Tuesday, April 3, 2012

Lesson 172: The dissolution at the time of death (Brahma Sutra : 4.2.8-11)


பாடம் 172: பயணங்களின் முடிவு
பாடல் 504-507 (IV.2.8-11)

பரமனை அறிந்தவன் பரமனாகவே ஆகிவிடுவான் எனினும் மற்றவர்களைப்போல் அவனின் வாழ்க்கைப்பயணமும் மரணத்தில் முடிவடைந்துவிடும் என்ற கருத்தை கூறி உடலும் மனமும் உள்ளவரை ஆனந்த அனுபவங்களை மட்டுமே பெறுவதற்கு ஞானம் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சுழற்சி தொடர்கிறது என்ற நோக்கில் பயணங்கள் முடிவதில்லை என்ற கருத்து கூறப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட உடல் மற்றும் மனதின் வாழ்க்கைப்பயணம் முடிந்துவிடும். அலைகள் ஓய்வதில்லை என்பது உண்மையென்றாலும் ஒரு குறிப்பிட்ட அலை ஓய்ந்துவிடும்.

மனிதர்கள் அனைவரும் வந்துபோகும் அலைகளை போன்றவர்கள். பிள்ளைகள் வடிவில் பெற்றோர்கள் தொடர்ந்து வாழ்ந்தாலும் மரணம் ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப்பயணத்தின் முற்றுப்புள்ளிதான். நான் பரமன் என்ற அறிவு நான் ஒரு தனி மனிதன் என்ற தவறான எண்ணத்தை முற்றுணர்ந்தோரின் மனதிலிருந்து அகற்றிவிடுவதால் அவர்கள் வாழ்வில் துன்பம் மறைந்துவிடும். ஆனால் இந்த அறிவு அவர்களின் உடலையும் மனதையும் அழிவிலிருந்து காப்பாற்றிவிடாது.

தான் தொடர்ந்து மாறும் ஒரு உருவத்தால் வரையறுக்கப்பட்டு வந்துபோகின்ற அலையைப்போன்றவன் என்ற அறிவுடன் வாழ்பவர்கள் பற்றுடையோர்கள். தான் பரந்த கடலின் ஒருபகுதி என்று நினைப்பவர்கள் முக்திவிழைவோர்கள். தான் நீர் என்று அறிபவர்கள் முற்றுணர்ந்தோர்கள். அலையை கடலின் ஒருபகுதியாகவோ நீராகவோ அறிவதால் அலையில் எந்த மாற்றமும் இருக்காது. அதுபோல தான் யார் என்ற அறிவு அறியாமையால் விளையும் துன்பங்களை தவிர்க்க உதவுமே தவிர உண்மை நிலையை மாற்ற உதவாது. அழியாத பரமன் நான் என்ற ஆழமான அறிவு உடலும் மனமும் மரணத்தில் மறையும்வரை இன்பஅனுபவங்களை பெற உதவும் என்பதால் இந்த ஆழமான அறிவை கூடியவிரைவில் பெறுவது அவசியம்.

சுக்ல யஜுர் வேதத்தின் சாந்தி பாடம் மேலெழுந்தவாரியான அறிவுக்கும் ஆழ்ந்த அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை படம் பிடித்து காட்டுகிறது. அந்த பரமாத்மா பூரணமானவன். குறையுடன் இருப்பவனாக காட்சியளிக்கும் இந்த ஜீவாத்மாவும் பூரணமானவன். பூரணமான அந்த பரமாத்மாவிலிருந்து பூரணமில்லாதவனாக காணப்படும் இந்த ஜீவாத்மா உருவானவன் என்ற மேலெழுந்தவாரியான அறிவை நீக்கினால் பூரணமான இரண்டற்ற ஆத்மா மட்டுமே எஞ்சியிருப்பது தெரியவரும்.

மேலெழுந்தவாரியான அறிவுநான் அலை

அலை என்பது வெறும் தோற்றம். நீர் என்ற பொருள் ஒரு குறிப்பிட்ட வடிவில் தோன்றி தொடர்ந்து மாறி முடிவில் மறைகிறது. நீரின் மேல் கவனம் செலுத்தாமல் வெறும் வடிவத்தை மட்டுமே கவனிப்பது மேலெழுந்தவாரியான அறிவு. அதுபோல் தோன்றுதல், பிறத்தல், வளர்தல், முதிர்தல், மங்குதல், மறைதல் போன்ற ஆறு மாறுதல்களை அடைவது பரமன் என்பதை உணராமல் வடிவங்களுக்கு சோமன் ராமன் என்ற பெயர்களைகொடுத்து அவர்களை தனித்தனிமனிதர்களாக பார்ப்பது மேலெழுந்தவாரியான அறிவின் அடிப்படையில் ஏற்படும் அனுபவம்.

