Sunday, April 11, 2010

Lesson 113: On the job training ( பிரம்ம சூத்திரம் 3.3.24 )

பாடம் 113: இல்லறமே நல்லறம்
பாடல் 383 (III.3.24)

மாணவப்பருவத்தை கடந்ததும் இல்வாழ் பருவத்தில் நுழைய வேண்டிய அவசியத்தையும் அதில் கடைபிடிக்கவேண்டிய தர்மங்களையும் இந்த பாடம் எடுத்துரைக்கிறது.

இல்வாழ் பருவம் என்றால் என்ன?

மனிதன் தனித்து வாழத்தகுதியற்றவன். உடலின் அடிப்படையிலும் மனதின் அடிப்படையிலும் சமூகசூழலில் மற்றவர்களுடன் சேர்ந்து வாழும் வண்ணமே அவன் படைக்கப்பட்டிருக்கிறான். அவனது இன்பங்களுக்கு எப்படி மற்ற மனிதர்கள் காரணமாயிருக்கிறார்களோ அது போல அவன் துன்பத்திற்கும் மற்றவர்களே காரணாமாயிருக்கிறார்கள். கிட்ட உறவு முட்டப்பகை என்றாலும் கூட யாரும் தனித்திருக்க விரும்புவதில்லை. பிறந்தது முதல் இறக்கும் வரை மனிதன் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களை சார்ந்தே வாழ்கிறான்.

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தாய், தந்தை, உடன்பிறப்புகளை உள்ளடக்கிய குடும்பம் என்பதுதான் ஆதாரம். இந்த குடும்ப பொறுப்பை யார் யார் தாங்குகிறார்களோ அவர்கள் இல்வாழ் பருவத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். பணம் சம்பாதிப்பதும் குடும்பத்தை நிர்வகிப்பதும் இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் முக்கிய கடமை. வீட்டில் இருக்கும் வயதானவர்களும் மாணவப்பருவத்தில் இருப்பவர்களும் சமையல் செய்வது, பொருள்களை கடையிலிருந்து வாங்கி வருவது போன்று எவ்வளவு வேலைகள் செய்தாலும் இல்வாழ்வில் இருப்பதாக ஆகாது. மணமான தம்பதிகள் மற்றும் வாழ்க்கைத்துணையை பிரிந்த பின்னும் குடும்ப பொறுப்பை தொடர்ந்து ஏற்று நடத்துபவர்களும் இல்வாழ் பருவத்தில் இருப்பதாக கருதப்படுவார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது இல்வாழ்வு அல்ல.  

மாணவப்பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற வாழ்வு அட்டவணையின் மூன்று கட்டத்தில் இருப்பவர்களுக்கு பணம் சம்பாதிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இவர்களின் வாழ்வுக்கு வேண்டிய அனைத்து பொருள்களையும் கொடுத்து இவர்களை காப்பாற்ற வேண்டியது இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் கடமை. இவர்கள் யாரேனும் பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை குடும்பத்தலைவரிடம் கொடுத்துவிட வேண்டும். பிள்ளைகள் பெயரில் பணத்தை வங்கியில் போடுவதோ வயதானவர்கள் தங்களுக்கென தனியாக பணம் சேர்த்து வைத்திருப்பதோ இயன்றவரை தவிர்க்கப்படவேண்டிய செயல்கள்.

குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் ஏதாவது ஒருவிதத்தில் சார்ந்திருக்கும் விதத்தில்தான் அமைந்திருக்க வேண்டும். கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு போய் பணம் சம்பாதித்தாலும் அவர்கள் இருவரில் ஒருவர்தான் மொத்த வரவு செலவுகளுக்கு பொறுப்பேற்று குடும்பத்தின் நிதிமந்திரியாக செயல்பட வேண்டும். கணவனும் மனைவியும் குடும்பத்தின் அனைத்து பொறுப்பகளையும் தங்களுக்குள் பிரித்து கொண்டு ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கவேண்டும்.

மனிதன் சமூகத்தில் மற்றவர்களை சார்ந்திருக்கும் அதே நேரத்தில் எப்படி எப்பொழுதும் இன்பமாக இருப்பது என்பதை கற்றுக்கொள்ளும் பயிற்சிபள்ளிதான் இல்லறம். எனவே குடும்பத்தில் உள்ள எந்த ஒரு அங்கத்தினரும் சுதந்திரமாக ஒரு விடுதியில் இருப்பதுபோல் மற்றவர்களுடன் சம்பந்தபடாமல் வாழக்கூடாது.     

இல்வாழ் பருவத்தின் ஆரம்பமும் முடிவும்

திருமணம் இல்வாழ் பருவத்தின் துவக்கம். குடும்பபொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அடுத்த தலைமுறை தயாரானதும் இல்வாழ் பருவம் முடிவடைந்து வாழ்வு அட்டவணையின் மூன்றாவது கட்டமான ஓய்வு நிலை துவங்க ஆரம்பித்துவிடும். தசரதன் முகக்கண்ணாடியில் நரை முடியை பார்த்ததும் இராமனுக்கு இளவரசனாக பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்ததை போல பொறுப்புகளை மெதுவாக அடுத்த தலைமுறைக்கு மாற்றி தங்கள் கடமைகளை முறையாக செய்து முடித்துவிட்டு தாங்களாகவே ஓய்வெடுத்துக்கொள்ள வயதானவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

இல்வாழ்வின் அவசியம்

இல்வாழ்வை துவங்குவதிலும் பொறுப்புகளிலிருந்து விலகி ஓய்வெடுத்துக்கொள்ள முடிவெடுப்பதிலும் தனிமனிதனுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. வேதம் கூறும் உண்மைகளை மாணவப்பருவத்திலேயே புரிந்துகொண்டு முக்தியடைந்தவர்கள் இல்வாழ்வில் ஈடுபடவேண்டிய கட்டாயமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இது மிக அவசியம். உடலுறவில் ஈடுபாடு சிறிதும் இல்லை என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் திருமணத்தை தவிர்க்க கூடாது.

மாணவப்பருவம் முடிந்ததும் நிறைய பொருள் ஈட்டி சமூக வளர்ச்சியில் பங்கேற்பது மிக அவசியமான பொறுப்பு. வாழ்வின் முக்கால் பாகத்தில் மற்றவர்களை சார்ந்திருப்பதால் இரண்டாவது கால் பாகத்தில் இல்வாழ்வில் ஈடுபட்டு பொறுப்புகளை ஏற்று நடத்துவது அனைவரின் கடமை ஆகும்.

திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம் என்பது நிச்சயம் நடக்க முடியாத பகல் கனவு. எனவே மாணவப்பருவம் முடிந்ததும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்யும் வரை வேலை செய்பவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் அனைத்தையும் குடும்பத்தலைவரிடம் கொடுத்துவிட வேண்டும். தனக்கென்று சேர்த்து வைக்க திருமணம் ஆகும்வரை யாருக்கும் அதிகாரமில்லை.

திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்தாலும் பெற்றோர்களுடனோ அல்லது உடன் பிறந்தவர்களுடனோ சேர்ந்து குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டுதான் வாழவேண்டும்.


