Wednesday, April 10, 2013

Lesson 183: Future World (Brahma Sutra 4.3.7-14)


பாடம் 183: விஞ்ஞானியின் பார்வை – Dr. காகு.
பாடல்: 524-531 (IV.3.7-14)

மனிதன் கடவுளாகவும் உலகம் சுவர்க்கமாகவும் மாறும் நாள் விரைவில் வரும் என்று சரக்கோட்பாடின் (string theory) உடன் கண்டுபிடிப்பாளரான மிஷையோ காகு (Dr. Michio Kaku)  கூறுகிறார். அறிவியலின் அடிப்படையில் அமைந்த அவரது இந்த கணிப்புக்களின்படி வியக்கத்தக்க மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கின்றன. எனினும், வேதம் தரும் ஞானத்தால் மட்டுமே மனிதனின் தேடல் முடிவடையும் என்ற உண்மையை இந்தப்பாடம் எடுத்துக்காட்டுகிறது.

அணு என்றால் என்ன என்ற கேள்விக்கு முழுமையான பதிலைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அணுக்களை திறமையாக கையாளுவதற்கு காகு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். எலக்ட்ரான் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருப்பது எப்படி என்று இவர் ஆராய்ந்து இருந்தால் உலகே மாயை என்ற உண்மையை இவர் அறிந்துகொண்டு இருப்பார். இந்த உண்மையை அறியாத காரணத்தால் மாயையான உலகில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகளின் உழைப்பின் பயனாக இவர் கருதுகிறார்.

அறிவியலின் முன்னேற்றம்

எதற்காக முன்னேற்றம் என்ற கேள்வியைக் கேட்காமல், ‘முன்னேற்றம் அவசியம்என்ற குருட்டு நம்பிக்கையுடன் அனைத்து துறையைச் சேர்ந்த வல்லுனர்களும் அயராது உழைத்து வருகிறார்கள். இதனால் மருத்துவம், ஆரோக்கியம், போக்குவரத்து, தொழில், பொழுதுபோக்கு முதலிய அனைத்து துறைகளிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.  ஆயினும், மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் நாள் வரவே வராது என்பதை இவர்கள் உணர்வதில்லை.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனை ஒப்பிட்டால் நமது வாழ்க்கையின் தரம் மிகவும் முன்னேறி உள்ளது. ஆயினும், வாழ்வின் துன்பங்களின் அளவு குறையவேயில்லை. அவமானம், அதிருப்தி, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், கவலை, காழ்ப்புணர்ச்சி, கோபம், குரோதம், குற்ற உணர்வு, குழப்பம், சலிப்பு, சந்தேகம், தவிப்பு, திருப்தியின்மை, பழிவாங்கும் உணர்ச்சி, பயம், போட்டி, பொறாமை, வருத்தம், விரக்தி, வெறுப்பு முதலிய துயரங்கள் மனிதனை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் இது போன்ற துன்பங்களிலிருந்து விடுதலைபெற மனிதகுலத்துக்கு இருக்கும் ஒரே வழி வேதம் தரும் ஞானம் ஒன்றுதான்.

கூடியவிரைவில் சாதாரண மனிதர்கள்கூட விண்வெளிப்பயணம் செய்யக்கூடிய நிலை வரும் என்கிறார் காகு. மேலும், பூமியைச் சார்ந்து இருக்காமல் சூரியனின் சக்தியை நேரடியாகப் பெற்று விண்வெளியிலேயே குடியிருக்கவும் முடியும். பிரபஞ்சம் அழிந்தாலும் மனிதன்வர்ம் ஹோல்’ (worm hole) மூலமாக அழிவிலிருந்து தப்பிக்க முடியும் என்று காகு கூறுகிறார். திரிசங்குவின் சுவர்க்கம் போல அவரவர்கள் தங்களது விண்வெளி வீட்டை கட்டிக்கொண்டு பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்தால் கூட வாழ்வின் துயரங்களும் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்யும். எனவே, துன்பங்களில் இருந்து விடுதலை பெற மனிதனுக்கு வேதம் தொடர்ந்து தேவைப்படும். அவனது தேடல்நான் பரமன்என்ற ஞானம் பெற்றவுடன்தான் முடிவடையும். 

மனிதனின் தேடல்

மாஸ்லோ (Abrham Maslow) என்ற உளவியல் அறிஞர், மனிதனின் தேவைகளை ஐந்து அடுக்குகளாக பிரிக்கிறார். இவற்றில் உடலின் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை மட்டுமே அறிவியலால் பூர்த்தி செய்ய முடியும். நட்பு, குடும்பம், சுயமரியாதை, சாதனைகளில் திருப்தி, தன்னை வெளிப்படுத்தல் (self-actualisation) போன்ற மனதின் தேவைகளை பூர்த்திசெய்ய, அறிவியல் வளர்ச்சியால் உதவி செய்ய முடியாது.

எனவேதான், அனைத்து துறைகளிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு  முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் மனிதனின் தேடல் ஒரு முடிவுக்கு வருவதில்லை. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக புதிய பிரச்சனைகளை உருவாக்குகின்றன. அணுவை பிளக்க அறிந்து கொண்டதால் ஏற்பட்ட நன்மைகளுக்கு சமமான அளவில் தீமைகளும் ஏற்பட்டுவருகின்றன. புதிய பிரச்சனைகளை தீர்க்க மேலும் அதிக தீவிரத்துடன் உழைக்க வேண்டியது அவசியமாகிறது. இது நாய் தன் வாலைப் பிடிக்க முயன்ற கதை போல முடிவற்ற முயற்சியாக என்றும் தொடரும்.

அறிவியல் முன்னேற்றங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட வேதம் காட்டும் பாதையில் செல்வது மிக அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே உலகம் உண்மையிலேயே சுவர்க்கமாக மாறும். அப்போதுதான் அறிவியல் முன்னேற்றங்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.

முன்னேற்றங்களும் அனுபவங்களும்

வெளி உலகத்தில் ஏற்படும் மாற்றங்களால் நமது ஐந்து புலன்கள் மூலம் பெறும் அனுபவங்களில் எந்த மாற்றமும் ஏற்படுவது கிடையாது. ஏனெனில் அனுபவம் என்பது ஒப்பிடுவதால் ஏற்படுவது. இடது கையை சூடான வென்னீரிலும் வலது கையை குளிர்படுத்தப்பட்ட நீரிலும் சில நிமிடங்கள் வைத்திருந்து விட்டு இரண்டு கையையும் சாதாரணமான தண்ணீரில் வைத்தால் இரண்டு கைகள் பெறும் அனுபவம் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும். எவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் இன்றைய அனுபவம் நேற்றைய அனுபவத்தை பொறுத்தே அமையும். எனவே, அறிவியல் முன்னேற்றங்கள் மக்களின் அனுபவங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஏற்படப்போகும் முன்னேற்றங்களின் பட்டியல், இப்போது படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் அவை அனுபவத்துக்கு வரும்போது பெரிய மாற்றமாகத் தெரியாது. ஏமாற்றம் மட்டுமே எஞ்சும். அறிவியல் கண்டுபிடிப்புகள் படிப்படியாக ஏற்படுகின்றன. அவை மிகவும் மெதுவாக பொதுமக்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்பட ஆரம்பிக்கின்றன. உதாரணமாக மின்சாரத்தை எடிசன் கண்டுபிடித்த மறுநாள் உலகம் முழுவதும் ஒளியூட்டப்பட்டுவிடவில்லை. இன்னும் கூட மின்சாரத் தொடர்பு இல்லாத பல கிராமங்கள் இருக்கின்றன. எனவே, மக்களது அனுபவங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் திடீரென்று ஏற்படுவதில்லை.

மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் பல அறிவியல் முன்னேற்றங்களைப்பற்றி காகு விவரிக்கிறார். அவற்றில் சிலவற்றை ஆய்ந்து அவற்றால் மக்களின் தேடலை நிறைவு செய்ய முடியாது என்பது இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது

1.மரணத்தை வெல்தல்

எல்லோரும் நூறு வயது வரை வாழ விஞ்ஞானம் வழிவகுக்கலாம். எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் என்றாவது ஒரு நாள் மரணம் அடைவதை தவிர்க்க முடியாது.  நான் பரமன் என்று உணர்ந்தவர்கள் மட்டுமே மரணத்தை வென்று பெருவாழ்வு வாழ்வர்.

2.நோயற்ற வாழ்க்கை

அனைத்து நோய்களையும் ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்து அதை முழுமையாக தடுக்கும் சக்தியும் எல்லோருக்கும் கிடைத்துவிடும். மேலும் வயதாவதை தடுக்கும் முயற்சியிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. யயாதி என்ற மன்னன் ஆயிரம் வருடங்கள் இளமையுடன் உலக இன்பங்களை அனுபவித்த பின்னரும் திருப்தி அடையாத கதை மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. எனவே, இளமையுடன் பலகாலம் வாழ்ந்தால் சலிப்புத்தான் ஏற்படுமே தவிர இன்பம் ஏற்படாது.

3. பொருள் உருவாக்கி (Personal Fabricator)

அணுக்களை மாற்றி அமைப்பதன் மூலம் எந்தப்பொருளை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் திறன் சாதாரண மக்களுக்கும் எதிர்காலத்தில் கிடைத்து விடும் என்று காகு கூறுகிறார். அரிசி, பருப்பு போன்றவற்றை வாங்க கடைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவரவர்கள் வீட்டிலேயே அனைத்துப் பொருள்களையும் எந்தச் செலவும் செய்யாமல் உருவாக்கிக் கொள்ளலாம்.

உணவுப் பொருள்கள் மட்டும் அல்லாமல் தங்கம், வைரம் போன்ற பொருள்களைக்கூட வேண்டிய அளவு யார்வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். எனவே, இந்தப்பொருள்களுக்கு இப்போது இருக்கும் முக்கியத்துவம் வருங்காலத்தில் இருக்காது.

எந்த செலவும் செய்யாமல் வேண்டிய பொருள்கள் அனைவருக்கும் உடனடியாக கிடைக்கும் காலம் வந்தாலும் மனிதன் திருப்தி அடையமாட்டான். யாருக்கும் கிடைக்காத பொருள் ஏதாவது இருக்கிறதா என்று தொடர்ந்து அவன் தேடுவான். இல்லயெனில், தற்காலத்தில் கம்ப்யூட்டர் வைரஸை உருவாக்குபவர்களைப்போல் மற்றவர்களுக்கு பொருள்கள் கிடைக்காமல் இருக்க ஏதேனும் தடைகளை ஏற்படுத்தி அதன் மூலம் இன்பமாய் இருக்க முயற்சி செய்வான். தான்தான் இன்பத்தின் ஒரே ஊற்று என்பதும் உலகத்துக்கு இன்பத்தைத்தரும் சக்தி இல்லை என்பதும் வேதம் படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியவரும் இரகசியம். எனவே, ‘நான் பரமன்என்று அறிந்தவர்கள் மட்டுமே எப்போதும் இன்பமாக வாழ்வார்கள்.

4. நினைத்ததை நடத்துதல்

மனதால் நினைப்பதன் மூலமே பொருள்களை நகர்த்தும் சக்தி மனிதனுக்கு ஏற்கனவே வந்து விட்டது. EEG என்ற கண்டுபிடிப்பின் முலம் எண்ணங்களின் ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில் நம் எண்ணங்களை செயலாக்க வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவை நடந்துவிடும்.

ஆயினும் மனதில் என்ன எண்ணங்கள் எப்போது தோன்றும் என்பதே நம் கையில் இல்லை என்று அறிந்தவர்கள் மட்டுமே இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் நன்மை அடைவார்கள். மற்றவர்களுக்கு நினைத்தது நடந்தாலும் திருப்தி ஏற்படாது. ‘ஏதோ ஒன்று என்னிடம் இல்லைஎன்ற எண்ணம் இவர்களை தொடர்ந்து தேடலில் ஈடுபடுத்தும்.

5. மூட் எலிவேட்டர்

மூளைக்குள் வேண்டிய அளவு மின்சாரத்தை செலுத்தி, மனதில் இருக்கும் சோகத்தை அகற்றி, இன்பமாக இருக்கும் வழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது,  எனவே தங்கள் மன நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை இயந்திரங்கள் மூலம் மனிதன் தீர்மானித்துக்கொள்ளலாம். ஆயினும் மனிதனுக்கு நிம்மதி கிடைக்காது.

சப்தம் ஏற்படுத்த நாம் ஏதாவது செய்யவேண்டும். அமைதியாக இருக்க நாம் ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. ‘மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் உணர்வுதான் நான்என்று அறிந்தவர்கள், அலைபாயும் மனதின் ஆட்டங்களை அமைதியாக அனுபவிப்பார்கள்.

6. தொலைநகர்த்தல் (teleportation)

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு உடனடியாகச் செல்ல முடியும் என்பது சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. மனிதனின் பரு உடலை முழுவதுமாக அழித்து அதே அச்சில் வேறு ஒரு இடத்தில் ஒரு உடலை உருவாக்கலாம் என்பது உண்மை. ஆனால் உயிர் என்ன ஆகும், நான் யார் என்பது போன்ற கேள்விகளுக்கு காகு பதில் சொல்வதில்லை. பரு உடல் அழிந்தாலும் நுண்ணிய உடல் அழியாது. எனவே, தொலைநகர்தல் மூலம் நிலவுக்கு ஒரு நொடியில் பயணம் செய்யக்கூடிய நாள் விரைவில் வரும் என்பது உண்மையே.

ஆனால், எதற்காக மனிதன் பயணம் செய்ய வேண்டும் என்ற மிக முக்கியமான கேள்வியை யாரும் கேட்பதில்லை. மனதின் தேவைகள் பயணம் செய்வதால்  நிறைவேறாது என்பதை அறியாமல் எல்லோரும் வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

7. இயந்திர மனிதன் (robots)

மனிதனால் உருவாக்கப்படும் தானியங்கி இயந்திரங்கள் மனிதனைப்போல் அறிவுடன் செயல்பட ஆரம்பிக்கும் காலம் விரைவில் வரும். ஆனால் அதற்குள் இயந்திரங்களை மனிதனுக்குள் பொறுத்துவதன் மூலம் மனிதன் இயந்திரமாக மாறும் நாள் வந்து விடும் என்பது காகுவின் கணிப்பு.

மூக்குக்கண்ணாடியின் உதவியால் பார்க்கும் திறனை நீடிக்க வைப்பதுபோல் அறுவை சிகிச்சை மூலம் மைக்ரோசிப்களை மூளைக்குள் பொறுத்தி ஞாபகசக்தியையும், முடிவெடுக்கும் திறனையும் மனிதனால் அதிகப் படுத்திக்கொள்ள முடியும். உடல் உறுப்புகள் அனைத்தையும் செயற்கையாக வளர்த்து உடலுக்குள் பொருத்திக்கொள்வதன் மூலம் உடல் ஆற்றலையும் தொடர்ந்து வளர்த்திக் கொள்ளலாம். சோதனைக்குழாயில் உருவாக்கி, தொழிற்சாலைகளில் செய்யப்பட்ட பாகங்களை பொறுத்தி உருவாக்கப்பட்டது மனிதனா இயந்திரமா என்பதை தீர்மானிப்பது கடினம் என்பது காகுவின் கருத்து.

