பாடம் 175:
ஞானி பரமனுடன் இரண்டறக் கலப்பதன் காரணம்
பாடல்
512
(IV.2.16)
ஆசைக்கு ஆதாரம்
அறியாமை.
அந்த அறியாமை அழிந்துவிடும் காரணத்தால் ஞானி பரமனுடன் இரண்டறக் கலந்துவிடுவான்.
மற்றவர்களால் இந்த நிலையை அடைய முடியாமல் இருப்பதற்கான காரணத்தை இந்தப்பாடம்
ஆராய்கிறது.
காலம் என்பதே
மனதின் கற்பனை என்பதால், ‘இங்கேயே இந்தக்கணமே
முக்தி வேண்டும்’ என்ற தீவிர ஆசை உடையவர்கள் மட்டுமே முக்தி அடைய
முடியும். ‘காலம் வெறும்
கற்பனை’ என்ற உண்மையை சில தீர்க்கதரிசிகள் தங்கள் அனுபவத்தில்
அறிவார்கள். இந்த உண்மையை அறிய நாம் தீர்க்கதரிசிகளாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை. ‘காலம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலை தர்க்கத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் நமது
அறியாமை அகன்றுவிடும். இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்த
காரணத்தால் முற்றுணர்ந்தோர்கள் காலத்தை வென்றவர்களாக பரமனுடன் இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.
காலம் இருக்கிறதா?
1. காலம்
உண்மையில் இருக்கிறது என்பதற்கு கடிகாரமோ நாட்காட்டியோ சாட்சிகள் அல்ல. கடிகாரத்தின் முள் எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதை வடிவமைத்தது ஒரு மனிதனே.
நாட்காட்டியில் தாளை கிழித்துப்போடும்போது ‘ஒரு
நாள் முடிந்துவிட்டது’ என்ற எண்ணம் வெறும் கற்பனைதான்.
வினாடி, நிமிடம், மணி,
நாள், வாரம், மாதம்,
வருடம் என்று நமது கற்பனைகளுக்கு பெயரிடுவதால் அவை உண்மையாகிவிடாது.
2. காலம்
உண்மையில் இல்லாத காரணத்தால்தான் உலகில் உள்ள கடிகாரங்கள் அனைத்தும் எப்போதும் ஒரே
நேரத்தைக் காட்டுவதில்லை.
3. அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள் என்பதால்
காலம் உண்மையாகி விடாது. புதிய வருடம் என்றைக்கு என்பதும், அது
ஆரம்பிக்கும் தருணம் எது என்பதும் ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு
மாறுபடுவதிலிருந்து காலம் உண்மை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். ‘எனக்கு இன்று காலை பத்து மணி என்பது உனக்கு முதல் நாள் இரவு எட்டு மணி’
என்று ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வதிலிருந்து காலம் பொய் என்று புலனாகிறது.
4. சூரியன் தலைக்குமேலே இருக்கும் உச்சிநேரத்தில்
கடிகாரம் பன்னிரண்டு மணியை காட்டுவதில்லை. இதிலிருந்து பூமியின்
சுழற்சிக்கும் கடிகாரம் காட்டும் நேரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுத் தெரிகிறது.
5. சூரியன்,
பூமி ஆகியவை அழிந்துவிட்டால், விண்வெளியில் பயணம்
செய்யும் மனிதன் நேரத்தை எப்படிக்கணக்கிடுவான்?
6. நாம்
எந்த இடத்தில் இருந்தாலும் ‘இப்போது’ என்ற
தற்காலம் ஒன்றுதான் உண்மை. தற்காலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு
நிகழ்வுகள் என்று பெயரிட்டு கடந்தகாலம், எதிர்காலம் என்ற கற்பனைகளை
மனம் உருவாக்கிக்கொண்டு இல்லாத நிகழ்வுகளை இருப்பதாக நம்புகிறது. சந்திரனின் நிழல் சுற்றிவரும் பாதையை கணக்கிட்டு இராகு, கேது என்று பெயரிடுவதால்
இவை உண்மையான கிரகங்கள் ஆகிவிடாது. அதுபோல தொடர்ந்து நிகழும்
மாற்றங்களுக்கு இடையே உள்ள நேரத்தை கணக்கிடுவதால் நிகழ்வுகளோ காலமோ உண்மையாகிவிடாது.
