Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Tuesday, March 8, 2011

Lesson 150: Child-like state and Scholarship (Brahmasutra 3.4.47-49)

பாடம் 150: ஞானி குழந்தையை போன்றவன்
பாடல் 472 – 474 (III.4.47-49)

போட்டி பொறாமை போன்ற உணர்வுகளை நீக்கி கள்ளங்கபடமற்ற குழந்தையாய் மாறவேண்டுமென்ற ஆசை நிறைவேற முடியாத ஒன்று அல்ல. நிர்மலமான மனதுடன் வாழ்வை இன்பமாக கழிக்கும் குழந்தையின் மனதை போல் நம் மனதை மாற்ற நாம் அறிந்துகொள்ளவேண்டிய கருத்துக்களை இந்த பாடம் விளக்குகிறது.

அறிந்தும் அறியாமலும்

பிறந்தது முதல் தொடர்ந்து ஐம்புலன்கள் வழியே தகவல்களை சேகரித்து அவற்றை அறிவாக மனதில் பதியவைத்துக்கொள்கிறோம். தற்போதைய கல்வித்திட்டம் மற்றும் சமூக சூழ்நிலைகள் இதுபோன்ற அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றனவே தவிர ஐம்புலன்களை உபயோகித்து அறிவை பெறுபவன் யார் என்ற அறிவை பெற நமக்கு உதவுவதில்லை.

குழந்தையின் மகிழ்வுக்கும் அமைதிக்கும் அறியாமைதான் அடிப்படை. அறியாமை முழுமையான அறிவாக மாறினால் நம்மால் வளர்ந்தபின்னும் குழந்தையைப்போல் எவ்விதபிரச்சனைகளும் இல்லாமல் வாழ்வை இனிமையாக கழிக்க முடியும். நான் யார், கடவுள் யார், எனக்கும் கடவுளுக்கும் என்ன உறவு என்பது போன்ற கேள்விகளின் சரியான பதில்களை தெளிவாக அறிந்து கொண்டால் நம் அரைகுறை அறிவை முழுமையான அறிவாக மாற்றிக்கொள்ளலாம். உலகத்தை ஒரு சித்திரத்திற்கு ஒப்பிட்டு வித்யாரண்ய சுவாமிகள் இந்த அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை கொடுக்கிறார்.

உலகம் ஒரு வரைபடம்

கஞ்சி போட்டு நேர்செய்யப்பட்ட வெள்ளை துணியில் வண்ணக்கலவைகள் மூலம் மலை, ஆறு, மரம், செடி,கொடிகள் மற்றும் ஒரு சில மனிதர்கள் சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை உலகத்துடன் ஒப்பிடலாம். வெள்ளைத்துணியாகிய பரமனை மாயா சக்தியாகிய கஞ்சி படைப்புக்கு ஆதாரமாக மாற்றுகிறது. பஞ்சபூதங்கள் என்னும் வண்ணக்கலவைகளைக்கொண்டு சித்திரத்தை உருவாக்க முதலில் மெல்லிய கறுப்புக்கோட்டினால் மலை ஆறு போன்றவற்றின் எல்லைகளை வரைவது போல நுண்ணிய உடல்களை உருவாக்கி பின் இந்த உலகம் உருவாக்கப்பட்டது.    

வாழ்க்கையின் நோக்கம் என்ன?

எப்படி வாழவேண்டும் என்ற கேள்விக்கு சரியான பதிலை அறிய முதலில் எதற்காக வாழ்கிறோம் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும்.

துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வது மட்டுமே மனிதன் உட்பட்ட அனைத்து உயிரினங்களின் ஒரே நோக்கம். உலகம் யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்ற முழுமையான அறிவைப்பெறாமல் வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளிடையே வெள்ளத்தில் சிக்கிய ஓடம்போல் அலைகளிக்கப்பட்டு இளைஞர்களைப்பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் முதியவர்களாகத்தான் அனைவரும் மாறிக்கொண்டிருக்கிறோம். உலகச்சூழல் எப்படியிருந்தாலும் எப்பொழுதும் துன்பம் கலவாமல் வாழ தேவையான அறிவை பெற்றுவிட்டால் அதன்பின் எப்படி வாழவேண்டும் என்ற கேள்வியே மறைந்துவிடும். இப்படித்தான் வாழவேண்டும் என்ற சட்டதிட்டங்கள் எதற்கும் கட்டுப்படாமல் ஒரு குழந்தையைப்போல் மகிழ்வான வாழ்வை மரணம்வரை அனுபவிக்கலாம்.

படைப்பின் காரணம் என்ன?

வெள்ளைத்துணியை யாரும் வீட்டில் அலங்காரமாக சுவற்றில் மாட்டுவதில்லை. அந்த வெள்ளைத்துணிமேல் நேர்த்தியான படம் வரைந்தபின்தான் அதன் மதிப்பு கூடுகிறது. அதுபோல பரமன் சுவாரசியமற்ற ஒன்று. ஒன்றான பரமன் மலை, ஆறு மற்றும் பல்வேறுபட்ட உயிரினங்களாக காட்சியளிக்கும் இவ்வுலகமாக உருவான காரணத்தால்தான் என்றும் இன்பமாக வாழ உடல், இடம், காலம் ஆகிய மூன்றும் நமக்கு கிடைத்துள்ளது.

எதையும் அறியாமல் ஆனந்தமாக உறங்கும் உறக்கத்தில் சுவாரசியமில்லாததால் ஒரு கனவுலகத்தை உருவாக்கி அதில் ஒரு உடலுக்குள் புகுந்து சிலநேரம் வாழ்வது போல பரமனாகிய நான் எனது சுயஉருவான ஆனந்தத்தை அனுபவிக்க ஒரு வரையருக்கப்பட்ட உடல், இடம் மற்றும் காலகட்டத்தை என் மாயா சக்தியால் உண்டாக்கிக்கொண்டதன் விளைவுதான் இவ்வுலகம். எனவே நாம் இன்பமாக வாழத்தேவையான ஒரு இடத்தை கொடுப்பதுதான் படைப்பின் காரணம். பரமனால் எவ்வித அனுபவங்களையும் தரவோ பெறவோ முடியாது. அனைத்துவித அனுபவங்களையும் பெற்று துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வதற்காகவே  காட்சிப்பிழையான இந்தப்பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் யார்?

வெள்ளை துணியைக்காட்டி என்ன தெரிகின்றது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்ற பதில்தான் கிடைக்கும். அந்தத்துணியில் சித்திரம் வரையப்பட்டவுடன் அதே கேள்விக்கு மலை, நதி, மனிதர்கள் என பலவிடைகள் கிடைக்கும். சித்திரத்திற்கு ஆதாரமான வெள்ளைத்துணியை யாரும் கவனிப்பது கிடையாது. அதுபோல் இவ்வுலகத்தின் இருப்புக்கு ஆதாரமான பரமனை யாரும் அறிவதில்லை. பரமனின் மாயா சக்தியால் அது உலகமாக மாறும்பொழுது அனைவரின் கவனத்தையும் அது கவருகிறது.  மாயையுடன் கூடிய பரமன்தான் கடவுள். கடவுள் இந்த பிரபஞ்சமாக நம் கண்முன்னே எப்பொழுதும் தெரிந்துகொண்டிருக்கிறான்.

பிரபஞ்சம் உருவானது எப்படி?

துணிச்சித்திரம் நான்கு கட்டங்களில் உருவாகும் விதத்தை ஆராய்வதன் மூலம் உலகத்தின் உண்மையான தன்மையினை அறிந்து கொள்ளலாம்.

முதல் கட்டம்: சித்திரத்தின் ஆதாரமான வெள்ளைத்துணி. எவ்வித குணங்களோ உருவமோ இல்லாததால் நம் புலன்களுக்குத்தென்படாத பரமன்தான் படைப்புக்கு ஆதாரம். சித்திரத்தில் காட்டப்பட்ட கற்பனை பொருள்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதால் அவற்றின் ஆதாரமான வெள்ளைத்துணியை யாரும் கவனிக்க மாட்டார்கள். அதுபோல தொடர்ந்து மாறும் உலகின் ஆதாரமான மாறாத பரமனின் இருப்பை யாரும் அறிவதில்லை. வெள்ளைத்துணி மட்டும்தான் உண்மையான பொருள். அதில் வண்ணங்களால் சித்தரிக்கப்பட்ட மலை, மரம், செடி போன்றவை இருப்பது போல தோற்றமளிக்கும் கற்பனை பொருள்கள். பரமன் மட்டும்தான் உண்மை. இந்த பிரபஞ்சம் இருப்பதுபோல் தோன்றும் மாயை.  

இரண்டாம் கட்டம்:  வெள்ளைத்துணியுடன் கஞ்சி சேர்த்து அதை நேர்படுத்தி சித்திரம் வரைய தயார் செய்தல். பரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. மாயா சக்தியுடன் கலந்த பரமன்தான் இறைவன். இறைவன் சர்வசக்திமான். ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்றுசெயல்களை செய்யவல்லவன். வானத்தை மேலேயும் பூமியை கீழேயும் வரையவேண்டும் என்றறிந்த ஓவியன் போல அனைத்தையும் அறிபவன் அவன். ஓவியன், கஞ்சி, வண்ணக்கலவைகள் போன்றவை  ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. ஆனால் பிரபஞ்சத்தின் உபாதான காரணம், நிமித்த காரணம் ஆகிய அனைத்தும் இறைவன் ஒருவனே.

