Showing posts with label Suffering. Show all posts
Showing posts with label Suffering. Show all posts

Wednesday, September 7, 2011

Lesson 154: Fruits of knowledge (Brahmasutram 4.1.1-2)


பாடம் 154: ஞானத்தின் பலன்
பாடல் 478 – 479 (IV.1.1-2)

பரமனின் மாயாசக்தியின் தொடர்ந்த மாற்றம்தான் உலகில் நடக்கும் வெவ்வேறு நிகழ்வுகளாகவும் மனிதர்களின் செயல்பாடுகளாகவும் தோற்றமளிக்கிறது என்ற உண்மையை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை என்றும் பரமரகசியத்தை அறியமுயலும் முக்திவிழைவோர்கள் பரமன் மேல் தொடர்ந்து தியானம் செய்யாவிடில் பற்றுடையோர்கள் போல  துன்பப்படுவதை அவர்களால் தவிர்க்க முடியாது என்றும் இந்தப்பாடம் விளக்குகிறது.

வாழ்வின் நிகழ்வுகள்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இருவரும் மணம் புரிந்து கொண்டு இனிதே வாழ்ந்தார்கள் என்பதுதான் கதை என்றால் இராமாயணம் எழுதப்பட்ட அன்றே மறக்கப்பட்டிருக்கும். இளவரச பட்டாபிஷேகம், கைகேயின் வரம், மரவுரியுடன் காட்டுக்குப்பயணம், பரதன், சூர்ப்பனகை, மாரீசன், ஜடாயு, இராவணன், விபீஷணன் ஆகியோரின் வருகை என்பது போன்ற ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வாழ்க்கைச்சித்திரமாக வரையப்பட்டதாலேயே அது எல்லோரும் சுவைக்கும் ஒரு காவியமாக இன்றுவரை திகழ்கிறது.

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் இராமாயணத்தைப்போன்ற ஒரு சுவையான கதையே. இதனாலேயே இன்றளவும் பக்கத்துவீட்டுநிகழ்வுகளை அக்கறையுடன் அனைவரும் கவனிக்கிறோம். யார் யாரை காதலிக்கிறார்கள், யாருடைய பெண் வீட்டைவிட்டு ஓடினாள், எதற்காக விவாகரத்து நடந்தது என்பதுபோன்ற ஊர் கதைகள் சுவாரசியமாக இருந்தாலும் அதே நிகழ்வு நம் வீட்டில் நடப்பதை எதிர்கொள்ள பெரும்பாலோர் தயாராய் இருப்பதில்லை. பதவி உயர்வு, புதிய கார் வாங்குதல் என்பது போன்ற நிகழ்வுகள் ஒருபோதும் தனித்து நடப்பதில்லை. பகல் வந்தால் தொடர்ந்து இரவு வருவதைப்போல அனைவரது வாழ்வும் ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாகவே இருக்கும். இது வாழ்வின் நியதி.

மேலும் இது படைப்பின் இரகசியம். இவ்வுலகம் இராவணனையும் இராமனையும் உள்ளடக்கிய இராமாயணமாக இல்லாவிட்டால் துன்பம் கலவா இன்பமாகவும் எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாமல் என்றும் இருக்கும் பரமன், ‘நான் பலவாக மாறுவேன்’ என்று சங்கல்பம் செய்ததற்கு பொருள் இல்லாமல் போய்விடும்.

மனித மனங்களில் வேறுபாடுகள்

ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவதுதான் படைப்பு. எல்லாவிதத்திலும் ஒன்றுபோல் இருக்கும் இருபொருள்கள் இவ்வுலகில் கிடையாது. மாமர இலைகள் மற்ற மரத்தின் இலைகளிலிருந்து வேறுபடுவதுமட்டுமில்லாமல் ஒரே மரத்தின் இலைகள் கூட ஒன்றுபோல் ஒன்று அமைவதில்லை. ஒரே வீட்டில் வளரும் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டே இருப்பார்கள். பொதுவாக பார்த்தால் இருக்கும் ஒற்றுமைகளை கூர்ந்து கவனித்தால் வேற்றுமைகள் வெளிப்படும்.

உலக நிகழ்வுகளில் உள்ள ஒற்றுமை

இடம், பெயர், தேதி ஆகிய மூன்றையும் கவனிக்காவிட்டால் செய்தித்தாள்களில் புதிதாக எவ்வித செய்தியும் வருவதேயில்லை என்பது தெரியவரும். பூமியில் மனிதன் தோன்றிய நாள் முதல் இன்றுவரை ஒவ்வொருவர் வாழ்வின் நிகழ்வுகளும் எவ்வித மாற்றமுமின்றி அதே ஏற்ற இறக்கங்களுடன்தான் அமைந்து வருகிறது.

மனிதர்கள் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதம்

உலக நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லையென்றாலும் மனித மனங்கள் மாறுபடுவதால் நிகழ்வுகள் அவற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகள் வேறுபடுகின்றன. கற்பத்தில் தோன்றுதல், பிறத்தல், வளர்தல், முதிர்தல், மங்குதல், மறைதல் என்ற ஆறு நிகழ்வுகளும் மனித வாழ்வில் தொடர்ந்து நடந்தாலும் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ தனக்கு மட்டும்தான் நிகழ்வதாக மனித மனம் கற்பனை செய்து கொள்கிறது. பல காலம் கழித்து பிறந்த குழந்தைக்கு ஜுரம் ஏற்பட்டு உயிர் பிழைக்குமோ என்ற நிலையில், பிறப்பவர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும் என்ற தத்துவத்தை கூறி அதன் பெற்றோர்களின் கவலையை போக்க முடியாது. குழந்தை எப்படியாவது பிழைக்க வேண்டும் என்று அவர்கள் மனம் தவித்துக்கொண்டுதான் இருக்கும். குழந்தை இறந்துவிட்டால் துக்கம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.

ஆனால் மனதில் ஏற்படும் தவிப்பு, துக்கம் போன்ற உணர்வுகள் அவர்களையும் அவர்களை சுற்றியுள்ளவர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது அவரவரின் ஆளுமையை சார்ந்து மாறுபடும். இனி நான் இருக்க மாட்டேன் என்று தற்கொலை செய்து கொள்ள முயலும் தாய், குழந்தையை காப்பாற்றாத மருத்துவரை தாக்கும் தந்தை, நடந்தது நடந்துவிட்டது இனி நடக்க வேண்டியதை கவனிக்கலாம் என்று அமைதியாய் இருக்கும் பெற்றோர் என மனிதர்கள் பல வகைப்படுகிறார்கள்.

மனிதனின் ஆளுமை

நகையின் தன்மை அதில் அடங்கியுள்ள உலோககலப்பின் தன்மையை சார்ந்து இருப்பது போல ஒரு தனி மனிதனின் ஆளுமை அவன் மனம் செய்யப்பட்ட விதத்தை பொறுத்து மாறுபடும். ஒளி, சக்தி, ஜடம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ள விகிதம் மனிதனின் ஆளுமையை நிர்ணயிக்கிறது.

அனைவரிடமும் கலகலப்பாக பேசுபவன், அமைதியாயிருப்பவன், தீர்க்கமாக யோசித்தபின் செயல்படுபவன், உடனுக்குடன் செயல்செய்து முடிப்பவன், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், ஜாக்கிரதையாக இருப்பவன், விரும்பியதை செய்பவன்,  புலன்களை அடக்கியாளுபவன் என ஆளுமைகளில் பல வகைகள் உண்டு. இவற்றில் எது சரி எது சரியில்லை என்ற விவாதம் தவறு. ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து வேறுபட்டுதான் இருக்க வேண்டும் என்பது படைப்பின் நியதி என்பதால் அனைத்து வகையான ஆளுமைகளும் சரியானவையே. ஆளுமையை மாற்றியமைக்கவேண்டும் என்பது தவறான முயற்சி. இதுதான் சரியான குணம் என்று வரையறுத்து அனைவரையும் இயந்திரங்களைப்போல மாற்ற முயல்வது அறிவீனம். மேலும் மனித ஆளுமைகளை யாராலும் மாற்றவே முடியாது. பேசுபவனை மௌனமாக இருக்கச்செய்வதோ, பேசாதவனை கட்டாயபடுத்தி பேசவைப்பதோ முடியாது. ஏனெனில் ஆளுமை உடன் பிறந்தது. மாறாதது.

ஆளுமையின் வகை மாறாது என்றாலும் ஆளுமையின் தரம் தொடர்ந்து வளரும். பாவ புண்ணியங்கள் தரும் சூழ்நிலைகேற்பவாறு வாழ்வில் நிகழும் நிகழ்வுகள், அவரவரின் விருப்பு வெறுப்புகளையும் அறிவுத்திறனை தொடர்ந்து வளர்க்க உதவுகின்றன. அறிவு வளர வளர அதற்கேற்ப ஆளுமையும் வளர்ச்சியடையும்.

