Wednesday, February 10, 2010

Lesson 91: It takes only a short time ( பிரம்ம சூத்திரம் 3.1.23 )

பாடம் 90: பரமனுடன் ஒன்றாக ஆகும் காலம் 
பாடல் 314 (III.1.23)

தங்களுடைய இயல்பு நிலையான ஆனந்தத்தை அடைவதே அனைத்து மக்களின் முடிவான குறிக்கோள். இந்த குறிக்கோளை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது நாம் எவ்வளவு வேகமாக இந்த பாதையில் பயணிக்கிறோம் என்பதை பொறுத்தே அமையும். இந்த பாதையில் அடங்கியுள்ள படிக்கட்டுகளை விவரிப்பதன் மூலம் வேதம் நாம் எந்த படியில் இருக்கிறோம், இன்னும் எவ்வளவு தூரம் சென்றால் நம் இலக்கை அடையலாம் என்பதை அறிய உதவுகிறது.

முதல் படிஅடிப்படை சக்திகளை வலுப்படுத்திக்கொள்வது

நம் வாழ்க்கையின் தரம் நமது இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகியவற்றின் வலுவை பொறுத்து அமைகிறது. ஒரு சராசரி மனிதனால் வீடுபேறை அடைய முடியாது. இந்த மூன்று சக்திகளையும் தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ள நமக்கு வாழ்வில் முன்னேறும் துடிப்பு இருக்கவேண்டும். கார், வீடு, சமூகத்தில் ஒரு மதிப்பு போன்றவற்றை தொடர்ந்து ஒன்றுக்குபின் ஒன்றாக அடைய முயற்சிப்பதன் மூலம் நாம் இந்த மூன்று சக்திகளையும் தேவையான அளவு வலுப்படுத்திக்கொள்ளலாம். கடின உழைப்பு, விடா முயற்சி, கிடைத்ததில் திருப்தியின்மை, ஆரோக்கியமான போட்டி ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு மிக அவசியம்.

ஆனால் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மமாக இருக்க வேண்டும். குறுக்கு வழி, பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற செயல்களால் மற்றவர்களை இம்மியளவும் துன்பத்தில் ஆழ்த்த கூடாது. யாருக்கும் எந்த தீமையையும் மனதறிந்து செய்யக்கூடாது.
பணம், புகழ், பதவி போன்றவற்றை அடைய நாம் செய்யும் தர்மமான முயற்சி முக்கியமே தவிர இவற்றை அடைவது முக்கியமல்ல. அதர்மமான வழிகளில் இவற்றை அடைந்தால் நாம் பாதையில் பின்னோக்கி பயணிக்கிறோம் என்று அர்த்தம்.

இந்த முதல் படியின் குறிக்கோள் நமது இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றை வலுப்படுத்திக்கொள்வதே தவிர பொருளாதார முன்னேற்றம் அடைவதல்ல. ஆனால் இந்த மூன்று சக்திகளை வலுபடுத்திக்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி பணம், புகழ், பதவி போன்றவற்றை தேடுவதுதான். தேடல் மட்டும்தான் முக்கியமே தவிர அடைதல் முக்கியமல்ல.

இரண்டாம் படி மனப்பக்குவம் (செயலும் பலனும் தொடர்பற்றவை) பெறுதல்

வாழ்வின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். நம்முடைய கடும் உழைப்பு, ஊக்கம், விடாமுயற்சி, சாமர்த்தியம் போன்றவற்றிக்கும் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை புரிந்து கொள்வது மிகக்கடினம். இதை புரிந்து கொண்டால்  நமக்கு மனப்பக்குவம் வந்து விட்டது என்று அர்த்தம். 

செய்யும் செயலுக்கும் அதன் விளைவுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதை நம்மால் அறிந்து கொள்ளவே முடியாது. எல்லாம் சரியாக செய்தும் நாம் எதிர்பார்த்த விளைவு ஏற்படாமல் போவதையும் எதுவுமே செய்யாமல் இருந்தபோதும் நாம் எதிர்பாராத ஒரு விளைவு ஏற்படுவதையும் நாம் எல்லோரும் அனுபவித்து இருக்கிறோம். ஆனால் இவை விதிவிலக்கு என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதுதான் விதி என்று நமக்கு தெரிந்து விட்டால் நமக்கு மனப்பக்குவம் வந்து விட்டது என்று அர்த்தம்.

அடுத்த வருடம் ஒரு கோடி ரூபாய் நிகர லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதை நிறைவேற்ற தேவையான அனைத்து செயல்களையும் முறையாகவும் திறமையாகவும் செய்தாலும் எவ்வளவு லாபம் வருகிறது என்பது நமது பாவ புண்ணியங்களை மட்டுமே பொறுத்து அமையும். அதனால் திட்டமிடுவதோ, அதை அடைவதற்காக முழுத்திறமையை உபயோகித்து கடின உழைப்பில் ஈடுபடுவதோ அவசியமில்லை என்று அர்த்தமில்லை. நாம் கடமையை சரியாக முழுத்திறமையுடன் செய்வது மிக அவசியம். இதனால் நம்முடைய இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவை மிக வலுவடைகின்றன. மேலும் நாம் இதுபோல தொடர்ந்து முயற்சித்தால்தான் முயற்சிக்கும் பலனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற மனப்பக்குவம் ஏற்படும்.

மூன்றாம் படிமனப்பக்குவம் (உலகத்தில் இன்பம் இல்லை) பெறுதல்

நமது ஆசை ஒரு பொருளை பெற வேண்டும் என்பது. அந்த ஆசைக்கு காரணம் அந்த பொருள் கிடைத்தால் இன்பம் கிடைக்கும் என்பது. உலகத்தில் உள்ள எந்த பொருளுக்கும்/ எந்த மனிதருக்கும் நமக்கு இன்பத்தை கொடுக்கும் சக்தி கிடையாது. இதை புரிந்து கொள்வது மிகக்கடினம். இதை புரிந்து கொண்டால்  நமக்கு மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.

இன்பம் தரும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நாம் ஆசை கொள்கிறோம். ஆசைப்பட்டதை அடைந்த பின் ஏற்படும் இன்பம் நிலைப்பதில்லை. வேறொரு ஆசை ஏற்பட்டு அது நிறைவேறினால் போதும் என்று தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுகிறோம். எப்பொழுது நாம் எதை அடைந்தாலும் நிலைத்த இன்பம் ஏற்படுவதில்லை என்ற உண்மையை  அறிந்து கொள்கிறோமோ அப்பொழுது நமக்கு மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.