மூன்றாம் கட்டம்: வண்ணங்களை பூச ஆரம்பிக்குமுன் வரைபடத்தில் வரையப்பட வேண்டிய பொருள்களின் எல்லைக்கோடுகளை வரைதல். வெள்ளைத்துணியில் தெளிவாகத்தெரியும் இந்த கறுப்புகோடுகள் சித்திரம் வரைந்து முடித்தவுடன் பார்வையிலிருந்து மறைந்துவிடும். எவ்வளவு தூரம் என்ன வண்ணங்களை வரைய வேண்டுமென்று வரையருக்கும் இந்தகோடுகளைப்போல உலகில் வெவ்வேறு பொருள்களை வடிவமைக்க உதவியாக இவ்வுலகம் முதலில் நுண்ணிய வடிவில் தோன்றும். இந்த நுண்ணிய உலகம் பரிணாம வளர்ச்சி பெற்று பருவுலகமாகும்.

நான்காம் கட்டம்: சரியான வண்ணக்கலவைகளை எல்லைக்கோட்டிற்குள் பூசுதல். வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றின் கலவையால் நிரப்பி நுண்ணிய பொருளுக்கேற்ற பருவுடலாக நாம் பார்த்து அனுபவிக்கும் இவ்வுலகம் தோற்றுவிக்கப்பட்டது. ஓவியனின் கையில் உள்ள தூரிகையில் உள்ள நிறத்தை நீலம் என்று கண்டுகொள்பவர்கள் அதே நிறத்தை சித்திரத்தில் பார்க்கும்பொழுது வானம் அல்லது ஆறு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆடு, மாடு, கல், மரம் என்று பொருள்களின் வடிவத்தை மட்டும் பார்த்து அவற்றை அடையாளம் காட்டுபவர்கள் அவற்றின் மூலப்பொருள்களான பஞ்சபூதங்களை காண்பதில்லை.

ஆறு மற்றும் சாக்கடை ஆகிய இரண்டும் ஒரே நிற வண்ணக்கலவையால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஆறு அழகாக இருக்கிறதென்றும் சாக்கடை அருவருப்பைத்தருவதாகவும் பார்ப்பவர்கள் முடிவுசெய்வதிலிருந்து இல்லாத பொருள்களுக்கு அவர்கள் உண்மைத்துவம் கொடுப்பது தெளிவாகிறது. அதே போல் ஒரே பஞ்சபூதக்கலவையால் உண்டாக்கப்பட்டவர்களென்றாலும் ஒருவரை நல்லவரென்றும் மற்றவரை கெட்டவரென்றும் பிரிப்பதற்கு அறியாமைதான் காரணம். வண்ணக்கலவைகளைத்தவிர வெள்ளைத்துணியின் மேல் வேறொன்றும் இல்லை. அதுபோல பஞ்சபூதங்களின் கலவைகளைத்தவிர இப்பிரபஞ்சத்தில் வேறொன்றுமில்லை. மேலோட்டமாக ஆறு, மலை என்று சித்திரத்தில் உள்ள பொருள்களை குறிப்பிட்டாலும் அவையனைத்தும் வண்ணக்கலவைகளால் வரையப்பட்டவைகளே தவிர உண்மையான ஆறோ, மலையோ அல்ல என்ற அறிவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் உலகத்தில் உள்ள பொருள்களை பஞ்சபூதங்களின் கலவையாலான மாயை என்று உணராமல் அவையனைத்தையும் உண்மையான பொருட்கள் என்று பெரும்பாலோர் நம்பிக்கொண்டிருப்பதற்கு அவர்களின் அறியாமையே காரணம். உலகம் என்பது நமது கற்பனையே தவிர உண்மையான இருக்கும் பொருளல்ல. உண்மையில் உள்ளது பரமன் மட்டுமே.

கற்சிலைக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

இந்தக்கேள்விக்கு சரியான விடை ஒன்றுமில்லை என்பதுதான். சித்திரத்தில் இருக்கும் மனிதனும் கற்சிலையும் துணிமேல் வரையப்பட்ட வண்ணக்கலவைகள் என்ற அடிப்படையில் எவ்விதவேறுபாடுமற்றவை. அதுபோல இந்த பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்து பொருட்களும் பஞ்சபூதங்களின் கலவையால் மட்டுமே உருவாக்கப்பட்டன என்ற நோக்கில் பார்க்கும்பொழுது அவற்றை உயிருள்ளவை மற்றும் ஜடப்பொருள்கள் எனப்பிரிக்கமுடியாது. எனவே கற்சிலைக்கும் மனிதனுக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை.

சித்திரத்தில் வரையப்பட்ட மனிதன் உடுத்தியிருக்கும் வேட்டி சட்டை எவ்வித வண்ணங்களும் பூசப்படாத வெள்ளைத்துணிதான் என்றாலும் அவற்றை வேட்டி, சட்டை என்று சித்திரத்திற்கு ஆதாரமான வெள்ளைத்துணியிலிருந்து வேறுபடுத்தி பார்க்கிறார்கள். படைப்பிற்கு ஆதாரமான பரமன்தான் பஞ்சபூதக்கலவையான மனிதனின் உடலை உயிற்பிக்கிறான். வெள்ளைத்துணியை பார்ப்பதற்குபதில் வேட்டியை பார்ப்பதுபோல் பரமனை பார்ப்பதற்குபதில் மனிதனை பார்க்கிறோம்.

துணியை தொடும் போட்டியில் வெல்ல சித்திரத்தின் எந்தப்பகுதியை தொட்டாலும்  போதும் என்பதை அறியாமல் மலை ஆறு ஆகியவற்றை கடந்து மனிதனைத்தேடி அவன் அணிந்துள்ள வேட்டியை தொடுவது போல எங்கும் நிறைந்திருக்கும் பரமனை அடையாளம் கண்டுகொள்ளாமல் உயிருடன் கூடியவற்றின் உணர்வு மட்டும்தான் பரமன் என்று நினைப்பதும் அறியாமை.

சித்திரத்தின் ஆதாரமான வெள்ளைத்துணி மட்டும்தான் உண்மையான பொருள். அதை எடுத்து நாம் உடுத்திக்கொள்ளலாம். அதில் வரையப்பட்ட வேட்டி சட்டைகள் எதற்கும் பயன்படாத கற்பனைத்தோற்றங்கள். இருக்கும் ஒரே துணியை கவனிக்காமல் இல்லாத பல துணிகளை கற்பனைசெய்துகொண்டு அவை வெள்ளைத்துணியிலிருந்து வேறுபட்டவை என்றும் சட்டை வேட்டியிலிருந்து வேறுபட்டது என்றும் மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பது பரமன் மட்டும்தான். அனைத்து உயிரினங்ளுக்குமட்டுமில்லாமல் ஜடப்பொருள்களுக்கும் ஆதாரமானவன் பரமன் மட்டுமே. பரமனைத்தொடும் போட்டியில் இவ்வுண்மைகளை அறியாதவன் ஒன்றும் செய்யாமல் பரமன் எங்கே என்று யோசித்துக்கொண்டிருப்பான். அனைத்தையும் அறிந்தவனும் ஒன்றும் செய்யாமல் பரமனாகவேயிருப்பான்.

எனக்கும் பரமனுக்கும் என்ன உறவு?

நான் பரமன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் முக்தியடைந்துவிட மாட்டோம். தண்ணீரில் பிரதிபலிக்கும் ஆகாயத்தை உதாரணமாக கொண்டு மனிதனுக்கும் பரமனுக்கும் உள்ள உறவை வித்யாரண்ய சுவாமிகள் விளக்குகிறார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் இடமளிக்கும் வெளி என்கிற ஆகாயத்தைப்போல் அனைத்துக்கும் ஆதாரமாயிருப்பவன் பரமன். இரண்டும் அளவுக்கு உட்படாதவை. புதியபொருளொன்றுக்கு இடம் கொடுப்பதால் ஆகாயத்தின் அளவு குறைந்துவிடாது. பிரபஞ்சம் இருந்தாலும் அழிந்தாலும் பரமன் எவ்விதமாற்றமும் அடைவதில்லை. அனைத்தையும் தன்னுள் அடக்கிய  ஆகாயம் எதனாலும் கட்டுப்படுத்தபடுவதில்லை. பிரபஞ்சத்தின் மாற்றம் பரமனை பாதிப்பதில்லை. எல்லா இடத்திலும் வியாபித்திருப்பது ஆகாயம். ஆகாயம் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் இருப்பும் பரமனைச்சார்ந்தது. ஆகாயம் போல் பரமன் எவ்வித பகுதிகள் அல்லது பாகங்கள் இல்லாதவன்.

இவ்விரண்டினிடையே மூன்று வேற்றுமைகள் உள்ளன. ஆகாயம் சப்தம் என்ற ஓரு குணத்துடன் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் பரமன் தோற்றம்-மறைவு என்ற சுழற்சிக்கு உட்படாமல் என்றும் இருப்பவன். ஆகாயம் உணர்வற்ற ஜடப்பொருள். பரமன் என்றும் இருக்கும் ஆனந்தமயமான உணர்வு. ஆகாயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் பலபொருள்கள் உள்ளன. பரமன் இரண்டற்ற ஒருவன்.

நமது பருவுடலை ஒரு பானைக்கு ஒப்பிடலாம். இரண்டும் பஞ்சபூதங்களால் செய்யப்பட்ட ஜடப்பொருள்கள். தோற்றம், மாற்றம், மறைவு என்ற சுழற்சிக்கும் காலம், இடம், பொருள் ஆகிய மூன்று கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவை. நாம் இவ்விரண்டிலிருந்தும் வேறுபட்டவர்கள். பானை தண்ணீர் சேமிக்க உபயோகப்படுவதுபோல் அனுபவங்களைப்பெற உடல் பயன்படுகிறது.

பானையில் உள்ள தண்ணீரை நம் மனம் என்னும் நுண்ணிய உடலுக்கு ஒப்பிடலாம். தண்ணீர் ஆகாயத்தை பிரதிபலிப்பதுபோல மனம் பரமனை பிரதிபலிக்கிறது. ஜடப்பொருள்களான இவ்விரண்டும் அளவுக்கு உட்பட்டவை. அளவுகடந்த ஆகாயத்தை பிரதிபலிப்பதால் தண்ணீர் அதிக ஆழம் உள்ளதாக தோற்றமளிக்கிறது. பரமனை பிரதிபலிப்பதால் மனம் உணர்வுடன் கூடியதாக காட்சியளிக்கிறது. நான் பரமன். பிரதிபிம்பம் அல்ல.