திருமணம் செய்துகொள்வது வசதியாக வாழ்வதற்காகவோ இன்பமாக வாழ்வதற்காகவோ அல்ல. எப்படி எப்பொழுதும் இன்பமாக வாழ்வது என்பதை கற்றுக்கொள்வதற்காகத்தான் வேதம் தனியாக வாழாமல் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நம்மை நிர்பந்திக்கிறது. இல்வாழ் பருவம் நம்மை நாம் மேலும் சுத்தீகரித்துக்கொள்ள நமக்கு கொடுக்கபட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகின்றன. எனவே மரணம்வரை மணம் செய்தவருடன் வாழ்வது அவசியம். யாரொருவர் விவாகரத்து கோருகிறாரோ அவர் வாழ்க்கைத்தேர்வில் தோற்றுவிட்டார் என்று அர்த்தம். பரஸ்பர நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை போன்ற குணங்கள் திருமண வாழ்வுக்கு மட்டுமின்றி பொதுவாகவே எல்லோருக்கும் அவசியம். இந்த நல்ல குணங்களை நம்மிடம் வளர்த்துக்கொள்ள  இல்லறம் ஒரு நல்ல பயிற்சி சாலையாகும்.

இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் கூடுதல் கடமைகள்

ஐம்பெரும்வேள்வி, தானம் மற்றும் தவம் ஆகியவை இல்லறத்தில் இருப்பவர்களுக்கு வேதம் விதித்திருக்கும் மேலதிக கடமைகள் ஆகும்.

ஐம்பெரும்வேள்வி 1: தினமும் ஒரு பத்து நிமிடமாவது பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்த கடவுள், எப்படி பிரார்த்தனை செய்வது போன்றவை அவரவரின் சம்பிரதாயப்படி அமையலாம். காலையில் நம் கடமைகளை துவங்குமுன் பிரார்த்திப்பது நலம். பிரார்த்தனைக்கென்று வீட்டில் குறிப்பிட்ட ஒரு இடத்தை ஒதுக்கி அதில் தனியாக இருந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்வது அவசியம்.

வாரம் ஒருமுறை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று கடவுளை பிரார்த்திக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்திகொடுப்பதும் இல்வாழ்வில் உள்ளவர்களின் கடமையாகும்.

ஐம்பெரும்வேள்வி 2: ஆன்மிக புத்தகங்களையும், வாழ்வில் முன்னேறுவது எப்படி என்பது போன்ற சுயவளர்ச்சி புத்தகங்களையும் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். நல்லவர்கள், பெரியவர்கள், சான்றோர்கள் ஆகியோருடன் கூடி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை அவர்களுடன் சேர்ந்து கலந்தாய்வு செய்தல் வேண்டும். குடும்பம் என்னும் போராட்டத்தில் அவ்வப்பொழுது ஓய்வெடுத்து சான்றோர்களின் வார்த்தைகள் மூலம் புத்தியை தீட்டிக்கொள்ளுவது அவசியம்.

ஐம்பெரும்வேள்வி 3: பெரியவர்களுக்கு பணி செய்தல் மூன்றாம் வேள்வியாகும். ஓய்வு நிலையை அடைந்த பெற்றோரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இல்வாழ்வில் இருப்பவர்களின் தவிர்க்க முடியாத கடமையாகும். பெற்றோர்களை தவிர மற்ற வயதானவர்களுக்கும் மரியாதையுடன் தொண்டு புரிய வேண்டும்.

ஐம்பெரும்வேள்வி 4: உறவினர்கள், நண்பர்கள், நம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள், செருப்பு தைத்தல், முடிவெட்டுதல் போன்ற சேவைகளை செய்பவர்கள் ஆகிய அனைவரிடமும் அன்புடனும் தயையுடனும் நடந்து கொள்ளவேண்டும். வீட்டுக்கு வரும் அனைவருக்கும் உணவளித்து உபசரிக்கவேண்டும். முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

ஐம்பெரும்வேள்வி 5:  மரம், செடி, கொடி போன்ற தாவரங்களை வளர்ப்பதும் ஆடு, மாடு, நாய், பூனை போன்ற மிருகங்களை கனிவுடன் பாதுகாப்பதும் பறவைகளுக்கு நீரும் ஆகாரமும் அளிப்பதும் இல்வாழ்வில் இருப்பவர்களின் கடமையாகும். அரிசி மாவினால் வீட்டுக்கு முன் கோலம் இடுவது போன்ற பாரம்பரிய பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

தானம்: எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் உறவினர்கள், நண்பர்கள், முன்பின் தெரியாத ஏழைகள் ஆகியோர்க்கு பண உதவி செய்வது தானம் ஆகும். பொருள் உதவியை தவிர நேரத்தையும் உழைப்பையும் கூட தானமாக தரலாம்.

இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதை செலவிடுவதும் அவசியமாகும். தானம் என்பது தன்னிடமிருந்து துவங்க வேண்டும். கணவனும் மனைவியும் தங்களது தகுதிக்கு ஏற்ற செலவுகளை செய்ய வேண்டும். இருசக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு வசதியிருந்தால் கடன் வாங்கி கார் வாங்ககூடாது. அதே சமயத்தில் வாகனம் எதுவும் வாங்காமல் கஞ்சத்தனமாக பேருந்தில் செல்வதும் தவறு.

பிள்ளைகளின் படிப்புக்கும் மற்ற அவசிய  தேவைகளுக்கும் வேண்டிய பணத்தை செலவு செய்யவேண்டும். அதே நேரத்தில் ஆடம்பர செலவுகள் செய்து குழந்தைகள் விரும்பியதை எல்லாம் வாங்கி கொடுக்க கூடாது. மனிதனுக்கு இயல்பாக இருக்கும் லோபம் என்னும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத குணத்தை தவிர்க்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அவசியம். ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்என்றோ நாமே குழந்தை நமக்கேன் குழந்தைஎன்றோ குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வது தவறு. வாழ்வின் வசதிகளை அதிகமாக அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலத்திற்காகவோ  குழந்தைகள் பணக்கார சூழ்நிலையில் வாழவேண்டும் என்ற எண்ணத்தாலோ குழந்தைகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளும் வகையில் கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளை வளர்ப்பது நன்று.   

தனக்கு மிஞ்சியதை தானம் செய்ய வேண்டும் என்பதை விட தானம் செய்யத் தேவையான அளவு சம்பாதிக்க வேண்டும் என்பது முக்கியம். குடும்பத்தின் மொத்த வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை தானம் செய்ய ஒதுக்க வேண்டும்.

தினமும் வீட்டில் நாம் மட்டும் தனியாக சமைத்து சாப்பிடாமல் வேலைக்காரர்கள் போன்ற மற்றவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்காகத்தான் இனிப்புகளை அனைவருடனும் பகிர்ந்து உண்ணும் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இல்லறத்தில் இருப்பவர்கள் பொங்கல், கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி என்று எவ்வளவு பண்டிகைகள் இருக்கிறதோ அனைத்தையும் முறைப்படி கொண்டாட வேண்டும்.

தவம்: தன்னைத்தானே வருத்திக்கொள்வது தவம். வெயில் காலத்தில் சிறிது நேரம் மின்விசிறி இல்லாமல் இருப்பது, ஒரு வேளை உணவு உண்ணாமல் விரதம் இருப்பது, ஒரு நாள் பேசாமல் மௌனவிரதம் இருப்பது போன்றவை தவம் ஆகும்.