ஆறு மாறுதல்களில் வளர்தல் என்ற ஒன்றுதான் இன்பம் என்று நினைப்பதால் நான் உடல் என்ற அறிவுடன் செயல்படும் மனிதர்கள் இளமையில் துன்பம் கலந்த இன்பத்தையும் முதுமையில் இன்பம் கலவா துன்பத்தையும் அனுபவிப்பர்.

ஆராய்ந்தவர்களின் அறிவுநான் கடல்

மாறும் உடலும் மனதும் நான் அல்ல என்ற அறிவு ஏற்பட்டதும் வேதம் தரும் கருத்துக்களை ஆராய்ந்து தான் கடவுளின் அங்கம் என்று அறிபவர்கள் கூட வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் துன்பத்தை தவிர்க்க முடியாது. கடல் அலையைவிட மிகவும் பெரியது என்றாலும் அதுவும் வெறும் வடிவம் மட்டுமே.கை விரல்கள் அனைத்தும் ஒரே உடலை சேர்ந்தவை என்ற அறிவை அடைந்த பின்னும் சிறுவிரலுக்கு தான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மை மறையாது.  கடவுளும் ஒரு வடிவம் என்பதால் கடவுளின் ஆதாரமான பொருளை அறிய முயல வேண்டும்.

ஆழமான அறிவுநான் நீர்

வடிவங்களுக்கு அலை, கடல் என்று பெயரிட்டு அவற்றின் ஆதாரமான பொருள் நீர் என்பதை அறியாமல் செயல்படும்வரை ஆழமான அறிவு ஏற்படாது. தான் யார் என்பதை குருவின் துணையுடன் ஆராய்ந்து அறிபவர்கள் அந்த ஆழமான அறிவில் நிலைக்கும்பொழுது அனைத்து நிகழ்வுகளையும் இன்பமாக அனுபவிப்பர்.

அறிவும் உண்மைநிலையும்

அறிவில் குறைந்தவனை மிருகம் என்றும் ஞானம் உள்ளவரை கடவுள் என்றும் ஒரு பேச்சுக்கு சொல்லலாமே தவிர மனித உடலுடன் பிறந்தவர்கள் அனைவரும் மனிதர்கள்தான். கடவுளின் அவதாரம் அல்லது கடவுள் என்று கருதப்படும் ராமர், கிருஷ்ணர், ஏசு, சாய்பாபா போன்றவர்கள் சாதாரண மனிதர்களே. உடல் மற்றும் மனம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு செய்யலாமே தவிர ஒருவனை மனிதனே அல்ல என்று முடிவு செய்ய முடியாது.  

அறிவும் அனுபவமும்

அறிவு ஏற்பட அனுபவங்கள் காரணமாய் அமைகின்றன. ஐந்து புலன்களை பயன்படுத்தி உலகிலிருந்து பெறும் அனுபவங்கள் எதுவும் இல்லாமல் எவ்வித அறிவும் ஏற்படாது. அனுபவங்கள்தான் அறிவுக்கு காரணமாயிருந்தாலும் அனுபவங்களிலிருந்து சரியான அறிவு மட்டுமே ஏற்படும் என்று சொல்லமுடியாது. சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்று அனுபவம் தரும் தவறான அறிவை தீவிரமாக ஆய்வதன் மூலம் சரியான அறிவை அடையலாம்.  ஆராய்ச்சி தருவதும் அனுபவமே. எனவே சரியான அறிவு தவறான அறிவு ஆகிய இரண்டும் அனுபவங்கள் மூலமாகவே கிடைக்கின்றன.

உள்ளதை உள்ளபடி அறிவது மட்டுமே சரியான அறிவு. ஒரே உலகம் மனிதருக்கு மனிதர் வெவ்வேறு அனுபவங்களை தருவதால்  அவற்றிலிருந்து அவர்கள் பெறும் அறிவும் வேறுபட்டிருக்கும். சரியான அறிவு ஒரு சிலருக்குத்தான் ஏற்படும்.   