7. இரண்டு
பொருள்கள் இருந்தால் மட்டுமே அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை கணக்கிட முடியும்.
இருப்பது இந்தக்கணம் ஒன்றுதான். எனவே, அதை அளக்க முடியாது.
8. ‘ஐந்து புலன்களின் மூலம் அறியப்படும் உலகம் வெறும் தோற்றம் மட்டுமே’
என்று அணுவை ஆராய்ந்த அறிவியல் அறிஞர்கள் நமக்கு அறிவிக்கிறார்கள்.
நம் மனம், உடல், சுற்றியுள்ள
உலகம் ஆகிய அனைத்தும் நிலையானதாக இல்லாமல் தொடர்ந்து மாறுகின்றன. எனவே இவை அனைத்தும்
காட்சிப்பிழைகளேத் தவிர உண்மை அல்ல. தொடர்ந்து நிகழும் மாறுதல்கள்
மனதில் நினைவுகளாக பதிவாகின்றன. ‘முதலில் அது தோன்றியது,
பிறகு அது வளர்ந்தது’ என்று அந்த நினைவுகளை வரிசைப்படுத்தி காலம் என்ற கற்பனை உருவாகுகிறது.
கற்பனையில் உருவான காலம், உலகம் உண்மையாக இருக்கிறது
என்று சாட்சி சொல்கிறது.
மாறாமல் இருக்கும்
வெள்ளித்திரையில் தொடர்ச்சியாக தோன்றும் நிழற்படங்களை திரைப்படமாக பார்க்கிறோம்.
சிறுவனை ஒரு நொடிக்குப்பின் வாலிபனாக மாற்றுவதை ‘இருபது வருடங்களுக்கு பிறகு’ என்ற எழுத்துக்களை காண்பிப்பதால்
ஏற்றுக்கொள்கிறோம். காலம் என்பது இயக்குனரின் கற்பனை. மேலும்
சிறுவன் வளர்ந்தபின் நல்லவனாக இருப்பானா அல்லது வில்லனாக மாறிவிடுவானா என்பதும் இயக்குனரின்
கற்பனைபடிதான் நடக்கும். இந்த அறிவு நமக்கு இருப்பதால் திரைப்படத்தை
இரசிக்க முடியும்.
ஆனால்
மாறாமல் இருக்கும் இந்தக்கணத்தை ஆதாரமாகக்கொண்டு தோன்றும் இந்த உலகம் மாயை என்பதை நாம்
அறிவதில்லை. காலம் என்ற கற்பனை நிகழ்காலத்தை பெரும்பாலும் நமது கவனத்திலிருந்து அகற்றி
விடுகிறது.
9. மனம் என்பது வெறும் எண்ணக்குவியல்கள்.
எண்ணம் என்பது சக்தி (energy). உடல் ஒரு திடமான
பொருள் அல்ல. அதுவும் சக்தியின் வெளிப்பாடே. ஆக, எல்லாமே மாயை. இதை ஏற்றுக்கொள்ள
முடியாத மனம், ‘இதனால் இது தோன்றியது’ என்பது போன்ற காரண
காரியங்களை காலத்தின் உதவியுடன் கற்பனை செய்துகொள்கிறது. தானே தோற்றுவித்த
கற்பனைகளை ஆதாரமாக காட்டி உலகம் உண்மையில் இருப்பதாக மனம் நம்புகிறது.
10. நீள அகலங்களை அளக்க கிலோமீட்டர், மைல் போன்ற அளவைகளை
மனிதன் உருவாக்கி இருப்பதைப்போல, உலகில் நிகழும் மாற்றங்களை அளக்க
மணி, நாள் போன்ற கால அளவைகளை உருவாக்கியதும் மனிதன்தான்.
எங்கும் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்களுக்கு ‘கிலோ மீட்டர்’ என்ற அளவை தேவையில்லை. எப்போதும் இந்தக்கணத்திலேயே எல்லோரும் வாழ்கிறார்கள். ஆனால் மனம் மட்டும் ‘நேற்று’, ‘நாளை’ என்பது போன்ற கற்பனை உலகங்களை உருவாக்கிக்கொண்டு
அவற்றில் வாழ்ந்து வருகிறது.