நான் என்ற தன்னுணர்வு உள்ளவர்கள் மனிதர்கள் என்பது வேதம் தரும் விளக்கம். ஒருவேளை, செயற்கையாக உருவாக்கப்பட்ட ரோபோவுக்குள் நுண்ணிய உடல் உட்புகுந்து செயல்பட ஆரம்பித்துவிட்டால் ரோபோவுக்கும் நான் என்ற தன்னுணர்வு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ரோபோக்களும் வேதம் படித்துநான் பரமன்என்ற அறிவைப் பெற்றால்தான் நிறைவை அடையும்.

நான் என்ற தன்னுணர்வு இந்த உலகத்தில் இருந்து தான் வேறுபட்டவன் என்ற தவறான அறிவுடன் கூடியது. எனவே ரோபோக்களோ, மனிதர்களோ இந்த தவறான அறிவுடன் செயல்படும்வரை துன்பத்தை அகற்ற முடியாது.

முடிவுரை :

மனிதன் கடவுளாக மாறவோ பூமி சுவர்க்கமாக மாறவோ எதிர்காலத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் எப்போதுமே மனிதன் கடவுள்தான், பூமி சுவர்க்கம்தான். இந்த அறிவு எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் துன்பக் கலப்பில்லாத இன்பமாக வாழ்வது சாத்தியமாகும்.

அறிவியல் முன்னேற்றங்கள் என்பது இயற்கையான மாற்றம்தான். மனிதன்நான் செய்கிறேன்என்று எண்ணுவது அறியாமை. கடவுளின் பருவுடல்தான் பிரபஞ்சம். எனவே, பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் கடவுள் மட்டுமே பொறுப்பு.

நான் என்ற தன்னுணர்வுடன் செயல்படுபவர்களுக்கு உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நிம்மதியையோ ஆனந்தத்தையோ கொடுக்காது. ‘நான் பரமன்என்ற சரியான அறிவு பெற்றவர்களால் மட்டுமே உலகில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் இன்பமாக அனுபவிக்க முடியும்.

இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் ஆதாரமாக இருப்பது நான் என்ற அறிவு ஏற்பட்டபின் எந்த ஒரு குறிப்பிட்ட மாற்றத்திற்காகவும் காத்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விஞ்ஞான கண்டுபிடுப்புகள் மனிதனின் அழிவுக்கு வழிகோலுமா என்ற அச்சமும் ஏற்படாது. உண்மையில் எப்போதும் இருக்கும் எனக்கு, பொய் தோற்றமான பிரபஞ்சம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது.

எனவே, இப்போது இருப்பது போல எப்போதும் ஆனந்தமாக இருப்பது வேதம் படித்த ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். காகு போன்ற விஞ்ஞானிகள் தற்போது இருக்கும் பிரச்சனைகள் எதிர்காலத்தில் மறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் தங்களை அறியாமல் புதிய பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டு இருப்பார்கள்.       

பயிற்சிக்காக :

1. அறிவியல் முன்னேற்றத்தின் அவசியம் என்ன?

2. முன்னேற்றங்களும் அனுபவங்களும் என்ற தலைப்பில் கூறப்பட்ட கருத்து என்ன?

3. எதிர்காலத்தில் ஏற்படப்போவதாக காகு குறிப்பிட்ட மாற்றங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. Physics of the future  என்ற தலைப்பில் Dr. Michio Kaku அவர்களின் சொற்பழிவுகளை youtubeல் பார்க்கவும்.

2. விஞ்ஞானிகள் வேதம் படிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

3. அறிவியல் முன்னேற்றங்கள் அவசியம் இல்லையா?

4. வேதம் படித்து சரியான ஞானத்தைப் பெற்றால் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடமாட்டார்களா?

Saturday, February 9, 2013

Lesson 182: World is Maya (Brahmasutram 4.3.4-6)


பாடம் 182: விஞ்ஞானியின் பார்வை – Dr. மணி பௌமிக்.
பாடல்: 521-523 (IV.3.4-6)

அணு ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் (PhD in Quantum Physics from IIT) பெற்று, லேசர் கண் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மணி பௌமிக்கின் ஆராய்ச்சி முடிவுகள், வேதம் கூறும் உண்மைகளை நிரூபிக்கும் வகையில் அமைந்து இருப்பதை இந்தப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.

உண்மையின் மூன்று அடுக்குகள்

உலகம் இருப்பது உண்மை. ஆனால், அந்த உண்மையை அறிவியலின் அடிப்படையில் ஆராய்ந்தால், அது ஒன்றன் கீழ் ஒன்றாக, அதே சமயம் ஒன்றுடன் ஒன்று இணைந்த மூன்று அடுக்குகளால் ஆனது என்பதை அறியலாம். மேலெழுந்தவாரியாகத் தென்படும் முதல் அடுக்கு, திடம், திரவம், காற்று ஆகிய மூன்று நிலைகளில் உள்ள பொருள் (matter) ஆகும். பெரும்பாலான மக்கள், இந்த முதல் அடுக்கு மட்டும்தான் உண்மையான உலகம் என்ற அறியாமையுடன் வாழ்கிறார்கள்.

உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் அணுக்களால் ஆனவை என்ற கருத்து தொன்று தொட்டு நிலவி வருவது. ஆனால், ‘அணு என்றால் என்ன?’ என்ற விளக்கத்தை கொடுத்தவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தனித்தனியான சக்திப் பொட்டலங்களின் கூட்டமைப்புதான் அணு என்கிறார் அவர். அதாவது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வெறும் சக்தியின் வெளிப்பாடு மட்டுமே.

சக்தி (energy) என்பது உண்மையின் இரண்டாவது அடுக்கு. முதல் அடுக்கின் ஆதாரமாக இருக்கும் இந்தச் சக்திவிஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டது. சக்தியின் வெளிப்பாடுகளுக்கு வெப்பச் சக்தி, புவியீர்ப்பு விசை, காந்த சக்தி என்று பெயரிட்டாலும் இருப்பது ஒரே சக்திதான். அந்தச் சக்தியை அளக்க முடிவதாலும், அனுபவிக்க முடிவதாலும், பயன்படுத்த முடிவதாலும் அதை அறிந்து விட்டதாக கருத முடியாது. ‘சக்தி என்பது என்ன?’ என்ற கேள்விக்கு விஞ்ஞானிகளின் இறுதியான பதில், ‘தெரியாதுஎன்பதுதான்.

ஒரு பொருள் உண்மையில் இருக்கிறது என்பதை நிரூபிக்க அதன் உருவத்திற்கு பெயர் இடுவது மட்டும் போதாது. ‘இது பூமி’, ‘அது சூரியன்என்று பிரபஞ்சத்தில் உள்ள பொருள்களுக்கு பெயர் சூட்டுவதை மட்டுமே பாமர மக்கள் செய்கிறார்கள். ‘பூமி என்றால் என்ன?’ என்ற கேள்விக்கான இறுதி பதிலை அறிய, கடைசி வரை முயன்ற அறிவியல் அறிஞர்கள், ‘இந்த கேள்விக்கு பதில் கூற முடியாதுஎன்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். என்னவென்று தெரியாத சக்தி, உலகமாக காட்சி அளிக்கிறது. ‘உலகே மாயைஎன்பதுதான் இறுதியான உண்மை.

உலகம் உண்மையில் இருக்கிறதுஎன்ற நம்பிக்கைக்கு ஆதாரம், நமது ஐந்து புலன்கள். அவைகளால் உணரப்படும் பொருள்கள் உண்மையில் இல்லை. அவை இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது இந்த மாயாச் சக்தி. இந்தத் தோற்றத்தை உண்மை என்று நம்புவதனாலேயே, ‘நான் இந்த உலகத்தில் இருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன்என்ற எண்ணமும் நமது மனதில் எழுகிறது.

நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட இந்த மாயாச்சக்தியின் தொடர்ந்த நடனத்தை எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப் (electronic microscope), பார்டிக்கிள் ஆக்ஸலேட்டர் (particle accelerator), கணித கணிப்புகள் (mathematical constructs) மூலம் அறிவியல் அறிஞர்கள் பார்க்கிறார்கள். உண்மையின் இரண்டாவது அடுக்கான இந்தச் சக்தியின் நடனம்தான், மான், மயில், மனிதன் போன்ற உயிரினங்களாகவும் கல், கடல், காற்று போன்ற ஜடப் பொருள்களாகவும் காட்சி அளிக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக அறிகிறார்கள்.

தொடர்ந்து மாறிக்கொண்டு இருக்கும் சக்தியின் தொகுப்பான, மலையும் மரமும், மாறாமல் திடமாக காட்சி அளிப்பதற்கு என்ன காரணம்? சக்திப் பொட்டலங்கள் தனித்தனியாக உதிர்ந்து போகாமல், ஒரே அணுவாக சேர்ந்து இருப்பதற்கு காரணம் என்ன? அல்லாவுதீன் பூதம் பாட்டிலில் அடைக்கப்பட்டது போல சக்திப் பொட்டலங்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும்படி செய்வது புலம் (field).

புலம் என்ற இந்த மூன்றாவது அடுக்கு உண்மையை, ‘பிரிக்கமுடியாத காலம்-வெளியின் ஸ்தூல வெளிப்பாடுஎன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வர்ணிக்கிறார்.

ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்து, தன்னைச் சுற்றி இருக்கும் பொருள்களை கவரும் சக்தி, பூமிக்கு இருப்பதாக நியூட்டன் நினைத்தார். இது தவறு. பூமிக்கு கவரும் சக்தி ஏதும் இல்லை என்றும் பூமியை ஒன்றாக வைத்திருப்பதே புவியீர்ப்பு புலம்தான் (gravitational field) என்றும் கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன்.  

அண்டவெளியில் இருந்து பூமிப்பந்தை அகற்றிவிட்டாலும் புவியீர்ப்பு சக்தியின் பதிவு அதே வெற்றிடத்தில் தொடர்ந்து இருக்கும் என்ற திடுக்கிடும் உண்மையை குவாண்டம் கோட்பாடு (Quantum Field Theory) வெளியிடுகிறது.

திடமாக நம் முன்னே தென்படும் உலகம், ‘உண்மையில் இருக்கிறதுஎன்று நம்பும் வரை குவாண்டம் கோட்பாட்டை நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது. அணுக்களால் ஆன பொருள்களில் இருந்து, சக்தி வெளிப்படுகிறது என்ற தலைகீழான அறிவை மாற்றி, சக்தியில் இருந்து பொருள் தோன்றுகிறது என்ற அறிவியல் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டால், மேலும் ஆச்சரியமான உண்மையை அறியும் தகுதி நமக்கு ஏற்படும்.
கடல் அலைகள் பாறையின் மீது மோதும்போது, தெறிக்கப்படும் நீர்த்திவிலைகள், சிறிது மணித்துளிகள் வாழ்ந்து விட்டு, மறுபடியும் கடலிலேயே கலப்பது போல் அணு என்ற பொருள், சக்தியில் இருந்து விடுபட்டு, பொருளாக காட்சி அளித்துவிட்டு, மறுபடியும் சக்தியில் கலந்து விடுகிறது. இதுபோல் ஒவ்வொரு கணமும் தோன்றி மறைவதுதான் உலகம்.

புலம் என்ற கடலில் இருந்து, அலை என்ற சக்தியின் வெளிப்பாடாகத் தோன்றும் நீர்த்திவிலைகள்தான் அணுவை உண்டாக்கும் பல்வேறு சக்திப்பொட்டலங்கள். இதுதான் குவாண்டம் கோட்பாடு. இந்தப் புலம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கிறது. இதிலிருந்து தான் பிரபஞ்சம் உருவாகி உள்ளது.

இந்த மூன்று அடுக்குகளாலான பிரபஞ்சத்தை சரியாகப் புரிந்துக் கொள்ள பௌதீகத் துறையில் முதுகலைப் படிப்பு படிக்க வேண்டும். வேதம் கூறும் உண்மைகளை முறையாகப் படித்தாலும் இதே அறிவை அடையலாம்.

ஒரே உண்மை

மண்ணைத் தின்ற கண்ணனின் வாயில், பிரபஞ்சத்தையே காண முடிந்தது கட்டுக்கதை அல்ல. அது முற்றிலும் உண்மை என்பதை இன்றைய அறிவியல் நிரூபித்து இருக்கிறது. பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருக்கும் புலம் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள் இந்த உண்மையை விளக்குகின்றன. “புலம் என்னும் நூல் இழையால் பின்னப்பட்டதுதான்  பிரபஞ்சம் என்கிற மாபெரும் துணி. ஆயினும் இந்தத்  துணி முழுவதையும் ஒரே இழைக்குள் காணலாம்”

உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற தீவிர ஆசை உடைய அனைவரும் இது போன்ற நம்பமுடியாத ‘கதை’களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இது அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகள். கட்டுக்கதைகள் அல்ல.

காலியான இடைவெளி ஏதும் இல்லாமல் நெய்யப்பட்ட இந்தப் பிரபஞ்சத் துணியின் ஆதாரமாக இருக்கும் நூல் இழையில் ஒன்றுதான் ஒரு தனி மனிதன். அதே சமயம் அவனுக்குள் இந்த பிரபஞ்சம் முழுவதும் அடங்கியிருக்கிறது. ‘நான் பரமன்’ என்றும்இந்தப் பிரபஞ்சம் என்னை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறதுஎன்றும் வேதம் தந்த உண்மைகளை, குவாண்டம் கோட்பாடு நிரூபித்து இருக்கிறது.

கிடார் வாத்தியத்தின் கம்பிகளின் அதிர்வுகளுக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு ஒலி அலைகள் உண்டாவது போல் ஒரே புலம் தரும் வெவ்வேறு அதிர்வு அலைகளில் இருந்து உருவானதுதான் இந்தப் பிரபஞ்சம் என்று சரக்கோட்பாடு (string theory) கூறுகிறது. சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து பிரபஞ்சம் உருவானது என்ற சைவ ஆகம கருத்தின் நவீன வடிவம்தான் சரக்கோட்பாடு. ஒலியில் இருந்து வெளி என்ற பொருள் உண்டாகி அதிலிருந்து இந்த பிரபஞ்சம் அனைத்தும் உருவானது. பரமசிவனின் ஒருபாதியான சக்தியின் இயக்கம்தான் பிரபஞ்சத்தின் செயல்பாடு.

பரமன்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் சக்தியின் வெளிப்பாடு. ஆற்றல் காப்பு விதியின்படி (Law of conservation of energy) சக்தியை புதிதாக உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. சக்தி பொருளாகவும் பொருள் சக்தியாகவும் மாறலாம். இருப்பது எவ்வளவு என்று கேட்டால் கிடைக்கும் பதில் அதிர்ச்சியைத் தரும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்கள் உள்ளிட்ட மொத்த சக்தியின் கூட்டுத் தொகையை கணக்கிட்டால், கிடைக்கும் எண், ‘பூஜ்யம்’. ஆம்! சக்தியோ பொருளோ உருவாக்கப்படவே இல்லை. அவை இருப்பதாக காண்பிப்பது அறிவியல் அளவைகளுக்கு அப்பாற்பட்ட முக்கிய புலம் (Primary Field). இதைத்தான் உலகுக்கு ஆதாரம் பரமன் என்று ஆரம்பப் பாடங்களில் வேதம் அறிமுகம் செய்து வைத்தது.

பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது ஒரே முக்கிய புலம்தான் என்பது சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப் பட்டுவிட்டது. எவ்வித மாற்றமும் இல்லாமல் அனைத்து காலங்களிலும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் இந்த முக்கிய புலம் எவ்வித செயலையும் செய்வதில்லை. புவியீர்ப்பு புலம், காந்தப் புலம் போன்ற மற்ற அனைத்து புலம்களின் செயல்பாட்டுக்கு முக்கிய புலம் ஆதாரமாக மட்டும் இருக்கிறது. அது இருக்கும் இடம் இதுதான் என்று காட்டமுடியாது. ஏனெனில் அதற்கு ஒரு குறிப்பிட்ட உருவம் கிடையாது. இந்தக் கண்டுபிடிப்புகள்தான் அறிவியலின் எல்லை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி இதற்கு மேல் எதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதும் நிரூபணம் ஆகிவிட்டது.

நான் பலவாக ஆகுவேனாக

வாழைப்பூ வடை வேண்டும் என்று கேட்டவுடன் அது தட்டில் வந்து விழுந்து விடாது. அதைச் செய்யவேண்டும் என்ற திட்டம் ஒருவர் மனதில் உருவாகி, அதற்குத் தேவையான பொருள்களை ஒன்று சேர்த்து, முறைப்படி சமைத்த பின்புதான் அது நமது கைக்கு கிடைக்கிறது. மேலும் சமைப்பவரின் செயல்பாட்டை கவனித்தால் அவர் வாழைப்பூ வடைதான் செய்கிறார் என்பதையும் அறியலாம். இதைப்போலவே, பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பேயே, ‘மனிதன் அதில் வாழ வேண்டும்’ என்ற திட்டம் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்ற உண்மையை அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. ‘பிரபஞ்சம் தோன்றி, 1370 கோடி வருடங்களுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராயும் அளவுக்கு அறிவுடன் கூடிய மனிதன் தோன்றுவான்’ என்ற தீர்மானம் செய்தது முக்கிய புலம். ‘நான் பலவாக ஆகுவேனாக’ என்ற வேதவாக்கியம் இவ்வாறு அறிவியலால் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

பிரபஞ்சத்தின் ஒருமூலையில் இருக்கும் பூமிப்பந்தில் வசிக்கும் மனிதனுக்காகவே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உருவாக்கப்பட்டது  என்பது நம்புவது கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஒரு வாய்க்குள் அடங்கி விடக்கூடிய ஒரு வடையை உருவாக்க, வாழை மரம் வளர்ந்து பூக்க வேண்டும். எள்ளை காய வைத்து செக்கில் ஆட்டி நல்லெண்ணையை எடுக்க வேண்டும். இரும்பை உருக்கி இருப்புச்சட்டியாக மாற்ற வேண்டும். கடல் நீரை காய வைத்து உப்பை விளைக்க வேண்டும். இதுபோல, பற்பல வேலைகள் செய்து பலகாலம் கழித்துதான் வாழைப்பூ வடையை உருவாக்க முடியும். அதுபோல பிக்பேங்கில் ஹைடரஜன், ஹீலியம் போன்ற பளு குறைந்த தனிமங்களை முதலில் உருவாக்கி அதன் பின் மனித உடலை உருவாக்கத் தேவையான கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற கனமான தனிமங்களை, நட்சத்திரங்களை வெடிக்கவைத்து அதில் ஏற்படும் வெப்பத்தில் சமைப்பதற்கு நிச்சயம் 1370 கோடி வருடங்கள் ஆகும். பற்பல இயந்திரங்களும் உபகரணங்களும் இல்லாமல் ஒரு சிறு வாழைப்பூ வடையைச் செய்ய முடியாது. அதுபோல, பல கோடி நட்சத்திரங்களும் கிரகங்களும் இல்லாமல், மனிதன் வாழத்தகுந்த ஒரு பூமியை உருவாக்க முடியாது.

மனிதனை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன்தான் பிக்பேங்க் ஏற்பட்டது என்பது ஆச்சரியமான உண்மை. ‘இயற்கையைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்தி என்னவென்றால் அது எவ்வாறு மனிதனால் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்து உள்ளது என்பதுதான்என்கிறார் ஐன்ஸ்டீன். ‘ஒன்று பலவாக மாறியுள்ளதுஎன்ற உண்மையையும், ‘அந்த ஒன்று உணர்வு மயமானதுஎன்பதையும், இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அறிய முடியும்.

பரமன் உணர்வுமயமானவன்

குவாண்டம் கோட்பாட்டை சரியாகப் புரிந்துகொண்டால் பிரபஞ்சத்தின் ஆதாரமாக, உணர்வுமயமான ஒரு சாட்சி இருப்பதை மறுக்க முடியாது” என்கிறார் ஜான் வீலர். ‘அறிபவன் ஒருவன் இருக்கிறான்என்ற உண்மையின் அடிப்படையில்தான்ஒரு பொருள் இருக்கிறதுஎன்ற தீர்மானம் செய்ய முடியும். எனவே பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன்பே, அதை படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை என்று மேலும் அவர் கூறுகிறார்.

முடிவுரை :

பொருள் (matter) என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு விஞ்ஞானம் தரும் இறுதியான பதில், ‘சக்தியின் நடனம்’ (play of energy). ‘சக்தி என்றால் என்ன?’ என்ற அடுத்தக் கேள்விக்கான சரியான பதில்அதை அறிய முடியாது’. எதைப் புரிந்து கொள்ள முடியாதோ அதுவே மாயா சக்தி என்பதை அறிவியல் முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டது.

சக்தியின் ஆதாரமாக இருப்பது புலம் (field). பிரபஞ்சம் முழுவதும் அழிந்து விட்டாலும், புலம் என்பது ஒடுங்கிய நிலையில் தொடர்ந்து இருக்கும். பொருள், சக்தி, புலம் ஆகிய இந்த மூன்று அடுக்கான உண்மைகளையே ஸ்தூலப் பிரபஞ்சம், சூட்சும பிரபஞ்சம், காரணப் பிரபஞ்சம் என்ற பெயர்களில் வேதம் வழங்குகிறது.

முக்கிய புலம் (Primary Field) என்ற உணர்வுமயமான ஒன்று மனிதனும் மற்ற உயிரினங்களும் வாழத்தகுந்த ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஒரு காட்சிப் பொருளாக உருவாக்கியது தான் இந்தப் பிரபஞ்சம்.

வேதம் கூறும் அடிப்படை உண்மைகள் அனைத்தையும், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் அறிவியல் நிரூபித்து உள்ளது. ஆனால் இந்த உண்மைகளை வெறும் கோட்பாடுகளாக மட்டுமே கருதி, பிரபஞ்சம் பற்றிய  ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடவுள், மனிதன், பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய வேதம் கூறும் கருத்துக்களை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து, அவற்றை அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டால், இந்த அறிவைப் பெற்ற பலனாக அவர்களுக்கு முக்தி கிடைக்கும். ஆனால், தங்கள் கண்டுபிடிப்புகளை வெறும் புத்தக அறிவாக மட்டுமே அவர்கள் கருதுவதால், மனிதனின் துன்பங்களை இந்த அறிவின் உதவியுடன் அகற்ற அவர்கள் முயல்வதில்லை. இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் உண்மையான பயனை தீர்க்க தரிசிகளும் முற்றுணர்ந்தோர்களும் மட்டுமே அறிவார்கள்.     

பயிற்சிக்காக :

1. உலகம் என்ற உண்மையின் மூன்று அடுக்குகள் யாவை?

2. உலகம் உண்மையில் இருக்கிறதா?

3. நான் பலவாக ஆகுவேனாக என்ற வேத வாக்கியம் எப்படி நிரூபிக்கப் பட்டது?

சுயசிந்தனைக்காக :

1. Code Name God என்ற புத்தகத்தின் இறுதிப்பகுதிகளை மட்டும் படிக்கவும்.

2. அறிவியலால் நிரூபிக்கப்பட்ட வேதாந்த கருத்துக்களை வரிசைப்படுத்தவும். 

