Thursday, April 22, 2010

Lesson 117: Four divisions of the society ( பிரம்ம சூத்திரம் 3.3.29-30 )

பாடம் 117: சமூகத்தின் நான்கு பிரிவுகள்
பாடல் 388-389 (III.3.29-30)

தனிமனிதனின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து வழிகாட்டிய வேதம் சமூக முன்னேற்றத்திற்காக சமுதாயத்தில் உள்ள மக்களை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளது என்னும் கருத்தை இந்த பாடம் தருகிறது.

நான்கு பிரிவுகள்

ஒரு தனிமனிதனால் தான் சுகமாக வாழ தேவையான அனைத்து பொருள்களையும் சூழலையும் தானாக அமைத்துக்கொள்ள முடியாது. மற்றவர்களுடன் சேர்ந்து வேலையை பகிர்ந்து கொண்டால்தான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும். எனவே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என நான்கு பிரிவாக மக்களை பிரித்து அவரவர் செய்யவேண்டிய கடமைகளை வேதம் விவரித்துள்ளது.

பிரிவின் அடிப்படை

மக்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை தீர்மானிக்க மூன்று அடிப்படைகள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை குணம், தொழில் மற்றும் பிறப்பு ஆகியவை. பிராமணர் குலத்தில் பிறந்தவர் பிறப்பின் அடிப்படையில் பிராமணர். அவர் அரசியலில் சேர்ந்து அரசாங்கத்தில் மந்திரியாக பணியாற்றினால் தொழில் அடிப்படையில் அவரே சத்திரியர். மந்திரியாக வேலை செய்யும்பொழுது பொதுமக்களுக்காக உழைக்காமல் தனக்கு எவ்வளவு சொத்து சேர்த்துக்கொள்ள முடியும் என்பதிலேயே கவனம் கொண்டிருந்தாரானால் குணத்தின் அடிப்படையில் அவரே வைசியர். மூளையை பயன்படுத்தாமல் மேலிடத்தின் ஆணைபடி சட்டசபையில் கைதூக்கும் வேலையை மட்டும் செய்தாரானால் அவரே சூத்திரர். எனவே ஒருவர் பிராமணரா, சக்திரியரா, வைசியரா அல்லது சூத்திரரா என்ற கேள்விக்கு பதில் அடிப்படையை பொறுத்து மாறும்.

சமுதாயம் வேகமாக வளர அவசியமான அனைத்து வேலைகளையும் நான்காக பிரித்து அவ்வேலைகளை செய்ய தகுதியானவரா என்பதை அறிய மக்களை அவர்களின் குணத்தில் அடிப்படையில் நான்காக பிரித்து அவரவர் தங்களுக்கு ஏற்ற வேலையை செய்யவேண்டும் என்று வேதம் விதித்துள்ளது.

பிராமணர்கள்: சொல்லித்தருதல், எழுதுதல், அலோசனை வழங்குதல், திட்டமிடுதல் போன்ற புத்தியை பிரதானமாக உபயோகித்து செய்ய வேண்டிய வேலைகளை பொறுமையும், நிதானமும், தன்னலம் கருதாமல் பிறருக்காக அயராது உழைக்கும் மனோபாவமும் கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

சத்திரியர்கள்:ஆட்சிபுரிதல், கட்டுப்படுத்துதல், அனைவரையும் தூண்டிவிட்டு உற்சாகபடுத்தி இலக்கை எட்டுதல் போன்ற புத்தியுடன் உடல் உழைப்பையும் உபயோகித்து செய்ய வேண்டிய வேலைகளை ஆற்றலும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னலம் கருதாமல் பிறருக்காக அயராது உழைக்கும் மனோபாவமும் கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

வைசியிர்கள்:வணிகம் மற்றும் தொழில் செய்தல், விவசாயம் மற்றும் பண்ணைகளை நடத்துதல், சமூகத்தின் வளர்ச்சி மற்றும் கேளிக்கை தேவைகளை நிறைவேற்றும் துறைகளில் உழைத்தல் போன்ற உடல் உழைப்பை பிரதானமாகவும் புத்திகூர்மையை ஆதாரமாகவும் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை அதிக வருமானம் கிடைக்கும் என்று சுயநலத்துக்காக அயராது உழைக்கும் தன்மை கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

சூத்திரர்கள்:கூலிவேலை செய்தல், துப்புரவு வேலை போன்ற உடல் உழைப்பை மட்டுமே பிரதானமாக கொண்டு செய்யப்படும் வேலைகளை சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தகுதி இல்லாதவர்களும், புத்திகூர்மையற்றவர்களும் செய்ய வேண்டும்.

வேலைகளை மாற்றிக்கொள்வதன் மூலமும் குணத்தை மாற்றிக்கொள்வதன் மூலமும் யார்வேண்டுமானாலும் ஒரு பிரிவிலிருந்து மற்றதற்கு மாறிக்கொள்ளலாம்.

குணமும் தொழிலும்

சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் நான்காக பிரித்து அவற்றை செய்யவேண்டிய மனிதர்களின் குணத்தையும் நான்காக பிரித்து வேதம் வகுத்தவிதத்தில் அவரவர்கள் தங்கள் குணத்திற்கேற்ற வேலையை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். இது எல்லா காலங்களுக்கும் பொருந்தும்.     

உதாரணமாக அமைதி மற்றும் பாதுகாப்பு இல்லாத இடத்தில் யாராலும் நிம்மதியாக வாழ முடியாது. எனவே கள்ளர்களிடமிருந்தும் அயல்நாட்டு படையெடுப்பிலிருந்தும் மக்களை காப்பாற்ற மக்களில் ஒருசிலர் நிலையான அரசாங்கம் அமைப்பது அவசியம். இது சத்திரியர்களுடைய வேலை. தன்னலமற்ற சத்திரிய குணமுள்ளவர்களுக்கு பதில் சுயநலத்துடன் வேலைசெய்யும் வைசிய குணமுள்ளவர்கள் அரசியலில் ஈடுபட்டால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவர் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பது பெரும்பாலும் தேவையற்ற ஒரு ஆராய்ச்சி. பெற்றோர்களின் குணம்தான் பிள்ளைக்கு இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் கலப்புத்திருமணங்கள் காரணமாக யாரையும் பிறப்பின் அடிப்படையில் பிரிப்பது எளிதான காரியமல்ல.

