Showing posts with label song. Show all posts
Showing posts with label song. Show all posts

Wednesday, May 29, 2013

Lesson 186: Nature of happiness of the liberated souls (Brahmasutra 4.4.4)

பாடம் 186: ஞானியின் இன்பங்கள்
பாடல்: 537 (IV.4.4)

ஞானிகள் மற்றவர்களைப்போல் உலக இன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்ற தவறான கருத்தை அகற்றும் வகையில் ஞானியின் இன்பங்களை இந்தப் பாடம் வர்ணனை செய்கிறது.

சாந்தோகிய மந்திரம் (8.12.3) ‘உடலை உதறிவிட்டு சுய உருவில் வெளிப்படும் ஞானி, சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும், பல பெண்கள், வாகனங்கள், உறவுகள் போன்ற இன்பங்களை அனுபவித்து இவ்வுலகில் வளைய வருவான்என்று கூறுகிறது.  மற்றவர்கள் கூட இதுபோல இன்பம் அனுபவிப்பார்கள் என்றாலும் அவர்களது வாழ்வில் துன்பமும் சம அளவில் கலந்து இருக்கும். இன்பம் உலகில் இருந்து கிடைப்பதாக அவர்கள் எண்ணுவதால் உலகில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அவர்கள் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படும்இன்பம் பற்றிய முழுமையான அறிவு ஞானிக்கு இருப்பதால் அவனால் மட்டுமே துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ முடியும்.

இன்பம் என்றால் என்ன?

சர்க்கரையின் இயல்பு இனிப்பு. அதுபோல பரமனின் இயல்பு இன்பம். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரமனின் வெளிப்பாடு என்பதால் புவிமேல் இயற்கையினாலே இயங்கும் எழில்வளம் எல்லாம் இன்பமயம்.

சர்க்கரையை நாவினால் சுவைத்தால் மட்டுமே இனிப்பை அனுபவிக்க முடியும். அதுபோல பரமனின் இன்பத்தை அனுபவிக்க மனம் தேவை. மனதைநான்’, ‘எனதுஎன்ற அகங்காரம் ஆக்ரமித்துக்கொண்டு இருக்கும்போது இன்பத்தை அனுபவிக்க முடியாது. ‘இன்பமாக இருக்க எனக்கு இது வேண்டும்என்ற எண்ணம் நம்மை இன்பத்தை அனுபவிக்கவிடாமல் தடுத்துக்கொண்டு இருக்கும். வேண்டிய பொருள் கிடைத்துவிட்டால் இந்த எண்ணம் மனதில் இருந்து மறைந்து பரமனின் இயல்பான இன்பம் மனதில் பிரதிபலிக்கும்

இன்பம் எனது இயல்புஎன்பதை அறிந்தவர்கள் ஞானிகள். அறியாதவர்கள் அஞ்ஞானிகள். இது மட்டுமே இருவருக்கும் இடையே இருக்கும் வேறுபாடு. ‘நான் பரமன்என்பதை ஞானிகள் அறிந்து இருந்தாலும் மற்ற மனிதர்களுடன் உறவாட நான் மனிதன்என்ற அகங்காரம் அவர்கள் மனதிலும் நிறைந்து இருக்கும். எனவே இந்த அகங்காரம் மறையும் நேரங்களில் மட்டுமே ஞானிகளாலும் இன்பத்தை அனுபவிக்க முடியும். மேலும், மனம் செயல்பட உலக உறவு அவசியம் என்பதால் இன்ப அனுபவத்தைப்பெற ஞானிகளுக்கு கூட உலக உறவு அவசியம்.

மற்றவர்கள் உலகில் இன்பத்தை தேடுவதால் அவர்கள் அவ்வப்போது இன்பத்தை அனுபவிப்பார்கள். நானே உலகம் என்பதை ஞானிகள் அறிந்து இருப்பதால் அவர்களால் எப்போது வேண்டுமானாலும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

பொருள்களில் இருந்து இன்பம் வருகிறது என்று மற்றவர்கள் நினைப்பதால் விரும்பிய பொருள்கள் கிடைக்காவிட்டால் அவர்கள் துன்பம் அடைவார்கள். தான் மட்டுமே இன்பத்தின் ஆதாரம் என்று அறிந்த ஞானிகளால் எந்த சூழ்நிலையிலும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

அழகிய ரோஜா மலர் செடியில் பூத்திருப்பதை பார்க்கும்பொழுது ஞானி அதை தன்னில் இருந்து வேறுபட்ட ஒரு பொருளாகப் பார்ப்பதில்லை. தன் மாயா சக்தி எப்படி மலராகக் காட்சி அளிக்கிறது என்ற எண்ணத்தில் மூழ்கி அவன் இன்பத்தை அனுபவிப்பான். மற்றவர்கள் அந்த மலரை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த ஆசை நிறைவேறினால் மட்டுமே இன்பம் அடைவார்கள்.

ஞானிக்கு தானே இந்த உலகம் என்ற அறிவு இருப்பதால் எதையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்படுவதில்லை.

புலன் இன்பம்

மனதால் உலகுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. எனவே உலகுடன் உறவாட புலன்கள் அவசியம். புலன்கள் பொருள்களுடன் தொடர்பு கொள்வதால் மட்டுமே மனதில் அனுபவங்கள் ஏற்படும். எனவே, நமது இயல்பான இன்பத்தை அனுபவிக்க புலன்களும் மனதும் அவசியம். இந்த விதி ஞானிகளுக்கும் பொருந்தும்.

ஆழ்ந்த உறக்கம், சமாதி ஆகிய இரண்டு நிலைகளில் மட்டுமே எந்தப் பொருள்களுடனும் தொடர்பு இல்லாமல் நம்மால் இன்பமாக இருக்கமுடியும். ஆனால் இந்த இரண்டு நிலைகளில் மனம் முழுவதுமாக மறைந்துவிடும் என்பதால் நாம் இன்பமாக இருந்தோம்என்பது பிறகுதான் நமக்குத் தெரியவரும்.

எனவே, இன்பத்தை அனுபவிக்க நமக்கு புலன், பொருள், மனம் ஆகிய மூன்று ஜடப்பொருள்கள் அவசியம்.

பல பாத்திரங்களும் பல தட்டுக்களும் இருந்தாலும் ஒரு சில தட்டுக்களை மட்டுமே ஒரு சில பாத்திரங்களுக்கு மூடியாக உபயோகிக்க முடியும். அதுபோல உலகில் பல்வேறு பொருள்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே ஒருவரின் புலன்களுக்கு உகந்ததாக இருக்கும். ஒரு சிலருக்கு உப்புமா பிடித்தமான உணவாகவும் வேறு சிலருக்கு அது பிடிக்காத பொருளாகவும் இருக்கலாம். பிடித்தபொருளை புலன் அனுபவிக்கும்பொழுது அகங்காரம் அகன்று மனம் நிம்மதியாக இருப்பதால் இன்ப அனுபவம் ஏற்படுகிறது.