இல்வாழ்வை துவங்கும் காலத்தில் தவம் என்பதை ஒரு கடமையாக செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் திருமணம் செய்துகொள்வதே ஒரு வகையில் தவம்தான். திருமணத்திற்கு முன் சுதந்திரப்பறவையாக நினைத்தபடி வாழ்வை அனுபவித்துக்கொண்டிருப்பதை திருமணம் செய்ததற்கு பிறகு தியாகம் செய்து நம் வாழ்வுத்துணையாக வருபவருடன் சேர்ந்து இல்வாழ்க்கையில் ஈடுபடுவதே ஒரு பெரிய தவமாகும். பின் பிள்ளைகளை பெற்றவுடன் அவர்களை பேணி வளர்க்க நம்முடைய தூக்கம், உணவு உட்கொள்ளும் நேரம் ஆகியவற்றை பெருமளவு தியாகம் செய்து நம்மையறியாமல் நாம் தவம் செய்து கொண்டிருப்போம். எனவே வேதம் தவம் என்பதை இல்லற வாழ்வின் கடைசி கட்டத்தில் செய்ய வேண்டும் என்று விதித்துள்ளது. குழந்தைகள் வயதுக்கு வந்த பின் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் நிலையில் பெற்றோர்கள் தவம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

கடமைகளின் நோக்கம்

இல்வாழ்வில் இருப்பவர்கள் சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் ஐம்பெரும் வேள்விகள் ஆகும். தானம் மற்றும் தவம் ஆகியவை இல்வாழ்வில் இருப்பவர்கள் வாழ்வின் அடுத்த கட்டமான ஓய்வு நிலைக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதற்காக செய்ய வேண்டிய கடமைகள்.

முடிவுரை :

நாம் நம் வாழ்வின் குறிக்கோளை அடைய இல்வாழ்வு மிக அவசியம். தனியாக செய்ய முடியாத காரியத்தை துணையுடன் செய்வது எளிது என்பதால் வேதம் நம்மை இல்வாழ்வில் ஈடுபட்டு வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக செய்து அதன் மூலம் நம் வாழ்க்கையின் குறிக்கோளை அடையலாம் என்ற வழியை காட்டுகிறது.

இன்பமாக இருப்பதற்காக திருமணம் செய்து கொள்ளகூடாது. இன்பம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்று தெரிந்து கொண்டவரால் மட்டுமே தானும் இன்பமாக இருந்து மற்றவருக்கும் இன்பத்தை கொடுக்க முடியும். திருமணம் என்ற பந்தத்தில் இணையும் இருவரும் மற்றவரிடமிர்ந்து இன்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்த்தால் ஏமாற்றம் அடைவார்கள். விவாகரத்துக்கள் நடப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். இன்பம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதை தேடிகண்டுபிடிக்க நமக்கு உதவுபவர்தான் நம் வாழ்க்கைத்துணைவர் என்ற உண்மையை புரிந்து கொண்டால் நாம் நம் இல்வாழ்வின் கடமைகளை சரியாக நிறைவேற்றி வேதம் காட்டும் சரியான பாதையில் பயணித்து வாழ்வின் குறிக்கோளை அடையலாம்.

பயிற்சிக்காக :

1.இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் யார் யார்?

2.இல்வாழ் பருவத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவது எப்படி?

3.ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

4. இல்வாழ்வில் நுழைய வேண்டிய அவசியம் என்ன?

5. இல்வாழ்வில் இருப்பவர்களின் முக்கிய கடமைகளாக குறிப்பிடப்பட்ட இரண்டு யாவை?

6. வேதம் இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு விதித்த ஏழு கடமைகள் யாவை?

7.இல்வாழ் பருவத்தில் செய்யவேண்டிய கடமைகளின் அடிப்படை நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1.திருமண சடங்குகளில் கூறப்படும் மந்திரங்களின் பொருள்களை ஆராய்க.

2.மாணவப்பருவம் முடிந்ததும் இல்வாழ்வில் ஈடுபடாமல் துறவு மேற்கொள்ளலாமா?

3.கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை செய்து தனித்தனியே பணம் சேர்க்கலாமா?

4.தனக்கு பின்னால் மனைவிக்காக பொருள் சேர்த்து வைப்பது கணவனின் கடமையா?

5. வீட்டு வேலைகள் செய்வதையும் பணம் சம்பாதிப்பதையும் கணவனும் மனைவியும் தங்களிடையே எதன் அடிப்படையில் பிரித்துக்கொள்ள வேண்டும்?

Wednesday, April 7, 2010

Lesson 112: Keep studies independent ( பிரம்ம சூத்திரம் 3.3.23 )

பாடம் 112: இளமையில் கல்
பாடல் 382 (III.3.23)

மனித வாழ்வை நான்காக பிரித்து வாழ்வின் அட்டவணையை கொடுத்த வேதம், முதல் கட்டமான மாணவ பருவத்தில் கற்க வேண்டிய கல்வி, செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை பற்றி சொல்லும் கருத்துக்களை இந்த பாடம் தருகிறது.

கடவுள் பாதி மிருகம் பாதி என்ற கலவையால் செய்யப்பட்டவன் மனிதன்பிறக்கும்பொழுது மிருகமாக இருக்கும் மனிதன் சிறிது சிறிதாக மிருக குணங்களை களைந்து கடவுளின் குணங்களை ஏற்று கடவுளாகவே மாறும் வாய்ப்பு உள்ளதுபட்டாம்பூச்சி முட்டையிலிருந்து வெளிவரும்பொழுது கம்பளிபூச்சியாக இருக்கிறது. பின் தன்னைத்தானே சுத்தீகரித்துக்கொண்டு வண்ணத்துபூச்சியாக வானை வலம் வருகிறது. இதே போல் மனிதன் தாயிடமிருந்து குழந்தையாக பிறக்கும்பொழுது மிருகமாக இருக்கிறான். பின் குருவின் உதவியுடன் கல்வி கற்று தன்னைத்தான் எவ்வளவு தூரம் மாற்றிக்கொள்கிறான் என்பதை பொறுத்து கடவுளின் குணங்களின் விகிதம் அதிகரிக்கிறது. பிறவிகள் தோறும் இந்த முன்னேற்றம் தொடர்வதால் ஒரு சிலர் கடவுளாக மாறி என்றும் குறைவில்லா இன்பத்துடன் வாழ்கிறார்கள். மற்றவர்கள் கடவுளும் மிருகமும் கலந்த மனிதனாக இருந்து முக்தியை நோக்கி பிறவிகள்தோறும் முன்னேறுகிறார்கள்.

பிறந்த குழந்தை ஒரு ஐந்து வயதுவரை தாயின் அரவணைப்பில் அவளை முன்மாதிரியாக கொண்டு வளரும். அதுவரை அதன் உலகமே தாய்தான். ‘நான் சொல்வதை கேட்காவிட்டால் அப்பாவிடம் சொல்லுவேன்என்று தாய் தன் இயலாமையை தெரிவிக்கும் வயது வந்ததும் குழந்தை தந்தையின் பொறுப்புக்கு மாற்றப்படுகிறது. தந்தையின் கட்டுப்பாடும் பல வருடங்கள் நீடிப்பதில்லை. அவர் தன்னால் முடியாதபொழுது பிள்ளைகளை பற்றிய பொறுப்பை குருவிடம் ஒப்படைக்கிறார். தான் தன் காலில் நிற்பதற்கு வேண்டிய பயிற்சியை பெறுவதற்கு குருவை சார்ந்திருக்கும் காலம் மாணவப்பருவம் எனப்படும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தொடர் ஓட்டப்பந்தையத்தில் கைமாற்றப்படும் பொருள் போல மனிதன் சிறு வயதில் ஒருவர் பொறுப்பிலிருந்து மற்றவர் பொறுப்புக்கு மாற்றப்படுகிறான். குருவிடம் பயிலும் மாணவப்பருவம் முடிந்ததும் ஒவ்வொரு தனிமனிதனின் முயற்சியை பொறுத்து அவன் எதிர்காலம் அமைகிறது.