நான் யார்?

தண்ணீர் ஆகாயத்தை பிரதிபலித்து  அளவுக்குட்பட்ட பானையிடமிருந்து நமது கவனத்தை திசைதிருப்புகிறது. உணர்வுள்ள பரமனை பிரதிபலித்து மனம் நம் உடலுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுப்பதால் நாம் பரமனை அறிவதில்லை.

நான் என்பதன் உண்மைப்பொருள் பானைக்குள் இருக்கும் இடைவெளி. பானைக்குள் இருக்கும் வெளி பானைக்கு வெளியே இருக்கும் வெளியிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல. பானையே ஆகாயத்திற்குள் இருப்பதால் பானை உடைந்தபின் அதனுள் இருந்த ஆகாயம் வெளியே இருக்கும் ஆகாயத்துடன் கலந்து ஆகாயத்தின் அளவு அதிகமாகிவிடாது. பானையை இங்கும் அங்கும் எடுத்துச்செல்லும்பொழுது அதனுள் இருக்கும் இடைவெளி அசைவதில்லை. உண்மையில் ஆகாயத்தினுள் இருக்கும் பானை இங்குமங்கும் நகர்த்தப்படுவதால் ஆகாயம் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட உடலுக்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக தோற்றமளிக்கும் நான் உண்மையில் எவ்வித மாற்றமுமில்லாத பரமன். பானைக்கு வெளியே இருக்கும் ஆகாயத்தை நாம் எவ்விதத்திலும் பயன்படுத்தமுடியாது. ஆனால் பானைக்குள் இருக்கும் வெளியை தண்ணீர் வைக்கபயன்படுத்தலாம். அதுபோல பரமன் எவ்வித செயலையும் செய்ய இயலாதவன். ஆனால் பரமனாகிய நான் இவ்வுடலுக்குள் இருக்கும்வரை என் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி ஐம்புலன்கள் மூலம் உலகை உணர்ந்து என் இயல்பான ஆனந்தத்தை என் மனம் மூலம் அனுபவிக்கலாம். பானை மற்றும் அதிலுள்ள தண்ணீர் ஆகிய இரண்டிற்கும் ஆதாரமானது ஆகாயம். அதுபோல என் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டிற்கும் ஆதாரமானவன் நான் என்கிற பரமன்.

எங்குமிருக்கும் ஆகாயம் பானைக்கு இடம் கொடுத்து அதற்குள்ளும் வெளியேயும் வியாபித்திருக்கிறது. பிரபஞ்சம் முழுவதையும் வியாபித்து அதன் தொடக்கத்திற்கும் மறைவிற்கும் சாட்சியாக இருக்கும் பரமன்தான் என் உடலுக்குள்ளும் இருப்பவன்.

பானை ஆகாயத்தின் ஒரு சிறிய பகுதியை ஆக்ரமித்து அளவுக்குட்பட்ட கொள்ளளவை உபயோகபடுத்த உதவுகிறது. என் உடல் பரமனை அரவணைத்து ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனும் பெயருடனும் இவ்வுலகில் இயங்க எனக்கு உதவுகிறது. தண்ணீர் வைக்க பானை பயன்படுவதுபோல நம் நுண்ணிய உடல் இயங்க பருவுடல் ஒரு வாகனமாக பயன்படுகிறது.

நான் யார் அல்ல?

பானையால் ஆகாயத்தை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தமுடியாது. ஆனால் ஒரு சிறு இடைவெளியை வளைத்துப்போட்டு ஆகாயத்தை கட்டுபடுத்துவதுபோன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. அதுபோல என் உடல் என்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. நான் என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன். ஆனாலும் என் உடல் என்னை ஒரு உருவத்திற்குள் அடைத்து தோற்றம், மாற்றம் மற்றும் மறைவுக்கு உட்பட்டவனாக என்னை காட்டுகிறது. கனவு முடிந்தாலும் நான் தொடர்ந்து இருப்பதுபோல மரணமடைந்தாலும் நான் தொடர்ந்து இருப்பேன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. பானைக்குள் இருக்கும் இடைவெளிதான் நான் என்பதை உணராமல் தண்ணீரில் தோன்றும் ஆகாயத்தின் பிரதிபிம்பத்தை நான் என்று நினைத்துக்கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

பானையின் குறைந்த கொள்ளளவை நம் கண்களுக்கு மறைத்து மேலேயுள்ள மேகம், சந்திரன், நட்சத்திரங்கள் உள்ளடங்கிய பரந்த ஆகாயத்ததை பானைக்குள் இருப்பதுபோல் காட்டுவது தண்ணீரின் செயல். இதனால் பானைக்குள் உள்ள வெற்றிடத்தை கவனிப்பதில்லை. அதுபோல் நம் மனமானது பரமனைபிரதிபலித்து நான்தான் பரமன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. உணர்வு மயமான பரமனை பிரதிபலிப்பதால் மனம் தன்னை ஒரு உயிருள்ள பொருளாக காட்டிக்கொள்கிறது. பானையினுள் சந்திரனும் சூரியனும் இருக்கமுடியாது. அது போல ஜடப்பொருளான மனம்  உணர்வுக்கு சொந்தம் கொண்டாட முடியாது.

இதையறியாமல் பரமனின் பிரதிபலிப்பாக மனதில் தோன்றும் அகம்பாவத்தை நான் என்ற சொல்லுக்கு பொருளாக நினைத்து உடலின் பொருள், இடம், காலம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டவர்களாக நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறோம். பானையின் உள்ளே இருக்கும் ஆகாயம் வெளியேயிருக்கும் ஆகாயத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. பானை ஆகாயத்தைகட்டுப்படுத்தும் சக்தியற்றது. அதுபோல நம் உடலுக்கு ஆதாரமாயிருக்கும் பரமனை உடலின் இருப்பும் இல்லாமையும் எவ்விதத்திலும் பாதிக்காது. மனதில் தெரியும் பரமனின் பிரதிபலிப்பு நான் அல்ல. எல்லாப்பொருள்களுக்கும் ஆதாரமான பரமன் நான்.

மாறாத ஆகாயம் சூரியன், சந்திரன், பானை, தண்ணீர் மற்றும் அதில் தெரியும் பிம்பங்கள் ஆகிய அனைத்துக்கும் ஆதாரம். அதுபோல உடல் மனம் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதாரமான நான் மனதில் தெரியும் பரமனின் பிம்பம் நான் அல்ல.

நான் யார் என்று புரியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

பொதுவாக குழந்தைகள் செய்யும் தவறுகளை பெரியவர்கள் திருத்திவிடுவதால் பிறக்கும்பொழுது இருந்த அறியாமை வளர்ந்தவுடன் பெரும்பாலும் நீங்கிவிடும். ஆனால் எப்பொழுதும் உடலும் மனமும் நம்முடன் இருப்பதால் அவைதான் நாம் என்ற நமது தவறான அறிவை திருத்தும் தகுதியுள்ளவர்கள் அதிகமில்லாத காரணத்தால் பலருக்கு இந்த அறியாமை மட்டும் மரணம் வரை தொடர்கிறது. எப்பொழுதாவது உடலும் மனமும் நாம் அல்ல என்றும் அவை நம்முடையவை என்று யாரேனும் சுட்டிக்காட்டினால் சிறுது ஆலோசனைக்குப்பிறகு மனதில் தெரியும் பரமனின் பிரதிபலிப்பை நான் என்று நினைத்துக்கொள்கிறோம். நீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பும் நிலவும் ஒன்றுபோல் இருப்பதால் பானைக்குள் நிலவைப்பார்க்கிறேன் என்று ஒருவன் கூறினால் சிறிய பானைக்குள் எப்படி பெரிய நிலவு நுழையும் என்று யாரும் அவனுக்கு மறுப்பு சொல்வதில்லை. உண்மையில் அவன் பார்ப்பது நிலவின் பிரதிபிம்பத்தை என்றும் நிலவைப்பார்க்க நிமிர்ந்து வானத்தைப்பார்க்க வேண்டும் என்றும் யாரும் சொல்லித்தருவதில்லை.  அதுபோல எனக்கு உணர்வு இருப்பதால் நான் உயிரோடு இருக்கும் மனிதன் என்ற நினைப்பு தவறு என்றும் என் உணர்வு என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பது பரமனின் பிரதிபிம்பம் என்றும் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. பிரதிபிம்பத்தை ஒதுக்கிவிட்டு அதற்கு சொந்தக்காரனான பரமன் நான் என்ற அறிவைப்பெற  தகுந்த ஆசிரியரின் உதவி வேண்டும். நிலவு பானைக்குள்தான் இருக்கிறது என்று பிடிவாதம் பிடிப்பதைப்போல என் மனம் உணர்வுடன் கூடியது என்ற தவறான அறிவில் உறுதியாக இருப்பதால் நாம் ஆசிரியரின் துணையை நாடுவதில்லை. எனவே நான் யார் என்ற சரியான அறிவு ஏற்படுவதில்லை.

மேலும் உண்மையான ஆகாயமும் பிரதிபலிக்கும் ஆகாயமும் பானைக்குள் ஒரே இடத்தில் இருப்பதால் உண்மையை விட்டுவிட்டு பிரதிபலிக்கும் ஆகாயத்தில் மட்டும் கவனம் செல்லும். அது போல மனம் என்னும் ஒரே இடத்தில் இருந்து பரமனும் அதன் பிரதிபிம்பமும் செயல்படுவதால் நான் பரமன் என்று உணர்வதில்லை. சித்திரமும் அது வரையப்பட்ட வெள்ளைத்துணியும் ஒரே இடத்தில் இருப்பதால் அனைவரும் வண்ண வண்ண பொருள்களால் கவரப்பட்டு வெள்ளைத்துணியை கவனிப்பதில்லை. அனைத்துக்கும் ஆதாரமான பரமனின் இருப்பை உலகத்தில் உள்ள பொருள்களை பார்த்து நம்மை அறியவிடாமல் அவை நம் கவனத்தை கவருவதால் நம் அறியாமை தொடர்கிறது.

துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் என்ன?

நான் யார் என்பதில் ஒரு தெளிவு ஏற்படாததுதான் நம் அனைத்து துன்பங்களுக்கும் காரணம். ‘நான் பரமன் என்று தெளிவாக புரிந்துவிட்டது. ஆனால் பணகஷ்டம் குறையவில்லையே..’ என்றால் தான் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம். சித்திரத்தில் வரையப்பட்ட மனிதனின் கசங்கிய அழுக்கு வேட்டியும் வெள்ளைத்துணியும் ஒரே இடத்தில் இருப்பதால் ஒன்றின் தன்மையை மற்றதன்மேல் ஏற்றிவைத்து சலவை செய்த வெள்ளை துணியை கவனிக்காமல் கசங்கிய அழுக்கு வேட்டியை பார்ப்பது போல உலகத்தின் மாறுதல்களை பரமன் மேல் ஏற்றிவைத்து எனக்கு பணகஷ்டம் என்று தவறாக முடிவு செய்கிறோம்.

பொய் எப்பொழுதும் உண்மையை விட கவர்ச்சியானது. பானைக்குள் இருக்கும் வெற்றிடத்தை விட நிலவு, நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தின் பிரதிபிம்பம் அழகாகத்தெரிவது போல பரமனின் பிரதிபிம்பம் பரமனை நம்மிடமிருந்து மறைத்துவிடுகிறது. புதியதாக தோன்றும் எந்த பொருளும் பழையதாக மாறும். மாறாமல் இருக்கும் பரமன் என்றும் புதியதாக இருப்பதை நாம் கவனிப்பதில்லை.

நீரில் தெரியும் ஆகாயத்தின் அளவைப்பார்த்து பானையின் கொள்ளளவை தீர்மானித்தால் ஏமாற்றமடைவோம். அதுபோல ஜடமான மனதை உணர்வுடன் கூடியதாக நினைத்து பல சாதனைகளை செய்ய முயல்கிறோம். உண்மையில் நான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருப்பவன் என்பதை மறந்து அற்பமான உடலையும் மனதையும் சக்தியுடன் கூடியதாக நினைத்து ஏமாறுகிறோம்.

பானையை நகர்த்தினால் உள்ளிருக்கும் ஆகாயம் நகருகிறது என்று தவறாக நினைப்பதுபோல ஆகாய விமானத்திலேறி அமெரிக்கா சென்றால் நான் வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாக நம்புகிறோம். நான் எங்குமிருப்பவன். ஒரு சமயத்தில் ஒரு இடத்தில்தான் பானை இருக்கும். ஆகாயம் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் இருக்கும். நான் அதுபோல இடம், காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன் என்பதை மறந்து கண்ணை திறந்து மூடுவதற்குள் நினைத்த இடத்திற்கு போகவேண்டும் என்று முயற்சி செய்து தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம்.  

பானை உடைந்தால் ஆகாயம் மறைந்துவிடாது. அதுதெரியாமல் மரணமடைந்தால் நான் மறைந்துவிடுவேன் என்று பயப்படுவதுதான் நம் துன்பத்திற்கு காரணம்.

கடவுள் எப்படிப்பட்டவன்?

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் பருவுடல்கள் உட்பட்ட அனைத்து ஜடப்பொருள்களின் தொகுப்பு கடவுளின் பருவுடல். உயிரினங்களின் நுண்ணிய உடல்கள் மற்றும் காரண உடல்களின் சேர்க்கை கடவுளின் நுண்ணிய மற்றும் காரண உடலாகும். எனவே நான் வேறு கடவுள் வேறு அல்ல. நான் மட்டும் கடவுள் அல்ல. நானும் கடவுள். அவனும் கடவுள். அதுவும் கடவுள். எல்லாம் கடவுள். கடவுளைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் எதுவுமில்லை.

பல்வேறு செல்கள் ஒன்றாக செயல்படுவதால் நம் உடல் இயங்குவது போல பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அணுக்கூட்டங்களின் மொத்த செயல்பாடுதான் இறைவனின் இயக்கம். செல்களின் வாழ்நாள் மிகவும் குறைவு. தற்பொழுது நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒருசிலவருடங்களுக்குள் மடிந்துவிடும் என்றாலும் நாம் மடிவதில்லை. அதுபோல அனைத்து உயிரினங்களும் மடிந்தாலும் கடவுள் மறைவதில்லை. செல்களுக்கு அப்பாற்பட்டு என் உடல் இல்லை. மேலும் எந்த செல்லும் என் உடலுக்கு வெளியே இல்லை. அதுபோல பிரபஞ்சத்திற்கு வெளியே கடவுள் இல்லை. கடவுள் இல்லாமல் எதுவும் இல்லை.

கடவுளின் தன்மைகள் யாவை?

கடந்துஉள்ளிருப்பவன் (Omniprevelant): சித்திரத்தில் உள்ள அனைத்தையும் கடந்து அதே சமயத்தில் அனைத்துக்குள்ளும் இருப்பவன் கடவுள்.

அனைத்தையும் அறிபவன் (Omniscient): எந்த பொருளை எப்படி வரையலாம் என்பதை போன்ற அனைத்து அறிவையும் உடைய சித்திரக்காரன் இறைவன்.

சர்வசக்தியுடையவன் (Omnipotent): பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் ஆளவும் சக்தி கொண்டவன் ஆண்டவன்.

எங்கும் நிறைந்திருப்பவன் (Omnipresent): பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் எல்லாக்காலங்களிலும் எல்லாப்பொருள்களிலும் நிறைந்து இருப்பது தெய்வம்.

வயது, உயரம், அறிவு போன்ற தன்மைகள் நமது உடலையும் மனதையும் சேர்ந்தவை. அதுபோல மேலே விளக்கப்பட்ட நான்கு தன்மைகளும் கடவுளின் உடலான பிரபஞ்சத்தை சேர்ந்தவை. பிரபஞ்சம் அழிக்கப்பட்டபின் கடவுள் காரண உருவில் ஒடுங்கிய நிலையில் பரமனின் மாயாசக்தியாக தொடர்ந்து இருப்பான்.

எனக்கும் கடவுளுக்கும் என்ன உறவு?

கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நமக்கும் நம் உடலின் பாகங்களுக்கும் உள்ள உறவைப்போன்றது. கால்கள் நடப்பதால் நாம் நகருகிறோமா அல்லது நாம் நகர கால்களை நடக்கவைக்கிறோமா என்று கேட்டால் கால்கள் தானாக நடப்பதில்லை என்றும் அவற்றை நாம்தான் செயல்படுத்துகிறோம் என்றும் பதில் அளிப்போம். அதுபோல நாம் தானாக எதையும் செய்வதில்லை. கடவுள்தான் நம் அனைத்து இயக்கத்திற்கும் காரணம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் மற்றும் அசையாப்பொருள்கள் அனைத்தையும் ஆட்டுவிப்பது ஆண்டவன் மட்டுமே. சூரியன், சந்திரன் போன்ற ஜடப்பொருள்களை மட்டுமில்லாமல் அனைத்து உயிரினங்களையும் ஆளுபவன் ஆண்டவன்தான். நமது மனதும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படுவதுபோல இந்த பிரபஞ்சம் முழுவதையும் செயல்படுத்துபவன்  இறைவன்.

கடவுளுக்கும் எனக்கும் உள்ள உறவை சரியாக புரிந்துகொண்டால் எனக்கு சுயமாக செயல்படும் திறன் உள்ளதா அல்லது அனைத்தும் கடவுள் செயலா என்ற கேள்வி மனதில் எழாது. ஒரு வணிக நிறுவனத்தின் அலுவல்களை செய்ய பல கணிணிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்று வரவு செலவு கணக்கையும் மற்றது சரக்குகளின் போக்குவரத்தையும் பதிவுசெய்யும். ஒவ்வொரு கணிணியிலும் அதற்கு தேவையான தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது போல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரனங்களின் மனதிலும் அவற்றின் செயல்பாட்டிற்கு தேவையான விருப்பு வெறுப்புகள் மற்றும் அறிவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதால் அவை செயல்படுகின்றன. இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் ஒவ்வொரு உயிரனத்தின் செயல்பாடுகளும் அடங்கும்.

என் மனதில் தோன்றியதை நான் செய்தேன் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஏன் அந்த எண்ணம் தோன்றியது என்பதை ஆராய்ந்தால் நாம் நம் சுய புத்தியை உபயோகித்து செய்யும் செயல் கூட கடவுளின் செயல்பாடுதான் என்பது தெரியவரும். உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் அவரவர் மனதில் உள்ள விருப்பு, வெறுப்பு, அறிவு ஆகியவற்றிற்கேற்ப செயல்படும் சிறைக்கைதிகள்தான்.

ஜனநாயக அமைப்பில் அனைத்து அதிகாரங்களுடன் ஆட்சி செய்வது பிரதம மந்திரி. உலக அரங்கில் அவர் தன் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதி. அதுபோல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஆள்வது ஆண்டவன். 

பிரதம மந்திரியால் அரசாங்கத்தின் மற்ற அலுவலர்களின் துணையில்லாமல் செயல்பட முடியாது. அதுபோல கடவுளால் மக்களின் துணையின்றி செயல்பட முடியாது. பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்ட மற்ற மந்திரிகள் நிதி, வெளியுறவு, உள்ளாட்சி என பல துறைகளில் செயல்பட்டாலும் அனைவரது செயல்களுக்கும் பிரதமமந்திரி மட்டுமே பொறுப்பு. அதுபோல அனைத்து மக்களது செயல்களுக்கும் கடவுள் மட்டுமே பொறுப்பு. கடவுளின் சக்தி என்பது அனைத்து உயிரினங்களின் சக்தியின் கூட்டுத்தொகையாகும். ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளேயிருந்து செயல்களை செய்வது கடவுள்தான் என்பதால் நான் வேறு கடவுள் வேறு அல்ல.