எனவே, மனிதர்கள் தங்கள் ஐந்து புலன்கள் மூலம் உலகத்துடன் உறவாடும்பொழுது, புலன்களுக்கு பிடித்தமான வகையில்தான் பொருள்கள் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மனதில் இருக்கும். பிடித்ததை பெறவும் பிடிக்காததை தவிர்க்கவும் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவார்கள். இந்த முயற்சியில் அவர்களால் எப்போதும் வெற்றி அடைய முடியாது. வெற்றி தோல்விகள் மாறி மாறி ஏற்படும் வகையில்தான் உலகம் படைக்கப்பட்டு உள்ளது. எனவேதான் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படுகிறது.

இந்த உண்மையை ஞானிகள் உணர்ந்திருக்கும் காரணத்தால் தங்களுக்கு பிடித்த பொருள்களை அனுபவிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருக்காது. பிடிக்காத சூழ்நிலையில் வாழவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டாலும்இது விரைவில் மாறிவிடும்என்ற அறிவு அவர்களிடம் இருப்பதால் அவர்களால் தொடர்ந்து இன்பமாக இருக்க முடியும்.

இன்பத்தின் வகைகள்

உலகத்தில் உள்ள பொருள்களை ஐந்து புலன்கள் மூலம் அனுபவிக்கும்பொழுது மனதில் தோன்றும் இன்ப அனுபவத்தில், வகைகள் ஏதும் இல்லை. இளமையில் அனுபவிக்கும் இன்பம் முதுமையில் அனுபவிக்கும் இன்பத்தில் இருந்து வேறுபட்டதல்ல. அதேபோல் பொருள்களை திருடியவுடன் அந்தத் திருடன் அனுபவிக்கும் இன்பம், திருட்டுப்போன பொருள்களை திரும்பப் பெற்றவன் அனுபவிக்கும் இன்பத்திலிருந்து வேறுபட்டதல்ல. இனிமையான பாடலைக் கேட்கும்பொழுது ஏற்படும் இன்பம், நல்ல புத்தகத்தைப் படிக்கும்பொழுது ஏற்படும் இன்பத்தைப்போன்றதே. இந்த உலகில் கிடைக்கும் இன்பம் சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பத்தில் இருந்து வேறுபட்டதல்ல.

ந்த புலன் மூலமாக, யாருக்கு, எப்போது இன்பம் ஏற்படுகிறது என்பது போன்ற விவரங்களில் மாறுதல் இருக்கலாமே தவிரஇன்பம்என்பதில் எவ்வித வேறுபாடும் கிடையாது.


இன்பத்தின் அளவு

பரமனின் இயல்பான இன்பம் அளவு கடந்தது. ஆனால் மனதின் மூலம் நாம் பெறும் இன்ப அனுபவம் அளவுக்கு உட்பட்டது. விரும்பிய பொருள் இருக்கிறது என்ற அறிவு பிரியம் என்ற முதல் அளவு இன்பத்தைக் கொடுக்கும். அந்தப்பொருளை அடைந்தபின் மோதம் என்ற இரண்டாம் அளவு இன்பம் ஏற்படும். அந்தப்பொருளை அனுபவிக்கும்பொழுது பிரமோதம் என்ற மூன்றாம் அளவு இன்பம் பிறக்கும்.

இதுபோல் வெவ்வேறு அளவு இன்ப அனுபவம் ஏற்படுவதில் ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

மனதில் தோன்றும் இன்ப அனுபவம் வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். மாறுவது மனம். எனவே, மனதில் எவ்வளவு காலம் இன்ப அனுபவம் தொடரும் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். வெகு காலம் முயன்று தனது மகள் திருமணத்தை நிச்சயம் செய்த தந்தை அதை நினைத்து பல நாட்கள் இன்பமாக இருப்பார். திருமணம் தொடர்பாக எந்த கஷ்டம் ஏற்பட்டாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் இன்பத்தில் மூழ்கி இருப்பார். அதுபோல ஞானிக்குநான் பரமன்என்ற அறிவு ஏற்பட்ட பின் அதை நினைத்து எப்போதும் இன்பமாக இருப்பான்.


இன்பமும் மனமும்

இன்பம் பரமனின் இயல்பு. அது மாறாதது. நிலையானது. என்றும் இருப்பது.

மனம் மாயை. தொடர்ந்து மாறுவது. விழித்த பின் தோன்றி ஆழ்ந்த உறக்கத்தில் மறைவது.

இன்ப அனுபவம் மனதில் ஏற்படுவது. இன்பம் நிலையானது என்றாலும் இன்ப அனுபவம் நிலையானதாக இருக்க முடியாது. ஏனெனில் மனம் தொடர்ந்து மாறும் இயல்பை உடையது. தொடர்ந்து எரியும் நெருப்புச் சுடர்தான் விளக்கு. தொடர்ந்து மாறும் எண்ணங்கள்தான் மனம். அலைபாயாமல் ஒரே எண்ணத்தில் ஆழ்ந்து இருக்கும்போது இன்ப அனுபவம் ஏற்படுகிறது. ஆனால் மாயையான உலகம் மாறிக்கொண்டே இருப்பதால் ஒரே எண்ணத்தில் வெகுநேரம் மூழ்கி இருக்க முடியாது.

உலகத்தின் இயக்கம் இன்பத்தை ஆதாரமாகக் கொண்டது
. மனதின் நிலை உலகின் மாற்றத்தைப் பொருத்தது. சூழ்நிலைக்கு ஏற்ப மனம் மாறிக்கொண்டே இருக்கும்.

மனம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பவன் அஞ்ஞானி. இந்த எதிர்பார்ப்பு எப்போதும் நிறைவேறாது. எனவேதான் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படுகிறது. மாறுவது மனம் என்பதை அறிந்த ஞானி, தான் இன்ப வடிவானவன் என்ற அறிவில் எப்போதும் நிலைத்து நிற்பான். இன்ப அனுபவங்கள் ஒரு சில நிமிடங்களில் மாறிவிடும். அதேபோல் துன்ப அனுபவங்களும் விரைவில் மாறிவிடும். மாறும் மனம் நான் அல்ல என்பதை அறிந்த ஞானியால் மட்டுமே மாற்றங்களை முழுவதுமாக இரசிக்க முடியும். இதைத்தான்  உலக இன்பங்களை அனுபவித்து இவ்வுலகில் வளைய வருவான்என்று சாந்தோகிய உபநிஷதம் குறிப்பிடுகிறது. மற்றவர்கள் இன்ப அனுபவங்கள் மாறிவிட்டதை நினைத்து துக்கப் படுவார்கள். ஞானிக்கு இந்த துக்கம் அறவே கிடையாது.