ஒவ்வொரு மனிதனும் செயல்களை செய்பவன், பலன்களை அனுபவிப்பவன், அறிவை வளர்த்துக்கொள்பவன் என்ற மூன்று விதங்களில் வாழ்கிறான். இவற்றில் அறிவை பெற தனியாக செய்யும் முயற்சியைத்தவிர அனைத்து செயல்களை செய்யும்பொழுதும் அவற்றின் பலனை அனுபவிக்கும்பொழுதும் தொடர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்பவனின் ஆளுமை வேகமாக வளரும்.

ஆளுமை வளர்வதால் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை ஏதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும். இன்பத்தில் துள்ளுவதும் துன்பத்தில் துவளுவதும் படிப்படியாக குறைந்து இறுதியில் முக்தியடையும் வாய்ப்பையும் இவர்கள் பெறுவார்கள்.
பற்றுடையோன்

நான் பரமன் என்ற பரமரகசியத்தை அறியாத பாமரர்கள் அனைவரும் பற்றுடன் செயலாற்றுபவர்கள். நான் இந்த பலனுக்காக இந்த செயலைச்செய்கிறேன் என்று ஒவ்வொரு செயலைச்செய்யும்பொழுதும் இவர்கள் தெளிவாக இருப்பார்கள். எதிர் பார்த்த பலன் கிடைத்தால், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்று பெரிமிதம் கொள்வார்கள். இந்த நிலை யார் வாழ்விலும் தொடராது. ஏமாற்றம் தடங்கல், தோல்வி, போன்றவற்றை தவிர்க்கமுடியாதபொழுது தன்னம்பிக்கை குறைந்து கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

உண்மை உழைப்புடன் செயல்களைத்திறன்பட செய்து அதனுடன் ஆண்டவன் அருளின் அவசியத்தை அறிந்து அவனிடம் மன்றாடி பிரார்த்தித்த பின்னும் தோல்வியை சந்திக்க நேரும்பொழுது மனிதன் ஏன், எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். கடமையைச்செய், பலனை எதிர்பார்க்காதே என்ற பகவானின் அறிவுரைக்கு அர்த்தம் தெரியத்தொடங்குகிறது. வாழ்வில் செயலை செய்வதற்கு மட்டுமே தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் பலனை பெறும் உரிமையில்லை என்றும் உணர ஆரம்பிப்பார்கள்.

பலனுக்காக அல்லாமல் செயலை செவ்வனே செய்து முடிப்பது மட்டுமே தன் குறிக்கோள் என்ற அணுகுமுறையுடன் தொடர்ந்து செயலாற்றிவருபவர்களின் மனம் பக்குவபட்டு அவர்களின் ஆளுமை மேலும் வளர்ச்சியடையும்.

தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, கர்மயோகம் எனப்படிப்படியாக உயர்ந்து முக்திவிழைவோனாக மாறாதவர்கள் தொடர்ந்து பற்றுடையோர்களாகவே இருப்பார்கள். காகித ஓடம் கடலலை மேலே ஓடுவது போல இவர்கள் வாழ்வில் நிகழும் ஏற்ற இறக்கங்களினால் அலைக்களிக்கப்பட்டு இவர்கள் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாவார்கள். எலிப்பொறியில் வைக்கப்பட்டுள்ள வடையை கண்டதும் எலிக்கு உண்டாகும் ஆனந்தம் வெகு விரைவில் துன்பமாக மாறுவது போல் வாழ்வின் இனிமையான நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் மேல் கொண்டுள்ள பற்று தொடர்ந்து இவர்களை துன்பத்தில் ஆழ்த்தும்.

இன்பத்திற்காக செயல் செய்தால் துன்பத்தை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்ற அறிவு ஏற்படும்பொழுது ஆளுமை வளர்ந்து துன்பம் கலவா இன்பம் பெற முக்திவிழைவோனாக மாறவேண்டிய அவசியத்தை இவர்கள் உணர்வார்கள்.
முக்திவிழைவோன்

துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ உலகை மாற்றியமைத்து எப்பொழுதும் எல்லாமும் தங்கள் எதிர்பார்ப்பின்படியே நடக்க வைக்கவேண்டும் என்ற தவறான அறிவை மாற்றிக்கொண்டு வாழ்வில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்கவே முடியாது என்றும் அமைதியாக வாழ ஒரே வழி முக்தியடைவதுதான் என்றும் அறிந்தவர்கள் முக்திவிழைவோர்கள்.

மற்றவர்களைப்போல் தொடர்ந்து பல்வேறு வேலைகள் செய்து பணம் ஈட்டி குடும்பப்பொறுப்புகளை நிர்வகித்தாலும் இவர்களின் ஒரே குறிக்கோள் முக்தி என்பது மட்டுமே. முறைப்படி வேதத்தை ஆசிரியரிடம் பயின்று பரம ரகசியத்தை அறிந்துகொண்டிருந்தாலும் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி இவர்களையும் உலுக்கவே செய்யும். இவர்களது ஆளுமை பற்றுடையோர்களை ஒப்பிடும்பொழுது பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கும் காரணத்தால் இதுபோன்ற சோக நிகழ்வுகளை இவர்கள் எதிர்கொள்ளும் விதம் பண்பட்டிருக்கும்.

நான் பரமன், இருப்பதுபோல் தோன்றும் இவ்வுலகம் என்னால் உண்டாக்கப்பட்ட கனவு என்று தொடர்ந்து தியானம் செய்வதால்மட்டுமே இவர்களால் தங்கள் ஞானத்தில் நிலைபெற முடியும். கணவன் மேல் தீரா காதல் கொண்டிருக்கும் மனைவி அவன் வெளியூர் சென்றால் அவன் திரும்பிவருவரை வெவ்வேறு வீட்டுவேலைகள் செய்துகொண்டிருந்தாலும் சதா சர்வகாலமும் மனதினுள் அவனையே நினைத்துக்கொண்டிருப்பதுபோல முக்திவிழைவோன் பரமன் மேல் தியானம் செய்யவேண்டும். எவ்வளவுதரம் அல்லது எவ்வளவுநேரம் அரிசியை உலக்கையால் குத்தவேண்டும் என்ற கேள்விக்கு உமி அரிசியிலிருந்து பிரியும்வரை என்பதுதான் சரியான பதில். அதுபோல எவ்வளவுதரம் அல்லது எவ்வளவு நேரம் பரமன் மேல் தியானம் செய்யவேண்டுமென்பதற்கு உடல் மற்றும் மனம்தான் தான் என்னும் எண்ணம் உதிர்ந்து நான் பரமன் என்பதை உணரும்வரை என்று பிரஹதாரண்யக உபநிடத மந்திரம் ஒன்று (2.4.5) பதில் கூறுகிறது.

நான் முக்தியடையவேண்டும் என்ற  ஆசை நான் பணக்காரானாக வேண்டும் என்ற தீவிர ஆசையைபோல இருந்தால் அது நிறைவேற வாய்ப்பில்லை. எப்பொழுது ‘நான்’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘பரமன்’ மேல் மட்டும் தியானம் செய்யமுடிகிறதோ அப்பொழுதுதான் அகங்காரம் தொலைந்து நான் பரமன் என்ற ஞானம் உதிக்கும். முக்தியடைவது தானாக நடக்கும்.
முற்றுணர்ந்தோன்

நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைபெற்ற முற்றுணர்ந்தோர்களுக்கு உலகம் இருப்பதுபோல் தெரியும் ஒரு மாயை என்பது தெளிவாகத்தெரிந்திருப்பதால் உலக நிகழ்வுகள் அவர்களை பாதிப்பதில்லை. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது என்ற செய்தி அவர்கள் மனதையும் ஆட்டுவிக்கும். ஆனால் மனம் தான் அல்ல என்ற அறிவு உறுதியாக இருப்பதால் இவர்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள். தன் குழந்தை இறந்துவிட்டது என்பதை அறிந்தபின் இவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது அவரவர்களின் ஆளுமையை பொறுத்து மாறுபடும். செயல்பாட்டின் அடிப்படையில் ஒருவரை முற்றுணர்ந்தோன் அல்லது முக்திவிழைவோன் என்று வகைபிரிக்கமுடியாது.

கயிற்றை பாம்பாக பார்த்து பயப்படுபவன் பற்றுடையோன். அது பாம்பல்ல வெறும் கயிறுதான் என்பதை அறிந்திருந்தாலும் சுற்றியிருக்கும் எல்லோரும் அதற்கு பயப்படுவதால் மனம் குழம்பியிருப்பவன் முக்திவிழைவோன். கயிற்றை மட்டும் பார்ப்பதால் தெளிவாக இருப்பவன் முற்றுணர்ந்தோன்.

