Showing posts with label உறக்கம். Show all posts
Showing posts with label உறக்கம். Show all posts

Thursday, February 10, 2011

Lesson 147: Renounced will not revert back to desires (Brahma Sutra 3.4.41-42)

பாடம் 147: துறந்தவர்கள் மீண்டும் ஆசைப்படமாட்டார்கள்
பாடல் 466-467 (III.4.41-42)

ஆசையே துன்பத்திற்கு காரணம். எனவே ஆசைகளை தவிர்க்க ஆசைபட வேண்டும். பற்றை துறந்தவர்கள் மனதில் ஏன் ஆசைகள் ஏற்படாது என்றும் ஆசைகள் இல்லாமல் அவர்கள் எவ்வாறு செயலாற்றுகிறார்கள் என்றும் விளக்கம் தருவதுடன் உலகே மாயை என்ற கருத்தையும் இந்த பாடம் விவரிக்கிறது.

ஒளி-ஒலி காட்சி

நான் பரமன் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஞானிகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒளி-ஒலி காட்சி என்பதை உணர்வார்கள். இந்த தொடர்ந்த இயக்கத்தில் செயல்கள் என்று எதுவும் கிடையாது. எனக்கு தாகம் எடுத்ததால் எழுந்து சமையலறைக்கு நடந்து போய் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்தேன் என்பது நமது கற்பனையே தவிர உண்மையல்ல. ஒளிக்கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை மனதில் ‘நான் செய்தேன்’ என்ற ஒலியாக பதிவு செய்யும் மாயையின் பிடியில் இருக்கும்வரை நமக்கு உண்மை விளங்காது.

வாழ்க்கையை வாழ மனம் தேவையில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டவர்கள்தான் ஞானிகள். மனதில் ஏற்படும் எண்ணங்கள் ஒலிக்கதிர்களால் ஆனவை. ஒலி ஒளியைவிட மெதுவாக பயணிப்பது என்பதால் வாழ்வு என்னும் ஒளிக்காட்சியின் தாமதமான வர்ணணையை கொடுத்துக்கொண்டிருப்பதுதான் மனதின் வேலை. நான் நேற்று இதை செய்தேன், நாளை அதை செய்வேன் என்று மனதில் தோன்றும் எண்ணங்கள் நாம்தான் வாழ்வை வாழ்வதாக ஒரு கற்பனையை உருவாக்கியுள்ளன. ஒரு காரியத்தை செய்வதற்குமுன் அதை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுகூட இந்த கற்பனையின் ஒரு பகுதிதான் என்பதை ஞானிகள் அறிவார்கள். உடல் என்னும் ஒளிவடிவம் தண்ணீர் குடிப்பதுபோல் தோன்றும் காட்சி மனதில் ஒலியாக பதிவாவதை உணராதவர்கள் ‘நான் தண்ணீர் குடித்தேன்’ என்ற அறியாமையுடன் வாழ்கிறார்கள்.

இந்த அறியாமை மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் மனதில் உள்ள எண்ணங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் இரண்டுமே மாயை. முதலில் புரியாமல் இருந்தது இப்பொழுது புரிந்து விட்டது என்பதும் மாயை. எவ்வித மாற்றமும் இல்லாமல் ஆனந்தமயமாக உணர்வு உருவாக என்றும் இருக்கும் நான் மட்டும்தான் உண்மை.

பரமனை உண்மையில் அறிந்தவர்கள் ‘நான் பரமன்’ என்பது மனதில் தோன்றும் எண்ணம் என்றும் மனம், உடல் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயை என்றும் அறிந்திருப்பார்கள். எனவே வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியில் தாங்கள் எவ்வித செயல்களை செய்வதாகவோ செய்ய ஆசைப்படுவதாகவோ ஞானிகள் எண்ணிக்கொள்வதில்லை. எனவே ஞானிகளின் ஆசை என்பதும் அவர்களின் செயல்கள் என்பதும் அஞ்ஞானிகளின் விவாதத்திற்கு மட்டுமே உரியவை.

எண்ணங்கள் ஆசைகளாக மாறி மனிதனை செயல் செய்யத்தூண்டுகிறது என்று வேதாந்தத்தின் ஆரம்பபாடங்களில் படித்த அறிவை உதறித்தள்ளி நாம் ஆசை கொள்வதுமில்லை, செயல்கள் செய்வதுமில்லை என்ற உண்மையை உணர வேண்டும். ஏற்கனவே குடித்த தண்ணீர் வயிற்றுக்குள் அடையும் மாற்றங்களுக்கும் அது வியர்வையாக வெளியேறுவதற்கும் நாம் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. தாகம் ஏற்பட்டதால் கால்கள் பானையிடம் சென்று கைகள் தண்ணீரை வாய்க்குள் செலுத்தும் காட்சியை மட்டும் நான் செய்தேன் என்று எண்ணுவது தவறு. இந்த உண்மையை உணரும்வரை மக்கள் தன்னைப்பற்றிய அறியாமையுடனும் உலகப்பொருள்களின் தன்மையை பற்றிய தவறான அறிவுடனும் இருப்பதால் பொருள்கள் மீது ஆசை கொண்டு தொடர்ந்து துன்பமடைவார்கள்.