மனிதன் இன்பமாக இருக்கும் வேளைகளில் மட்டும்தான் அவனால் புலன் இன்பங்களை அனுபவிக்க முடியும். துன்பத்தில் மூழ்கி இருக்கும்போது தேன் கூட இனிக்காது. ஆனால் ஞானி தான் இன்ப உருவானவன் என்பதை அறிந்து இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அவனால் உலக இன்பங்களை அனுபவிக்க முடியும்.

தானே உலகம் என்ற அறிவு ஏற்பட்டவுடன் உலக இன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பது ஞானியின் இயல்பாக ஆகிவிடும்.


இன்பத்தின் ஊற்று

இன்பம் இருப்பது பரமனிடம் மட்டுமே. பிரபஞ்சம் இந்த இன்பத்தின் வெளிப்பாடு. எனவே, யாரும் துன்பப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த உண்மையை அகங்காரம் மக்களிடம் இருந்து மறைத்துவிடுகிறது. பௌர்ணமி அன்று முழுநிலவாக இருந்தது அமாவாசை அன்று முழுவதும் மறைவது போல விழித்து இருக்கும் நேரங்களில் மனதை முழுதாக ஆக்ரமிக்கும் அகங்காராம் ஆழ்ந்த உறக்கத்தில் அழிந்து விடுகிறது. எனவேதான் ஆழ்ந்த உறக்கத்தில் அனைவரும் ஆனந்தமாக இருக்கின்றனர்.

பரமனின் இன்பம் மனதில் பிரதிபலிக்கும்பொழுது நாம் இன்ப அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இந்தப் பிரதிபலிப்பை பெரும்பாலான நேரங்களில் அகங்காரம் மறைத்துவிடுகிறது. புலன் இன்பங்களில் மூழ்கி தன்னை மறந்த நிலையில் நம்மால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடிகிறது.

உலகே மாயை என்பதால் அகங்காரம் மறைந்து இன்ப அனுபவம் ஏற்பட மற்றவர்களைப்போல் முயற்சி செய்யவேண்டிய அவசியம் ஞானிக்கு இல்லை.  இரண்டு மொழிகளை நன்றாக அறிந்தவன், கேட்பவருக்கு புரியும் மொழியில் சரளமாக பேச தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதுபோலநான் பரமன்’, ‘நான் மனிதன்ஆகிய இரண்டு எண்ணங்களை சரியாக அறிந்த ஞானி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதில் சிரமப்படுவதில்லை. ‘என்னால் அதைச் செய்ய முடியும்என்று அவன் தயங்காமல் கூறினாலும்யாரும் எதையும் செய்வதில்லைஎன்ற அறிவு அவன் மனதில் இருந்து மறைவதில்லை.

வெய்யில் நாளில் ஆற்றுத் தண்ணீரில் நிற்பவனின் மேல் உடம்பு சுடும் அதே வேளையில் கீழ்பகுதி குளிர்ந்து இருப்பது போல உலகில் ஏற்படும் துயரங்களை அனுபவிக்கும் அதே வேளையில் ஞானி இன்பமாக இருப்பான். தான் எதனுடனும் சம்பந்தப்படாமல் இன்பமயமாக இருக்கும் பரமன் என்பதை அவன் உணர்வதுடன் தனது உடலும் மனமும் உலக நிகழ்வுகளுக்கு ஏற்ப மாற்றங்கள் அடையும் என்பதையும் அறிவான். எனவே வாழ்வில் ஏற்படும் இன்ப துன்ப அனுபவங்களை கனவில் ஏற்படும் அனுபவங்களைப்போல தொடர்ந்து இன்பமாக அனுபவிப்பான்.

முடிவுரை :

வெளியில் இருக்கும் பொருள்கள், உள்ளே இருக்கும் மனம் ஆகிய இரண்டும் தனது சுய உருவான இன்பத்தை அனுபவிப்பதற்கான சாதனங்கள் என்பதை ஞானி அறிவான். அவன் இன்பத்திற்காக பொருள்களை நாடுவதில்லை; மனதையும் செம்மைப்படுத்த முயற்சி செய்வதில்லை. கிடைக்கும் பொருள்களை அனுபவித்து அவன் எப்போதும் இன்பமாக இருப்பான்.

பற்றுடையோன் இன்பத்தை வெளி உலகில் தேடுவான். முக்திவிழைவோன் இன்பத்தை அகவுலகில் தேடுவான். ஞானி இன்பத்தைத் தேடுவதில்லை. தானே இன்ப வடிவானவன் என்ற அறிவில் அவன் நிலைத்து இருப்பதால் இன்பத்தைத் தேடும் அவசியம் அவனுக்கு இல்லை.

எதிர்காலத்தில் இன்பமாக இருக்கலாம் என்ற எண்ணமே தற்போது இருக்கும் இன்பத்தை அனுபவிக்கவிடாமல் நம்மைத் தடுக்கிறது. வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் இன்பம் நம்மை விட்டு அகலாது. உலகையும் மனதையும் வேறுமாதிரி மாற்றி அமைக்கவேண்டும் என்ற முயற்சியே துன்பத்திற்கு காரணம்.

மனதிற்குப் பிடித்த பாடலைக் கேட்கும்பொழுது தன்னை மறந்து இன்பமாக இருந்த அனுபவம் அனைவருக்கும் உண்டு. இதற்கு காரணம் பாடலோ மனமோ இல்லை. அகங்காரம் அடங்கிய நிலையில் இருப்பதுதான் இன்ப அனுபவத்துக்குக் காரணம். அகங்காரத்தை அடக்க உலகத்தை துறந்து தனித்து வாழவேண்டிய அவசியம் இல்லை. அல்லது தியானம் மூலம் மனதையே அழித்து சமாதி நிலைக்கு செல்லவேண்டிய கட்டாயமும் இல்லை. அகங்காரம் என்பது பொய்யானது என்ற அறிவு ஞானிக்கு இருப்பதால் அவனால் எப்பொழுதும் தன்னை மறந்து உலகோடு ஒன்றிவாழ்ந்து இன்பத்தை அனுபவிக்க முடியும்.

புலன்கள் மூலம் பொருள்களை அனுபவிக்காமல் நம்மால் ஒரு நொடி கூட வாழ முடியாது. அனுபவங்களை பிடித்தது பிடிக்காதது என்று வகைப்படுத்தாமல் அவற்றுடன் ஒன்றி வாழ்ந்தால் அனைத்து அனுபவங்களும் இன்பமாக மாறிவிடும்.

உலகம், ஐந்து புலன்கள் மூலம் பெறும் அனுபவம், அனுபவங்களைப் பற்றி மனதில் தோன்றும் வர்ணனை ஆகிய அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இவை எதனுடனும் சம்பந்தப்படாமல், இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவன் நான் என்ற அறிவு ஞானிக்கு இருப்பதால் அனைத்து மாற்றங்களுக்கு நடுவிலேயும் அவன் ஆனந்தமாக இருப்பான்.     