Tuesday, December 25, 2012

Lesson 181: World is God (Brahma Sutra 4.3.3)


பாடம் 181: ஞானியின் பார்வை ஓஷோ ரஜனீஷ்.
பாடல்: 520 (IV.3.3)

தத்துவ இயலில் முதுகலை பட்டம் பெற்று, கல்லூரியில் பேராசிரியராக வாழ்வைத் துவங்கிய ஓஷோ ரஜனீஷ் அவர்களின் பார்வையில் மனித வாழ்வைச் சித்தரிக்கும் வண்ணம் இந்தப் பாடம் அமைந்துள்ளது.

உலகம் ஒரு கண்ணாடி. கண்ணாடி முன் நின்று பார்த்தால் அவரவரின் முகம்தான் தெரியும். அது அழகாக இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்ணாடி தீர்மானம் செய்வதில்லை. வெளி உலகம் மனிதனுக்கு இன்பத்தையோ துன்பத்தையோ தருவதில்லை. மனிதனின் மனம் எப்படி இருக்கிறதோ அதைத்தான் உலகம் பிரதிபலிக்கும். உதாரணமாக கோபமாக இருப்பவனின் கண்ணுக்கு அழகான மலர் தென்படாது. ஆனால் அவன் காதலில் மூழ்கி இருந்தால் கள்ளிச்செடிக் கூட கவர்ச்சியாக காட்சி அளிக்கும். பார்க்கப்படும் பொருளை விட பார்ப்பவனின் மனநிலை முக்கியமானது. துன்பங்களுக்குத் தீர்வு வெளி உலகில் இல்லை. உள்ளே இருப்பதை வெளியே காட்டும் கண்ணாடியை மாற்ற முயற்சிப்பது வீண்.

தன்னைத்தானே மாற்றிக்கொள்வதும் முடியாது. இடது கைக்கும் வலது கைக்கும் நடக்கும் போராட்டம் முழுமையான வெற்றி அல்லது முழுமையான தோல்வியில் முடிவதில்லை. ஏனெனில் இருப்பது ஒரே ஆள். தன்னுடன் தானே சண்டை செய்தால் மனக்கொதிப்பு, கோபம், சோகம், களைப்பு போன்ற வேண்டாத விளைவுகள் மட்டுமே ஏற்படும். வெற்றி கிடைக்காது. மனதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்வது யார்? இப்படி இருக்கும் நான் அப்படி ஆக வேண்டும் என்று முயற்சி செய்வது இரண்டு கைகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் போன்றது.

சரியான அறிவை அடைவதன் மூலம் நாம் நம் மனதை சரி செய்து கொள்ளலாம். அதன் பின் வாழ்வே ஒரு கொண்டாட்டமாக மாறிவிடும். புத்தர், மாகாவீரர் போன்ற மகான்கள் காட்டும் வழி இதுவே.

அறிவும் துன்பமும்

வாழ்வில் துன்பத்தை அகற்றி இன்பமாக இருக்க சரியான அறிவை அடைய வேண்டும். ஆனால் அறிவு அதிகமாக அதிகமாக துன்பங்கள் அதிகமாவதைத்தான் நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்.

பையில் வைத்திருந்த பணம் காணாமல் போனால் வருத்தம் ஏற்படுவது இயற்கை. பணம் ஏன் தொலைந்து போனது என்ற ஆராய்ச்சியால் ஏற்படும் துன்பம் செயற்கை. பணத்தை தேடித் திரும்பப்பெற முயற்சி செய்வதில் தவறு இல்லை. ஆனால் அது கிடைக்குமா என்ற தவிப்பு அனாவசியம். பணம் தொலைந்து போனதற்கு எப்படி எவ்வித காரணமும் கிடையாதோ அது போல் அதை திரும்பப் பெறுவதற்கும் நமது முயற்சி காரணமாக இருக்காது. ‘என்ன செய்ய வேண்டும் அல்லது எப்படிச் செய்ய வேண்டும்?’ என்பது போன்ற கேள்விகளுக்கு அறிவாளி அதிக பதில்களை கொடுப்பான். எனவே அவனது துன்பமும் அதிகமாக இருக்கும். அவ்வளவு தூரம் யோசிக்காதவர்கள் ஏதோ என் விதிஎன்று இயற்கையாக ஏற்படும் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பார்கள். ‘இது ஏன் நடந்தது?’, ‘நான் இதைச் செய்து இருக்க கூடாதுஎன்பது போன்ற செயற்கைத் துன்பங்கள் இவர்களை பாதிக்காது. மேலும் உலக அறிவு அதிகமாக இருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது. எதிர்காலம் பற்றி ஏதாவது அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.

இது போல், அதிக அறிவு அதிக கலக்கத்தையே கொடுக்கும். நிம்மதியைக் கொடுக்காது. நான் வேறு. இந்த உலகம் வேறுஎன்று நாம் நினைத்துக் கொண்டு இருப்பதுதான் இதற்குக் காரணம். எல்லாவற்றையும் ஆராய்ந்து, காரண காரியங்களை கண்டுபிடுத்து, எல்லைக்கோட்டை வரையும் இந்த அரைகுறை அறிவு துன்பத்தை மட்டுமே தரும். அனைத்தும் ஒன்றுதான் என்பது முழுமையான அறிவு. இந்த அறிவை பெற்றவர்களை செயற்கைத் துன்பம் அணுகாது. உலகின் தன்மையைப் பற்றிய இந்தச் சரியான அறிவுதான் இன்ப வாழ்வுக்கு வழிவகுக்கும்.

இருமைகள் இயற்கையானவை

இயற்கையாக ஏற்படும் துன்பங்கள் வாழ்வில் அவசியமானவை. இன்பம் என்ற வார்த்தைக்கு துன்பம் என்ற வார்த்தைதான் பொருளைத்தருகிறது. அதுபோல் இந்த உலகில் உள்ள அனைத்தும் எதிர்ப்பதங்களுடன் கூடிய வார்த்தைகளால் மட்டுமே உருவாகியுள்ளன. மேடு இல்லாவிட்டால் பள்ளம் இல்லை. இதுதான் படைப்பின் இரகசியம்.

கடிகாரத்தின் பெண்டுலம் இடது பக்கம் சென்றால்தான் வலது பக்கம் செல்ல முடியும். வலது பக்கம் செல்வதும் இடது பக்கத்திற்குத் திரும்புவதற்காகவே. இரண்டும் ஒன்றுதான். இதுபோல் வாழ்க்கையில் இருக்கும் இன்பம்-துன்பம், புகழ்-இகழ், வறுமை-வளமை ஆகிய அனைத்து இருமைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. ஒன்று இல்லாவிட்டால் மற்றது இல்லை. இது புரிந்துவிட்டால், ‘இது வேண்டும் அது வேண்டாம்என்று தேர்வு செய்வது அனாவசியம் என்ற அறிவு ஏற்படும். வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அதில் பங்கேற்காத சாட்சியாக பார்த்து அனுபவிக்க முடியும்.

இந்த அறிவு ஏற்படும் வரை, மனிதன் செயற்கையான துன்பத்தை தொடர்ந்து அனுபவிப்பான். இன்பத்தை மட்டும் தரும் இடமாக உலகை மாற்றிவிடலாம் என்று அவன் செய்யும் முயற்சிகள், இரு கைகளின் போராட்டத்தைப் போல் தோல்வியிலேயே முடியும். இதனால் இயற்கையாக ஏற்படும் துன்பத்தைவிட பன்மடங்கு செயற்கைத் துன்பத்தை மனிதன் அனுபவிக்கிறான்.