அனுபவங்களின் தரத்தை அறிவு தீர்மானிக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைவருக்கும் அனுபவங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆப்பிள் கீழேவிழுவதை பார்க்கும் அனுபவம் அனைவருக்கும் ஏற்பட்டாலும் புவியீர்ப்பு விசை பற்றிய அறிவு அந்த அனுபவத்தை ஆராய்பவர்களுக்கு மட்டுமே ஏற்படும். பெறும் அனுபவங்களை தொடர்ந்து ஆராய்ந்து அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்பவர்களால் மட்டுமே அனுபவங்களின் மூலம் சரியான அறிவை அடைய முடியும். சரியான அறிவு அனுபவங்களின் தரத்தை உயர்த்துகிறது.

மாணவனின் அறிவின் தரம் ஆசிரியரலால் கண்டிக்கப்படும் அனுபவத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. தன் நலம் விரும்பியே ஆசிரியர் தன்னை கண்டிக்கிறார் என்ற சரியான அறிவை உடைய மாணவன் அந்த அனுபவத்தை விரும்பி ஏற்று வாழ்வில் முன்னேறுவான். அவ்வாறில்லாமல் ஆசிரியர் தன்னை அவமானபடுத்த மற்றவர்கள் முன் தன்னை கண்டிக்கிறார் என்ற தவறான அறிவை உடைய மாணவன் அந்த அனுபவத்தை வெறுத்து மேலும் தவறுகள் செய்வான்.

மேலெழுந்தவாரியான அறிவுடன் செயல்படுபவர்களின் அனுபவங்கள் துன்பம் நிறைந்ததாகவும், மிதமான அறிவு உள்ளவர்களின் அனுபவங்கள் இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் கலந்தவையாகவும் ஆழ்ந்த அறிவை உடையவர்களின் அனுபவங்கள் அனைத்தும் துன்பம் கலவா இன்பமாகவும் அமையும்.

அனுபவங்கள் தரும் அறிவு

உலகில் உள்ள பொருள்களை புலன்கள் வழியே அனுபவித்து அந்த அனுபவங்கள் மூலம் அறிவை நாம் பெறுகிறோம். இல்லாத உலகை இருப்பதாக புலன்கள் நமக்கு காட்டுகின்றன என்று அணுவியல் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே பெரும்பாலான மக்கள் தாங்கள் பெறும் அனுபவங்களை ஆராயாமல் உலகம் உண்மையில் இருக்கிறது என்ற தவறான எண்ணத்துடன் வாழ்கிறார்கள். வேதம் தரும் உண்மைகளின் ஆதாரத்துடன் அனுபவங்களை ஆய்ந்து சரியான அறிவை பெறுபவர்கள் முக்திவிழைவோர். ஆசிரியரிடம் முறையாக வேதம் பயிலாமல் அனுபவங்களிலிருந்து நேரடியாக சரியான அறிவை பெறுபவர்கள் தீர்க்கதரிசிகள்.

நான்கு குழந்தைகள்

மாறுவேடத்தில் இருப்பவள் தன் தாய்தான் என்பதை அவளை பார்த்தவுடன் அறிந்துகொள்ளும் குழந்தை இன்ப அனுபவத்தை மட்டுமே பெறும். அவள் வேறு யாரோ என்று எண்ணி முதலில் பயந்தாலும் அவள் தன்னுடன் பழகும் விதத்தை ஆராய்ந்து பின் அவளை தன் தாய் என்று அடையாளம் கண்டுகொண்ட குழந்தை தன் சரியான அறிவில் நிலை பெற்றபின் இன்ப அனுபவத்தை மட்டுமே பெறும். அவள் தன் தாய் என்பதை தெளிவாக அறிந்தபின்னும் அவள் மாறுவேடத்தில் இருக்கும்வரை அவள் அருகே செல்ல பயப்படும் குழந்தை துன்பம் கலந்த இன்ப அனுபவங்களை பெறும். நான்தான் உன் அம்மா என்று அவள் எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும் உண்மையை அறிந்துகொள்ளும் திறன் இல்லாத குழந்தை தொடர்ந்து பயத்தில் அழும். அவள் தன் மாறுவேடத்தை கலைத்து சுயஉருவத்தை குழந்தைக்கு காட்டினால் மட்டுமே அதன் அழுகை நிற்கும்.   

