Thursday, August 23, 2012

Lesson 174: The Pranas of knower of Nirguna Brahman merges with it on death (Brahma Sutram 4.2.15)


பாடம் 174: உபாசகனின் பிராணன் கடவுளுடன் கலந்து விடும்
பாடல் 511 (IV.2.15)

பரமனை அறிந்ததால் ஞானிக்கும் கடவுளிடம் சரணடைந்ததால் உபாசகனுக்கும் கிடைக்கும் பலன்களை ஆராய்ந்து ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்ற உண்மையை இந்தப் பாடம் வலியுருத்துகிறது.

கனவில் காணும் மரம் கனவு முடிந்ததும் கனவுலக பூமிக்குள் ஒடுங்கிவிடும் என நினைப்பவன் இன்னும் விழிக்கவில்லை. அதுபோல மரணத்திற்குப்பின் தனது பிராணன் கடவுளுடன் கலந்துவிடும் என்று நம்பும் உபாசகன் மாயையின் பிடியிலிருந்து இன்னும் விடுபடவில்ல. கனவுலகமே பொய்யென்று அறிந்தவன் கனவில் காணும் மரம் என்னவாகும் என்று ஆராயமாட்டான். ஞானம் பெற்றவுடன் மரணத்தை வென்றுவிடும் காரணத்தால் மரணத்திற்குப்பின் பிராணனது நிலை பற்றிய கேள்விகள் அவன் மனதில் எழுவதில்லை.  

பிரஸ்ன உபநிடத்தின் மந்திரம் ஒன்று (6.5)அனைத்து நதிகளும் கடலை நோக்கி ஒடி முடிவில் அதனுடன் கலந்தபின் தங்களது தனித்தனியான பெயர்களையும் வடிவங்களையும் இழந்துகடல்என்ற ஒரே பெயரால் வழங்கப்படுவது போல தனிமனிதர்களும் ஆத்மாவை தேடி ஓடி அதில் கலந்தபின் தங்கள் தனித்தன்மையை இழந்து பகுதிகளும் மரணமும் இல்லாத பரமன் என்ற நிலையை அடைகிறார்கள்என்ற கருத்தை கூறுகிறது. இந்த நிலையை ஞானம் பெற்றவுடன் அடைய முடியும் என்று உணராத  உபாசகர்கள் மரணம் வரை முக்திவிழைபவர்களாகவே வாழ்வர்.

கடவுள் தன்னிலிருந்து வேறுபட்டவன் என்று நம்புபவர்களால் மட்டுமே கடவுளை உபாசிக்க முடியும். தான் வேறு கடவுள் வேறு அல்ல என்று அறிந்தவர்கள் கடவுள் பக்தி அவசியமில்லை’ என்று மற்றவர்கள் முடிவுசெய்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே உபாசனை செய்வார்கள். கோவிலுக்கு செல்வது, பிரார்த்திப்பது போன்ற ஒரு சில செயல்களை மட்டும் உபாசனை என்று கருதாமல் தான் செய்யும் அனைத்து செயல்களையும் கடவுளின் செயலாக செய்பவன் முற்றுணர்ந்தோன்.

பற்றுடையோர் தாங்கள் செய்யும் செயல்களின் பலன் சாதகமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடவுளை பிரார்த்திப்பர். பலன் பாதகமாக இருந்தாலும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டுமென்று முக்திவிழைவோர் பிரார்த்திப்பர். தன்னை செயலில் ஈடுபடுத்துவதும் பலனை அனுபவிக்கச்செய்வதும் கடவுள்தான் என்று நம்பும் உபாசகர்கள் எவ்வித குறிப்பிட்ட கோரிக்கையையும் கடவுள் முன் வைப்பதில்லை. அதேபோல் கடவுளிடமிருந்து தான் வேறுபட்டவனல்ல என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களும் எதையும் வேண்டி பிரார்த்திப்பதில்லை.

அதிகமாக பணம் சம்பாதிப்பதன் மூலம் வாழ்வில் துன்பத்தை பெருமளவில் தவிர்த்துவிடலாம் என்று முயல்பவர்கள் பற்றுடையோர். துன்பத்தை தவிர்க்க  பரமனை அடையவேண்டும் என்று முயற்சிசெய்பவர்கள் முக்திவிழைவோர்கள். உலகவாழ்வில் துன்பத்தை தவிர்க்கவே முடியாது என்ற உண்மையை உணர்ந்த உபாசகர்கள் மரணத்திற்குப்பின் பரவுலகில் துன்பம் கலவா இன்பம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் இவ்வாழ்வை கழிப்பர். வாழ்வின் தவிர்க்கமுடியாத ஏற்ற இறக்கங்களை இன்பம்-துன்பம் என பாகுபாடுசெய்வது அறியாமை என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர் மட்டுமே துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வர்.

இன்பம் உலகில் இருக்கிறது என்று அதை தேடி அலைபவன் பற்றுடையோன். இறைவனிடம் இன்பத்தை தேடுபவன் முக்திவிழைவோன். இறைவனின் உண்மை உருவத்தை அறிந்தவன் முற்றுணர்ந்தோன். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று உறுதியாக நம்பிஎனக்கென்ன மனக்கவலை, எந்தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலைஎன்று துயரங்கள் அனைத்தையும் இஷ்டதெய்வத்தின் மேல் ஏற்றி வைத்துவிட்டு உபாசகர்களும் நிம்மதியாக வாழ்வர்துன்பங்கள் தொடர்ந்து நீடித்தால் அதுவும் கடவுளின் சித்தம் என்று மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். இதுபோல் உபாசகர்களின் மனநிலை சற்றேறக்குறைய முற்றுணர்ந்தோர்களின் மன நிம்மதியை ஒத்துஇருப்பதுபோல் தோன்றினாலும் நம்பிக்கைக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாடு உபாசகர்களை முக்தி அடையவிடுவதில்லை.


கடவுள் நம்பிக்கையும் கடவுளை அறிதலும்

கடவுளை படைத்தவன் மனிதனல்ல. துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ்வது எப்படி என்று மனிதனுக்கு கற்றுத்தர முதல்படியாக வேதம் கடவுளை மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. வேதம் காட்டும் வழியை பின்பற்றுபவர்களில் யாருக்கு கூரிய அறிவுடன் முக்திவேண்டும் என்ற தீவிர ஆசையும் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே முக்தியடைகிறார்கள். மற்றவர்கள் உபாசகர்களாகவே இருப்பார்கள்.

பணம் பதவி போன்றவற்றைத்தேடி உலகத்தில் உழைப்பதால் துன்பத்தை தவிர்க்க முடியாது என்றும் நீடித்த இன்பத்தை தரவல்லவர் கடவுள் மட்டுமே என்றும் வேதம் மனிதனுக்கு முதலில் சொல்லித்தருகிறது. கடவுள் இருக்கிறார் என்ற வேதத்தின் வார்த்தையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு கடவுளை உபாசனை செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கடவுள் யார் என்பதை வேதம் காட்டும் பாதையில் தொடர்ந்து பயணித்து ஆராய்ந்து அறிய கூரிய அறிவு தேவை. மேலும் கடவுளை பற்றிய முழுமையான அறிவு பெற்று உடனே முக்தியடைய வேண்டும் என்ற தீவிர ஆசை உள்ளவர்களுக்கு மட்டுமே கடவுள் நம்பிக்கையை அறிவாக மாற்றிக்கொள்ளும் திறன் இருக்கும். நீரில் மூழ்கி மூச்சு திணறுபவன் மேலே வரவேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு துன்பக்கடலில் மூழ்கி இருப்பவர்கள் இப்பொழுதே முக்திவேண்டும் என்று ஆசைபட்டால்தான் கடவுளை அறிய முடியும். அதைவிடுத்துபிறவா வரம் தாரும். மீண்டும் பிறந்தால் திருவடி  மறவா வரம் தாரும்என்று பாடிக்கொண்டிருந்தால் முக்தி கிடைக்காது. இறைவன் நேரடியாக காட்சியளிக்க வேண்டும் என்று உபாசனை செய்து ஏங்குபவர்கள் காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை காணத்தேவையான மூன்றாவது கண் என்னும் அறிவுக்கண்ணை பெற தவறிவிடுகிறார்கள்.  