உலக நிகழ்வுகளும் மற்ற மனிதர்களின் செயல்பாடுகளும்தான் தங்களது சோகத்திற்கு காரணம் என்று பற்றுடையோர்கள் துன்பமடைவர். அதே நிகழ்வுகள் முக்திவிழைவோன் வாழ்வில் ஏற்படும்பொழுது அவன் தன் துன்பத்திற்கு ஒரே காரணம் முக்தியடையாதது மட்டுமே என்று அறிவான். நிகழ்வுகளும் அவை மனதில் ஏற்படுத்தும் சலனங்களும் பிரிக்கமுடியாதவை என்றும் இவ்விரண்டிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று உணர்ந்தவன் முற்றுணர்ந்தோன்.   

தான் செயல் செய்பவன் என்றும் பலனை அனுபவிப்பவன் என்றும் நினைப்பவன் பற்றுடையோன். செயல் மட்டும் செய்பவன் நான் என்று பலனைத்தியாகம் செய்பவன் முக்திவிழைவோன். தான் எவ்வித செயலையும் செய்வது கிடையாது என்று உணர்ந்துகொண்டிருப்பவன் முற்றுணர்ந்தோன். எனவே நடந்த நிகழ்வுகள் வேறு விதமாக நடந்திருக்கலாமென்றோ அல்லது தான் வேறுமாதிரி செயல்பட்டிருந்தால் சோகநிகழ்வை தவிர்த்திருக்கலாமென்றோ அவன் நினைத்து துயரப்படமாட்டான். தன் விதி என்று தன்னை சமாதானபடுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் அவனுக்கில்லை. ஏனெனில் தான் இது வரை பாவம் எதையும் செய்யவில்லை என்று அவனுக்கு தெளிவாகத்தெரியும். தான் எதனுடனும் சம்பந்தமில்லாதவன் என்றுணர்ந்ததால் அவன் எதனாலும் பாதிக்கபடுவதில்லை.


முடிவுரை :

மனித ஆளுமைகளை பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்துபவர்கள் ஆளுமை உடன் பிறந்தது என்பதால் அதன் தனித்தன்மையை மாற்றவேமுடியாது என்று உணர்வது அவசியம். அப்பொழுதுதான் ஆளுமையின் தரத்தை  உயர்த்த தேவையான அறிவை அடைவதில் முழுமுயற்சியுடன் ஈடுபடமுடியும்.

செயல்செய்வதன் மூலமாகவும் பலனை அனுபவிக்கும்பொழுதும் தொடர்ந்து அறிவை அதிகப்படுத்திக்கொள்பவனால் மட்டுமே ஒருவர் தனது ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இன்பத்தையும் துன்பத்தையும் தரக்கூடிய நிகழ்வுகளை மாற்றி மாற்றி வழங்கும் வகையில் தான் இந்த உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்ற இறக்கங்களை சரியாக எதிர்கொள்ள ஆளுமையின் தரத்தை உயர்த்திக்கொள்ளுவது அவசியம். 

ஞானத்தின் பலன் துன்பத்திலிருந்து விடுதலை. பாவபுண்ணியங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு காரணமாக மட்டுமே அமைகின்றனவேயன்றி நம்மை இன்பத்திலோ துன்பத்திலோ ஆழ்த்தும் சக்தி அவற்றுக்கு கிடையாது. அறிவு அதிகமாக அதிகமாக நம்மால் துன்பபடுவதை படிப்படியாக குறைத்து இன்பமாக வாழலாம். எப்பொழுது பரமனைப்பற்றிய முழுமையான அறிவை அடைகிறோமோ அப்பொழுது துன்பத்திலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறோம்.

பற்றுடையோன் நிகழ்வுகள் எப்பொழுதும் நல்லதாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தபடி இருப்பான். முக்திவிழைவோன் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் படைப்பு இருக்கமுடியாது என்றும், அனைவரும் பாவபுண்ணியங்கள் செய்திருப்பதால் வாழ்வின் இருமைகள் மாறிமாறிதான் வரும் என்றும் அறிந்து இருந்தாலும் முற்றுணர்ந்தோன் போல வாழ்வின் தொடர்ந்த மாற்றங்களை ஏற்ற இறக்கங்கள் என்று பாகுபாடு செய்யாமல் ஏற்றுக்கொள்ள பரமன் மேல் தியானம் செய்வது அவசியம்.

உலகம் உண்மையானது என்ற தவறான எண்ணம் முக்திவிழைவோன் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால் பரமன் மேல் தொடர்ந்து தியானம் செய்வது அவசியம். உலகம் நாம் காணும் கனவு என்று உறுதியாக உணரும்வரை தியானம் செய்தால்தான் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாற்றமடைவதுதான் மனதின் வேலை என்றும் மாறும் மனம் தான் அல்ல என்றும் அவன் உணர்வான்.


பயிற்சிக்காக :

1. வாழ்வின் நியதி மற்றும் படைப்பின் இரகசியம் என்று குறிப்பிடப்பட்ட கருத்து என்ன?

2. மனிதர்கள் வாழ்வில் பொதுவாக ஏற்படும் ஆறு நிகழ்வுகள் என்னென்ன?

3. மனிதர்கள் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதம் மாறுபடுவதற்கு காரணம் என்ன?

4. மனித ஆளுமையை நிர்ணயிப்பது எது?

5. மனித ஆளுமையை மாற்றியமைக்க முடியுமா?

6. ஆளுமையின் வளர்ச்சிக்கு எது அவசியம்?

7. மூன்று வாழ்க்கை விதங்கள் என்று பிரித்து ஆராய காரணம் என்ன?

8. பற்றுடையோன் முக்திவிழைவோனாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

9. முக்திவிழைவோன் முற்றுணர்ந்தோனாக மாற செய்யவேண்டிய ஒரே செயல் என்ன?

10. ஞானத்தின் பலன் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கான காரணங்களை ஆராய்க.

2. கடந்த இரண்டாயிரம் வருடங்களில் உலக நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்ற கூற்றின் உண்மையை ஆராய்க.

3. மனித ஆளுமைகளின் வகைகளை ஆய்க.

4. மனிதர்களை ஆளுமை வகைகளாக பிரிப்பதன் பயன் என்ன?

5. முற்றுணந்தோர்களின் மனம் சோக நிகழ்வினால் கலக்கமடையுமா?

Tuesday, March 8, 2011

Lesson 150: Child-like state and Scholarship (Brahmasutra 3.4.47-49)

பாடம் 150: ஞானி குழந்தையை போன்றவன்
பாடல் 472 – 474 (III.4.47-49)

போட்டி பொறாமை போன்ற உணர்வுகளை நீக்கி கள்ளங்கபடமற்ற குழந்தையாய் மாறவேண்டுமென்ற ஆசை நிறைவேற முடியாத ஒன்று அல்ல. நிர்மலமான மனதுடன் வாழ்வை இன்பமாக கழிக்கும் குழந்தையின் மனதை போல் நம் மனதை மாற்ற நாம் அறிந்துகொள்ளவேண்டிய கருத்துக்களை இந்த பாடம் விளக்குகிறது.

அறிந்தும் அறியாமலும்

பிறந்தது முதல் தொடர்ந்து ஐம்புலன்கள் வழியே தகவல்களை சேகரித்து அவற்றை அறிவாக மனதில் பதியவைத்துக்கொள்கிறோம். தற்போதைய கல்வித்திட்டம் மற்றும் சமூக சூழ்நிலைகள் இதுபோன்ற அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றனவே தவிர ஐம்புலன்களை உபயோகித்து அறிவை பெறுபவன் யார் என்ற அறிவை பெற நமக்கு உதவுவதில்லை.

குழந்தையின் மகிழ்வுக்கும் அமைதிக்கும் அறியாமைதான் அடிப்படை. அறியாமை முழுமையான அறிவாக மாறினால் நம்மால் வளர்ந்தபின்னும் குழந்தையைப்போல் எவ்விதபிரச்சனைகளும் இல்லாமல் வாழ்வை இனிமையாக கழிக்க முடியும். நான் யார், கடவுள் யார், எனக்கும் கடவுளுக்கும் என்ன உறவு என்பது போன்ற கேள்விகளின் சரியான பதில்களை தெளிவாக அறிந்து கொண்டால் நம் அரைகுறை அறிவை முழுமையான அறிவாக மாற்றிக்கொள்ளலாம். உலகத்தை ஒரு சித்திரத்திற்கு ஒப்பிட்டு வித்யாரண்ய சுவாமிகள் இந்த அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை கொடுக்கிறார்.