அனைவரும் பிறக்கும்பொழுது அறியாமையுடன்தான் பிறக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் கல்வி, பொதுஜனத்தில் முகம் தெரியாமல் இருந்தவனுக்கு மருத்துவன், பொறியாளன், வக்கீல் என்பது போன்ற தனியான அடையாளத்தை ஏற்படுத்தி தான் இவ்வுலகிலிருந்து வேறுபட்டவன் என்ற அகங்காரத்தை ஏற்படுத்துகிறது. தான் யார் என்ற அறிவைத்தரும் வேதபாடங்களை பயிலாமல் வாழ்க்கையின் அனுபவங்களை எதிர்கொள்வதால் ‘நான் செயல்களை செய்பவன் மற்றும் செயல்களின் பலன்களை அனுபவிப்பவன்’ என்ற அறியாமை தொடர்கிறது.

தோற்றம், மாற்றம் மற்றும் மறைவு என்ற கட்டுக்குட்பட்ட உடலையும் தொடர்ந்து மாறும் மனதையும் நான் என்ற சொல்லுக்கு பொருளாக கொள்வதால் நிரந்தரமான அமைதியும், குறையாத இன்பமும் உலகத்தில் செயலாற்றுவதன் மூலம் கிடைக்கும் என்று தான் செயல்களை செய்வதாக நினைப்பதற்கு மனிதன் ஒரு காரணத்தை கற்பித்துகொள்கிறான். குறைகள், அவற்றை நிறை செய்ய ஆசைகள், ஆசைகளை பூர்த்தி செய்ய செயல்கள் என்று அறியாமை மக்கள் மனதில் உறுதியாகிறது.

வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சி பின்வரும் படிக்கட்டுக்கள் வழியே வழிநடத்தி இறுதியில் செயல்கள் என்று எதுவுமில்லை என்று அவர்களுக்கு உணரவைக்கும்.

முதல் படி: உலகில் ஆனந்தம் இருக்கிறது

இரண்டு வயதில் பலூன் வேண்டும் என்று அடம்பிடித்து அது கிடைத்ததும் ஏற்பட்ட ஆனந்தம் அடுத்து அடுத்து அது வேண்டும் இது வேண்டும் என்று மக்களை கேட்க தூண்டுகிறது. ஒவ்வொருமுறையும் கேட்டது கிடைத்ததும் இன்பம் கிடைத்ததால் உலகத்தில் உள்ள பொருள்களில் ஆனந்தம் இருக்கிறது என்கிற தவறான அறிவு உறுதியாகிறது. எனவே இருபது வயதானதும் இவர் கிடைத்தால் வாழ்வு இன்பமயமாக இருக்கும் என்ற ஆசை உண்டாகிறது. அந்த ஆசை நிறைவேறிய சில வருடங்களுக்குள் அவரை விவாகரத்து செய்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்று தோன்றும்பொழுது உலகப்பொருள்களில் உண்மையில் இன்பம் இருக்கிறதா என்று ஆராய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அனுபவங்களை ஆய்ந்தறியும் அறிவாற்றல் ஒரு சிலருக்கே வாய்க்கிறது. இவர்கள் மட்டுமே அடுத்த படிக்கு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் மனதில் உலகில் ஆனந்தம் இருக்கிறது என்ற தவறான எண்ணம் மரணம் வரை தொடர்கிறது.  

இரண்டாம் படி: உலகில் ஆனந்தம் இல்லை

தேடிய பொருள்களை பெறுவதனால் கிடைக்கும் இன்பம் நிலைப்பதில்லை. தன் கையில் இருப்பதைவிட அடுத்தவருக்கு கிடைத்தது சிறப்பானதாக தோன்றுகிறது. எனவே போதுமென்ற நிறைவு ஏற்படுவதேயில்லை. கிடைத்த பொருளை பேணிபோற்ற எவ்வளவு முயற்சித்தாலும் அது மாறி மறைந்து போகிறது. இது போன்ற துன்பம் கலந்த இன்பம்தான் பொருள்களிலிருந்து கிடைக்கிறது என்ற அறிவு ஏற்பட்டவுடன் அவற்றின் மீது ஆசை ஏற்படுவது குறையும்.

பணம், பதவி, புகழ், நண்பர்கள், குடும்பம் உள்ளிட்ட உலகத்தைச்சேர்ந்த எந்த பொருளிலும் இன்பம் சிறுதுகூட இல்லை. ஆனால் இவற்றில் இன்பம் இருக்கிறது என்று நினைத்து மக்கள் இவற்றை அடைய தொடர்ந்து உழைக்கிறார்கள். இந்த உழைப்பு நாளடைவில் அவர்களுக்கு இவற்றில் உண்மையில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்தும். இந்த மனப்பக்குவம் வந்தவுடன் உலகால் தர முடியாத நிறைவையும் இன்பத்தையும் கடவுளிடமிருந்து பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் அடுத்த படிக்கு முன்னேறுவார்கள்.

மூன்றாம் படி: நான்தான் ஆனந்தத்தின் ஒரே இருப்பிடம்

பணம் இன்பத்தை கொடுப்பதில்லை என்ற அறிவு கிடைக்க வெகுகாலம் ஆனது போல மதங்கள் கூறும் சடங்குகளைப்பின்பற்றி கடவுளின் கருணையால் முக்தி கிடைக்கும் என்று பலகாலம் முயன்றபின் ஒருசிலருக்கு வேதாந்தத்தை முறையாக படிக்க வாய்ப்பு கிடைத்து ஆனந்தத்தின் இருப்பிடம் தெரியவரும்.