மாணவப்பருவத்தின் ஆரம்பமும் முடிவும்

தந்தையின் பொறுப்பில் உள்ள பிள்ளை குருவின் பொறுப்புக்கு மாறுவது மாணவப்பருவத்தின் ஆரம்பம். எப்பொழுது கல்வி கற்பதைவிட பணம் சம்பாதிப்பதும், குடும்பவாழ்வில் ஈடுபடுவதும், ஆசைகளை யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் நிறைவேற்றிக்கொள்ளும் துடிப்பும் முக்கியமாக தோன்றுகிறதோ அப்பொழுது மாணவப்பருவம் முடிவடைகிறது. கல்வி கற்பது மட்டும்தான் என் வாழ்வின் ஒரே நோக்கம் என்றிருக்கும் காலம்தான் மாணவப்பருவம்.

இல்வாழ்வை ஏற்றுக்கொண்டு பின் பொழுதுபோவதற்காக படிப்பதும், வேலையில் பதவி உயர்வு பெறுவதற்காக மேற்படிப்பை தொடர்வதும் மாணவப்பருவம் என்ற கட்டத்துக்குள் வராது. அதேபோல் இல்வாழ்வை முடித்து ஓய்வு பெற்றவுடன் படிப்பதை முழுநேர வேலையாக ஏற்றுக்கொண்டாலும் அதை மாணவப்பருவம் என்று குறிப்பிட முடியாது.

மாணவ பருவத்தின் கடமைகள்

கற்பது மாணவனின் முதல் கடமை. பெற்றோருக்கும் குருவிற்கும் சேவை செய்வது அடுத்த கடமை. பெரியவர்களை மதித்து அவர்களிடமிருந்து ஏதாவது கற்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் பணிவாக நடந்துகொள்வதும், உடற்பயிற்சிக்கேற்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதும், புத்தியை தீட்டும் வகையில் வடிவமைக்கபட்ட பொழுதுபோக்கு சாதனங்களை உபயோகபடுத்தி மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மாணவப்பருவத்தின் மற்ற கடமைகளாகும்.

மாணவபருவத்தில் செய்யகூடாதவை

பணம் சம்பாதிப்பது மாணவப்பருவத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. பொருளாதார சூழ்நிலை காரணமாக பகுதிநேர வேலை செய்ய நேரிட்டாலும் பெறும் சம்பளத்தை முழுதும் பெற்றோரிடம் கொடுத்துவிட வேண்டும். பணம் சம்பாதிப்பது எப்பொழுது முக்கியமானதாக தோன்றுகிறதோ அப்பொழுதிலிருந்து மாணவப்பருவத்தின் முக்கிய தேவையான கற்கும் திறன் குறையத்துவங்கிவிடும்.

படித்து முடிக்கும் வரை பாலுணர்வை தூண்டும் வகையிலான நட்பையோ பொழுதுபோக்கு சாதனங்களையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடலுறவில் ஆர்வம் ஏற்பட்டால் கல்வி கற்பதற்கு தேவையான கவனம் சிதறடிக்க பட்டுவிடும்.

எந்த செயலை செய்தால் பெற்றோர்களும் ஆசிரியரும் விரும்பமாட்டார்களோ அந்த செயலை மாணவப்பருவத்தில் செய்யகூடாது.

மாணவப்பருவத்தில் கற்க வேண்டியவை

வாழ்க்கையை வாழத்தேவையான அனைத்து அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளும் பருவம் மாணவப்பருவம். விலங்குகளைப்போல உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ மனிதன் பெரிதாக ஒன்றையும் கற்க வேண்டிய அவசியம் இல்லை. விலங்குகளை போலன்றி கடவுளாய் மண்ணில் வாழ வாழ்வில் ஏறக்குறைய கால்பகுதிக்கு மேல்  மாணவப்பருவத்திற்காக செலவழித்து தன் முழுத்திறனையும் உபயோகித்து கல்வி கற்க வேண்டும்.

பிறக்கும்பொழுது அனைத்து குழந்தைகளும் சென்ற பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள அறிவுடனும் தொழில் செய்யும் திறனுடம்தான் பிறக்கின்றன. இவ்வனைத்தையும் நினைவு கூர்ந்து பின் மேலும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு மாணவப்பருவத்தில் கிடைக்கிறது. எவ்வளவு தூரம் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது மாணவருக்கு மாணவர் வேறுபடும். விளையும் பயிர் முளையிலே தெரியும். ஒவ்வொருவரும் தங்கள் முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்து மேலும் முன்னேறும் வகையில் தரமான கல்வி கற்பிக்கபட வேண்டும்.   

1. பொது அறிவு: உலகுடன் உறவாட தேவையான மொழி, கணிதம், அறிவியல் போன்றவை அனைவரும் கற்க வேண்டிய பொது அறிவு, கல்வியின் முதல் படி. தேவையான அளவு பொது அறிவு பள்ளிப்படிப்பை முடிக்கும்பொழுது மாணவர்களுக்கு கிடைத்துவிடும்.

2. தனி அறிவு: ஒவ்வொரு மாணவரும் தங்களது விருப்பத்திற்கேற்ற ஓரிரு துறைகளை தேர்ந்தெடுத்து மற்றவர்களை விட அதிகத்திறன் பெறும் வகையில் கல்வி கற்க வேண்டும். தனி அறிவை வளர்த்துக்கொள்ள கல்லூரி படிப்பு அவசியமாகும்.

தனி அறிவு பணம் சம்பாதிக்க தேவையான தகுதியை பெரும்பாலும் ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அவ்வாறில்லாமல் ஓவியம், பாட்டு, விளையாட்டு என்பது போன்ற போதிய அளவு பணம் சம்பாதிக்க இயலாத துறைகளில் தனி அறிவு இருக்குமேயானால் வேலை வாய்ப்பு அதிகமுள்ள ஏதாவது ஒரு துறையிலும் மேலும் ஒரு தனி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவப்பருவம் முடிந்ததும் திறமைக்கேற்ற வேலையை செய்யத்துவங்குவதுதான் கல்வி கற்பதன் முக்கிய நோக்கம். எனவே வேலை வாய்ப்பு அதிகமுள்ள ஏதாவது ஒரு துறையில் வல்லுனர் என்ற நிலை வரும் வரை தனி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

3. வாழ்க்கைக்கல்வி: ஒரு தென்னங்கன்றை நட்டு உரமிட்டு நீரூற்றி பாதுகாத்து வளர்த்தால் அது மரமாகி மற்றவர்களுக்கு உதவும். அதுபொல ஒரு மாணவனுக்கு பொது அறிவையும் தனி அறிவையும் கொடுத்தால் அவன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உபயோகமாக உழைக்க கூடிய உற்பத்தி திறனுள்ள மனிதனாக மாறுவான். ஆனால் வாழ்க்கையின் நோக்கம் என்ன, எதற்காக கல்வி கற்று, பணம் சம்பாதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள வாழ்க்கை கல்வி அவசியம்.  தனி அறிவு வாழ்வில் பணம் சம்பாதித்து வசதிகளை அதிகபடுத்திக்கொள்ள மட்டுமே உதவும். நிரந்தர பாதுகாப்பையும் குறையாத இன்பத்தையும் தருவது வாழ்க்கை கல்வியே.