நேரான குச்சி நீரில் வளைந்து இருப்பதுபோல் காணப்படும். குச்சி நேராகத்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க அதை நீரிலிருந்து வெளியே எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் ஆனந்தமே உருவான பரமன் நான் என்ற அறிவு  ஏற்பட்டால் உலகவாழ்வில் உழலும்பொழுதே முக்தியடையலாம்.


அறிவின் பயன்கள்

பூலோக சுவர்க்கம்: வாழும் நாட்கள் அனைத்தையும் ஆனந்தமாக அனுபவிக்க இறைவன் யார் என்ற அறிவு உதவும். உலக வாழ்க்கை துன்பமயமானது என்றும் இறைவனடி சேர்வதுதான் இன்பம் என்றும் நினைக்கும் உபாசகர்கள் இந்த இன்ப அனுபவங்களை தவறவிடுகிறார்கள்.

எதிர்பார்ப்பு இன்மை: உலகைத்தன் உருவாக கொண்டு காட்சியளிக்கும் இறைவனை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் உபாசிப்பவர்கள் மரணத்திற்குப்பின் தங்களுக்கு முக்திகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஏற்கனவே முக்தியடைந்துவிட்டதால் முற்றுணர்ந்தோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

அச்சம் இன்மை: கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை வீண் செய்யக்கூடாது என்பதற்கு தவறாக பொருள் செய்துகொண்டு வாழ்வில் பெரும்பகுதியை இறை உபாசனையில் செலவிடுபவர்கள் மனதில் தாங்கள் செய்வது சரிதானா என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். உபாசனை செய்யும் விதம் பற்றி வேதம் கூறும் சட்ட திட்டங்களை முறையாக கடைபிடிப்பதில் கவனத்துடன் இருந்தாலும் மற்றவர்கள் வேறுமாதிரி உபாசனை செய்வதை பார்க்கும்பொழுது மனம் சலனப்படும். இறக்கும் தருவாயில் கடவுளை நினைக்கவில்லையென்றால் முக்திகிடைக்காது என்பது போன்ற நிபந்தனைகள் உபாசனை செய்பவர்களை முழுநிம்மதியுடன் இருக்கவிடுவதில்லை.

முழுதிருப்தி: தொடக்கத்தில் இன்பத்தை உலகில் தேடி உழைத்ததற்கு ஈடாக தற்பொழுது இறை உபாசனையில் நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டிய அவசியம் உபாசகர்களுக்கு இருக்கும். இனி எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை என்ற மன திருப்தி ஞானிகளுக்கு மட்டுமே இருக்கும்.

நிம்மதி: இறைவனிடம் சரணடைந்தபின் உபாசகர்களுக்கு ஏற்படும் நிம்மதி பயணச்சீட்டு உறுதிசெய்யப்பட்டபின் ஏற்படும் நிம்மதியைப்போன்றது. ஞானிகளின் நிம்மதி பயணம் செய்து முடித்தபின் ஏற்படும் நிம்மதியைப் போன்றது.   

மரணமில்லா பெருவாழ்வு: மரணமடைந்தவுடன் முக்தி கிடைக்கும் என்ற நிலை இல்லாமல் நான் என்றுமிருக்கும் பரமன் என்று உணர்ந்தபின் இந்த உலகம் அழிந்தாலும் நான் அழியமாட்டேன் என்ற அறிவுடன் ஞானிகள் வாழ்வார்கள்.

விதிகளிடமிருந்து விடுதலை: உபாசகர்கள் வாழ்வு முழுவதும் நல்லது-கெட்டது, சரி-தவறு, தர்மம்-அதர்மம், ஒழுக்கம்-ஒழுக்கமின்மை, பொதுநலம்-சுயநலம் போன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். முற்றுணர்ந்தோர்களும் இவற்றை பின்பற்றுவார்கள் என்றாலும் இவர்களை எந்த விதிகளும் கட்டுப்படுத்த மாட்டா. காவலாட்கள் புடைசூழ செல்லும் கைதியை போன்றவன் உபாசகன். அதே காவலாட்கள் புடைசூழ செல்லும் ஜனாதிபதியை போன்றவன் முற்றுணர்ந்தோன்.

துறவு: உபாசகர்கள் பெரும்பாலும் உலக இன்பங்களை துறந்து இறைப்பணிக்கு தங்களை அர்பணித்து வாழ்நாளை கழிப்பர். ஆனால் உலகப்பொருட்கள் மீது இருக்கும் பற்றுதலை முழுவதும் துறந்துவிட்ட காரணத்தால் முற்றுணர்ந்தோர்கள் தொடர்ந்து வசதியான வீடு, குளிரூட்டப்பட்ட வாகனம், சொகுசு கப்பலில் உல்லாசப்பயணம் என உலக இன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

சுயக்கட்டுப்பாடு: புலன் இன்பங்களை கட்டுப்படுத்தி இறை உபாசனை செய்ய வேண்டிய கட்டாயம் முற்றுணர்ந்தோர்களுக்கு இல்லை என்பதால் தங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்களை செய்வார்கள். மேலும் கடவுளைப்பற்றிய எண்ணங்களை தொடர்ந்து மனதில் இருத்திக்கொள்ள வேண்டும் என்ற உபாசகர்களின் நிர்ப்பந்தம் ஞானிக்கு இல்லை.

மதச்சார்பின்மை: கடவுளை மறுக்கும் நாத்தீகர்கள், வேறுபட்ட கொள்கைகள் கொண்ட மற்ற மதத்தினர் மற்றும் அறிவியல் அறிஞர்கள் ஆகிய அனைவருடனும் ஒத்துப்போவது முற்றுணர்ந்த ஞானிகளால் மட்டுமே முடியும். உபாசகர்களால் மற்றவர்களது கொள்கைகளையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியாது.

முடிவுரை :

ஆசிரியரின் துணையுடன் ஒவ்வொருவரும் தன் சுயமுயற்சியால் மட்டுமே அறிவை பெறமுடியும். ‘நல்ல புத்தி கொடுஎன்று கடவுளை பிரார்த்திப்பதில் தவறு இல்லை. ஆனால் எதிர்பாராமல் பணம் கிடைப்பது போல் அறிவும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு தவறு. கடவுள் யார் என்ற கேள்விக்கு விடைகாண உபாசகர்கள் முறையாக வேதம் பயின்ற ஆசிரியரின் உதவியை நாட வேண்டும்.

கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ள மனப்பக்குவம் அவசியம். உபாசனை செய்வதன் மூலம் தேவையான மனப்பக்குவத்தை பெறலாம். மனப்பக்குவத்தை பெற்றதற்குப்பின்னும் தொடர்ந்து உபாசனை செய்வதில் பயன் இல்லை.

மனப்பக்குவம் என்பது இரண்டு நிலைகளில் ஏற்படும். பணம், பதவி, புகழ் போன்றவை நீடித்த இன்பத்தை தராது என்பதை அறிய சிலகாலம் இவற்றைத்தேடி உலகில் உழைத்ததும் முதல் நிலை மனப்பக்குவம் ஏற்படும். அதன்பின் உபாசனை செய்து கடவுள் யார் என்ற ஞானத்தை பெற்றால் மட்டுமே முக்தியடைய முடியும் என்ற உண்மையை அறியும்பொழுது இரண்டாம் நிலை மனப்பக்குவம் ஏற்படும்.

