Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Thursday, August 23, 2012

Lesson 174: The Pranas of knower of Nirguna Brahman merges with it on death (Brahma Sutram 4.2.15)


பாடம் 174: உபாசகனின் பிராணன் கடவுளுடன் கலந்து விடும்
பாடல் 511 (IV.2.15)

பரமனை அறிந்ததால் ஞானிக்கும் கடவுளிடம் சரணடைந்ததால் உபாசகனுக்கும் கிடைக்கும் பலன்களை ஆராய்ந்து ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்ற உண்மையை இந்தப் பாடம் வலியுருத்துகிறது.

கனவில் காணும் மரம் கனவு முடிந்ததும் கனவுலக பூமிக்குள் ஒடுங்கிவிடும் என நினைப்பவன் இன்னும் விழிக்கவில்லை. அதுபோல மரணத்திற்குப்பின் தனது பிராணன் கடவுளுடன் கலந்துவிடும் என்று நம்பும் உபாசகன் மாயையின் பிடியிலிருந்து இன்னும் விடுபடவில்ல. கனவுலகமே பொய்யென்று அறிந்தவன் கனவில் காணும் மரம் என்னவாகும் என்று ஆராயமாட்டான். ஞானம் பெற்றவுடன் மரணத்தை வென்றுவிடும் காரணத்தால் மரணத்திற்குப்பின் பிராணனது நிலை பற்றிய கேள்விகள் அவன் மனதில் எழுவதில்லை.  

பிரஸ்ன உபநிடத்தின் மந்திரம் ஒன்று (6.5) ‘அனைத்து நதிகளும் கடலை நோக்கி ஒடி முடிவில் அதனுடன் கலந்தபின் தங்களது தனித்தனியான பெயர்களையும் வடிவங்களையும் இழந்து ‘கடல்’ என்ற ஒரே பெயரால் வழங்கப்படுவது போல தனிமனிதர்களும் ஆத்மாவை தேடி ஓடி அதில் கலந்தபின் தங்கள் தனித்தன்மையை இழந்து பகுதிகளும் மரணமும் இல்லாத பரமன் என்ற நிலையை அடைகிறார்கள்’ என்ற கருத்தை கூறுகிறது. இந்த நிலையை ஞானம் பெற்றவுடன் அடைய முடியும் என்று உணராத  உபாசகர்கள் மரணம் வரை முக்திவிழைபவர்களாகவே வாழ்வர்.

கடவுள் தன்னிலிருந்து வேறுபட்டவன் என்று நம்புபவர்களால் மட்டுமே கடவுளை உபாசிக்க முடியும். தான் வேறு கடவுள் வேறு அல்ல என்று அறிந்தவர்கள் ‘கடவுள் பக்தி அவசியமில்லை’ என்று மற்றவர்கள் முடிவுசெய்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே உபாசனை செய்வார்கள். கோவிலுக்கு செல்வது, பிரார்த்திப்பது போன்ற ஒரு சில செயல்களை மட்டும் உபாசனை என்று கருதாமல் தான் செய்யும் அனைத்து செயல்களையும் கடவுளின் செயலாக செய்பவன் முற்றுணர்ந்தோன்.

பற்றுடையோர் தாங்கள் செய்யும் செயல்களின் பலன் சாதகமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடவுளை பிரார்த்திப்பர். பலன் பாதகமாக இருந்தாலும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டுமென்று முக்திவிழைவோர் பிரார்த்திப்பர். தன்னை செயலில் ஈடுபடுத்துவதும் பலனை அனுபவிக்கச்செய்வதும் கடவுள்தான் என்று நம்பும் உபாசகர்கள் எவ்வித குறிப்பிட்ட கோரிக்கையையும் கடவுள் முன் வைப்பதில்லை. அதேபோல் கடவுளிடமிருந்து தான் வேறுபட்டவனல்ல என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களும் எதையும் வேண்டி பிரார்த்திப்பதில்லை.

அதிகமாக பணம் சம்பாதிப்பதன் மூலம் வாழ்வில் துன்பத்தை பெருமளவில் தவிர்த்துவிடலாம் என்று முயல்பவர்கள் பற்றுடையோர். துன்பத்தை தவிர்க்க  பரமனை அடையவேண்டும் என்று முயற்சிசெய்பவர்கள் முக்திவிழைவோர்கள். உலகவாழ்வில் துன்பத்தை தவிர்க்கவே முடியாது என்ற உண்மையை உணர்ந்த உபாசகர்கள் மரணத்திற்குப்பின் பரவுலகில் துன்பம் கலவா இன்பம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் இவ்வாழ்வை கழிப்பர். வாழ்வின் தவிர்க்கமுடியாத ஏற்ற இறக்கங்களை இன்பம்-துன்பம் என பாகுபாடுசெய்வது அறியாமை என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர் மட்டுமே துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வர்.

இன்பம் உலகில் இருக்கிறது என்று அதை தேடி அலைபவன் பற்றுடையோன். இறைவனிடம் இன்பத்தை தேடுபவன் முக்திவிழைவோன். இறைவனின் உண்மை உருவத்தை அறிந்தவன் முற்றுணர்ந்தோன். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று உறுதியாக நம்பி ‘எனக்கென்ன மனக்கவலை, எந்தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை’ என்று துயரங்கள் அனைத்தையும் இஷ்டதெய்வத்தின் மேல் ஏற்றி வைத்துவிட்டு உபாசகர்களும் நிம்மதியாக வாழ்வர்.  துன்பங்கள் தொடர்ந்து நீடித்தால் அதுவும் கடவுளின் சித்தம் என்று மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். இதுபோல் உபாசகர்களின் மனநிலை சற்றேறக்குறைய முற்றுணர்ந்தோர்களின் மன நிம்மதியை ஒத்துஇருப்பதுபோல் தோன்றினாலும் நம்பிக்கைக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாடு உபாசகர்களை முக்தி அடையவிடுவதில்லை.


கடவுள் நம்பிக்கையும் கடவுளை அறிதலும்

கடவுளை படைத்தவன் மனிதனல்ல. துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ்வது எப்படி என்று மனிதனுக்கு கற்றுத்தர முதல்படியாக வேதம் கடவுளை மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. வேதம் காட்டும் வழியை பின்பற்றுபவர்களில் யாருக்கு கூரிய அறிவுடன் முக்திவேண்டும் என்ற தீவிர ஆசையும் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே முக்தியடைகிறார்கள். மற்றவர்கள் உபாசகர்களாகவே இருப்பார்கள்.

பணம் பதவி போன்றவற்றைத்தேடி உலகத்தில் உழைப்பதால் துன்பத்தை தவிர்க்க முடியாது என்றும் நீடித்த இன்பத்தை தரவல்லவர் கடவுள் மட்டுமே என்றும் வேதம் மனிதனுக்கு முதலில் சொல்லித்தருகிறது. கடவுள் இருக்கிறார் என்ற வேதத்தின் வார்த்தையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு கடவுளை உபாசனை செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கடவுள் யார் என்பதை வேதம் காட்டும் பாதையில் தொடர்ந்து பயணித்து ஆராய்ந்து அறிய கூரிய அறிவு தேவை. மேலும் கடவுளை பற்றிய முழுமையான அறிவு பெற்று உடனே முக்தியடைய வேண்டும் என்ற தீவிர ஆசை உள்ளவர்களுக்கு மட்டுமே கடவுள் நம்பிக்கையை அறிவாக மாற்றிக்கொள்ளும் திறன் இருக்கும். நீரில் மூழ்கி மூச்சு திணறுபவன் மேலே வரவேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு துன்பக்கடலில் மூழ்கி இருப்பவர்கள் இப்பொழுதே முக்திவேண்டும் என்று ஆசைபட்டால்தான் கடவுளை அறிய முடியும். அதைவிடுத்து ‘பிறவா வரம் தாரும். மீண்டும் பிறந்தால் திருவடி  மறவா வரம் தாரும்’ என்று பாடிக்கொண்டிருந்தால் முக்தி கிடைக்காது. இறைவன் நேரடியாக காட்சியளிக்க வேண்டும் என்று உபாசனை செய்து ஏங்குபவர்கள் காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை காணத்தேவையான மூன்றாவது கண் என்னும் அறிவுக்கண்ணை பெற தவறிவிடுகிறார்கள்.  

நேரான குச்சி நீரில் வளைந்து இருப்பதுபோல் காணப்படும். குச்சி நேராகத்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க அதை நீரிலிருந்து வெளியே எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் ஆனந்தமே உருவான பரமன் நான் என்ற அறிவு  ஏற்பட்டால் உலகவாழ்வில் உழலும்பொழுதே முக்தியடையலாம்.


அறிவின் பயன்கள்

பூலோக சுவர்க்கம்: வாழும் நாட்கள் அனைத்தையும் ஆனந்தமாக அனுபவிக்க இறைவன் யார் என்ற அறிவு உதவும். உலக வாழ்க்கை துன்பமயமானது என்றும் இறைவனடி சேர்வதுதான் இன்பம் என்றும் நினைக்கும் உபாசகர்கள் இந்த இன்ப அனுபவங்களை தவறவிடுகிறார்கள்.

எதிர்பார்ப்பு இன்மை: உலகைத்தன் உருவாக கொண்டு காட்சியளிக்கும் இறைவனை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் உபாசிப்பவர்கள் மரணத்திற்குப்பின் தங்களுக்கு முக்திகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஏற்கனவே முக்தியடைந்துவிட்டதால் முற்றுணர்ந்தோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

அச்சம் இன்மை: கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை வீண் செய்யக்கூடாது என்பதற்கு தவறாக பொருள் செய்துகொண்டு வாழ்வில் பெரும்பகுதியை இறை உபாசனையில் செலவிடுபவர்கள் மனதில் தாங்கள் செய்வது சரிதானா என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். உபாசனை செய்யும் விதம் பற்றி வேதம் கூறும் சட்ட திட்டங்களை முறையாக கடைபிடிப்பதில் கவனத்துடன் இருந்தாலும் மற்றவர்கள் வேறுமாதிரி உபாசனை செய்வதை பார்க்கும்பொழுது மனம் சலனப்படும். இறக்கும் தருவாயில் கடவுளை நினைக்கவில்லையென்றால் முக்திகிடைக்காது என்பது போன்ற நிபந்தனைகள் உபாசனை செய்பவர்களை முழுநிம்மதியுடன் இருக்கவிடுவதில்லை.