எலும்புத்துண்டு வாயில் குத்தி வெளிவந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக நினைத்து மேலும் அதை கடிக்கும் நாய் சிறிது நேரத்தில் உண்மையை உணர்ந்து அதை துப்பிவிட்டு செல்வது போல தன் இயல்பான ஆனந்தத்தை உலகத்திலிருந்து பெறுவதாக நினைத்து அதன் பின் ஓடுவது சிறிது காலத்தில் குறைந்து பரமனைப்பற்றிய முழு அறிவை வேதம் படிப்பதன்மூலம் பெறுவார்கள்.

ஆனந்தமயமாகவும் அறிவுறுவாகவும் என்றும் இருப்பவன் பரமன்.

நெருப்பு தான் ஒளிர்வதுடன் மற்ற பொருள்களையும் ஒளிர்வித்து அவற்றை உஷ்ணப்படுத்தும் தன்மையை உடையது.  நீர் நெருப்பின் வெப்பத்தை மட்டும் எடுத்துகொள்ளுமே தவிர ஒளியை ஏற்றுக்கொள்ளாது. இரும்புத்துண்டு வெப்பத்துடன் தன்னை ஒளிர்வித்துக்கொள்ளும் தன்மையையும் நெருப்பிலிருந்து பெற்றுக்கொள்ளும். மரத்துண்டு நெருப்புடன் சேர்ந்து நெருப்பாகவே மாறி அதன் மூன்று குணங்களையும் முழுமையாக பெற்றுக்கொள்ளும். அது போல பரமனிடம் இருக்கும் இருத்தல்-உணர்தல்-ஆனந்தம் ஆகிய மூன்று தன்மைகளையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பரமனாகவே மாறும் சக்தி மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

ஜடப்பொருள்கள் இருத்தலையும் மற்ற உயிரினங்கள் இருத்தல் உணர்தல் ஆகிய இரு தன்மைகளையும் பெற்று இவ்வுலகமாக நமக்கு காட்சியளிக்கின்றன. எனவே ஆனந்தம் உலகில் இல்லை என்றும் அதன் இருப்பிடமான பரமன் நான் என்றும் வேதாந்தத்தை முறையாக படித்தால் தெரியவரும்.

ஆனந்தம் நான் என்றாலும் அதை அனுபவிக்க ஒரு உடலும் மனமும் வேண்டும். அந்த உடலும் மனமும் இருக்க ஒரு உலகம் வேண்டும். எனவே பிரபஞ்சம் என்ற ஒளி-ஒலி காட்சி நம் அனுபவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதன் ஒரு பகுதிதான் நம் உடலும் மனமும் என்ற அறிவும் இந்தப்படியில் கிடைக்கப் பெற்றவர்கள் அடுத்தப்படிக்கு முன்னேறுகிறார்கள்.

நான்காம் படி: உலகம் மாயை

எவ்வித அனுபவமும் இல்லாமல் உறங்கும் ஆழ்ந்த உறக்கத்தின் நடுவே கனவு உலகம் ஒன்றை உருவாக்கி அதில் பற்பல அனுபவங்களை நாம் பெறுவதுபோல் ஒன்றான பரமன் பலவாக ஆகுவேனாக என்று சங்கல்பம் செய்ததால் ஏற்பட்ட உலகம்தான் நாம் கண்விழித்து காணும் சொப்பனம்.

எதிலிருந்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாதவண்ணம் சுவையான தின்பண்டத்தை சமைத்த கைதேர்ந்த சமையற்காரரை போல பரமனிடமிருந்து உருவாக்கப்பட்டது என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாமல் இனிமையான இவ்வுலகை இறைவன் சமைத்துள்ளான். கேசரியை உப்புமா என்று நினைத்து அதனுடன் தயிரையும் ஊறுகாயையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு நன்றாகவில்லை என்று சமையற்காரரை குறைகூறுவது தவறு. பரமன்தான் உலகமாக தென்படுகிறான் என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைத்தையும் சரியான பார்வையில் பார்க்க முடியும். இன்பமாயிருக்க இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்று ஆசைப்பட அவசியமில்லாமல் எது கிடைத்தோ அதில் ஆனந்தத்தை அனுபவிக்கமுடியும்.

இந்த அறிவை அடைந்தவர்கள் உலகம் ஒரு மாயை என்பதை புரிந்து கொண்டு தன் இயல்பான ஆனந்தத்தை அனுபவிப்பதற்காக தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகம் ஆனந்தமயமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அடுத்த படியில் அறிந்து கொள்ள தயாராகிறார்கள்.

ஐந்தாம் படி: உலகம் ஆனந்தமயமானது

படைப்பு என்பது வேறுபாடு. அனைத்தும் ஒன்றுபோல இருந்தால் அதில் ஒரு சுவாரசியம் இருக்காது. ஒன்றான பரமன் வேறுபட்ட பல உருவங்களாக காட்சியளிப்பதுதான் உலகம். உடலின் உறுப்புகளில் காணப்படும் ஒருசில வேறுபாடுகள்தான் ஆண்-பெண் என்ற இருபாலரை உருவாக்குகின்றன. மேடு-பள்ளம், உயர்வு-தாழ்வு என்று இதுபோல் வேறுபட்டு இருப்பதுதான் உலகம் என்று இந்த கடைசிபடியில் உணர்ந்தபின் துன்பக்கலப்பில்லாத இன்பத்தை அனுபவிக்கலாம். மாற்றங்கள் இல்லாமல் இருப்பது பரமன் மட்டுமே. எனவே கோடையோ குளிரோ ஏற்படும் மாற்றங்களை ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்டு எப்பொழுதும் இன்பமாக வாழ்பவர்கள் முற்றுணர்ந்தோர்.