பயிற்சிக்காக :
1. இன்பத்தை அனுபவிப்பதில் ஞானி மற்றவர்களிடம் இருந்து எந்த வகையில் வேறுபடுகிறான்?
2. இன்ப அனுபவத்திற்குத் தேவையான மூன்று பொருள்கள் யாவை?
3. இன்பத்தின் வகைகள் எவை?
4. இன்பத்தின் அளவுகள் யாவை?
5. இன்பத்தின் ஊற்று எது?

சுயசிந்தனைக்காக :

1. இன்ப அனுபவத்திற்கும் இன்பத்திற்கும் என்ன வித்தியாசம்?
2. ‘சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். ஞானி அழுதுகொண்டே சிரிப்பான்என்பது உண்மையா?
3.புலன் இன்பங்களை சிற்றின்பம் என்று குறிப்பிட்டால் பேரின்பம் என்பதற்கு பொருள் என்ன?

4. மனதை அழிப்பதற்கும் அகங்காரத்தை அழிப்பதற்கும் என்ன வேறுபாடு

Sunday, April 28, 2013

Lesson 185:List of differences in libarated souls (Brahmasutra 4.4.1-3)


பாடம் 185: ஞானியின் தன்மைகள்
பாடல்: 534-536 (IV.4.1-3)

ஞானம் ஏற்பட்டவுடன் தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் எதுவும் தோன்றாது. ஆனாலும் மற்றவர்களை ஒப்பிடும்போது ஞானி வேறுபட்டிருப்பான். ஞானியின் இந்த தனித்தன்மைகளின் பட்டியலை இந்தப்பாடம் தருகிறது.

சாந்தோக்கிய உபநிஷத மந்திரம் (7.12.3) ‘இந்த மேலான ஞானத்தை அடைந்த பின் இந்த உடலை உதறிவிட்டு தன் சுய உருவான அமைதியும் ஆனந்தத்தையும் அவன் வெளிப்படுத்துவான்என்று கூறுகிறது. இந்த சுய உருவத்தின் முழுமையான வர்ணணைகளை பகவத்கீதையின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குத் தந்துள்ளார்.

ஞானம் என்பது மனதில் ஏற்படுவது. வெளித்தோற்றத்தை வைத்து மனதின் நிலையை ஓரளவுதான் அறிய முடியுமே தவிர தீர்மானமாகச் சொல்லமுடியாது. மேலும் ஞானம் பெறாத ஒரு சிலரின் செயலும் ஞானியின் செயல்பாடுகளை ஒத்து இருக்கலாம். எனவே  ஞானி தனது தனித்தன்மைகளை வெளிப்படுத்தினாலும் மற்றவர்களால் அவனை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

ஞானிகள் அனைவருக்கும் மாணவர்களை சரியான வழியில் வழிநடத்தும் திறன் இருக்காது. ஞானம் பெறாதவர்கள் கூட நல்ல ஆசிரியர்களாக இருக்கலாம். எனவே,  மற்றவர்கள் ஞானியா இல்லையா என்பதை அறிந்து கொள்வதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை
நான் ஞானம் பெறவேண்டும்என்ற முயற்சிக்கு இந்த வர்ணணைகள் ஒரு தூண்டுகோலாக அமையும். மேலும் ஞானம் பெற்றபின் அதன் முழுப்பயன்களையும் அடைந்துள்ளோமா என்ற தற்சோதனைக்கும் கீதையில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியல் உதவி செய்யும்.

2.55 எவன் ஒருவன் மனதின் ஆசைகளினால் உந்தப்பட்ட அனைத்து செயல்களையும் துறந்து தன்னிறைவுடன் இருக்கின்றானோ அவனே ஞானத்தில் நிலை பெற்றவன்.

2.56 புலன் இன்பங்களுக்காக ஏங்காமல், பிரச்சனைகளினால் கலக்கம் அடையாமல், பற்று, பயம், கோபம் முதலியவற்றில் இருந்து விடுபட்டு இருப்பவன் ஞானி.

2.57 இன்பத்தில் துள்ளாமலும் துன்பத்தில் துவளாமலும் அவன் ஞானத்தில் நிலை பெற்று இருப்பான்.

2.58   அபாயம் ஏற்பட்டால் ஆமை தனது அவையங்களை உள்ளிழுத்து கொள்வது போல தேவையானால் தன் ஐந்து புலன்களையும் அடக்கிக்கொள்ளும் சக்திபடைத்தவன் உண்மையான ஞானத்தில் நிலைபெற்றவன்.

2.59 புலன் இன்பங்களை அவன் தொடர்ந்து அனுபவித்தாலும் இன்பமாக இருக்க உலகைச்சார்ந்து இல்லாமல் தன் சுய உருவில் நிலைபெற்று இருப்பான்.

2.60-61 புலன் இன்பங்களின் கவர்ச்சி, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துடன் முயலும் விவேகியின் புத்தியைக் கூட கடத்தி செல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.  மனதைநான் பரமன்என்ற அறிவில் நிலைபெறச் செய்வதன் மூலம் புலன்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துபவன், திடமான ஞானம் உடையவன்.

2.64-65 தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போகப்பொருள்களை அனுபவித்தாலும் விருப்பு-வெறுப்புகளின் பிடியில் அகப்படாமல், நிலையான அமைதியை அவன் அனுபவிப்பான். அந்த அமைதியில் அனைத்து துன்பங்களும் அழிந்துபோகும். இத்தகைய மனிதன் உறுதியான ஞானம் உடையவன் ஆவான்.

2.69  ‘நான் நிரந்தரமானவன்என்றும் இந்த உலகம் என்னை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறதுஎன்றும் அறிபவன் ஞானி.

2.70 பல நதிகள் தன்னிடம் வந்து கலந்தாலும் கலக்கம் அடையாமல் நிலையாக இருக்கும் நிரம்பிய கடல் போல, பல்வேறு போகப்பொருள்களை அனுபவிக்கும் பொழுதும் அவற்றால் பாதிக்கப்படாமல் தன்நிறைவுடன் இருப்பவன் அவன்.  பொருள்களை தேடி அலையாமல் என்றும் நிம்மதியாக வாழ்பவன் அவன்.

2.71 ஆசைகள் எதுவும் இல்லாமல், ‘நான் செயல்களைச் செய்பவன்’ என்ற எண்ணத்தையும், ‘அனுபவிக்கும் பொருள்கள் என்னுடையது’ என்ற எண்ணத்தையும் துறந்த ஞானி நிம்மதியாக வாழ்வான்.

2.72 இதுதான் ‘நான் பரமன்’ என்ற அறிவில் நிலைபெற்றவன் வாழும் விதம். இந்த நிலையை அடைந்தபின்னர் அவனுக்கு தான் உலகில் இருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன் என்ற எண்ணம் இருக்காது. எனவே அவன் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலை பெறுகிறான்.   