முழுதிருப்தி: தொடக்கத்தில் இன்பத்தை உலகில் தேடி உழைத்ததற்கு ஈடாக தற்பொழுது இறை உபாசனையில் நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டிய அவசியம் உபாசகர்களுக்கு இருக்கும். இனி எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை என்ற மன திருப்தி ஞானிகளுக்கு மட்டுமே இருக்கும்.

நிம்மதி: இறைவனிடம் சரணடைந்தபின் உபாசகர்களுக்கு ஏற்படும் நிம்மதி பயணச்சீட்டு உறுதிசெய்யப்பட்டபின் ஏற்படும் நிம்மதியைப்போன்றது. ஞானிகளின் நிம்மதி பயணம் செய்து முடித்தபின் ஏற்படும் நிம்மதியைப் போன்றது.   

மரணமில்லா பெருவாழ்வு: மரணமடைந்தவுடன் முக்தி கிடைக்கும் என்ற நிலை இல்லாமல் நான் என்றுமிருக்கும் பரமன் என்று உணர்ந்தபின் இந்த உலகம் அழிந்தாலும் நான் அழியமாட்டேன் என்ற அறிவுடன் ஞானிகள் வாழ்வார்கள்.

விதிகளிடமிருந்து விடுதலை: உபாசகர்கள் வாழ்வு முழுவதும் நல்லது-கெட்டது, சரி-தவறு, தர்மம்-அதர்மம், ஒழுக்கம்-ஒழுக்கமின்மை, பொதுநலம்-சுயநலம் போன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். முற்றுணர்ந்தோர்களும் இவற்றை பின்பற்றுவார்கள் என்றாலும் இவர்களை எந்த விதிகளும் கட்டுப்படுத்த மாட்டா. காவலாட்கள் புடைசூழ செல்லும் கைதியை போன்றவன் உபாசகன். அதே காவலாட்கள் புடைசூழ செல்லும் ஜனாதிபதியை போன்றவன் முற்றுணர்ந்தோன்.

துறவு: உபாசகர்கள் பெரும்பாலும் உலக இன்பங்களை துறந்து இறைப்பணிக்கு தங்களை அர்பணித்து வாழ்நாளை கழிப்பர். ஆனால் உலகப்பொருட்கள் மீது இருக்கும் பற்றுதலை முழுவதும் துறந்துவிட்ட காரணத்தால் முற்றுணர்ந்தோர்கள் தொடர்ந்து வசதியான வீடு, குளிரூட்டப்பட்ட வாகனம், சொகுசு கப்பலில் உல்லாசப்பயணம் என உலக இன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

சுயக்கட்டுப்பாடு: புலன் இன்பங்களை கட்டுப்படுத்தி இறை உபாசனை செய்ய வேண்டிய கட்டாயம் முற்றுணர்ந்தோர்களுக்கு இல்லை என்பதால் தங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்களை செய்வார்கள். மேலும் கடவுளைப்பற்றிய எண்ணங்களை தொடர்ந்து மனதில் இருத்திக்கொள்ள வேண்டும் என்ற உபாசகர்களின் நிர்ப்பந்தம் ஞானிக்கு இல்லை.

மதச்சார்பின்மை: கடவுளை மறுக்கும் நாத்தீகர்கள், வேறுபட்ட கொள்கைகள் கொண்ட மற்ற மதத்தினர் மற்றும் அறிவியல் அறிஞர்கள் ஆகிய அனைவருடனும் ஒத்துப்போவது முற்றுணர்ந்த ஞானிகளால் மட்டுமே முடியும். உபாசகர்களால் மற்றவர்களது கொள்கைகளையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியாது.

முடிவுரை :

ஆசிரியரின் துணையுடன் ஒவ்வொருவரும் தன் சுயமுயற்சியால் மட்டுமே அறிவை பெறமுடியும். ‘நல்ல புத்தி கொடு’ என்று கடவுளை பிரார்த்திப்பதில் தவறு இல்லை. ஆனால் எதிர்பாராமல் பணம் கிடைப்பது போல் அறிவும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு தவறு. கடவுள் யார் என்ற கேள்விக்கு விடைகாண உபாசகர்கள் முறையாக வேதம் பயின்ற ஆசிரியரின் உதவியை நாட வேண்டும்.

கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ள மனப்பக்குவம் அவசியம். உபாசனை செய்வதன் மூலம் தேவையான மனப்பக்குவத்தை பெறலாம். மனப்பக்குவத்தை பெற்றதற்குப்பின்னும் தொடர்ந்து உபாசனை செய்வதில் பயன் இல்லை.

மனப்பக்குவம் என்பது இரண்டு நிலைகளில் ஏற்படும். பணம், பதவி, புகழ் போன்றவை நீடித்த இன்பத்தை தராது என்பதை அறிய சிலகாலம் இவற்றைத்தேடி உலகில் உழைத்ததும் முதல் நிலை மனப்பக்குவம் ஏற்படும். அதன்பின் உபாசனை செய்து கடவுள் யார் என்ற ஞானத்தை பெற்றால் மட்டுமே முக்தியடைய முடியும் என்ற உண்மையை அறியும்பொழுது இரண்டாம் நிலை மனப்பக்குவம் ஏற்படும்.

இந்த நிலையை அடைந்தபின் உபாசனை செய்வதை குறைத்துக்கொண்டு கடவுள் பற்றிய முழு அறிவை அடைய சரியான ஆசிரியரை சரணடைந்து அவரிடம் வேதத்தை முறையாக பயில்வதில் நேரத்தை செலவிடவேண்டும்.  

இப்பொழுதே முக்தி வேண்டும் என்ற தீவிர ஆசையும் கூரிய அறிவும் கொண்ட உபாசகர்கள் வெகு விரைவில் அறிவுக்கண்ணைப்பெற்று கடவுளை நேரடியாக காண்பார்கள்.  மற்றவர்கள் மரணத்திற்குப்பின் கடவுளுடன் கலந்துவிடும் நம்பிக்கையுடன் மரணம் வரை உபாசனையை தொடர்வார்கள். ஞானிகள் ஞானம் பெற்ற அன்றே கடவுளுடன் ஒன்றாகிவிடுவதால் அவர்களே உண்மையில் முக்தியடைந்தவர்கள்.

பயிற்சிக்காக :

1. ஞானிக்கும் உபாசகனுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன?

2. ஞானிக்கும் உபாசகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்னென்ன?

3. ஞானத்தால் ஏற்படும் பலன்களாக இங்கு கூறப்பட்ட கருத்துக்கள் யாவை?

4. ஞானம் பெறாமல் முக்தியடைய முடியாது என்பது உண்மையா?

5. ஞானம் பெற நமக்கு இருக்கும் ஒரேவழி யாது?

6. கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை எதற்காக பயன்படுத்தவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. ஒரு சில அறிவாளிகளும் சிந்தனையாளர்களும் உபாசகர்களாகவே கடைசிவரை வாழ்வது ஏன்?

2. உபாசகர்களின் நம்பிக்கை உண்மையாகவும் ஞானிகளின் அறிவு பொய்யாகவும் இருக்க வாய்ப்பு உண்டா?

3. ஞானிகளும் மரணகாலத்தில் உபாசகர்களாக மாறுவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?

4. உபாசகர்கள் முக்தியடைய முடியாதா?

Saturday, March 26, 2011

Lesson 152: Time taken for enlightenment (Brahma Sutra 3.4.51)

பாடம் 152: ஞானம் பெற தேவையான காலம்
பாடல் 476 (III.4.51)

ஞானம் பெற இருக்க வேண்டிய தகுதி, செய்ய வேண்டிய முயற்சிகள், நீக்க வேண்டிய தடைகள் ஆகியவற்றை விளக்கி ஞானம் பெற எவ்வளவு காலம் ஆகும் என்ற தகவலை இந்தப்பாடம் கொடுக்கிறது.

ஞானம் பெறுவது என்றால் என்ன?

வரைபடத்தில் தென்படும் மூதாட்டியின் முகத்தை வேறு ஒரு கோணத்தில் இளம் பெண்ணாக பார்க்கலாம் என்று கூறிய நண்பனின் வார்த்தையை நம்பி முயற்சி செய்தபின்கூட மூதாட்டி மறைந்து இளம்பெண் தென்படவில்லை என்பவரின் நிலைதான் நீ உன்னை பரமனாக அறியவேண்டும் என்ற குருவின் உபதேசத்தை ஏற்று ஞானம் பெற முயல்பவரின் நிலையும். மூதாட்டியின் கண்ணை இளம் பெண்ணின் காதாக நினைத்து படத்தைப்பார் என்ற நண்பனின் யோசனையை ஏற்று படத்தை ஆராய்வது போல் ஆசிரியரின் அறிவுரைகளின் படி நான் யார் என்று ஆராய்ந்தால் எந்த தருணத்திலும் பரமனாக மாறிவிடலாம்.

மூதாட்டி ஒரு இளம்பெண் என்ற தகவலை அறிந்த பின் படத்தில் இளம்பெண்ணை பார்க்க முடிவதுபோல் நீ பரமன் என்ற ஆசிரியரின் உபதேசத்தை ஆராய்ந்து நம்மை நாம் பரமன் என்று உணர்வதுதான் ஞானம் பெறுவதாகும்.