பந்தை எப்படி எதிராளியிடம் சிக்காமல் தக்கவைத்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடுவது என்பதை கற்றுக்கொண்டால் மாத்திரம் கால்பந்தாட்ட நிபுணனாகி விட முடியாது. ஆட்டத்தின் நோக்கம் என்ன என்பதை அறியாமல் பந்துடன் இங்கும் அங்கும் வீணே ஓடிக்கொண்டிருப்பது போல வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் பெரும்பாலோர் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

பொருளாதரம், அறிவியல் போன்ற உலகியல் துறைகளில் எல்லை என்று ஒன்றும் கிடையாது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் வெற்றிக்கம்பத்தை தாண்ட முடியாது. ஓட முடியாமல் கீழே விழுவதாலோ அல்லது ஓடியது போதும் என்று நாமே ஓய்வெடுக்க தீர்மானிப்பதாலோ மட்டும்தான் ஓட்டப்பந்தையம் முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் எல்லோரும் மாணவப்பருவத்தை முடித்துவிட்டு ஓட ஆரம்பிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஓட ஆரம்பித்துவிட்டால் அதற்கு பிறகு ஏன் ஓடுகிறோம் என்பதை ஆராய அவகாசம் இருக்காது.

எனவே மாணவ பருவத்தில் வாழ்க்கை கல்வி அவசியம். வாழ்க்கை கல்வியை  உடலாலும் வாக்காலும் செய்ய வேண்டிய சடங்குகள், மனதில் கொள்ளவேண்டிய பண்புகள் மற்றும் புத்தியால் தெரிந்து கொள்ளவேண்டிய  அறிவு ஆகிய மூன்று நிலைகளில் மாணவர்களுக்கு கற்பிக்க பட வேண்டும்.

எவ்வளவு தூரம் தனி அறிவை பெறுவது என்பது அவரவர்களின் அறிவுத்திறனை பொறுத்து மாறுபடும். ஒரு சிலர் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் தனி அறிவை பெற்று நிறைய சம்பாதிக்க கூடிய வேலைகளை பெறுகிறார்கள். ஆனால் பலர் விவசாயம், வணிகம் போன்று உடல் உழைப்பை பிரதானமாக கொண்ட வேலைகளை செய்கிறார்கள். பிறவிகள்தோறும் சேர்த்து வைத்த அறிவின் திறன் மக்களுக்குள் பெரிதும் வேறுபடுவதுதான் இதற்கு காரணம். அவரவர் அறிவுக்கேற்ற தொழிலை செய்து தாங்கள் தற்பொழுது இருக்கும் நிலையிலிருந்து எல்லோரும் இந்த பிறவியில் சிறிது முன்னேற்றம் அடைவார்கள்.

வாழ்க்கை கல்வியை பெறும் தகுதியும் இதுபோல் வேறுபடும். ஒரு சிலரால் வெறும் சடங்குகளை மட்டும்தான் பின் பற்ற முடியும். பெரும்பாலோர் நற்பண்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து தர்மமாக வாழகற்றுக்கொள்வர். வெகு சிலர் வேதம் கூறும் பரம ரகசியத்தை அறிந்து கொண்டு முக்தியை அடைவர்.

வாழ்க்கை கல்விபண்புகள்: புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் உள்ள நீதிகதைகள் மூலமாக உண்மை பேசுதல், நேர்மையாய் நடத்தல், பணிவின் உயர்வு, ஒழுக்கம், துன்புறுத்தாமை, கொல்லாமை, தூய்மை, ஒழுங்கு போன்ற நற்குணங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.

வாழ்க்கை கல்விசடங்குகள்: கடவுளை பற்றியும் கடவுளை ஆராதிக்கும் பூஜை மற்றும் பிரார்த்தனை முறைகளையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ராணுவத்தில் சேர்பவர்களுக்கு நிற்பது, நடப்பது, தேசியகொடிக்கு மரியாதை செலுத்துவது போன்ற சடங்குகளை சொல்லிகொடுத்து அதன் மூலம் தேசபக்தியை உண்டுபண்ணுவது போல வாயால் ஸ்தோத்திரம் சொல்வது, உடலால் பூஜை செய்வது போன்ற சடங்குகளை சொல்லிக்கொடுத்து கடவுள் பக்தியை உண்டு பண்ணவேண்டும்.

மாதா, பிதா, குரு என்று கை மாறிவந்த மாணவன், இந்த பருவம் முடிவதற்குள் இறைவனின் பொறுப்புக்கு மாற்றப்படவேண்டும்.

வாழ்க்கை கல்விஆன்மிக அறிவு: வேதத்தை முறைப்படி கற்றுக்கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு மனிதன், கடவுள், உலகம், வாழ்வின் துன்பத்திற்கு காரணம், துன்பத்திலிருந்து விடுதலைப்பெற செய்யவேண்டிய செயல்கள் மற்றும் விடுதலை பெற்றபின் அனுபவிக்கும் குறைவற்ற இன்பத்தை பற்றிய வர்ணணை ஆகிய ஆறு ஆன்மிக அறிவையும் புகட்ட வேண்டும். வெகு சிலரால் மட்டுமே இந்த அறிவை முற்றிலும் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் மற்றவர்களுக்கு இந்த அறிவு அவர்கள் மனதினுள் தங்கி தகுந்த காலம் வரும்பொழுது அறிவாக மலரும்.

முடிவுரை :

தங்கசுரங்கத்தில் கிடைக்கும் மண்ணை சுத்தம் செய்து அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதைப்போல விலங்குகளின் குணங்களை களைந்து மனிதனை கடவுளாக்கும் பணியில்  கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆசிரியர்களின் துணையுடன் மாணவப்பருவத்தில் எவ்வளவுதூரம் நம்மை நாம் பண்படுத்திக்கொள்கிறோமோ அந்த அளவு நமது வாழ்வு வசதியுடனும் இன்பமாகவும் அமைகிறது. எனவே வாழ்வின் அட்டவணையில் கொடுக்கப்பட்ட நான்கு கட்டங்களில் முதல் கட்டமான மாணவப்பருவத்தில்தான் நம் வாழ்வின் மற்ற மூன்று கட்டங்களை எப்படி வாழப்போகிறோம் என்பதன் அடித்தளம் நிர்ணயிக்கப்படுகிறது.

பயிற்சிக்காக :

1.மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசை எதை குறிக்கிறது?

2. மாணவப்பருவத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு எது?

3.மாணவனின் கடமைகள் யாவை?

4.மாணவபருவத்தில் செய்யக்கூடாத செயல்கள் யாவை?

5. கற்கவேண்டிய மூன்று கல்விகள் யாவை?

6. வாழ்க்கை கல்வி எந்த மூன்று விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது?

7. சடங்குகளின் முக்கியத்துவம் என்ன?


சுயசிந்தனைக்காக :

1. தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு என்ற திருக்குறளின் பொருளை ஆராய்க.

2. கற்கவேண்டிய அனைத்தையும் கற்றால் மாணவப்பருவத்திலேயே முக்தியை அடைந்து விடலாமா?

3.இறைவனாகவே மாறிவிடுவது என்றால் என்ன?

4.இறைவனாகவே மாறிவிட்டால் இல்வாழ்வில் நுழைய முடியுமா?

5.தற்போதைய கல்விதிட்டத்தில் உள்ள குறை என்ன?

Monday, April 5, 2010

Lesson 111: Work and meditation cannot be combined ( பிரம்ம சூத்திரம் 3.3.20-22 )

பாடம் 111: தியானத்தையும் வேலையையும் சேர்க்க கூடாது
பாடல் 379-381 (III.3.20-22)

வேலை செய்வதற்கு பதில் தியானம் செய்து மனத்தூய்மை அடையலாம் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தை வலியுறுத்திய பின் வேலையும் தியானமும் ஒன்றுடன் ஒன்று சேராது என்ற உண்மையை விளக்கி வேலை செய்பவர்கள் தியானம் செய்யகூடாது என்ற அறிவுறையை இந்த பாடம் தருகிறது.