4.18 செயல்களில் செயலற்ற தன்மையையும், செயலற்றவற்றில் செயலையும் பார்க்கும் திறன் உள்ளவன் ஞானி. அவன் எந்தச் செயல்களைச் செய்தாலும் அவற்றால் பந்தப்பட மாட்டான்.

4.20 செயலின் பலனில் எவ்வித பற்றும் இன்றி, நிலைத்த திருப்தி உடையவனாக, இன்பத்துக்காக எதையும் சாராதவனாக இருக்கின்ற ஞானி, எப்போதும் ஏதாவது செயல்கள் செய்துகொண்டு இருந்தாலும் எந்தச் செயலையும் செய்தவன் ஆகமாட்டான். 

4.22 எதேச்சையாக கிடைத்ததில் மகிழ்பவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமை இல்லாதவன், வெற்றி தோல்விகளில் சமமாக இருப்பவன்இத்தகையவன் செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றால் கட்டுப்படுவதில்லை.

12.13-14 எவன் ஒருவன் பொறாமை இன்றி, அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் பழகுகிறானோ அவன் ஞானி. அகங்காரம் போலியானது என்பதை அவன் அறிவதால் அவன் தன்னை யாருக்கும் முதலாளியாக கருதுவதில்லை.

12.15  எவரையும் துன்புறுத்தாமல், எதிர்காலத்தைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், நிலையான இன்பத்துடன் இருப்பவன் ஞானி.

12.16 எதிர்காலத்தில் ஏதேனும் சாதனைகள் நிகழ்த்தவேண்டும் என்ற குறிக்கோள் ஏதும் இன்றி, செய்யும் செயல்களுக்கு விரும்பிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றி, துன்பங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்தவன் ஞானி.

12.17 ஞானிக்கு தன் மனம் எப்போதும் இன்ப உணர்விலேயே மூழ்கி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்காது. அதேபோல, துன்ப உணர்வுகளும் நிரந்தரம் அல்ல என்று அவன் அறிவதால் சோகத்தில் புலம்பமாட்டான். புனித காரியங்களை செய்ய வேண்டிய கட்டாயம் அவனுக்கு இல்லை. தவறான காரியங்களை அவன் செய்ய நேரிட்டால் அதுகுறித்த வருத்தமும் அவனுக்கு கிடையாது.

12.18-19 தானே அனைத்து உருவங்களின் ஆதாரம் என்பதை அறிந்த காரணத்தால் நண்பர்களையும் எதிரிகளையும் ஞானி சமமாகப் பார்ப்பான். ஏற்ற இறக்கங்கள் உலகின் இயல்பு என்பதை அறிந்த காரணத்தால் அவன் புகழ்-இகழ், வெயில்-குளிர்ச்சி, இன்பம்-துன்பம், மதிப்பு-அவமானம் ஆகிய இருமைகளின் இடையே சமநிலையில் வாழ்வான். எதனாலும் பாதிக்கப்படாமல், எப்போதும் அமைதியாக,  கிடைத்ததில் திருப்தி அடைந்து, தனக்கு என்று சொத்துக்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை சிறிதும் இல்லாமல், ‘நான் பரமன்என்ற ஞானத்தில் நிலைபெற்று உடலும் மனதும் நிகழ்த்தும் செயல் என்ற நாடகத்தில் பங்கேற்காமல் வெறும் சாட்சியாக அதைப் பார்த்துக்கொண்டு இருப்பவன் ஞானி.

12.20 உலகத்தின் தொடர்ந்த இயக்கம் இறைவனின் நடனம் என்பதை அறிந்த ஞானி, நாட்டியத்தில் தனது பங்கை முழுஈடுபாட்டுடன் செய்வான். நடனமே ஆனந்தத்தின் வெளிப்பாடு என்பதால் அனைத்து மாற்றங்களின் நடுவிலும் ஆனந்தமாக இருப்பான்.     

14.22-25 இன்பம், பற்றுதல், குழப்பம் ஆகியவை இருக்கும்போது அவற்றை வெறுக்காமலும் இல்லாதபோது அவற்றுக்காக ஏங்காமலும் இருப்பவன் ஞானி. தன் உடல், மனம் உட்பட்ட உலகம் தன் வசம் இன்றி தொடர்ந்து மாறுபடும் என்பதை அறிந்ததால் அந்த மாற்றங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் இருப்பவன் அவன். புலன்களும் அவைகளால் அனுபவிக்கப்படும் பொருள்களும் இந்த தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதி என்பதால் அவன் எதன்மீதும் அக்கறை இல்லாதவன் போல் இருப்பான். தான் இந்த மாற்றங்களுக்கு ஆதாரமாக மட்டும் இருப்பவன் என்று அறிந்த காரணத்தால் அவன் ஒரு குறிப்பிட்ட பலனைக் கருதி செயல் செய்வதில்லை.

14.26 ‘நான் பரமன்என்ற அறிவில் நிலைத்து நின்ற போதிலும் தனது உடலும் மனமும் மாயாசக்தியின் வெளிப்பாடுகள் என்று அறிந்த காரணத்தால், ஞானி தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பான். அவன் செயல்களின் பலனால் பாதிக்கப்படுவதில்லை.

14.27 மாற்றத்துக்கும் அழிவுக்கும் உட்படாமல் என்றும் இருக்கும் உண்மையான ஆனந்தம் நான் என்ற அறிவில் ஞானி நிலைத்து நிற்பதால் அவன் பரமனாகவே மாறிவிடுவான்

முடிவுரை :

ஞானியின் சுய உருவத்துக்கும் மற்றவர்களின் சுய உருவத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. ‘நான் பரமன்என்ற வேதவாக்கியம் அனைவருக்கும் பொருந்தும். இருப்பது ஒரே பரமன். அந்த பரமன்தான் உலகமாகவும் அதில் வாழும் பல்வேறு உயிரின்ங்களாகவும் காட்சி அளிக்கிறான். எனவே ஞானியின் சுய உருவம் தனிப்பட்ட தன்மை உடையது அல்ல.

முக்தி என்பது புதிதாகப் பெறப்பட்ட ஒரு நிலை அல்ல. ‘இப்போது நான் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் சிக்கி துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். வேதம் படித்தால் இந்த துன்பத்தில் இருந்து விடுதலை பெற்று முக்தி அடைவேன்என்ற எதிர்பார்ப்பு முக்திவிழைவோரிடம் இருக்கும். ‘முக்தி அடைந்த பின்னும் நீ மாறாமல் அப்படியேதான் இருப்பாய்என்ற உண்மையை பொதுவாக ஆசிரியர் சொல்வதில்லை. ஏனெனில் முக்தி என்பது ஒரு புதிய நிலை அல்ல என்ற உண்மையை முக்தி அடைந்த பின்தான் உணர்ந்துகொள்ள முடியும்.