தானும் மற்றவர்களும் ஒன்றுதான் என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைவர் மீதும் இயற்கையாக அன்பு ஏற்பட்டுவிடும். யாரையும் வெறுக்க முடியாது. யார் மீதும் பொறாமை கொள்ள முடியாது. போராட்டம் ஏதும் இன்றி வாழ்வில் வெற்றி அடையும் வழி இது ஒன்றுதான்.

இன்பத்தை அடையும் வழி

கைகள் நிரம்ப வைத்திருக்கும் கற்களை கீழே போட்டால்தான் வைரங்களை எடுக்க முடியும். துன்பத்தை துறந்தால்தான் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

தூணைக் கட்டிபிடுத்துக்கொண்டு என்னை அவிழ்த்து விடுங்கள் என்று கூப்பாடு போடுபவனைப்போல பிரச்சனைகளை பிடித்து வைத்துக்கொண்டு அவதிப் படும் மனிதர்களால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

துன்பம் வெளியே இருப்பது. இன்பம் நமக்குள் இருப்பது. துன்பத்தை அடக்கி வைத்தால் அதிகமாகும். வெளிப்படுத்தினால் குறையும். இன்பத்தை அடக்கி வைத்தால் குறையும். வெளிப்படுத்தினால் அதிகரிக்கும். துன்பத்தை வெளிப்படுத்த தனிமை அவசியம். இன்பத்தை மட்டுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். துன்பம் நம்முடன் தொடர்பற்றது என்பதை அறிந்தால் அவை தானாக நம்மைவிட்டுப் போய்விடும்.

ஒவ்வொரு மனிதனிடமும் முக்தி அடையும் திறன் ஒளிந்து உள்ளது. வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புதான் முக்தியை தடை செய்கிறது. இதை அறியாமல், எவ்வளவு முயன்றாலும் வெற்றியை தரக்கூடிய சரியான பாதையை மனிதனால் கண்டுபிடிக்க முடியாது. தான் யார் என்பதை அறிந்தவர்கள் எந்தப் பாதையில் பயணம் செய்தாலும் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

தான் யார் என்பது பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதையும் தன் உலக அறிவு, முட்டாள்தனத்தின் மற்றொரு பெயர் என்பதையும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். துன்ப கலப்பற்ற இன்பத்தைப் பெற கடவுளை நாடி கோவிலுக்குச் செல்லாமல் கடவுளை நேரடியாக அறிந்த ஞானிகளின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

புகழ் பெற்ற மனிதர்களை முன்மாதிரியாகக் கொண்டு தானும் அவர்களைப்போல் ஆகவேண்டும் என்பது தவறான ஆசை. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். உன்னைப்போல் ஒருவன் இதுவரை இந்த உலகில் பிறந்ததும் இல்லை; இனிப் பிறக்கப் போவதும் இல்லை. பூத்துக்குலுங்கும் நந்தவனத்தில் ஒரு மலரைப்போல இன்னொரு மலர் இருப்பதில்லை. ஒவ்வொரு மலரும் முழுமையாக பூத்து இருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர, சம்பங்கிப்பூ ரோஜா மலரைப்போல மாற வேண்டும் என்பது அவசியமில்லை. அதுபோல நான் நானாக முழுமை அடைய, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியை கைவிட வேண்டும். மற்றவர்களை ஒப்பிடுவதனால் மட்டுமே முன்னேற்றம் என்ற வார்த்தைக்கு பொருள் கிடைக்கும். முழுமை அடைய தன்னை யாருடனும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வேறு யாரைப்போலவும் இல்லாமல் தனித் தன்மையுடன் கூடிய தன் உடலையும் மனதையும் போற்றி ஏற்றுக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெற்று விடலாம்.
வானவெளியில் தென்படும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவு ஒளியைச் சிந்தி அதனதன் பாதையில் வலம் வருகின்றன. முன்-பின், உயர்வு-தாழ்வு, வேகமானது-மெதுவானது என்பது போன்ற பாகுபாடுகளைச் செய்யாமல் அனைத்து நட்சத்திரங்களையும் அப்படியே நாம் ஏற்றுக்கொள்வது போல் நம்மையும் மற்றவர்களையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிழலிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று ஓடாமல், நிழல் வெறும் தோற்றம் என்பதை அறிந்து கொள்வதால் மட்டுமே நிம்மதி கிடைக்கும். அதுபோல வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பை நிறுத்தினால் மட்டுமே துன்பம் கலப்பில்லாத இன்பம் நமக்கு கிடைக்கும்.

பிச்சைபாத்திரத்தை கையில் ஏந்தி தெருத்தெருவாய் அலைந்து கொண்டிருந்த புத்தர்தான் உண்மையில் சக்ரவர்த்தி. ஏனெனில் அவருக்கு வேண்டியது என்று எதுவுமில்லை. மேலும், துன்பத்தைப் போக்கும் வழியை நாடி, மக்கள் அவரிடம் யாசித்துக் கொண்டு இருந்தார்கள். இன்னும் வேண்டும் என்று அலையும் மக்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்கள் ஏழைகளே.

துன்பங்களுக்குக் காரணம் ஆசை. ஆசைப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இந்த உலகமும் நானும் ஒன்றுதான் என்ற அறிவும் உலகில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையன என்ற அறிவும் ஏற்பட்டால் செயற்கையான துன்பத்தைத் தரும் ஆசைகள் ஏற்படாது. பிடித்துக்கொண்டிருக்கும் தூணை விட்டுவிட்டு துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம்.

பொதுவாக துன்பத்திலிருந்து விடுதலைப் பெற்றவுடன் இன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்து விடலாம். ஆனால், நம்முள் இருக்கும் இன்பத்தை அனுபவிக்கத் தேவையான  ‘புலன்களின் கூர்ந்து உணரும் திறனை’ (sensitivity) அதிகப்படுத்திக் கொள்ள சில காலம் ஆகும்.
   
கடவுளைச் சுவைக்க வேண்டும்.

உலகை அனுபவிப்பதைவிட அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் மக்களிடம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் நம் நாட்டை பார்த்து அனுபவிக்க இங்கே வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அவர்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இருப்பதை அனுபவிக்காமல் இல்லாததை அடையவேண்டும் என்ற ஆர்வம்தான் இதற்குக் காரணம்.

பொருள்களுக்கும் நமது ஐந்து புலன்களுக்கும் ஏற்படும் தொடர்பால் விளைவது அனுபவம். இன்னும் வேண்டும் என்ற ஆர்வம் நமது புலன்களை மரத்துப்போக வைக்கின்றது. இதனால் சுற்றி இருக்கும் உலகை அனுபவிக்க முடியாமல் புதிதாக ஏதேனும் வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.

கடவுள்தான் உலகம். நமது ஐந்து புலன்களால் அனுபவிக்கும் அனைத்தும் கடவுளைத் தவிர வேறு எதுவும் இல்லை. தண்ணீர் குடிக்கும்போது கடவுளைத்தான்  சுவைக்கிறோம். ஆனல் பழச்சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை பருகி பழகிப்போன நாக்கு, வெறும் தண்ணீரின் சுவையை அறிவதில்லை. உலகில் உயிர்வாழ ஒரு கைபிடியளவு அரிசியும் குடிக்கத் தண்ணீர் மட்டும் போதும். இந்த நிறைவோடு நீரைக் குடித்தால் கடவுளின் சுவைத் தெரியும்.