உலகம் என்ற மாறுவேடத்தில் இருப்பது பரமன்தான் என்று பார்த்ததும் அறியும் திறன் இரமண மஹரிஷி போன்ற ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே வாய்க்கும். எவ்வித முயற்சியும் செய்யாமல் புலன்கள் காட்டும் பொய்யான தோற்றத்தை விலக்கி உண்மையான பரமனை பார்ப்பவர்கள் தீர்க்கதரிசிகள்.

உலகம் என்ற மாறுவேடத்தில் இருப்பது பரமன் என்ற உண்மையை வேதம் படித்து அறிந்துகொண்ட முக்திவிழைவோர்கள் உண்மையை அறிந்த பின்னும் உலகின் மாறுவேடம் கலைந்து பரமனை நேரடியாக அனுபவிக்க வேண்டுமென்று காத்துக்கொண்டு இருப்பார்கள். அவ்வாறில்லாமல் தங்களது சரியான அறிவில் நிலைத்து நிற்கும் முற்றுணர்ந்தோர்கள் தாய் மாறுவேஷத்தை கலைப்பதுபோல் பரமனால் தன் சுய உருவத்தை காட்ட முடியாது என்பதையும் அறிவதனால் உயிருடன் இருக்கும்வரை உலகை முழுமையான இன்பத்துடன் அனுபவிப்பர்.

காணும் உலகம் மட்டுமே இருக்கிறது என்றும் கண்ணுக்குத்தெரியாத பரமன் இல்லை என்றும் உறுதியாக இருப்பவர்கள் பற்றுடையோர். புலன்கள் அறிவிக்கும் பொய்யான தோற்றங்களை நம்பும் வரை உலகிலிருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன் நான் என்ற மேலெழுந்தவாரியான அறிவுடன் இவர்கள் இருப்பார்கள்.

தீர்க்கதரிசிகளும் மற்றவர்களும்

தீர்க்கமாக பார்ப்பதன் மூலம் ஆழமான அறிவை பெறுபவர்கள் தீர்க்கதரிசிகள். எதிர்காலம் மனதின் கற்பனை என்பதை அறியும் இவர்கள் அதில் நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே ஆரூடம் சொல்வதில்லை. தற்பொழுது இல்லாத ஆனந்தம் எதிர்காலத்திலாவது கிடைக்குமா என்று ஏங்கும் பற்றுணர்ந்தோர்கள் தீர்க்கதரிசிகளை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் கூறும் உண்மையை அறிய முற்படாமல் அவர்கள் மூலம் தங்களது துயரங்களை மாற்ற முயல்வார்கள். இதனால் தீர்க்கதரிசிகளை பின்பற்றுபவர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலர்தான் தாங்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யும் முக்திவிழைவோர்களாக மாறுவர். தாங்கள் பெறும் இன்பஅனுபவத்தை மற்றவர்களும் பெறவேண்டும் என்ற நல்லெண்ணம் தீர்க்கதரிசிகளுக்கு இருந்தாலும் அவர்களின் உபதேசத்தை கேட்பதனால் முக்திவிழைவோருக்கு எவ்வித பயனும் கிடைக்காது. அனுபவத்தின் மூலம் மட்டுமே தாங்கள் உண்மையை உணர்ந்த காரணத்தால் ஏன் மற்றவர்களால் உலகை சரியாக பார்க்கமுடிவதில்லை என்பதை தீர்க்கதரிசிகளால் புரிந்து கொள்ள முடியாது. எனவே தீர்க்கதரிசிகளின் சீடர்களாக இல்லாமல் முற்றுணர்ந்தோர்களிடம் பயிலும் மாணவர்களாக மாறும் முக்திவிழைவோர்கள் மட்டுமே உண்மையை அறியும் வாய்ப்பை பெறுவார்கள்.

தீர்க்கதரிசியும் மற்றவர்களைப்போன்ற சாதாரண மனிதன்தான். ஆனால் அவனின் அசாதாரண அனுபவம் மற்றவர் கண்களில் அவனை கடவுளின் அவதாரமாக காண்பிக்கிறது. உலகம் தங்களின் துன்பத்திற்கு காரணம் என எண்ணுபவர்களுக்கு உலகே மாயை என்பதை அனுபவத்தில் அறிந்த தீர்க்கதரிசிகளால் உதவ முடியாது. வெற்றி தோல்வி இரண்டும் மாறி மாறி ஏற்படும் என்ற உண்மையை உணராமல் தீர்க்கதரிசிகளை தரிசிப்பதன் மூலம் தங்கள் வாழ்வை இன்பமயமானதாக மாற்றிவிடலாம் என நினைப்பவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாவர். மற்றவர்களின் துன்பத்தை மாற்றும் அசாதாரண சக்தி தீர்க்கதரிசி மூலம் வெளிப்பட்டாலும் கூட அந்த சக்தியால் யாருக்கும் நிலையான இன்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது.