வாழ்வின் அட்டவணை

பள்ளிக்கூடத்தில் எந்த பாடத்தை எப்பொழுது படிக்கவேண்டும் என்பதற்கு ஒரு அட்டவணை இருப்பது போல மனிதன் தன் நூறு வருட வாழ்வை எப்படி வாழவேண்டும் என்பதற்கு வேதம் ஒரு அட்டவணையை கொடுத்துள்ளது. முதல் இருபத்தி ஐந்து வருடங்கள் கல்வி கற்க வேண்டும். இரண்டாவது இருபத்தி ஐந்து வருடங்களில் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு பொருள் ஈட்ட வேண்டும். ஐம்பது வயதிற்கு பிறகு ஓய்வெடுத்துக்கொண்டு ஆன்மிக துறையில் நேரத்தை செலவிட வேண்டும். கடைசி இருபத்தி ஐந்து வருடங்கள் துறவு நிலையில் வாழவேண்டும்.

இருபத்தி ஐந்து வருடங்கள் என்பது ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த நான்கு கட்டங்கள் வெவ்வேறு காலங்களை எடுத்துக்கொள்ளலாம். இருபது வயதில் படித்து முடித்துவிட்டு அறுபது வயதில் ஓய்வு பெறலாம். ஆனால் தற்போது நாம் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

மாணவ பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற இந்த நான்கு கட்டங்கள் மனித உடல் பிறந்து வளர்ந்து தேய்ந்து மறையும் என்ற அடிப்படையில் வகுக்கபட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும்பொழுதும் என்னென்ன செயல்களை செய்யலாம் மற்றும் எவற்றை செய்யக்கூடாது என்று வேதம் வகுத்திருக்கும் திட்டவட்டமான கட்டளைகளை நாம் பின்பற்றவேண்டும்.

வாழ்வின் நோக்கம்

வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் செய்ய வேண்டிய செயல்களை வேதம் தந்திருப்பதற்கு காரணம் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக. என்றும் குறையாத இன்பத்துடன் வாழவேண்டும் என்பதுதான் அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள். இதுதான் முக்தி அல்லது மோக்ஷ்ம். ஆனால் இது பெரும்பாலோருக்கு புரிவதில்லை. குறிக்கோள் என்ன என்று தெரியாவிட்டாலும் அனைவரையும் அவரகளது இந்த ஒரே குறிக்கோளை அடைய உதவி செய்யும் நோக்கத்தோடு வேதம் வாழ்வின் அட்டவணையை நான்காக பிரித்து வழங்கியிருக்கிறது.

என்ன வேலை செய்யவேண்டும் என்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்வது முதல் கட்டமான மாணவ பருவத்தில் வாழ்வின் நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.  இரண்டாவது கட்டத்தில் பணம் சம்பாதித்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதை வாழ்வின் நோக்கமாக வேதம் தருகிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த முதல் இரண்டு கட்டத்தையும் வேதம் சொல்வதுபோல் செய்துவருகிறார்கள்.

எப்போழுது வாழ்வின் உண்மையான நோக்கம் இன்பமாக இருப்பது என்பது மக்களுக்கு புரிகிறதோ அப்பொழுது பணம் சம்பாதிப்பதற்கு முக்கியத்துவத்தை குறைத்துகொண்டு வேதம் படிப்பதற்கு நேரத்தை ஒதுக்க துவங்க வேண்டும். இது வாழ்வின் மூன்றாவது கட்டம்.

குடும்ப பொறுப்புகளை ஏற்றுகொண்டு இரண்டாவது கட்டத்தில் வாழத்துவங்கிய பின் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முற்றிலும் நிறைவேற்றாமல் மூன்றாவது கட்டத்திற்கு செல்லக்கூடாது. பெற்ற பிள்ளைகள் முதல் கட்டத்தை முடித்து இரண்டாம் கட்டத்தில் நுழையும் தகுதி பெற்ற பின்தான் நாம் நம் பொறுப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.

உலகத்தை முற்றும் துறந்து விட்டு வேதம் படிப்பதற்காக முழுநேரத்தையும் செலவிடுவது நான்காவது கட்டம்.

வாழ்வின் ஒரே நோக்கம் முக்தி என்பதை புரிந்து அதை அடைவது எல்லோருக்கும் ஒரே பிறப்பில் சாத்தியமாகாது. வாழ்வின் அட்டவணையின் நான்கு கட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக கடப்பதை திரும்ப திரும்ப அனைத்து பிறவிகளிலும் தொடர்ந்து செய்வதால் மட்டுமே முக்தியை அடைய முடியும்.

வாழ்வு என்னும் செயல் முறைக்கல்வியை தொடர்ந்து கற்று கற்ற அறிவுடன் அடுத்த பிறவிக்கு சென்று நம் பயணங்கள் தொடருகின்றன. ஒவ்வொரு முறை பிறக்கும்பொழுதும் பள்ளிக்கு சென்று அ, , , ஈ என்றுதான் படிக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறோம் என்பது சென்ற பிறவிகளில் எவ்வளவு அறிவை சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை பொருத்தது. எனவேதான் ஒரு சிலர் வேதம் கூறும் உண்மைகளை எளிதில் கற்றுக்கொண்டு இந்த பிறவியிலேயே முக்தியை அடைகிறார்கள். அந்த ஒரு சிலருள் நம் பெயரும் இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்ற நம்பிக்கையுடன் நாம் முயற்சி செய்தால் கூடிய விரைவில் முக்தியடைவோம்.

வாழ்வின் அட்டவணை என்பது வாழ்வின் நோக்கமான முக்தியை அடைவதற்காக வேதத்தால் வகுக்கபட்டது. முக்தியடைந்த பின் வேதம் நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. நம் வாழ்வை எவ்விதத்திலும் வாழலாம். ஆனால் வாழ்வின் அட்டவணை உடலின் மாற்றத்தின் அடிப்படையில் கொடுக்கபட்டுள்ளது என்பதாலும் உடலின் மாற்றம் என்பது ஒருவர் முக்தியடைந்தவரா இல்லையா என்பதை பொருத்து மாறாது என்பதாலும் முக்தியடைந்தவர்களும் இந்த ட்டவணையை தானாக பின்பற்றுவார்கள்.

வாழ்க்கை அட்டவணையின் நான்கு கட்டங்களையும் வேதம் சொல்லும் முறைப்படி கடந்தால் வாழ்வின் நோக்கத்தை நாம் விரைவில் அடையலாம். அவ்வாறு அடைந்தபின் நமது உடல் வலிமைக்கும் மனவிருப்பத்திற்கும் ஏற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை இன்பமாக கழிக்கலாம்.

உலகியல் வாழ்வும் ஆன்மிக வாழ்வும் (Material life and Spiritual life)

வாழ்க்கை அட்டவணையின் முதல் இரு கட்டங்களும் அடுத்த இருகட்டங்களுக்கு படிகட்டுகள். பொருள் சம்பாதித்து ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வது என்பது உலகியல் வாழ்வு என்றும் அது ஆன்மிக வாழ்விலிருந்து வேறானது என்றும் பரவலாக நம்பபட்டு வருகிறது.  குடும்பவாழ்வின் பொறுப்புகளை சரிவர செய்ய முடியவில்லை என்பதற்காக அதை உதறிவிட்டு ஆன்மிக வாழ்க்கைக்கு செல்கிறேன் என்பது பள்ளியில் சரியாக படிக்க முடியவில்லை என்பதற்காக கல்லூரிக்கு போகிறேன் என்பதற்கு சமம்.