தொடர்ந்து செயலாற்றுவதன் மூலம் நமக்கு தேவையான மனப்பக்குவம் ஏற்படும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் மிக வலுபெற்றுவிடும். இந்த நிலையில் நாம் அடுத்த படிக்கு தயாராவோம்.


நான்காம் படி: வேதத்தை படித்தல்

நம்முடைய ஆசை நிரந்தரமான ஆனந்தம். இதை வெளி உலகில் தேடி பெற முடியாது. வேதம் ஆனந்தம் நமது இயல்பு, அதை தேடிப்பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறது. இது எப்படி என்பதை அறிந்து கொள்ள நாம் நம்மிடம் உள்ள இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்றையும் பயன் படுத்தி வேதத்தை குருவிடமிருந்து கற்க வேண்டும்.

நாம் செய்த புண்ணியத்தின் விளைவாக அடிக்கடி நாம் நமக்கு தகுந்த குருவுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நாம் சீடனாக தயாராக இருப்பதில்லை. எல்லாம் எனக்குத்தெரியும். தெரியாததை நானே படித்து தெரிந்து கொள்வேன் என்ற நினைப்பில் புத்தக கண்காட்சிக்கு சென்று ஆன்மீக புத்தகங்களை வாங்குவதனால் நாம் வேதத்தை புரிந்து கொள்ள முடியாது.

எப்பொழுது நாம் ஒரு குருவிடம் சரணடைகிறோமோ அப்பொழுதுதான் நமது ஆன்மீகப்பயணம் தொடங்குகிறது.

வேதத்தை படிப்பது ஒரு முழுநேர வேலை அல்ல. நாம் நம் குடும்பவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டே வேதத்தை ஒரு பகுதி நேர அடிப்படையில் படிக்கலாம். நாம் நம் அனைத்து கடமைகளையும் செவ்வனே செய்த பிறகு எஞ்சிய நேரத்தை வேதம் படிக்க ஒதுக்கினால் போதும். வேதம் எவ்வாறு இந்த உலகத்தில் இன்பமாக வாழ்வது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. காரை விற்றுவிட்டு கார் கற்றுக்கொள்ள முயல்வது புத்திசாலித்தனம் ஆகாது. அதுபோல உற்றார், உறவினர், நண்பர்கள், குடும்பம், சமூகம் ஆகியவற்றின் நடுவே எப்பொழுதும் இன்பமாக இருப்பது எப்படி என்பதை வேதத்தை படித்து கற்றுக்கொண்ட பின் காட்டில் சந்நியாசியாக உலவ முடிவு செய்வது புத்திசாலித்தனம் அல்ல.
  

முடிவுரை :

வீடு பேறு அடைய எவ்வளவு காலமாகும் என்பது நாம் எப்பொழுது ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்கிறோம், எவ்வளவு நேரம் வேதத்தை படிக்க ஒதுக்குகிறோம்  என்பதை பொறுத்து இருக்கிறது.  ஆனால் ஆன்மீகபயணத்தை ஆரம்பித்துவிட்டால் வீடுபேறு அடைவது உறுதி. பெரும்பான்மையான மக்களுக்கு ஆன்மீகபயணத்தை ஆரம்பிக்க அவசியமான மனப்பக்குவமோ தீவிர இச்சா சக்தியோ இருப்பதில்லை.

எனவேதான் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த மனிதன் இன்னும் வெளி உலகில் நிலையான இன்பத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

பயிற்சிக்காக :

1. நிலையான ஆனந்தத்தை அடையும் பயணத்தில் உள்ள நான்கு படிக்கட்டுக்கள் யாவை?

2. ஆன்மீகப்பயணம் ஆரம்பமானதா இல்லையா என்பதை எது தீர்மானிக்கிறது ?

3. இரு மனப்பக்குவங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. யார் சரியான குரு? எந்த குருவிடம் படித்தாலும் முக்தியடைந்து விடலாமா?


2. இச்சா சக்தி மற்ற இரு சக்திகளை காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. – இது சரியா ?

Lesson 90: Similarity of nature ( பிரம்ம சூத்திரம் 3.1.22 )

பாடம் 90: மனிதனின் தன்மை 
பாடல் 313 (III.1.22)

இந்த பிரபஞ்சம் முழுவதும் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு என்றாலும் மனிதன் மட்டும்தான் பரமனின் முழுமையான பிரதிநிதி. பரமனின் அறிவு உருவம், ஆனந்தமயம் மற்றும் நித்தியமான சத்யம் என்ற மூன்று தன்மைகள் மனிதனின் இயல்பாக இருக்கின்றன என்பதை நிரூபிப்பதுடன் மாயாசக்தி மனிதன் மூலம் செயல்படும் விதத்தையும் இந்த பாடம் விளக்குகிறது.  

இயற்கை தன்மை

பள்ளிக்கூடம் செல்லும்பொழுது பலிக்களத்துக்கு ஆடு செல்வது போல் செல்லும் சிறுவர்கள் மாலை பள்ளி முடிவதற்கான மணியோசை கேட்டவுடன் உற்சாகத்துடன் வெளியே வருகின்றனர். ஏனெனில் கட்டுப்பாட்டுடன் ஒரு இடத்தில் இருப்பது அவர்களது இயற்கை அன்று. எல்லோருக்கும் எப்பொழுதும் தங்கள் இயற்கை சுபாவத்துடன் இருப்பதே பிடிக்கும். அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் எப்படியாவது அந்த மாற்றத்தை நீக்கி இயற்கைத்தன்மைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சிப்பார்கள்.

அனைவரும் ஏன் எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்? ஏனெனில் ஆனந்தமாய் இருப்பதுதான் நமது இயல்பு நிலை. எரிச்சல், கோபம், ஏக்கம் போன்ற உணர்வுகள் நமது மனதை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்பொழுது நாம் நிம்மதியாக இருப்பதில்லை. கூடிய சீக்கிரம் அந்த நிலையிலிருந்து வெளிவர காத்துக்கொண்டு இருப்போம். ஆனந்தமாய் இருக்கும்பொழுது மட்டும்தான் நாம் நம்மை மறந்து அதே நிலையில் தொடர்ந்து இருக்க விரும்புவோம். நமது சந்தோஷத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரேனும் ஏதாவது செய்வதை நாம் விரும்புவதில்லை. இதிலிருந்து ஆனந்தம் என்பது நமது இயல்பு என்று நிரூபணம் ஆகிறது.

மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம் என்றாலும் மனிதர்கள் அனைவரும் ஏன் எப்பொழுதும் உயிர் வாழவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள்? ஏனெனில் மனிதன் நிரந்தரமானவன், அழிவதில்லை. நித்தியமாக இருப்பதுதான்  அவர்களது இயற்கைத்தன்மை.

தினமும் செய்தித்தாள்களை படித்து உலகில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் இவையெல்லாம் நிகழ காரணங்கள் யாவை என்று அலசுவதும் பெரும்பான்மையான மக்களின் இயற்கை குணம். எப்பொழுதும் ஆனந்தமாக உயிர் வாழ வேண்டும் என்ற இரு விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள அறிவு மிக அவசியம். முதல் இரு ஆசைகளும் அனைத்து உயிரினங்களுக்கும் இருந்தாலும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற இந்த மூன்றாவது ஆசை மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானதுமனிதர்களுக்கிடையே உள்ள பொருளாதார ரீதியான ஏற்றத்தாள்வுகளுக்கு அறிவு ஒரு மிகப்பெரிய காரணமாக உள்ளது. தொடர்ந்து அறிவை அதிகரித்து என்றாவது ஒருநாள் மரணத்தை வென்று என்றும் ஆனந்தமாக இருக்கும் நிலையை அடைந்து விடலாம் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்

ஆனந்தமாகவும், பேரறிவுடனும் நித்யமாகவும் இருப்பது மனிதனின் இயல்பு என்று வேதம் கூறுகிறது. இதனால்தான் இந்த  மூன்று ஆசைகளும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கின்றன. ஆனால் இவை அடையப்பட வேண்டிய ஆசைகள் அல்ல. அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். நான் என்றுமிருக்கும் ஆனந்தமான அறிவுருவம் என்று நம்மையும் பரமனையும் ஒன்றாக்கி வேதம் கூறும் உண்மையை உணர்ந்து கொள்வதைத்தான்வீடுபேறுஎன்ற தொடர் குறிக்கிறது.

வீடு பேறு என்பது நம் எல்லோராலும் ஏற்கனவே அடையப்பட்டுவிட்ட ஒரு நிலை. முறையாக வேதத்தை படித்து அதை அறிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே.


மூன்று சக்திகள்

நான் பரமன். என்னுடைய உடலும் மனதும் மாயாசக்தியின் வெளிப்பாடுகள். இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகிய நமது மூன்று சக்திகள் மூலம் மாயாசக்தி செயல்படுகிறது.

இச்சா சக்தி: ஆசை படுவது.
ஞான சக்தி: அறிந்து கொள்ளும் திறன்.
கிரியா சக்தி: அறிந்ததை ஆசைபட்டு அதை செயல்கள் மூலம் அடையும் திறன்.

இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர உபயோகப்படுத்துவதாலேயே மனிதன் மற்ற விலங்கினங்களிலிருந்து வெகுவும் முன்னேறியவனாக இருக்கிறான். கற்காலம் தொடங்கி இன்றய நவீன விஞ்ஞான உலகம் உருவான விதத்தை அலசினால் பின்வரும் மூன்று அடிப்படை காரணங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து செயல் பட்டிருப்பது தெரியவரும்.

முதல் அடிப்படை காரணம்: இச்சா சக்தி.

எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்ற ஆசை, விலங்குகள் போல் வாழ்ந்து வந்த மனிதனை வேட்டை ஆடும் ஆயுதங்கள் பற்றிய அறிவை அடையத்தூண்டியது.

இரண்டாவது அடிப்படை காரணம்: ஞான சக்தி.

அறிவுகூர்மையால் விலங்கினங்களை பின் தள்ளிவிட்டு முன்னேற ஆரம்பித்த மனிதன் தொடர்ந்து அறிவியல், சமூகவியல், பொருளியல் ஆகிய துறைகளில் அறிவை பெருக்கிக்கொள்ள ஆரம்பித்தான். புத்தகங்கள் மூலம் ஒரு தலைமுறையினர் கற்ற அறிவு அடுத்த தலைமுறைக்கு பயன்பட ஆரம்பித்தது. எனெவே மனித இனத்தின் அறிவு வெகு வேகமாக வளர்ந்தது.

மூன்றாவது அடிப்படை காரணம்: கிரியா சக்தி.

அறிவியல் கண்டுபிடிப்புகளை உபயோகித்து ஆசைபடுவதையெல்லாம் அடைய வேண்டிய உந்துதல் அனைத்து மக்களையும் ஓயாமல் செயல்களில் ஈடுபடுத்தியது. எனவே ஒட்டுமொத்த மனித இனம் இன்று வெகுவாக முன்னேறியுள்ளது.

தொடரும் முன்னேற்றம்.  

இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற மூன்று சக்திகள் ஒவ்வொரு மனிதனின் மூலமும் வெளிப்பட்டு இந்த உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆயினும் மனிதன் தன் இயற்கை நிலையான ஆனந்தத்தை இன்னும் அடையவில்லை. ஏனெனில் வீடுபேறு என்பது நமது இயற்கையான சொரூபத்தை அறிந்து கொள்வதே தவிர அடையவேண்டிய இலக்கு அல்ல.

எனவே வெளியுலகில் இன்பத்தை தேடியலையும் செயலை நிறுத்திவிட்டு வேதம் கூறும் உண்மைகளை முறையாக படித்து தெரிந்துகொள்ள நாம் ஆசைபடவேண்டும். தற்போது நமது ஞான சக்தி உலகை அறிந்து கொள்வதில் தொடர்ந்து செலவிடப்பட்டுகொண்டிருக்கிறது. எப்பொழுது நாம் தேடுவது வெளிவுலகில் இல்லை என்ற மனப்பக்குவம் ஏற்படுகிறதோ அப்பொழுது நாம் நம் ஞான சக்தியை வேதத்தை படிக்க செலவிட ஆரம்பிப்போம். இத்தகைய மாற்றம் ஒரு சிலரிடம்தான் ஏற்படும். மற்றவர்கள் தொடர்ந்து கிரியா சக்தியால் உலகை மாற்றும் முயற்சியில் ஈடுபடும்பொழுது இவர்கள் தங்கள் கிரியா சக்தியை வேதம் படிப்பதில் செலவிடுவார்கள். செய்த புண்ணியத்தின் ஒருபகுதி நல்ல ஆசிரியரை இனம்காண இவர்களுக்கு உதவும். ஆசிரியரின் அனுக்கிரகத்துடனும் தனது ஞான சக்தியின் உதவியுடனும் இவர்கள் விரைவிலேயே வீடுபேறு அடைவார்கள்.