பொய்யை உண்மையாக்க கூறப்படும் கதை

உண்மை பரமன் மட்டும்தான். இந்த பிரபஞ்சம் இருப்பதுபோல் தோன்றும் மாயை. பிரபஞ்சம் உருவான பொழுது அதனுடன் உருவாக்கப்பட்ட வேதம் அது இயங்கும் விதத்தை எவ்வித முரண்பாடும் இல்லாத தத்துவங்ளை கொடுத்து விளக்குகிறது.

முதலாம் விளக்கம்: பதிவுகள்

நாம் தொடர்ந்து செய்யும் செயல்கள் நம் மனதில் விருப்பு வெறுப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த விருப்பு வெறுப்புகள் மட்டுமே ஆசைகள் தோன்ற காரணமாகும். நமக்கு எந்த பொருளின் மேல் ஆசை ஏற்படுகிறது என்பதை பொருள்கள் தீர்மானிப்பதில்லை. நமது புலன்கள் எந்தெந்த பொருள்களை அனுபவித்து பழகியிருக்கின்றனவோ அவற்றின் மீது ஆசைகள் ஏற்படுகின்றன.

பொருள்களில் ஆனந்தம் இல்லையென்று அறிந்தவுடன் மனதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பட்டியல் அழிக்கப்பட்டுவிடாது. விரும்பி சாப்பிடுவது சப்பாத்தியா சாதமா என்பது வடஇந்தியரா தென்னிந்தியரா என்பதை பொறுத்து தொடர்ந்து மாறுபடும். நான் பரமன் என்ற ஞானம் உறுதியான பின் கூட தயிர் சாதம் வேண்டும் என்று ஆசைபடுவது இயற்கை.

இரண்டாம் விளக்கம்: மறுபிறப்பு

விருப்பு வெறுப்புகள் பிறவிகள்தோறும் நம்முடன் தொடர்ந்து வருபவை. மேலும் நம் நிறைவேறாத தீவிர ஆசைகள் மறுபிறவியில் நாம் செய்யும் செயல்களை தீர்மானிக்கின்றன. அவற்றில் சில ஞானிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு  வலிவு பெற்றிருக்கலாம்.

கடற்கரையில் மணல் வீடு கட்டும் சிறுவர்களிடம் ‘போதும், வீடு திரும்ப நேரமாகிவிட்டது’ என்று கூறினால் அவர்கள் நம் பேச்சை கேட்பார்களா மாட்டார்களா என்பது எவ்வளவு தூரம் மணல்வீடு கட்டப்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. அப்பொழுதுதான் கட்ட ஆரம்பித்திருந்தால் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் வந்து விடுவார்கள். ஆனால் அது கட்டிமுடிக்கப்படும் தருவாயில் இருந்தால் இன்னும் ஒரு நிமிடத்தில் வருகிறோம் என்று பதிலளித்துவிட்டு அரைமணிநேரம் செலவளித்து தொடங்கிய வேலையை முடித்துவிட்டுத்தான் அவர்கள் வீடுதிரும்புவார்கள்.

இந்த அனுபவம் நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். ஆரம்ப கட்டத்தில் வேலையில் இருக்கும் பிடிப்பு தொடர்ந்து அதிகமாகி இறுதியில் அதை செய்து முடிக்க வேண்டுமென்ற தீவிர ஆசை உண்டாகும். இந்த ஆசைகள் பிறவிகள்தோறும் தொடரும். சாதாரணமாக நமக்கு தெரியாத பொருள்களின் மீது ஆசை ஏற்படாது. ஆனால் சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசைகளும் செய்து முடிக்காத வேலைகள் மீதுள்ள பற்றும் இந்தப்பிறவியில் நம் ஆசைகளை தீர்மானிக்கும். நம்மையறியாமலேயே ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிக்க ஆரம்பிப்போம். ஆதி சங்கரருக்கு சிறுவயதில் சன்யாசம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதற்கும் புத்தர் தன் குடும்பத்தை துறந்து காட்டுக்கு சென்றதற்கும் இது போல் பிறவிகள்தோறும் தொடரும் ஆசைகளே காரணம். ஞானம் ஏற்பட்டபின்னும் ஞானிகளின் செயல்பாடுகள் இதுபோன்ற ஆசைகளின் அடிப்படையிலேயே அமையும். பகவான் ரமண மஹரிஷி திருவண்ணாமலையின் எல்லைக்குளேயே தன் வாழ்நாழ் முழுவதையும் கழித்தார். ஆனால் விவேகானந்தர் உலகை வலம் வந்து மக்களின் அறிவுக்கண்களை திறந்தார். இதுபோல் ஞானிகளின் செயல்களும் அவர்களது ஆசைகளின் அடிப்படையிலேயே அமையும்.