கடவுள் என்பவர் பிரபஞ்சமாகத்தோன்றும் மாயா சக்தியுடன் சேர்ந்த பரமன். நான் என் உடலாகத்தோன்றும் மாயா சக்தியுடன் சேர்ந்த பரமன். உண்மையில் இருப்பது பரமன் மட்டும்தான். பரமனின் மாயாசக்தி பிரபஞ்சமாக காட்சியளிப்பது நம் இன்பத்திற்காக.

ஊசிபட்டாசுசரம் வெடிப்பதைப்பார்த்து ஆனந்தமடையும் சிறுவர்கள் வெடிப்பது ஒரே வெடியா அல்லது சரமாக கோர்க்கப்பட்ட தனிப்பட்ட வெடிகளா என்று ஆராய்வதில்லை. தனிப்பட்ட வெடிகளை நீக்கிவிட்டால் ஊசிபட்டாசு மறைந்து விடும். அனைத்து உயிரனங்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தை நீக்கிவிட்டால் இறைவன் ஒடுங்கிவிடுவான். எனவே என் செயலா இறைவன் செயலா என்று கேள்வி அனாவசியம். இரண்டும் ஒன்றுதான்.

வீட்டில் வெண்ணைமட்டுமிருக்கும்பொழுது யாரேனும் நெய்யிருக்கிறதா என்று கேட்டால் நம் பதில் சந்தர்ப்பத்தை பொறுத்து மாறும். நெய் வெண்ணைக்கு அப்பாற்பட்ட பொருள் இல்லை. இருந்தாலும் நெய் மற்றும் வெண்ணை என்று இரு பெயர்கள் இருப்பது போல என் செயல்கள் கடவுளின் செயல்களில் அடக்கம் என்றாலும் செயல்கள் செய்வது நான் என்றும் பலன்களை கொடுப்பது கடவுள் என்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் பாகுபாடு செய்வது வழக்கில் உள்ளது.

அனைத்துசெயல்களையும் இறைவனின் ஆணைப்படி நான் செய்கிறேன் என்றும் செயல்களின் பலன்களை கொடுப்பது இறைவனின் கருணையென்றும் கூறுவது வேதத்தின் ஆரம்பப்பாடம். வேதம் படித்து நான் எந்த செயலையும் செய்ய இயலாத பரமன் என்பது புரிந்தவுடன் செயல் செய்வது இறைவனா அல்லது நானா என்ற கேள்வி மறைந்துவிடும்.

நீர் அலைகளாகவும் கடலாகவும் காட்சியளிப்பது போல பரமன் பல்வேறு உயிரினங்களாகவும் கடவுளாகவும் காட்சியளிக்கிறான்.  

முடிவுரை :

நான் பரமன் என்பது புரிந்து விட்டால் நம் உடல் மற்றும் மனதின் செயல்களை என் செயல்கள் என்று சொந்தம் கொண்டாட மாட்டோம். நடப்பது நடராஜனின் நடனம். உடலும் மனமும் என்வசம் இருக்கும்வரை அந்த நாட்டியத்தில் பங்கு பெற வாய்ப்புகிடைத்தது குறித்த மகிழ்வுடன் மற்றவர்களுக்கு அந்த மகிழ்வை பங்கிடும் நோக்குடன் நமது அனைத்து செயல்களும் அமையும். நம்மை நாடிவரும் வேலைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நம்மால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்வது என்கிற குழந்தையின் மனப்பக்குவும் நமக்கு வந்துவிடும்.

கடவுள் உள்ளிருந்து செயல்படும் சர்வசக்திமான் என்ற கருத்து நமது அனைத்து செயல்களுக்கும் கடவுள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான் என்பதை குறிக்கிறது. குழந்தை தன் செயல்களின் விளைவைப்பற்றி கவலைப்படாமல் எப்பொழுதும் மகிழ்வுடன் இருப்பது போல நம் செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஆண்டவனை அறிந்தவுடன் நாமும் எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்கலாம்.

குழந்தை தன் செயல்கள் எதையும் தவறு என்று கருதுவது கிடையாது. யாரேனும் தன்னை திட்டினாலும் அடித்தாலும் அதை விரைவில் மறந்துவிட்டு அவர்களுடன் எப்பொழுதும் போல் சாதாரணமாக பழகும். எதிர்காலத்தை பற்றிய கவலை அதற்கு சிறிதும் கிடையாது. இதை செய்ய வேண்டும், அதை செய்யக்கூடாது என்ற சட்டதிட்டங்கள் குழந்தையை கட்டுப்படுத்தாது. எதையும் சாதிக்க வேண்டிய கட்டாயம் குழந்தைக்கு கிடையாது. எனவே திட்டங்கள் தீட்டி தனக்குத்தானே சட்டங்கள் வகுத்து அடிமையாக வாழ அதற்கு அவசியம் கிடையாது.

வேதம் விதிக்கும் விதிகளும் முற்றுணர்ந்தோர்களை கட்டுப்படுத்தாது. எனவே அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை குழந்தையின் மனப்பாங்குடன் எதிர்கொண்டு இனிதே வாழ்வார்கள்.

பயிற்சிக்காக :

1. தற்போதைய மாணவர்கள் பள்ளியில் பயிலும் கல்வியின் தன்மை என்ன? அவர்களுக்கு அங்கு எதைப்பற்றி கற்றுக்கொடுக்கப்படுவதில்லை?
2. குழந்தைகள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு காரணம் என்ன? வளர்ந்தவர்கள் அதே போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருக்க என்ன செய்ய வேண்டும்?
3. வாழ்க்கையின் நோக்கம் என்ன? வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?
4. பிரபஞ்சத்தின் படைப்புக்கு காரணம் என்ன?
5. நான்கு கட்டங்களாக பிரபஞ்சம் உருவான வகையை விளக்குக.
6. கடவுள் யார்?
7. கற்சிலைக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
8. சித்திரத்தில் துணியைத்தொடும் போட்டி என்ற விளக்கம் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?
9. பரமனுக்கும் ஆகாயத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.
10. நான் யார் என்பதில் தெளிவு ஏற்படாமல் அறியாமையுடன் இருப்பதற்கு காரணம் என்ன?
11. நமது துன்பங்களுக்கு காரணம் என்ன?
12. கடவுள் எப்படிப்பட்டவன்?
13. கடவுளின் நான்கு தன்மைகள் யாவை?
14. கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன உறவு?

சுயசிந்தனைக்காக :

1. பரமனால் எவ்வித அனுபவங்களையும் பெற முடியாது என்றால் ஏன் உலகம் படைக்கப்பட்டுள்ளது?
2. நான் யார்?
3. கடவுள், இறைவன், ஆண்டவன் மற்றும் தெய்வம் என்ற நான்கு வார்த்தைகளின் பொருட்காரணத்தை ஆராய்க.

Sunday, February 27, 2011

Lesson 149: Priest and the sacrificer (Brahma Sutra 3.4.44-46)

பாடம் 149: பலவிதமான மக்கள்
பாடல் 469 – 471 (III.4.44-46)

பூஜாரி யாகங்களை நடத்திக்கொடுப்பதற்கான பணத்தை பெற்றுக்கொள்வதால் யாகத்தின் பலன்கள் யஜமானனைச்சேரும் என்ற கருத்தை கூறுவதன் மூலம் முக்தியடைய முயலும் மக்கள் தங்கள் முயற்சி சரியான பலனை தருகிறதா என்பதை ஆராயவேண்டியதன் அவசியத்தை இந்தப்பாடம் விளக்குகிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி

புகைப்படத்தை பார்த்தோ மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டோ நம் முகம் எப்படியிருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது. கண்ணாடி மட்டும்தான் நம் முகத்தை நமக்கு காட்டவல்லது. கண்ணாடியை சரிபார்க்க அதன் வழியாக வேறு ஒரு பொருளின் பிம்பம் சரியாகத்தெரிகிறதா என்று சோதிக்க வேண்டும்.  

சுய அறிவினால் யோசித்தோ மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டோ நான் யார் என்பதை தெரிந்து கொள்ளவே முடியாது. வேதம் மட்டும்தான் நாம் யார் என்பதை நமக்கு காட்டிக்கொடுக்கும் கண்ணாடி. வேதம் குற்றமற்றது என்று உணர்ந்துகொள்ள உலகத்தைப்பற்றி வேதம் கூறும் கருத்துக்களை நம் அனுபவத்தோடு ஒப்பிட்டு சரிபார்க்கவேண்டும். 

வேதத்தை பிரமாணமாக ஏற்றுக்கொண்டவர்களிடையேகூட அதன் அடிப்படை கருத்து என்ன என்பது பற்றி அபிப்பிராய பேதம் உள்ளது. நான் பரமன், நான் கடவுளின் ஒரு பகுதி, நான் கடவுளின் அடிமை என்று ஒன்றுக்கொன்று முரணான முடிவுகளை வேதம் கூறுவதாக தோன்றினால் நாம் வேதத்தின் மீது சந்தேகம் கொள்ள கூடாது.

நமது பார்வை சரியாக இல்லாவிட்டால் கண்ணாடி சரியாக இருந்தும் அதில் தெரியும் நமது முகத்தை சரியாகபார்க்க முடியாது. எனவே கண்ணாடியை சந்தேகிக்காமல் நமது பார்வையை சோதிக்க வேண்டும். அதுபோல வேதம் கூறும் உண்மையை சரியாக புரிந்துகொள்ள நமது அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். மக்களின் அறிவுத்திறன் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடுவதால்தான் வேதம் கூறும் ஒரே உண்மையை அடிப்படையாக கொண்டு பல்வேறு மதங்கள் நிலவி வருகின்றன. நான் யார் என்ற கேள்விக்கு வேதம் கூறும் ஒரே பதிலை சரியாக புரிந்து கொண்டேனா என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் ஆராய்ச்சி உதவும்.