உலகம் ஒரு வரைபடம்

கஞ்சி போட்டு நேர்செய்யப்பட்ட வெள்ளை துணியில் வண்ணக்கலவைகள் மூலம் மலை, ஆறு, மரம், செடி,கொடிகள் மற்றும் ஒரு சில மனிதர்கள் சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை உலகத்துடன் ஒப்பிடலாம். வெள்ளைத்துணியாகிய பரமனை மாயா சக்தியாகிய கஞ்சி படைப்புக்கு ஆதாரமாக மாற்றுகிறது. பஞ்சபூதங்கள் என்னும் வண்ணக்கலவைகளைக்கொண்டு சித்திரத்தை உருவாக்க முதலில் மெல்லிய கறுப்புக்கோட்டினால் மலை ஆறு போன்றவற்றின் எல்லைகளை வரைவது போல நுண்ணிய உடல்களை உருவாக்கி பின் இந்த உலகம் உருவாக்கப்பட்டது.    

வாழ்க்கையின் நோக்கம் என்ன?

எப்படி வாழவேண்டும் என்ற கேள்விக்கு சரியான பதிலை அறிய முதலில் எதற்காக வாழ்கிறோம் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும்.

துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வது மட்டுமே மனிதன் உட்பட்ட அனைத்து உயிரினங்களின் ஒரே நோக்கம். உலகம் யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்ற முழுமையான அறிவைப்பெறாமல் வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளிடையே வெள்ளத்தில் சிக்கிய ஓடம்போல் அலைகளிக்கப்பட்டு இளைஞர்களைப்பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் முதியவர்களாகத்தான் அனைவரும் மாறிக்கொண்டிருக்கிறோம். உலகச்சூழல் எப்படியிருந்தாலும் எப்பொழுதும் துன்பம் கலவாமல் வாழ தேவையான அறிவை பெற்றுவிட்டால் அதன்பின் எப்படி வாழவேண்டும் என்ற கேள்வியே மறைந்துவிடும். இப்படித்தான் வாழவேண்டும் என்ற சட்டதிட்டங்கள் எதற்கும் கட்டுப்படாமல் ஒரு குழந்தையைப்போல் மகிழ்வான வாழ்வை மரணம்வரை அனுபவிக்கலாம்.

படைப்பின் காரணம் என்ன?

வெள்ளைத்துணியை யாரும் வீட்டில் அலங்காரமாக சுவற்றில் மாட்டுவதில்லை. அந்த வெள்ளைத்துணிமேல் நேர்த்தியான படம் வரைந்தபின்தான் அதன் மதிப்பு கூடுகிறது. அதுபோல பரமன் சுவாரசியமற்ற ஒன்று. ஒன்றான பரமன் மலை, ஆறு மற்றும் பல்வேறுபட்ட உயிரினங்களாக காட்சியளிக்கும் இவ்வுலகமாக உருவான காரணத்தால்தான் என்றும் இன்பமாக வாழ உடல், இடம், காலம் ஆகிய மூன்றும் நமக்கு கிடைத்துள்ளது.

எதையும் அறியாமல் ஆனந்தமாக உறங்கும் உறக்கத்தில் சுவாரசியமில்லாததால் ஒரு கனவுலகத்தை உருவாக்கி அதில் ஒரு உடலுக்குள் புகுந்து சிலநேரம் வாழ்வது போல பரமனாகிய நான் எனது சுயஉருவான ஆனந்தத்தை அனுபவிக்க ஒரு வரையருக்கப்பட்ட உடல், இடம் மற்றும் காலகட்டத்தை என் மாயா சக்தியால் உண்டாக்கிக்கொண்டதன் விளைவுதான் இவ்வுலகம். எனவே நாம் இன்பமாக வாழத்தேவையான ஒரு இடத்தை கொடுப்பதுதான் படைப்பின் காரணம். பரமனால் எவ்வித அனுபவங்களையும் தரவோ பெறவோ முடியாது. அனைத்துவித அனுபவங்களையும் பெற்று துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வதற்காகவே  காட்சிப்பிழையான இந்தப்பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் யார்?

வெள்ளை துணியைக்காட்டி என்ன தெரிகின்றது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்ற பதில்தான் கிடைக்கும். அந்தத்துணியில் சித்திரம் வரையப்பட்டவுடன் அதே கேள்விக்கு மலை, நதி, மனிதர்கள் என பலவிடைகள் கிடைக்கும். சித்திரத்திற்கு ஆதாரமான வெள்ளைத்துணியை யாரும் கவனிப்பது கிடையாது. அதுபோல் இவ்வுலகத்தின் இருப்புக்கு ஆதாரமான பரமனை யாரும் அறிவதில்லை. பரமனின் மாயா சக்தியால் அது உலகமாக மாறும்பொழுது அனைவரின் கவனத்தையும் அது கவருகிறது.  மாயையுடன் கூடிய பரமன்தான் கடவுள். கடவுள் இந்த பிரபஞ்சமாக நம் கண்முன்னே எப்பொழுதும் தெரிந்துகொண்டிருக்கிறான்.

பிரபஞ்சம் உருவானது எப்படி?

துணிச்சித்திரம் நான்கு கட்டங்களில் உருவாகும் விதத்தை ஆராய்வதன் மூலம் உலகத்தின் உண்மையான தன்மையினை அறிந்து கொள்ளலாம்.

முதல் கட்டம்: சித்திரத்தின் ஆதாரமான வெள்ளைத்துணி. எவ்வித குணங்களோ உருவமோ இல்லாததால் நம் புலன்களுக்குத்தென்படாத பரமன்தான் படைப்புக்கு ஆதாரம். சித்திரத்தில் காட்டப்பட்ட கற்பனை பொருள்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதால் அவற்றின் ஆதாரமான வெள்ளைத்துணியை யாரும் கவனிக்க மாட்டார்கள். அதுபோல தொடர்ந்து மாறும் உலகின் ஆதாரமான மாறாத பரமனின் இருப்பை யாரும் அறிவதில்லை. வெள்ளைத்துணி மட்டும்தான் உண்மையான பொருள். அதில் வண்ணங்களால் சித்தரிக்கப்பட்ட மலை, மரம், செடி போன்றவை இருப்பது போல தோற்றமளிக்கும் கற்பனை பொருள்கள். பரமன் மட்டும்தான் உண்மை. இந்த பிரபஞ்சம் இருப்பதுபோல் தோன்றும் மாயை.  

இரண்டாம் கட்டம்:  வெள்ளைத்துணியுடன் கஞ்சி சேர்த்து அதை நேர்படுத்தி சித்திரம் வரைய தயார் செய்தல். பரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. மாயா சக்தியுடன் கலந்த பரமன்தான் இறைவன். இறைவன் சர்வசக்திமான். ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்றுசெயல்களை செய்யவல்லவன். வானத்தை மேலேயும் பூமியை கீழேயும் வரையவேண்டும் என்றறிந்த ஓவியன் போல அனைத்தையும் அறிபவன் அவன். ஓவியன், கஞ்சி, வண்ணக்கலவைகள் போன்றவை  ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. ஆனால் பிரபஞ்சத்தின் உபாதான காரணம், நிமித்த காரணம் ஆகிய அனைத்தும் இறைவன் ஒருவனே.

மூன்றாம் கட்டம்: வண்ணங்களை பூச ஆரம்பிக்குமுன் வரைபடத்தில் வரையப்பட வேண்டிய பொருள்களின் எல்லைக்கோடுகளை வரைதல். வெள்ளைத்துணியில் தெளிவாகத்தெரியும் இந்த கறுப்புகோடுகள் சித்திரம் வரைந்து முடித்தவுடன் பார்வையிலிருந்து மறைந்துவிடும். எவ்வளவு தூரம் என்ன வண்ணங்களை வரைய வேண்டுமென்று வரையருக்கும் இந்தகோடுகளைப்போல உலகில் வெவ்வேறு பொருள்களை வடிவமைக்க உதவியாக இவ்வுலகம் முதலில் நுண்ணிய வடிவில் தோன்றும். இந்த நுண்ணிய உலகம் பரிணாம வளர்ச்சி பெற்று பருவுலகமாகும்.

நான்காம் கட்டம்: சரியான வண்ணக்கலவைகளை எல்லைக்கோட்டிற்குள் பூசுதல். வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றின் கலவையால் நிரப்பி நுண்ணிய பொருளுக்கேற்ற பருவுடலாக நாம் பார்த்து அனுபவிக்கும் இவ்வுலகம் தோற்றுவிக்கப்பட்டது. ஓவியனின் கையில் உள்ள தூரிகையில் உள்ள நிறத்தை நீலம் என்று கண்டுகொள்பவர்கள் அதே நிறத்தை சித்திரத்தில் பார்க்கும்பொழுது வானம் அல்லது ஆறு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆடு, மாடு, கல், மரம் என்று பொருள்களின் வடிவத்தை மட்டும் பார்த்து அவற்றை அடையாளம் காட்டுபவர்கள் அவற்றின் மூலப்பொருள்களான பஞ்சபூதங்களை காண்பதில்லை.