உயர்வு தாழ்வு

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்கள். வேதம் சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்தன் நோக்கம் பிறப்பின் அடிப்படையில் யாரையும் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று பாகுபடுத்துவது அல்ல.

செய்யும் வேலைகளின் அடிப்படையில் அனைத்து பிரிவினரும் சமமான அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எந்த ஒரு வேலை சரியாக செய்யப்படாவிட்டாலும் சமுதாயத்தின் முன்னேற்றம் தடைபடும். எனவே நான்கு பிரிவினரும் செய்யும் வேலையின் அடிப்படையில் சமமானவர்களே. ஆனால் பெரும்பாலோர் காசேதான் கடவுளடா என்ற கொள்கையுடன் இருப்பதால் எந்த வேலை அதிகபணம் சம்பாதிக்கும் வாய்ப்பை கொடுக்கிறதோ அது உயர்ந்ததாக கருதப்படுகிறது.

குணத்தின் அடிப்படையில் பிராமணன் மற்ற மூன்று பிரிவினரைவிட மேலானவன். ஏனெனில் உலக பொருள்களில் பற்றுதல் இல்லாமல் முக்திக்காக உழைப்பவன் பிராமணன் ஒருவனே. பொதுநலத்திற்காக உழைப்பவன் என்ற காரணத்தால் சத்திரியன் இரண்டாவது இடம். சோம்பேறியாக இல்லாமல் கடினமாக உழைப்பவன் என்ற காரணத்தால் வைசியன் மூன்றாவது இடம். புத்திகூர்மையும் உழைக்கும் ஆவலும் இல்லாத சூத்திரர்கள் நான்காவது இடம்.

வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும் யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அது போல வைசியன் தன்னலத்தை துறந்து சத்திரியனாக உயரந்தால் அவன் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் வாழும் பிராமணனை விட சிறந்தவனாக வேதத்தின் பார்வையில் கருதப்படுவான்.      

முடிவுரை :

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெரியும். எனவே எல்லோரும் தங்கள் சுபாவத்திற்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுத்து அதை திறமையாக செய்வதன் மூலமும் வேதம் படித்த பண்டிதரின் உபதேசத்தை கேட்டு அதன்படி நடப்பதனாலும் தங்கள் தற்போதைய நிலமையிலிருந்து முன்னேறலாம். சூத்திரன், வைசியனாகி, வைசியன் சத்திரியனாகி, சத்திரியன் பிராமணனாகி, பிராமணன் முக்தியடைந்தவனாக மாறவேண்டும். மேலும் அனைத்து வேலைகளையும் அவற்றிற்கு ஏற்ற திறமை படைத்தவர் செய்தால்தான் சமூகம் வளர்ச்சி பெறும்.

தனிமனித முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றம் ஆகிய இரு நோக்கங்களையும் நிறைவேற்ற சமூகத்தை நான்காக பிரித்து அவரவரின் குணத்துக்கு ஏற்ற வேலையை செய்யவேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது.

பயிற்சிக்காக :

1. சமூகத்தை எந்த நான்கு பிரிவாக வேதம் பிரித்துள்ளது ?

2. இந்த நான்கு பிரிவுகள் எந்த மூன்று அடிப்படையில் பிரிக்கபட்டுள்ளன?

3. நான்கு பிரிவுகளை தாழ்ந்த பிரிவிலிருந்து உயர்ந்த பிரிவு வரை வரிசைபடுத்துக.

4.வேதம் இந்த பிரிவுகளை ஏற்படுத்த காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. எந்த வேலையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற அடிப்படையில் வேலையை தேர்ந்தெடுத்தால் என்ன தவறு?

2. குணத்தின் அடிப்படையில் நாம் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

3. பிறப்பினால் ஒத்த பிரிவை உடையவர்கள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா?

4.வீட்டு வேலை செய்யும் பெண்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்?

Wednesday, April 21, 2010

Lesson 116: Freedom to man of knowledge ( பிரம்ம சூத்திரம் 3.3.27-28 )

பாடம் 116: ஞானிகளின் துறவு
பாடல் 386-387 (III.3.27-28)

முக்தியடைந்த மனிதர்களின் நிலையை சித்தரித்து அவர்களின் செயல்களால் ஏற்படும் பாபபுண்ணியங்கள் அவர்களை பந்தபடுத்தாமல் மற்றவர்களிடம் போய் சேரும் என்ற கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.

பாதையும் சேருமிடமும்

மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற பாதையில் பயணித்து வாழ்க்கையின் குறிக்கோளான முக்தி நிலை என்ற சேருமிடத்தை அடையும் விதத்தை வேதம் விளக்கியது. அனைத்து மக்களும் இந்த பாதையில் பிறவிகள்தோறும் பயணம் செய்து இறுதியில் முக்தியடைகிறார்கள். சென்ற பிறவிகளில் செய்த முயற்சியின் விளைவாக ஒரு சிலர் மாணவப்பருவத்திலேயே முக்தியடைந்து விடலாம். அல்லது நேரடியாக துறவு நிலைக்கு சென்று அங்கிருந்து முக்தியடையலாம். இன்னும் சிலர் இல்வாழ் பருவத்தில் இருக்கும்பொழுது மனதளவில் உலகத்தை துறந்து வேதம் பயில நேரத்தை ஒதுக்கி முக்தியடையலாம். எஞ்சிய பலர் தங்கள் விருப்பமின்றியே ஓய்வு நிலைக்கு தள்ளப்பட்டு பின் துறவு நிலைக்கு பயணிக்கிறார்கள். இவர்களில் சிலர் துறவியாக வாழ்ந்து முக்தியடைகிறார்கள். மற்றவர்கள் மறுபிறப்பில் பயணத்தை தொடர்கிறார்கள்.

