
ஹீலியம் போன்ற பளு குறைந்த தனிமங்களை முதலில் உருவாக்கி அதன் பின் மனித
உடலை உருவாக்கத் தேவையான கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற கனமான தனிமங்களை, நட்சத்திரங்களை வெடிக்கவைத்து அதில் ஏற்படும்
வெப்பத்தில் சமைப்பதற்கு நிச்சயம் 1370 கோடி வருடங்கள் ஆகும்.
பற்பல இயந்திரங்களும் உபகரணங்களும் இல்லாமல் ஒரு சிறு வாழைப்பூ வடையைச்
செய்ய முடியாது. அதுபோல, பல கோடி நட்சத்திரங்களும் கிரகங்களும்
இல்லாமல், மனிதன் வாழத்தகுந்த ஒரு பூமியை உருவாக்க முடியாது.
மனிதனை உருவாக்க
வேண்டும் என்ற திட்டத்துடன்தான் பிக்பேங்க் ஏற்பட்டது என்பது ஆச்சரியமான உண்மை.
‘இயற்கையைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்தி என்னவென்றால்
அது எவ்வாறு மனிதனால் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்து உள்ளது என்பதுதான்’
என்கிறார் ஐன்ஸ்டீன். ‘ஒன்று பலவாக மாறியுள்ளது’
என்ற உண்மையையும், ‘அந்த ஒன்று உணர்வு மயமானது’
என்பதையும், இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிவியல்
பூர்வமாக ஆராய்ந்தால் அறிய முடியும்.
பரமன் உணர்வுமயமானவன்
“குவாண்டம்
கோட்பாட்டை சரியாகப் புரிந்துகொண்டால் பிரபஞ்சத்தின் ஆதாரமாக, உணர்வுமயமான ஒரு சாட்சி
இருப்பதை மறுக்க முடியாது” என்கிறார் ஜான் வீலர். ‘அறிபவன் ஒருவன்
இருக்கிறான்’ என்ற உண்மையின் அடிப்படையில்தான் ‘ஒரு பொருள் இருக்கிறது’ என்ற தீர்மானம் செய்ய முடியும்.
எனவே பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன்பே, அதை படைத்தவன்
ஒருவன் இருக்கிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை என்று மேலும் அவர் கூறுகிறார்.
முடிவுரை
:
‘பொருள்
(matter) என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு விஞ்ஞானம்
தரும் இறுதியான பதில், ‘சக்தியின் நடனம்’ (play of
energy). ‘சக்தி என்றால் என்ன?’ என்ற அடுத்தக்
கேள்விக்கான சரியான பதில் ‘அதை அறிய முடியாது’. எதைப் புரிந்து கொள்ள முடியாதோ அதுவே மாயா சக்தி என்பதை அறிவியல் முழுமையாக
ஏற்றுக் கொண்டுவிட்டது.
சக்தியின் ஆதாரமாக
இருப்பது புலம் (field). பிரபஞ்சம் முழுவதும் அழிந்து
விட்டாலும், புலம் என்பது ஒடுங்கிய நிலையில் தொடர்ந்து இருக்கும்.
பொருள், சக்தி, புலம் ஆகிய
இந்த மூன்று அடுக்கான உண்மைகளையே ஸ்தூலப் பிரபஞ்சம், சூட்சும
பிரபஞ்சம், காரணப் பிரபஞ்சம் என்ற பெயர்களில் வேதம் வழங்குகிறது.
முக்கிய புலம்
(Primary Field) என்ற உணர்வுமயமான ஒன்று மனிதனும் மற்ற உயிரினங்களும்
வாழத்தகுந்த ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஒரு காட்சிப் பொருளாக
உருவாக்கியது தான் இந்தப் பிரபஞ்சம்.
வேதம் கூறும்
அடிப்படை உண்மைகள் அனைத்தையும், எவ்வித கருத்து
வேறுபாடும் இல்லாமல் அறிவியல் நிரூபித்து உள்ளது. ஆனால் இந்த
உண்மைகளை வெறும் கோட்பாடுகளாக மட்டுமே கருதி, பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து நடந்து
வருகிறது.
கடவுள்,
மனிதன், பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய வேதம் கூறும்
கருத்துக்களை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து, அவற்றை அறிவியல்
கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டால், இந்த அறிவைப் பெற்ற பலனாக அவர்களுக்கு
முக்தி கிடைக்கும். ஆனால், தங்கள் கண்டுபிடிப்புகளை
வெறும் புத்தக அறிவாக மட்டுமே அவர்கள் கருதுவதால், மனிதனின் துன்பங்களை
இந்த அறிவின் உதவியுடன் அகற்ற அவர்கள் முயல்வதில்லை. இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் உண்மையான பயனை தீர்க்க தரிசிகளும் முற்றுணர்ந்தோர்களும்
மட்டுமே அறிவார்கள்.
பயிற்சிக்காக
:
1. உலகம்
என்ற உண்மையின் மூன்று அடுக்குகள் யாவை?
2. உலகம்
உண்மையில் இருக்கிறதா?
3. நான்
பலவாக ஆகுவேனாக என்ற வேத வாக்கியம் எப்படி நிரூபிக்கப் பட்டது?
சுயசிந்தனைக்காக
:
1. Code
Name God என்ற புத்தகத்தின் இறுதிப்பகுதிகளை மட்டும் படிக்கவும்.
2.
அறிவியலால் நிரூபிக்கப்பட்ட வேதாந்த கருத்துக்களை வரிசைப்படுத்தவும்.