ஆறு மற்றும் சாக்கடை ஆகிய இரண்டும் ஒரே நிற வண்ணக்கலவையால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஆறு அழகாக இருக்கிறதென்றும் சாக்கடை அருவருப்பைத்தருவதாகவும் பார்ப்பவர்கள் முடிவுசெய்வதிலிருந்து இல்லாத பொருள்களுக்கு அவர்கள் உண்மைத்துவம் கொடுப்பது தெளிவாகிறது. அதே போல் ஒரே பஞ்சபூதக்கலவையால் உண்டாக்கப்பட்டவர்களென்றாலும் ஒருவரை நல்லவரென்றும் மற்றவரை கெட்டவரென்றும் பிரிப்பதற்கு அறியாமைதான் காரணம். வண்ணக்கலவைகளைத்தவிர வெள்ளைத்துணியின் மேல் வேறொன்றும் இல்லை. அதுபோல பஞ்சபூதங்களின் கலவைகளைத்தவிர இப்பிரபஞ்சத்தில் வேறொன்றுமில்லை. மேலோட்டமாக ஆறு, மலை என்று சித்திரத்தில் உள்ள பொருள்களை குறிப்பிட்டாலும் அவையனைத்தும் வண்ணக்கலவைகளால் வரையப்பட்டவைகளே தவிர உண்மையான ஆறோ, மலையோ அல்ல என்ற அறிவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் உலகத்தில் உள்ள பொருள்களை பஞ்சபூதங்களின் கலவையாலான மாயை என்று உணராமல் அவையனைத்தையும் உண்மையான பொருட்கள் என்று பெரும்பாலோர் நம்பிக்கொண்டிருப்பதற்கு அவர்களின் அறியாமையே காரணம். உலகம் என்பது நமது கற்பனையே தவிர உண்மையான இருக்கும் பொருளல்ல. உண்மையில் உள்ளது பரமன் மட்டுமே.

கற்சிலைக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

இந்தக்கேள்விக்கு சரியான விடை ஒன்றுமில்லை என்பதுதான். சித்திரத்தில் இருக்கும் மனிதனும் கற்சிலையும் துணிமேல் வரையப்பட்ட வண்ணக்கலவைகள் என்ற அடிப்படையில் எவ்விதவேறுபாடுமற்றவை. அதுபோல இந்த பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்து பொருட்களும் பஞ்சபூதங்களின் கலவையால் மட்டுமே உருவாக்கப்பட்டன என்ற நோக்கில் பார்க்கும்பொழுது அவற்றை உயிருள்ளவை மற்றும் ஜடப்பொருள்கள் எனப்பிரிக்கமுடியாது. எனவே கற்சிலைக்கும் மனிதனுக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை.

சித்திரத்தில் வரையப்பட்ட மனிதன் உடுத்தியிருக்கும் வேட்டி சட்டை எவ்வித வண்ணங்களும் பூசப்படாத வெள்ளைத்துணிதான் என்றாலும் அவற்றை வேட்டி, சட்டை என்று சித்திரத்திற்கு ஆதாரமான வெள்ளைத்துணியிலிருந்து வேறுபடுத்தி பார்க்கிறார்கள். படைப்பிற்கு ஆதாரமான பரமன்தான் பஞ்சபூதக்கலவையான மனிதனின் உடலை உயிற்பிக்கிறான். வெள்ளைத்துணியை பார்ப்பதற்குபதில் வேட்டியை பார்ப்பதுபோல் பரமனை பார்ப்பதற்குபதில் மனிதனை பார்க்கிறோம்.

துணியை தொடும் போட்டியில் வெல்ல சித்திரத்தின் எந்தப்பகுதியை தொட்டாலும்  போதும் என்பதை அறியாமல் மலை ஆறு ஆகியவற்றை கடந்து மனிதனைத்தேடி அவன் அணிந்துள்ள வேட்டியை தொடுவது போல எங்கும் நிறைந்திருக்கும் பரமனை அடையாளம் கண்டுகொள்ளாமல் உயிருடன் கூடியவற்றின் உணர்வு மட்டும்தான் பரமன் என்று நினைப்பதும் அறியாமை.

சித்திரத்தின் ஆதாரமான வெள்ளைத்துணி மட்டும்தான் உண்மையான பொருள். அதை எடுத்து நாம் உடுத்திக்கொள்ளலாம். அதில் வரையப்பட்ட வேட்டி சட்டைகள் எதற்கும் பயன்படாத கற்பனைத்தோற்றங்கள். இருக்கும் ஒரே துணியை கவனிக்காமல் இல்லாத பல துணிகளை கற்பனைசெய்துகொண்டு அவை வெள்ளைத்துணியிலிருந்து வேறுபட்டவை என்றும் சட்டை வேட்டியிலிருந்து வேறுபட்டது என்றும் மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பது பரமன் மட்டும்தான். அனைத்து உயிரினங்ளுக்குமட்டுமில்லாமல் ஜடப்பொருள்களுக்கும் ஆதாரமானவன் பரமன் மட்டுமே. பரமனைத்தொடும் போட்டியில் இவ்வுண்மைகளை அறியாதவன் ஒன்றும் செய்யாமல் பரமன் எங்கே என்று யோசித்துக்கொண்டிருப்பான். அனைத்தையும் அறிந்தவனும் ஒன்றும் செய்யாமல் பரமனாகவேயிருப்பான்.

எனக்கும் பரமனுக்கும் என்ன உறவு?

நான் பரமன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் முக்தியடைந்துவிட மாட்டோம். தண்ணீரில் பிரதிபலிக்கும் ஆகாயத்தை உதாரணமாக கொண்டு மனிதனுக்கும் பரமனுக்கும் உள்ள உறவை வித்யாரண்ய சுவாமிகள் விளக்குகிறார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் இடமளிக்கும் வெளி என்கிற ஆகாயத்தைப்போல் அனைத்துக்கும் ஆதாரமாயிருப்பவன் பரமன். இரண்டும் அளவுக்கு உட்படாதவை. புதியபொருளொன்றுக்கு இடம் கொடுப்பதால் ஆகாயத்தின் அளவு குறைந்துவிடாது. பிரபஞ்சம் இருந்தாலும் அழிந்தாலும் பரமன் எவ்விதமாற்றமும் அடைவதில்லை. அனைத்தையும் தன்னுள் அடக்கிய  ஆகாயம் எதனாலும் கட்டுப்படுத்தபடுவதில்லை. பிரபஞ்சத்தின் மாற்றம் பரமனை பாதிப்பதில்லை. எல்லா இடத்திலும் வியாபித்திருப்பது ஆகாயம். ஆகாயம் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் இருப்பும் பரமனைச்சார்ந்தது. ஆகாயம் போல் பரமன் எவ்வித பகுதிகள் அல்லது பாகங்கள் இல்லாதவன்.

இவ்விரண்டினிடையே மூன்று வேற்றுமைகள் உள்ளன. ஆகாயம் சப்தம் என்ற ஓரு குணத்துடன் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் பரமன் தோற்றம்-மறைவு என்ற சுழற்சிக்கு உட்படாமல் என்றும் இருப்பவன். ஆகாயம் உணர்வற்ற ஜடப்பொருள். பரமன் என்றும் இருக்கும் ஆனந்தமயமான உணர்வு. ஆகாயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் பலபொருள்கள் உள்ளன. பரமன் இரண்டற்ற ஒருவன்.

நமது பருவுடலை ஒரு பானைக்கு ஒப்பிடலாம். இரண்டும் பஞ்சபூதங்களால் செய்யப்பட்ட ஜடப்பொருள்கள். தோற்றம், மாற்றம், மறைவு என்ற சுழற்சிக்கும் காலம், இடம், பொருள் ஆகிய மூன்று கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவை. நாம் இவ்விரண்டிலிருந்தும் வேறுபட்டவர்கள். பானை தண்ணீர் சேமிக்க உபயோகப்படுவதுபோல் அனுபவங்களைப்பெற உடல் பயன்படுகிறது.

பானையில் உள்ள தண்ணீரை நம் மனம் என்னும் நுண்ணிய உடலுக்கு ஒப்பிடலாம். தண்ணீர் ஆகாயத்தை பிரதிபலிப்பதுபோல மனம் பரமனை பிரதிபலிக்கிறது. ஜடப்பொருள்களான இவ்விரண்டும் அளவுக்கு உட்பட்டவை. அளவுகடந்த ஆகாயத்தை பிரதிபலிப்பதால் தண்ணீர் அதிக ஆழம் உள்ளதாக தோற்றமளிக்கிறது. பரமனை பிரதிபலிப்பதால் மனம் உணர்வுடன் கூடியதாக காட்சியளிக்கிறது. நான் பரமன். பிரதிபிம்பம் அல்ல.

நான் யார்?

தண்ணீர் ஆகாயத்தை பிரதிபலித்து  அளவுக்குட்பட்ட பானையிடமிருந்து நமது கவனத்தை திசைதிருப்புகிறது. உணர்வுள்ள பரமனை பிரதிபலித்து மனம் நம் உடலுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுப்பதால் நாம் பரமனை அறிவதில்லை.