முடிவுரை :

அஞ்ஞானத்தை ஆதாரமாக கொண்டுதான் இந்த உலகம் இயங்கி வருகிறது. மாயை மனிதர்களிடம் உள்ள இச்சா,ஞானம்,கிரியா ஆகிய மூன்று சக்திகள் மூலம் உலகை தொடர்ந்து மாற்றி வருகிறது. மக்கள் அனைவரும் தங்கள் இயற்கை நிலையான ஆனந்தத்தையும் அழிவின்மையையும் அறியாமையால் வெளியுலகில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நீதான் பரமன் என்று முழக்கமிடும் வெதத்தை முறையாக பயில நாம் ஆசைகொள்ள வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்கு புத்திசாலித்தனம், மனப்பக்குவம் மற்றும் சரியான ஆசிரியரின் துணை ஆகியவை தேவை.

பயிற்சிக்காக :

1. மனிதனின் இயல்பாக வேதம் கூறும் மூன்று தன்மைகள் யாவை?

2. மாயை எந்த மூன்று சக்திகளாக செயலாற்றுகிறது?

3. மனிதகுல முன்னேற்றத்திற்கான அடிப்படை காரணங்களை விவரி.

சுயசிந்தனைக்காக :

1. மனப்பக்குவம் என்றால் என்ன?

2. கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றின் அவசியம் என்ன?

Tuesday, February 9, 2010

Lesson 89: Fate of those with bad deeds

பாடம் 89: தீவினை செய்வோரின் கதி 
பாடல் 303-312 (III.1.12-21)

நமது செயல்களின் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டுமென்பதாலும் நம் ஆசைகள் நமது வாழ்வின் தரத்தை தீர்மானிக்கின்றன என்பதாலும் நாம் இவ்விரண்டின் தன்மைகளை அறிந்து கொண்டு தீவினைகளை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.

ஆசையும் செயலும்

நமது அனைத்து செயல்களும் நமது ஆசையின் அடிப்படையிலேயே அமைகின்றன. நமது செயல்கள் மூலம் நாம் தொடர்ந்து பாவ புண்ணியங்களை ஈட்டி வருகிறோம். எந்த கடைக்கு போய் என்ன பொருள் வாங்குகிறோம் என்பது நாம் எதன்மேல் ஆசை கொண்டுள்ளோம் என்பதையும் நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையும் பொறுத்துள்ளது. அது போல வாழ்வில் நாம் அடையவேண்டிய குறிக்கோளை நமது ஆசைகளும் எவ்வளவு தூரம் முன்னேறுகிறோம் என்பது நமது பாவ புண்ணியங்களை பொறுத்தும் தீர்மானிக்கபடுகிறது.

சொர்க்கமும் நரகமும்

தீதும் நன்றும் பிறர்தர வாரா. யார் எப்பொழுது எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தாலும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவரவர் வினைப்பயன்களைதான்  எல்லோரும் எப்பொழுதும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். எனவே ஒருவரது நிலைக்கு இன்னொருவர் காரணமாக இருக்க முடியாது. இந்த பூவுலகை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது. கடவுள் நமது வினைப்பயன்களை அனுபவிக்க இந்த பூமியை படைத்துள்ளார். அதில் ஒவ்வொருவரும் தங்களது விருப்பபடியும் வினைப்பயன்களுக்கு தக்கபடியும் வாழ்ந்து வருகிறோம்.

சம்ஸார சுழல்

ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும் ஆசையில் அதற்கு தேவையான அனைத்து செயல்களை செய்தும்கூட சில சமயங்களில் அந்த ஆசை நிறைவேறுவது இல்லை.

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்கஎன்ற தொடர் இந்த நிலையை தெளிவாக எடுத்துக்கூறுகிறது. செயல்களை ஆசை தூண்டிவிட்டாலும் அவை என்ன பயனை கொடுக்கிறது என்பது அவை மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை அல்லது தீமையை கொடுத்தது என்பதை பொறுத்தே அமையும். மேலும் செய்த செயல்களின் பலன்கள் எப்பொழுது நம்மைச் சேரும் என்பதும் நமக்கு தெரியவராது. எனவே வாழ்க்கையில் எல்லோரும் தொடர்ந்து ஏதாவது ஒரு குறிக்கோளை அடையும் நோக்கில் செயல்களை செய்து கொண்டேயிருப்பார்கள்.

நாம் செய்யும் செயல்கள் நமது பிடித்தவை-பிடிக்காதவை என்ற பதிவுகளை மேலும் உறுதிபடுத்தி அதனால் நம் ஆசைகளையும் அதிகபடுத்துகின்றன. எனவே செயல் செய்யாமல் இருப்பது என்பது செயல் செய்வதை விட மிக கடினமானது.

ஏழை ஒருவன் மூட்டை தூக்கி கூலிவேலை செய்வதில் தொடங்கி சொந்தமாக சிறுதொழில் ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி மாதம் பத்து லட்சம் நிகரலாபம் சம்பாதித்துகொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். பணம் வேண்டும் என்ற ஆசையினால் அதிகமாக உழைக்க ஆரம்பித்தவன் இப்பொழுது போதிய அளவு பணம் இருக்கிறது என்பதால் உழைப்பை நிறுத்திக்கொள்ள முடியாது. மருத்துவர்கள் பரிசோதித்து படுக்கையை விட்டு எழுந்தால் எமலோகப்பயணம் நிச்சயம் என்று சொன்னால் கூட கடைசி மூச்சு உள்ளவரை உழைக்கும் ஆசை அவனை விட்டு போகாது. ஏனெனில் உழைப்பு என்பது பழகி போய்விட்டது.

திருட்டு கொள்ளை போன்ற தீயசெயல்களில் ஈடுபட்டுகொண்டிருப்பவர்களுக்கும் இதே உதாரணம் பொருந்தும். முதலில் ஆசை செயலில் ஈடுபட தூண்டும்.

ஆசை நிறைவேறும் வரை மட்டும் செயல் செய்வது என்பது சரித்திரத்தில் என்றும் நடந்ததில்லை. ஏனெனில் செயல்கள் ஆசையை தொடர்ந்து பெரிதாக வளர்த்து விடும். எனவே நிறைவேறாத ஆசைகள் என்று ஒரு பட்டியல் எப்பொழுதும் மனிதனுக்கு இருந்து கொண்டேயிருக்கும்.