இந்த நிலையை அடைந்தபின் உபாசனை செய்வதை குறைத்துக்கொண்டு கடவுள் பற்றிய முழு அறிவை அடைய சரியான ஆசிரியரை சரணடைந்து அவரிடம் வேதத்தை முறையாக பயில்வதில் நேரத்தை செலவிடவேண்டும்.  

இப்பொழுதே முக்தி வேண்டும் என்ற தீவிர ஆசையும் கூரிய அறிவும் கொண்ட உபாசகர்கள் வெகு விரைவில் அறிவுக்கண்ணைப்பெற்று கடவுளை நேரடியாக காண்பார்கள்.  மற்றவர்கள் மரணத்திற்குப்பின் கடவுளுடன் கலந்துவிடும் நம்பிக்கையுடன் மரணம் வரை உபாசனையை தொடர்வார்கள். ஞானிகள் ஞானம் பெற்ற அன்றே கடவுளுடன் ஒன்றாகிவிடுவதால் அவர்களே உண்மையில் முக்தியடைந்தவர்கள்.

பயிற்சிக்காக :

1. ஞானிக்கும் உபாசகனுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன?

2. ஞானிக்கும் உபாசகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்னென்ன?

3. ஞானத்தால் ஏற்படும் பலன்களாக இங்கு கூறப்பட்ட கருத்துக்கள் யாவை?

4. ஞானம் பெறாமல் முக்தியடைய முடியாது என்பது உண்மையா?

5. ஞானம் பெற நமக்கு இருக்கும் ஒரேவழி யாது?

6. கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை எதற்காக பயன்படுத்தவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. ஒரு சில அறிவாளிகளும் சிந்தனையாளர்களும் உபாசகர்களாகவே கடைசிவரை வாழ்வது ஏன்?

2. உபாசகர்களின் நம்பிக்கை உண்மையாகவும் ஞானிகளின் அறிவு பொய்யாகவும் இருக்க வாய்ப்பு உண்டா?

3. ஞானிகளும் மரணகாலத்தில் உபாசகர்களாக மாறுவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?

4. உபாசகர்கள் முக்தியடைய முடியாதா?

Wednesday, August 15, 2012

Lesson 173: The Pranas of the knower of Brahman do not depart at the time of death (Brahmasutra 4.2.12-14)

பாடம் 173: ஞானியின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை
பாடல் 508-510 (IV.2.12-14)

எவன் ஆசைகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்றுவிடுகிறானோ அவனது பிராணன் பிரிவதில்லை என்ற பிரஹதாரண்ய மந்திரத்தின் (4.4.6) பொருளை ஞானியின் செயல்களின் அடிப்படையில் இந்தப் பாடம் ஆராய்கிறது.

ஞானியும் மரணமடைவான் என்றாலும் ஞானம் பெற்றவுடனேயே அவனது பிராணன் தனது தனித்தன்மையை இழந்து இறைவனது இயக்கத்துடன் ஒன்றிவிடுவதால் மரணத்தின்பொழுது அது பிரிவதில்லை. பிரஸ்ன உபநிடதத்தில் எல்லாம் எங்கிருந்து வந்தன?’ என்ற கபந்தியின் கேள்விக்கு பிப்பலாத முனிவர் கூறிய பதிலிலிருந்து பிராணன் பற்றிய பின்வரும் விளக்கங்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆகாயம் மற்றும் பிராணன் ஆகிய இரண்டிலிருந்தே பிரபஞ்சம் முழுவதும் தோற்றுவிக்கப்பட்டது. ஆகாயத்திலிருந்து காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய பஞ்சபூதங்களும் அவற்றிலிருந்து ஜடப்பொருள்களும் உருவாக்கப்பட்டன. அந்த கலவையில் பிராணன் சேர்ந்தவுடன் இயக்கம் பிறந்தது. புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி போன்றவையும் உயிரினங்களின் செயல்களுக்கும் பிராணனே ஆதாரம். ஆக பூமியின் சுழற்சி முதல் தனி மனித உடலின் இயக்கம், இரத்த ஓட்டம் மற்றும் எண்ணங்களின் ஓட்டம் வரை அனைத்தும் பிராணனின் வெவ்வேறு நிலைகள் என்று விவேகானந்தர் விளக்கம் அளிக்கிறார். [ஞானதீபம் (2.31-32)].

பிராணன் வெளியேறிவிட்டால் பிரபஞ்சத்தின் இயக்கம் நின்றுவிடும் என்ற உண்மையை ஒரு கதைவடிவில் பிப்பலாத முனிவர் பார்க்கவனின் இரண்டாவது கேள்விக்கு பதிலாக கூறினார். இத்தகைய புகழ்வாய்ந்த பிராணன் எவ்வாறு செயல்படுகிறது என்ற கௌசல்யனின் மூன்றாவது கேள்விக்கு மனிதனும் அவனது நிழலும் போன்று ஆன்மாவின் நிழலாக பிராணன் செயல்படுகிறது என்று பிப்பலாத முனிவர் பதிலளித்தார். எனவே தனி மனிதனின் செயல்கள் உட்பட்ட பிரபஞ்ச இயக்கம் முழுவதற்கும் பரமனின் நிழலான பிராணனே காரணம்

எப்படி ஒரு மன்னன் அலுவலர்களை நியமித்துஇந்த இந்த கிராமங்களை ஆளுங்கள்என்று கூறுகிறானோ அது போல மனம் மற்றும் ஐந்து இந்திரியங்கள் மூலம் பிராணன் உடலை இயக்குகிறது. ஞான சக்தி, இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி என்ற மூன்று சக்திகளின் வடிவில் பிராணன் மனிதனின் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அமைகிறது.

ஞான சக்தி வெளியுலகப்பொருள்களை பற்றிய அறிவை புலன்கள் மூலம் மனதில் ஏற்படுத்துகிறது. இச்சா சக்தி அறிந்த பொருள்களில் சிலவற்றில் ஆசைவைக்க தூண்டுகிறது. ஆசை பட்டதை அடைய கிரியா சக்தி இந்திரியங்கள் மூலம் உடலை இயக்குகிறது. அனைத்து எண்ணங்களும் பிராணனின் வெளிப்பாடு என்ற உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோர்களின் மனதில்நான் செயல் செய்கிறேன்என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. அனைத்து செயல்களுக்கும் ஆதாரமான பிராணன் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் ஒரு சிறுபகுதியாக தனது உடலையும் இயக்குகிறது என்ற அறிவு ஏற்பட்டதும் முக்திவிழைவோனின் இதயத்தில் இருந்த ஆசைகளின் முடிச்சு அவிழ்ந்து அவன் முக்தி பெறுகிறான்.    

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயலகங்கள், தூல வெளிப்பாடு ஆகியவற்றை உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்என்ற பிரஸ்ன உபநிடதத்தின் பன்னிரண்டாம் மந்திரம் கூறும் அதே கருத்தைஇருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரமபுருஷனை அறிந்துகொள்வதை தவிர மரணத்தை வெல்ல வேறு வழியே இல்லைஎன்று சுவேதாஸ்வதர உபநிடதத்தின் மந்திரமும் (3.8) கூறுகிறது. அகிலத்தை ஆட்டுவிக்கும் பிராணனே தன் செயல்கள் அனைத்திற்கும் ஆதாரம் என்பதை ஐயமின்றி அறிந்துகொண்ட அக்கணமே ஆசைகள் அகன்றுவிடுவதால் முற்றுணர்ந்தோர்கள் மரணமடையும்பொழுது அவர்களிடமிருந்து பிரிவதற்கு தனிப்பட்ட பிராணன் இருப்பதில்லை. எனவேதான் ஆசைகளிலிருந்து விடுதலை பெற்றவனின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை என்ற கருத்து கூறப்பட்டது.