நான் என்பதன் உண்மைப்பொருள் பானைக்குள் இருக்கும் இடைவெளி. பானைக்குள் இருக்கும் வெளி பானைக்கு வெளியே இருக்கும் வெளியிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல. பானையே ஆகாயத்திற்குள் இருப்பதால் பானை உடைந்தபின் அதனுள் இருந்த ஆகாயம் வெளியே இருக்கும் ஆகாயத்துடன் கலந்து ஆகாயத்தின் அளவு அதிகமாகிவிடாது. பானையை இங்கும் அங்கும் எடுத்துச்செல்லும்பொழுது அதனுள் இருக்கும் இடைவெளி அசைவதில்லை. உண்மையில் ஆகாயத்தினுள் இருக்கும் பானை இங்குமங்கும் நகர்த்தப்படுவதால் ஆகாயம் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட உடலுக்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக தோற்றமளிக்கும் நான் உண்மையில் எவ்வித மாற்றமுமில்லாத பரமன். பானைக்கு வெளியே இருக்கும் ஆகாயத்தை நாம் எவ்விதத்திலும் பயன்படுத்தமுடியாது. ஆனால் பானைக்குள் இருக்கும் வெளியை தண்ணீர் வைக்கபயன்படுத்தலாம். அதுபோல பரமன் எவ்வித செயலையும் செய்ய இயலாதவன். ஆனால் பரமனாகிய நான் இவ்வுடலுக்குள் இருக்கும்வரை என் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி ஐம்புலன்கள் மூலம் உலகை உணர்ந்து என் இயல்பான ஆனந்தத்தை என் மனம் மூலம் அனுபவிக்கலாம். பானை மற்றும் அதிலுள்ள தண்ணீர் ஆகிய இரண்டிற்கும் ஆதாரமானது ஆகாயம். அதுபோல என் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டிற்கும் ஆதாரமானவன் நான் என்கிற பரமன்.

எங்குமிருக்கும் ஆகாயம் பானைக்கு இடம் கொடுத்து அதற்குள்ளும் வெளியேயும் வியாபித்திருக்கிறது. பிரபஞ்சம் முழுவதையும் வியாபித்து அதன் தொடக்கத்திற்கும் மறைவிற்கும் சாட்சியாக இருக்கும் பரமன்தான் என் உடலுக்குள்ளும் இருப்பவன்.

பானை ஆகாயத்தின் ஒரு சிறிய பகுதியை ஆக்ரமித்து அளவுக்குட்பட்ட கொள்ளளவை உபயோகபடுத்த உதவுகிறது. என் உடல் பரமனை அரவணைத்து ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனும் பெயருடனும் இவ்வுலகில் இயங்க எனக்கு உதவுகிறது. தண்ணீர் வைக்க பானை பயன்படுவதுபோல நம் நுண்ணிய உடல் இயங்க பருவுடல் ஒரு வாகனமாக பயன்படுகிறது.

நான் யார் அல்ல?

பானையால் ஆகாயத்தை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தமுடியாது. ஆனால் ஒரு சிறு இடைவெளியை வளைத்துப்போட்டு ஆகாயத்தை கட்டுபடுத்துவதுபோன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. அதுபோல என் உடல் என்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. நான் என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன். ஆனாலும் என் உடல் என்னை ஒரு உருவத்திற்குள் அடைத்து தோற்றம், மாற்றம் மற்றும் மறைவுக்கு உட்பட்டவனாக என்னை காட்டுகிறது. கனவு முடிந்தாலும் நான் தொடர்ந்து இருப்பதுபோல மரணமடைந்தாலும் நான் தொடர்ந்து இருப்பேன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. பானைக்குள் இருக்கும் இடைவெளிதான் நான் என்பதை உணராமல் தண்ணீரில் தோன்றும் ஆகாயத்தின் பிரதிபிம்பத்தை நான் என்று நினைத்துக்கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

பானையின் குறைந்த கொள்ளளவை நம் கண்களுக்கு மறைத்து மேலேயுள்ள மேகம், சந்திரன், நட்சத்திரங்கள் உள்ளடங்கிய பரந்த ஆகாயத்ததை பானைக்குள் இருப்பதுபோல் காட்டுவது தண்ணீரின் செயல். இதனால் பானைக்குள் உள்ள வெற்றிடத்தை கவனிப்பதில்லை. அதுபோல் நம் மனமானது பரமனைபிரதிபலித்து நான்தான் பரமன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. உணர்வு மயமான பரமனை பிரதிபலிப்பதால் மனம் தன்னை ஒரு உயிருள்ள பொருளாக காட்டிக்கொள்கிறது. பானையினுள் சந்திரனும் சூரியனும் இருக்கமுடியாது. அது போல ஜடப்பொருளான மனம்  உணர்வுக்கு சொந்தம் கொண்டாட முடியாது.

இதையறியாமல் பரமனின் பிரதிபலிப்பாக மனதில் தோன்றும் அகம்பாவத்தை நான் என்ற சொல்லுக்கு பொருளாக நினைத்து உடலின் பொருள், இடம், காலம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டவர்களாக நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறோம். பானையின் உள்ளே இருக்கும் ஆகாயம் வெளியேயிருக்கும் ஆகாயத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. பானை ஆகாயத்தைகட்டுப்படுத்தும் சக்தியற்றது. அதுபோல நம் உடலுக்கு ஆதாரமாயிருக்கும் பரமனை உடலின் இருப்பும் இல்லாமையும் எவ்விதத்திலும் பாதிக்காது. மனதில் தெரியும் பரமனின் பிரதிபலிப்பு நான் அல்ல. எல்லாப்பொருள்களுக்கும் ஆதாரமான பரமன் நான்.

மாறாத ஆகாயம் சூரியன், சந்திரன், பானை, தண்ணீர் மற்றும் அதில் தெரியும் பிம்பங்கள் ஆகிய அனைத்துக்கும் ஆதாரம். அதுபோல உடல் மனம் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதாரமான நான் மனதில் தெரியும் பரமனின் பிம்பம் நான் அல்ல.

நான் யார் என்று புரியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

பொதுவாக குழந்தைகள் செய்யும் தவறுகளை பெரியவர்கள் திருத்திவிடுவதால் பிறக்கும்பொழுது இருந்த அறியாமை வளர்ந்தவுடன் பெரும்பாலும் நீங்கிவிடும். ஆனால் எப்பொழுதும் உடலும் மனமும் நம்முடன் இருப்பதால் அவைதான் நாம் என்ற நமது தவறான அறிவை திருத்தும் தகுதியுள்ளவர்கள் அதிகமில்லாத காரணத்தால் பலருக்கு இந்த அறியாமை மட்டும் மரணம் வரை தொடர்கிறது. எப்பொழுதாவது உடலும் மனமும் நாம் அல்ல என்றும் அவை நம்முடையவை என்று யாரேனும் சுட்டிக்காட்டினால் சிறுது ஆலோசனைக்குப்பிறகு மனதில் தெரியும் பரமனின் பிரதிபலிப்பை நான் என்று நினைத்துக்கொள்கிறோம். நீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பும் நிலவும் ஒன்றுபோல் இருப்பதால் பானைக்குள் நிலவைப்பார்க்கிறேன் என்று ஒருவன் கூறினால் சிறிய பானைக்குள் எப்படி பெரிய நிலவு நுழையும் என்று யாரும் அவனுக்கு மறுப்பு சொல்வதில்லை. உண்மையில் அவன் பார்ப்பது நிலவின் பிரதிபிம்பத்தை என்றும் நிலவைப்பார்க்க நிமிர்ந்து வானத்தைப்பார்க்க வேண்டும் என்றும் யாரும் சொல்லித்தருவதில்லை.  அதுபோல எனக்கு உணர்வு இருப்பதால் நான் உயிரோடு இருக்கும் மனிதன் என்ற நினைப்பு தவறு என்றும் என் உணர்வு என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பது பரமனின் பிரதிபிம்பம் என்றும் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. பிரதிபிம்பத்தை ஒதுக்கிவிட்டு அதற்கு சொந்தக்காரனான பரமன் நான் என்ற அறிவைப்பெற  தகுந்த ஆசிரியரின் உதவி வேண்டும். நிலவு பானைக்குள்தான் இருக்கிறது என்று பிடிவாதம் பிடிப்பதைப்போல என் மனம் உணர்வுடன் கூடியது என்ற தவறான அறிவில் உறுதியாக இருப்பதால் நாம் ஆசிரியரின் துணையை நாடுவதில்லை. எனவே நான் யார் என்ற சரியான அறிவு ஏற்படுவதில்லை.