ஆசை நிறைவேறும் பொழுது ஏற்படும் உற்சாகம், இது நிலைக்குமா என்ற திகிலுடன் கலந்து நம் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் பயணம் போல தொடர்ந்து மேலும் கீழும் அலைகழிக்கப்பட்டு கொண்டிருப்பதைதான் சம்ஸாரச்சுழல் என்று வேதம் வர்ணிக்கிறது.
இந்த சுழலை முறியடிக்க தீய செயல்களை முடிந்தவரை தவிர்த்து நற்செயல்களை அதிகரித்து கொள்ள வேண்டும்.

தர்மமும் அதர்மமும்

தர்மம் செய்தால் புண்ணியமும் அதர்மம் செய்தால் பாவமும் ஏற்படும். புண்ணியம் நமக்கு இனிமையான சூழ்நிலைகளையும் பாவம் நாம் துன்பபடக்கூடிய சூழலையும் உண்டாக்கும். இது பிறவிகள் தோறும் தொடரும். பாவம் இரும்புச்சங்கிலி என்றால் புண்ணியம் தங்கசங்கிலி. இரண்டும் நம்மை தொடர்ந்து சம்ஸாரச்சுழலில் பந்தப்படுத்தி முடிவில்லாமல் செயல்களில் ஈடுபடுத்தும். எனவே நமக்கு பாவம் புண்ணியம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை கிடைத்தால் மட்டுமே மீண்டும் பிறவா நிலையான முக்தியை அடைவோம்.

அதர்மமான செயல்கள் செய்பவர்களுக்கு இந்தசுழலில் இருந்து விடுதலை என்பது கிடையவே கிடையாது. தர்மமாக நடப்பவர்களின் புண்ணியத்தின் ஒரு சிறுபகுதி அவர்களுக்கு நல்லறிவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும்.

புண்ணியத்தின் பலனாக நற்சான்றோர்களின் அறிமுகம் தர்மமாக நடப்பவர்களுக்கு மட்டும் ஏற்படும். எனவே இவர்களால் சான்றோர்களின் துணையுடன் சம்ஸார சுழலிலிருந்து மீளும் வாய்ப்பு கிடைக்கும். 

முடிவுரை :

தானாக உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே கிடையாது. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படவேண்டியவை என்ற அறிவு இல்லாமல் தீயகாரியங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து துன்பபட்டு நரகத்தில் உழலுவதைத்தவிர வேறு வழியில்லை.

நம்மை செயல் செய்ய தூண்டுவது நம் ஆசைகள். எதில் ஆசை படுகிறோம் என்பது நமது அறிவை பொறுத்து உள்ளது. எது நல்லது எது கெட்டது என்ற அறிவு எல்லோருக்கும் எப்பொழுதும் இருக்கும். ஒரு திருடன் திருடும்பொழுது குற்றவுணர்வுடன்தான் திருடுவான். அது பழகிப்போனாலும் அது தவறு என்ற உண்மையை அவனால் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

எனவே தவறான செயல்களை தவிர்ப்பது எல்லோராலும் சாத்தியமே. ஆனால் செயல் செய்யாமல் இருப்பது என்பது யாராலும் முடியாது. தீய செயல்களை செய்யக்கூடாது என்றும் நல்ல செயல்களை செய்யவேண்டும் என்றும் நமக்கு நாமே ஒரு கட்டாயத்தை விதித்துகொண்டு தர்மமான காரியங்களை மட்டும் செய்துவருவது மிக அவசியம்.

பயிற்சிக்காக :

1. ஆசைகளுக்கும் செயல்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை விவரிக்கவும்.
2. ஏழை மக்களின் துன்பத்திற்கு காரணம் என்ன?
3. சம்ஸார சுழல் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. நற்காரியங்களை மட்டும் செய்து இன்பமாக இருப்பவர்கள் ஏன் சம்ஸார சுழலிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்?
2. தீயவர்களுக்கு சான்றோர்களின் தொடர்பு ஏற்பட்டு முக்தியடைய வாய்ப்பு உள்ளதா?

Friday, February 5, 2010

Lesson 88: Remnant of karma is the cause of birth

பாடம் 88: பிறப்பதற்கு காரணம் கர்மா 
பாடல் 299-302 (III.1.8-11)

செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிப்பதற்காகவே நாம் பிறவி எடுக்கிறோம் என்பதால் செயல்களை பற்றியும் அவற்றால் விளையும் பலன்களின் வகைகள் பற்றியும் அறிந்து கொண்டு அதர்மமான செயல்களை தவிர்த்து தர்மமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் அவசியத்தை இந்த பாடம் விளக்குகிறது.

ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நமது அனைத்து செயல்களும் சுற்றுப்புற சூழல், தாவரம், விலங்குகள், மற்ற மனிதர்கள் உள்ளிட்ட  அனைத்தையும் பாதிக்கிறது. அந்த பாதிப்பு நன்மையாக இருந்தால் நமக்கு புண்ணியமும் தீமையாக இருந்தால் நமக்கு பாவமும் ஏற்படும்.

பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது. நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக அதர்மமான செயலில் ஈடுபட்டால் அது சரியாகிவிடாது. செய்த தவறுக்கு தண்டனையும் அடுத்தவர்களுக்கு செய்த உதவிக்கு உண்டான நற்பலனும் தனித்தனியே நம்மை வந்து சேரும்

நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாவ புண்ணியங்கள் கலந்தே இருக்கும். பாவ காரியங்கள் மட்டுமே செய்து நல்ல செயல்கள் எதுவும் செய்யாத மனிதனோ அல்லது பாவத்தை முழுதாக தவிர்த்து புண்ணியகாரியங்கள் மட்டுமே செய்யும் மனிதனோ உலகில் கிடையாது. எனவே ஒரு அயோக்கியன் சுகமாக இருக்கிறானே என்று கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. அவன் சுகமாக இருப்பதற்கு காரணம் அவன் செய்த புண்ணியம். அவன் செய்யும் கெட்ட காரியங்களுக்கு நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான். அதே போல் நான் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை மட்டும் தான் செய்கிறேன், கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்ற கேள்வியும் தவறு. பாவ புண்ணியங்களின் பலனை தனித்தனியாக அவரவருக்கு சேரவைப்பதில் இறைவன் எந்த தவறும் செய்வதில்லை.