தீர்க்கதரிசிகளும் முற்றுணர்ந்தோர்களும்

முறையாக ஆசிரியரிடம் வேதத்தை பயின்று இருப்பது பரமன்மட்டும்தான்  என்ற அறிவை அடைந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள். எவ்வித முயற்சியும் இல்லாமல் நான் பரமன் என்பதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தவர்கள் தீர்க்கதரிசிகள். இவர்கள் இருவருக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து துன்பம் கலவா இன்ப அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் பெறும் விதத்தை அறியலாம்.

1.  அறிவை அடைந்தவிதத்தில் வேறுபாடு இருந்தாலும் இருவருக்கும் இருக்கும் இறுதியான அறிவில் இம்மியளவும் வித்தியாசம் இல்லை. எனவே ஆன்மீக அறிவின் அறிவின் அடிப்படையில்  இருவருக்கிடையே உயர்வு தாழ்வு கிடையாது.

2. மனிதருக்கு மனிதர் அனுபவங்கள் வேறுபடும். எனவே முற்றுணர்ந்தோர்களின் அனுபவம் தீர்க்கதரிசிகளின் அனுபவத்திலிருந்து வேறுபட்டிருக்கும். அனுபவம் என்பது மனதில் நிகழும் எண்ணங்களின் மாற்றம். மனம் என்பதே இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதால் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அர்த்தம் எதுவுமில்லை. மேலும் மனதில் என்ன எண்ணங்கள் எப்படி தோன்றும் என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியாது. உலகம் முழுவதையும் தன் உடலாக உணரும் அனுபவம் திடீரென ஏற்பட்டகாரணத்தினால் ஒரு சாதாரண மனிதர் தீர்க்கதரிசியாக மாறினார் என்பது உண்மையானாலும் அது போன்ற அனுபவம் அவருக்கு மீண்டும் ஏற்படும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. எனவே மனதில் தோன்றும் அனுபவங்களின் அடிப்படையில் யாரையும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிக்கமுடியாது.

3. உலகே நான் என்பது போன்ற அனுபவங்களை பெறாத காரணத்தினால் முற்றுணர்ந்தோர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லமுடியாது. மற்றவர்களின் நிலையை புரிந்துகொண்டு முக்தியை நோக்கி அவர்களை வழிநடத்த தேவையான அறிவு இல்லாத காரணத்தால் தீர்க்கதரிசிகள் முற்றுணர்ந்தோர்கள் அல்ல.

ஒருவன் பல பெண்களுடன் ஒரே சமயத்தில் உறவாடுவது தவறு என்று எண்ணும் மக்களால் இராச லீலையின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவே முடியாது. ஒவ்வொரு கோபிகையுடனும் ஒரே கோபாலன் நடனமாடும் காட்சி வாழ்வு இன்பமயமானது என்று காட்டுகிறது என்பதை தீர்க்கதரிசிகளும் முற்றுணர்ந்தோர்களும் அறிவர். தங்கள் இராச லீலை அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன்மூலம் தீர்க்கதரிசிகளால் அவர்களுக்கு உதவ முடியாது. முற்றுணர்ந்தோர்களால் வேதம் படித்து முடித்த முக்திவிழைவோர்களுக்கு இராசலீலையை விளக்கி அவர்களும் அந்த அனுபவத்தைபெறும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரமுடியும்.