செயல்களின் ஒப்பீடு

பரமனை அறிந்த ஞானிகளை மட்டுமின்றி அனைத்து மக்களையும் அழியாத அமரத்துவத்தின் புத்திரர்கள் என்று சுவேதாஸ்வதர மந்திரம் வர்ணிக்கின்றது (2.5). இந்த உண்மையை உணரும் வரை வெளிப்பார்வைக்கு ஒன்றுபோல் தெரிந்தாலும் மனிதர்களின் செயல்கள் பின்வரும் விதங்களில் வேறுபடும்.

செயல்களின் நோக்கம்: பணம், புகழ், பதவி என்பது போன்ற சுயநல ஆசைகளையும் வறுமை ஒழிப்பு, ஊழலை எதிர்த்தல் என்பது போன்ற பொதுநல ஆசைகளயும் நிறைவேற்றும் நோக்கத்துடன் பற்றுடையோர் செயல்படுவர். இந்த ஆசைகளுக்கு ஒரு முடிவேயில்லை என்பதை அறிந்த முக்திவிழைவோர்கள் தங்கள் மனம் பக்குவப்பட்டு பரமனை அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்களை செய்வர். முற்றுணர்ந்தோர்களுக்கு அடையவேண்டியது என்று எந்த ஆசையும் கிடையாது. எனவே மற்றவர்கள் ஒரு நோக்கத்தை கற்பித்தாலும் உண்மையில் இவர்களது செயல்களுக்கு எவ்வித நோக்கமும் கிடையாது.

திட்டமிடுதல்: அடுத்த ஐந்து வருடங்களுக்குள் வருமானம் ஒரு கோடியை தாண்ட வேண்டும் என்பது போன்ற குறிக்கோள்களை நிறைவேற்ற இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுபவர்கள் பற்றுடையோர்கள். ஆன்மீக பயணத்தில் தாங்கள் அடையவேண்டிய முன்னேற்றத்திற்கு தேவையான செயல்களை திட்டமிடுபவர்கள் முக்திவிழைவோர்கள். முற்றுணர்ந்தோர்கள் செயல் பற்றி மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு திட்டம் என்ற பெயரை கொடுத்தாலும் நிகழும் மாற்றங்களுக்கு திட்டங்கள் காரணம் இல்லை என்பதை அறிவர். அடுத்த நாள் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சரியான பதில்தெரியாதுஎன்பதுதான் என்றாலும் அவர்களும் மற்றவர்களைப்போல் நாட்காட்டியில் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை குறித்துவைத்திருப்பார்கள். கடந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டும் மனித மனதின் கற்பனை என்று அறிந்து நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர்கள் மட்டுமேகாலத்தை வென்றவன்என்ற பட்டத்திற்கு உரியவர்கள்.    

விருப்பு வெறுப்புகள்: எதிர்காலத்தில் விரும்பிய செயல்களை மட்டுமே செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையுடன் நிகழ்காலத்தில் விரும்பாத செயல்களை செய்பவர்கள் பற்றுடையோர்கள். விருப்பு வெறுப்புகள் தங்கள் செயல்களை பாதிக்க கூடாது என்ற கவனத்துடன் செயல்படுபவர்கள் முக்திவிழைவோர்கள். மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு ஆகியவையும் பிரபஞ்சத்தை இயக்கும் பிராணனின் வெளிப்பாடு என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் செயல்கள் பெரும்பாலும் அவர்களின் விருப்பத்துடன் ஒன்றியே இருக்கும்.

ஆளுமையின் தன்மை: ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய தனிமங்களின் கலப்புவிகிதம் மாறுபடுவதால் அனைவரது செயல்பாடுகளும் இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். முற்றுணர்ந்தோர்களுக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் பற்றுடையோர்கள் சக்தி தனிமத்தின் அளவு அதிகமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் முக்திவிழைவோர்கள் ஒளி தனிமத்தின் அளவு அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் செயல்படுவதுபோல முற்றுணர்ந்தோர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை.

அறிவின் தன்மை: பலனில் பற்றுவைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்ற அறிவு பற்றுடையோர்களுக்கு ஏற்பட்டதும் அவர்கள் செயலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் முக்திவிழைவோர்களாக மாறுவார்கள். செயல்களும் தங்களால் செய்யப்படுவதில்லை என்ற அறிவு அவர்களை முற்றுணர்ந்தோர்களாக்கும்.

இன்பதுன்பம்: செயல் செய்யும் துன்பத்தை அதன் பலன் மூலம் கிடைக்கும் இன்பத்துடன் கலந்து அனுபவிப்பவர்கள் பற்றுடையோர். பலனை எதிர்பாராமல் செயல் செய்யும் முக்திவிழைவோர்கள் துன்பத்தை தவிர்த்த பின்னும் இன்பத்தை முழுமையாக பெறுவதில்லை. எனவே உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியுடன் இவர்கள் இருப்பார்கள். தான் இன்பமாக இருக்க படைக்கப்பட்ட உலகம் இது என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் செயல்கள் செய்யும்பொழுதும் பலன்களை அனுபவிக்கும்பொழுது துன்பம் கலவா இன்பத்துடன் இருப்பார்கள்.

முடிவுரை :

மனதை மயக்கும் ஆசைகளை மன்மதனாக உருவகப்படுத்தி அறிவுக்கண் என்ற சிவபெருமானின் மூன்றாவது கண்ணால் அவன் எரிக்கப்பட்டதாக கூறும் புராணக் கதைகள் ஆசையை ஞானத்தால் மட்டுமே அகற்ற முடியும் என்ற உண்மையை மறைமுகமாக தெரிவிக்கின்றன.

பூமி தேராகவும், சூரிய சந்திரர்கள் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும் பிரம்மாவை சாரதியாகவும் இமயமலை வில்லாகவும் ஆதிசேஷன் நாணாகவும் விஷ்ணு அம்பாகவும் உருமாறி சிவபெருமானுக்கு துணை செய்ய தயாராக இருந்தபோது எவ்வித உதவியையும் ஏற்றுக்கொள்ளாமல் தன் நெற்றிக்கண்ணை திறந்து முப்புரத்தை எரித்த வரலாறு ஞானத்தால் மட்டுமே ஆசைகளை அகற்ற முடியும் என்று சுட்டிக்காட்டுகிறது.

பூமி தேர், சூரியசந்திரர்கள் சக்கரங்கள் என்பது போன்ற நடக்கமுடியாத உதாரணங்கள் செயற்கரிய செயல் எதை செய்தாலும் ஆசை அடங்காது என்று எடுத்துரைக்கின்றன. நான்தான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டதும் பருவுடல், நுண்ணிய உடல், காரண உடல் ஆகிய மூன்று உடல்கள், ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்கள் சஞ்சிதம்,ஆகாமி, பிரார்ப்தம் ஆகிய மூன்று கர்மங்கள் போன்ற அனைத்தும் மாயையாக மறைந்துவிடுவதால் முற்றுணர்ந்தோர்களின் செயல்கள் பிராணனின் வெளிப்பாடாக மட்டுமே அமைகின்றன.

இவ்வாறு இவர்களது செயல்கள் அமைவதால் தடைபடாத அமைதியுடனும் குறையாத இன்பத்துடனும் இவர்கள் செயல்படுவார்கள்.

தொடர்ந்து நிகழும் அனைத்து மாற்றங்களுக்கும் காரணமான பிராணன் பரமனின் மாயா சக்தியின் வடிவம். மரணம் என்பதும் இந்த மாயையில் ஒரு காட்சி. எனவே ஞானி மரணமடையும்பொழுது பிராணன் பிரிவதில்லை என்ற கருத்து கூறப்பட்டது.


பயிற்சிக்காக :

1. பிரஸ்ன உபநிடதத்தின் மூன்று கேள்விகளின் பதில்கள் மூலம் நிறுவப்பட்ட கருத்து என்ன?