அதிர்ஷ்டம்

நம் வாழ்வில் ஏற்படும் வெற்றி-தோல்விகள், சுக-துக்கங்கள், நோய்-ஆரோக்கியம், வளமை-வறுமை, ஏற்ற-தாழ்வு போன்ற அனைத்துக்கும் காரணமாக அமைவது நமது பாவ-புண்ணியங்கள் மட்டுமே. வாழ்வில் நிகழும் பெரும்பான்மையான நிகழ்வுகளுக்கு கடுமையான உழைப்பு, விடா முயற்சி என்பது போன்ற தவறான காரணங்களை கற்பித்துவிட்டு ஒரு சிலவற்றிற்கு அதிர்ஷ்டம் காரணம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது தவறு. ஒன்று விடாமல் அனைத்து நிகழ்வுகளுக்கும் அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டம் என்பதன் பொருள் நாம் ஏற்கனவே செய்த நற்செயல்கள் அல்லது தீயசெயல்களின் பலன் என்பது. எந்த செயலின் பயன் எப்பொழுது எந்த வகையில் நமக்கு பலனைத்தரும் என்பது மனித அறிவுக்கு எப்பொழுதுமே எட்டாது என்பதால் அதை கண்ணுக்கு தெரியாத அதிர்ஷ்டம் என்ற பெயரில் அழைக்கிறோம்.

நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டம் என்பது நமக்கு சம்பந்தம் இல்லாமல் தானாக ஏற்படுவதன்று. நமது அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டத்தையும் தீர்மானிப்பது நாம் மட்டுமே. எனவே முடிந்தவரை நல்ல செயல்களை செய்து எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை நமக்கு ஏற்படுத்திக்கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது.

எஞ்சியிருக்கும் கர்மபலன்

உண்ணும் ஒவ்வொரு வாய்க்கும் உழைக்க இரு கரங்கள் இருக்கின்றன. நாம் செய்யும் செயல்களின் அனைத்து பலன்களையும் நம்மால் அனுபவித்து தீர்த்து விட முடியாது. எஞ்சியுள்ள பலன்கள் எவ்வாறு நம்முடன் தொடர்ந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்ள கர்ம பலன்களை மூன்றுவிதமாக பிரித்து வேதம் நமக்கு விளக்கம் அளிக்கிறது. 

மூன்று வகை கர்ம பலன்கள்

நாம் ஏதாவது ஒரு செயலில் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பாவ புண்ணியங்களை  தொடர்ந்து சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம். இவை ஆகாமி கர்மம் எனப்படும். இவற்றை வங்கியில் வைத்திருக்கும் நடப்பு கணக்கு (Current Account) எனலாம். இவற்றின் பலனை பெரும்பாலும் நாம் அவ்வப்போது அனுபவித்துவிடுவோம். ஆயினும் ஒரு சிறுபகுதி நிச்சயம் எஞ்சி இருக்கும்.

இறக்கும்பொழுது எஞ்சியுள்ள ஆகாமி கர்ம பலன்கள், நாம் பலமுன் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மத்துடன் சேர்ந்து விடும். சஞ்சித கர்மத்தை நெடுங்கால வைப்பு நிதியுடன் (Fixed Deposit) ஒப்பிடலாம்.  பலனளிக்கும் காலம் (period of maturity) ஒவ்வொரு செயலுக்கும் வேறுபடும். சஞ்சித கர்மங்களில் ஒரு பகுதி பருவமடையும் பொழுது அவை ப்ராரப்த கர்மமாக மாறும். இது சேமிப்பு கணக்கு (Savings Account)  ஆகும். பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் பருவமடையும் ப்ராரப்த கர்மமும் ஆகாமி கர்மமும் மட்டுமே காரணமாகும். ஆழ்ந்த உறக்கத்தின்பொழுது நமக்கு கர்ம பலன்களை அனுபவிப்பதிலிருந்து ஓய்வு கிடைக்கிறது. கனவில் ஏற்படும் அனுபவங்கள் கூட நமது கர்ம பலன்கள் தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பு ஏற்படுவது கர்மபலன்களை நாம் அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கும்.

பிறக்கும்பொழுது ஒருகுறிப்பிட்ட அளவு ப்ராரப்த கர்மத்துடன் பிறக்கிறோம். மனிதருக்கு மனிதர் இந்த அளவு மாறுபடுவதால் அவர்களின் வாழ்நாட்களின் எண்ணிக்கை ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. மரணத்திற்கு ஒரே காரணம் ப்ராரப்த கர்மம் தீர்ந்து விட்டது என்பதே.

முக்தி என்றால் என்ன?

பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பதத்தை அடைவதே முக்தி எனப்படும். எண்ணிலடங்கா முற்பிறவிகளில் செயல் செய்து சேர்த்துவைத்திருக்கும் மிக அதிக அளவிலான சஞ்சித கர்மங்கள் தீருவதற்குள் ஒவ்வொரு பிறவியிலும் அதன் அளவை ஆகாமி கர்மங்கள் மூலம் அதிகரித்து வருகிறோம். எனவே கர்ம பலன்கள் தீர்ந்து நாம் முக்தி அடைவது என்பது நமது முயற்சியில்லாமல் தானாக நடை பெறாது.

பரமனை தெரிந்து கொள்வதால் மட்டுமே நாம் முக்தியடைய முடியும். எப்பொழுது ஞானம் அடைகிறோமோ அப்பொழுது நாம் சேர்த்து வைத்துள்ள மொத்த சஞ்சிதகர்மமும் ஆகாமி கர்மமும் அழிந்து விடும் என்று வேதம் கூறுகிறது. மேலும் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்தவுடன் புதிதாக ஆகாமி கர்மம் சேராது. எஞ்சியிருப்பது ப்ராரப்த கர்மம் மட்டுமே. எனவே பரமன் யார் என்ற ஞானம் அடைந்தபின் நம் வாழ்வு ப்ராரப்த கர்மத்தின் கட்டுப்பாட்டின்படி நடந்து அது தீர்ந்தவுடன் மீண்டும் பிறவா நிலையை அடைந்து விடுவோம்.

முடிவுரை :

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டும், நன்மக்கட்பேறு வேண்டும், வசதியான வாழ்க்கை வேண்டும், ஆரோக்கியமான உடல் வேண்டும், சமூகத்தில் எல்லோரும் நம்மை மதிக்க வேண்டும் என்பது போன்ற நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி தர்மமாக வாழ்ந்து நல்ல செயல்களில் ஈடுபடுவது மட்டுமே. 

பயிற்சிக்காக :

1. நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு காரணம் என்ன?
2. மூன்று வகை கர்மங்கள் யாவை?
3. மரணம் எவ்வகை கர்மத்தால் தீர்மானிக்க படுகிறது?
4. முக்தி என்றால் என்ன?   
5. அதிர்ஷ்டம் என்றால் என்ன?
6. நம் வாழ்வின் வெற்றி-தோல்விகளில் அதிர்ஷ்டத்தின் பங்கு எத்தனை சதவிகிதம்?   