செவ்வக ஆராய்ச்சி

காகிதத்தில் ஒரு செவ்வகத்தை வரைந்து அதன் நடுவில் குறுக்கேயும் நெடுக்கேயும் இருநேர்கோடுகள் வரைந்து அதை நான்கு பகுதிகளாக பிரித்து ‘இதில் எத்தனை செவ்வகங்கள் இருக்கின்றன’ என்ற கேள்வியை கேட்டால் பல்வேறு பதில்கள் கிடைக்கும். ஒரு சிலர் நான்கு என்றும் மற்றும் சிலர் ஐந்து என்றும் பதிலளிப்பர். எது சரியான விடை என்பதை அறிய யார் அதிக எண்ணிக்கையை சொல்கிறாரோ அவரிடம் விளக்கம் கேட்கவேண்டும். ‘ஐந்து’ என்பவர், ‘எப்படி நான்கு?’ என்பதையும் விளக்கும் அறிவு பெற்றிருப்பார். நான்குதான் முடிவான விடை என்று பிடிவாதம் பிடிப்பவர் ஐந்து என்பவரை குருவாக ஏற்றுக்கொள்ளாதவரை கேள்விக்கு சரியான பதிலை தெரிந்து கொள்ள முடியாது.

கூடியிருக்கும் அனைவரும் ஐந்து என்ற பதிலை ஏற்றுக்கொண்டால் கூட அதுதான் சரியான விடை என்பது நிரூபணமாகாது. ஏனெனில் சரியான விடை ஒன்பது. நான்கிலிருந்து ஐந்து என்று கற்றுத்தேறியவர்களில் அறிவுத்திறன் குறைந்தவர்கள் தாங்கள் கண்டுகொண்டதுதான் முடிவான உண்மை என்ற முடிவோடு எப்படி ஒன்பது சரியான விடையாக இருக்க முடியும் என்பதை ஆராயமாட்டார்கள். மற்றவர்களின் விடை வேறாக இருப்பதன் காரணத்தை ஆய்ந்து சரியான பதிலைத்தெரிந்துகொள்ளும் ஆவலும் அறிவு கூர்மையும் இருப்பவர்கள் மட்டுமே இந்த கேள்வியின் இறுதியான பதிலை தெரிந்து கொள்ளவார்கள்.

ஒன்பது செவ்வகங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டபின்னும் அதற்கு மேல் இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகத்துடன் இருப்பவர்கள் முடிவான பதிலை தெரிந்து கொண்டவர்கள் அல்ல. ஒன்பதுதான் சரியான விடை என்பதில் உறுதியாக இருப்பவர்கள் மற்ற அனைவரும் ஏன் தவறான பதிலை கூறுகிறார்கள் என்று அறிவார்கள். மேலும் நான்குதான் சரியான விடை என்று பிடிவாதம் பிடிப்பவர்களைப்போலன்றி ஒன்பதுதான் சரியான விடை என்பதில் அறிவுபூர்வமான உறுதியுடன் இருப்பார்கள்.

நான்கு, ஐந்து போன்ற பதில்கள் ஒன்பது என்பதில் அடங்கியிருப்பதைப்போல வேதத்தின் முடிவான பதில் மற்ற அனைத்து பதில்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். எனவே நிலையான முக்தியடைய உலகத்தில் உள்ள அனைத்து  மதங்களின் கொள்கைகளைப்பற்றியும் மற்றவர்கள் ஏன் தவறான அறிவுடன் இருக்கிறார்கள் என்பதைப்பற்றியும் தெளிவாகத்தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவுத்திறன்

சென்றபிறவிகளில் சேர்த்து வைத்த அறிவுத்திறனுடன்தான் குழந்தைகள் பிறக்கின்றன. உடல் மற்றும் மூளை வளர்ச்சி ஏற்கனவே உள்ளிருக்கும் அறிவை வெளிப்படுத்த உதவுமே தவிர புதிதாக அறிவை உண்டுபண்ணுவதில்லை. உண்ணும் உணவு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமை மற்றும் சுற்றுபுற சூழலின் தாக்கம் ஆகியவற்றால் அறிவின் அளவை தீர்மானிக்க முடியாது. கற்பதனால் மட்டுமே அறிவு வளரும். எனவே மக்கள் கல்வி கற்க எடுத்துக்கொண்ட முயற்சி வேறுபடுவதனால் மட்டுமே அவர்களின் அறிவுத்திறன் வேறுபடுகிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதிக அறிவுத்திறனுடன் பிறந்தவர்கள் வேகமாக கற்று தங்கள் அறிவை மற்றவர்களைவிட மேலும் அதிகபடுத்திக்கொள்ளும் சக்தியுடையவர்கள். ஆனால் யாராலும் தீடீரென்று அறிவாளியாக மாறிவிடமுடியாது. பள்ளி இறுதித்தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்ற மாணவனால் கல்லூரிப்படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்க முடியாது. பலபிறவிகளில் சேர்த்த அறிவு அழியாது. அளவுக்கு அதிகமாக அதை வளர்க்கவும் முடியாது. எனவே தற்பொழுது நமக்கு இருக்கும் அறிவை ஒரளவு வளர்த்துக்கொள்ள முடியுமே தவிர ஒரேயடியாக வளர்த்து ஐன்ஸ்டீனாக மாற முடியாது. ஐந்தில் வராத கணக்கு ஐம்பதிலும் வராது.

செவ்வக ஆராய்ச்சியில் ஒன்பது என்ற சரியான விடையை உறுதியுடன் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் உள்ளவர்களால் மட்டுமே வேதத்தின் சாரத்தை புரிந்து கொண்டு முக்தியடைய முடியும். சொல்லிக்கொடுத்தபின்னும் ஒன்பது செவ்வகங்களை பார்க்கத்தெரியாதவர்கள் தங்கள் வாழ்வின் துன்பங்களை முற்றிலுமாக கடக்க தேவையான அறிவுத்திறன் இல்லாதவர்கள்.

அறிவுத்திறனை ஒருவர் எப்படி உபயோகப்படுத்துகிறார் என்பது அவரது விருப்பு வெறுப்புகளை பொறுத்து அமையும். கடவுள், வேதம் போன்ற ஆன்மீக விஷயங்களில் விருப்பமில்லாதவர்கள் தங்கள் அறிவை வேதம் படிக்க செலவிட மாட்டார்கள். இவர்கள் நான் யார் என்ற கேள்வியின் பதிலை அறிந்து கொள்வது அவசியம் என்றும், அந்த அறிவு வேதத்திலிருந்து மட்டுமே கிடைக்கும் என்றும் வேதத்தை படித்து புரிந்து கொள்ள ஆசிரியரின் துணை தேவை என்றும் அறியமாட்டார்கள். எனவே போதிய அறிவுத்திறன் மற்றும் வேதத்தின் மேல் நாட்டம் ஆகிய இரு தகுதிகள் இருப்பவர்களால் மட்டுமே முக்தியடைய முடியும்.

பல்வேறு மதங்கள் காட்டும் ஒரே உண்மை

தூய்மையாக துடைக்கப்பட்ட கண்ணாடிதான் முகத்தை சரியாக காட்டும். அது போல அறிவின் துணையால் வேதத்தை தீவிரமாக ஆய்ந்தால்தான் நான் யார் என்பதை உறுதியாக உணர முடியும். முகத்தைப்பார்ப்பதற்காகவே கண்ணாடியை பார்க்கிறோம். அதுபோல் வேதம் படிப்பதன் ஒரே நோக்கம் நான் யார் என்பதை தெரிந்துகொள்வதற்காக என்ற தெளிவுடன் வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படிப்பவர்கள் உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன என்ற உண்மையை முடிவில் உணர்வார்கள்.

மனிதர்களின் அறிவுத்திறன் மாறுபடுவதால்தான் மதங்களிடையே வேறுபாடுகள் இருப்பதுபோல தோன்றுகிறது. செவ்வக ஆராய்ச்சியில் நான்கு அல்லது ஐந்து என்று விடையளிப்பவர்களை தவறு என்று தள்ளிவிடமுடியாது. ஏனெனில் அவர்களது அறிவுக்கேற்ற சரியான விடையை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அதுபோல வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் முடிவான உண்மை அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்பதை அறியாதவர்கள். ஆயினும் அவர்களது அறிவின் தரத்துக்கு ஏற்றவாறு அவர்கள் புரிந்து கொண்ட மதக்கொள்கைகள் தவறு அல்ல. நான்கு என்பவனுக்கு ஐந்தாவது செவ்வகத்தை அடையாளம் காட்டி அவனை முன்னேற உதவாமல் அவன் விடை தவறு என்று அவனை மட்டம் தட்டி ஏளனம் செய்வது சிறுபிள்ளைத்தனம்.

மருத்துவர்கள் அனைவரும் அனைத்து வித நோய்களை குணப்படுத்தும் அறிவைக்கொண்டிருந்தாலும் அவர்களிடம் செல்லும் நோயாளிகளின் அடிப்படையில் இவர் காசநோய் மருத்துவர், இவர் குழந்தை மருத்துவர் என்று தரம் பிரிப்பதுபோல மதங்கள் அவற்றை பின்பற்றுபவர்களின் அறிவுத்திறனின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. 