மூன்றாம் விளக்கம்: ஒளி-சக்தி-ஜடத்தனிமங்கள்

அறிவு என்பது மனதில் தோன்றும் எண்ணங்கள். மனம் என்பது ஒளி, சக்தி மற்றும் ஜடம் என்ற கலவையினால் செய்யப்பட்டு அதன் தன்மை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால் மாலையில் அழகாகத்தோன்றும் புகைப்படம் காலையில் அசிங்கமாகத்தெரிய வாய்ப்புள்ளது. மனதின் இந்த மாற்றத்தை புரிந்து கொண்டால் மனதால் அறியப்படும் பொருளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவேண்டியதில்லை. சாக்கடையில் உள்ள அழுக்கு சூரியனை கறைபடுத்தாது. மனதின் மாற்றங்கள் பரமனின் இன்பத்தை மாசுபடுத்தாது. எனவே மாறாத இன்பம்தான் தன் இயல்பு என்று அறிந்துகொண்டபின் உலகின் மாற்றங்களும் மனதின் மாற்றங்களும் ஆனந்தத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்துவதில்லை. இதை அறியாதவர்கள் தண்ணீரில் தெரியும் தன்னுடைய பிம்பத்தை வேறொரு மிருகம் என்று நினைத்து கிணத்துக்குள் குதித்த சிங்கம் போல உலகப்பொருள்களில் தென்படுவது தன்னுடைய இயல்பான ஆனந்தம் என்று அறியாமல் அவற்றின் மீது ஆசைபட்டு அவற்றை நாடி ஓடுவர். கண்ணாடியில் தோன்றும் அழகான முகம் தன் கழுத்தில் மேல் உள்ளது என்று உணர்ந்தவர்கள் கண்ணாடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  

நான்காம் விளக்கம்: கர்மவினைகள்

வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் ப்ராரப்தத்தின் அடிப்படையிலேயே நடக்கும். இந்த விதி ஞானிகளுக்கும் பொருந்தும். ஞானி மற்றவர்களைப்போல் துன்பம் வரும்போது துவளாமலும் இன்பம் வரும்போது துள்ளாமலும் இருப்பார்.

அரசனின் பல்லக்கு தூக்குபவர்களில் ஒருவன் சோர்ந்து விழுந்துவிட்டால் வழியில் போகும் குடிமகன் ஒருவன் அந்த வேலைக்கு அமர்த்தப்படுவான். அவனுக்கு கூலி கிடைக்காது என்று தெரிந்தாலும் போனால் போகிறது என்று அந்த வேலையை செய்வது போல ஞானி தன் உடல் உழைப்பினால் எவ்வித பலனும் கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட தன் வழியே வந்த வேலைகளை செய்து முடிப்பான். செய்த வேலைக்கு பலன் கிடைத்தால் அதை அனுபவிப்பான். கிடைக்காவிட்டால் அதை ஒரு குறையாக நினைக்க மாட்டான்.

‘என் தலைவிதி’, என்று நொந்துகொள்வதற்காக வேதம் விதியைப்பற்றி விளக்க முற்படவில்லை. விதி என்பதை புரிந்துகொண்டால் ஏன் இப்படி நிகழ்கிறது என்று எவ்வித கேள்விகளும் கேட்காமல் அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு ஏற்படும்.


ஐந்தாம் விளக்கம்: சம்சாரமும் முக்தியும்

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் பரமனின் வெளிப்பாடுகள். ஆனால் இதை அறியாமல் உலகில் இன்பத்தை தேடி அதனால் பொருள்கள் மேல் பற்றுகொண்டு பந்தப்பட்டிருப்பார்கள். இந்த பந்தம்தான் அவர்களது துன்பத்திற்கு காரணம் என்ற அறிவு ஏற்படும்பொழுதுதான் இவர்களுக்கு முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கும்.

மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் இந்தியா அடிமைபட்டுள்ளது என்ற உண்மையை உணரவேண்டியிருந்தது. பிரிட்டீஷ் ஆட்சி நல்லது என்று நினைப்பது தவறு என்று புரிந்தபின்தான் விடுதலை போராட்டம் தொடங்கியது. அது போல பொருள்களினால் ஏற்படும் பந்தத்திலிருந்து விடுபட முதல் படியாக பொருள்களில் இன்பம் இல்லை என்றும் அவை நம்மை பந்தப்படுத்துகின்றன என்றும் உணர வேண்டும். அதன் பின் தான் ஆனந்தத்தின் இருப்பிடம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி முக்தியடையும் வாய்ப்பு ஏற்படும்.

ஆறாம் விளக்கம்: கடவுள்

கண்ணுக்குத்தெரியும் உலகை இல்லை என்று மறுப்பதற்கு கண்ணுக்குத்தெரியாத கடவுளை வேதம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. உலகில் இன்பத்தைத்தேடி அலுத்துபோனபின் கடவுளின் சாம்ராஜ்யத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் மனிதன் மதங்கள் கூறும் சடங்குகளை பின்பற்றி கடவுளை திருப்தி செய்ய முயற்சிக்கிறான்.

அதர்மத்தை முழுவதும் தவிர்த்து தர்மமான முறையில் வாழ்ந்தால்தான் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் என்ற போதனையை பின்பற்றி வாழத்தொடங்கும் மனிதன் படிப்படியாக முன்னேறி கடவுள் யார் என்பதை அறிந்து கொண்டு ஞானியாகிறான்.

அதன் பின் உலக நன்மையை கருதி இறைவனின் எழுதுகோலாக செயல்பட ஆரம்பித்து விடுவதால் செயல்களை செய்ய அவனை தூண்டும் எண்ணங்களை ஆசை என்ற பெயரில் அழைக்க முடியாது. என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன அவை எப்படி செயலாக மாறுகின்றன என்ற அனைத்தும் ஆண்டவனின் திருவிளையாடல் என்பது ஞானிக்குத்தெரிந்திருப்பதால் செயல்களின் விளைவு எப்படியிருக்கும் என்ற கவலையின்றி தொடந்து இன்பமாக செயலாற்றுவான்.