சுயசிந்தனைக்காக :

1. சஞ்சித கர்ம பலன்கள் தீரும் வரை பிறவிகள் தோறும் எவ்வித செயலும் செய்யாமல் இருப்பதன் மூலம் மறுபிறவி ஏற்படுவதை ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியுமா?
2. கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றின் அவசியம் என்ன?

Wednesday, February 3, 2010

Lesson 87: Transmigration happens along with desires.

பாடம் 87: ஆசை உடன் பிறந்தது 
பாடல் 292-298 (III.1.1-7)

ஆசைகள் நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கின்றன. மேலும் அடுத்த பிறவியில் எங்கு எப்படி பிறப்போம் என்பதையும் அவை தீர்மானிக்கின்றன. எனவே ஆசை என்றால் என்ன, ஆசை உருவாவது எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை அறிந்து கொண்டு தவறான ஆசைகளை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.

ஆசை என்றால் என்ன?

இது எனக்கு வேண்டும்என்ற எண்ணம்தான் ஆசை. அனைத்து ஆசைகளும் அறிவை ஆதாரமாக கொண்டு செயலை தூண்டுபவை. விருப்பமான பொருள்களை அடையவேண்டும் என்ற நினைப்பும் வெறுப்பவற்றை தவிர்க்கவேண்டும் என்ற நினைப்பும் ஆசையில் அடங்கும்

ஆசை உருவாகும் விதம்முதல் படி

மெய், வாய், கண், செவி,மூக்கு என்ற ஐந்து புலன்கள் நம்மை சுற்றி உள்ள உலகின் இருப்பை நமக்கு அறிவிக்கின்றன. ‘இது இருக்கிறதுஎன்ற எண்ணம் நம் மனதில் தோன்றுகிறது.

ஐம்புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் இந்த செயல்பாடு வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்று. ஆசை உருவாக இவை முதல் படியாக இருப்பதால் ஆசையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்ற தவறான போதனையின் அடிப்படையில் ஒரு சிலர் இமயமலையின் அடிவாரத்துக்கு போய் அமைதியை தேடுகிறேன் என்று வாழ்வின் இன்பங்களை துறக்கிறார்கள். ஆசையை பற்றி வேதம் கூறும் கருத்துக்களை அறிந்து கொண்டால் இம்மாதிரி உலக வாழ்விலிருந்து தப்பித்து கண் காணா இடத்துக்கு போகத்தேவையில்லை.

ஆசை உருவாகும் விதம்இரண்டாம் படி

விருப்பு மற்றும் வெறுப்பு என்பது உடன் பிறந்தவை. எதை நாம் தொடர்ந்து அனுபவிக்கிறோமோ அதில் நமக்கு நம்மையறியாமல் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிடுகிறது. ‘பிடித்தவை-பிடிக்காதவைஎன்று மனிதர்கள் அனைவரும் ஒரு தனிப்பட்ட பட்டியல் வைத்திருக்கிறார்கள். இந்த பட்டியல் பிறவிகள்தோறும் நம்முடன் தொடர்ந்து வந்து நமது பழக்க வழக்கங்களை தீர்மானிக்கின்றது.

நமது மனதில் பதியவைக்கப்பட்டுள்ளபிடித்தவை-பிடிக்காதவைஎன்ற இந்த பட்டியலின் அடிப்படையில், ‘இது இருக்கிறதுஎன்ற எண்ணம்இது நன்றாக இருக்கிறதுஎன்ற எண்ணமாக மாறுகிறது. இது ஆசையை உருவாக்கும் இரண்டாம் படி.

சாம்பாரில் கத்தரிக்காய் மிகசுவையாக இருக்கிறது என்று ரசித்து சாப்பிட்டு கொண்டிருப்பவருக்கு, பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அதை கவனமாக பொறுக்கி இலையின் ஓரத்தில் ஒதுக்கிவைப்பது ஏன் என்று புரிந்து கொள்ள முடியாது. நன்றாய் இருக்கிறதா இல்லையா என்பதற்கும் கத்தரிக்காய்க்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. நமது மனது மட்டுமே இந்த பாகுபாட்டை ஏற்படுத்துகிறது.

கடவுள் படைத்த உலகில் இருப்பது அனைத்தும் நல்லவையே. அனால் நாம் நம் தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் நன்றாக இருக்கிறது/ இல்லை என்று தரம் பிரிக்கிறோம். இதை புரிந்து கொண்டபின்கூட தொடர்ந்து நமது மனம்பிடித்தவை-பிடிக்காதவைஎன்று எல்லாவற்றையும் பாகுபாடு செய்யும். இதில் எந்த தவறும் இல்லை. மனதின் இந்த இயல்பை புரிந்து கொண்டால் அதன் போக்கை மாற்ற முயல்வது தேவையற்ற செயல் என்று தெரியும்.

எல்லாவற்றையும் சமமாக பாவிக்கவேண்டும் என்ற உபதேசத்தை தவறாக புரிந்து கொண்டு ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காத பாகற்காயை வாரம் ஒருதடவையாவது விழுங்க முயற்சித்து கொண்டிருப்பார்கள். இது அனாவசியம்.

குழந்தைகளை வளர்க்கும்பொழுது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கு பிடிக்காத செயல்களை செய்யச்சொல்லி கட்டாயபடுத்தாமல் இருப்பது பெற்றோரின் கடமை. ஏனெனில் பல பிறவிகள் தோறும் சேர்த்துவைத்தபிடித்தவை-பிடிக்காதவைஎன்ற தனிப்பட்ட பட்டியலுடன் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். கண்டித்து வளர்ப்பதால் குழந்தையின் விருப்பு-வெறுப்புகளை மாற்றிவிட முடியாது.

பள்ளிக்கு செல்ல பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை என்றால் அவர்களை கட்டாயபடுத்தாமல் ஒவ்வொருவரின் தனிபட்ட திறமைகளை வெளிக்கொணரும் வழியில் செயல் முறை கல்வி கற்பிக்கும் கல்வி நிலையங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டும்.

பிறந்தது முதல் இறக்கும்வரை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த செயலில் மனம் ஒன்றி ஈடுபடுவதற்கு ஏற்ற வாய்ப்புக்களையும் சூழ்நிலைகளையும் வழங்கும் உலகமே உண்மையான சொர்க்கம்.