ஞானமும் முக்தியும்

பரமரகசியத்தை தெரிந்து கொண்ட மனிதர்கள் முக்தியடைகிறார்கள். துன்பங்களுக்கு காரணம் உலகப்பொருள்கள் மீது இருக்கும் பற்று. இந்த பற்று ஏற்பட காரணம் நான் யார் என்பதை அறியாமை. ஆக துன்பங்களை நீக்க, அடிப்படை காரணமான அறியாமையை நீக்கவேண்டும். ஞானத்தால் மட்டுமே அறியாமையை நீக்க முடியும். எனவே முக்தியடைய சரியான ஆசிரியரிடம் சரணடைந்து முறையாகவும் தொடர்ந்தும் வேதத்தை படிப்பது அவசியம்.

துறவு நிலையும் முக்தியும்     

வாழ்வு அட்டவணையும் கடைசி கட்டமான துறவு நிலை முக்தி பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. துறவு நிலையில் வாழ்பவர்கள் பரமனை போல வாழ்ந்தால் பரமனை பற்றி வேதம் சொல்லும் கருத்துக்களை எளிதில் புரிந்து கொண்டு பரமனாகவே ஆகிவிடும் வாய்ப்பு மிக அதிகம்.

துறவியும் பரமனும்ஒற்றுமை 1 : கடமைகளற்றவன்

பரமனுக்கும் துறவிக்கும் எவ்வித கடமைகளும் கிடையாது. துறவிநான் செய்கிறேன்என்ற நினைவுடன் எவ்வித செயல்களையும் செய்வது கிடையாது.

துறவியும் பரமனும்ஒற்றுமை 2 : தொடர்பற்றவன்

பரமனும் துறவியும் உலகத்துடன் எவ்வித சம்பந்தமோ தொடர்போ இல்லாதவர்கள்.

துறவியும் பரமனும்ஒற்றுமை 3 : ஆதாரமானவன்

இவ்வுலகத்தின் இருப்புக்கு பரமன் ஆதாரம். அதுபோல் சமூக அமைப்புக்கு ஆதாரமாக இருப்பவன் துறவி.    

துறவியும் பரமனும்ஒற்றுமை 4 : எல்லோருக்கும் சொந்தமானவன்

தனிபட்ட எந்த மனிதரும் பரமனையும் துறவியையும் சொந்தம்கொண்டாட முடியாதென்றாலும் இருவரும் அனைவருக்கும் சொந்தமானவர்கள்.

துறவியும் பரமனும்ஒற்றுமை 5 : எதுவும் இல்லாமல் அனைத்தையும் உடையவர்.

தனக்கென்று எந்த பொருளையும் வைத்துக்கொள்ளாவிட்டாலும் பிரபஞ்சம் முழுவதும் தன்னுடையது என்ற உண்மை, துறவி பரமன் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.

துறவியும் பரமனும்ஒற்றுமை 6 :  சுதந்திரமானவன்.

குறையாத இன்பம், நிலையான பாதுகாப்பு, தடைபடாத அமைதி இவை மூன்றையும் பெற உலகம் முழுவதும் ஞானியின் மேல் சார்ந்திருந்தாலும் ஞானி பரமனைப்போல் உலகத்தை சார்ந்து இருப்பதில்லை.

உலகத்தை துறந்து வாழ்வது துறவு நிலை. இது ஞானத்தை பெற்று பரமனை பற்றிக்கொள்ள உதவும். நிலையாதவற்றின் மீது இருந்த பற்றை அகற்றி நிலையான பரமனை பற்றிக்கொள்வது துன்பம் கலவா இன்பத்தை தரும்.

ஞானியின் செயல்கள்

ஞானத்தை பெற்றபின் ஒருவருக்கு பெறவேண்டிய பொருள் என்று ஒன்று உலகத்தில் இல்லை. அடையவேண்டிய புகழ் அல்லது பெருமை போன்றவை ஏதுமில்லை. வீடுபேற்றை பெற்ற ஞானிக்கு செல்லவேண்டிய இடம் எதுவும் இல்லை. எனவே ஞானியின் செயல்களுக்கு ஒரு நோக்கம் இருப்பதில்லை. ஆகவே ஞானியின் செயல்களினால் ஏற்படும் பாவபுண்ணியங்கள் அவனை பந்தபடுத்தாது.

ஞானம் பெற்ற மறுகணமே சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மங்கள் முழுவதும் அழிந்துவிடும். பிராரப்த கர்மம் மற்றும் ஆகாமி கர்மங்களின் பலனை அனுபவித்தது போக மரணத்தின்போது எஞ்சியுள்ள கர்ம பலன்கள் ஞானியை சேர்ந்தவர்களை சென்றடையும்.

கௌஷிடகி உபநிஷத மந்திரம் ஒன்று ஞானி மறையும்பொழுது அவன் தன் பாவபுண்ணியங்களை உதிர்த்துவிட்டு போகிறான் என்றும் அவனின் பாவங்கள் அவனை தூற்றுவோர்களையும், புண்ணியங்கள் அவனை போற்றுபவர்களையும் சென்றடையும் என்றும் கூறுகிறது.  

எனவே முக்தியடைந்த ஞானி இறந்தவுடன் மறுபிறப்பு எடுப்பதில்லை. பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விடுதலை பெற்று அவன் இறைவனுடன் ஒன்று சேர்கிறான்.

முடிவுரை :

வாழ்வு அட்டவணையின் கடைசி கட்டமான துறவு நிலையில் வாழ்பவர்கள் உலகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல், யாரையும் சார்ந்து இருக்காமல் பரமனைப்போல் வாழ்ந்து வேதம் படித்து ஞானம் அடைந்தபின் பரமனாகவே மாறிவிடுவார்கள். இந்த முக்தியடைந்த மனிதர்களின் செயல்கள் இவர்களை பந்தபடுத்தாது. மரணத்தின்பொழுது எஞ்சியுள்ள பாபபுண்ணியங்களை உதிர்த்துவிட்டு இவர்கள் கடவுளுடன் ஒன்றிவிடுவார்கள்.

பயிற்சிக்காக :

1. முக்தியடைய வாழ்வில் கடக்கவேண்டிய பாதை யாது?