ஒவ்வொரு மனிதனும் உண்மையில் பரமனே என்பதை ஒரே கிருஷ்ணன் மூலமும் உலகம் என்ற மாயக்கன்னியை கோபிகையாக சித்தரித்து வாழ்வு முழுவதும் இன்ப அனுபவம் மட்டுமே பெற அனைவராலும் முடியும் என்ற கருத்தை இராச லீலை தெரிவிக்கிறது. தன் உடல் மனம் உட்பட்ட உலகம் என்ற கோபிகை பரமனான தன்னால் தன்னுடைய இன்பஅனுபவத்திற்காக படைக்கப்பட்டவள் என்பதை அறிந்தவர்கள் ஒவ்வொரு கோபிகையும் மற்ற கோபிகைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவள் என்றும் அறிவர். தனது இன்பத்திற்கு மற்றவர்தான் காரணம் என்ற அறியாமையுடன் காதலர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பார்கள். உலகம் என்ற காதலியுடன் உறவாடும்பொழுது தான் பெறும் இன்ப அனுபவம்  தன்னிடமிருந்துதான் வருகிறது என்பதை அறிபவர்கள் மற்றவர்களது கோபிகையை பார்த்து பொறாமையோ ஏக்கமோ அடையமாட்டார்கள். தனது கோபிகையுடன் என்றும் இன்பமாக இருக்க முற்றுணர்ந்தோன் மற்றும் தீர்க்கதரிசி ஆகிய இருவரும் அறிவார்கள். காதலர்களின் கண்கள் காதலால் மூடபட்டு சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் சக்தியற்று இருப்பதுபோல் உலகின் மேல் உள்ள காதலில் மூழ்கி தீர்க்கதரிசிககளால் மற்றவர்களுக்கு தீர்க்கமாக பார்க்கும் சக்தி இல்லை என்பதை அறியமுடியாது. தங்களுக்கு இன்பம் மட்டுமே தரும் உலகம் மற்றவர்களை ஏன் துன்பபடுத்துகிறது  என்பதை ஆராய்ந்து அறிந்த முற்றுணர்ந்தோர்களால் மட்டுமே படிப்படியாக பயணம் செய்து  முடிவில் முக்தியடையும் வழியை முக்திவிழைவோர்களுக்கு காட்டித்தரமுடியும்.

உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் உல்லாசத்தீவில் இன்பமாக ஒரு வாரம் இருந்துவிட்டு திரும்பியவன் தன் இனிய அனுபவத்தை விவரித்தபின் அது எந்த இடம் அல்லது அங்கு எப்படி போவது என்ற விவரங்கள் தனக்கு தெரியாது என்று கூறினால் அவனது இன்ப அனுபவங்களை கேட்டவர்கள் ஏக்கத்துடன் ஏமாற்றம் அடைவார்களே தவிர வேறு ஒரு பயனையும் அடைய மாட்டார்கள். அதுபோல தீர்க்கதரிசியை பின்பற்றுபவர்கள் தங்களுக்கும் முக்திகிடைக்காதா என்ற ஆதங்கம் மற்றும் அவரது வார்த்தைகளை முழுதும் புரிந்துகொள்ளமுடியவில்லையே என்ற இயலாமை ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்படுவார்களே தவிர முக்தியை நோக்கி முன்னேற மாட்டார்கள்.

4. முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே தீர்க்கதரிசியின் வார்த்தைகளை முழுவதும் புரிந்துகொள்ள கூடியவர்கள். தங்கள் அறிவிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தீர்க்கதரிசிகளை அவர்கள் மதிப்பார்கள். தங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எல்லோருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை அறியாத தீர்க்கதரிசி முற்றுணர்ந்தோர்களின் அறிவு அனுபவமாக மாறினால்தான் முக்தி என்ற தவறான எண்ணத்துடன் அவர்களை முக்தியடைந்தோர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தீர்க்கதரிசிகளை பொறுத்தவரை மதகுருமார்கள் எங்கும் நிறைந்த கடவுளின் மேல் வெறும் நம்பிக்கையுடைவர்கள், முற்றுணர்ந்தோர்கள் கடவுளைபற்றிய புத்தக அறிவை மட்டும் உடையவர்கள், தாங்கள் மட்டும்தான் கடவுளை நேரடியாக அனுபவிப்பவர்கள். இவர்களின் இந்த தவறான மனப்பான்மை பலரை தவறான பாதைக்கு திசைதிருப்பும். அனைவரும் இன்ப அனுபவத்தை பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இவர்கள் செயல்பட்டாலும் இவர்களின் உபதேசங்களால் முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே பயனைடைவார்கள்.

5. முக்திவிழைவோர்களின் மனம் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களால் கவரப்படும். ஆனால் அவர்களின் அறிவு கூடிய விரைவில் அவர்களை முற்றுணர்ந்தோர்களின் மாணவர்களாக மாற்றும். மனம் விரும்பும் அனுபவங்களை பெற சரியான அறிவை அடையவேண்டும் என்று உணர்பவர்கள் மட்டுமே விரைவில் முக்தியடைவார்கள்.