உலகத்தில் நாம் ஏற்றுக்கொண்ட கடமைகளை சரிவர செய்தால்தான் வாழ்வின் குறிக்கோளை அடைய நம்மால் முடியும். இது தெரியாமல் பலர் ஆன்மிக வாழ்வு என்பது குடும்ப வாழ்விலிருந்து வேறுபட்டது என்ற எண்ணத்தில் இதிலிருந்து அதற்கு தாவ முயற்சிகள் செய்கிறார்கள். தியானம் என்பது ஆன்மிக சாதனையாக கருதப்பட்டு குடும்பவாழ்வில் துன்பம் அதிகரிக்கும்பொழுது மக்கள் தியானம் செய்ய முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

முடிவுரை :

வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வேதம் விதித்த அட்டவணையின் படி நான்கு கட்டங்களையும் முறையே கடந்தால்தான் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும். ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த முயற்சியின் பலனாக இந்த பிறவியில் நம்மால் வேகமாக முன்னேற முடியும். ஆயினும் ஏற்றுக்கொண்ட கடமைகளை முறைப்படி முடித்தபின்தான் அடுத்த கட்டத்துக்குள் நுழைய வேண்டும். ஒரு வகுப்பில் நன்றாக படித்து தேர்வில் தேறியபின்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடிவதுபோல இல்வாழ் பருவத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றிய பின்தான் ஓய்வு நிலைக்கோ துறவு நிலைக்கோ செல்ல முடியும்.

துரோணரையும் பீஷ்மரையும் கொல்வதை தவிர்க்க அர்ஜுனன் காட்டுக்கு தவம் செய்ய சென்றிருந்தால் அவனால் அங்கு ஒரு சில நாட்கள் கூட தியானத்தில் அமர்ந்திருக்க முடியாது. அவன் மனம் போரில் என்ன நடந்ததோ என்ற எண்ணத்தில் அலைக்கழிக்கப்பட்டு மறுபடியும் போர்க்களத்திற்கு திரும்பியிருப்பான். வாழ்வு அட்டவணை என்பது ஒரு வழிப்பாதை. ஓய்வு நிலைக்கு சென்ற பின் அல்லது துறவு நிலைக்கு சென்ற பின் மீண்டும் மாணவப்பருவத்திற்கோ இல்வாழ் பருவத்திற்கோ திரும்பமுடியாது. தொட்டில் முதல் சுடுகாடுவரை நடக்கும் வாழ்வு ஒருவழிப்பாதை என்பதால் ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்து முடித்தபின்தான் அடுத்த கட்டத்தின் கடமைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 

வேலை செய்து பணம் சம்பாதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்று நடத்தும் இரண்டாம் கட்டத்தில் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் முறையே செய்து முடிக்காமல் மூன்றாம் கட்டத்தில் செய்ய வேண்டிய தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது.

பயிற்சிக்காக :

1.வாழ்வின் அட்டவணையின் உள்ள நான்கு கட்டங்கள் யாவை?

2.இந்த அட்டவணை எதன் அடிப்படையில் வேதத்தால் கொடுக்க பட்டுள்ளது?

3.இந்த அட்டவணையை கொடுக்கும் நோக்கம் என்ன?

4.முக்தி என்றால் என்ன?

5.இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் ஏன் தியானம் செய்யக்கூடாது? 

சுயசிந்தனைக்காக :

1.வாழ்வின் அட்டவணையை பின்பற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகள் யாவை?

2.ஒவ்வொரு கட்டத்திலும் செய்யவேண்டிய கடமைகள் யாவை?

3.அட்டவணையில் இரண்டாவது கட்டத்தில் உள்ளவர்களைத்தவிர மற்ற மூன்று கட்டங்களில் உள்ளவர்கள் தியானம் செய்யலாமா?

4. மனம் ஒருமைப்படவும் மனதை அமைதிபடுத்தவும் தியானம் செய்யக்கூடாதா?

5. மாணவப்பருவம் முடிந்ததும் இல்லறத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் துறவறம் மேற்கொள்ளலாமா?

Thursday, April 1, 2010

Lesson 110: Purity through meditation ( பிரம்ம சூத்திரம் 3.3.19 )

பாடம் 110: தியானத்தின் மூலம் மனத்தூய்மை
பாடல் 378 (III.3.19)

முறையாக வேலை செய்வதற்கு பதில் தியானம் செய்து மனத்தூய்மை அடையலாம் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தை தியானத்தை பற்றிய சில அடிப்படை உண்மைகளை கொடுத்து இந்த பாடம் விளக்குகிறது.

தியானம் என்றால் என்ன?

ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் முன் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்திப்பது தியானம் இல்லை. அதேபோல் வேலையை சரியாக செய்யவேண்டும் என்று தனக்கு தானே மனதுக்குள் சொல்லிக்கொள்வதும் (auto suggestion) தியானம் அல்ல. தியானம் என்பதை முறைப்படி ஆசிரியரிடம் கற்காமல் நாமாக ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதையும் மனதில் எவ்வித எண்ணங்களும் இல்லாமல் மனதை காலியாக வைத்துக்கொள்ள முயல்வதையும் தவிர்ப்பது நல்லது.

மனதை மனதால் தூய்மை படுத்த செய்யப்படும் செயல் தியானம்.  பொதுவாக நாம் மனம், வாக்கு, உடல் என்ற மூன்றின் அடிப்படையில் செயல்களை செய்கிறோம். தியானம் செய்யும்பொழுது உடலாலும் வாக்காலும் எவ்வித செயல்களும் செய்யக்கூடாது. பார்த்தல், கேட்டல், நுகருதல், சுவைத்தல், தொட்டுணர்தல், பேசுதல், கை கால்களை அசைத்தல் ஆகிய செயல்களை முற்றிலும் தவிர்த்து மனதில் தோன்றும் எண்ணங்களை முறைப்படுத்தி ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது தியானம்.

தியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் எதற்காக தியானம் செய்கிறோம் என்பதை பற்றிய தெளிவு அவசியம். ஓயாமல் வேலை செய்வதால் ஏற்படும் அலுப்பையும் களைப்பையும் நீக்கி கொள்வதற்காக தியானம் செய்வதற்கு பதில் ஒரு குட்டி தூக்கம் போடுவது அதிக பலனை கொடுக்கும்.

தியானம் செய்வதால் நமது செயல்திறன் அதிகமாகும் என்றாலும் செயல்திறனை அதிகபடுத்தும் நோக்கில் மனதை தயார் செய்துகொள்வது தியானம் ஆகாது. பரமனை பற்றிய ஞானத்தை பெற மனதை தகுதியுடைதாக்கி கொள்ளவும் பெற்ற ஞானம் நிலைபெறவும் செய்யும் செயல்கள் மட்டுமே தியானம் ஆகும்.

எண்ணங்களின் உற்பத்தி

கண், காது, நுகரும் மூக்கு, சுவைக்கும் நாக்கு மற்றும் தொட்டுணரும் தோல் ஆகிய ஐந்து புலன்கள்தான் எண்ணங்கள் உற்பத்தியாகும் இடம். இந்த ஐந்து புலன்கள் சுற்றியிருக்கும் உலகை படம் பிடித்து மனதிற்கு அனுப்ப அங்கு அவை எண்ணங்களாக பதிவு செய்யப்படுகின்றன.