11. கற்பனைக் கதைகளுக்கும் கடந்த கால நிகழ்வுகளுக்கும்
எவ்வித வித்தியாசமும் இல்லை. ஏனெனில் இவை இரண்டும் நம் மனதில்
நினைவுகளாக இருக்கின்றன. சரித்திரம் என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
கற்பனைக் கதை. மகாத்மா காந்தி என்று ஒருவர் வாழ்ந்தார் என்பது
நமது மனதின் கற்பனையா அல்லது உண்மையா என்ற கேள்வி தவறானது. ஏனெனில்
இருப்பது இந்தக்கணம் மட்டும் தான். ‘நேற்று இரவு சாப்பிட்டேன்’
என்ற எண்ணமே நமது கற்பனை.
12. இரண்டு
மணிநேரத்தில் செய்யவேண்டிய செயல்களை, விரைவாகச் செயல்பட்டு ஒரு மணிநேரத்தில்
முடிப்பவரும், மெதுவாகச்செயல்பட்டு இன்னும்
செய்து முடிக்காதவரும் வாழ்வது இந்தக்கணத்தில் மட்டுமே.
13. வெளி தொடர்ந்து விரிவடைந்து கொண்டு இருப்பதால், எவ்வளவுதான்
வேகமாக பயணம் செய்தாலும் நம்மால் பிரபஞ்சத்தின் எல்லைக்கு சென்று விட முடியாது என்பது
அறிவியல் கண்டுபிடிப்பு. வெளியுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவி
காலம். எனவே, எவ்வளவுதான் வேகமாகச் செயல்களை
செய்தாலும் காலத்தின் விளிம்பை தொட்டுவிட முடியாது.
14. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கிவிடுவதால் இடம், பொருள்,
காலம் ஆகியவை முழுவதும் மறைந்து விடும். எனவேதான்
விழித்தவுடன் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்ற கேள்விக்கு கடிகாரத்தை பார்க்காமல் பதில்
சொல்ல முடியாது. தூங்கி விழித்ததும் ஐந்து புலன்கள் வழியே வந்து
சேரும் தகவல்களின் அடிப்படையில் நாம் இருக்கும் இடம், நேரம் போன்ற
கற்பனைகளை மறுபடியும் தொடர்கிறோம்.
15. காலம் மனதின் கற்பனை என்பதால்தான் மனம் உருவாக்கிய கனவு உலகில் நம்மால் கடந்த
காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பயணம் செய்ய முடிகிறது. மேலும்
விழித்திருக்கும்போதும் காலம் மெதுவாக நகர்கிறதா அல்லது வேகமாக ஓடுகிறதா என்பது மனதின்
நிலையை பொறுத்து மாறும். மனதுக்கு பிடித்த ஒருவருடன் நேரத்தை
செலவு செய்யும்பொழுது நேரம் போவதே தெரியாது. புரியாத பாடத்தை
கேட்கும்போது வகுப்பு முடியவே முடியாது என்பது போல் தோன்றும். காலம் ஓடுவது மனதில் கையில்தான் இருக்கிறது.
16. நிகழ்காலம் என்பது மனதினால் அறிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை. இருப்பது இந்தக்கணம் மட்டுமே. அதில் தொடர்ந்து மாறும்
ஒளி-ஒலி காட்சிதான் இந்த உடலும் மனமும். உடல் ஒளியால் ஆனது. மனம் ஒலியால் ஆனது. ஒளி ஒலியை விட வேகமாக பயணிக்க கூடியது. எனவே மனதில் தோன்றும்
எண்ணங்கள் விளையாட்டு வர்ணனையைப்போல சிறிது பின்தங்கித்தான் இருக்கும். சுற்றி நிகழும் ஒளியின் மாற்றங்களின் விளைவாக மனதில் தோன்றும் எண்ணங்கள் கடந்த
காலத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். நிகழ்காலம் மனதுக்கு
எட்டாத ஒன்று.
17. எதிர்காலம் என்பது நமது கற்பனை என்று நமக்கு தெளிவாகத் தெரிந்து இருந்தாலும்
கூட ‘நினைத்தேன் வந்தாய், நூறு வயது’
என்பது போன்ற அனுபவங்கள் எதிர்காலத்தையும் உண்மை என நம்மை நம்பவைக்கின்றன.