இளம்பெண்ணை பார்த்தபின் கூட மறுபடியும் அவள் மறைந்து மூதாட்டி மட்டுமே நம் கண்களுக்கு தென்படலாம். அதுபோல நான் பரமன் என்ற ஞானத்தைப்பெற்ற பின் கூட நம்மை நாம் ஒரு அற்பமனிதனாக பார்க்க நேரலாம். அதில் தவறில்லை. பெற்ற ஞானம் மறைந்துவிடாது. ஒருமுறை இளம்பெண்ணை பார்த்தபின் மூதாட்டியின் முகத்தை இளம்பெண்ணாக மாற்றிப்பார்க்க வெகுநேரம் ஆகாது. அது போல மனிதன் என்ற நிலையிலிருந்து பரமனாக மாற வெகுநேரம் ஆகாது. ஆனால் ஒருமுறையாவது இவ்வுலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்றும் உண்மையில் இருப்பது உணர்வாகிய நான்மட்டும்தான் என்றும் உணர்வதுதான் ஞானம் பெறுவது. ஞானம் பெற்றபின் அனைத்து கேள்விகளும் மறைந்துவிடும். இளம்பெண்ணின் கழுத்து எங்கேயிருக்கிறது என்று கேட்டால் நண்பனைத்தேடி ஓடாமல் நம்மாலேயே காட்டிக்கொடுக்க முடிவது போல் கடவுளை காட்ட முடியுமா என்று யாரேனும் கேட்டால் குருவை தேட வேண்டிய அவசியம் இருக்காது.

ஞானம் பெறுவது எளிது

வேண்டிய தகுதிகளுடன் முறையாக வேதத்தைப்படித்தால் ஞானம் பெறாமல் இருக்க முடியாது. ஞானம் பெற்றபின் இதைப்புரிந்துகொள்வதற்கு இவ்வளவு நாள் எடுத்துக்கொண்டோமே என்ற வெட்கம் ஏற்படும். இவ்வளவுதானா இல்லை இதற்குமேல் ஏதாவது செய்யவேண்டுமோ என்ற சந்தேகம்கூட ஏற்படலாம். ஞானம் பெறுவது மிகவும் எளிதான காரியம் என்பது ஞானத்தைப்பெற்ற பின்தான் தெரியவரும். ஆகவே ஞானத்தை பெற முயல்பவர்களின் பார்வையில் அது பல பிறவிகளில் முயற்சி செய்யவேண்டிய கடினமான காரியம் என்றுதான் தோன்றும்.

பரமனைப்பற்றி கேள்விப்படவே பலருக்கு வாய்ப்பதில்லை. கேள்விப்பட்டாலும் புரிந்துகொள்ள மிகப்பலரால் முடிவதில்லை. தானும் புரிந்துகொண்டு மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி திறமையுடன்  சொல்லிக்கொடுக்ககூடிய ஆசிரியன் வெகு அபூர்வம். சொல்வதை கேட்டு பரமனாகவே மாறிவிடும் மாணவனும் அபூர்வம் என்று கதாஉபநிஷத் மந்திரம் ஒன்று (1.2.7) கூறுகிறது.

எனவே ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா என்பது மாணவன் மற்றும் அவனது ஆசிரியர் ஆகிய இருவரது திறமையை பொறுத்து தீர்மானிக்கப்படும். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பட்டபடிப்பை முடிப்பது கடினம். மழலையர் பள்ளியில் வேலைசெய்யும் தகுதி மட்டும் இருக்கும் ஆசிரியர் அவனுக்கு அமைந்தால் அவனால் பத்தாம் வகுப்பையே தாண்ட முடியாமல் போகலாம்.

கணிதம், பௌதீகம் போன்ற உலகவியல் தொடர்பான அறிவைப்பெறுவதில் கூட மாணவன் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரின் தகுதிகள் முக்கியம் என்றாலும் வேதம் கூறும் ஞானம் இவற்றிலிருந்து வேறுபட்டது. உலகில் உள்ள அனைத்து புத்தகங்களும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்தை மாணவர்களுக்கு அறிவிக்க உதவும் கருவிகள் மட்டுமே. அறிவை ஆசிரியர்களோ புத்தகங்களோ புதிதாக உற்பத்தி செய்வதில்லை. புவியீர்ப்பு சக்தியை பற்றிய அனைத்து அறிவும் அழிந்து விட்டாலும் கூட நாளை மீண்டும் ஒரு மாம்பழம் கீழே விழ ஒரு மாதவன் அதைப்பார்த்து அதே அறிவை மீண்டும் உலகுக்கு அளிக்கலாம். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தரும் வேதமும் அதை சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களும் இல்லையென்றால் யாராலும் ஞானத்தை அடைந்து முக்தியடைய முடியாது. எனவே வேதம் பயின்ற ஆசிரியரின் உதவி ஞானம் பெற மிக அவசியம்.

உலகில் உள்ள பொருள்களை ஆய்ந்து அறிவதை அறிவு என்றும் அறிபவனை அறிந்துகொள்வதை ஞானம் என்றும் வகைப்படுத்தியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அறிவு முடிவில்லாதது. எந்த ஒரு துறையிலும் அறியவேண்டிய அனைத்தையும் அறிந்து இனி அறியவேண்டியது எதுவுமில்லை என்ற நிலைக்கு யாராலும் வரமுடியாது. ஆனால் ஞானம் என்பது இறுதியானது. பரமனை முழுவதும் அறிந்தவர்கள் இனி அறியவேண்டியது எதுவும் இல்லை. எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை அறியவேண்டும் என்று சாந்தோகிய மந்திரம் 6.1 கூறுகிறது.  அப்படிப்பட்ட முடிவான அறிவை ஞானம் என்று குறிப்பிடுகிறோம். இந்த ஒரு சிறப்பைத்தவிர ஞானத்திற்கும் அறிவிற்கும் வேறு எந்த வேற்றுமையும் கிடையாது. ஞானம் என்றால் தியானம் செய்வதன் மூலம் வரும் அல்லது குருவின் அருள்பார்வை நம் மீது விழுந்தால் வரும் என்பது போன்ற தவறான கருத்துக்கள் மாணவனை திசைதிருப்பக்கூடும். வார்த்தைகளால் விளக்கப்படமுடியாத பரமனை அறிந்துகொள்வது ஆசிரியர் விளக்கிய எளிதான கணக்கின் அடிப்படையில் கடினமான வீட்டுப்பாடத்தை செய்வதுபோல்தான். வகுப்பில் நடத்தும் பாடம் புரியவில்லையென்றால் தனியாக ஆசிரியரின் வீட்டிற்கு சென்று சிறப்பு பயிற்சியின் மூலம் புரிந்து கொள்ள முயலலாமே தவிர பூஜை அறையில் அமர்ந்து தியானம் செய்வதால் அறிவு ஏற்பட்டுவிடாது. பரமன் யார் என்கிற ஞானமும் மற்ற அறிவைப்போல நமது ஐம்புலன்கள் மூலம் தகவல்களை திரட்டி மனதுக்குள் அவற்றை ஆராய்வதன் மூலம் மட்டுமே ஏற்படும்.

மற்றபாடங்களையாவது ஆசிரியரின் துணையில்லாமல் தானே படித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் நான் யார் என்ற ஞானத்தை சுயமுயற்சியால் மட்டும் அடையவே முடியாது. காட்டுப்பாதையில் பறவைகளின் இனிமையான கானத்தை கேட்டபடி பயணம் செய்யும்பொழுது யாரேனும் நைட்டிங்கேல் பறவையின் குரலை கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் அது எப்படி கத்தும் என்பது நமக்குத்தெரியாத காரணத்தால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். அந்தப்பறவை கத்தும்பொழுது இதுதான் நைட்டிங்கேலின் ஒலி என்று சொல்லி கொடுத்தால்மட்டுமே அதை நாம் ஏற்கனவே கேட்டிருக்கிறோம் என்பதை உணர்வோம். அதுபோல நான் பரமன் என்ற அனுபவம் எப்பொழுதும் நம்முடன் இருந்தாலும் அதுதான் பரமன் என்று காட்டிக்கொடுக்க ஒரு ஆசிரியரின் துணை நிச்சயம் தேவை. எனவே ஆசிரியரின் துணையுடன் ஞானம் ஏற்படும் விதம் பற்றி அறிந்தவர்கள் தீவிர முயற்சி செய்தால் ஞானம் எளிதில் ஏற்படும்.

மூன்று வகை ஆசிரியர்கள்

தன் ஆசிரியர்களிடமிருந்து முறையாக வேதத்தை பயின்றதன் மூலம் ஞானத்தை பெற்றவர்களால் மட்டுமே மற்றவர்களுக்கு சரியான வழியை காட்டமுடியும். இந்த உயர்வகை ஆசிரியரை அடைந்தவர்கள் விரைவில் ஞானம் பெற்றுவிடுவார்கள்.

வேதத்தை சரியாக கற்றபின்னும் ஞானம் அடையாமல் தான் கற்றதை சரியாக மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத்தெரிந்த ஆசிரியர்கள் இரண்டாவது வகை. இவர்களிடம் பயிலும் மாணவர்கள் ஞானத்தை அடைவது சிறிது கடினம் என்றாலும் முடியாத காரியமல்ல.

ஒரு மன்னன் காட்டுக்கு வேட்டையாட சென்றபொழுது சுவையான உணவை உண்டு இனிமையாக அரண்மனையில் வாழும் தன் கூண்டுக்கிளியை பற்றி அவன் அங்கிருந்த கிளிகளுக்கு பெருமையுடன் விளக்கினான். அதைக்கேட்டவுடன் மரத்தில் அமர்ந்திருந்த கிளிகளில் ஒன்று இறந்து கீழே விழுந்தது. ஒன்றும் புரியாமல் அரண்மணைக்குத்திரும்பிய அரசன் தன் கூண்டுக்கிளியிடம் நடந்ததை நடந்தபடி கூறினான். அதைக்கேட்டவுடன் அந்தக்கிளியும் செத்து கீழே விழுந்தது. மன்னன் மிகுந்த சோகத்துடன் கூண்டைத்திறந்து கிளியை வெளியே எடுத்தவுடன் அது பறந்து விட்டது. மன்னனுக்கு புரியாவிட்டாலும் துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழியை தெளிவாக அவன் வாயால் கேட்ட புத்திசாலியான கிளி விடுதலை அடைந்தது போல வாழ்க்கைத்துன்பத்திலிருந்து விடுதலைபெறும் விதம் வேதத்தில் கூறப்பட்டபடி ஆசிரியரிடம் கேட்கும் புத்திசாலி மாணவனால் முக்திபெறமுடியும். ஆனால் ஏதேனும் சந்தேகம் கேட்டால் தப்பிப்பது கடினம்தான். எனவே இந்த வகை ஆசிரியர்கள் தன்னால் வெல்ல முடியாத பரிசுகோப்பையை தன் மகனை பயிற்றுவித்து அவனை வெற்றிபெற வைக்க முயலும் தந்தையைப்போன்றவர்கள்.