2.முக்தியடைவது என்றால் என்ன?

3.பரமனுக்கும் ஞானிக்கும் உள்ள ஆறு ஒற்றுமைகள் யாவை?

4.முக்தியடைந்தவுடன் கர்மபலன்கள் என்னவாகும்?

சுயசிந்தனைக்காக :

1. முக்தியடைந்தவர்கள் தவறு செய்யமாட்டார்களா?

2. ஞானிகள் சோம்பலாக இருப்பார்களா அல்லது சுறுசுறுப்பாக செயல் புரிவார்களா?

3. ஒரு துறவி ஞானம் பெற்றவரா அல்லது ஞானம் பெறுவதற்காக துறவு மேற்கொண்டுள்ளவரா என்பது  எப்படி தெரியும்?

4. ஞானம் பெறாத துறவி மரணமடைந்தால் அவருக்கு மறுபிறவி உண்டா?

Tuesday, April 20, 2010

Lesson 115: Discarding all duties to the world ( பிரம்ம சூத்திரம் 3.3.26 )

பாடம் 115: துறவு இன்பத்துக்காக
பாடல் 385 (III.3.26)

வாழ்வு அட்டவணையின் கடைசி கட்டமான துறவு நிலை பற்றிய விளக்கங்களை கொடுத்து நம் அனைவரது வாழ்வின் இறுதியான நோக்கமான முக்தியை அடைய நாம் செய்யவேண்டிய செயல்களை இந்த பாடம் நினைவு படுத்துகிறது.

வேதம் காட்டும் பாதை

எந்நாளும் இன்பமாக அனுபவிப்பதற்காகவே உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான மக்கள் இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் பரமனை பற்றிய தெளிவான அறிவு ஏற்படாததுதான். எனவே வேதம் மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என வாழ்வை நான்காக பிரித்து பரமனை அறிய தேவையான மனபக்குவத்தை அடைய பாதை வகுத்துள்ளது. இந்த பாதையில் முறையாக பயணம் செய்தால் முடிவில் பரமனை அறிந்து துன்பம் கலவா இன்ப வாழ்க்கையை அடையலாம்.

வாழ்வில் துன்பத்திற்கு காரணம்

பொருள்களின் மீது நமக்கு இருக்கும் பற்றுதான் நம் துன்பத்திற்கு காரணம். ‘உன்னோடு சேர்ந்து வாழ்ந்தால் என் வாழ்வு இன்பமாக இருக்கும்என்ற எண்ணத்தில் தவறு இல்லை. ஆனால் நீ இல்லாமல் என்னால் இன்பமாக வாழ முடியாதுஎன்ற தவறான அறிவு நம்மை பொருள்களின் மீதும் மனிதர்கள் மீதும் பற்றுதல் வைக்க காரணமாயிருக்கிறது. இந்த பற்றுதலைத்தான் அன்பு என்றும் காதல் என்றும் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதனுடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறோமோ அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அது இருந்தால் இன்பம் இல்லையென்றால் துன்பம்என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்த பற்று நம்மை நிச்சயம் துன்பத்தில் ஆழ்த்தும்.

பற்றுதல் ஏன் துன்பத்தை தருகிறது?

உலகத்தில் உள்ள பொருள்களிலிருந்து நமக்கு கிடைக்கும் இன்பமும் துன்பமும் சம அளவாக இருப்பதற்கு பற்றுதான் காரணம். வேண்டியது கிடைத்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டால் அது தொலைந்தவுடன் அதே அளவு துயரம் ஏற்படும். பணம், பதவி, பொன், பொருள், புகழ், பெயர், பெருமை, செல்வாக்கு, குடும்பம், நட்பு, சுற்றம், வேலை என நாம் எவற்றின் மீது பற்றுதல் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பவை.  இன்றிருப்பது நாளை இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அனுபவிக்க கூடிய மனநிலையோ உடல்வலுவோ நம்மிடம் இருக்காது. எனவே பற்று இருக்கும்வரை இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை தவிர்க்க முடியாது.

துறவு என்றால் என்ன?

பற்றை துறப்பது துறவு. மாணவப்பருவத்தில் முறையாக வேதத்தை படித்து நான் பரமன், என் பொழுதுபோக்கிற்காக என்னை ஆதாரமாக கொண்டு காட்சியளிக்கும் இந்த உலகம் உண்மையானது அல்ல என்ற அறிவை அடைந்திருந்தால் உலகத்தில் இருக்கும் பொருள்களிடமும் மனிதர்களிடமும் எவ்வித பற்றும் ஏற்படாது. ஆனால் பெரும்பாலோர் இந்த அறிவைப்பெறாமலேயே உலகம்தான் இன்பமான வாழ்வின் ஆதாரம் என்ற தவறான அறிவுடன் இல்வாழ்வை தொடங்கி விடுகிறார்கள். எனவே இந்த தவறான அறிவு வலுபெற்று பற்றுதல் அதிகமாகிறது.

உலகத்தில் பற்று இருக்கும்வரை வேதத்தை படிக்க ஆசை வராது. எனவே தானம், தவம் போன்ற கடமைகளை விதித்து இந்த பற்றினை மெது மெதுவாக தியாகம் செய்ய வேதம் வழிவகுக்கிறது. உலகத்தின் மீதுள்ள பற்றை குறைத்து கடவுளின் மீதுள்ள பற்றை அதிகபடுத்தி வேதத்தை முறையாக படிக்க அனைத்து நேரத்தையும் முயற்சியையும் செலவிடும் நிலை துறவு நிலை ஆகும். இன்பத்தை துறப்பது துறவு நிலை அல்ல. துன்பம் கலவா இன்பத்தை அடைய வேதம் படிக்க வேண்டும். துறவு நிலை இதற்கு உதவும் ஒரு சூழ்நிலையை நமக்கு தருகிறது.

துறவு நிலையின் ஆரம்பமும் முடிவும்

வாழ்வு அட்டவணையின் மூன்றாவது கட்டமான ஓய்வு நிலையில் உள்ளவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் படிப்படியாக தானம் செய்துவிட்டு என்னுடையது என்று எதுவுமேயில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் துறவு நிலையில் நுழைகிறார்கள். மரணம்தான் துறவு நிலையின் முடிவு.