எது அடையப்பட்டதோ அது நிலையானது அல்ல. இப்போது இல்லாத முக்தி எதிர்காலத்தில் கிடைப்பதாக இருந்தால் அது நிச்சயம் காலத்தைக் கடந்ததாக இருக்க முடியாது. எனவே, ‘முக்தியை அடைவதுஎன்று வழக்கத்தில் கூறினாலும் எப்போதும் முக்தியடைந்தவனாக இருப்பவன்தான் நான் என்பதை அறிந்து கொள்வதே முக்தி.

நான் பரமன்என்பதை அறிந்து கொண்டவர்கள் முக்தி அடைந்தவர்கள். இதை அறியாதவர்கள் பற்றுடையோர்.  எனவே, மற்றவர்களை ஒப்பிடும்போது ஞானிக்குதான் யார்என்பது பற்றிய சரியான அறிவு இருக்கிறது என்பதுதான் ஞானிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள ஒரே வேற்றுமை.

உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்என்ற பாடல் வரிகளின் சரியான பொருளை மக்கள் உணர்வதில்லை.

நான் பரமன்என்பது ஞானியின் கற்பனை அல்ல. அதுதான் உண்மை என்று அறிவியல் தெள்ளத்தெளிவாக நிரூபித்து உள்ளது. ஆனால் முறையாக வேதம் படித்தவர்களால் மட்டுமே இந்த அறிவை அடைய முடியும்.

இந்த அறிவை அடைந்த பின்னர் தான் இந்த உடல் என்ற எண்ணம் மறைந்து விடுவதால் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் இருந்து அவன் விடுபடுகிறான். வாழ்வில் துன்பம் என்பது உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே ஏற்படுவது. எனவேதான் தன்னை உடல் என்று நினைப்பவர்களால் துன்பத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற முடியாது.

கயிற்றை பாம்பாக பார்த்து பயப்படுவது துன்பம். பரமனை உடலாக நினைத்து வாழ்வது துன்பம். கயிறு எப்போதும் கயிறாகத்தான் இருக்கிறது. நான் எப்போதும் பரமனாகத்தான் இருக்கிறேன். கயிற்றுக்கும் பாம்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பரமனுக்கும் இந்த வாழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் பாம்பு என்ற ஒன்றை பார்ப்பதற்கு கயிறு ஆதாரமாக இருக்கிறது. உலகமும் அதில் உயிரினங்களும் இருப்பதாக தென்படுவதற்கு பரமன்தான் ஆதாரம். உலகம் இருப்பதாக காட்சி அளிக்கும் மாயை என்பதை அணு ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவர். இந்த பொய்யான தோற்றத்துக்கு உண்மையான ஆதாரமாக இருப்பவன் நான் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் ஞானிகள்.

இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால் அவர்கள் துன்பப்படுவதில்லை. சுற்றி நிகழும் நிகழ்வுகளை சரியாகப் பார்க்கும் காரணத்தால் இவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும். பாம்பு என்று பயந்து பத்து அடி தள்ளி நடக்காமல் கயிறு என்று அறிந்ததால் அதன் பக்கத்திலேயே நடக்கும் காரணத்தால் மற்றவர்களின் பார்வைக்கு அவன் வேறு பட்டவனாகத் தென்படுவான்.

இதுபோன்ற வேற்றுமைகளையே, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் தொகுத்துக் கொடுத்து இருக்கிறார். இந்த அனைத்து வேற்றுமைகளின் சாராம்சம்ஞானிகள் துன்பம் கலக்காத இன்பவாழ்வு வாழ்வார்கள்என்பதே.       
   

பயிற்சிக்காக :

1. மற்றவர்கள் ஞானியா இல்லையா என்பதை நாம் அறிந்துகொள்வது ஏன் அனாவசியம்?
2. ஞானி மற்றவர்களிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறான் என்ற பட்டியலைப் படிப்பதால் என்ன பயன்?
3. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கொடுத்த பட்டியலின் சாராம்சம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. முக்தி என்பது மரணத்துக்குப் பின்னர் அடையப்படுவதுஎன்பதைத்தான்உடலை உதறிவிட்டு சுய உருவத்தை வெளிப்படுத்துவான்என்ற உபநிஷத மந்திரத்தின் மூலம் சொல்கிறதா?
2. ஞானிக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா? இல்லையா?
3.உலகில் உள்ள மதங்களின் இறுதிக் குறிக்கோள் என்ன?


Thursday, September 27, 2012

Lesson 175: The Kalas of knower of Nirguna Brahman attain absolute non-distinction (Brahma Sutram 4.2.16)


பாடம் 175: ஞானி பரமனுடன் இரண்டறக் கலப்பதன் காரணம்
பாடல் 512 (IV.2.16)

ஆசைக்கு ஆதாரம் அறியாமை. அந்த அறியாமை அழிந்துவிடும் காரணத்தால் ஞானி பரமனுடன் இரண்டறக் கலந்துவிடுவான். மற்றவர்களால் இந்த நிலையை அடைய முடியாமல் இருப்பதற்கான காரணத்தை இந்தப்பாடம் ஆராய்கிறது.

காலம் என்பதே மனதின் கற்பனை என்பதால், ‘இங்கேயே இந்தக்கணமே முக்தி வேண்டும்என்ற தீவிர ஆசை உடையவர்கள் மட்டுமே முக்தி அடைய முடியும்.  ‘காலம் வெறும் கற்பனை என்ற உண்மையை சில தீர்க்கதரிசிகள் தங்கள் அனுபவத்தில் அறிவார்கள். இந்த உண்மையை அறிய நாம் தீர்க்கதரிசிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘காலம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலை தர்க்கத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் நமது அறியாமை அகன்றுவிடும். இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்த காரணத்தால் முற்றுணர்ந்தோர்கள் காலத்தை வென்றவர்களாக பரமனுடன் இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

காலம் இருக்கிறதா?

1. காலம் உண்மையில் இருக்கிறது என்பதற்கு கடிகாரமோ நாட்காட்டியோ சாட்சிகள் அல்ல. கடிகாரத்தின் முள் எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதை வடிவமைத்தது ஒரு மனிதனே. நாட்காட்டியில் தாளை கிழித்துப்போடும்போதுஒரு நாள் முடிந்துவிட்டதுஎன்ற எண்ணம் வெறும் கற்பனைதான். வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம் என்று நமது கற்பனைகளுக்கு பெயரிடுவதால் அவை உண்மையாகிவிடாது.

2. காலம் உண்மையில் இல்லாத காரணத்தால்தான் உலகில் உள்ள கடிகாரங்கள் அனைத்தும் எப்போதும் ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை.

3.  அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள் என்பதால் காலம் உண்மையாகி விடாது. புதிய வருடம் என்றைக்கு என்பதும், அது ஆரம்பிக்கும் தருணம் எது என்பதும் ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறுபடுவதிலிருந்து காலம் உண்மை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். ‘எனக்கு இன்று காலை பத்து மணி என்பது உனக்கு முதல் நாள் இரவு எட்டு மணிஎன்று ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வதிலிருந்து காலம் பொய் என்று புலனாகிறது.