முன்பிறவியில் செய்த முயற்சியால் ஆசிரியரிடம் வேதத்தைப்படிக்காமலேயே முக்திபெற்ற ஞானிகள் வழிதெரியாமல் பாதைகளில் தடுமாறும் அனுபவமில்லாமல் விமானம் மூலம் வீடுபோய் சேர்ந்தவர்கள். இவர்களை நாடுபவர்களுக்கு இவர் ஆசீர்வாதம் செய்யலாமேதவிர அறிவை வழங்கமுடியாது. அவர் வாயிலிருந்து வரும் அத்தனை வாக்கியங்களும் முழுமையான ஞானத்துடன் முக்தியடைந்தவர் என்பதை காட்டிக்கொடுத்தாலும் அவற்றைக்கேட்டு யாராலும் ஞானம் பெற முடியாது. எனவே இந்த மூன்றாவது வகை ஆசிரியரின் உபதேசங்கள் பெற்ற ஞானத்தில் நிலைபெற உதவுமேதவிர ஞானம் பெற உதவாது.

ஆசிரியர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்  மரணமடைந்தபின் அவரால் யாருக்கும் ஞானம் வழங்கமுடியாது. மேலும் மற்ற பாடங்களில் வகுப்பில் இருக்கும் முப்பது மாணவர்களும் ஒரே சமயத்தில் ஆசிரியரிடமிருந்து அறிவைப்பெறுவது போல் ஞானத்தைப்பெற முடியாது. தனியாக ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை கேட்டு அவர் தனக்குமட்டும் கேட்கும்படி சொல்லும் பதில் மூலம்தான் ஞானம் பெற முடியும். ஏனெனில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்கள் ஒரே மாதிரி இருக்காது. ஒருவருக்கு தரும் பதில் மற்றவரின் முயற்சிக்கு தடையாய் இருக்கும் என்பதால் ஆசிரியரை தனிமையில் அணுகினால்தான் சரியான பதில் கிடைக்கும்.

திறமையான ஆசிரியரால் கூட தன் சொந்த புத்தியை மட்டும் உபயோகித்து யாருக்கும் முக்தியளிக்க முடியாது. வேதத்தை முறையாக படிப்பது மிக அவசியம். விளம்பரத்தில் நடிக்கும் நடிகை பார்வையாளர்களின் கவனத்தை விற்கவேண்டிய பொருளின் பக்கம் திருப்பாமல் தன்னிடம் ஈர்ப்பது போல் தவறான குரு சீடர்களின் கவனத்தை வேதத்தின் பக்கம் திருப்பாமல் அவர்களை தன்னை பின்பற்றும்படி செய்வார். சரியான ஆசிரியர்கள் இந்த தவறை செய்யாவிட்டாலும் அவர்களின் சீடர்கள் வேதத்தை படிக்காமல் குருவின் புகழை பரப்புவதில் நேரத்தை வீணடித்தால் அவர்கள் முக்தியடையும் வாய்ப்பு மிகவும் குறையும்.

இறுதித்தேர்வில் தோல்வியடைந்து மறுபடியும் அதே வகுப்பில் படிக்க வரும் மாணவர்களின் கூட்டம் அதிகமானால் ஆசிரியரின் திறமையை சந்தேகிக்க நேரும். அதுபோல் பல வருடங்கள் தொடர்ந்து சீடர்களாய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குருவின் போதனை பயனளிக்கவில்லை என்று பொருள். அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் தங்கள் பள்ளி ஆசிரியரிடம் நன்றியுணர்வுடன் இருந்தாலும் தங்கள் வேலையை விட்டுவிட்டு தினமும் ஆசிரியரிடம் போய் ஆசீர்வாதம் பெறுவதில்லை. ஞானம் பெற்றவுடன் குருவை சந்திக்கவேண்டிய அவசியமேயில்லை.

அறிவை கொடுத்து அறியாமை இருளை நீக்காமல் ஆசிர்வாதம் மட்டும் அளிப்பவர் குரு அல்ல. வாழ்வில் துன்பத்தை முழுவதுமாக அகற்றுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வாழ்நாள் முழுவதையும் செலவு செய்வதில் பயனில்லை. எனவே ஞானம் கிடைக்க தான் செய்யும் முயற்சிகள் சரியானவையா என்பதை குருவிடம் கலந்தாலோசனை செய்தும் தன் குருவின் சகமாணவர்களின் உபதேசங்களை கேட்டும் விரைவில் ஞானம் பெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.  

ஞானம் பெற தேவையான தகுதிகள்

விதையின் தரம் நன்றாக இருந்தாலும் அது தரிசு நிலத்தில் விளையாது. அதுபோல வேதத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் தகுதியில்லாத மாணவனுக்கு அறிவை கொடுக்க முடியாது.

ஆசிரியர் முழுதுமாக ஒரு கருத்தை சொல்லித்தரும் வரை அவரிடம் கேள்விகள் எதையும் கேட்ககூடாது. கேட்ட கருத்தை மனதில் ஆய்ந்து அது புரியவில்லை என்றால் அதற்கு காரணம் தன் அறிவின் குறைபாடே தவிர ஆசிரியர் அல்ல என்ற பாவத்துடன் அவரை அணுகி கேள்வி கேட்கவேண்டும். ஆசிரியர் கூறுவது தவறு என்று நிரூபிக்கும் நோக்குடன் கேள்விகேட்பவர்கள் ஞானம் பெறமாட்டார்கள். பொழுதுபோக்கிற்காகவோ புகழுக்காகவோ வேதம் பயின்றால் பயனிருக்காது. துன்பத்தை அகற்றி முக்தியடைய வேண்டும் என்ற தாகத்துடன் ஆசிரியரை அணுகி தனக்கு சொல்லித்தருமாறு கேட்டு அவரிடம் முறையாக பயில்பவர்கள் மட்டுமே ஞானம் பெறுவார்கள்.

அரசன் காட்டுக்குசென்ற தன் நெருங்கிய நண்பரான மந்திரி திரும்பவில்லை என்று சோகத்தில் ஆழ்ந்திருந்தான். அவருக்கு வேண்டாதவர்கள் மந்திரி காட்டில் இறந்து விட்டதாகவும் பேயாக அங்கு உலாவுவதாகவும் கதைக்கட்டி விட்டார்கள். இதை முழுவதுமாக நம்பிவிட்ட அரசனின் முன் மந்திரி எதிர்பட்டால் பேயை கண்ட பயம் ஏற்படுமே தவிர நண்பரை சந்தித்த மகிழ்ச்சி ஏற்படாது. அது போல தனக்கு ஞானம் கிடைக்காது என்று உறுதியாக நம்புபவர்களுக்கு ஞானம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

ஞானம் படிப்படியாக ஏற்படாது. அறிவு படிப்படியாக வளந்து ஞானமாக மலரும். நான் பரமன் மற்றும் உலகே மாயை என்ற தொடர்களை வேதம் படிக்கத்துவங்கிய காலத்திலிருந்து கேட்டுகொண்டிருந்தாலும் அதன் உண்மையான பொருள் ஒரு நொடியில் தெரியவரும். மூதாட்டியின் முகத்தில் இளம்பெண்ணின் உருவத்தை தேடும்பொழுது அது கண், காது, கழுத்து என படிப்படியாக நம் கண்களில் தென்படுவதில்லை. பல நேரம் முயற்சிசெய்தவுடன் திடீரென்று அது தெரிவது போல ஞானம் திடீரென்றுதான் உதயமாகும். அந்த ஞானப்பார்வையுடன் உலகை பார்க்கும்பொழுது வேதம் கூறிய அனைத்து கருத்துக்களின் உண்மைத்துவத்தை நேரடியாக அறிவோம். உதாரணமாக ஞானம் பெற்றபின் மறுபிறவியில்லை என்று நமக்கே உறுதியாக தெரிந்து விடும். அதன்பின் வேதம் நமக்கு அவசியமில்லை.

ஞானம் பெற தடைகளாய் இருப்பவை

இவ்வுலகில் இன்பமாக வாழ்வது எப்படி என்பதன் வழிமுறைகளை கடவுள் நமக்கு வேதத்தின் மூலம் தந்திருக்கிறார் என்பதை நம்பாமல் மற்ற புத்தகங்களைப்போல் அதுவும் ஒரு கருத்தை நமக்குத்தருகிறது என்று நினைப்பது ஞானம் பெறுவதற்கு தடை. வேதம் உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் அன்று. ஃபிலாசபி என்ற ஆங்கில வார்த்தையை தத்துவம் என்று மொழிபெயர்ப்பது தவறு. ஏனெனில் தத்துவம் என்ற வார்த்தைக்கு உண்மை என்று பொருள். எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஒரு தனிமனிதன் தனக்கு தோன்றிய எண்ணங்களை கோர்வையாக வெளியிடும் கருத்துதான் ஃபிலாசபி. கருத்துக்கள் வேறுபடும் தன்மை உடையன என்பதால் காலம் என்றால் என்ன, அன்பு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு முடிவான பதில் இதுதான் என்று அறுதியிட்டு தத்துவஞானிகளால் கூறவே முடியாது. வேதம் இதுபோல கருத்துக்களை கொண்டது அல்ல. அதில் கூறப்பட்ட அனைத்தும் உண்மைகள் என்பதை உணராமல் நான் பரமன் என்பது வேதத்தின் கருத்து என்ற நோக்கில் படிப்பவர்கள் ஞானம் பெற மாட்டார்கள்.