இரண்டு வகையான துறவு

புத்தக அறிவை மட்டும் பெற்று ஒருவன் மருத்துவனாக முடியாது. படித்து முடித்த பின் குறைந்தது ஒரு வருடம் மருத்துவனாக வேலை செய்தபின்தான் மருத்துவன் என்ற பட்டம் கிடைக்கும். இந்த ஒருவருட பயிற்சி காலத்தில் கிடைக்கும் அனுபவம் ஒருவனை முழுதகுதிவாய்ந்த மருத்துவனாக மாற்றுகிறது.

எப்படி மருத்துவன் என்ற பட்டத்தை பெறுவதற்கு மருத்துவனாக வேலை செய்யவேண்டுமோ அதுபோல துறவியாக ஆவதற்கு பொருள், சுற்றம் ஆகிய அனைத்தையும் துறந்து துறவியாக வேண்டும்.

உண்மையான துறவிக்கு மனதளவில் எவ்வித பற்றும் கிடையாது. மனதில் உள்ள பற்றுதலை குறைக்க பொருள்களை தானம் செய்து ஐம்புலன்களை அடக்கி தவம் செய்து துறவியாக செயல்படவேண்டும். அப்பொழுதுதான் மாறும் உலகின் மேல் உள்ள கவனத்தை மாறா பரமனை அறிந்து கொள்ள உபயோகபடுத்த முடியும்.

துறவு நிலையில் செய்யவேண்டிய கடமைகள்  

உண்மையான துறவிக்கு ஒரு கடமையும் இல்லை. பயிற்சிகாலத்தில் இருக்கும் துறவிகள் பொருளீட்ட எவ்வித வேலையும் செய்யாமல் கடவுளை ஆராதிப்பது, தியானம் செய்வது, வேதம் ஓதுதல் என்று தங்கள் மனப்பக்குவத்திற்கேற்ற ஆன்மிக செயல்களை மட்டும் செய்யலாம். மக்கள் சேவையிலும் ஈடுபடலாம். கிடைத்ததை உண்டு, எவ்வித போகப்பொருளுக்கும் ஆசை படாமல், எளிய வாழ்வை வாழ்வது பயிற்சிகாலத்தில் இருக்கும் துறவிகளின் கடமை.

இளமையில் துறவு

மாணவப்பருவம் முடியுமுன் வேதத்தை பயின்று முடிக்காதவர்கள் பொதுவாக உலக இன்பங்களால் கவரப்பட்டு இல்வாழ் பருவத்தை தொடங்கிவிடுவார்கள். ஒரு சிலர் தங்களின் அறிவுத்திறன் மூலமும் மற்றவர்களின் வாழ்க்கையை ஊன்றி கவனித்ததன் விளைவாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு மேற்கொண்டு பரமனை அறிந்து கொள்ள வேதத்தை முறையாக படிக்கும் முயற்சியை தொடர்வார்கள். இதுபோல துறவியாவதற்கு பெற்றோரின் சம்மதம் அவசியம்.

இளவயதில் துறவியானவர்களின் ஒரே கடமை வேதத்தை பயில்வதும் சொல்லித் தருதலும்தான். இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்ற இளஞர்களின் சேவையை நாடுவது போல இளமையில் துறவி மேற்கொள்பவர்களை ஆதரித்து காப்பதும் சமூகத்தின் கடமை. ஏனெனில் பகைவர்கள் உள்ளே புகுந்துவிடாமல் படைவீரர்கள் நாட்டை காப்பது போல் வாழ்வில் துன்பம் ஏற்படாமல் காக்கும் வழியை படிப்பதற்கும் பரப்புவதற்கும் வயதில் இளய துறவிகளால் மட்டும்தான் முடியும். உலகத்தில் இன்பம் இல்லை என்பதை அனுபவத்தால்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லாதவர்கள் தங்களின் தவவலிமையால் இளமையில் துறவு ஏற்று வெகு விரைவில் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் பணியை செய்வது மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியம்.

முடிவுரை :

வாழ்வு அட்டவணையில் படிப்படியாக முன்னேறி அனைவரும் ஒரு நாள் துறவியாகிவிடுவார்கள். துறவு நிலையில் வாழாவிட்டாலும் மரணப்படுக்கையில் இருக்கும் தருணங்களில் விருப்பம் இல்லாவிட்டாலும் அனைத்தையும் துறந்துதான் ஆக வேண்டும். இந்த துன்பத்தை தவிர்க்க நாமாகவே வயதானபின் அனைத்தையும் துறந்து துறவு நிலையில் வாழ்ந்தால் மரணத்தை நோக்கி அஞ்சவேண்டிய அவசியமில்லை.  

துறவு நிலை என்பது பரமனை அறிந்து இன்பமாக வாழ பயிற்சி மேற்கொள்ளும் காலம். உலகத்தின் மீதுள்ள பற்றை மனதளவில் துறந்து இல்வாழ் பருவத்தில் இருந்து கொண்டே வேதத்தை படிக்க நேரத்தை செலவிடலாம். ஜனகன் அரசனாக செயல் புரிந்து கொண்டிருக்கும் பொழுதே ஞானத்தை அடைந்ததால் ஓய்வு நிலையையோ துறவு நிலையையோ எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. பொருள்களையும் உறவுகளையும் மனதளவில் துறக்கும் சக்தியில்லாதவர்களுக்காக வேதம் துறவு நிலையை உபதேசம் செய்துள்ளது.

பயிற்சிக்காக :

1. எதை துறப்பது துறவு?

2.துறவு மேற்கொள்ளுவது எதற்காக?

3.வாழ்வில் துன்பம் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

4.இருவகை துறவிகள் யாவர்?

5.இளமையில் துறவியாவதன் அவசியமென்ன?

6.துறவிகளின் கடமைகள் என்ன?

7.துறவு நிலையின் ஆரம்பமும் முடிவும் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. துறவிகள் காவியுடை அணிவதன் அவசியமென்ன?

2.உண்மையான துறவியை அடையாளம் காண்பது எப்படி?