மேலும் உண்மையான ஆகாயமும் பிரதிபலிக்கும் ஆகாயமும் பானைக்குள் ஒரே இடத்தில் இருப்பதால் உண்மையை விட்டுவிட்டு பிரதிபலிக்கும் ஆகாயத்தில் மட்டும் கவனம் செல்லும். அது போல மனம் என்னும் ஒரே இடத்தில் இருந்து பரமனும் அதன் பிரதிபிம்பமும் செயல்படுவதால் நான் பரமன் என்று உணர்வதில்லை. சித்திரமும் அது வரையப்பட்ட வெள்ளைத்துணியும் ஒரே இடத்தில் இருப்பதால் அனைவரும் வண்ண வண்ண பொருள்களால் கவரப்பட்டு வெள்ளைத்துணியை கவனிப்பதில்லை. அனைத்துக்கும் ஆதாரமான பரமனின் இருப்பை உலகத்தில் உள்ள பொருள்களை பார்த்து நம்மை அறியவிடாமல் அவை நம் கவனத்தை கவருவதால் நம் அறியாமை தொடர்கிறது.

துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் என்ன?

நான் யார் என்பதில் ஒரு தெளிவு ஏற்படாததுதான் நம் அனைத்து துன்பங்களுக்கும் காரணம். ‘நான் பரமன் என்று தெளிவாக புரிந்துவிட்டது. ஆனால் பணகஷ்டம் குறையவில்லையே..’ என்றால் தான் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம். சித்திரத்தில் வரையப்பட்ட மனிதனின் கசங்கிய அழுக்கு வேட்டியும் வெள்ளைத்துணியும் ஒரே இடத்தில் இருப்பதால் ஒன்றின் தன்மையை மற்றதன்மேல் ஏற்றிவைத்து சலவை செய்த வெள்ளை துணியை கவனிக்காமல் கசங்கிய அழுக்கு வேட்டியை பார்ப்பது போல உலகத்தின் மாறுதல்களை பரமன் மேல் ஏற்றிவைத்து எனக்கு பணகஷ்டம் என்று தவறாக முடிவு செய்கிறோம்.

பொய் எப்பொழுதும் உண்மையை விட கவர்ச்சியானது. பானைக்குள் இருக்கும் வெற்றிடத்தை விட நிலவு, நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தின் பிரதிபிம்பம் அழகாகத்தெரிவது போல பரமனின் பிரதிபிம்பம் பரமனை நம்மிடமிருந்து மறைத்துவிடுகிறது. புதியதாக தோன்றும் எந்த பொருளும் பழையதாக மாறும். மாறாமல் இருக்கும் பரமன் என்றும் புதியதாக இருப்பதை நாம் கவனிப்பதில்லை.

நீரில் தெரியும் ஆகாயத்தின் அளவைப்பார்த்து பானையின் கொள்ளளவை தீர்மானித்தால் ஏமாற்றமடைவோம். அதுபோல ஜடமான மனதை உணர்வுடன் கூடியதாக நினைத்து பல சாதனைகளை செய்ய முயல்கிறோம். உண்மையில் நான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருப்பவன் என்பதை மறந்து அற்பமான உடலையும் மனதையும் சக்தியுடன் கூடியதாக நினைத்து ஏமாறுகிறோம்.

பானையை நகர்த்தினால் உள்ளிருக்கும் ஆகாயம் நகருகிறது என்று தவறாக நினைப்பதுபோல ஆகாய விமானத்திலேறி அமெரிக்கா சென்றால் நான் வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாக நம்புகிறோம். நான் எங்குமிருப்பவன். ஒரு சமயத்தில் ஒரு இடத்தில்தான் பானை இருக்கும். ஆகாயம் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் இருக்கும். நான் அதுபோல இடம், காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன் என்பதை மறந்து கண்ணை திறந்து மூடுவதற்குள் நினைத்த இடத்திற்கு போகவேண்டும் என்று முயற்சி செய்து தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம்.  

பானை உடைந்தால் ஆகாயம் மறைந்துவிடாது. அதுதெரியாமல் மரணமடைந்தால் நான் மறைந்துவிடுவேன் என்று பயப்படுவதுதான் நம் துன்பத்திற்கு காரணம்.

கடவுள் எப்படிப்பட்டவன்?

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் பருவுடல்கள் உட்பட்ட அனைத்து ஜடப்பொருள்களின் தொகுப்பு கடவுளின் பருவுடல். உயிரினங்களின் நுண்ணிய உடல்கள் மற்றும் காரண உடல்களின் சேர்க்கை கடவுளின் நுண்ணிய மற்றும் காரண உடலாகும். எனவே நான் வேறு கடவுள் வேறு அல்ல. நான் மட்டும் கடவுள் அல்ல. நானும் கடவுள். அவனும் கடவுள். அதுவும் கடவுள். எல்லாம் கடவுள். கடவுளைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் எதுவுமில்லை.

பல்வேறு செல்கள் ஒன்றாக செயல்படுவதால் நம் உடல் இயங்குவது போல பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அணுக்கூட்டங்களின் மொத்த செயல்பாடுதான் இறைவனின் இயக்கம். செல்களின் வாழ்நாள் மிகவும் குறைவு. தற்பொழுது நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒருசிலவருடங்களுக்குள் மடிந்துவிடும் என்றாலும் நாம் மடிவதில்லை. அதுபோல அனைத்து உயிரினங்களும் மடிந்தாலும் கடவுள் மறைவதில்லை. செல்களுக்கு அப்பாற்பட்டு என் உடல் இல்லை. மேலும் எந்த செல்லும் என் உடலுக்கு வெளியே இல்லை. அதுபோல பிரபஞ்சத்திற்கு வெளியே கடவுள் இல்லை. கடவுள் இல்லாமல் எதுவும் இல்லை.

கடவுளின் தன்மைகள் யாவை?

கடந்துஉள்ளிருப்பவன் (Omniprevelant): சித்திரத்தில் உள்ள அனைத்தையும் கடந்து அதே சமயத்தில் அனைத்துக்குள்ளும் இருப்பவன் கடவுள்.

அனைத்தையும் அறிபவன் (Omniscient): எந்த பொருளை எப்படி வரையலாம் என்பதை போன்ற அனைத்து அறிவையும் உடைய சித்திரக்காரன் இறைவன்.

சர்வசக்தியுடையவன் (Omnipotent): பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் ஆளவும் சக்தி கொண்டவன் ஆண்டவன்.

எங்கும் நிறைந்திருப்பவன் (Omnipresent): பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் எல்லாக்காலங்களிலும் எல்லாப்பொருள்களிலும் நிறைந்து இருப்பது தெய்வம்.

வயது, உயரம், அறிவு போன்ற தன்மைகள் நமது உடலையும் மனதையும் சேர்ந்தவை. அதுபோல மேலே விளக்கப்பட்ட நான்கு தன்மைகளும் கடவுளின் உடலான பிரபஞ்சத்தை சேர்ந்தவை. பிரபஞ்சம் அழிக்கப்பட்டபின் கடவுள் காரண உருவில் ஒடுங்கிய நிலையில் பரமனின் மாயாசக்தியாக தொடர்ந்து இருப்பான்.

எனக்கும் கடவுளுக்கும் என்ன உறவு?

கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நமக்கும் நம் உடலின் பாகங்களுக்கும் உள்ள உறவைப்போன்றது. கால்கள் நடப்பதால் நாம் நகருகிறோமா அல்லது நாம் நகர கால்களை நடக்கவைக்கிறோமா என்று கேட்டால் கால்கள் தானாக நடப்பதில்லை என்றும் அவற்றை நாம்தான் செயல்படுத்துகிறோம் என்றும் பதில் அளிப்போம். அதுபோல நாம் தானாக எதையும் செய்வதில்லை. கடவுள்தான் நம் அனைத்து இயக்கத்திற்கும் காரணம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் மற்றும் அசையாப்பொருள்கள் அனைத்தையும் ஆட்டுவிப்பது ஆண்டவன் மட்டுமே. சூரியன், சந்திரன் போன்ற ஜடப்பொருள்களை மட்டுமில்லாமல் அனைத்து உயிரினங்களையும் ஆளுபவன் ஆண்டவன்தான். நமது மனதும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படுவதுபோல இந்த பிரபஞ்சம் முழுவதையும் செயல்படுத்துபவன்  இறைவன்.

கடவுளுக்கும் எனக்கும் உள்ள உறவை சரியாக புரிந்துகொண்டால் எனக்கு சுயமாக செயல்படும் திறன் உள்ளதா அல்லது அனைத்தும் கடவுள் செயலா என்ற கேள்வி மனதில் எழாது. ஒரு வணிக நிறுவனத்தின் அலுவல்களை செய்ய பல கணிணிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்று வரவு செலவு கணக்கையும் மற்றது சரக்குகளின் போக்குவரத்தையும் பதிவுசெய்யும். ஒவ்வொரு கணிணியிலும் அதற்கு தேவையான தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது போல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரனங்களின் மனதிலும் அவற்றின் செயல்பாட்டிற்கு தேவையான விருப்பு வெறுப்புகள் மற்றும் அறிவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதால் அவை செயல்படுகின்றன. இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் ஒவ்வொரு உயிரனத்தின் செயல்பாடுகளும் அடங்கும்.