நான் யார் என்பதை அறிய உள்நோக்கி பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் தியானம், உள்ளுணர்வு ஆகியவற்றின் மூலம் ஞானம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். கண்களால் நம் முகத்தை நேரடியாக பார்க்க கண்ணாடி அவசியம். கண்ணாடியை பார்க்கும்பொழுது  கண்கள் நம்முடைய முகத்தைத்தான் பார்க்கின்றனவே தவிர கண்ணாடியை பார்ப்பதில்லை. அதுபோல் வேதம் நான் யார் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் கண்ணாடி. அதை படிக்கும்பொழுது நாம் யார் என்பதைத்தான் ஆராய்ந்து அறிய முயல்கிறோம் என்பதை அறியாமல் வேதம் படிப்பவர்கள் ஞானம் பெறுவதில்லை.

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரு தனி மனிதனுக்கு தேவையான பகுதிகளை சுட்டிக்காட்ட ஆசிரியரின் உதவி தேவை. வேதத்தை முறையாக பயின்ற ஆசிரியரால் கூட  மாணவனின் நிலையை அறிந்து கொள்ளாமல் அவனுக்கு உதவி செய்ய முடியாது. மாணவன் கேட்கும் கேள்விகள் மூலமாகத்தான் ஆசிரியர் அவனைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். எனவே ஏகலைவன் போல ஆசிரியரிடம் நேரடியாக கேள்விகேட்காமல் படித்தால் ஞானம் பெறமுடியாது. தேவைப்படும்பொழுதெல்லாம் ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை தெளிவு செய்துகொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்களால் முக்தியடைய முடியாது.

நமது ஐந்து புலன்கள் நம்மைச்சுற்றி ஒரு உலகம் உண்மையில் இருப்பதாக நமக்கு தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருப்பதால் அது மாயை என்ற ஞானம் ஏற்படுவது தடைபடுகிறது. உலகம் இருப்பதுபோல் காட்சியளிக்கும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் அறிஞர்கள் நிரூபித்தபின்னும் அனைவரும் உலகம் உண்மை என்ற அடிப்படையில்தான் அனுபவங்களைப்பெறுகிறார்கள்.

தடைகளை நீக்கும் விதம்

உலகம் மாயை என்றும் ஆனந்தமயமான நான் மட்டுமே உண்மை என்றும் வேதம் கூறும் கருத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். புலன்கள் அறிவிக்கும் செய்திகளை வேதம் கூறும் உண்மையுடன் ஒப்பிட்டு இது பொய் என்று நமக்கு நாமே கூறிக்கொள்வது அவசியம். முடிந்தவரை நம்முடைய செயல்கள், உறவுகள், உடைமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை குறைத்துக்கொண்டால் உலகம் உண்மை என்ற தவறான அறிவு மறைந்து ஞானம் தோன்ற வாய்ப்பு அதிகமாகும்.

முடிவுரை :

பசியை தீர்க்க உணவு உண்ண ஆரம்பித்தபின் எப்பொழுது பசி தீரும் என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. உண்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம். அதுபோல் ஞானத்தைப்பெற வேதம் படிக்க ஆரம்பித்தவர்கள் எப்பொழுது ஞானம் வரும் என்ற கேள்வியை பொதுவாக கேட்க மாட்டார்கள். வேதம் படிப்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம்.

உணவு சுவையாக இருக்கிறது என்று பசி தீர்ந்தபின்னும் தொடர்ந்து சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். அதுபோல இனிமையான அனுபவம் என்று வேதத்தை படித்துக்கொண்டே இருக்ககூடாது. ஆனந்தமயமான பரமன் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்ற வேதத்தில் கூறப்பட்ட ஒரே கருத்தை திரும்பத்திரும்ப படிப்பதில் பயனில்லை. வெவ்வேறு ஆசிரியர்கள் வேதத்தின் அடிப்படையில் உபதேசிக்கும் உண்மைகளை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டு கூடிய விரைவில் ஞானம் பெற முயல வேண்டும்.

நூற்றியெட்டு உபநிடதங்களை உள்ளடக்கிய நான்கு வேதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை மற்றும் இவற்றை ஆதாராமாக கொண்டு எழுதப்பட்ட நூல்கள் என ஆன்மீக நூல்கள் ஏராளமாக உள்ளன. இவையனைத்தையும் படித்து முடிப்பது நமது குறிக்கோள் அல்ல. ஞானம் பெறுவது மட்டும்தான் நம் நோக்கம்.

வித்யாரண்ய சுவாமிகள் ஞானம் பெற ஐந்து கோசங்களை ஆராயச்சொல்கிறார். தேங்காயின் மட்டை, ஒடு ஆகியவற்றை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுப்பது போல் உடல், மனம், பிராணன் என்று ஒவ்வொரு கோசத்தையும் ஆராய்ந்து இது நான் அல்ல என்று ஒதுக்கித்தள்ளி நான் பரமன் என்ற ஞானத்தைப்பெறவேண்டும். இதை செய்துமுடித்த பின்கூட என்னைக்கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுபவன் எனக்கு நாக்கு இல்லை என்று உரக்க கத்துபவனை போன்று பரிதாபத்துக்குரியவன் என்கிறார் வித்யாரண்யர்.

வேதத்தை படித்து தேற ஓரிரு வருடங்கள் ஓயாமல் உழைத்தபின்னும் ஞானம் ஏற்படவில்லையென்றால் தொடர்ந்து தர்ம காரியங்கள் செய்வது, கடவுளை பிரார்த்திப்பது, வேதம் படித்து படித்ததை ஆராய்வது என்பது போன்ற ஆன்மீக செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்ககூடாது. மாணவப்பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் முயற்சியை பகுதிநேர வேலையாக மாற்றிக்கொண்டு இல்வாழ்வை துவங்க வேண்டும். இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்ய அதிக நேரம் செலவிட்டு ஞானம் பெற செய்யும் செயல்களை குறைத்துக்கொள்ள வேண்டும். மனம் பக்குவப்பட்டபின் ஏற்கனவே செய்த முயற்சிகளின் பலனாக விரைவில் ஞானம் ஏற்படும்.

மனித மனங்கள் வேறுபடுவதால் ஞானம் கிடைக்க எவ்வளவு காலமாகும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. உயர்வகை ஆசிரியரின் துணையுடன் வேதம் படிக்க வாய்த்தவர்கள் ஆசிரியரிடம் முழுமையாக சரணடைந்து அவர் காட்டும் வழியில் பயணித்தால் மனம் தகுதி பெற்றபின் தானாக ஞானம் ஏற்படும்.


பயிற்சிக்காக :

1. ஞானம் பெறுவது என்றால் என்ன?

2. ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா?

3. மற்ற புத்தகங்களுக்கும் வேதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

4. ஞானத்திற்கும் அறிவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?

5. ஞானம் பெற ஆசிரியரின் உதவி தேவை என்பதை விளக்குக.

6. மூன்று வகை ஆசிரியர்கள் யார்?

7. ஞானம் பெற ஆசிரியரை தனியாக அணுக வேண்டிய காரணம் என்ன?

8. விரைவில் ஞானம் பெறுன் வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டிய இரு செயல்கள் என்ன?

9. ஞானம் பெற தேவையான தகுதிகள் யாவை?

10. ஞானம் பெற தடைகளாக இருப்பவை எவை?

11. தடைகளை நீக்க என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. ஆசிரியர் மற்றும் வேதம், இவ்விரண்டில் எது மிகவும் முக்கியம்?

2. ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இருக்க வேண்டிய உறவை ஆராய்க.

3. மாணவன் ஆசிரியரிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியத்தையும் கேள்வி கேட்கவேண்டிய விதத்தையும் ஆராய்க.

4. ஞானம் பெற்றுவிட்டோம் என்று நமக்கு எப்படித்தெரியும்?

5. அத்வைதம், துவைதம் போன்றவை ஃபிலாசபிகளா?

6. மற்ற துறையில் உள்ள ஆசிரியர்களுக்கும் வேதம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

Sunday, February 27, 2011

Lesson 149: Priest and the sacrificer (Brahma Sutra 3.4.44-46)

பாடம் 149: பலவிதமான மக்கள்
பாடல் 469 – 471 (III.4.44-46)

பூஜாரி யாகங்களை நடத்திக்கொடுப்பதற்கான பணத்தை பெற்றுக்கொள்வதால் யாகத்தின் பலன்கள் யஜமானனைச்சேரும் என்ற கருத்தை கூறுவதன் மூலம் முக்தியடைய முயலும் மக்கள் தங்கள் முயற்சி சரியான பலனை தருகிறதா என்பதை ஆராயவேண்டியதன் அவசியத்தை இந்தப்பாடம் விளக்குகிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி

புகைப்படத்தை பார்த்தோ மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டோ நம் முகம் எப்படியிருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது. கண்ணாடி மட்டும்தான் நம் முகத்தை நமக்கு காட்டவல்லது. கண்ணாடியை சரிபார்க்க அதன் வழியாக வேறு ஒரு பொருளின் பிம்பம் சரியாகத்தெரிகிறதா என்று சோதிக்க வேண்டும்.  

சுய அறிவினால் யோசித்தோ மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டோ நான் யார் என்பதை தெரிந்து கொள்ளவே முடியாது. வேதம் மட்டும்தான் நாம் யார் என்பதை நமக்கு காட்டிக்கொடுக்கும் கண்ணாடி. வேதம் குற்றமற்றது என்று உணர்ந்துகொள்ள உலகத்தைப்பற்றி வேதம் கூறும் கருத்துக்களை நம் அனுபவத்தோடு ஒப்பிட்டு சரிபார்க்கவேண்டும். 

வேதத்தை பிரமாணமாக ஏற்றுக்கொண்டவர்களிடையேகூட அதன் அடிப்படை கருத்து என்ன என்பது பற்றி அபிப்பிராய பேதம் உள்ளது. நான் பரமன், நான் கடவுளின் ஒரு பகுதி, நான் கடவுளின் அடிமை என்று ஒன்றுக்கொன்று முரணான முடிவுகளை வேதம் கூறுவதாக தோன்றினால் நாம் வேதத்தின் மீது சந்தேகம் கொள்ள கூடாது.