3.துறவிகள் அனைத்து வசதிகள் கொண்ட ஆசிரமத்தை அமைத்துகொண்டு வாழ்வின் சுகபோகங்களை அனுபவிக்கலாமா?

Friday, April 16, 2010

Lesson 114: Unconnected to the world ( பிரம்ம சூத்திரம் 3.3.25 )

பாடம் 114: கிட்டாதாயின் வெட்டென மற
பாடல் 384 (III.3.25)

வாழ்வு அட்டவணையின் மூன்றாவது கட்டமான ஓய்வு நிலை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை கொடுத்து நம் விருப்பமின்றி இயலாமைக்கு தள்ளப்படுவதற்கு முன் நாமே அதை விரும்பி ஏற்றுக்கொள்வது நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் மிகுந்த நன்மையை ஏற்படுத்தும் என்ற கருத்தை இந்த பாடம் நம் முன் வைக்கிறது.

பால்யம், குமாரம், வாலிபம், வயோதிகம் என்ற நான்கு பிரிவில் முப்பத்தைந்து வயதிற்கு பின் வயோதிகம் ஆரம்பிக்கிறது என்று சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அறிவியல் இந்த உண்மையை உறுதிசெய்கிறது. வளர்வது வாலிபபருவத்துடன் முடிவடைந்து தேய்வதன் துவக்கம் சற்றேறகுறைய முப்பத்தைந்து வயதிற்கு பின் ஆரம்பிக்கிறது என்பதை அனுபவத்தின் மூலமும் நாம் அறிகிறோம். வருடம் ஆக ஆக நம் அழகு, ஆரோக்கியம், வலிமை, திறமை ஆகியவை தொடர்ந்து குறையத்துவங்கும் பருவம் வயோதிகம்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடாஎன்ற வரிகள் தமக்காக பாடப்பட்டது என்று யாரும் நினைப்பதில்லை. இவ்வுலகின் மிகப்பெரிய அதிசயம் என்ன என்று யக்ஷ்ன் கேட்ட கேள்விக்கு தர்மபுத்திரன் தினம் தினம் மற்றவர்கள் இறப்பதை பார்த்தாலும் தான் மட்டும் மரணத்தை வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் மனிதன் இருப்பதுஎன்று பதில் கூறினான். இன்னும் பதினைந்து வருடங்களுக்கு பின்தான்வயதானவர்என்ற பட்டத்துக்கு தான் தகுதியுடையவர் என்று இருபது வயது வாலிபன் தொடங்கி எழுபது வயது இளைஞர் வரை எல்லோரும் நினைப்பதால் யாரும் தான் வயதானவர் என்பதை ஒத்துக்கொள்வதில்லை. வயோதிகம் என்பது வாழ்வில் ஒரு பிரச்சனை அல்ல. வாலிபம் திரும்பவும் வராது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு வயோதிகத்தை மறைக்கவோ மறுக்கவோ முயலாமல் இருந்தால் இன்பமாக வாழலாம் என்ற வழியை வேதம் நமக்கு காண்பிக்கிறது.

ஓய்வு நிலை என்றால் என்ன?

பொருளாதார அடிப்படையில் இன்னும் முன்னேற வேண்டும் என்பதற்காக செய்யும் செயல்களை நிறுத்திக்கொண்டு உலகத்தை சாராமல் இன்பமாக இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளும் பொருட்டு ஆன்மிக வாழ்வை ஏற்று நடத்துவது ஓய்வு நிலை. உலகத்தோடு ஒன்றி வாழ்ந்தாலும் இல்வாழ் பருவத்தில் தொடர்ந்து செயல்பட்டதுபோல் அல்லாமல் பொறுப்புகளை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டு உள்நோக்கி பயணம் செய்ய துவங்குவது ஓய்வு நிலை.

ஓய்வு நிலையின் ஆரம்பமும் முடிவும்

அரசாங்க அலுவல்களிலும் தனியார் துறைகளிலும் 58 அல்லது 60 என்பது போன்ற ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களும் வீட்டுப்பொறுப்பை ஏற்று நடத்துபவர்களும் தங்கள் பிள்ளைகள் இல்வாழ் பருவத்தை ஆரம்பித்ததும் பொறுப்புகளை அவர்களுக்கு விட்டுகொடுக்க ஆரம்பித்து படிப்படியாக ஓய்வு நிலைக்குள் தாமாக நுழைய வேண்டும்.

ஓய்வு நிலையில் செய்யவேண்டியவற்றை முறைப்படி செய்ய முயற்சித்தால் கூடியவிரைவில் உலகத்தின் மீதுள்ள பற்று முழுவதும் குறைந்து துறவு நிலை ஆரம்பமாகும். இல்லையெனில் மரணம்தான் ஓய்வு நிலையின் முடிவாக இருக்கும்.

ஓய்வு நிலையில் செய்யவேண்டிய கடமைகள்  

உலகத்தில் ஓயாமல் வெவ்வேறு குறிக்கோள்களை அடைய ஓடிக்கொண்டிருந்த ஓட்டப்பந்தயத்திலிருந்து ஓய்வெடுத்துக்கொள்வதை குறிக்கும் வகையில் காசிக்கு போய் விரும்பியதை விட்டுவிட்டு வரவேண்டும் என்ற வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. இதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக அனைத்தையும் விட்டுவிட வேண்டும். நாம் விடாவிட்டால் அது நம்மிடமிருந்து பிடுங்கபட்டுவிடும். அந்த துயரத்திலிருந்து நம்மை காப்பாற்றி இந்த உலகத்தின் மீது நமக்குள்ள பற்றுதலை அகற்றும் வகையில்  பின் வரும் கடமைகள் வடிவமைக்க பட்டுள்ளன. இக்கடமைகளை முறைப்படி செய்தால் முக்தியை நோக்கி நாம் முன்னேறுவோம்.

முதல் கடமை: ஓய்வு பெறுதல்

இருபது வருடங்களுக்கு மேல் உழைத்தபின்னும் பணம், புகழ் போன்றவை இன்பத்தை தராது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு உடலின் இயலாமையை காரணமாக காண்பித்து ஓய்வெடுத்துக்கொள்ள வேதம் வற்புறுத்துகிறது.