என் மனதில் தோன்றியதை நான் செய்தேன் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஏன் அந்த எண்ணம் தோன்றியது என்பதை ஆராய்ந்தால் நாம் நம் சுய புத்தியை உபயோகித்து செய்யும் செயல் கூட கடவுளின் செயல்பாடுதான் என்பது தெரியவரும். உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் அவரவர் மனதில் உள்ள விருப்பு, வெறுப்பு, அறிவு ஆகியவற்றிற்கேற்ப செயல்படும் சிறைக்கைதிகள்தான்.

ஜனநாயக அமைப்பில் அனைத்து அதிகாரங்களுடன் ஆட்சி செய்வது பிரதம மந்திரி. உலக அரங்கில் அவர் தன் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதி. அதுபோல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஆள்வது ஆண்டவன். 

பிரதம மந்திரியால் அரசாங்கத்தின் மற்ற அலுவலர்களின் துணையில்லாமல் செயல்பட முடியாது. அதுபோல கடவுளால் மக்களின் துணையின்றி செயல்பட முடியாது. பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்ட மற்ற மந்திரிகள் நிதி, வெளியுறவு, உள்ளாட்சி என பல துறைகளில் செயல்பட்டாலும் அனைவரது செயல்களுக்கும் பிரதமமந்திரி மட்டுமே பொறுப்பு. அதுபோல அனைத்து மக்களது செயல்களுக்கும் கடவுள் மட்டுமே பொறுப்பு. கடவுளின் சக்தி என்பது அனைத்து உயிரினங்களின் சக்தியின் கூட்டுத்தொகையாகும். ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளேயிருந்து செயல்களை செய்வது கடவுள்தான் என்பதால் நான் வேறு கடவுள் வேறு அல்ல.

கடவுள் என்பவர் பிரபஞ்சமாகத்தோன்றும் மாயா சக்தியுடன் சேர்ந்த பரமன். நான் என் உடலாகத்தோன்றும் மாயா சக்தியுடன் சேர்ந்த பரமன். உண்மையில் இருப்பது பரமன் மட்டும்தான். பரமனின் மாயாசக்தி பிரபஞ்சமாக காட்சியளிப்பது நம் இன்பத்திற்காக.

ஊசிபட்டாசுசரம் வெடிப்பதைப்பார்த்து ஆனந்தமடையும் சிறுவர்கள் வெடிப்பது ஒரே வெடியா அல்லது சரமாக கோர்க்கப்பட்ட தனிப்பட்ட வெடிகளா என்று ஆராய்வதில்லை. தனிப்பட்ட வெடிகளை நீக்கிவிட்டால் ஊசிபட்டாசு மறைந்து விடும். அனைத்து உயிரனங்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தை நீக்கிவிட்டால் இறைவன் ஒடுங்கிவிடுவான். எனவே என் செயலா இறைவன் செயலா என்று கேள்வி அனாவசியம். இரண்டும் ஒன்றுதான்.

வீட்டில் வெண்ணைமட்டுமிருக்கும்பொழுது யாரேனும் நெய்யிருக்கிறதா என்று கேட்டால் நம் பதில் சந்தர்ப்பத்தை பொறுத்து மாறும். நெய் வெண்ணைக்கு அப்பாற்பட்ட பொருள் இல்லை. இருந்தாலும் நெய் மற்றும் வெண்ணை என்று இரு பெயர்கள் இருப்பது போல என் செயல்கள் கடவுளின் செயல்களில் அடக்கம் என்றாலும் செயல்கள் செய்வது நான் என்றும் பலன்களை கொடுப்பது கடவுள் என்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் பாகுபாடு செய்வது வழக்கில் உள்ளது.

அனைத்துசெயல்களையும் இறைவனின் ஆணைப்படி நான் செய்கிறேன் என்றும் செயல்களின் பலன்களை கொடுப்பது இறைவனின் கருணையென்றும் கூறுவது வேதத்தின் ஆரம்பப்பாடம். வேதம் படித்து நான் எந்த செயலையும் செய்ய இயலாத பரமன் என்பது புரிந்தவுடன் செயல் செய்வது இறைவனா அல்லது நானா என்ற கேள்வி மறைந்துவிடும்.

நீர் அலைகளாகவும் கடலாகவும் காட்சியளிப்பது போல பரமன் பல்வேறு உயிரினங்களாகவும் கடவுளாகவும் காட்சியளிக்கிறான்.  

முடிவுரை :

நான் பரமன் என்பது புரிந்து விட்டால் நம் உடல் மற்றும் மனதின் செயல்களை என் செயல்கள் என்று சொந்தம் கொண்டாட மாட்டோம். நடப்பது நடராஜனின் நடனம். உடலும் மனமும் என்வசம் இருக்கும்வரை அந்த நாட்டியத்தில் பங்கு பெற வாய்ப்புகிடைத்தது குறித்த மகிழ்வுடன் மற்றவர்களுக்கு அந்த மகிழ்வை பங்கிடும் நோக்குடன் நமது அனைத்து செயல்களும் அமையும். நம்மை நாடிவரும் வேலைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நம்மால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்வது என்கிற குழந்தையின் மனப்பக்குவும் நமக்கு வந்துவிடும்.

கடவுள் உள்ளிருந்து செயல்படும் சர்வசக்திமான் என்ற கருத்து நமது அனைத்து செயல்களுக்கும் கடவுள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான் என்பதை குறிக்கிறது. குழந்தை தன் செயல்களின் விளைவைப்பற்றி கவலைப்படாமல் எப்பொழுதும் மகிழ்வுடன் இருப்பது போல நம் செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஆண்டவனை அறிந்தவுடன் நாமும் எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்கலாம்.

குழந்தை தன் செயல்கள் எதையும் தவறு என்று கருதுவது கிடையாது. யாரேனும் தன்னை திட்டினாலும் அடித்தாலும் அதை விரைவில் மறந்துவிட்டு அவர்களுடன் எப்பொழுதும் போல் சாதாரணமாக பழகும். எதிர்காலத்தை பற்றிய கவலை அதற்கு சிறிதும் கிடையாது. இதை செய்ய வேண்டும், அதை செய்யக்கூடாது என்ற சட்டதிட்டங்கள் குழந்தையை கட்டுப்படுத்தாது. எதையும் சாதிக்க வேண்டிய கட்டாயம் குழந்தைக்கு கிடையாது. எனவே திட்டங்கள் தீட்டி தனக்குத்தானே சட்டங்கள் வகுத்து அடிமையாக வாழ அதற்கு அவசியம் கிடையாது.

வேதம் விதிக்கும் விதிகளும் முற்றுணர்ந்தோர்களை கட்டுப்படுத்தாது. எனவே அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை குழந்தையின் மனப்பாங்குடன் எதிர்கொண்டு இனிதே வாழ்வார்கள்.

பயிற்சிக்காக :

1. தற்போதைய மாணவர்கள் பள்ளியில் பயிலும் கல்வியின் தன்மை என்ன? அவர்களுக்கு அங்கு எதைப்பற்றி கற்றுக்கொடுக்கப்படுவதில்லை?
2. குழந்தைகள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு காரணம் என்ன? வளர்ந்தவர்கள் அதே போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருக்க என்ன செய்ய வேண்டும்?
3. வாழ்க்கையின் நோக்கம் என்ன? வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?
4. பிரபஞ்சத்தின் படைப்புக்கு காரணம் என்ன?
5. நான்கு கட்டங்களாக பிரபஞ்சம் உருவான வகையை விளக்குக.
6. கடவுள் யார்?
7. கற்சிலைக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
8. சித்திரத்தில் துணியைத்தொடும் போட்டி என்ற விளக்கம் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?
9. பரமனுக்கும் ஆகாயத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.
10. நான் யார் என்பதில் தெளிவு ஏற்படாமல் அறியாமையுடன் இருப்பதற்கு காரணம் என்ன?
11. நமது துன்பங்களுக்கு காரணம் என்ன?
12. கடவுள் எப்படிப்பட்டவன்?
13. கடவுளின் நான்கு தன்மைகள் யாவை?
14. கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன உறவு?

சுயசிந்தனைக்காக :

1. பரமனால் எவ்வித அனுபவங்களையும் பெற முடியாது என்றால் ஏன் உலகம் படைக்கப்பட்டுள்ளது?
2. நான் யார்?
3. கடவுள், இறைவன், ஆண்டவன் மற்றும் தெய்வம் என்ற நான்கு வார்த்தைகளின் பொருட்காரணத்தை ஆராய்க.