முற்றுணர்ந்தோர்களின் இன்ப அனுபவங்கள்

எந்த ஒரு குறிப்பிட்ட அனுபவத்தையும் எதிர்பார்க்காமல் நிகழ்காலத்தில் மட்டுமே வாழும் முற்றுணர்ந்தோர்கள் அனைத்து நிகழ்வுகளையும் இன்பமாக அனுபவிப்பர். தான்தான் இன்பத்தின் ஒரே ஊற்று என்றறிந்த முற்றுணர்ந்தோர்கள் மாறும் உலகின் மாற்றங்கள் அனைத்தையும் அவை வேறுமாதிரி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள். உலகம் முழுவதற்கும் ஆதாரம் தான்தான் என்ற அவர்களின் அறிவு அவர்களின் வாழ்நாழ் முழுவதும் இன்ப அனுபவங்களை மட்டுமே பெற அவர்களுக்கு உதவும்.

பற்றுடையோர்கள் தான் ஒரு தனிமனிதன் என்பதை ஆழமாக அறிவதுபோல் முற்றுடையோர்கள் தான் பரமன் என்ற ஆழமான அறிவுடன் செயல்படுவார்கள். தனக்கு அந்நியமாக எதையும் அவர்கள் பார்ப்பதில்லை என்பதால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பம் கலவா இன்பத்தை அனுபவிப்பார்கள்.   

முடிவுரை :

புன்னகையும் நாணமும் இங்கிதபேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஒரு அந்நியமான பெண் உன்னுடன் நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது சொர்க்கங்கள் என்ற வாசகம் உலகம் என்ற கோபிகையுடன் வலம் வரும் கோபாலன் நான்தான் என்பதை உணர்ந்தவர்களின் வாழ்வை விளக்கும். நான் பரமன் என்பதை அனுபவம் மூலம் அறிந்த தீர்க்கதரிசிகளும் என்னை ஆதாரமாக்கொண்டுதான் இந்த உலகம் இயங்குகிறது என்பதை அறிவுபூர்வமாக ஆராய்ந்து அறிந்த முற்றுணர்ந்தோர்களும் வாழ்வில் துன்பமடையமாட்டார்கள். இருவரும் எந்த ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காகவும் காத்திருக்கமாட்டார்கள். எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அந்த அறிவை பெற்றுவிட்ட காரணத்தால் மேலும் எதையும் அறிந்துகொள்ளும் அவசியம் ஆழ்ந்த அறிவை பெற்ற முற்றுணர்ந்தோர்களுக்கு இல்லை. மரணத்தில் மறையப்போகும் உடல் மற்றும் மனம் இயங்கும்வரை கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தையும் இன்பமாக ஏற்க தேவையான ஆழ்ந்த அறிவு இவர்களிடம் இருக்கும்.

பயிற்சிக்காக :

1. மேலெழுந்தவாரியான அறிவிற்கும் ஆழமான அறிவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

2. அறிவிற்கும் அனுபவத்திற்கும் உள்ள உறவு என்ன?

3. நான்கு குழந்தைகளாக வர்ணிக்கப்பட்ட  மனிதர்கள் யார் யார்?

சுயசிந்தனைக்காக :

1.முற்றுணர்ந்தோர்கள் தீர்க்கதரிசியின் உபதேசங்களிலிருந்து எந்த வகையில் பயனடைவார்கள்?

2. சாகாவரம்  மற்றும் மீண்டும் பிறவாவரம் ஆகியவற்றின் சரியான பொருளை ஆராய்க.

3. பயணங்கள் முடிந்துவிடும் என்ற தலைப்பின் முக்கிய நோக்கம் என்ன?

4. மனித உடலுடன் பிறந்தவர்கள் அனைவரும் மனிதர்களே என்ற கருத்தையும் ஒருவர் மற்றவரைப்போல் இருக்க முடியாது என்ற கருத்தையும் ஒப்பிட்டு ஆராய்க.

5. ஓம் பூர்ணமதஹ பூர்ணமிதம் என்று தொடங்கும் சாந்தி பாடத்தின் பொருளை ஆராய்க.

6. ஒரே உலகம் மனிதருக்கு மனிதர் வெவ்வேறு அனுபவங்களை தருவதன் காரணம் என்ன?

7. தீர்க்கதரிசிகளுக்கு அற்புதங்களை செய்யும் சக்தி இருக்குமா?