ஓய்வெடுத்துக்கொள்வது என்பதற்கு எந்த வேலையையும் செய்யாமல் இருக்கவேண்டும் என்ற அர்த்தமில்லை. வெளியுலகில் குறையாத இன்பத்தை தேடுவதை நிறுத்திக்கொண்டு அகவுலகில் அதை தேட நம் நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டும் என்பதே ஓய்வு நிலையின் முக்கிய குறிக்கோள். காட்டில் திசை தெரியாமல் நாம் செல்லவேண்டிய பாதையை தவறவிட்டுவிட்டால் அங்கும் இங்கும் ஓடியலைவது நம் குழப்பத்தை அதிகபடுத்துமே தவிர குறைக்காது. முதலில் நிற்கவேண்டும். அது போல் ஓய்வுநிலையின் முதல் கடமை பொருள் சம்பாதிக்கும் ஓட்டத்தை நிறுத்துவது.

இரண்டாம் கடமை: தானம் செயதல்

யாருக்கு கொடுக்கிறோமோ அவரிடமிருந்து எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கொடுப்பதுதான் தானம். முதலில் நமக்கு வேண்டாத பொருள்களை மற்றவர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் உபயோகபடுத்தாத எந்த பொருளையும் எதிர்காலத்தில் வேண்டியிருக்கலாம் என்ற எண்ணத்தில் சேர்த்து வைத்திருக்க கூடாது.

பிறகு தேவைகளை குறைத்துக்கொண்டு தானத்தை அதிகரிக்கவேண்டும். நம் புலன்களின் சக்தி தொடர்ந்து குறைவதால் முன் போல் நம் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகுமுன் நாமாக நம் தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கார் ஓட்டும் திறமை குறைவதற்கு முன் காரின் உபயோகம் எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டு அதை தானம் செய்துவிட வேண்டும். காணாமல் போன நகை திரும்ப கிடைத்தவுடன் கோவில் உண்டியலில் அதை போட்டுவிட்டு நகை இல்லாத வருத்தத்தை மனநிம்மதியாக மாற்ற முடியும் என்று அனுபவத்தால் உணர்ந்தவர்கள் பலர்.

இல்வாழ்பருவத்தில் செய்ய ஆரம்பித்த தானம் ஓய்வு நிலையில் முழுமை பெற வேண்டும். பல்வேறு காரணங்களால் தொடர்ந்து வேலை செய்து பணம் சம்பாதிக்கும் சூழ்நிலை இருந்தால் சம்பாதிக்கும் அனைத்தையும் தானம் செய்து விட வேண்டும். வயதான தம்பதிகள் தனியே இருக்க கூடாது. மகன் அல்லது மகளின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர்களாகத்தான் வாழவேண்டும். சம்பாதிக்கும் அனைத்து பொருள்களையும் குடும்பத்தலைவரிடம் கொடுத்துவிடவேண்டும்.

அதைத்தவிர சேர்த்து வைத்துள்ள வீடு, நிலம், நகை போன்ற அனைத்து சொத்துக்களையும் தனக்கென்று எதுவும் எஞ்சியில்லாதவரை தொடர்ந்து தானம் செய்ய வேண்டும். சொந்த பிள்ளைகளுக்கோ மற்ற உறவினர்களுக்கோ சொத்தை பங்கிட்டு கொடுத்தாலும் அது தானம்தான்.

மூன்றாம் கடமை: தவம் செய்தல்

வருத்திக்கொண்டால்தான் தவம். அதே சமயம் நாம் நம்மையே  துன்புறுத்திக் கொள்ளகூடாது. மனோவலிமையை அதிகமாக்கிக்கொள்ள நாமாக நம்மை வருத்திக்கொள்வது நம் உடலுக்கும் மனதுக்கும் எவ்வித துன்பத்தையும் தராத வண்ணம் இருக்கவேண்டும். சபரிமலைக்கு வெறும் காலில் நடந்து செல்வது தவம். ஆனால் நம்மால் நடக்க முடியவில்லை என்றால் இதுபோன்ற முயற்சிகளை கைவிட வேண்டும். நம்மை துன்புறுத்திக்கொள்ளாமல் செய்ய முடியக்கூடிய செயல்களை மட்டுமே தவமாக செய்யவேண்டும்.

வயதாகும் காரணத்தால் நமக்கு உடல் நலம் குன்றி அதனால் பல கஷ்டங்கள் வர வாய்ப்பு அதிகம். முட்டி வலி, கை வலி என்பது போன்ற உடலுக்கு ஏற்படும் வருத்தங்களினால் நிலைகுலைந்து போகாமல் இருக்க தவம் நமக்கு பெரிதும் உதவும். அதுபோல வயதானவுடன் பேச்சுதுணைக்கு கூட ஆள் இல்லாமல் தனிமையில் இருக்க நேரிடலாம். மவுனவிரதம் இருந்து பழகியிருந்தோமானால் தனிமையை சகித்துக்கொள்வது சுலபமாக இருக்கும்.

ஐந்து புலன்களையும் மனதையும் நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் சுயகட்டுப்பாடுதான் தவம். வயதாகும் பொழுது நம் மனதும் புலன்களும் தங்கள் சக்தியை மெதுவாக இழப்பதை தவம் செய்தவர்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும்.

உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்று அடிப்படைகளில் தவம் செய்ய வேண்டும்

கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது, வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் முறைபடுத்தி  சுத்தமாக வைப்பது, தோட்ட வேலை செய்வது போன்றவை உடலால் செய்யும் தவம்.

ஜபம் செய்வது, வேதம் ஓதுவது, யார் மனதையும் நோக அடிக்காமல் இனிமையான வார்த்தைகளை மட்டும் பேசுவது, பேசாமல் மவுன விரதம் இருப்பது, யாரேனும் நம்மிடம் அறிவுரை கூறுங்கள் என்று கேட்டால் மட்டும் அறிவுரை கூறுவது ஆகியவை வாக்கினால் செய்யும் தவம்.

மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பதும் மறப்பதும் முக்கியமான மனத்தவம். தியானம் செய்வதும் கடவுள் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்பதும் மனதால் செய்யும் தவம் ஆகும்
தவம் செய்வதன் மூலம் கிடைக்கும் மனவலிமை வாழ்நாழ் முழுவதும் நாம் இன்பமாக வாழ உதவும். உடல் நலம் பாதிக்கப்பட்டு அதனால் வைத்தியர் நமக்கு பிடித்த உணவை சாப்பிடகூடாது என்று தடைவிதிக்கும் முன் நாமாகவே அவற்றை விட்டுவிடுவது நல்லது. இல்லையெனில் மற்றவர்கள் அந்த உணவை சாப்பிடும்பொழுது அதை பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடவேண்டியிருக்கும்.

நான்காம் கடமை: பொறுப்புகளை முடித்துக்கொள்ளுதல்

ஒவ்வொன்றாக நம் அனைத்து பொறுப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிடவேண்டும். மற்றவர்கள் தங்கள் காரியங்களை செய்யும்பொழுது அதில் மூக்கை நுழைத்து எவ்வாறு வேலைகளை செய்யவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறக்கூடாது. நம் வாழ்வில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை அவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியுமே தவிர நம் அறிவுரை அவர்களுக்கு உதவாது. நாம் செய்த தவறுகளை மற்றவர்கள் செய்யாமல் அவர்களை காப்பது நமது பொறுப்பல்ல.

ஐந்தாம் கடமை: இளமையாக இருக்க முயலாமை

நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி யோகாசனம் ஆகியவற்றை செய்யவேண்டும். ஆனால் இவற்றின் நோக்கம் பார்ப்பதற்கு நாம் இளமையானவராக தோன்றவேண்டும் என்பதாக இருக்க கூடாது. நரை முடிக்கு கறுப்பு சாயம் பூசுவது, இளைஞர்களைப்போல் உடை அலங்காரம் செய்துகொள்வது, கண்ணாடிக்கு முன்னால் நின்று முகத்தின் வயதை குறைக்க முயல்வது ஆகிய செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆறாம் கடமை: கடவுளை தேடுதல்

ஆன்மிக பயணத்தை முதல் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டு தியானம், ஜபம், பூஜை, பிரார்த்தனை, பாராயணம், ஸ்தோத்திரம் போன்ற செயல்களில் ஈடுபடுவதுடன் வேதத்தை ஆசிரியரிடமிருந்து முறையாக பயில வேண்டும். முக்தியடைவதுதான் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்பதை உணர்ந்து கொண்டு அதற்காக மட்டுமே அனைத்து காலத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டும்.

முடிவுரை :

ஓய்வுநிலை என்பது வாலிபத்தை வழியனுப்பிவிட்டு வயோதிகத்தை வரவேற்கும் படலம். ஓய்வு நிலையில் நாம் செய்யவேண்டிய கடமைகளை பின்பற்றினால் நாம் வெகு விரைவில் முக்தியடைந்துவிடுவோம்.

ஆனால் ஆவியைவிட்டாலும் சாவியைவிடேன் என்பதுதான் பெரும்பாலோரின் மனப்பாங்காய் இருக்கிறது. நம்மிடமிருக்கும் அனைத்து பொருள்களையும் எப்பொழுது நாம் தானமாக மற்றவர்களுக்கு கொடுத்துவிடுகிறோமோ அப்பொழுதுதான் நம்மால் வாழ்வின் கடைசி அங்கமான துறவுநிலைக்குள் நுழைய முடியும். ஆன்மிக பயணம், தவம் ஆகிய இருகடமைகளைத்தவிர மற்ற நான்கு கடமைகளையும் முற்றிலும் செய்து முடிக்கும் வரை நாம் ஓய்வு நிலையிலேயே இருப்போம்.

ஓய்வு நிலையில் செய்ய வேண்டிய கடமைகளை முழுதாக செய்வது பலருக்கு கடினமாகவே இருக்கும். ஆயினும் கூட முயற்சியை கைவிடக்கூடாது. இலக்கை அடையாவிட்டாலும் சரியான வழியில் பயணிப்பது தவறான வழியை பின்பற்றுவதைவிட சாலச்சிறந்தது.

தொடர்ந்து வேலை செய்து பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க முயற்சிப்பது, எல்லாவற்றையும் தனக்கென சேர்த்து வைத்துகொள்வது, புலன் இன்பங்களை தொடர்ந்து அனுபவிக்க ஆசை கொள்வது, எல்லா பொறுப்புகளையும் இழுத்து போட்டுக்கொண்டு என்றும் இளமையானவனாக காட்டிக்கொள்வது போன்ற தவறான செயல்கள் நமக்கும் மற்றவர்களுக்கும் துன்பத்தை தரும்.

பயிற்சிக்காக :

1.உடலின் வயது எந்த நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ?

2.வயோதிகத்தின் அறிகுறியை அனுபவத்தில் எப்படி அறியலாம்?

3.ஓய்வு நிலை என்றால் என்ன?

4.ஓய்வு நிலையின் துவக்கத்தையும் முடிவையும் விளக்குக.

5.ஓய்வு நிலையில் செய்யவேண்டிய ஆறு கடமைகள் யாவை?

6.ஓய்வு நிலையில் செய்யவேண்டிய கடமைகளின் நோக்கம் என்ன?

7. எந்த மூன்றின் அடிப்படையில் தவம் செய்யவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. இந்த பாடத்தின் தலைப்பிற்கான காரணத்தை ஆராய்க.

2.தானமும் தவமும் இல்வாழ் பருவம் மற்றும் ஓய்வு நிலை ஆகிய இரண்டு கட்டங்களிலும் செய்ய வேண்டிய கடமைகளாக குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணத்தை ஆய்க.

3.எல்லா சொத்துக்களையும் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த பிறகு கடைசிவரை அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என்று எப்படி நம்புவது?

4.ஓய்வு நிலையில் நாம் நம் கடமைகளை சரியாக செய்வதன் மூலம் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை ஆராய்க.