பரலோகத்திலிருந்து இரட்சிப்பவன் கடவுள் என்று நம்புபவனின் மதம் நானும் கடவுள் என்று கூறுபவனின் மதத்திலிருந்து வேறுபட்டதாக காட்சியளிக்கிறது. தேவையான அறிவுத்திறனும் கடவுள் யார் என்பதை அறியும் அடங்கா ஆவலும் கொண்டவன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்றாலும் முடிவான உண்மையை அறிந்துகொள்வான். கேட்பவர்களுக்கு புரியும் விதத்தில் ஆசிரியர் முதலில் நான்கு பின் ஐந்து என்று படிப்படியாக முன்னேறி முடிவில் ஒன்பதை காட்டிகொடுப்பது போல் அனைத்து மதங்களும் நான் பரமன் என்ற முடிவான உண்மையை மட்டும்தான் படிப்படியாக போதிக்கின்றன.

வேதம் ஒன்றே

அனைத்து மதங்களும் முழுமுதல் கடவுள் ஒருவனே என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்கின்றன. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் தர்க்க அறிவிற்கு ஏற்புடையதாக இல்லை. கடவுள் ஒருவன் என்பதால் கடவுளின் உபதேசங்களான வேதம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கடவுள் பொய்பேச மாட்டார்.  

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரே உண்மை பலதரப்பட்ட மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் கூறும் முடிவான கருத்தை புரிந்து கொண்டுவிட்டேன் என்றுதான் அனைவரும் நம்பிக்கொண்டிருப்பார்கள். அனைத்து நம்பிக்கைகளும் சரியானவை என்பதால் யாரிடமும் அவர்களின் நம்பிக்கைத்தவறு என்று சுட்டிக்காட்டக்கூடாது. ஐந்து செவ்வகங்களை கண்டவன் நான்கு என்று கூறுபவனை ஏளனமாக பார்க்க கூடாது. மேலும் அவனது அறிவுத்திறன் அவனது  சொந்த முயற்சியால் வளரும் வரை நான்குதான் முடிவான பதில் என்ற நிலையிலிருந்து அவர்கள் முன்னேற மாட்டார்கள். எனவே தான் ஐந்து என்று நினைத்துக்கொண்டிருப்பது சரிதானா என்று ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கையை மட்டும் சோதிக்கவேண்டுமே தவிர மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

எவ்வளவுதான் முயன்றாலும் வேதத்தின் நான் பரமன் என்கிற முடிவான அறிவை அனைவரும் புரிந்து கொள்ளும்படி செய்ய முடியாது. கூரிய அறிவுத்திறன், மனப்பக்குவம், அடங்கா ஆவல், வேதத்தை முறையுடன் படிக்கும் வாய்ப்பு ஆகிய அனைத்தும் ஒருசிலருக்கே உள்ளது என்பதால் சரியான பதில் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். ஒருவேளை பெரும்பான்மை மக்களின் கருத்து நம்முடன் ஒத்துப்போனால் அது தவறான கருத்தாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். ஐந்து தான் சரியான விடை என்று அறிந்தவர்களின் எண்ணிக்கை நான்கு என்ற பதிலை சொல்பவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும். மிகச்சொற்பமானவர்களே ஒன்பது என்ற சரியான பதிலை அறிந்திருப்பார்கள்.

என்னுடைய மதம் மட்டும்தான் சரியானது அல்லது எனது கடவுள் மட்டும்தான் ஒரே கடவுள் என்று போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். அவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டபின் தங்களுடைய நம்பிக்கை சரிதானா என்று சோதனை செய்தால் மட்டுமே முடிவில் முக்தியடைவார்கள்.

சத்திய சோதனை

நாம் அறிந்ததுதான் வேதத்தின் முடிவான உண்மையா என்று நமது அறிவை நாமே சோதனை செய்துகொள்ள பின்வரும் உபாயங்கள் உதவும்.

முதல் சோதனை: உலகத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை

முற்றுணர்ந்தோனின் பார்வையில் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகச்சரியாக நடப்பதாகவே தெரியும். கலிகாலம் முற்றிவிட்டது என்று இவன் புலம்பமாட்டான். ஆட்சியை மாற்றவேண்டும், சமூகத்தை முன்னேற்ற வேண்டும், இளஞர்களை திருத்த வேண்டும், வறுமையை ஒழிக்கவேண்டும் என்பது போன்ற எவ்வித குறிக்கோள்களும் இவனுக்கு இருக்காது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்பது போன்ற தினசரி செய்திகள் இவனை எவ்விதத்திலும் பாதிக்காது.

இரண்டாம் சோதனை: சரியான விளக்கம்

நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சரியான காரணங்கள் இவனுக்கு தெரிந்து இருக்கும். எதையறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை இவன் தெரிந்து கொண்டுவிட்டதால் ‘இது ஏன் இப்படி நடக்கிறது’ என்ற கேள்வி இவன் மனதில் எழவே எழாது. விபத்து, இயற்கையின் சீற்றம், தற்செயல் என்பதுபோன்ற தர்க்கத்துக்கு ஒவ்வாத காரணங்களை இவன் ஏற்றுக்கொள்வதில்லை.  கடவுள் யார், அவர் ஏன் இவ்வுலகை இவ்வாறு உருவாக்கினார் என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் இவனுக்கு தெரியும் என்பதால் இவற்றை மற்றவர்களுக்கு புரியவைக்கும் திறமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவனது அமைதி எப்பொழுதும் குறையாது.

மூன்றாம் சோதனை: மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே

ஒவ்வொருவரும் ஒரு விதம் என்று இவன் அறிந்திருப்பதால் யாரையும் தவறு என்று விமரிசிக்கமாட்டான். யாரையும் யாரும் மாற்றமுடியாது என்பது இவனுக்குத் தெரியும். எனவே தன் வாழ்வில் தன்னோடு உறவாட வாய்ப்பவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வான். தன்னைத்தானே மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு முடிந்த உதவியை செய்வான். இராவணன் சீதையை கடத்திச்சென்றாலும் அவன் இராமாயணத்திற்கு அவசியம். அது போல கெட்டவர்கள் படைப்பின் முக்கியமான அங்கம் என்று அறிந்த முற்றுணர்ந்தோன் யாரையும் வெறுக்க மாட்டான்.  

நான்காம் சோதனை: கருத்துப்பரிமாற்றம்

வாதம், விவாதம், சொற்பழிவு, கருத்தரங்கம் போன்றவற்றில் பங்கேற்க வேண்டிய அவசியம் இவனுக்கு இல்லை. முடிவான உண்மையை இவன் அறிந்து கொண்டுவிட்டதால் மற்றவர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு இவன் எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

உதாரணமாக மறுபிறவி என்பது உண்மையா பொய்யா என்ற விவாதம் அனாவசியம் என்று அவனுக்குத்தெரியும். அவரவர் தன்னுடைய மதகுருமார்களின் வார்த்தைகளை முதலில் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு வேதம் கூறும் முடிவான உண்மையை ஆய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். அதன்பின் ஏன் மறுபிறவியை பற்றி விவாதிக்க கூடாது என்பதும் எவ்வாறு வெவ்வேறு வழிகளில் போதிக்கும் மதங்கள் ஒரே இறுதிகருத்தைத்தான் கூறுகின்றன என்பதும் புரியவரும்.

இவன் தானறிந்த உண்மையை மற்றவர்களுக்கு பரப்பவேண்டும் என்ற ஆவலுடன் செயலாற்றுவதில்லை. ஏனெனில் பெரும்பாலோருக்கு அது புரியாது என்பதை இவன் அறிவான். எது முடிவான உண்மை என்பது ஜனநாயக முறையில் தெரிவு செய்ய முடியாது என்பதை அறியாதவர்கள் தங்களது கொள்கைகளை ஆதரிக்கும் கும்பலை அதிகப்படுத்த முயன்றுகொண்டிருப்பார்கள். தன்னால் அவர்களது கொள்கை முடிவான உண்மையல்ல என்று தர்க்கத்தின் அடிப்படையில் நிரூபிக்க முடியுமென்றாலும் தன்னை குருவாக ஏற்று தன்னிடம் பாடம் கேட்கும் சீடர்களுக்கு மட்டுமே இவன் தன் கருத்துக்களை எடுத்துரைப்பான்.

மறுபிறவி உண்டா இல்லையா என்று யாரேனும் இவனிடம் நேரடியாக கேட்டால் கேட்பவனின் தராதரத்தைப்பொறுத்து ஆம், இல்லை, தெரியாது என்று வெவ்வேறு பதில்களை கொடுப்பான். அறிவுத்திறன் ஆளுக்காள் மாறுபடுவதால் அவரவரின் ஜீரணசக்திக்கு ஏற்புடைய பதிலை அவன் கொடுப்பான்.

ஐந்தாம் சோதனை: கடவுளை அறிதல்

பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தனக்கு அன்னியமாக பார்ப்பவர்கள் நிறைந்த இவ்வுலகில் மற்றவர்களுக்காக கோவிலுக்கு செல்வது கடவுளை உபாசித்து உலக நலனுக்காக பிரார்த்தனைகள் செய்தாலும் ‘எனக்கு இது வேண்டும்’ என்று கடவுளிடம் எதுவும் எப்பொழுதும் கேட்கமாட்டான்.

ஆறாம் சோதனை: மக்களை அறிதல்

மரணமில்லா பெருவாழ்வு, என்றும் ஆனந்தம் மற்றும் அறியும் ஆவல் ஆகிய மூன்று அடிப்படை ஆசைகளால் உந்தப்பட்டு அனைத்து மக்களும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் வேறுபடுவதால் இந்த மூன்று ஆசைகளை பூர்த்திசெய்துகொண்டு முக்தியடைய அவர்களால் முடிவதில்லை.

சுற்றியுள்ள மனிதர்களையும் சூழலையும் மாற்றி அமைத்தால் இந்த மூன்று ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து உழைப்பவர்கள்  உலகத்தைச்சார்ந்து இருப்பவர்கள். இவர்கள் முதல் நிலையில் உள்ள மனிதர்கள்.