4.  சூரியன் தலைக்குமேலே இருக்கும் உச்சிநேரத்தில் கடிகாரம் பன்னிரண்டு மணியை காட்டுவதில்லை. இதிலிருந்து பூமியின் சுழற்சிக்கும் கடிகாரம் காட்டும் நேரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுத் தெரிகிறது.

5. சூரியன், பூமி ஆகியவை அழிந்துவிட்டால், விண்வெளியில் பயணம் செய்யும் மனிதன் நேரத்தை எப்படிக்கணக்கிடுவான்?

6. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இப்போதுஎன்ற தற்காலம் ஒன்றுதான் உண்மை. தற்காலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு நிகழ்வுகள் என்று பெயரிட்டு கடந்தகாலம், எதிர்காலம் என்ற கற்பனைகளை மனம் உருவாக்கிக்கொண்டு இல்லாத நிகழ்வுகளை இருப்பதாக நம்புகிறது. சந்திரனின் நிழல் சுற்றிவரும் பாதையை கணக்கிட்டு இராகு, கேது என்று பெயரிடுவதால் இவை உண்மையான கிரகங்கள் ஆகிவிடாது. அதுபோல தொடர்ந்து நிகழும் மாற்றங்களுக்கு இடையே உள்ள நேரத்தை கணக்கிடுவதால் நிகழ்வுகளோ காலமோ உண்மையாகிவிடாது.

7. இரண்டு பொருள்கள் இருந்தால் மட்டுமே அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை கணக்கிட முடியும். இருப்பது இந்தக்கணம் ஒன்றுதான். எனவே, அதை அளக்க முடியாது.


8. ‘ஐந்து புலன்களின் மூலம் அறியப்படும் உலகம் வெறும் தோற்றம் மட்டுமேஎன்று அணுவை ஆராய்ந்த அறிவியல் அறிஞர்கள் நமக்கு அறிவிக்கிறார்கள். நம் மனம், உடல், சுற்றியுள்ள உலகம் ஆகிய அனைத்தும் நிலையானதாக இல்லாமல் தொடர்ந்து மாறுகின்றன. எனவே இவை அனைத்தும் காட்சிப்பிழைகளேத் தவிர உண்மை அல்ல. தொடர்ந்து நிகழும் மாறுதல்கள் மனதில் நினைவுகளாக பதிவாகின்றன. ‘முதலில் அது தோன்றியது, பிறகு அது வளர்ந்தது’ என்று அந்த நினைவுகளை வரிசைப்படுத்தி காலம் என்ற கற்பனை உருவாகுகிறது. கற்பனையில் உருவான காலம், உலகம் உண்மையாக இருக்கிறது என்று சாட்சி சொல்கிறது.

மாறாமல் இருக்கும் வெள்ளித்திரையில் தொடர்ச்சியாக தோன்றும் நிழற்படங்களை திரைப்படமாக பார்க்கிறோம். சிறுவனை ஒரு நொடிக்குப்பின் வாலிபனாக மாற்றுவதை இருபது வருடங்களுக்கு பிறகுஎன்ற எழுத்துக்களை காண்பிப்பதால் ஏற்றுக்கொள்கிறோம். காலம் என்பது இயக்குனரின் கற்பனை. மேலும் சிறுவன் வளர்ந்தபின் நல்லவனாக இருப்பானா அல்லது வில்லனாக மாறிவிடுவானா என்பதும் இயக்குனரின் கற்பனைபடிதான் நடக்கும். இந்த அறிவு நமக்கு இருப்பதால் திரைப்படத்தை இரசிக்க முடியும்.

ஆனால் மாறாமல் இருக்கும் இந்தக்கணத்தை ஆதாரமாகக்கொண்டு தோன்றும் இந்த உலகம் மாயை என்பதை நாம் அறிவதில்லை. காலம் என்ற கற்பனை நிகழ்காலத்தை பெரும்பாலும் நமது கவனத்திலிருந்து அகற்றி விடுகிறது.

9.  மனம் என்பது வெறும் எண்ணக்குவியல்கள். எண்ணம் என்பது சக்தி (energy). உடல் ஒரு திடமான பொருள் அல்ல. அதுவும் சக்தியின் வெளிப்பாடே. ஆக, எல்லாமே மாயை. இதை ஏற்றுக்கொள்ள முடியாத மனம், ‘இதனால் இது தோன்றியது’ என்பது போன்ற காரண காரியங்களை காலத்தின் உதவியுடன் கற்பனை செய்துகொள்கிறது. தானே தோற்றுவித்த கற்பனைகளை ஆதாரமாக காட்டி உலகம் உண்மையில் இருப்பதாக மனம் நம்புகிறது.

10. நீள அகலங்களை அளக்க கிலோமீட்டர், மைல் போன்ற அளவைகளை மனிதன் உருவாக்கி இருப்பதைப்போல, உலகில் நிகழும் மாற்றங்களை அளக்க மணி, நாள் போன்ற கால அளவைகளை உருவாக்கியதும் மனிதன்தான். எங்கும் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்களுக்கு கிலோ மீட்டர்என்ற அளவை தேவையில்லை. எப்போதும் இந்தக்கணத்திலேயே எல்லோரும் வாழ்கிறார்கள். ஆனால் மனம் மட்டும் நேற்று’, ‘நாளைஎன்பது போன்ற கற்பனை உலகங்களை உருவாக்கிக்கொண்டு அவற்றில் வாழ்ந்து வருகிறது.

11.  கற்பனைக் கதைகளுக்கும் கடந்த கால நிகழ்வுகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. ஏனெனில் இவை இரண்டும் நம் மனதில் நினைவுகளாக இருக்கின்றன. சரித்திரம் என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்பனைக் கதை. மகாத்மா காந்தி என்று ஒருவர் வாழ்ந்தார் என்பது நமது மனதின் கற்பனையா அல்லது உண்மையா என்ற கேள்வி தவறானது. ஏனெனில் இருப்பது இந்தக்கணம் மட்டும் தான். ‘நேற்று இரவு சாப்பிட்டேன்என்ற எண்ணமே நமது கற்பனை.

12. இரண்டு மணிநேரத்தில் செய்யவேண்டிய செயல்களை, விரைவாகச் செயல்பட்டு ஒரு மணிநேரத்தில் முடிப்பவரும், மெதுவாகச்செயல்பட்டு இன்னும் செய்து முடிக்காதவரும் வாழ்வது இந்தக்கணத்தில் மட்டுமே.