நமது பார்வை சரியாக இல்லாவிட்டால் கண்ணாடி சரியாக இருந்தும் அதில் தெரியும் நமது முகத்தை சரியாகபார்க்க முடியாது. எனவே கண்ணாடியை சந்தேகிக்காமல் நமது பார்வையை சோதிக்க வேண்டும். அதுபோல வேதம் கூறும் உண்மையை சரியாக புரிந்துகொள்ள நமது அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். மக்களின் அறிவுத்திறன் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடுவதால்தான் வேதம் கூறும் ஒரே உண்மையை அடிப்படையாக கொண்டு பல்வேறு மதங்கள் நிலவி வருகின்றன. நான் யார் என்ற கேள்விக்கு வேதம் கூறும் ஒரே பதிலை சரியாக புரிந்து கொண்டேனா என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் ஆராய்ச்சி உதவும்.

செவ்வக ஆராய்ச்சி

காகிதத்தில் ஒரு செவ்வகத்தை வரைந்து அதன் நடுவில் குறுக்கேயும் நெடுக்கேயும் இருநேர்கோடுகள் வரைந்து அதை நான்கு பகுதிகளாக பிரித்து ‘இதில் எத்தனை செவ்வகங்கள் இருக்கின்றன’ என்ற கேள்வியை கேட்டால் பல்வேறு பதில்கள் கிடைக்கும். ஒரு சிலர் நான்கு என்றும் மற்றும் சிலர் ஐந்து என்றும் பதிலளிப்பர். எது சரியான விடை என்பதை அறிய யார் அதிக எண்ணிக்கையை சொல்கிறாரோ அவரிடம் விளக்கம் கேட்கவேண்டும். ‘ஐந்து’ என்பவர், ‘எப்படி நான்கு?’ என்பதையும் விளக்கும் அறிவு பெற்றிருப்பார். நான்குதான் முடிவான விடை என்று பிடிவாதம் பிடிப்பவர் ஐந்து என்பவரை குருவாக ஏற்றுக்கொள்ளாதவரை கேள்விக்கு சரியான பதிலை தெரிந்து கொள்ள முடியாது.

கூடியிருக்கும் அனைவரும் ஐந்து என்ற பதிலை ஏற்றுக்கொண்டால் கூட அதுதான் சரியான விடை என்பது நிரூபணமாகாது. ஏனெனில் சரியான விடை ஒன்பது. நான்கிலிருந்து ஐந்து என்று கற்றுத்தேறியவர்களில் அறிவுத்திறன் குறைந்தவர்கள் தாங்கள் கண்டுகொண்டதுதான் முடிவான உண்மை என்ற முடிவோடு எப்படி ஒன்பது சரியான விடையாக இருக்க முடியும் என்பதை ஆராயமாட்டார்கள். மற்றவர்களின் விடை வேறாக இருப்பதன் காரணத்தை ஆய்ந்து சரியான பதிலைத்தெரிந்துகொள்ளும் ஆவலும் அறிவு கூர்மையும் இருப்பவர்கள் மட்டுமே இந்த கேள்வியின் இறுதியான பதிலை தெரிந்து கொள்ளவார்கள்.

ஒன்பது செவ்வகங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டபின்னும் அதற்கு மேல் இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகத்துடன் இருப்பவர்கள் முடிவான பதிலை தெரிந்து கொண்டவர்கள் அல்ல. ஒன்பதுதான் சரியான விடை என்பதில் உறுதியாக இருப்பவர்கள் மற்ற அனைவரும் ஏன் தவறான பதிலை கூறுகிறார்கள் என்று அறிவார்கள். மேலும் நான்குதான் சரியான விடை என்று பிடிவாதம் பிடிப்பவர்களைப்போலன்றி ஒன்பதுதான் சரியான விடை என்பதில் அறிவுபூர்வமான உறுதியுடன் இருப்பார்கள்.

நான்கு, ஐந்து போன்ற பதில்கள் ஒன்பது என்பதில் அடங்கியிருப்பதைப்போல வேதத்தின் முடிவான பதில் மற்ற அனைத்து பதில்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். எனவே நிலையான முக்தியடைய உலகத்தில் உள்ள அனைத்து  மதங்களின் கொள்கைகளைப்பற்றியும் மற்றவர்கள் ஏன் தவறான அறிவுடன் இருக்கிறார்கள் என்பதைப்பற்றியும் தெளிவாகத்தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவுத்திறன்

சென்றபிறவிகளில் சேர்த்து வைத்த அறிவுத்திறனுடன்தான் குழந்தைகள் பிறக்கின்றன. உடல் மற்றும் மூளை வளர்ச்சி ஏற்கனவே உள்ளிருக்கும் அறிவை வெளிப்படுத்த உதவுமே தவிர புதிதாக அறிவை உண்டுபண்ணுவதில்லை. உண்ணும் உணவு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமை மற்றும் சுற்றுபுற சூழலின் தாக்கம் ஆகியவற்றால் அறிவின் அளவை தீர்மானிக்க முடியாது. கற்பதனால் மட்டுமே அறிவு வளரும். எனவே மக்கள் கல்வி கற்க எடுத்துக்கொண்ட முயற்சி வேறுபடுவதனால் மட்டுமே அவர்களின் அறிவுத்திறன் வேறுபடுகிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதிக அறிவுத்திறனுடன் பிறந்தவர்கள் வேகமாக கற்று தங்கள் அறிவை மற்றவர்களைவிட மேலும் அதிகபடுத்திக்கொள்ளும் சக்தியுடையவர்கள். ஆனால் யாராலும் தீடீரென்று அறிவாளியாக மாறிவிடமுடியாது. பள்ளி இறுதித்தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்ற மாணவனால் கல்லூரிப்படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்க முடியாது. பலபிறவிகளில் சேர்த்த அறிவு அழியாது. அளவுக்கு அதிகமாக அதை வளர்க்கவும் முடியாது. எனவே தற்பொழுது நமக்கு இருக்கும் அறிவை ஒரளவு வளர்த்துக்கொள்ள முடியுமே தவிர ஒரேயடியாக வளர்த்து ஐன்ஸ்டீனாக மாற முடியாது. ஐந்தில் வராத கணக்கு ஐம்பதிலும் வராது.

செவ்வக ஆராய்ச்சியில் ஒன்பது என்ற சரியான விடையை உறுதியுடன் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் உள்ளவர்களால் மட்டுமே வேதத்தின் சாரத்தை புரிந்து கொண்டு முக்தியடைய முடியும். சொல்லிக்கொடுத்தபின்னும் ஒன்பது செவ்வகங்களை பார்க்கத்தெரியாதவர்கள் தங்கள் வாழ்வின் துன்பங்களை முற்றிலுமாக கடக்க தேவையான அறிவுத்திறன் இல்லாதவர்கள்.

அறிவுத்திறனை ஒருவர் எப்படி உபயோகப்படுத்துகிறார் என்பது அவரது விருப்பு வெறுப்புகளை பொறுத்து அமையும். கடவுள், வேதம் போன்ற ஆன்மீக விஷயங்களில் விருப்பமில்லாதவர்கள் தங்கள் அறிவை வேதம் படிக்க செலவிட மாட்டார்கள். இவர்கள் நான் யார் என்ற கேள்வியின் பதிலை அறிந்து கொள்வது அவசியம் என்றும், அந்த அறிவு வேதத்திலிருந்து மட்டுமே கிடைக்கும் என்றும் வேதத்தை படித்து புரிந்து கொள்ள ஆசிரியரின் துணை தேவை என்றும் அறியமாட்டார்கள். எனவே போதிய அறிவுத்திறன் மற்றும் வேதத்தின் மேல் நாட்டம் ஆகிய இரு தகுதிகள் இருப்பவர்களால் மட்டுமே முக்தியடைய முடியும்.

பல்வேறு மதங்கள் காட்டும் ஒரே உண்மை

தூய்மையாக துடைக்கப்பட்ட கண்ணாடிதான் முகத்தை சரியாக காட்டும். அது போல அறிவின் துணையால் வேதத்தை தீவிரமாக ஆய்ந்தால்தான் நான் யார் என்பதை உறுதியாக உணர முடியும். முகத்தைப்பார்ப்பதற்காகவே கண்ணாடியை பார்க்கிறோம். அதுபோல் வேதம் படிப்பதன் ஒரே நோக்கம் நான் யார் என்பதை தெரிந்துகொள்வதற்காக என்ற தெளிவுடன் வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படிப்பவர்கள் உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன என்ற உண்மையை முடிவில் உணர்வார்கள்.

மனிதர்களின் அறிவுத்திறன் மாறுபடுவதால்தான் மதங்களிடையே வேறுபாடுகள் இருப்பதுபோல தோன்றுகிறது. செவ்வக ஆராய்ச்சியில் நான்கு அல்லது ஐந்து என்று விடையளிப்பவர்களை தவறு என்று தள்ளிவிடமுடியாது. ஏனெனில் அவர்களது அறிவுக்கேற்ற சரியான விடையை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அதுபோல வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் முடிவான உண்மை அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்பதை அறியாதவர்கள். ஆயினும் அவர்களது அறிவின் தரத்துக்கு ஏற்றவாறு அவர்கள் புரிந்து கொண்ட மதக்கொள்கைகள் தவறு அல்ல. நான்கு என்பவனுக்கு ஐந்தாவது செவ்வகத்தை அடையாளம் காட்டி அவனை முன்னேற உதவாமல் அவன் விடை தவறு என்று அவனை மட்டம் தட்டி ஏளனம் செய்வது சிறுபிள்ளைத்தனம்.

மருத்துவர்கள் அனைவரும் அனைத்து வித நோய்களை குணப்படுத்தும் அறிவைக்கொண்டிருந்தாலும் அவர்களிடம் செல்லும் நோயாளிகளின் அடிப்படையில் இவர் காசநோய் மருத்துவர், இவர் குழந்தை மருத்துவர் என்று தரம் பிரிப்பதுபோல மதங்கள் அவற்றை பின்பற்றுபவர்களின் அறிவுத்திறனின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. 