பார்த்தல், கேட்டல், நுகருதல், சுவைத்தல், தொட்டுணர்தல் போன்ற செயல்களை செய்யா விட்டால் நம் மனதில் புதிய எண்ணங்கள் எதுவும் தோன்றவே தோன்றாது. ஏற்கனவே நம் சித்தத்தில் பதிந்துள்ள எண்ணங்கள் மட்டும்தான் மனதில் அவ்வப்பொழுது தோன்றி மறையும். ஆலோசனை, சிந்தனை, யோசித்தல், பகல் கனவு காணுதல், பழைய நினைவுகளை அசை போடுதல், நாளை என்ன நடக்குமோ என்று கவலை படுதல் போன்றவை மனதில் நடக்கும் செயல்கள்.

பொதுவாக மனதில் தோன்றும் எண்ணங்களை தீர்மானிப்பது வெளியுலகம். ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்பொழுது அதில் உள்ள கருத்துக்கள் எண்ணங்களாக மனதில் உருவாகிக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் சமையலறையிலிருந்து காபியின் மணம் வந்தால் காபி பற்றிய எண்ணம் தோன்றும். உலகில் வாழ இதுபோன்று உலகை பற்றிய எண்ணங்கள் ஏற்படுவது அவசியம். சுற்றியிருக்கும் உலகத்துடன் சம்பந்தபடாமல் எப்பொழுதும் ஏதாவது விநோதமான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டுகொண்டிருந்தால் நாம் பைத்தியம் என்று அர்த்தம். ஐந்து புலன்கள் மூலமாக வெளிஉலகில் இருந்து மட்டுமே அனைத்து எண்ணங்களும் நமக்கு வருகின்றன. தியானம் எவ்வித புதிய எண்ணங்களையோ அறிவையோ உற்பத்தி செய்யாது.

தியானமும் எண்ணஓட்டங்களும்

ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்பொழுது ஐந்து புலன்கள் மூலம் உலகத்தை உணர்வதை தற்காலிகமாக நம்மையறியாமல் நிறுத்திவைப்பது எல்லோரும் சாதரணமாக செய்யும் காரியம். இந்த சமையங்களில் நாம் உடலாலும் வாக்காலும் எவ்வித செயல்களையும் செய்வதில்லையாகையால் இது ஒருவகை தியானம் எனலாம். ஆனால் நான் இப்பொழுது தியானம் செய்யப்போகிறேன் என்று கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தவுடன் மனதில் ஏற்படும் தொடர் எண்ண ஓட்டங்கள் தியானம் ஆகாது.

மனதில் ஏற்படும் எண்ண ஓட்டங்களை வெளியுலகம்தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர தியானம் செய்வதன் மூலம் மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக் கொள்ள முடியாது. வெளியுலகிலிருந்து விலகி தியானம் செய்வதற்காக சில நிமிடங்கள்தான் நம்மால் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்த முடியும்.   

எண்ணங்களும் செயல்களும்

செயல்களுக்கு அடிப்படை எண்ணம் என்பது எளிமையாக புரியக்கூடிய விஷயம். ஆனால் எண்ணங்களுக்கு அடிப்படை செயல் என்பதை புரிந்து கொள்வது சிறிது கடினம். கோவிலுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினால்தான் கோவிலுக்கு செல்வோம். அடிக்கடி கோவிலுக்கு சென்றால்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். இதுபோல் நம் அனைத்து எண்ணங்களும் நம் செயல்களை ஆதாரமாக கொண்டும் நம் அனைத்து செயல்களும் நம் எண்ணங்களை ஆதாரமாக கொண்டும் இருக்கின்றன.

எனவே செயல்களை செய்ய நமக்கு இருப்பதாக தோன்றும் சுதந்திரம் ஒரு மாயை. என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறோம். என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த சுழற்சியின் ஆரம்பம் நம் சுற்றுபுற சூழ்நிலை. எனவேதான் கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்ற உபதேசத்தை கடைபிடிப்பது அவசியம்.

தியானம் செய்யலாமா?

இதுபோல் நாம் சூழ்நிலையின் கைதியாக இருக்கும்வரை மனதில் உள்ள அழுக்குகள் தொடர்ந்து அதிகரிக்குமே தவிர குறையாது. இந்த நிலையில் மனதை தூய்மைபடுத்த தியானம் சிறிதும் உதவாது. சாலையிலிருக்கும் புழுதி தொடர்ந்து வீட்டுக்குள் வந்தவண்ணம் கதவை திறந்து வைத்துக்கொண்டு வீட்டை எப்படி பெருக்கி சுத்தம் செய்ய முடியதோ அது போல வாழும் வாழ்க்கையின் தரம் தொடர்ந்து கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளை மனதில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது தியானம் மூலம் மனதை தூய்மைபடுத்தவே முடியாது.

மனம் ஒன்றாமல் பணத்திற்காக வேலை செய்வது, அதிக பணம் சம்பாதிப்பதன் மூலம் இன்பத்தை பெறலாம் என்று எண்ணுவது, நம்மிடம் உள்ள பொருள்கள் மீதும் நம்மைச்சேர்ந்த மக்களிடமும் பற்று வைப்பது போன்ற செயல்களை நாம் செய்யும் வரை நமக்கு தியானம் ஒரு பலனையும் தராது. 

பதினைந்து நிமிடங்கள் செய்யும் தியானத்தின் வெற்றி, தூங்கும் நேரம் உட்பட்ட எஞ்சியுள்ள இருபத்திநாலேமுக்கால் மணிநேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதை பொறுத்தே அமையும். அலுவலகத்தில் அதிக வேலையிருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் வீட்டில் உள்ள பிரச்சனைகளை மறப்பதற்காகவும் தியானம் செய்ய அமர்ந்தால் தியானம் என்ற பெயரில் தூக்கம் வரலாமே தவிர மனக்கட்டுப்பாட்டையோ அமைதியையோ அடையவே முடியாது.

முடிவுரை :

செயல்கள் மூலமாகத்தான் மனதை தூய்மை படுத்தவேண்டும். மனம்போன போக்கில் வாழ்வை அமைத்துக்கொண்டு நிம்மதிக்கும் இன்பத்திற்கும் தியானம் செய்ய முயல்வது சரியல்ல. தியானம் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் மனதை தூய்மை படுத்த அதை ஒரு குறுக்கு வழியாக உபயோகித்தால் நாம் நிச்சயம் தோல்வியடைவோம்.

அஷ்டாங்க யோகம் என்னும் தனது யோக சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் தியானம் செய்வது எப்படி என்று விவரித்திருக்கிறார். அதில் வரும் முதல் கருத்து, செய்யக்கூடாத செயல்களை தவிர்த்து செய்யவேண்டிய செயல்களை செய்யும் வழியில் நம் வாழ்வு முறையை சரிசெய்யவேண்டும் என்பதாகும். இவற்றை முறையாக அறிந்து கொள்ளாமல் தியானம் செய்வது தவறு.

எனவே வேலைகளை முறையாக முழு கவனத்தையும் செலவிடுதல் அவசியம்.

பயிற்சிக்காக :

1. தியானம் என்றால் என்ன?

2.எண்ணங்கள் எவ்வாறு உறுவாகின்றன?

3.எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

4.மனதில் நடக்கும் செயல்கள் யாவை?

5.எவை தியானம் அல்ல?

6.தியானம் மூலம் புதிய அறிவை அடைய முடியுமா?

சுயசிந்தனைக்காக :

1. மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் கட்டுபடுத்த முடியுமா முடியாதா?

2. ஆழ்ந்து சிந்திப்பதற்கும் தியானத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

3.கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?