2. பிராணன் எந்த மூன்று சக்திகள் மூலம் உடலை ஆள்கிறது?

3. மரணத்தை வெல்லும் வழி யாது?

4. ஆசைகளிலிருந்து விடுபட்டவனின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை என்று கூறப்பட்டதற்கு காரணம் என்ன?

5. மக்களின் செயல்கள் எந்த எந்த அடிப்படைகளில் ஆராயப்பட்டன?

சுயசிந்தனைக்காக :

1.  ‘காலத்தை வென்றவன் நீஎன்ற புகழ் மொழிக்கு தகுதியானவர்கள் யார்?

2. ஞானிகள் விரும்பிய செயல்களை மட்டுமே செய்வார்களா?

Tuesday, April 3, 2012

Lesson 172: The dissolution at the time of death (Brahma Sutra : 4.2.8-11)


பாடம் 172: பயணங்களின் முடிவு
பாடல் 504-507 (IV.2.8-11)

பரமனை அறிந்தவன் பரமனாகவே ஆகிவிடுவான் எனினும் மற்றவர்களைப்போல் அவனின் வாழ்க்கைப்பயணமும் மரணத்தில் முடிவடைந்துவிடும் என்ற கருத்தை கூறி உடலும் மனமும் உள்ளவரை ஆனந்த அனுபவங்களை மட்டுமே பெறுவதற்கு ஞானம் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சுழற்சி தொடர்கிறது என்ற நோக்கில் பயணங்கள் முடிவதில்லை என்ற கருத்து கூறப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட உடல் மற்றும் மனதின் வாழ்க்கைப்பயணம் முடிந்துவிடும். அலைகள் ஓய்வதில்லை என்பது உண்மையென்றாலும் ஒரு குறிப்பிட்ட அலை ஓய்ந்துவிடும்.

மனிதர்கள் அனைவரும் வந்துபோகும் அலைகளை போன்றவர்கள். பிள்ளைகள் வடிவில் பெற்றோர்கள் தொடர்ந்து வாழ்ந்தாலும் மரணம் ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப்பயணத்தின் முற்றுப்புள்ளிதான். நான் பரமன் என்ற அறிவு நான் ஒரு தனி மனிதன் என்ற தவறான எண்ணத்தை முற்றுணர்ந்தோரின் மனதிலிருந்து அகற்றிவிடுவதால் அவர்கள் வாழ்வில் துன்பம் மறைந்துவிடும். ஆனால் இந்த அறிவு அவர்களின் உடலையும் மனதையும் அழிவிலிருந்து காப்பாற்றிவிடாது.

தான் தொடர்ந்து மாறும் ஒரு உருவத்தால் வரையறுக்கப்பட்டு வந்துபோகின்ற அலையைப்போன்றவன் என்ற அறிவுடன் வாழ்பவர்கள் பற்றுடையோர்கள். தான் பரந்த கடலின் ஒருபகுதி என்று நினைப்பவர்கள் முக்திவிழைவோர்கள். தான் நீர் என்று அறிபவர்கள் முற்றுணர்ந்தோர்கள். அலையை கடலின் ஒருபகுதியாகவோ நீராகவோ அறிவதால் அலையில் எந்த மாற்றமும் இருக்காது. அதுபோல தான் யார் என்ற அறிவு அறியாமையால் விளையும் துன்பங்களை தவிர்க்க உதவுமே தவிர உண்மை நிலையை மாற்ற உதவாது. அழியாத பரமன் நான் என்ற ஆழமான அறிவு உடலும் மனமும் மரணத்தில் மறையும்வரை இன்பஅனுபவங்களை பெற உதவும் என்பதால் இந்த ஆழமான அறிவை கூடியவிரைவில் பெறுவது அவசியம்.

சுக்ல யஜுர் வேதத்தின் சாந்தி பாடம் மேலெழுந்தவாரியான அறிவுக்கும் ஆழ்ந்த அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை படம் பிடித்து காட்டுகிறது. அந்த பரமாத்மா பூரணமானவன். குறையுடன் இருப்பவனாக காட்சியளிக்கும் இந்த ஜீவாத்மாவும் பூரணமானவன். பூரணமான அந்த பரமாத்மாவிலிருந்து பூரணமில்லாதவனாக காணப்படும் இந்த ஜீவாத்மா உருவானவன் என்ற மேலெழுந்தவாரியான அறிவை நீக்கினால் பூரணமான இரண்டற்ற ஆத்மா மட்டுமே எஞ்சியிருப்பது தெரியவரும்.

மேலெழுந்தவாரியான அறிவுநான் அலை

அலை என்பது வெறும் தோற்றம். நீர் என்ற பொருள் ஒரு குறிப்பிட்ட வடிவில் தோன்றி தொடர்ந்து மாறி முடிவில் மறைகிறது. நீரின் மேல் கவனம் செலுத்தாமல் வெறும் வடிவத்தை மட்டுமே கவனிப்பது மேலெழுந்தவாரியான அறிவு. அதுபோல் தோன்றுதல், பிறத்தல், வளர்தல், முதிர்தல், மங்குதல், மறைதல் போன்ற ஆறு மாறுதல்களை அடைவது பரமன் என்பதை உணராமல் வடிவங்களுக்கு சோமன் ராமன் என்ற பெயர்களைகொடுத்து அவர்களை தனித்தனிமனிதர்களாக பார்ப்பது மேலெழுந்தவாரியான அறிவின் அடிப்படையில் ஏற்படும் அனுபவம்.

ஆறு மாறுதல்களில் வளர்தல் என்ற ஒன்றுதான் இன்பம் என்று நினைப்பதால் நான் உடல் என்ற அறிவுடன் செயல்படும் மனிதர்கள் இளமையில் துன்பம் கலந்த இன்பத்தையும் முதுமையில் இன்பம் கலவா துன்பத்தையும் அனுபவிப்பர்.

ஆராய்ந்தவர்களின் அறிவுநான் கடல்

மாறும் உடலும் மனதும் நான் அல்ல என்ற அறிவு ஏற்பட்டதும் வேதம் தரும் கருத்துக்களை ஆராய்ந்து தான் கடவுளின் அங்கம் என்று அறிபவர்கள் கூட வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் துன்பத்தை தவிர்க்க முடியாது. கடல் அலையைவிட மிகவும் பெரியது என்றாலும் அதுவும் வெறும் வடிவம் மட்டுமே.கை விரல்கள் அனைத்தும் ஒரே உடலை சேர்ந்தவை என்ற அறிவை அடைந்த பின்னும் சிறுவிரலுக்கு தான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மை மறையாது.  கடவுளும் ஒரு வடிவம் என்பதால் கடவுளின் ஆதாரமான பொருளை அறிய முயல வேண்டும்.

ஆழமான அறிவுநான் நீர்

வடிவங்களுக்கு அலை, கடல் என்று பெயரிட்டு அவற்றின் ஆதாரமான பொருள் நீர் என்பதை அறியாமல் செயல்படும்வரை ஆழமான அறிவு ஏற்படாது. தான் யார் என்பதை குருவின் துணையுடன் ஆராய்ந்து அறிபவர்கள் அந்த ஆழமான அறிவில் நிலைக்கும்பொழுது அனைத்து நிகழ்வுகளையும் இன்பமாக அனுபவிப்பர்.

அறிவும் உண்மைநிலையும்

அறிவில் குறைந்தவனை மிருகம் என்றும் ஞானம் உள்ளவரை கடவுள் என்றும் ஒரு பேச்சுக்கு சொல்லலாமே தவிர மனித உடலுடன் பிறந்தவர்கள் அனைவரும் மனிதர்கள்தான். கடவுளின் அவதாரம் அல்லது கடவுள் என்று கருதப்படும் ராமர், கிருஷ்ணர், ஏசு, சாய்பாபா போன்றவர்கள் சாதாரண மனிதர்களே. உடல் மற்றும் மனம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு செய்யலாமே தவிர ஒருவனை மனிதனே அல்ல என்று முடிவு செய்ய முடியாது.  