முடிவுரை :

பக்கத்து ஊருக்கு நடந்து செல்ல கால்கள் மட்டும் போதும். சாலையின் ஓரத்தில் ஊன்றப்பட்டிருக்கும் மைல் கற்கள் நம் பயணத்திற்கு நேரடியாக உதவுவதில்லை. அவை இல்லாவிட்டாலும் ஊர் போய் சேர்ந்துவிடலாம். ஆயினும் ஆறு மைல்கள் நடந்து விட்டோம், இன்னும் இரண்டு மைல்கள் நடந்தால் ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று மனதிற்கு ஒரு ஊக்கம் கொடுக்க மைல் கற்கள் உதவுகின்றன.

கடவுள், மறுபிறவி, பாவபுண்ணியங்கள், பதிவுகள் போன்ற விளக்கங்கள் இல்லாவிட்டாலும் பிறப்பிலிருந்து இறப்புவரையான வாழ்க்கைப்பயணம் எவ்வித தடையுமில்லாமல் தொடர்ந்து நடந்துவிடும். ஆனால் துன்பம் கலந்த இன்பத்துடன் வாழாமல் குறையாத இன்பத்துடனும், நிரந்தர அமைதியுடனும், தடையில்லாத பாதுகாப்புடனும் வாழும் வாய்ப்பு வேதம் கூறும் இந்த விளக்கங்களை சரியாக படித்து புரிந்துகொண்டு முக்தியடைந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

பயிற்சிக்காக :

1. கல்வியின் விளைவு என்ன?

2. வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியின் ஐந்து படிகள் யாவை?

3. வாழ்வின் நிகழ்வுகளுக்கு வேதம் கூறும் ஆறு விளக்கங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. கடவுள் இருக்கின்றானா?

2. மறுபிறவி உண்மையா?

3. வேதம் பொய் சொல்லாது என்பதை விளக்கவும்.

Tuesday, February 23, 2010

Lesson 95: Same happiness returns ( பிரம்ம சூத்திரம் 3.2.9 )

பாடம் 95: விழித்த பின்னும் அதே ஆனந்தம்
பாடல் 327 (III.2.9)

ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவித்த அதே ஆனந்தம்தான் விழித்த பின்னும் தொடருகிறது என்றும் அந்த ஆனந்தம் எப்பொழுதும் குறையாத வண்ணம் வாழ்வை அனுபவிக்க நாம் அகங்காரத்தின் செயல்பாட்டையும் ஆசையின் தன்மையையும் அறிந்து கொண்டு பந்தபடுத்தாத ஆசைகளை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த பாடம் நமக்கு சொல்லித்தருகிறது.

உறங்கும் பொழுதுநான்

விழித்திருக்கும் சமயங்களில் மனதில் தோன்றும் நான், எனது மற்றும் என்னுடையது என்னும் எண்ணங்களின் தொகுப்பு அகங்காரம் எனப்படும். விஞ்ஞான மயகோசம் அதன் பொதுவான இருப்பிடம். நாம் படுக்கைக்கு சென்ற சிறிது நேரத்தில் விஞ்ஞானமயகோசம் அகலும்பொழுது அது மனோன்மய கோசத்திற்கு குடிபோய் அங்கிருந்து கனவுகளை அனுபவிக்கிறது. மனமும் ஓய்வெடுக்க ஆரம்பித்தவுடன் அகங்காரம் இருக்க இடம் இல்லாமல் மறைந்து போகிறது. எனவேதான் நாம் தூங்க ஆரம்பிக்கும் நேரங்களில் யாரேனும் நம் பெயர் சொல்லி கூப்பிடுவது தெரிந்தாலும் ஏன் என்று பதில் குரல் கொடுக்க முடிவதில்லை. அதேபோல் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நம்மை யாரேனும் திடீரென்று விழிக்க வைத்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம் அல்லது என்ன பேசுகிறோம் என்பது நமக்கே தெரியாது. ஏனெனில் அந்த சமயங்களில் நான் எனும் அகங்காரம் முழுதாக உருவாவதில்லை.

என் இன்பத்திற்கு நான்தான் தடை

ஆழ்ந்த உறக்கத்தில் எப்பொழுதும் இருக்கும் ஆனந்தம் அகங்காரம் உருவானதும் எப்பொழுதோ ஒருமுறைதான் வருகைதருகிறது.

அகங்காரம் இல்லாத ஒரு வயது குழந்தை எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கிறது. மேலும் எப்பொழுதெல்லாம் தன்னை மறந்து நாம் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் இன்பமாயிருக்கிறோம்.

எனவே குறையாத இன்பம் நம்மிடம் எந்நாளும் நிலையாக இருக்க தடையாய் இருப்பது அகங்காரம்தான் என்ற உண்மை தெளிவாகிறது.

அகங்காரத்தை ஒழிப்பது எப்படி?