பரலோகத்திலிருந்து இரட்சிப்பவன் கடவுள் என்று நம்புபவனின் மதம் நானும் கடவுள் என்று கூறுபவனின் மதத்திலிருந்து வேறுபட்டதாக காட்சியளிக்கிறது. தேவையான அறிவுத்திறனும் கடவுள் யார் என்பதை அறியும் அடங்கா ஆவலும் கொண்டவன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்றாலும் முடிவான உண்மையை அறிந்துகொள்வான். கேட்பவர்களுக்கு புரியும் விதத்தில் ஆசிரியர் முதலில் நான்கு பின் ஐந்து என்று படிப்படியாக முன்னேறி முடிவில் ஒன்பதை காட்டிகொடுப்பது போல் அனைத்து மதங்களும் நான் பரமன் என்ற முடிவான உண்மையை மட்டும்தான் படிப்படியாக போதிக்கின்றன.

வேதம் ஒன்றே

அனைத்து மதங்களும் முழுமுதல் கடவுள் ஒருவனே என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்கின்றன. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் தர்க்க அறிவிற்கு ஏற்புடையதாக இல்லை. கடவுள் ஒருவன் என்பதால் கடவுளின் உபதேசங்களான வேதம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கடவுள் பொய்பேச மாட்டார்.  

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரே உண்மை பலதரப்பட்ட மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் கூறும் முடிவான கருத்தை புரிந்து கொண்டுவிட்டேன் என்றுதான் அனைவரும் நம்பிக்கொண்டிருப்பார்கள். அனைத்து நம்பிக்கைகளும் சரியானவை என்பதால் யாரிடமும் அவர்களின் நம்பிக்கைத்தவறு என்று சுட்டிக்காட்டக்கூடாது. ஐந்து செவ்வகங்களை கண்டவன் நான்கு என்று கூறுபவனை ஏளனமாக பார்க்க கூடாது. மேலும் அவனது அறிவுத்திறன் அவனது  சொந்த முயற்சியால் வளரும் வரை நான்குதான் முடிவான பதில் என்ற நிலையிலிருந்து அவர்கள் முன்னேற மாட்டார்கள். எனவே தான் ஐந்து என்று நினைத்துக்கொண்டிருப்பது சரிதானா என்று ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கையை மட்டும் சோதிக்கவேண்டுமே தவிர மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

எவ்வளவுதான் முயன்றாலும் வேதத்தின் நான் பரமன் என்கிற முடிவான அறிவை அனைவரும் புரிந்து கொள்ளும்படி செய்ய முடியாது. கூரிய அறிவுத்திறன், மனப்பக்குவம், அடங்கா ஆவல், வேதத்தை முறையுடன் படிக்கும் வாய்ப்பு ஆகிய அனைத்தும் ஒருசிலருக்கே உள்ளது என்பதால் சரியான பதில் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். ஒருவேளை பெரும்பான்மை மக்களின் கருத்து நம்முடன் ஒத்துப்போனால் அது தவறான கருத்தாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். ஐந்து தான் சரியான விடை என்று அறிந்தவர்களின் எண்ணிக்கை நான்கு என்ற பதிலை சொல்பவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும். மிகச்சொற்பமானவர்களே ஒன்பது என்ற சரியான பதிலை அறிந்திருப்பார்கள்.

என்னுடைய மதம் மட்டும்தான் சரியானது அல்லது எனது கடவுள் மட்டும்தான் ஒரே கடவுள் என்று போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். அவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டபின் தங்களுடைய நம்பிக்கை சரிதானா என்று சோதனை செய்தால் மட்டுமே முடிவில் முக்தியடைவார்கள்.

சத்திய சோதனை

நாம் அறிந்ததுதான் வேதத்தின் முடிவான உண்மையா என்று நமது அறிவை நாமே சோதனை செய்துகொள்ள பின்வரும் உபாயங்கள் உதவும்.

முதல் சோதனை: உலகத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை

முற்றுணர்ந்தோனின் பார்வையில் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகச்சரியாக நடப்பதாகவே தெரியும். கலிகாலம் முற்றிவிட்டது என்று இவன் புலம்பமாட்டான். ஆட்சியை மாற்றவேண்டும், சமூகத்தை முன்னேற்ற வேண்டும், இளஞர்களை திருத்த வேண்டும், வறுமையை ஒழிக்கவேண்டும் என்பது போன்ற எவ்வித குறிக்கோள்களும் இவனுக்கு இருக்காது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்பது போன்ற தினசரி செய்திகள் இவனை எவ்விதத்திலும் பாதிக்காது.

இரண்டாம் சோதனை: சரியான விளக்கம்

நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சரியான காரணங்கள் இவனுக்கு தெரிந்து இருக்கும். எதையறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை இவன் தெரிந்து கொண்டுவிட்டதால் ‘இது ஏன் இப்படி நடக்கிறது’ என்ற கேள்வி இவன் மனதில் எழவே எழாது. விபத்து, இயற்கையின் சீற்றம், தற்செயல் என்பதுபோன்ற தர்க்கத்துக்கு ஒவ்வாத காரணங்களை இவன் ஏற்றுக்கொள்வதில்லை.  கடவுள் யார், அவர் ஏன் இவ்வுலகை இவ்வாறு உருவாக்கினார் என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் இவனுக்கு தெரியும் என்பதால் இவற்றை மற்றவர்களுக்கு புரியவைக்கும் திறமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவனது அமைதி எப்பொழுதும் குறையாது.

மூன்றாம் சோதனை: மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே

ஒவ்வொருவரும் ஒரு விதம் என்று இவன் அறிந்திருப்பதால் யாரையும் தவறு என்று விமரிசிக்கமாட்டான். யாரையும் யாரும் மாற்றமுடியாது என்பது இவனுக்குத் தெரியும். எனவே தன் வாழ்வில் தன்னோடு உறவாட வாய்ப்பவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வான். தன்னைத்தானே மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு முடிந்த உதவியை செய்வான். இராவணன் சீதையை கடத்திச்சென்றாலும் அவன் இராமாயணத்திற்கு அவசியம். அது போல கெட்டவர்கள் படைப்பின் முக்கியமான அங்கம் என்று அறிந்த முற்றுணர்ந்தோன் யாரையும் வெறுக்க மாட்டான்.  

நான்காம் சோதனை: கருத்துப்பரிமாற்றம்

வாதம், விவாதம், சொற்பழிவு, கருத்தரங்கம் போன்றவற்றில் பங்கேற்க வேண்டிய அவசியம் இவனுக்கு இல்லை. முடிவான உண்மையை இவன் அறிந்து கொண்டுவிட்டதால் மற்றவர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு இவன் எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

உதாரணமாக மறுபிறவி என்பது உண்மையா பொய்யா என்ற விவாதம் அனாவசியம் என்று அவனுக்குத்தெரியும். அவரவர் தன்னுடைய மதகுருமார்களின் வார்த்தைகளை முதலில் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு வேதம் கூறும் முடிவான உண்மையை ஆய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். அதன்பின் ஏன் மறுபிறவியை பற்றி விவாதிக்க கூடாது என்பதும் எவ்வாறு வெவ்வேறு வழிகளில் போதிக்கும் மதங்கள் ஒரே இறுதிகருத்தைத்தான் கூறுகின்றன என்பதும் புரியவரும்.

இவன் தானறிந்த உண்மையை மற்றவர்களுக்கு பரப்பவேண்டும் என்ற ஆவலுடன் செயலாற்றுவதில்லை. ஏனெனில் பெரும்பாலோருக்கு அது புரியாது என்பதை இவன் அறிவான். எது முடிவான உண்மை என்பது ஜனநாயக முறையில் தெரிவு செய்ய முடியாது என்பதை அறியாதவர்கள் தங்களது கொள்கைகளை ஆதரிக்கும் கும்பலை அதிகப்படுத்த முயன்றுகொண்டிருப்பார்கள். தன்னால் அவர்களது கொள்கை முடிவான உண்மையல்ல என்று தர்க்கத்தின் அடிப்படையில் நிரூபிக்க முடியுமென்றாலும் தன்னை குருவாக ஏற்று தன்னிடம் பாடம் கேட்கும் சீடர்களுக்கு மட்டுமே இவன் தன் கருத்துக்களை எடுத்துரைப்பான்.

மறுபிறவி உண்டா இல்லையா என்று யாரேனும் இவனிடம் நேரடியாக கேட்டால் கேட்பவனின் தராதரத்தைப்பொறுத்து ஆம், இல்லை, தெரியாது என்று வெவ்வேறு பதில்களை கொடுப்பான். அறிவுத்திறன் ஆளுக்காள் மாறுபடுவதால் அவரவரின் ஜீரணசக்திக்கு ஏற்புடைய பதிலை அவன் கொடுப்பான்.

ஐந்தாம் சோதனை: கடவுளை அறிதல்

பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தனக்கு அன்னியமாக பார்ப்பவர்கள் நிறைந்த இவ்வுலகில் மற்றவர்களுக்காக கோவிலுக்கு செல்வது கடவுளை உபாசித்து உலக நலனுக்காக பிரார்த்தனைகள் செய்தாலும் ‘எனக்கு இது வேண்டும்’ என்று கடவுளிடம் எதுவும் எப்பொழுதும் கேட்கமாட்டான்.

ஆறாம் சோதனை: மக்களை அறிதல்

மரணமில்லா பெருவாழ்வு, என்றும் ஆனந்தம் மற்றும் அறியும் ஆவல் ஆகிய மூன்று அடிப்படை ஆசைகளால் உந்தப்பட்டு அனைத்து மக்களும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் வேறுபடுவதால் இந்த மூன்று ஆசைகளை பூர்த்திசெய்துகொண்டு முக்தியடைய அவர்களால் முடிவதில்லை.

சுற்றியுள்ள மனிதர்களையும் சூழலையும் மாற்றி அமைத்தால் இந்த மூன்று ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து உழைப்பவர்கள்  உலகத்தைச்சார்ந்து இருப்பவர்கள். இவர்கள் முதல் நிலையில் உள்ள மனிதர்கள்.