கடவுளை சரணடைந்தால் மட்டும்தான் இந்த மூன்று வரங்களையும் பெற முடியும் என்ற நம்பிக்கையில்  இறைதிருப்பணிகளில் ஈடுபட்டு இறைவனைச்சார்ந்து இருப்பவர்கள் இரண்டாம் நிலையில் உள்ள மனிதர்கள். 

உலகத்தை மாற்ற உழைத்தும் கடவுளிடம் சரணடைந்து செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்தும் மனம் பக்குவபட்டபின் இவர்கள் உலகப்பள்ளியின் இறுதித்தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். நான் யார் அல்லது கடவுள் யார் என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே இந்த மூன்று ஆசைகளை முழுதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற தெளிவோடு இவர்கள் செய்யும் முயற்சி வெற்றிபெற்றால் முற்றுணர்ந்தோன் என்ற பட்டம் பெற்று பிறப்பு-இறப்பு சுழலிலிருந்து விடுதலையடைந்து மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள்.

இந்த நிலையை அடையும்வரை அனைத்து மக்களுக்கும் என்னவென்று தெளிவாக சொல்லத்தெரியாத ஒரு குறை அல்லது ஒரு ஏக்கம் இருந்துகொண்டேயிருக்கும். ஏனெனில் மரணமில்லா பெருவாழ்வு என்பதற்கு என்ன அர்த்தம் என்பது அந்த குறிக்கோளை அடைந்த பின்தான் தெளிவாகத்தெரியவரும். எனவே அதுவரை வார்த்தைகளால் விளக்கமுடியாத ஏக்கம் மட்டும்தான் இருக்கும்.

மூன்று ஆசைகளின் இருப்பிடம் தான்தான் என்ற அறிவு அவர்களிடம் இல்லை என்பதை முற்றுணர்ந்தோன் மட்டுமே உணர்வான்.   பள்ளி இறுதித்தேர்வில் தேறியவன் மற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற தன்னால் ஆன உதவியை செய்வது போல முக்தியடைந்தவன் தான் பயணித்த பாதை மற்றும் அதில் இருந்த தடைகளை கடக்கும் விதம் ஆகியவற்றை தன்னை குருவாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு தெளிவாக காட்டிக்கொடுப்பான்.

ஏழாம் சோதனை: வாழ்க்கைப்பயணத்தை அறிதல்

எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கும் விளக்கமுடியாத குறையை நிறைசெய்ய முதலில் மக்கள் விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் செயல்கள் செய்வார்கள். சரி-தவறு என்ற அடிப்படையில் தர்மமான காரியங்களை செய்தும் அதர்மங்களை தவிர்த்தும் வாழ்ந்தால் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுதலைபெற்று குருவிடம் சரணடையும் மனப்பக்குவத்தை பெறுவார்கள். அதன்பின் அவர்களின் ஆன்மீகப்பயணம் வெகு வேகமாக நடந்து சரி-தவறு என்பதைவிட உண்மை-பொய் என்பதன் அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை அமையும். பரமன் மட்டுமே உண்மை என்றும் இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதும் புரிந்து விட்டால் குறைவில்லா இன்பத்தை அடைவார்கள்.

பிறவிகள்தோறும் சேர்த்து வைத்துள்ள பாவ-புண்ணியம், விருப்பு-வெறுப்பு மற்றும் அறிவுத்திறன் ஆகியவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிக்கிறது. ஒருவன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாவ-புண்ணியங்கள் மட்டுமே காரணம். அந்த நிகழ்வுகளை அவன் எதிர்கொள்ளும் விதம் அவனது விருப்பு-வெறுப்புகளையும் அறிவுத்திறனையும் பொறுத்தது. தொடர்ந்து வாழ்வு எனும் செயல் வழி கல்வியை பயில்வதால் மட்டுமே அவனது அறிவுத்திறன் அதிகமாகும். அறிவுத்திறன் அதிகமானால்தான் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டு மனப்பக்குவத்தை பெறமுடியும். அதன் பின்தான் சரி-தவறு என்ற அடிப்படையில் வாழ்ந்து உண்மை-பொய் என்ற விவேகத்தை பெறுவது சாத்தியமாகும்.

அனைத்து மக்களின் வாழ்வும் இது போல் அவரவரின் நிலைக்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பதுதான் படைப்பின் இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்தவன் யாருடைய வாழ்க்கைப்பயணத்தையும் தவறு என்று சுட்டிக்காட்டமாட்டான். யாரேனும் தங்கள் குறையை நிறைவு செய்ய அவனது உதவியை நாடினால் அவர்களது தற்போதைய நிலைக்கேற்ற சரியான பாதையை காட்டிக்கொடுப்பான்.  

எட்டாம் சோதனை: தன்னை அறிதல்

தான் உலகத்திலிருந்து வேறுபட்டவன் என்ற நினைவில்லாமல் இயற்கையுடன் ஒன்றி வாழும் மக்கள் துன்பபடுவதில்லை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலை ஏதுமின்றி இவர்கள் என்றும் இன்பமுடன் வாழ்வார்கள்.

தான் இறைவனின் அடிமையென்று தன்னை முழுமையாக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தவர்களும் துன்பத்திற்கு ஆளாவதில்லை. நடக்கும் நிகழ்வுகள் யாவும் ஆண்டவனின் சித்தத்தின் படிதான் நடக்கின்றன என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருப்பவர்களின் வாழ்வில் துன்பகரமான நிகழ்வுகள் எது நடந்தாலும் அவற்றை கடவுளின் அனுக்கிரகம் என்று ஏற்றுக்கொண்டு எவ்வித முணுமுணுப்போ சலிப்போ இல்லாமல் இறைவனுக்கு தொடர்ந்து செய்து வாழ்வை இனிமையாக கழிப்பார்கள்.

தான் பரமன் என்று உணர்ந்தவர்கள் தங்கள் உடலும் மனமும் கடவுளின் மாயா சக்தியின் வெளிப்பாடு என்பதை முறைப்படி கற்றுத்தேர்ந்ததால் உலகில் நடக்கும் மாற்றங்களை தொடர்ந்து இனிமையுடன் அனுபவிப்பார்கள்.

‘உன்னால் முடியும்’ என்று அறிவியல் அறிவு கொடுத்த தைரியத்தில் தான் யார் என்பதை அறியாமல் தன்னை உலகிலிருந்தும் கடவுளிலிருந்தும் வேறுபட்டவன் என்ற நினைவில் வாழ்வை ஒரு போராட்டமாக நடத்திக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே துன்பத்திற்கு ஆளாவார்கள். அறிவுத்திறன் இருந்தாலும் அதை பரமனை அறிந்துகொள்ள பயன்படுத்த வேண்டும் என்ற மனப்பக்குவம் வரும்வரை இவர்கள் தொடர்ந்து பணம், பதவி, புகழ் ஆகியவற்றை நாடி செயல் செய்வதை தவிர்க்கமுடியாது. இவர்கள் செல்லும் பாதைதவறானதல்ல. தான் யார் என்று புரிந்துகொள்ள தேவையான மனப்பக்குவத்தை தங்கள் செயல்கள் மூலம் இவர்கள் தங்களை அறியாமலேயே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தான் யார் என்று தெளிவாக அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள்.

முடிவுரை :

தான் யார், கடவுள் யார், இவ்வுலகத்தின் இயல்பு என்ன, படைப்புக்கு என்ன காரணம், வாழ்வின் நோக்கம் என்ன, பல்வேறு மதங்கள் போதிக்கும் வேறுபட்ட கருத்துக்களில் எது சரியானது என்பது போன்ற அனைத்துக்கேள்விகளுக்கும் தெளிவான பதில் தெரிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள். ஒன்பது செவ்வகங்களை தெளிவாக கண்டறிந்த இவர்கள் மற்றவர்களால் ஏன் முடிவான உண்மையை உணர முடிவதில்லை என்பதையும் அறிந்தவர்கள். எனவே இவர்களால் தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தன்னைச்சார்ந்த அனைவரது வாழ்வையும் துன்பம் கலவா இன்பமயமாக்கும் சக்தி உள்ளது.

பயிற்சிக்காக :

1. முகம் பார்க்கும் கண்ணாடியை வேதத்துடன் ஒப்பிடுக.

2. செவ்வக ஆராய்ச்சியின் மூலம் தெரிந்து கொண்ட கருத்து என்ன?

3. அறிவுத்திறனை அதிகபடுத்திக்கொள்ள மக்களுக்கு இருக்கும் ஒரே வழி என்ன?

4. மக்களிடையே அறிவுத்திறன் வேறுபடுவதற்கு காரணம் என்ன?

5. முரண்பட்ட கொள்கைகளை கொண்ட பல்வேறு மதங்கள் உலகில் இருப்பதற்கு என்ன காரணம்?

6. சத்திய சோதனை செய்யவேண்டியதன் அவசியமென்ன?

சுயசிந்தனைக்காக :

1. சரியான சுற்றுச்சூழல், திறமையான ஆசிரியர்கள், அதிநூதன கல்விச்சாதனங்கள் மற்றும் சீரமைக்கப்பட்ட கல்விமுறை போன்றவற்றின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சிறுவர்களையும் அறிஞர்களாக மாற்ற முடியுமா?

2. சச்சிதானந்தம் என்ற பெயர்காரணத்தை ஆராய்ந்து மனிதர்களின் மூன்று அடிப்படை ஆசைகளின் இருப்பிடத்தை அறிக.

3. இந்தப்பாடத்தில் உள்ள எட்டு சத்தியசோதனைகளில் ஒவ்வொன்றிலும் எவ்வளவு மதிப்பெண்கள் பெற நமக்கு தகுதியிருக்கிறது என்று சுயமதிப்பீடு செய்து கொள்க.

4. முற்றுணர்ந்தோனாக மாற அடுத்து செய்யவேண்டிய செயல்களை ஆசிரியரின் துணையுடன் ஆலோசிக்கவும்.