நெருப்பு நல்லதா கெட்டதா? ஊரை கொளுத்தினால் அது கெட்டது. உணவை சமைக்க உதவினால் அது நல்லது. அதுபோல அகங்காரம் நம் ஆனந்தத்திற்கு தடை என்று அதை முழுதும் அழித்துவிட்டால் அன்றாட வாழ்வின் அத்தியாவசிய செயல்களை கூட நம்மால் செய்ய முடியாது. எனவே அகங்காரத்தின் எந்த செயல் ஆனந்தத்திற்கு தடையாக இருக்கிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதை மட்டும் மாற்ற வேண்டும்.

இது என் அலுவலகம்’. ‘இது நான் வீடு திரும்பும் வழி’. இது போன்று அகங்காரத்தின் அடிப்படையில் அமைந்த எண்ணங்கள் தினசரி வாழ்விற்கு மிக அவசியம். மேலும் இவற்றால் நம் ஆனந்தத்திற்கு எவ்வித தடையும் இல்லை.

இது நன்றாக இருக்கிறதுஎன்ற எண்ணத்தை இது எனக்கு வேண்டும்என்ற ஆசையாக மாற்றுவதும் அகங்காரத்தின் செயல். ஆசைகளை உருவாக்கும் அகங்காரத்தின் இந்த ஒரு செயல்தான் நம் இன்பத்திற்கு தடையாய் இருப்பது. எனவே அழிக்க வேண்டியது அகங்காரத்தை அல்ல. அது ஆசையை உருவாக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை செய்வதன் மூலம் நாம் நம் இயல்பான ஆனந்தத்தை எப்பொழுதும் அனுபவிக்கலாம். அகங்காரத்தை அழிக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே அடுத்த கட்டமாக ஆசைகளை ஆராயவேண்டும்.

ஆசைகள் உருவாக காரணம் என்ன?

ஆனந்தம் நம்முடைய இயல்பான சொரூபம் என்பதை அறியாமல் உலகத்தில் உள்ள பொருள்கள்தான் நமக்கு இன்பத்தை தருகின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஆசைகள் ஏற்படுகின்றன.

நம்முடைய தற்போதைய நிறைவேறாத ஆசை ஒன்றை எடுத்து ஆராய்ந்தால் உலகம் எவ்வித இன்பத்தையும் தருவதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்தை முதல் காட்சியில் நாம் பார்க்கவிரும்புவதாக வைத்துக்கொள்வோம். திரைப்படத்தை முதல் காட்சியில் பார்ப்பது இன்பம் அளிக்கும் அனுபவம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதுதான் இந்த ஆசைக்கு காரணம்எவ்வளவோ முயன்றும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் இருக்கும்பொழுது நம் நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு டிக்கெட் அதிகமாக இருக்கிறது, நீ என்னுடன் வருகிறாயாஎன்று கேட்டால் நமக்கு ஏற்படும் இன்பத்திற்கு அளவே இல்லை. திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதற்குள் எப்படி நமக்கு இன்பம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தோமானால்  ‘டிக்கெட் கிடைக்கவில்லை, கிடைத்தால் நன்றாக இருக்கும், ப்ளாக்கில் டிக்கெட் வாங்குவது எப்படிஎன்பது போன்ற எண்ணங்கள் நமது மனதை ஆக்ரமித்திருந்ததால் மனம் நம் இயற்கையான ஆனந்தத்தை பிரதிபலிக்காமல் நம்மை சோகத்தினுள் ஆழ்த்தியிருந்தது என்றும் டிக்கெட் தருகிறேன்என்று நண்பர் சொன்னதும் கவலை தந்துகொண்டிருந்த அனைத்து எண்ணங்களும் ஒரு நொடியில் நம் மனதிலிருந்து மறைந்து விட இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க துவங்கிவிட்டோம் என்றும் நமக்கு தெரியவரும்.

இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் திரைப்படத்தை பார்ப்பதுதான் நமக்கு இன்பத்தை தரும் என்று நாம் தவறாக நினைத்துகொண்டிருந்தோம். எனவே ஆசைகள் உருவாவதற்கு காரணம் அறியாமை மட்டுமே.

சரியான மாற்றம்

உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. இதில் நிலையானவை என்று எதுவுமில்லை. இந்த நிலையில்லாத உலகை நிலையானது என்று ஒருநாளும் நம் புலன்கள் நம்மிடம் சொல்வதில்லை. ‘இது ஒரு மலர்என்று பொருளின் தற்போதைய நிலையை மட்டும்தான் கண் நமக்கு தெரிவிக்கும். சற்று முன் வரை அது ஒரு மொட்டாக இருந்தது என்பதையோ இன்னும் சில நொடிகளில் அது கசக்கப்பட்டு குப்பையாக மாறிவிடும் என்பதையோ புரிந்து கொள்ளவேண்டிய வேலை நமது புத்தியை சேர்ந்தது.

இந்த இடத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் தவறு செய்து தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகமாக்கிகொண்டிருக்கிறார்கள். ஒன்று, மாறுவதை புரிந்து கொள்வதில்லை. அல்லது, மாறுவது தங்களின் விருப்பபடிதான் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு எப்பொழுதும் நிறைவேறுவதில்லை. ஒவ்வொரு நாள் முடிவடையும் பொழுதும் நம் வயது ஒரு நாள் அதிகரிக்கிறது என்று தெரிந்தாலும் என்றும் இளமையுடன் இருக்கும் ஆசை நம்மை விட்டுபோவதில்லை. இது இவ்வாறு இல்லாமல் வேறு மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பந்தபடுத்தும் ஆசையாக மாறி நம்மை நம் இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க தடையாய் உள்ளது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். எதுவும் வேறுமாதிரி இருக்க வேண்டிய அவசியமேயில்லை. நமக்கு பிடித்தபடி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் முயற்சி எடுக்கலாமே தவிர முடிவு செய்யும் அதிகாரம் கடவுளிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் துன்பபடாமல் என்றும் இன்பமாக இருக்கலாம்.