கடலில் வாழும் மீன் கடல் நீரை அனுபவிப்பது இல்லை. அதை பிடித்து மணலில் போட்டு சிறிது நேரம் தவிக்கவிட்டு அதன்பின் கடலில் விட்டால் அது கடல் நீரை அனுபவிக்க ஆரம்பிக்கும். முக்தி அடைவது இதுபோல்தான். பரமன் என்ற வார்த்தைக்கு எங்கும் பரவியிருக்கும் அளவற்ற பெருமாள் என்று பொருள். இங்கே இப்போது நாம் அனுபவிப்பதுதான் கடவுள் என்பதை அறிய நமது புலன்கள் உணர்ச்சி உள்ளதாக இருக்கவேண்டும். ஆர்வமுடன் தேடி அலைவதைவிட அனுபவிப்பதுதான் முக்கியம் என்று உணர ஆரம்பித்தால் புலன்களின் கூர்ந்து உணரும் திறன் அதிகமாகும். அதன்பின், சுவாசிப்பது, நடப்பது, சுற்றியிருப்பதை பார்ப்பது என்பது போன்ற செயல்களிலேயே நாம் முழுமையான திருப்தியை அடைவோம். இன்பத்தைத் தேடி நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முக்தி என்பது முயற்சி செய்து எதிர்காலத்தில் அடைய வேண்டிய ஒன்று அல்ல. இங்கே, இப்போதே நாம் பெறும் அனுபவங்கள்தான் முடிவான ஆனந்தம் என்பதை அறிந்துக்கொள்வதுதான் முக்தி.

அறிவும் அனுபவமும்

சரியான அறிவுதான் நீடித்த இன்பத்திற்கு காரணம் என்றாலும் அறிவு நேரடியாக இன்பத்தைக் கொடுத்துவிடாது. சரியான அறிவுடன் புலன்களின் மூலம் உலகப்பொருள்களை அனுபவிப்பதாலேயே இன்பம் கிடைக்கும்.

உலக அறிவு இன்பத்தைக் கொடுக்காது என்பதால் வேதம் கூறும் அறிவை அடைய முயலும் முக்திவிழைவோர்களில் பலர் முக்தி அடைவதில்லை. வேதம் தரும் அறிவு கூட உலக அறிவைப்போல மனதளவில் ஏற்படுவதுதான். வாழ்வைப்பற்றிய வர்ணனையை மட்டுமே மனம் செய்து வருகிறது. முக்தி அடைய இந்த வர்ணனைதான் தடையாய் இருக்கிறது.

கணக்கை முறையாகப் போடாமல் புத்தகத்தின் இறுதியில் இருக்கும் விடைகளைப் பார்த்து எழுதுபவர்களைப் போல உலகை அனுபவிக்காமல், ‘நான் பரமன் என்று வேதம் கூறுகிறது’ என்று புத்தக அறிவைப் பெறுபவர்கள் இன்பம் அடைவது இல்லை. கைகளால் தொடும் அனைத்துப் பொருள்களையும் கடவுளாக அனுபவிப்பவர்கள்தான் வாழ்க்கை என்ற புதிரின் விடையை கண்டு பிடித்தவர்கள். இவர்களின் விடையை சரிபார்க்க மட்டுமே வேதங்களின் இறுதிக் கருத்து உதவும்.

முடிவுரை :

வாழ்வு என்பது ஒரு புதிர் அல்ல. அது ஒரு ஆத்ம அனுபவம். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு மதகுருமார்கள், தத்துவ ஞானிகள், அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுனர்கள் போன்றவர்கள் பலவிதமான பதில்களை கொடுத்து இருக்கிறார்கள். மனித இனத்தின் வரலாற்றைப் பார்த்தால் இந்த பதில்கள் ஒவ்வொன்றும் பல கேள்விகளை உருவாக்கி, மனித வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றியிருப்பது தெரியவரும்.

வாழ்க்கை மனம் சம்பந்தப்பட்டது அன்று. அது மனதிற்கு அப்பாற்பட்டது. வாழ்வு என்றால் என்ன என்பதை மனதால் புரிந்து கொள்ளவே முடியாது. புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் இன்பமாக வாழ்வதற்கு மனம் நமக்குத் தேவையில்லை.

ஞானம் (wisdom) என்பது புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்வது அல்ல. அது எந்தக் கேள்விக்கான பதிலும் இல்லை. கேள்விகள் எதுவும் இல்லாமல் ஆனந்தமாக இருக்கும் நிலையே ஞானம். வாழ்வில் அது ஒரு நிகழ்வு அல்ல. வாழ்வு முழுவதும் தொடரும் ஒரு ஆனந்த அனுபவம் அது.

இதைச்செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பது போன்று எந்த வித கட்டாயமும் இல்லாமல் சுதந்திரமாக இந்தக் கணம் நமக்கு ஏற்படுத்தும் அனைத்து அனுபவங்களையும் இனிமையாக அனுபவிப்பது மட்டுமே வாழ்வின் நோக்கம்.

மனிதன் நன்றிகெட்டவன். அவனது இனிய அனுபவத்திற்காக மட்டுமே இந்த பரந்த பிரபஞ்சம் காத்திருக்கிறது. உதிக்கும் சூரியனையோ, மலரும் மலரையோ, பறக்கும் பறவைகளையோ அவன் கவனிப்பதே கிடையாது. எங்கோ இருக்கும் சுவர்க்கத்திற்கு போகவேண்டும் என்ற ஆசை, எதிரே இருக்கும் உலகை அவன் கண்களில் இருந்து மறைத்து விடுகிறது. இந்த பிரம்மாண்டமான கனவு உலகில் இன்பமாக வாழ முதலில் விழிப்பு ஏற்படவேண்டும். இந்தக் கணத்தில் நமக்கு ஏற்படும் அனுபவங்களை முழுமையாக ஏற்று மகிழ்வதைத்தவிர வாழ்வில் வேறு நோக்கம் எதுவும் இல்லை. இந்த அறிவு மனதில் நிலைபெற்றபின்தான் அவனுக்கு நன்றியுணர்வு ஏற்படும்.

பறக்கும் பட்டாம்பூச்சியைத் துரத்தி ஓடும் குழந்தையைப் பார்த்து ‘நீ எதற்காக ஓடுகிறாய்?’ என்று கேட்டால் அது நம்மை பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் பார்க்குமே தவிர பதில் சொல்லாது. வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்று நினைப்பவர்கள் பைத்தியக்காரர்கள்தான்.

நீ என்னை எதற்காக காதலிக்கிறாய் என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடிந்தால் அது காதல் அல்ல. அதுபோல் ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்பவர்கள் வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். காதலிப்பதுதான் குறிக்கோள். இந்தப் படைப்பு முழுவதையும் காதலிப்பதுதான் வாழ்க்கை.

ஆனந்தம் என்பது அடையப்பட வேண்டிய ஒன்று அல்ல. வாழ்வே ஆனந்தம். ஒவ்வொருக் கணமும் நமக்கு அளிக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கவிடாமல் தடை செய்வது நமது குறிக்கோள்கள். இறைவனின் ஆனந்தத் தாண்டவம் நம்மைச் சுற்றி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அந்த ஆனந்த மழையில் நனைய நாம் குழந்தையைப் போல எவ்வித குறிக்கோளும் இல்லாமல் விளையாட்டுத் தனமாய் இருக்க வேண்டும்.


பயிற்சிக்காக :

1.உலகம் துன்பம் தருவதாகத் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

2. இயற்கைத் துன்பம் செயற்கைத் துன்பத்திலிருந்து எந்த வகையில் வேறு படுகிறது?

3.இன்பத்தை அடையும் வழி யாது?

4.கடவுளைச் சுவைக்க முடியுமா?

5. செயற்க்கையான துன்பத்தைத் தரும் ஆசையைத் தவிர்க்க நாம் பெற வேண்டிய இரு அறிவுகள் எவை?

சுயசிந்தனைக்காக :

1. “Vedanta: Seven steps to Samadhi”, “The voice of silence” என்ற ஓஷோவின் புத்தகங்களைப் படிக்கவும்.

2.இரு கைகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் என்ற உதாரணத்தின் மூலம் கூறப்பட்ட இரண்டு கருத்துக்கள் யாவை?

3.குறிக்கோள்கள் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் எப்படி ஏற்படும்?

4. பெருமாள் என்ற பெயரின் பெயற்காரணத்தை ஆராய்க.