மேலும் இப்போது நான் இதைச் செய்யப்போகிறேன் என்ற எண்ணத்தை தொடர்ந்து
அதை செயல்படுத்தியதாக தோன்றும் ஒளிக்காட்சி, காலம் என்ற ஒன்று
உண்மையில் இருக்கிறது என்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது.
18. கடந்த காலம் என்பது மனதில் பதிவாகியுள்ள நினைவு அலைகள். இந்த நினைவு அலைகள் கனவிலும் நனவிலும் நம்மை ஆட்கொள்ளும்போது நிகழ்காலத்தை
நாம் தவறவிட்டுவிடுகிறோம்.
19. அனுபவம் என்பது நிகழ்காலத்தில் மட்டுமே ஏற்படுவது. கடந்த
காலம் என்பது அனுபவங்களின் வர்ணனை.
எதிர்காலம் என்பது இந்த வர்ணனைகளின் பலனாக ஏற்படும் எதிர்பார்ப்பு. ஒருவேளை,
காலப்பயணம் (time-travel) என்பது சாத்தியமானால்
கூட, நம்மால் ‘இப்போது’ என்ற இந்த கணத்தை விட்டு எங்கும் செல்ல முடியாது.
20. இந்த நிகழ்காலத்திற்கு ஆரம்பமோ முடிவோ கிடையாது. காரண
காரியங்கள் கிடையாது. எதனுடனும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
எதிர்காலத்துக்கு செல்ல ஒரு படிக்கட்டாக நிகழ்காலத்தை சித்தரிப்பது நம்
மனம். நிகழ்காலத்தை நேருக்கு நேர் சந்திக்க முயன்றால் எண்ணங்களின்
ஓட்டம் நின்றுவிடும். எனவேதான் மனம் எதிர்காலத்தை நோக்கி வேகமாக
ஓடிக்கொண்டிருக்கிறது.
21. வட்டமான பாதையில் வேகமாக ஓடுவதால் புதிய இடத்துக்கு பயணம் செய்ய முடியாது.
அது போல் நிகழ்காலம் கடந்தகாலமாக மாறுவதற்குள் எதிர்காலத்துக்கு சென்றுவிட
வேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கும் மனதால் நிகழ்காலத்துக்குள் நுழைய முடியாது.
22. ஓடும் ஆற்றைப்போல் தொடர்ந்து மாறிக்கொண்டு நிலையாக இருப்பது நிகழ்காலம் மட்டுமே.
நேற்றைய செயல்கள்தான் இன்றைய அனுபவங்களாக மாறுகின்றன என்பதும்
இன்றைய செயல்கள் நாளைய அனுபவங்களாக மாறுகின்றன என்பதும் நமது மனதின் கற்பனை.
உலகம் மாயை
என்பதை மனதில் நிலை நிறுத்த, காலம் என்பது கற்பனை என்று அறிந்து கொள்வது அவசியம்.
முடிவுரை
:
இல்லாத
உலகம் இருப்பது போல் தோன்றுவதற்கு காலம் தான் ஆதாரம். முதலில் தோற்றுவிக்கப்பட்டது வெளி. வெளிதான் பிரபஞ்சம் முழுமையும் இருக்க இடம் அளித்தது. காலமும் வெளியும் ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகள். எனவே
மாயையான பிரபஞ்சத்தின் ஆதாரம் காலமே.
பரமனின்
மாயாசக்தி காலமாக பரிணமித்து அதில் அகில உலகங்களையும் இருப்பதாக காண்பித்துள்ளது. இதை அறிந்த முற்றுணர்ந்தோர்களும் தீர்க்கதரிசிகளும்
பரமனுடன் இரண்டறக்கலந்து முக்தி அடைந்தவர்கள்.
பயிற்சிக்காக
:
1. ஞானி பரமனுடன்
இரண்டற கலக்க காரணமாக இருப்பது எது?
2. முக்தியடைய
தேவையான முக்கியமான தகுதியாக குறிப்பிடப்பட்டது எது?
3. காலம்
கற்பனை என்பதை நிரூபிக்க கூறப்பட்ட காரணங்கள் யாவை?
சுயசிந்தனைக்காக
:
1.
ஆசிரியரிடம் பயிலாமல் உடனே ஞானத்தை அடைய முடியுமா?
2. காலம்
கற்பனை என்றால் நாம் நாளைக்கு என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டுவது அவசியம்
இல்லையா?