முடிவுரை :

ஆழ்ந்த உறக்கத்தில் இந்த உலகத்துடன் எவ்வகையிலும் உறவு கொள்ளாமலேயே நாம் இன்பமாக இருக்க முடிவதால் விழித்தெழுந்த பின்னும் உலகத்துடன் பல விவகாரங்களில் ஈடுபடும் காலங்களில் கூட நம்மால் அதே இன்பத்தை தொடர்ந்து வாழ முடியவேண்டும். ஆனால் வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது என்று நம் அனுபவம் சொல்கிறது. இதற்கு காரணம் நம்மை பந்தபடுத்தும் ஆசைகள்தான்.

பின்வரும் செயல்களை செய்வதன் மூலம் நாம் என்றும் குறைவில்லாத இன்பத்துடன் வாழலாம்.

1. ஆனந்தம் நமது இயல்பான நிலை, வந்து போகும் உணர்ச்சி அல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

2. மனிதர்கள், மற்ற உயிரினங்கள், பொருள்கள், நிகழ்வுகள் ஆகிய எவற்றிற்கும் நமக்கு இன்பம் தரும் சக்தியில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

3. மேற்கூறப்பட்ட இரு தகவல்களை நமது அறிவாக மாற்றிக்கொள்ள வேதாந்தத்தை முறையாக படித்த ஆசிரியர் ஒருவரிடம் சரணடைந்து உபநிஷதங்களையும் கீதையையும் முறையாக படிக்கவேண்டும்.

4. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படுவதில் தவறில்லை. ஆனால் பணத்துக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின் பணம் சம்பாதிக்க தேவையான செயல்களில் ஈடுபடவேண்டும்.

5. உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும். வாழ்வின் நிகழ்வுகளை நம் விருப்பபடி மாற்ற நம்மாலான அனைத்து முயற்சிகளையும் தர்மமான முறையில் செய்வதில் தவறில்லை.       

6. முயற்சி செய்வது மட்டும்தான் நம் கையில் இருக்கிறதே தவிர பலன் கொடுப்பது இறைவனின் வேலை என்பதை உணர்ந்து நாம் செய்யும் அனைத்து செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து பலன் கிடைக்கும்பொழுது அதை கடவுளின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. ஒரு செயலை செய்யும் பொழுது முழுமனதின் ஈடுபாட்டுடன் தன்னை மறந்து ஆனந்தமாக வேலை செய்ய வேண்டும். நான் விரும்பிய வகையில் பலன் கிடைத்த பின்தான் மகிழ்ச்சி, அதுவரை உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்பது தவறு. இன்பமாக வேலை செய்ய முடிந்தால் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வேலையை செய்வதால் எவ்வித பலனும் இருக்காது.

8. ஆசை நம் செயல்களுக்கு ஆதாரம். ஆசையில்லாமல் எவ்வித வேலையையும் நாம்மால் செய்ய முடியாது. ஆனால் ஆசைக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம். பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம், குடும்ப வாழ்வில் செழிப்பு, உறுதியான உறவுமுறைகள் ஆகியவை வேண்டும் என்ற ஆசையுடன் நாம் செயலில் ஈடுபடலாம். இது போன்ற ஆசைகள் நிறைவேறுவதால் சுகமான வாழ்வும் நல்ல நண்பர்களும் கிடைக்குமே தவிர ஆனந்தம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறு.    

9. ஆசை நிறைவேறினால்தான் மகிழ்ச்சி என்ற அறியாமைதான் ஆசை துன்பத்திற்கு காரணம் என்ற தவறான செய்திக்கு அடிப்படை காரணம். ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் என்னுடைய இயல்பான ஆனந்தம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்ற அறிவு ஏற்பட்டுவிட்டால் நம் அனைத்து ஆசைகளும் பந்தபடுத்தாத ஆசைகளாக மாறும். இது போன்ற ஆசைகளால் நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாறாக இவை நமக்கும் நம்மை சுற்றியிருப்போருக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.

பயிற்சிக்காக :

1. அகங்காரத்தின் இருப்பிடம் எவை?

2. அகங்காரத்திற்கும் ஆசைக்கும் என்ன உறவு?

3. ஆசை எப்படி ஆனந்தத்திற்கு தடையாய் உள்ளது?

4. உலகப்பொருள்களில் இன்பம் இல்லை என்பதை உதாரணம் கொடுத்து விளக்கவும்?

5. ஆசைகள் உருவாவதற்கு காரணம் என்ன?

6. எப்பொழுதும் ஆனந்தமாயிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. நல்லவிதமான எதிர்பார்த்தல் (positive thinking) நல்ல விளைவுகளை ஏற்படுத்தாதா ?

2. ஆனந்தம் உலகில் இல்லை என்றால் இந்த படைப்பின் அவசியமென்ன?

3. எல்லோரும் எப்பொழுதும் ஆனந்தமாக இருந்தால் இவ்வுலகில் சண்டை, சச்சரவு, பொறாமை, போட்டி ஆகிய எதுவும் இருக்காதா?