13. வெளி தொடர்ந்து விரிவடைந்து கொண்டு இருப்பதால், எவ்வளவுதான் வேகமாக பயணம் செய்தாலும் நம்மால் பிரபஞ்சத்தின் எல்லைக்கு சென்று விட முடியாது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. வெளியுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவி காலம். எனவே, எவ்வளவுதான் வேகமாகச் செயல்களை செய்தாலும் காலத்தின் விளிம்பை தொட்டுவிட முடியாது.

14. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கிவிடுவதால் இடம், பொருள், காலம் ஆகியவை முழுவதும் மறைந்து விடும். எனவேதான் விழித்தவுடன் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்ற கேள்விக்கு கடிகாரத்தை பார்க்காமல் பதில் சொல்ல முடியாது. தூங்கி விழித்ததும் ஐந்து புலன்கள் வழியே வந்து சேரும் தகவல்களின் அடிப்படையில் நாம் இருக்கும் இடம், நேரம் போன்ற கற்பனைகளை மறுபடியும் தொடர்கிறோம்

15. காலம் மனதின் கற்பனை என்பதால்தான் மனம் உருவாக்கிய கனவு உலகில் நம்மால் கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பயணம் செய்ய முடிகிறது. மேலும் விழித்திருக்கும்போதும் காலம் மெதுவாக நகர்கிறதா அல்லது வேகமாக ஓடுகிறதா என்பது மனதின் நிலையை பொறுத்து மாறும். மனதுக்கு பிடித்த ஒருவருடன் நேரத்தை செலவு செய்யும்பொழுது நேரம் போவதே தெரியாது. புரியாத பாடத்தை கேட்கும்போது வகுப்பு முடியவே முடியாது என்பது போல் தோன்றும். காலம் ஓடுவது மனதில் கையில்தான் இருக்கிறது.

16. நிகழ்காலம் என்பது மனதினால் அறிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை. இருப்பது இந்தக்கணம் மட்டுமே. அதில் தொடர்ந்து மாறும் ஒளி-ஒலி காட்சிதான் இந்த உடலும் மனமும். உடல் ஒளியால் ஆனது. மனம் ஒலியால் ஆனது. ஒளி ஒலியை விட வேகமாக பயணிக்க கூடியது. எனவே மனதில் தோன்றும் எண்ணங்கள் விளையாட்டு வர்ணனையைப்போல சிறிது பின்தங்கித்தான் இருக்கும். சுற்றி நிகழும் ஒளியின் மாற்றங்களின் விளைவாக மனதில் தோன்றும் எண்ணங்கள் கடந்த காலத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். நிகழ்காலம் மனதுக்கு எட்டாத ஒன்று.

17. எதிர்காலம் என்பது நமது கற்பனை என்று நமக்கு தெளிவாகத் தெரிந்து இருந்தாலும் கூடநினைத்தேன் வந்தாய், நூறு வயதுஎன்பது போன்ற அனுபவங்கள் எதிர்காலத்தையும் உண்மை என நம்மை நம்பவைக்கின்றன. மேலும் இப்போது நான் இதைச் செய்யப்போகிறேன் என்ற எண்ணத்தை தொடர்ந்து அதை செயல்படுத்தியதாக தோன்றும் ஒளிக்காட்சி, காலம் என்ற ஒன்று உண்மையில் இருக்கிறது என்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது.

18. கடந்த காலம் என்பது மனதில் பதிவாகியுள்ள நினைவு அலைகள். இந்த நினைவு அலைகள் கனவிலும் நனவிலும் நம்மை ஆட்கொள்ளும்போது நிகழ்காலத்தை நாம் தவறவிட்டுவிடுகிறோம்.

19. அனுபவம் என்பது நிகழ்காலத்தில் மட்டுமே ஏற்படுவது. கடந்த காலம் என்பது  அனுபவங்களின் வர்ணனை. எதிர்காலம் என்பது இந்த வர்ணனைகளின் பலனாக ஏற்படும் எதிர்பார்ப்பு. ஒருவேளை, காலப்பயணம் (time-travel) என்பது சாத்தியமானால் கூட, நம்மால்இப்போதுஎன்ற இந்த கணத்தை விட்டு எங்கும் செல்ல முடியாது.

20. இந்த நிகழ்காலத்திற்கு ஆரம்பமோ முடிவோ கிடையாது. காரண காரியங்கள் கிடையாது. எதனுடனும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எதிர்காலத்துக்கு செல்ல ஒரு படிக்கட்டாக நிகழ்காலத்தை சித்தரிப்பது நம் மனம். நிகழ்காலத்தை நேருக்கு நேர் சந்திக்க முயன்றால் எண்ணங்களின் ஓட்டம் நின்றுவிடும். எனவேதான் மனம் எதிர்காலத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

21. வட்டமான பாதையில் வேகமாக ஓடுவதால் புதிய இடத்துக்கு பயணம் செய்ய முடியாது. அது போல் நிகழ்காலம் கடந்தகாலமாக மாறுவதற்குள் எதிர்காலத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கும் மனதால் நிகழ்காலத்துக்குள் நுழைய முடியாது.

22. ஓடும் ஆற்றைப்போல் தொடர்ந்து மாறிக்கொண்டு நிலையாக இருப்பது நிகழ்காலம் மட்டுமே. நேற்றைய செயல்கள்தான் இன்றைய அனுபவங்களாக மாறுகின்றன என்பதும் இன்றைய செயல்கள் நாளைய அனுபவங்களாக மாறுகின்றன என்பதும் நமது மனதின் கற்பனை.

உலகம் மாயை என்பதை மனதில் நிலை நிறுத்த, காலம் என்பது கற்பனை என்று அறிந்து கொள்வது அவசியம்.   

முடிவுரை :

இல்லாத உலகம் இருப்பது போல் தோன்றுவதற்கு காலம் தான் ஆதாரம். முதலில் தோற்றுவிக்கப்பட்டது வெளி. வெளிதான் பிரபஞ்சம் முழுமையும் இருக்க இடம் அளித்தது. காலமும் வெளியும் ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகள். எனவே மாயையான பிரபஞ்சத்தின் ஆதாரம் காலமே.

பரமனின் மாயாசக்தி காலமாக பரிணமித்து அதில் அகில உலகங்களையும் இருப்பதாக காண்பித்துள்ளது. இதை அறிந்த முற்றுணர்ந்தோர்களும் தீர்க்கதரிசிகளும் பரமனுடன் இரண்டறக்கலந்து முக்தி அடைந்தவர்கள்.

பயிற்சிக்காக :

1. ஞானி பரமனுடன் இரண்டற கலக்க காரணமாக இருப்பது எது?

2. முக்தியடைய தேவையான முக்கியமான தகுதியாக குறிப்பிடப்பட்டது எது?

3. காலம் கற்பனை என்பதை நிரூபிக்க கூறப்பட்ட காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஆசிரியரிடம் பயிலாமல் உடனே ஞானத்தை அடைய முடியுமா?

2. காலம் கற்பனை என்றால் நாம் நாளைக்கு என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டுவது அவசியம் இல்லையா?