ஆசை உருவாகும் விதம்மூன்றாம் படி

இது நன்றாக இருக்கிறதுஎன்ற அளவில் நிறுத்திக்கொள்ளாமல்இது எனக்கு வேண்டும்என்ற ஆசை நமக்கு தோன்றுவதற்கு காரணம் நமது அறிவு. இது எனக்கு கிடைத்தால் நான் இன்பமாக இருப்பேன் என்று நமது புத்தியில் தோன்றும் எண்ணமே ஆசைகளை உருவாக்குகிறது.

இருப்பதை அறிவது, அவற்றில் சிலவற்றை நல்லவை/கெட்டவை என்று தரம் பிரிப்பது மற்றும் பிடித்தவற்றில் சிலவற்றை ‘எனக்கு இது வேண்டும்’ என்ற எண்ணமாக மாற்றுவது ஆகிய மூன்று படிகளில் ஆசை உருவாகிறது.

ஆசைகளை கட்டுப்படுத்தும் விதம்

ஆசை உருவாவதை முதல் இரண்டு படிகளில் நாம் தடுக்க முயல்வது தவறு என்று அறிந்து கொண்டோம். அழகான ரோஜா மலரை பார்த்து ரசிப்பதில் எந்த தவறும் இல்லை. இந்த இயற்கையை அனுபவிக்கும் எண்ணம்இந்த மலர் எனக்கு வேண்டும்என்ற ஆசையாக மாறலாமா கூடாதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு நமது புத்தியை சேர்ந்தது. எனவே நமது புத்தியில் எவ்வித எண்ணங்களை ஆசைகளாக மாற்ற கூடாது என்ற அறிவை வளர்ப்பதன் மூலம் மட்டுமே தவறான ஆசைகளை கட்டுப்படுத்த முடியும்.  

ஆசைகளை ஆய்வு செய்யும் விதம்

இது நன்றாக இருக்கிறதுஎன்பது போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றும்பொழுது அவை சரியானவையா அல்லது தவறானவையா என்று ஆராய்வதன் மூலம் அவற்றை ஆசையாக மாற்றலாமா கூடாதா என்ற முடிவை புத்தி எடுக்க வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்கள் புத்தியின் அனுமதியின்றி ஆசையாக மாறுவதில்லை. எனவே புத்தியை கூர்மையும் வலிவும் உடையதாக வைத்திருந்தால் மனதில் தோன்றும் எண்ணங்கள் ஆசைகளாக மாறி நம்மை ஆட்டுவிக்கவிடாமல் அவற்றை நம் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

தவறான ஆசை என்பது நமக்கோ மற்றவர்களுக்கோ துன்பம்  ஏற்படுத்தக்கூடிய செயலை செய்ய நம்மை தூண்டுவது. தானும் தன்னை சார்ந்தவர்களும் இன்பமாக இருப்பதற்காக, மனமறிந்து மற்றவர்களுக்கு துன்பம் அளிக்காதவகையில், நிறய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளை மனதில் வளர்த்திக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

எது தவறான ஆசை, எது சரியான ஆசை என்பது பொதுவாக அனைத்து மக்களுக்கும் தெரியும். தவறான ஆசைகள் ஏற்படும்பொழுது நிச்சயமாக அவர்களது உள்மனதுஇது தவறுஎன்ற எச்சரிக்கை செய்யும்.

மனம் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கியது. புத்தி நமக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அறிந்திருப்பது. மனம் போன போக்கில் போகாமல் ஆசைகளை புத்தியினால் சீர்தூக்கி பார்த்து நல் வழியில் நடப்பது மட்டுமே குறைவில்லா இன்பம் என்ற வாழ்க்கையின் குறிக்கோளுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.

முடிவுரை :

இலைகளின் மேல் ஊறும் கம்பளிப்பூச்சி அடுத்த இலையை கால்களால் பற்றியபின் முந்திய இலையில் இருக்கும் பிடிப்பினை தளர்த்துவது போல மனிதன் மரணமடையும்பொழுது தனது அடுத்தபிறவிக்கான உடலை தேர்ந்தெடுத்த பின்தான் தற்போதய பருவுடலை உதிர்க்கிறான் என்று வேதம் கூறுகிறது. இதன் பொருள் நமது கடைசி ஆசை நம் அடுத்த பிறவியை தீர்மானிக்கிறது என்பதாகும்.

வாழ்நாள் முழுவதும் மனம் போனபோக்கில் உலக இன்பங்களில் ஆசைபட்டுவிட்டு சாகும் சமயத்தில் சங்கரா சங்கரா என்று கடவுள் மீது ஆசை வைத்தால் முக்தியடைந்துவிடலாம் என்பது பின் வரும் காரணங்களால் நடக்காது.

மனம் எதில் ஊறியிருக்கிறதோ அதைத்தான் ஆசைபடும். நான் இப்பொழுது சாகப்போகிறேன், எனவே ஆண்டவன் மீது ஆசை கொள் என்று நம்மால் நம் விருப்பத்திற்கேற்ப மனதை மாற்றிக்கொள்ள முடியாது. மேலும் எமதர்மன் நம்மிடம் சொல்லிக்கொண்டு வருவதில்லை. அப்படியே தீராத நோய் வந்து மருத்துவர் நாம் போவதற்கு நாள் குறித்துவிட்டாலும் எப்படியாவது பிழைத்துவிடலாம் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் கடைசி வரை இருக்கும். எனவே இறைவனிடம் இன்னும் ஒரு சில வருடங்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்க தோன்றுமே தவிர மீண்டும் பிறவா வரம் கேட்க வேண்டும் என்ற நினைவு வராது. அதற்குள் நமது தீவிர ஆசைகள் அடுத்த பிறவியில் எந்த சூழ்நிலையில் பிறக்கவேண்டும் என்பதை தீர்மானித்து விடும்.

எனவே இந்தக்கணம் தொடங்கி நமது ஆசைகளை ஆய்வு செய்து தவறான ஆசைகளை இப்பொழுதிலிருந்தே தவிர்க்க பழகிக்கொள்ள வேண்டும்.


பயிற்சிக்காக :

1. ஆசை என்றால் என்ன?
2. ஆசை உண்டாகும் மூன்று படிக்கட்டுக்கள் யாவை?
3. மனம்-புத்தி இவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
4. நாம் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்று இந்த பாடத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள் யாவை?   
   
சுயசிந்தனைக்காக :

1. நல்ல ஆசைகளை வளர்த்துக்கொள்ளலாமா?
2. இனி ஆசைகள் ஏதும் இல்லை என்ற நிலைக்கு வர இயலுமா?
3. நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைக்கு கற்றுகொடுப்பது எப்படி?
4. நல்ல ஆசைகள் மூலம் அடுத்த பிறவி ஏற்பட்டால் அதில் என்ன குறை?