அறிவும் அனுபவமும்

அறிவு ஏற்பட அனுபவங்கள் காரணமாய் அமைகின்றன. ஐந்து புலன்களை பயன்படுத்தி உலகிலிருந்து பெறும் அனுபவங்கள் எதுவும் இல்லாமல் எவ்வித அறிவும் ஏற்படாது. அனுபவங்கள்தான் அறிவுக்கு காரணமாயிருந்தாலும் அனுபவங்களிலிருந்து சரியான அறிவு மட்டுமே ஏற்படும் என்று சொல்லமுடியாது. சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்று அனுபவம் தரும் தவறான அறிவை தீவிரமாக ஆய்வதன் மூலம் சரியான அறிவை அடையலாம்.  ஆராய்ச்சி தருவதும் அனுபவமே. எனவே சரியான அறிவு தவறான அறிவு ஆகிய இரண்டும் அனுபவங்கள் மூலமாகவே கிடைக்கின்றன.

உள்ளதை உள்ளபடி அறிவது மட்டுமே சரியான அறிவு. ஒரே உலகம் மனிதருக்கு மனிதர் வெவ்வேறு அனுபவங்களை தருவதால்  அவற்றிலிருந்து அவர்கள் பெறும் அறிவும் வேறுபட்டிருக்கும். சரியான அறிவு ஒரு சிலருக்குத்தான் ஏற்படும்.   

அனுபவங்களின் தரத்தை அறிவு தீர்மானிக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைவருக்கும் அனுபவங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆப்பிள் கீழேவிழுவதை பார்க்கும் அனுபவம் அனைவருக்கும் ஏற்பட்டாலும் புவியீர்ப்பு விசை பற்றிய அறிவு அந்த அனுபவத்தை ஆராய்பவர்களுக்கு மட்டுமே ஏற்படும். பெறும் அனுபவங்களை தொடர்ந்து ஆராய்ந்து அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்பவர்களால் மட்டுமே அனுபவங்களின் மூலம் சரியான அறிவை அடைய முடியும். சரியான அறிவு அனுபவங்களின் தரத்தை உயர்த்துகிறது.

மாணவனின் அறிவின் தரம் ஆசிரியரலால் கண்டிக்கப்படும் அனுபவத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. தன் நலம் விரும்பியே ஆசிரியர் தன்னை கண்டிக்கிறார் என்ற சரியான அறிவை உடைய மாணவன் அந்த அனுபவத்தை விரும்பி ஏற்று வாழ்வில் முன்னேறுவான். அவ்வாறில்லாமல் ஆசிரியர் தன்னை அவமானபடுத்த மற்றவர்கள் முன் தன்னை கண்டிக்கிறார் என்ற தவறான அறிவை உடைய மாணவன் அந்த அனுபவத்தை வெறுத்து மேலும் தவறுகள் செய்வான்.

மேலெழுந்தவாரியான அறிவுடன் செயல்படுபவர்களின் அனுபவங்கள் துன்பம் நிறைந்ததாகவும், மிதமான அறிவு உள்ளவர்களின் அனுபவங்கள் இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் கலந்தவையாகவும் ஆழ்ந்த அறிவை உடையவர்களின் அனுபவங்கள் அனைத்தும் துன்பம் கலவா இன்பமாகவும் அமையும்.

அனுபவங்கள் தரும் அறிவு

உலகில் உள்ள பொருள்களை புலன்கள் வழியே அனுபவித்து அந்த அனுபவங்கள் மூலம் அறிவை நாம் பெறுகிறோம். இல்லாத உலகை இருப்பதாக புலன்கள் நமக்கு காட்டுகின்றன என்று அணுவியல் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே பெரும்பாலான மக்கள் தாங்கள் பெறும் அனுபவங்களை ஆராயாமல் உலகம் உண்மையில் இருக்கிறது என்ற தவறான எண்ணத்துடன் வாழ்கிறார்கள். வேதம் தரும் உண்மைகளின் ஆதாரத்துடன் அனுபவங்களை ஆய்ந்து சரியான அறிவை பெறுபவர்கள் முக்திவிழைவோர். ஆசிரியரிடம் முறையாக வேதம் பயிலாமல் அனுபவங்களிலிருந்து நேரடியாக சரியான அறிவை பெறுபவர்கள் தீர்க்கதரிசிகள்.

நான்கு குழந்தைகள்

மாறுவேடத்தில் இருப்பவள் தன் தாய்தான் என்பதை அவளை பார்த்தவுடன் அறிந்துகொள்ளும் குழந்தை இன்ப அனுபவத்தை மட்டுமே பெறும். அவள் வேறு யாரோ என்று எண்ணி முதலில் பயந்தாலும் அவள் தன்னுடன் பழகும் விதத்தை ஆராய்ந்து பின் அவளை தன் தாய் என்று அடையாளம் கண்டுகொண்ட குழந்தை தன் சரியான அறிவில் நிலை பெற்றபின் இன்ப அனுபவத்தை மட்டுமே பெறும். அவள் தன் தாய் என்பதை தெளிவாக அறிந்தபின்னும் அவள் மாறுவேடத்தில் இருக்கும்வரை அவள் அருகே செல்ல பயப்படும் குழந்தை துன்பம் கலந்த இன்ப அனுபவங்களை பெறும். நான்தான் உன் அம்மா என்று அவள் எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும் உண்மையை அறிந்துகொள்ளும் திறன் இல்லாத குழந்தை தொடர்ந்து பயத்தில் அழும். அவள் தன் மாறுவேடத்தை கலைத்து சுயஉருவத்தை குழந்தைக்கு காட்டினால் மட்டுமே அதன் அழுகை நிற்கும்.   

உலகம் என்ற மாறுவேடத்தில் இருப்பது பரமன்தான் என்று பார்த்ததும் அறியும் திறன் இரமண மஹரிஷி போன்ற ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே வாய்க்கும். எவ்வித முயற்சியும் செய்யாமல் புலன்கள் காட்டும் பொய்யான தோற்றத்தை விலக்கி உண்மையான பரமனை பார்ப்பவர்கள் தீர்க்கதரிசிகள்.

உலகம் என்ற மாறுவேடத்தில் இருப்பது பரமன் என்ற உண்மையை வேதம் படித்து அறிந்துகொண்ட முக்திவிழைவோர்கள் உண்மையை அறிந்த பின்னும் உலகின் மாறுவேடம் கலைந்து பரமனை நேரடியாக அனுபவிக்க வேண்டுமென்று காத்துக்கொண்டு இருப்பார்கள். அவ்வாறில்லாமல் தங்களது சரியான அறிவில் நிலைத்து நிற்கும் முற்றுணர்ந்தோர்கள் தாய் மாறுவேஷத்தை கலைப்பதுபோல் பரமனால் தன் சுய உருவத்தை காட்ட முடியாது என்பதையும் அறிவதனால் உயிருடன் இருக்கும்வரை உலகை முழுமையான இன்பத்துடன் அனுபவிப்பர்.

காணும் உலகம் மட்டுமே இருக்கிறது என்றும் கண்ணுக்குத்தெரியாத பரமன் இல்லை என்றும் உறுதியாக இருப்பவர்கள் பற்றுடையோர். புலன்கள் அறிவிக்கும் பொய்யான தோற்றங்களை நம்பும் வரை உலகிலிருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன் நான் என்ற மேலெழுந்தவாரியான அறிவுடன் இவர்கள் இருப்பார்கள்.