கடவுளை சரணடைந்தால் மட்டும்தான் இந்த மூன்று வரங்களையும் பெற முடியும் என்ற நம்பிக்கையில்  இறைதிருப்பணிகளில் ஈடுபட்டு இறைவனைச்சார்ந்து இருப்பவர்கள் இரண்டாம் நிலையில் உள்ள மனிதர்கள். 

உலகத்தை மாற்ற உழைத்தும் கடவுளிடம் சரணடைந்து செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்தும் மனம் பக்குவபட்டபின் இவர்கள் உலகப்பள்ளியின் இறுதித்தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். நான் யார் அல்லது கடவுள் யார் என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே இந்த மூன்று ஆசைகளை முழுதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற தெளிவோடு இவர்கள் செய்யும் முயற்சி வெற்றிபெற்றால் முற்றுணர்ந்தோன் என்ற பட்டம் பெற்று பிறப்பு-இறப்பு சுழலிலிருந்து விடுதலையடைந்து மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள்.

இந்த நிலையை அடையும்வரை அனைத்து மக்களுக்கும் என்னவென்று தெளிவாக சொல்லத்தெரியாத ஒரு குறை அல்லது ஒரு ஏக்கம் இருந்துகொண்டேயிருக்கும். ஏனெனில் மரணமில்லா பெருவாழ்வு என்பதற்கு என்ன அர்த்தம் என்பது அந்த குறிக்கோளை அடைந்த பின்தான் தெளிவாகத்தெரியவரும். எனவே அதுவரை வார்த்தைகளால் விளக்கமுடியாத ஏக்கம் மட்டும்தான் இருக்கும்.

மூன்று ஆசைகளின் இருப்பிடம் தான்தான் என்ற அறிவு அவர்களிடம் இல்லை என்பதை முற்றுணர்ந்தோன் மட்டுமே உணர்வான்.   பள்ளி இறுதித்தேர்வில் தேறியவன் மற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற தன்னால் ஆன உதவியை செய்வது போல முக்தியடைந்தவன் தான் பயணித்த பாதை மற்றும் அதில் இருந்த தடைகளை கடக்கும் விதம் ஆகியவற்றை தன்னை குருவாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு தெளிவாக காட்டிக்கொடுப்பான்.

ஏழாம் சோதனை: வாழ்க்கைப்பயணத்தை அறிதல்

எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கும் விளக்கமுடியாத குறையை நிறைசெய்ய முதலில் மக்கள் விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் செயல்கள் செய்வார்கள். சரி-தவறு என்ற அடிப்படையில் தர்மமான காரியங்களை செய்தும் அதர்மங்களை தவிர்த்தும் வாழ்ந்தால் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுதலைபெற்று குருவிடம் சரணடையும் மனப்பக்குவத்தை பெறுவார்கள். அதன்பின் அவர்களின் ஆன்மீகப்பயணம் வெகு வேகமாக நடந்து சரி-தவறு என்பதைவிட உண்மை-பொய் என்பதன் அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை அமையும். பரமன் மட்டுமே உண்மை என்றும் இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதும் புரிந்து விட்டால் குறைவில்லா இன்பத்தை அடைவார்கள்.

பிறவிகள்தோறும் சேர்த்து வைத்துள்ள பாவ-புண்ணியம், விருப்பு-வெறுப்பு மற்றும் அறிவுத்திறன் ஆகியவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிக்கிறது. ஒருவன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாவ-புண்ணியங்கள் மட்டுமே காரணம். அந்த நிகழ்வுகளை அவன் எதிர்கொள்ளும் விதம் அவனது விருப்பு-வெறுப்புகளையும் அறிவுத்திறனையும் பொறுத்தது. தொடர்ந்து வாழ்வு எனும் செயல் வழி கல்வியை பயில்வதால் மட்டுமே அவனது அறிவுத்திறன் அதிகமாகும். அறிவுத்திறன் அதிகமானால்தான் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டு மனப்பக்குவத்தை பெறமுடியும். அதன் பின்தான் சரி-தவறு என்ற அடிப்படையில் வாழ்ந்து உண்மை-பொய் என்ற விவேகத்தை பெறுவது சாத்தியமாகும்.

அனைத்து மக்களின் வாழ்வும் இது போல் அவரவரின் நிலைக்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பதுதான் படைப்பின் இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்தவன் யாருடைய வாழ்க்கைப்பயணத்தையும் தவறு என்று சுட்டிக்காட்டமாட்டான். யாரேனும் தங்கள் குறையை நிறைவு செய்ய அவனது உதவியை நாடினால் அவர்களது தற்போதைய நிலைக்கேற்ற சரியான பாதையை காட்டிக்கொடுப்பான்.  

எட்டாம் சோதனை: தன்னை அறிதல்

தான் உலகத்திலிருந்து வேறுபட்டவன் என்ற நினைவில்லாமல் இயற்கையுடன் ஒன்றி வாழும் மக்கள் துன்பபடுவதில்லை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலை ஏதுமின்றி இவர்கள் என்றும் இன்பமுடன் வாழ்வார்கள்.

தான் இறைவனின் அடிமையென்று தன்னை முழுமையாக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தவர்களும் துன்பத்திற்கு ஆளாவதில்லை. நடக்கும் நிகழ்வுகள் யாவும் ஆண்டவனின் சித்தத்தின் படிதான் நடக்கின்றன என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருப்பவர்களின் வாழ்வில் துன்பகரமான நிகழ்வுகள் எது நடந்தாலும் அவற்றை கடவுளின் அனுக்கிரகம் என்று ஏற்றுக்கொண்டு எவ்வித முணுமுணுப்போ சலிப்போ இல்லாமல் இறைவனுக்கு தொடர்ந்து செய்து வாழ்வை இனிமையாக கழிப்பார்கள்.

தான் பரமன் என்று உணர்ந்தவர்கள் தங்கள் உடலும் மனமும் கடவுளின் மாயா சக்தியின் வெளிப்பாடு என்பதை முறைப்படி கற்றுத்தேர்ந்ததால் உலகில் நடக்கும் மாற்றங்களை தொடர்ந்து இனிமையுடன் அனுபவிப்பார்கள்.

‘உன்னால் முடியும்’ என்று அறிவியல் அறிவு கொடுத்த தைரியத்தில் தான் யார் என்பதை அறியாமல் தன்னை உலகிலிருந்தும் கடவுளிலிருந்தும் வேறுபட்டவன் என்ற நினைவில் வாழ்வை ஒரு போராட்டமாக நடத்திக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே துன்பத்திற்கு ஆளாவார்கள். அறிவுத்திறன் இருந்தாலும் அதை பரமனை அறிந்துகொள்ள பயன்படுத்த வேண்டும் என்ற மனப்பக்குவம் வரும்வரை இவர்கள் தொடர்ந்து பணம், பதவி, புகழ் ஆகியவற்றை நாடி செயல் செய்வதை தவிர்க்கமுடியாது. இவர்கள் செல்லும் பாதைதவறானதல்ல. தான் யார் என்று புரிந்துகொள்ள தேவையான மனப்பக்குவத்தை தங்கள் செயல்கள் மூலம் இவர்கள் தங்களை அறியாமலேயே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தான் யார் என்று தெளிவாக அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள்.

முடிவுரை :

தான் யார், கடவுள் யார், இவ்வுலகத்தின் இயல்பு என்ன, படைப்புக்கு என்ன காரணம், வாழ்வின் நோக்கம் என்ன, பல்வேறு மதங்கள் போதிக்கும் வேறுபட்ட கருத்துக்களில் எது சரியானது என்பது போன்ற அனைத்துக்கேள்விகளுக்கும் தெளிவான பதில் தெரிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள். ஒன்பது செவ்வகங்களை தெளிவாக கண்டறிந்த இவர்கள் மற்றவர்களால் ஏன் முடிவான உண்மையை உணர முடிவதில்லை என்பதையும் அறிந்தவர்கள். எனவே இவர்களால் தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தன்னைச்சார்ந்த அனைவரது வாழ்வையும் துன்பம் கலவா இன்பமயமாக்கும் சக்தி உள்ளது.

பயிற்சிக்காக :

1. முகம் பார்க்கும் கண்ணாடியை வேதத்துடன் ஒப்பிடுக.

2. செவ்வக ஆராய்ச்சியின் மூலம் தெரிந்து கொண்ட கருத்து என்ன?

3. அறிவுத்திறனை அதிகபடுத்திக்கொள்ள மக்களுக்கு இருக்கும் ஒரே வழி என்ன?

4. மக்களிடையே அறிவுத்திறன் வேறுபடுவதற்கு காரணம் என்ன?

5. முரண்பட்ட கொள்கைகளை கொண்ட பல்வேறு மதங்கள் உலகில் இருப்பதற்கு என்ன காரணம்?

6. சத்திய சோதனை செய்யவேண்டியதன் அவசியமென்ன?

சுயசிந்தனைக்காக :

1. சரியான சுற்றுச்சூழல், திறமையான ஆசிரியர்கள், அதிநூதன கல்விச்சாதனங்கள் மற்றும் சீரமைக்கப்பட்ட கல்விமுறை போன்றவற்றின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சிறுவர்களையும் அறிஞர்களாக மாற்ற முடியுமா?

2. சச்சிதானந்தம் என்ற பெயர்காரணத்தை ஆராய்ந்து மனிதர்களின் மூன்று அடிப்படை ஆசைகளின் இருப்பிடத்தை அறிக.

3. இந்தப்பாடத்தில் உள்ள எட்டு சத்தியசோதனைகளில் ஒவ்வொன்றிலும் எவ்வளவு மதிப்பெண்கள் பெற நமக்கு தகுதியிருக்கிறது என்று சுயமதிப்பீடு செய்து கொள்க.

4. முற்றுணர்ந்தோனாக மாற அடுத்து செய்யவேண்டிய செயல்களை ஆசிரியரின் துணையுடன் ஆலோசிக்கவும்.