தீர்க்கதரிசிகளும் மற்றவர்களும்

தீர்க்கமாக பார்ப்பதன் மூலம் ஆழமான அறிவை பெறுபவர்கள் தீர்க்கதரிசிகள். எதிர்காலம் மனதின் கற்பனை என்பதை அறியும் இவர்கள் அதில் நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே ஆரூடம் சொல்வதில்லை. தற்பொழுது இல்லாத ஆனந்தம் எதிர்காலத்திலாவது கிடைக்குமா என்று ஏங்கும் பற்றுணர்ந்தோர்கள் தீர்க்கதரிசிகளை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் கூறும் உண்மையை அறிய முற்படாமல் அவர்கள் மூலம் தங்களது துயரங்களை மாற்ற முயல்வார்கள். இதனால் தீர்க்கதரிசிகளை பின்பற்றுபவர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலர்தான் தாங்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யும் முக்திவிழைவோர்களாக மாறுவர். தாங்கள் பெறும் இன்பஅனுபவத்தை மற்றவர்களும் பெறவேண்டும் என்ற நல்லெண்ணம் தீர்க்கதரிசிகளுக்கு இருந்தாலும் அவர்களின் உபதேசத்தை கேட்பதனால் முக்திவிழைவோருக்கு எவ்வித பயனும் கிடைக்காது. அனுபவத்தின் மூலம் மட்டுமே தாங்கள் உண்மையை உணர்ந்த காரணத்தால் ஏன் மற்றவர்களால் உலகை சரியாக பார்க்கமுடிவதில்லை என்பதை தீர்க்கதரிசிகளால் புரிந்து கொள்ள முடியாது. எனவே தீர்க்கதரிசிகளின் சீடர்களாக இல்லாமல் முற்றுணர்ந்தோர்களிடம் பயிலும் மாணவர்களாக மாறும் முக்திவிழைவோர்கள் மட்டுமே உண்மையை அறியும் வாய்ப்பை பெறுவார்கள்.

தீர்க்கதரிசியும் மற்றவர்களைப்போன்ற சாதாரண மனிதன்தான். ஆனால் அவனின் அசாதாரண அனுபவம் மற்றவர் கண்களில் அவனை கடவுளின் அவதாரமாக காண்பிக்கிறது. உலகம் தங்களின் துன்பத்திற்கு காரணம் என எண்ணுபவர்களுக்கு உலகே மாயை என்பதை அனுபவத்தில் அறிந்த தீர்க்கதரிசிகளால் உதவ முடியாது. வெற்றி தோல்வி இரண்டும் மாறி மாறி ஏற்படும் என்ற உண்மையை உணராமல் தீர்க்கதரிசிகளை தரிசிப்பதன் மூலம் தங்கள் வாழ்வை இன்பமயமானதாக மாற்றிவிடலாம் என நினைப்பவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாவர். மற்றவர்களின் துன்பத்தை மாற்றும் அசாதாரண சக்தி தீர்க்கதரிசி மூலம் வெளிப்பட்டாலும் கூட அந்த சக்தியால் யாருக்கும் நிலையான இன்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது.

தீர்க்கதரிசிகளும் முற்றுணர்ந்தோர்களும்

முறையாக ஆசிரியரிடம் வேதத்தை பயின்று இருப்பது பரமன்மட்டும்தான்  என்ற அறிவை அடைந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள். எவ்வித முயற்சியும் இல்லாமல் நான் பரமன் என்பதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தவர்கள் தீர்க்கதரிசிகள். இவர்கள் இருவருக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து துன்பம் கலவா இன்ப அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் பெறும் விதத்தை அறியலாம்.

1.  அறிவை அடைந்தவிதத்தில் வேறுபாடு இருந்தாலும் இருவருக்கும் இருக்கும் இறுதியான அறிவில் இம்மியளவும் வித்தியாசம் இல்லை. எனவே ஆன்மீக அறிவின் அறிவின் அடிப்படையில்  இருவருக்கிடையே உயர்வு தாழ்வு கிடையாது.

2. மனிதருக்கு மனிதர் அனுபவங்கள் வேறுபடும். எனவே முற்றுணர்ந்தோர்களின் அனுபவம் தீர்க்கதரிசிகளின் அனுபவத்திலிருந்து வேறுபட்டிருக்கும். அனுபவம் என்பது மனதில் நிகழும் எண்ணங்களின் மாற்றம். மனம் என்பதே இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதால் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அர்த்தம் எதுவுமில்லை. மேலும் மனதில் என்ன எண்ணங்கள் எப்படி தோன்றும் என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியாது. உலகம் முழுவதையும் தன் உடலாக உணரும் அனுபவம் திடீரென ஏற்பட்டகாரணத்தினால் ஒரு சாதாரண மனிதர் தீர்க்கதரிசியாக மாறினார் என்பது உண்மையானாலும் அது போன்ற அனுபவம் அவருக்கு மீண்டும் ஏற்படும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. எனவே மனதில் தோன்றும் அனுபவங்களின் அடிப்படையில் யாரையும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிக்கமுடியாது.

3. உலகே நான் என்பது போன்ற அனுபவங்களை பெறாத காரணத்தினால் முற்றுணர்ந்தோர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லமுடியாது. மற்றவர்களின் நிலையை புரிந்துகொண்டு முக்தியை நோக்கி அவர்களை வழிநடத்த தேவையான அறிவு இல்லாத காரணத்தால் தீர்க்கதரிசிகள் முற்றுணர்ந்தோர்கள் அல்ல.

ஒருவன் பல பெண்களுடன் ஒரே சமயத்தில் உறவாடுவது தவறு என்று எண்ணும் மக்களால் இராச லீலையின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவே முடியாது. ஒவ்வொரு கோபிகையுடனும் ஒரே கோபாலன் நடனமாடும் காட்சி வாழ்வு இன்பமயமானது என்று காட்டுகிறது என்பதை தீர்க்கதரிசிகளும் முற்றுணர்ந்தோர்களும் அறிவர். தங்கள் இராச லீலை அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன்மூலம் தீர்க்கதரிசிகளால் அவர்களுக்கு உதவ முடியாது. முற்றுணர்ந்தோர்களால் வேதம் படித்து முடித்த முக்திவிழைவோர்களுக்கு இராசலீலையை விளக்கி அவர்களும் அந்த அனுபவத்தைபெறும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரமுடியும்.

ஒவ்வொரு மனிதனும் உண்மையில் பரமனே என்பதை ஒரே கிருஷ்ணன் மூலமும் உலகம் என்ற மாயக்கன்னியை கோபிகையாக சித்தரித்து வாழ்வு முழுவதும் இன்ப அனுபவம் மட்டுமே பெற அனைவராலும் முடியும் என்ற கருத்தை இராச லீலை தெரிவிக்கிறது. தன் உடல் மனம் உட்பட்ட உலகம் என்ற கோபிகை பரமனான தன்னால் தன்னுடைய இன்பஅனுபவத்திற்காக படைக்கப்பட்டவள் என்பதை அறிந்தவர்கள் ஒவ்வொரு கோபிகையும் மற்ற கோபிகைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவள் என்றும் அறிவர். தனது இன்பத்திற்கு மற்றவர்தான் காரணம் என்ற அறியாமையுடன் காதலர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பார்கள். உலகம் என்ற காதலியுடன் உறவாடும்பொழுது தான் பெறும் இன்ப அனுபவம்  தன்னிடமிருந்துதான் வருகிறது என்பதை அறிபவர்கள் மற்றவர்களது கோபிகையை பார்த்து பொறாமையோ ஏக்கமோ அடையமாட்டார்கள். தனது கோபிகையுடன் என்றும் இன்பமாக இருக்க முற்றுணர்ந்தோன் மற்றும் தீர்க்கதரிசி ஆகிய இருவரும் அறிவார்கள். காதலர்களின் கண்கள் காதலால் மூடபட்டு சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் சக்தியற்று இருப்பதுபோல் உலகின் மேல் உள்ள காதலில் மூழ்கி தீர்க்கதரிசிககளால் மற்றவர்களுக்கு தீர்க்கமாக பார்க்கும் சக்தி இல்லை என்பதை அறியமுடியாது. தங்களுக்கு இன்பம் மட்டுமே தரும் உலகம் மற்றவர்களை ஏன் துன்பபடுத்துகிறது  என்பதை ஆராய்ந்து அறிந்த முற்றுணர்ந்தோர்களால் மட்டுமே படிப்படியாக பயணம் செய்து  முடிவில் முக்தியடையும் வழியை முக்திவிழைவோர்களுக்கு காட்டித்தரமுடியும்.

உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் உல்லாசத்தீவில் இன்பமாக ஒரு வாரம் இருந்துவிட்டு திரும்பியவன் தன் இனிய அனுபவத்தை விவரித்தபின் அது எந்த இடம் அல்லது அங்கு எப்படி போவது என்ற விவரங்கள் தனக்கு தெரியாது என்று கூறினால் அவனது இன்ப அனுபவங்களை கேட்டவர்கள் ஏக்கத்துடன் ஏமாற்றம் அடைவார்களே தவிர வேறு ஒரு பயனையும் அடைய மாட்டார்கள். அதுபோல தீர்க்கதரிசியை பின்பற்றுபவர்கள் தங்களுக்கும் முக்திகிடைக்காதா என்ற ஆதங்கம் மற்றும் அவரது வார்த்தைகளை முழுதும் புரிந்துகொள்ளமுடியவில்லையே என்ற இயலாமை ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்படுவார்களே தவிர முக்தியை நோக்கி முன்னேற மாட்டார்கள்.

4. முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே தீர்க்கதரிசியின் வார்த்தைகளை முழுவதும் புரிந்துகொள்ள கூடியவர்கள். தங்கள் அறிவிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தீர்க்கதரிசிகளை அவர்கள் மதிப்பார்கள். தங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எல்லோருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை அறியாத தீர்க்கதரிசி முற்றுணர்ந்தோர்களின் அறிவு அனுபவமாக மாறினால்தான் முக்தி என்ற தவறான எண்ணத்துடன் அவர்களை முக்தியடைந்தோர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தீர்க்கதரிசிகளை பொறுத்தவரை மதகுருமார்கள் எங்கும் நிறைந்த கடவுளின் மேல் வெறும் நம்பிக்கையுடைவர்கள், முற்றுணர்ந்தோர்கள் கடவுளைபற்றிய புத்தக அறிவை மட்டும் உடையவர்கள், தாங்கள் மட்டும்தான் கடவுளை நேரடியாக அனுபவிப்பவர்கள். இவர்களின் இந்த தவறான மனப்பான்மை பலரை தவறான பாதைக்கு திசைதிருப்பும். அனைவரும் இன்ப அனுபவத்தை பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இவர்கள் செயல்பட்டாலும் இவர்களின் உபதேசங்களால் முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே பயனைடைவார்கள்.

5. முக்திவிழைவோர்களின் மனம் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களால் கவரப்படும். ஆனால் அவர்களின் அறிவு கூடிய விரைவில் அவர்களை முற்றுணர்ந்தோர்களின் மாணவர்களாக மாற்றும். மனம் விரும்பும் அனுபவங்களை பெற சரியான அறிவை அடையவேண்டும் என்று உணர்பவர்கள் மட்டுமே விரைவில் முக்தியடைவார்கள்.

முற்றுணர்ந்தோர்களின் இன்ப அனுபவங்கள்

எந்த ஒரு குறிப்பிட்ட அனுபவத்தையும் எதிர்பார்க்காமல் நிகழ்காலத்தில் மட்டுமே வாழும் முற்றுணர்ந்தோர்கள் அனைத்து நிகழ்வுகளையும் இன்பமாக அனுபவிப்பர். தான்தான் இன்பத்தின் ஒரே ஊற்று என்றறிந்த முற்றுணர்ந்தோர்கள் மாறும் உலகின் மாற்றங்கள் அனைத்தையும் அவை வேறுமாதிரி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள். உலகம் முழுவதற்கும் ஆதாரம் தான்தான் என்ற அவர்களின் அறிவு அவர்களின் வாழ்நாழ் முழுவதும் இன்ப அனுபவங்களை மட்டுமே பெற அவர்களுக்கு உதவும்.

பற்றுடையோர்கள் தான் ஒரு தனிமனிதன் என்பதை ஆழமாக அறிவதுபோல் முற்றுடையோர்கள் தான் பரமன் என்ற ஆழமான அறிவுடன் செயல்படுவார்கள். தனக்கு அந்நியமாக எதையும் அவர்கள் பார்ப்பதில்லை என்பதால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பம் கலவா இன்பத்தை அனுபவிப்பார்கள்.   

முடிவுரை :

புன்னகையும் நாணமும் இங்கிதபேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஒரு அந்நியமான பெண் உன்னுடன் நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது சொர்க்கங்கள் என்ற வாசகம் உலகம் என்ற கோபிகையுடன் வலம் வரும் கோபாலன் நான்தான் என்பதை உணர்ந்தவர்களின் வாழ்வை விளக்கும். நான் பரமன் என்பதை அனுபவம் மூலம் அறிந்த தீர்க்கதரிசிகளும் என்னை ஆதாரமாக்கொண்டுதான் இந்த உலகம் இயங்குகிறது என்பதை அறிவுபூர்வமாக ஆராய்ந்து அறிந்த முற்றுணர்ந்தோர்களும் வாழ்வில் துன்பமடையமாட்டார்கள். இருவரும் எந்த ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காகவும் காத்திருக்கமாட்டார்கள். எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அந்த அறிவை பெற்றுவிட்ட காரணத்தால் மேலும் எதையும் அறிந்துகொள்ளும் அவசியம் ஆழ்ந்த அறிவை பெற்ற முற்றுணர்ந்தோர்களுக்கு இல்லை. மரணத்தில் மறையப்போகும் உடல் மற்றும் மனம் இயங்கும்வரை கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தையும் இன்பமாக ஏற்க தேவையான ஆழ்ந்த அறிவு இவர்களிடம் இருக்கும்.

பயிற்சிக்காக :

1. மேலெழுந்தவாரியான அறிவிற்கும் ஆழமான அறிவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

2. அறிவிற்கும் அனுபவத்திற்கும் உள்ள உறவு என்ன?

3. நான்கு குழந்தைகளாக வர்ணிக்கப்பட்ட  மனிதர்கள் யார் யார்?

சுயசிந்தனைக்காக :

1.முற்றுணர்ந்தோர்கள் தீர்க்கதரிசியின் உபதேசங்களிலிருந்து எந்த வகையில் பயனடைவார்கள்?

2. சாகாவரம்  மற்றும் மீண்டும் பிறவாவரம் ஆகியவற்றின் சரியான பொருளை ஆராய்க.

3. பயணங்கள் முடிந்துவிடும் என்ற தலைப்பின் முக்கிய நோக்கம் என்ன?

4. மனித உடலுடன் பிறந்தவர்கள் அனைவரும் மனிதர்களே என்ற கருத்தையும் ஒருவர் மற்றவரைப்போல் இருக்க முடியாது என்ற கருத்தையும் ஒப்பிட்டு ஆராய்க.

5. ஓம் பூர்ணமதஹ பூர்ணமிதம் என்று தொடங்கும் சாந்தி பாடத்தின் பொருளை ஆராய்க.

6. ஒரே உலகம் மனிதருக்கு மனிதர் வெவ்வேறு அனுபவங்களை தருவதன் காரணம் என்ன?

7. தீர்க்கதரிசிகளுக்கு அற்புதங்களை செய்யும் சக்தி இருக்குமா?